search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Review Petition Filed"

    சபரிமலையில் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஐயப்ப பக்தர்கள் சங்கம் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. #SabarimalaVerdict #SupremeCourt #SabarimalaReview
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி செல்வது வழக்கம். 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் அங்கு அனுமதிக்கப்படுவதில்லை. இவர்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சில மகளிர் அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. இதனை வலியுறுத்தி இந்திய இளம் வக்கீல்கள் சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.

    இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு கேரள அரசு வரவேற்பு தெரிவித்தது. முதல்-மந்திரி பினராயி விஜயன் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று கூறியுள்ளார்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டும் அரசின் முடிவை ஏற்பதாகவும், சபரிமலையில் பெண்களை அனுமதிக்க ஏற்பாடு மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தது.

    கேரள அரசின் இந்த முடிவுக்கு ஐயப்ப பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தனி ஆச்சாரம் உள்ளது. நித்திய பிரம்மச்சாரியான ஐயப்பனை இளம்பெண்கள் தரிசிப்பது மத நம்பிக்கையை குலைக்கும் செயல். அதை ஒரு போதும் அனுமதிக்க கூடாது. எனவே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஏற்க முடியாது. அதனை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய வாய்ப்பு இல்லை என்று சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தது. கேரள அரசுக்கு இதில் விருப்பம் இல்லாததால் இந்த முடிவை எடுத்ததாக தேவசம் போர்டு தெரிவித்தது.

    இது ஐயப்ப பக்தர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர்கள் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு எதிராகவும் கேரள அரசை கண்டித்தும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர்.

    இந்த போராட்ட அறிவிப்புக்கு சபரிமலை கோவிலுடன் தொடர்புடைய பந்தளம் ராஜ குடும்பம், சபரிமலை தந்திரிகள், ஐயப்ப சேவாசங்கம் உள்பட பல அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.

    காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகளும் போராட்டத்திற்கு துணை நிற்பதாக அறிவித்துள்ளன. இதனால் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி கேரளா முழுவதும் போராட்டங்கள் தீவிரமாகியுள்ளது.

    பா.ஜனதா கட்சியின் இளைஞரணி சார்பில் நேற்று சபரிமலை கோவில் அமைந்துள்ள பத்தினம் திட்டா மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. எர்ணாகுளம், கோட்டயம் மாவட்டங்களில் பிரமாண்ட பேரணி நடந்தது.

    எர்ணாகுளம், திருப்புணித் துறாவில் ஐயப்பனின் அவதார கோவிலான தர்ம சாஸ்தா கோவிலில் இருந்து தொடங்கிய கண்டன பேரணி நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று பூரணத்தாரா ஈசா கோவில் அருகே முடிந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

    அவர்கள் சரணகோ‌ஷம் எழுப்பியபடி சபரிமலை கோவில் ஆச்சாரத்தில் யாரும் தலையிடக்கூடாது, கோவிலுக்குள் பெண்கள் நுழையக்கூடாது என்பதை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பியபடியே சென்றனர்.

    இருமுடி கட்டி மாலை அணிய மாட்டோம் என்றும் சபதம் எடுத்தனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தும் பதாகைகளையும் ஏந்தி இருந்தனர். கேரளாவின் பாறசாலை முதல் காசர் கோடு வரை 14 மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடந்தன.

    போராட்டம் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து போராட்டக்காரர்களையும், பந்தளம் ராஜ குடும்பத்தினரையும் சந்தித்து சமரசம் பேச முதல்-மந்திரி பினராயி விஜயன் விருப்பம் தெரிவித்தார். இது பந்தள ராஜகுடும்பத்திற்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் இச்சந்திப்பிற்கு மறுத்து விட்டனர்.

    கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்வதாக உறுதி அளித்தால் மட்டுமே பேச்சு வார்த்தைக்கு வருவோம் என கூறி விட்டனர். பந்தள ராஜகுடும்பத்தின் எதிர்ப்புக்கு கேரள நாயர் சர்வீஸ் சொசைட்டி அமைப்பே காரணம் என்று கூறப்படுகிறது. என்.எஸ்.எஸ். எனப்படும் இந்த அமைப்பும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.



    இந்த நிலையில் கேரள ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. சங்கத்தின் தலைவர் ‌ஷயாலஜா விஜயன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

    அதில் அரசியல் சாசனத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியதாக கூறப்பட்டு உள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

    சபரி மலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த சீராய்வு மனு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறும் போது தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் சபரி மலையில் பெண்களை ஏன் அனுமதிக்கக் கூடாது என்பது தொடர்பாக வலுவான வாதங்கள் முன் வைக்கப்பட உள்ளது.  #SabarimalaVerdict #SupremeCourt #SabarimalaReview
    ×