search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Removal of Marriage Barriers"

    • அன்னை பார்வதி தேவி பரம சிவனை மணந்து கொண்ட அருமையான நாள்.
    • சிவபெருமான், `கல்யாண சுந்தரரா’க காட்சியளித்தார்.

    மீன ராசியில் சூரியன் இருக்கும் பொழுது, உத்திரம் நட்சத்திரம் வரும் வேளையில் `பங்குனி உத்திரம்' கொண்டாடப்படுகிறது. இதனை `பங்குனி உத்திரம் விரதம்' என்றும் சொல்வார்கள். அன்னை பார்வதி தேவி பரம சிவனை மணந்து கொண்ட அருமையான நாள்.

    ராமபிரான், சீதா தேவியை மணந்த தினம், ஆண்டாள் திருக்கல்யாணம் நடந்தது என்று பல வகையான சிறப்புகள் வாய்ந்தது இந்த நாள். அன்றைய தினம் தெய்வீக திருமணங்களை நடத்துவதற்கு பொருள் உதவி செய்வது, அந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பது போன்றவை, மிக மிக விசேஷமானதாகும்.

    ராமாயண கல்யாணம்

    அயோத்தி வந்த விஸ்வாமித்திரர், தசரத மகாராஜாவிடம், `வனத்தில் முனிவர்களை யாகம் செய்ய விடாமல் தடுக்கும் தீய சக்திகளை அழிக்க, ராம- லட்சுமணரை தன்னுடன் அனுப்பி வைக்க வேண்டும்' என்று கேட்கிறார். தசரதரின் ஒப்புதலின் பேரில் ராமனும், லட்சுமணனும் விஸ்வாமித்திரருடன் கானகம் சென்றனர். அங்கு யாகத்திற்கு இடையூறாக இருந்த தாடகை என்னும் அரக்கியை அழித்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் வழியில், அகலிகையின் சாபம் ராமனால் நீங்கியது.

    பின்னர் அவர்கள் ஜனகர் ஆட்சி செய்து வந்த மிதிலாபுரி நோக்கி சென்றனர். நிலத்தை உழுத போது, பூமியில் புதைந்திருந்த பெட்டிக்குள் இருந்து கிடைத்த ஜனருக்கு கிடைத்த குழந்தைதான், சீதாதேவி. வளர்ந்து நின்ற சீதா தேவியை, 'தன்னிடம் இருக்கும் சிவ தனுசை வளைத்து நாண் ஏற்றும் ஆண் மகனுக்கே திருமணம் செய்து கொடுப்பேன்' என்று ஜனகர் அறிவித்திருந்தார்.

    அதன்படி மிதிலாபுரி வந்த ராம பிரான், சிவ தனுசை தன் புஜபலத்தால் வளைத்தது மட்டுமல்ல, அந்த வில்லை உடைக்கவும் செய்தார். அப்போது ஜனகர், அங்கிருந்த தன்னுடைய புரோகிதரான சதாநந்தரை நோக்கி, "இவர்களுக்கு விவாகம் நடைபெற வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள்" என்றார்.

    மேலும் "என் மற்றொரு மகள் ஊர்மிளையை லட்சுமணனுக்கும், என் சகோதரர் குசத்வஜருடைய குமாரிகளாகிய இருவரில் சுருதா கீர்த்தியை சத்ருக்ணனுக்கும், மாண்டவியை பரதனுக்கும் திருமணம் செய்ய எண்ணி உள்ளேன். அதற்கான ஏற்பாடுகளையும் செய்யுங்கள். இன்று மகம் நட்சத்திரம். அடுத்த மூன்றாவது நாள் உத்திரம் நட்சத்திரம். அன்றைய தினம் இந்த நான்கு திருமணங்களும் நடைபெற வேண்டும்" என்று கூறினார். அப்படி அந்த நால்வரின் திருமணம் நடைபெற்ற தினமே `பங்குனி உத்திரம்' ஆகும்.

    சாஸ்திரங்களில் 8 விவாகங்களை பற்றி கூறப்பட்டுள்ளது. அவை பிராம்மம், தைவ்வம், ஆர்ஷம், பிராஜாபத்தியம், ஆசுரம், காந்தர்வம், ராட்சஸம், பைசாசம் ஆகியவை ஆகும்.

    இந்த விஷயத்தை இப்போது மிக கவனத்துடன் பார்க்க வேண்டும். எட்டு விவாகங்களில் தற்போது, கன்னிகா தானம் மற்றும் காந்தருவம் (காதல் திருமணம்) மட்டும்தான் வழக்கத்தில் உள்ளது. இதிலும் எந்த இடத்திலும் பெண்ணுக்கும், பிள்ளைக்கும் நட்சத்திர பொருத்தம் பார்த்து திருமணம் செய்ய வேண்டும் என்று எந்த மகரிஷியும் கூறவில்லை.

    தற்போது கலியுகத்தில் நாம் திருமணப் பொருத்தம் பார்க்கும் பொழுது கூட, பொதுவாக ருது ஆகாத பெண்களுக்கு மட்டும்தான் நட்சத்திர தோஷங்களும் (ஆயில்யம், மூலம்) ஆண், பெண் நட்சத்திரப் பொருத்தமும் பார்க்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ராசி நிச்சயம், லக்ன நிச்சயம், பெரியோர் நிச்சயம், குரு நிச்சயம், தெய்வ நிச்சயம் என்று ஐந்தையும் வரிசையாக கவனிக்க வேண்டும்.

