search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rs.4 crore"

    • திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் அய்யலூரில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது.
    • பக்ரீத் பண்டிகையைமுன்னிட்டு அதிகாலையிலேயே வியாபாரிகள் அதிகளவில் வந்ததால் ரூ.2 கோடிக்கு மேல் விற்பனையானது.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் அய்யலூரில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. வருகிற 10-ந்தேதி பக்ரீத்பண்டிகை கொண்டாடப்படஉள்ள நிலையில் பிரசித்தி பெற்ற ஒட்டன்சத்திரம் ஆட்டுச்சந்தையில் இன்று அதிகாலை 4 மணி முதலே வியாபாரிகள் வரத்தொடங்கினர்.

    திண்டுக்கல், பழனி, வேடசந்தூர், கன்னிவாடி, செம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்தனர். சந்தையில் வெள்ளாட்டுகிடாய் ரூ.10ஆயிரத்திலிருந்து ரூ.15 ஆயிரம் வரையிலும், வெள்ளாடுகள் ரூ.5ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையிலும், ஆட்டுக்குட்டிகள் ரூ.2ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரையிலும் விற்பனையானது.

    இன்று மட்டும் சுமார் ரூ.2 கோடிக்கும் அதிகமான அளவில் வர்த்தகம் நடைபெற்றதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    அய்யலூர் ஆட்டுச்சந்தையிலும் அதிகாலை முதல் ஆடுகள், கோழிகள் ஆகியவற்றை வாங்க பல்வேறு ஊர்களில் இருந்து வியாபாரிகள் வந்தனர். வழக்கமாக அய்யலூர் ஆட்டுச்சந்தை 9 மணிவரை நடக்கும். பக்ரீத் பண்டிகையைமுன்னிட்டு அதிகாலையிலேயே வியாபாரிகள் அதிகளவில் வந்ததால் ரூ.2 கோடிக்கு மேல் விற்பனையானது.

    திருச்சி மாவட்டம் புத்தாநத்தம், இளங்காகுறிச்சி, துவரங்குறிச்சி மற்றும் வெளிமாவட்ட வியாபாரிகள் அதிகளவில் கலந்து கொண்டனர். செம்மறி ஆடுகள் ரூ.16 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.30 ஆயிரம் வரை விற்பனையானது.

    வியாபாரிகளுக்கு அதிகளவில் லாபம் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர். பக்ரீத் பண்டிகை மட்டுமின்றி ஆடிமாத பிறப்பை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் ஆடுகள் பலியிட்டு வழிபடுவது வழக்கம். அதற்காகவும் ஆடுகள் விற்பனை களைகட்டியது. நாட்டுக்கோழி ரூ.300 வரையிலும், கட்டுச்சேவல்கள் ரூ.3ஆயிரம் முதல் ரூ.10ஆயிரம் வரையிலும் விற்பனையாகின.

    சந்தையில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் இங்கு வந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மிகவும் சிரமம் அடைந்தனர். வெளியூர்களில் இருந்து வந்த வியாபாரிகள் தங்கள் வாகனங்களை நிறுத்தக்கூட முடியாமல் சிரமம் அடைந்தனர். இதனால் சந்தை நடந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    ×