search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "relatives public road blockage"

    வாகனம் ஏற்றி பஸ் டிரைவர் கொலை செய்யப்பட்டதாக கருதி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    சேதராப்பட்டு:

    வில்லியனூர் அருகே செல்லிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேலு (வயது 44). தனியார் பஸ் டிரைவர். இவர் நேற்று இரவு கடலூர் திருவந்திபுரத்தில் நடந்த உறவினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.

    வில்லியனூர் அருகே உளவாய்க்கால் என்ற இடத்தில் வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் சக்திவேலு உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் வில்லியனூர் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்குபதிவு செய்து சக்திவேலு மீது மோதிய வாகனம் குறித்து விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே விபத்தில் சக்திவேலு இறந்து போனதை அறிந்த அவரது உறவினர்கள் நேற்று இரவு உளவாய்க்கால் பகுதிக்கு திரண்டு வந்தனர்.

    அவர்கள் சக்திவேலு மீது மோதிய வாகன டிரைவரை கைது செய்ய கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து வில்லியனூர் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக வாகன டிரைவரை கண்டுபிடித்து கைது செய்வதாக உறுதி அளித்ததன் பேரில் மறியல் கைவிடப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை வரை சக்திவேலு மீது மோதிய வாகனத்தையும், வாகன டிரைவரையும் கைது செய்யாததால் ஆத்திரம் அடைந்த சக்திவேலுவின் உறவினர்கள் மற்றும் செல்லிப்பட்டு கிராம மக்கள் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் பத்துக்கண்ணு சந்திப்புக்கு திரண்டு வந்தனர்.

    அவர்கள் அங்குள்ள 5 சாலை சந்திப்பிலும் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். சக்திவேலுவை யாரோ திட்டமிட்டு வாகனத்தை மோதி கொலை செய்து விட்டதாக குற்றம் சாட்டினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காலை 8.30 மணிக்கு தொடங்கிய இந்த மறியல் போராட்டத்தால் 5 சாலைகளிலும் வாகனங்கள் செல்ல முடியாமல் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கும் மேலாக அணிவகுத்து நின்றன. இதனால் பள்ளி- கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ- மாணவிகள், அலுவலகம் செல்லும் ஊழியர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாயினர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் வில்லியனூர் போலீசாரும், போக்குவரத்து போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    சக்திவேலு மீது மோதிய வாகனத்தை தேடி வருவதாகவும், விரைவில் வாகன டிரைவரை கண்டுபிடித்து கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் உறுதி அளித்தனர்.

    மேலும் சாலை மறியல் போராட்டத்தால் மாணவர்கள், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை போலீசார் எடுத்து கூறினர். சுமார் 30 நிமிட பேச்சுவார்த்தைக்கு பிறகு கிராம மக்கள் சமாதானம் அடைந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    ×