search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ranil Wickreme singhe"

    உளவுத்துறை எச்சரிக்கையை கவனித்து இருந்தால் குண்டு வெடிப்பை தடுத்து இருக்கலாம் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். #srilankablasts #RanilWickremesinghe

    கொழும்பு:

    இலங்கையில் கடந்த 21-ந்தேதி ஈஸ்டர் தினத்தன்று பயங்கரவாதிகள் தேவாலயங்கள் மற்றும் ஓட்டல்களில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தினார்கள்.

    இந்த தாக்குதல் 8 இடங்களில் நடத்தப்பட்டது. இதில் 253 பேர் உயிர் இழந்தனர். 500 பேர் காயம் அடைந்தனர்.

    தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவு பெற்ற தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புதான் காரணம் என்பது தெரிய வந்தது. அந்த இயக்கத்தினரை வேட்டையாடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

    இலங்கையில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக இந்தியா தகவல் தெரிவித்து இருந்தும், இலங்கை அரசு அதை அலட்சியப் படுத்தியதால்தான் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

    இது சம்பந்தமாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இலங்கை தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகள் மீது இப்போது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காமல் தடுக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற் கொண்டு இருக்கிறோம்.

    இந்த தாக்குதலை தடுக்காமல் விட்டதற்காக நாங்கள் பொறுப்பேற்று கொள்கிறோம்.

    இலங்கையில் ஒருங்கிணைந்த அரசு செயல்பட்டு வருகிறது. இந்த குண்டு வெடிப்பு வி‌ஷயத்தில் பல விவகாரங்கள் இருக்கின்றன. தாக்குதல் நடத்தலாம் என இந்திய உளவுத்துறை மூலம் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.

    அந்த தகவலை அவர்கள் போலீஸ் மற்றும் தடுப்பு குழுக்களுக்கு அனுப்பி இருக்க வேண்டும். எனக்கும் அது தெரிந்திருக்க வேண்டும்.

     


    ஆனால், அவ்வாறு செய்யவில்லை. அப்படி செய்திருந்தால் இது தடுக்கப்பட்டு இருக்கும்.

    இந்த வி‌ஷயத்தை பொறுத்த வரை உரிய அமைப்புகள் ஏன் சரியாக செயல்படவில்லை என்பது தான் இப்போதைய கேள்வியாக இருக்கிறது.

    இது, பாதுகாப்புத்துறை சம்பந்தப்பட்டது. இதில் என்ன நடந்தது? என்பது பற்றி விசாரிக்க ஜனாதிபதி ஒரு குழுவை நியமித்து இருக்கிறார்.

    அதன் முடிவு வந்த பிறகுதான் எதையும் சொல்ல முடியும். எனக்கு முன்கூட்டியே உளவுத்துறையிடம் இருந்து தகவல்கள் எதுவும் வரவில்லை. எனவே, முன்கூட்டி வி‌ஷயம் தெரியாததால் இதுபற்றி வேறு எதுவும் சொல்வதற்கில்லை.

    தற்போது உளவுத்துறையினர் பல்வேறு தகவல்களை தந்து கொண்டு இருக்கிறார்கள்.

    நாட்டின் பாதுகாப்பு குறித்து நானும், ஜனாதிபதியும் மந்திரிசபை கூட்டம் மற்றும் தேசிய கவுன்சில் கூட்டத்தில் விவாதித்து இருக்கிறோம்.

    எனக்கும், ஜனாதிபதிக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் இது போன்று நடந்ததாக சொல்வதை ஏற்க முடியாது. எனக்கு அவர்கள் தகவல் கொடுத்திருந்தால் நான் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு இருப்பேன்.

    எனக்கு இதில் முதன்மை பொறுப்பு உள்ளது. நான் நாட்டின் தலைவன். எனக்கு உரிய தகவல் வந்திருந்தால் நிச்சயம் இது நடந்திருக்காது.

    எல்லாத்துறையும் இதில் ஒருங்கிணைந்து செயல்பட்டு இருந்தால் தாக்குதலை தவிர்த்து இருக்கலாம். அரசு மீது மக்கள் கோபத்தில் இருப்பதை நாங்கள் உணர்ந்து இருக்கிறோம்.

