search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rs 200 crore"

    திருப்பூரில் கடையடைப்பு போராட்டம் காரணமாக ரூ. 200 கோடிக்கு பனியன் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.
    திருப்பூர்:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டத்திற்கு தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகள் அறிவித்து இருந்தது.

    இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. பனியன் நகரமான திருப்பூரில் பனியன் மற்றும் அதனை சார்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளது. அவைகள் அனைத்தும் இன்று அடைக்கப்பட்டு இருந்தது.

    திருப்பூர் மற்றும் அதனை சுற்றி உள்ள அனுப்பர் பாளையம் பகுதியில் பாத்திர உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த நிறுவனங்களும் அடைக்கப்பட்டு இருந்தது.

    முழு அடைப்பு காரணமாக திருப்பூரில் ரூ. 200 கோடி பனியன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. பனியன் நிறுவனம் அடைக்கப்பட்டதால் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிப்புக்கு உள்ளானார்கள்.

    திருப்பூரில் பனியன் நிறுவனம் மட்டுமின்றி ஓட்டல்கள், கடைகள், காய்கறி மார்க்கெட் உள்ளிட்டவைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. ஒரு சில ஆட்டோக்கள் ஓடவில்லை. இதனால் எப்போதும் பரபரப்பாக காட்சியளிக்கும் புதுமார்க்கெட், அவினாசி ரோடு, கடை வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    திருப்பூர் மாநகர போலீஸ் கமி‌ஷனர் நாகராஜன் உத்தரவின் பேரில் ரெயில் நிலையம், பஸ் நிலையம், ரெயில் நிலையம், மாநகராட்சி அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    அசம்பாவிதங்களை தடுக்க போலீசார் ரோந்து பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    அவினாசி, ஆட்டையாம் பாளையம், கைகாட்டி புதூர், சேவூர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. அவினாசி தினசரி மார்க்கெட் மூடப்பட்டிருந்தது. ஆனால் பஸ்கள் வழக்கம் போல் ஓடியது.

    நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி ஆகிய இடங்களில் இன்று கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடியது. கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் ஊட்டிக்கு சுற்றுலா வந்த பயணிகள் அவதியடைந்தனர்.

    ×