search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RK Nagar Election"

    ஆர்.கே.நகர் தேர்தலில் பணப்பட்டுவாடா தொடர்பாக தேர்தல் கமிஷன் மற்றும் தமிழக அரசுக்கு வருமானவரித்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. #RKNagar #RKNagarelection

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மரணம் அடைந்தார். இதனை தொடர்ந்து அவர் வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

    கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடத்துவதற்கு முதலில் திட்டமிடப்பட்டது. அப்போது அ.தி.மு.க. இரண்டாக உடைந்திருந்தது. அ.தி.மு.க. அம்மா அணிக்கு சசிகலா தலைமை தாங்கி இருந்தார். இந்த அணி சார்பில் டி.டி.வி.தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.

    ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் செயல்பட்ட புரட்சி தலைவி அம்மா அணி சார்பில் மதுசூதனன் களத்தில் இருந்தார். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பணப்பட்டுவாடா நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அந்த நேரத்தில் தினகரனுக்கு ஆதரவாக அமைச்சர்களும் செயல்பட்டனர்.

    ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு அமைச்சர்களே பணப்பட்டுவாடா செய்வதாகவும் புகார் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு ஏப்ரல் 7-ந் தேதி மாநிலம் முழுவதும் சுமார் 50 இடங்களில் இந்த சோதனை நடந்தது.

    அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுத்ததற்கான ஆதாரங்கள் சிக்கின. ரூ.89 கோடி அளவுக்கு பணப்பட்டுவாடா செய்திருப்பதற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து ஆர்.கே.நகர் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.


    பின்னர் கடந்த ஆண்டு டிசம்பரில் நடத்தப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அ.தி.மு.க. அணிகள் இணைந்தும் மதுசூதனன் தோல்வியை தழுவினார்.

    வருமான வரி துறையினர் சோதனை நடத்திய பிறகு இந்த விவகாரத்தில் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. அந்த பிரச்சினை அப்படியே அடங்கிப் போனது.

    இந்த நிலையில் வருமான வரி துறையினர் தற்போது அது தொடர்பான அறிக்கையை தேர்தல் கமி‌ஷனிடமும், தமிழக அரசிடமும் தாக்கல் செய்துள்ளனர். அதில் வருமான வரி சோதனையின் போது திரட்டப்பட்ட தகவல்கள், பணப்பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் ஆகியவை முழுமையாக இடம் பெற்றுள்ளன. வருமானவரி சோதனையில் சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய விவரங்களும் அறிக்கையில் உள்ளது.

    இது தொடர்பாக மாநில அரசின் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, வருமான வரி சோதனையின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்று தெரிவித்தார். #RKNagar #RKNagarelection

    ×