search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "repots"

    தமிழக சிறைகளில் கைதிகளை விலங்குகளைவிட மோசமாக நடத்துவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #MadrasHC
    சென்னை:

    நாடு முழுவதும் சிறைகளில் அடைக்கப்பட்ட கைதிகளுக்கு அடிப்படை உரிமைகள், வசதிகள் மறுக்கப்படுவதாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அனைத்து மாநில ஐகோர்ட்டுகளும் தாமாக முன் வந்து பொது நல வழக்கு பதிவு செய்ய வேண்டும். சிறை கைதிகளின் உரிமைகளை பாதுகாக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    இதன்படி சென்னை ஐகோர்ட்டு முன் வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.மணிகுமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் விசாரித்து வருகிறார்கள்.

    கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ஐகோர்ட்டுக்கு உதவும் நபராக, மூத்த வக்கீல் ஆர்.வைகை நியமிக்கப்பட்டார். இவரை தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

    இதன்படி, கடந்த அக்டோபர் 15-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை வேலூர், திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் உள்ள மத்திய சிறை சாலையையும், சிவகங்கையில் உள்ள சிறை சாலையையும் வக்கீல் வைகை பார்வையிட்டார். இது குறித்து ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    4 சிறைச்சாலைகளும் கைதிகளுக்கு கொடூர நரகமாக உள்ளது.


    இங்குள்ள கைதிகள் மிருகங்களைவிட கேவலமாக நடத்தப்படுகின்றனர். இவர்களுக்கு அடிப்படை வசதிகள், மருத்துவ உதவி உள்ளிட்ட சேவைகள் செய்து கொடுக்கப்படுவதில்லை. மனித உரிமைகள் முற்றிலும் மறுக்கப்படுகிறது.

    சிறையில் உள்ள கழிவறைகள் அசுத்தமாகவும், நோய்களை பரப்பும் விதமாகவும் உள்ளது. இந்த கழிவறை பூமியில் உள்ள பயங்கர நரகம் போல் காட்சி அளிக்கிறது. மூன்றில் ஒரு பங்கு கைதிகள் மனஅழுத்தத்தில் உள்ளனர். இவர்களுக்கு முறையான மனநல நிபுணர்களின் மூலம் சிகிச்சை அளிக்கப்படவில்லை.

    உடல் நலம் பாதிக்கப்பட்டு பலர் வேதனையில் தவித்து வருகிறார்கள். வயதானவர்களும் உடல் நலம் குன்றி இருக்கிறார்கள். உதாரணமாக சொல்லப் போனால் பால்ராஜ் என்ற 78 வயது ஆயுள் கைதி இரண்டு கண்களிலும் பார்வை இழந்து சிறையில் தவிக்கிறார். வேலூர் ஜெயிலில் 85 வயது சரஸ்வதி என்ற பெண்ணுக்கும் கண்பார்வை இல்லை.

    போலீஸ் பற்றாகுறை இருப்பதால் இதுபோன்ற கைதிகளை வெளியே உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க முடியவில்லை என்று சிறைத்துறை அதிகாரிகளே கூறுகிறார்கள். இன்னும் பல கைதிகள் அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டு நரகத்தில் வாழ்கிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது.  #MadrasHC
    ×