    இந்த தாக்குதலுக்கு எங்கள் அரசு எந்திரம் சரியாக செயல்படாமல் இருந்ததுதான் காரணம் என்பதை ஒத்துக்கொள்கிறோம்.

    இருந்தாலும் இனி இன ரீதியாக எந்த பாதிப்பும் இல்லாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கிறோம்.

    நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் பாதுகாப்பு வழங்குவது எங்களது கடமை. அதை செய்வோம். தற்போது கிறிஸ்தவர்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

    நாங்கள் அவர்களோடு இருக்கிறோம். கார்டினால்கள் மற்றும் பாதிரியார்களை நாங்கள் சந்தித்து பேசினோம். அவர்களுடன் 3 மணி நேரம் இருந்தோம்.

    மேலும் தாக்குதலுக்கு எதிர்விளைவாக தங்கள் மீது தாக்குதல் நடந்து விடுமோ? என முஸ்லிம்களும் பயப்படுகிறார்கள். அவற்றையும் நாங்கள் தடுத்து நிறுத்துவோம்.

    இன, மத ரீதியாக பிரச்சினை ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. இப்போது சிறு தவறு நடந்து விட்டது. இனிமேலும் அவ்வாறு நடக்காது. இந்த பிரச்சினையால் பெரிய அளவில் மோதல் வெடிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

    நாட்டின் பாதுகாப்பு திட்டங்கள் மாற்றி அமைத்து சீரமைக்கப்படும் என ஜனாதிபதி கூறி இருக்கிறார். இது சம்பந்தமாக சில திட்டங்களை அவர் முன் வைத்து இருக்கிறார். அது பற்றி நாங்கள் விவாதித்து இருக்கிறோம். சரியான நேரத்தில் அதை அமலுக்கு கொண்டு வருவோம்.

    என்னிடம் இருந்த சட்டம்- ஒழுங்கு துறையை நீண்ட காலத்துக்கு முன்பு ஜனாதிபதி எடுத்து தன்னிடம் வைத்துக்கொண்டதுதான் இந்த பிரச்சினைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதை நாங்கள் உணர்ந்து இருக்கிறோம்.

    சட்டம்-ஒழுங்கு துறைக்கு தனியாக ஒரு மந்திரி வேண்டும் என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதுபற்றி நாங்கள் விவாதித்து வருகிறோம்.

    ராஜபக்சே ஆட்சி காலத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அதில் இப்போது குறைபாடு ஏற்பட்டு இருப்பதாகவும் கூறுவதை ஏற்க முடியாது.

    நாங்கள் பலவிதமான அரசுகளை கையாண்டு இருக்கிறோம். பல சூழ்நிலைகளை எதிர் கொண்டு இருக்கிறோம். விடுதலைப்புலிகளை ஒழித்து வெற்றி கண்டதற்கு அப்போதைய ராணுவ தளபதி சரத் பொன்சேகாதான் முக்கிய காரணம்.

    தற்போது பாதுகாப்பு வி‌ஷயத்தில் பெரிய தவறு நடந்து விட்டதாக பலரும் சொல்கிறார்கள். ஆனாலும், மீண்டும் கடுமையான நிலையை நாங்கள் எடுத்து இருக்கிறோம். மிகவும் ஆழமாக ஊடுருவி சென்று சம்பந்தப்பட்டவர்களை ஒடுக்குவோம்.

    தற்போது எழுந்திருக்கும் பிரச்சினையால் விடுதலைப் புலிகள் மீண்டும் வலுப் பெறுவார்கள் என்ற சூழ்நிலை ஏற்படவில்லை.

    இந்தியா - இலங்கை இடையே உளவுத்தகவல் பரிமாற்றம் நல்ல நிலையில் உள்ளது. இதில், எந்த பிரச்சினையும் இருப்பதாக கருதவில்லை.

    இவ்வாறு ரணில் விக்ரமசிங்கே கூறினார். #srilankablasts #RanilWickremesinghe

    ×