    லட்சுமணன், பரதன், சத்ருக்ணன் ஆகியோரின் திருமண விஷயத்தில், குரு நிச்சயம் தான் செயல்பட்டது. விஸ்வாமித்திரர், வசிஷ்டர், சதானந்தர் ஆகியோர் தசரதர் மற்றும் ஜனக மன்னர்களுக்கு ஆலோசனை சொல்லி, அதன்படி பரதன், சத்ருக்ணன், லட்சுமணன் ஆகியோரின் திருமணங்கள் முடிந்தன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த இருபெரும் முனிவர்கள் சொன்னதை ஜனகரும், தசரத மகாராஜாவும் ஏற்றுக் கொண்டார்கள். இதுதான் 'குரு நிச்சயம்' என சொல்லப்படுவது.

     சிவன்- பார்வதி திருமணம்

    முருகப்பெருமான் அவதாரம் செய்ய வேண்டிய காரணத்தால், பார்வதி மானுடப் பெண்ணாக பிறக்கிறார். கடும் தவத்தின் பயனாக சிவபெருமானை மணாளனாக அடைகிறார். திருமண நாளின் போது, சிவபெருமான் தன்னுடைய உடல் முழுவதும் விபூதி (சாம்பல்) தரித்து, யானைத் தோலில் ஆடை அணிந்து வருகை தந்தார்.

    அப்போது பார்வதி தேவியின் விருப்பத்திற்கு இணங்க, சிவபெருமான் அலங்காரம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டார். இதையடுத்து பார்வதி தேவி தன் கையால் சிவபெருமானுக்கு திலகம் விட்டு, வண்ண வண்ண நிறங்களை உடலில் பூசி சிவனை அலங்கரித்தார். சிவபெருமான், `கல்யாண சுந்தரரா'க காட்சியளித்தார். இன்றும் கூட வட தேசங்களில் ஹோலி பண்டிகையின் போது, வண்ண நிறங்களை மற்றவரின் மீது பூசும் நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது.

     முருகப்பெருமான் கல்யாணம்

    முருகப்பெருமான் தேவர்களின் வேண்டுகோள்படி, சூரபத்மனை வதம் செய்தார். முருகப்பெருமானின் அரிய செயலுக்காகவும், தேவர்களின் துயரை அவர் துடைத்தெரிந்த காரணத்தாலும், தேவர்களின் தலைவனான தேவேந்திரன், தன்னுடைய மகள் தெய்வானையை முருகப்பெருமானுக்கு மணம் முடித்துக் கொடுத்தார். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருவாவினன் குடி எனப்படும் பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை போன்ற இடங்களில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும்.

     ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்த பெரியாழ்வார், துளசி வனத்தில் ஒரு பெண் குழந்தையை கண்டெடுத்தார். அந்த பிள்ளைக்கு `கோதை' என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். அவளே பின்னாளில் `ஆண்டாள்' என்றானார். ஆண்டாளுக்கு பங்குனி உத்திரம் அன்றுதான் வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. இந்த நாளில் பெருமாள் கோவில்களில், ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவதைக் காணலாம்.

    கடுமையான தவத்தில் இருந்த சிவபெருமானை நோக்கி, காம பாணம் செலுத்தி அவரது தியானத்தைக் கலைத்தான் மன்மதன். இதனால் அவனை தன்னுடைய நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கினார், சிவபெருமான். பின்னர் ரதி தேவியின் வேண்டுகோளுக்கு இணங்கி, மன்மதனை உயிப்பித்துக் கொடுத்தார். அந்த நாளும் பங்குனி உத்திர திருநாள்தான். இது தவிர பஞ்ச பாண்டவர்களில் அர்ச்சுனன் பிறந்ததும், ஐயப்பன் அவதரித்ததும் இந்த நன்னாளில்தான்.

    இந்த நாளில் புண்ணிய நதிகளில் அல்லது குளங்களில் நீராடி, ஆலயங்களில் நடைபெறும் தெய்வீக திருக்கல்யாணங்களை காண்பது மிக மிக விசேஷம். பலர் விரதம் இருந்து பழனி, சுவாமிமலை போன்ற தலங்களுக்கு சென்று வழிபாடு செய்வார்கள். இந்திராணி இந்த விரதத்தை கடைப்பிடித்து இந்திரனை திருமணம் செய்து கொண்டாள் என்கிறது புராணம். சரஸ்வதியும் இந்த வரத்தை கடைப்பிடித்துதான், பிரம்மாவை மணம் புரிந்துகொண்டதாக சொல்லப்படுகிறது.

    இந்த பங்குனி உத்திரம் அன்று விரதம் இருந்து தெய்வீக திருக்கல்யாணத்தை காண்பவர்கள் (ஆண், பெண்) அனைவருக்கும், இதுநாள் வரை திருமணத்தில் இருந்து வந்த தடைகள் விலகும். மேலும் இந்த நாளில் இறைவனின் திருக்கல்யாண வைபவத்தை காண்பவர்கள், திருமணம் ஆகி பிரிந்து இருந்தால் அவர்கள் ஒன்று சேரவும் வாய்ப்பு உண்டாகும்.

    ×