search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "road project"

    சேத்துப்பட்டில் 8 வழிச்சாலைக்கு எதிராக போராட்டம் வலுத்துள்ளதால், கண்ணீர் புகை குண்டு வீசும் ‘வஜ்ரா’ வாகனத்துடன் அதிரடிப்படை போலீசார் வரவழைக்கப்பட்டு நிலம் கையகப்படுத்தப்படுகிறது.
    திருவண்ணாமலை:

    8 வழி பசுமை சாலைக்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் செங்கம், செய்யாறு, போளூர் வந்தவாசி, சேத்துப்பட்டில் 122 கிலோ மீட்டர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதுவரை 94 கிலோ மீட்டர் நிலங்கள் கடும் எதிர்ப்பையும் மீறி அதிகாரிகள் கையகப்படுத்தியுள்ளனர்.

    மீதமுள்ள 28 கிலோ மீட்டர் நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தீக்குளிக்க முயற்சி, கிணற்றில் குதிப்பு, மாணவி கழுத்தறுப்பு உள்ளிட்ட தற்கொலை மிரட்டல்களால் விடுபட்ட நிலங்களையும் அதிகாரிகள் விரைந்து கையகப்படுத்தி வருகின்றனர்.

    வந்தவாசி மற்றும் சேத்துப்பட்டு பகுதியில் நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிராக போராட்டம் வலுத்துள்ளதால், கண்ணீர் புகை குண்டு வீசும் ‘வஜ்ரா’ வாகனத்துடன் அதிரடிப்படை போலீசார் வரவழைக்கப்பட்டு நிலம் கையகப்படுத்தப்படுகிறது.

    வஜ்ரா வாகனங்கள் செல்லும் கிராமங்களில் பதட்டமான சூழல் காணப்படுகிறது. சொந்த நிலத்தை பறிகொடுக்கும் விவசாயிகளை கலவரக்காரர்களை போல அடக்குவதற்கு பல்வேறு தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    பசுமை சாலைக்கு எதிராக போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இளைஞர்கள் சிலர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். சைபர் கிரைம் போலீசார், சமூக வலைதளங்களில் பகிரப்படும் கருத்துக்களை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

    பசுமை சாலைக்கு எதிராக திருவண்ணாமலையில் போராட்டம் நடத்த பேஸ்புக் பக்கத்தில் அழைப்பு விடுத்த திருவண்ணாமலை பே கோபுர தெருவை சேர்ந்த விஜயகுமார் (வயது 35) மற்றும் வேளுகானந்தலை சேர்ந்த மணிகண்டன் (25), பவன்குமார் (27) ஆகிய 3பேர் கைது செய்யப்பட்டனர்.

    சேலம் போலீசாரும் 2 பேரை கைது செய்தனர். இந்த நிலையில் திருவண்ணாமலை அடுத்த வாணாபுரம் நெய்யூர் விநாயகபுரத்தை சேர்ந்த கதிரவன் (25) என்பவரையும் திருவண்ணாமலை போலீசார் கைது செய்துள்ளனர்.

    கதிரவன் பொக்லைன் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். சமூக வலைதளங்களில் கதிரவன் பசுமை சாலைக்கு எதிராக ‘மீம்ஸ்’ உருவாக்கி அந்த திட்டத்திற்கு எதிராக மாணவர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் என்று போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மேலும், சமூக வலைதளங்களை சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மத்திய-மாநில அரசுகள் மற்றும் ஆட்சியாளர்களுக்கு எதிராகவும், பசுமை சாலை திட்டத்திற்கு எதிராகவும் கருத்து பதிவிடும் நபர்களை கண்டுபிடித்து கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    பசுமை சாலைக்கு எதிராக வாய் திறந்தாலே கைது செய்யப்படுவது கருத்து சுதந்திரத்திற்கு எதிரான அடக்குமுறை. அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை போல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
    ×