search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rudrakodi Theertham"

    • இந்த பகுதியில் இன்றும் சித்தர்கள் வாழ்வதாக நம்பப்படுகிறது.
    • ராமர் பாதங்கள் இருப்பதை இன்றும் தரிசிக்க முடியும்.

    கோவில் தோற்றம்

    தமிழ்நாட்டின் `மூக்குமுனை' என்று வர்ணிக்கப்படும், வனம் சூழ்ந்த கடற்கரை தலம்தான் கோடியக்கரை. வேதவனத்தின் (வேதாரண்யம்) தென்கோடியாக இருக்கும் இக்கோடியக்கரை, காடுகளால் சூழப்பட்டுள்ளது. எங்கு நோக்கினும் உப்பளங்கள் காணப்படுகின்றது. கோவில் இருக்கும் இடம் `கோடியக்காடு' என்றும், கடற்கரைப் பகுதி `கோடியக்கரை' என்றும் அழைக்கப்படுகின்றது.

    நவகோடி சித்தர்கள் வழிபட்ட இந்த பகுதியில் இன்றும் சித்தர்கள் வாழ்வதாக நம்பப்படுகிறது. இதற்குச் சான்றாக சித்தர் கட்டம் ஒன்றும் கடற்கரையில் உள்ளது. நவக்கிரக தோஷத்தில் இருந்து விடுதலை கொடுக்கும் தலமாகவும் இது திகழ்கிறது. பிரம்மா, நாரதர், இந்திரன், சுவேத மகரிஷி, குழக முனிவர் ஆகியோர் இத்தல இறைவனை வழிபட்டு திருவருள் பெற்றுள்ளனர்.

    இத்தலத்திற்கு அருகே அகத்தியர் தங்கி சிவ பூஜை செய்த 'அகத்தியம்பள்ளி' என்ற சிவ தலம் அமைந்துள்ளது. சோழ நாட்டு காவிரி தென்கரையின் 127-வது திருத்தலமாக இது புகழ் பரப்பி நிற்கின்றது. சுந்தரர் இத்தலம் மீது ஒரு பதிகம் பாடி போற்றியுள்ளார்.

    சேரமான் பெருமானுடன் இங்கு வந்த சுந்தரர், வேடர்கள் பலர் இங்கு வாழ்ந்ததாகக் குறிப்பிட்டு, இத்தல அம்பிகையை 'மையார் தடங்கண்ணி' என்று புகழ்ந்திருக்கிறார். அருணகிரிநாதர் இத்தல முருகன் மீது திருப்புகழ் மாலை ஒன்றை சாத்தி உள்ளார். கோடியக்காட்டு முகத்துவாரத்தில் ராமபிரான் சேதுபந்தனம் செய்ய நின்ற இடத்தில் ராமர் பாதங்கள் இருப்பதை இன்றும் தரிசிக்க முடியும்.

    திருவாவடுதுறை குருமூர்த்திகளான சித்தர் சிவப்பிரகாசர், இங்கே ஜீவசமாதி அடைந்துள்ளார். கோடியக்கரை கடலில் ஒரு முறை நீராடினால் ராமேஸ்வரம் சேதுவில் 100 முறை நீராடிய பலனைப் பெறலாம் என்கிறார்கள். எனவே இது 'ஆதிசேது' என்றும் போற்றப்படுகின்றது. மாசி மகம், ஆடி மற்றும் தை அமாவாசைகளில் இங்கு நீராடி, பித்ரு தர்ப்பணம் செய்தால் முன்னோர்கள் முக்தி நிலையை அடைவார்கள்.

    தேவர்களும், அசுரர்களும் இணைந்து திருப்பாற்கடலைக் கடைந்த போது, அதில் இருந்து அமிர்தம் வெளிப்பட்டது. அந்த அமிர்த கலசத்தை தேவலோகத்திற்கு எடுத்துச் செல்ல முயன்றார், வாயு பகவான். அப்போது அசுரர்கள் அனைவரும் சேர்ந்து சூறாவளி காற்றை உருவாக்கினர். அதனால் வாயு பகவான் அமிர்த கலசத்தை தவறவிட்டார். அப்படி தவறி விழுந்த அமிர்த கலசத்தை, இத்தலத்தில் உள்ள முருகப்பெருமான் தன் கையில் தாங்கி, பின்னர் அதனை தேவர்களிடம் ஒப்படைத்ததாக தல வரலாறு சொல்கிறது.

