என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Ramanujar 3 Thirumeni"
- மகாவிஷ்ணுவின் தீவிர பக்தராக இருந்தவர் ராமானுஜர்.
- மிகச் சிறந்த சமூக சீர்த்திருத்தவாதி.
மகாவிஷ்ணுவின் தீவிர பக்தராக இருந்தவர், ராமானுஜர். இவர் சுமார் 120 ஆண்டு காலம் வாழ்ந்து, வைணவ சமயத்திற்காக தொண்டாற்றியவர். ராமானுஜர் வாழ்ந்த காலத்திலேயே, அவருக்கு கோவில் கட்டி வழிபடும் அளவுக்கு, அவர் மீது பற்று கொண்டவர்கள் இருந்தனா். மிகச் சிறந்த சமூக சீர்த்திருத்தவாதியாக அந்த காலத்திலேயே திகழ்ந்தவர் இவர்.
ராமானுஜரின் மூன்று திருமேனிகள் சிறப்புக்குரியவை. அவை:-
தமர் உகந்த திருமேனி, தான் உகந்த திருமேனி, தானான திருமேனி. இந்த மூன்று திருமேனிகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
தமர் உகந்த திருமேனி
கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தில் உள்ளது, மேல்கோட்டை என்ற திருநாராயணபுரம். இங்கு சுமார் 12 ஆண்டுகள் தங்கியிருந்து சேவை புரிந்து வந்தார், ராமானுஜர். தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கப்பட்ட மக்களை கோவிலுக்குள் அழைத்துச் சென்று, ராமானுஜர் புரட்சி செய்ததும் இந்த திருத்தலத்தில்தான்.
தன்னுடைய 80-வது வயதில், தன்னை ஏற்றுக்கொண்ட அடியவர்களுக்காக, தானே ஒரு சிற்பியை கொண்டு ஒரு சிலையை வடிக்கச் சொன்னார். ராமானுஜர் கைகூப்பி அனைவரிடமும் விடைபெறும் கோலத்தில் அந்தச் சிலை வடிக்கப்பட்டிருந்தது. அந்தச் சிலையில் தன்னுடைய தெய்வீக சக்தியை செலுத்தி, அதைத் தன்னுடைய சீடர்களிடம் ஒப்படைத்தார்.
அதன்பிறகே திருநாராயணபுரத்தில் இருந்து புறப்பட்டு திருவரங்கம் சென்றார். இந்த சிலையை 'தமர் உகந்த திருமேனி' என்பர். இன்றும் மேல்கோட்டையில் இந்த திருவுருவச் சிலையை வழிபாடு செய்யலாம்.
தான் உகந்த திருமேனி
இந்த திருமேனி நிறுவப்பட்டிருக்கும் திருத்தலம், காஞ்சிபுரம் அருகே உள்ள, ஸ்ரீபெரும்புதூர் ஆகும். ராமானுஜப் பெருமாள், தன்னுடைய இறுதி காலங்களில், அதாவது 120-வது வயதில் திருவரங்கத்தில் தங்கியிருந்தார்.
அப்போது ஸ்ரீபெரும்புதூரில் இருந்த ராமானுஜரின் அடியவர்கள், அவரது திருவுருவச் சிலையை, ஸ்ரீபெரும்புதூரில் நிறுவ ஆசைப்பட்டனர். இதற்காக ராமானுஜரிடம் ஒப்புதல் கேட்கப்பட்டது. பின்னர் ராமானுஜரின் ஆலோசனைப்படி, அவர் உருவம் தாங்கிய செப்புச் சிலை ஒன்று செதுக்கப்பட்டது.
அந்த சிலையை தன் மார்போடு அரவணைத்து, அந்த சிலைக்குள் தன்னுடைய தெய்வீக ஆற்றலை செலுத்தினார், ராமானுஜர். இந்த சிலையே 'தான் உகந்த திருமேனி' என்று அழைக்கப்படுகிறது. ராமானுஜர், தாமாகவே உகந்து அளித்த திருமேனி இதுவாகும்.
அந்த சிலை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆதிகேசவப்பெருமாள் ஆலயத்தில் நிறுவப்பட்டு, ராமானுஜர் தனி சன்னிதியில் வீற்றிருக்கிறார். இந்த சிலையில் உள்ள விலா எலும்பு, காது மடல் போன்றவை, ராமானுஜரின் 120 வயது தோற்றத்தை தெளிவாக எடுத்துக் காட்டும் விதத்தில் இருக்கிறது.
தானான திருமேனி
ராமானுஜர் தன்னுடைய 120-வது வயதில் பரமபத நிலையை எய்தினார். கி.பி. 1137-ம் ஆண்டு, தான் பிறந்த அதே பிங்கள வருடத்தில் மாசி மாதம் வளர்பிறை தசமியில், ஒரு சனிக்கிழமை நண்பகல் வேளையில் பத்மாசன நிலையில் அமர்ந்தபடி திருவரங்கத்தில் சமாதியானார்.
அதற்கு முன்பு வரை வசந்த மண்டபம் என்று அழைக்கப்பட்ட அந்த இடம், ராமானுஜரின் திருமேனியை, திருப்பள்ளிப்படுத்தியபிறகு, உடையவர் சன்னிதி என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள ராமானுஜரின் பூத உடலை, இன்றும் நாம் தரிசிக்க முடியும். இவரின் திருமேனியில் தலைமுடி, கை நகம் போன்றவற்றைக் கூட எளிதாக காண இயலும்.
திருவரங்கத்தில் எழுந்தருளியுள்ள இந்த திருமேனியைத் தான் 'தானான திருமேனி' என்று அழைக்கிறோம். ஒவ்வொரு வருடமும் சித்திரை மற்றும் ஐப்பசி மாதங்களில், பச்சை கற்பூரம் மற்றும் சில மூலிகைகள் அரைத்து ராமானுஜரின் திருமேனியில் சாற்றுவார்கள்.
ஆயிரம் ஆண்டுகளாக ஸ்ரீராமானுஜர் திருமேனி பாதுகாக்கப்படுவது, இந்த முறையில்தான் என்கின்றனர் ஆன்மிகப் பெரியவர்கள். பெருமாளுக்கு அடியார்கள் அனைவரும் ஒன்றுதான் என்ற புரட்சிக் கருத்தினைக் கூறிய ஸ்ரீராமானுஜரை வணங்கினால், அந்த இறைவனின் அருளையும் சேர்த்தே பெறலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்