search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajiv killers"

    ராஜீவ் கொலையாளிகள் விடுதலை விவகாரத்தில் நான் எடுக்கும் முடிவையே அரசும் எடுக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்று பிரியங்கா கூறியுள்ளார்.

    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் 27 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயிலில் இருந்து வருகிறார்கள்.

    அவர்கள் நீண்ட காலமாக ஜெயிலில் இருப்பதால் அவர்களை விடுதலை செய்யும்படி கோரிக்கை எழுந்தது.

    ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்த போது, 2016-ம் ஆண்டு இது சம்பந்தமாக மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினார். ஆனால், 2018-ம் ஆண்டு தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது.

    அதன்பிறகு தமிழக அமைச்சரவையில் 7 பேர் விடுவிப்பு தொடர்பாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

    இந்த நிலையில் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அதில், 7 பேர் விடுதலை சம்பந்தமாக கவர்னர் தன்னிச்சையாக முடிவு எடுத்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

    எனவே, 7 பேரையும் கவர்னர் விடுவிக்கும் முடிவை எடுக்க வேண்டும் என்று கவர்னரை பல்வேறு கட்சிகளும் வற்புறுத்தி வருகின்றன.


    இது சம்பந்தமாக ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்காவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

    தனிப்பட்ட முறையில் எனக்கு வன்முறை மீது நம்பிக்கை கிடையாது. வன்முறை மீது மேலும் வன்முறையை ஏவுவது சரியான பதிலாக இருக்க முடியாது. வன்முறைக்கு அகிம்சைதான் சரியான பதிலாக இருக்க முடியும்.

    இந்த விவகாரத்தை பொறுத்த வரை 2 விதமான வி‌ஷயங்கள் உள்ளன. ஒன்று எனது தனிப்பட்ட வி‌ஷயம் தொடர்பானது.

    அதாவது கொல்லப்பட்டவர் எனது தந்தை. அந்த வகையில் எனது கருத்துக்களை ஏற்கனவே பல முறை கூறி விட்டேன்.

    இந்த கொலையில் தண்டனை பெற்றுள்ள நளினியையும் நான் ஜெயிலுக்கு சென்று சந்தித்தேன். நளினியும் என் வேதனை தொடர்பாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார். என்ன தான் வேதனை இருந்தாலும் நான் உறுதியாக இருந்தேன்.

    அடுத்ததாக எனது தந்தையின் கொலை அரசியல் தொடர்பானது. அது, முழுமையாக வேறுபட்டது. அரசியல் ரீதியாக பார்க்கும் போது, அவர் ஒரு முன்னாள் பிரதமர். அரசியல் ரீதியாக நடத்தப்பட்ட கொலை. பயங்கரவாதத்தின் செயலால் இந்த கொலை நடந்தது. அதில் மேலும் பலர் கொல்லப்பட்டனர்.

    எனவே, இந்த வி‌ஷயத்தில் மனிதாபிமான முறையில் மகளாகிய நான் எடுத்த முடிவையே அரசும் எடுக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

    இவ்வாறு பிரியங்கா கூறினார்.

    பிரியங்கா, நளினியை 2008-ம் ஆண்டு ஜெயிலில் சந்தித்து தனது தந்தை கொலை பற்றி பல வி‌ஷயங்களை கேட்டறிந்தார். ஆனால், அவர்கள் என்ன பேசினார்கள்? என்பது வெளியே தெரியாமல் இருந்தது.

    8 வருடங்களுக்கு பிறகு இந்த சந்திப்பு சம்பந்தமாக நளினி தகவல் வெளியிட்டார். அதில், பிரியங்கா என்னிடம் பேசும்போது, என் தந்தை மிகவும் நல்லவர். மென்மை போக்கு உடையவர். அவரை ஏன் கொன்றார்கள்?

    என்ன ஒரு காரணம் இருந்தாலும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டு இருக்கலாமே என்று கேட்டு அழுதார். அதைப்பார்த்து நானும் அழுது விட்டேன் என்று நளினி கூறியது குறிப்பிடத்தக்கது.

    ×