    இதனால் தேவர்கள் மகிழ்ந்து கந்தனுக்கு நீலோற்பல மலரை பரிசாக அளித்தனா். எனவே இத்தலத்தில் அருளும் முருகப்பெருமான், தன்னுடைய கரங்களில் நீலோற்பல மலரையும், அமிர்த கலசத்தையும் தாங்கிய படி அருள்பாலிக்கிறார். அமிர்த கலசத்தில் இருந்து சிந்திய அமிர்தத் துளிகள் சிவலிங்கமாக உருவானது. அப்பெருமானே இத்தலத்தில் அருளும் அமிர்தகடேசுவரர் ஆவார்.

    வடநாட்டில் நர்மதை ஆற்றங்கரையில் சுவேத முனிவருக்கும், சுசீலை அம்மைக்கும் மகனாகப் பிறந்தவர், குழக முனிவர். இவர் தனது நாட்டைவிட்டு இங்கே வந்து தவம் புரிந்து, முக்தி பெற்றுள்ளார். முருகன் (குழகன்) சிறப்பினாலும், குழக முனிவர் பூஜித்தமையாலும் இத்தலம் 'குழகர் கோவில்' என்று வர்ணிக்கப்படுகின்றது. கிழக்கு நோக்கிய அழகிய ராஜகோபுரத்துடன் ஆலயம் அற்புதமாக திகழ்கின்றது.

     சன்னிதிகள் யாவும் உயரமான மேடை அமைப்பு மீது அமையப் பெற்றுள்ளது. தென்முகம் கொண்டு அருள்பாலிக்கின்றாள், அன்னை அஞ்சனாட்சி. அருகே வனதேவதையான காடுகிழாளும் தரிசனமளிக்கின்றாள். மகா மண்டபத்தில் குழக முனிவரும் அருள்பாலிக்கின்றார். கருவறையில் அமிர்தகடேசுவரர் சதுர ஆவுடையார் கொண்டு வீற்றிருக்கிறார்.

    பிரகாரத்தில் அமுத கிணறு ஒன்று உள்ளது. கணபதியும் இங்கே 'அமிர்த கணபதி' என்று அழைக்கப்படுகின்றார். இவ்வாலய பிரதான மூர்த்தியான முருகப்பெருமான், மேற்கில் தனியே சன்னிதி கொண்டு ஒரு முகமும் ஆறு திருக்கரங்களுமாக அருள்பாலித்து வருகிறார்.

    அவருடன் வள்ளி- தெய்வானை ஆகிய இரண்டு தேவியா்களும் இருக்கின்றனா். இந்த முருகப்பெருமான் 'அமிர்தகர சுப்பிரமணியர்' என்றும், `கோடிக்குழகர்' என்றும் அழைக்கப்படுகின்றார். இத்தலத்தில் நவக்கிரகங்கள் ஒரே வரிசையில் காட்சியளிக்கின்றன.

    இவ்வாலயத்திற்கு 2 கிலோமீட்டர் தொலைவில் ருத்ரகோடி தீர்த்தம் எனப்படும் கடல், பிரதான தீர்த்தமாக உள்ளது. குராமரம் தல விருட்சமாக உள்ளது.

    சரியாக பேச்சு வராத குழந்தைகள் இங்கு முருகனுக்கு அபிஷேகம் செய்த தேனைப் பருகினால் சிறந்த பலனைப் பெறுகின்றனர். சஷ்டி விரதம் இருந்து முருகனுக்கு அபிஷேகம் செய்தாலும் குழந்தைப் பேறு கிடைக்கும். தொடர்ந்து ஆறு சஷ்டி திதியில் விரதம் இருந்து, இத்தல முருகனுக்கு ஆறு நிறத்தில் உள்ள மலர்களை சூட்டி, ஆறு நைவேத்தியங்களை படைத்து வழிபட்டால், எதிரிகள் தொல்லை நீங்கும். இத்தலத்தில் அஞ்சனாட்சி அம்மைக்கு பாலாபிஷேகம் செய்து வில்வம் மற்றும் சம்பங்கி மலர்களால் அர்ச்சித்தால், நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

    அமைவிடம்

    நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டத்தில் வேதாரண்யத்தில் இருந்து சுமார் 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கோடியக்கரை.

    ×