search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rights Holders"

    • கடந்த 1-ந் தேதி முதல் மாநகராட்சி பகுதிகளில் சுற்றி திரியும் கால்நடைகளை காப்பகத்திற்கு கொண்டு சென்று பாதுகாக்கவும் மற்றும் உரிமையாளர்களுக்கு அபராத தொகை விதிக்கும் பணி தொடங்கப்பட்டது.
    • பிடிபடும் மாடுகளை 10 நாட்களுக்குள் அபராதம் செலுத்தி அழைத்து செல்லாவிட்டால் ஏலம் விடப்படும்.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூராக சுற்றித்திரியும் கால்நடைகளை மாநகராட்சி பணியாளர்கள் மூலம் காப்பகத்திற்கு கொண்டு செல்லவும், அபராத தொகை விதிக்கவும் தஞ்சாவூர் மாநகராட்சி மாமன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனுமதி பெறப்பட்டது.

    இதையடுத்து கடந்த 1-ந் தேதி முதல் மாநகராட்சி பகுதிகளில் சுற்றி திரியும் கால்நடைகளை காப்பகத்திற்கு கொண்டு சென்று பாதுகாக்கவும் மற்றும் உரிமையாளர்களுக்கு அபராத தொகை விதிக்கும் பணி தொடங்கப்பட்டது.

    இதன்படி, இன்று அருளானந்த நகர், புதிய பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மாடுகள் பிடிக்கப்பட்டு காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    இப்பணியானது தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணக்குமார், மாநகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ் காந்தி ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்றது. தொடர்ந்து இந்த பணி நடந்து வருகிறது.

    இது குறித்து மேயர் சண். ராமநாதன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சுற்றி திரிந்த மாடுகள் பிடிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதுவரை 60 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன. அப்படி பிடிபடும் மாடுகள் அந்தந்த வார்டுகளில் உள்ள காப்பகத்தில் கட்டி வைக்கப்பட்டு தேவையான வைக்கோல், புற்கள் கொடுக்கப்பட்டு வருகிறது.

    மாடுகளை பிடித்து செல்வதற்கு பிரத்யேகமான வாகனம் பயன்படுத்தப்படுகிறது.

    மாடுகளின் உரிமைதாரர்களுக்கு முதலில் ரூ.3000 அபராதம் விதிக்கிறோம்.

    இரண்டாவது முறையாக அதே மாடு பிடிக்கப்பட்டால் ரூ.4000, மூன்றாவது முறையாக பிடிபட்டால் ரூ.5000 அபராதம் விக்கப்படுகிறது.

    மீண்டும் அதே மாடு தொடர்ந்து பிடிப்பட்டால் மாநகராட்சியில் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும். இதேபோல் பிடிபடும் மாடுகளை 10 நாட்களுக்குள் அபராதம் செலுத்தி அழைத்து செல்லாவிட்டால் ஏலம் விடப்படும்.

    இதேபோல் குரங்குகள் பிடிக்கும் பணியும் நடந்து வருகிறது. இதுவரை 70 குரங்குகள் பிடிபட்டுள்ளன.

    தொடர்ந்து குதிரைகள் பிடிக்கும் மணி நடைபெற உள்ளது. மாடுகள் பிடிக்கும் பணியால் தற்போது தஞ்சாவூர் மாநகராட்சியில் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×