search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Samhara Murthy"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மிருகண்டு முனிவர், மிருகண்டேஸ்வர் என்னும் பெயருடன் லிங்க வடிவில் காட்சி தருகிறார்.
    • தாய் மருத்துவதிக்கு ஒரு தனி சந்நிதி உள்ளது.

    திருக்கடையூரில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் மணல்மேடு என்னும் கிராமம் இருக்கிறது. அங்கே தான் மார்க்கண்டேயர் தங்கி இருந்த ஆசிரமம் இருந்தது. தற்போது அந்த ஆசிரமம் மார்கண்டேயர் கோவிலாக மாறியுள்ளது.

    மிருகண்டு முனிவர், மிருகண்டேஸ்வர் என்னும் பெயருடன் லிங்க வடிவில் காட்சி தருகிறார். மார்கண்டேயருக்கு தனி சந்நிதி உள்ளது. மார்கண்டேயரின் தாய் மருத்துவதிக்கு ஒரு தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது.

    விநாயகர், ஆஞ்சநேயர், சுப்ரமணியர் என்று சுவாமி விக்கிரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. குழந்தைப்பேறு அற்றவர்கள், திருமணம் கைகூடாதவர்கள், நோய்த் தொல்லைகளில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமான வாழ்க்கையை விரும்புகிறவர்கள் அனைவரும் இந்த கோவிலில் வந்து பிரார்த்தனை செய்து கொண்டால் பலன் கிட்டும் என்ற நம்பிக்கை மக்களிடத்தில் இருக்கிறது.

    எமன் மீண்டும் உயிர் பெற்ற தலம்

    மார்க்கண்டேயன் உயிரை பறித்து செல்லமுடிவு செய்த எமன் துணிச்சலாக திருக்கடையூர் தலத்துக்குள் நுழைந்தான். இதை கண்டதும் மார்க்கண்டேயர் ஓடிச் சென்று சிவலிங்கத்தை கட்டிப்பிடித்துக் கொண்டார் என்றாலும் எமன் பாசக்கயிறை வீசினான்.

    அந்த கயிறு சிவலிங்கம் மீதும் பட்டது. அவ்வளவு தான்..... ஆவேசம் அடைந்த ஈசன் லிங்கத்தை பிளந்தபடி வெளியில் வந்தார். தன் இடது காலால் எமனை ஓங்கி உதைத்தார்.

    ஒரே ஒரு உதைதான். ஈசன் உதைத்தால் யாரால் தாங்கிக் கொள்ள முடியும்? அந்த இடத்திலேயே எமன் உயிர் பிரிந்தது.

    எமன் செத்துப் போனால் என்ன ஆகும்? அதன்பிறகு உலகில் யாருமே மரணம் அடைய வில்லை. இதனால் உலகில் மக்கள் தொகை அதிகரித்தது. இதையடுத்து பாரம் தாங்காமல் பூமா தேவி அவதிப்பட்டாள்.

    ஒரு கட்டத்தில் பூமாதேவியால் பொறுக்க முடியவில்லை. எனவே அவள் சிவபெருமானை நோக்கி பிரார்த்தனை செய்தாள்.

    மக்கள் தொகை பெருக்கத்தால் உலகம் தள்ளாடுவதை கண்டு மகா விஷ்ணுவும், பிரம்மாவும் சிவபெருமானை அணுகி எமனுக்கு மீண்டும் உயிர் கொடுக்கும்படி வேண்டினார்கள். இதனால் எமன் மீது ஈசன் இரக்கம் கொண்டார்.

    எமனுக்கு மீண்டும் உயிர் கொடுத்து, ஆசி வழங்கி அருளினார். இந்த அற்புதமும் இங்கு தான் நிகழ்ந்தது. அதை சுட்டிக் காட்டும் வகையில் திருக்கடையூர் தலத்தில் எமதர்ம ராஜாவும் எழுந்தருயுள்ளார். கால சம்ஹார மூர்த்திக்கு நேர் எதிரில் பிரகாரத்தில் எமதர்ம ராஜாவை காணலாம்.

    எம பயம் போக்கும் கால சம்ஹார மூர்த்தி

    மகாமண்டபத்தின் வடபால் சிற்ப வேலைப்பாட்டுடன் கூடிய அழகிய சபையில் இயமனை நிக்கிரகானுக்கிரகம் பண்ணின அவசரத்தில் (தோற்றநிலை) தெற்குமுகமாக எழுந்தருளியுள்ளார்.

    வலது திருக்கரங்களில் சூலமும் மழுவும் உள்ளது. இடது திருவடியால் உதையுண்ட இயமனார் தலைகீழாக வீழ்ந்து கிடக்கின்றார். வீழ்த்தி கிடக்கும் இயமனை ஒரு சிவபூதம் கயிறுகட்டி இழுத்து அப்புறப்படுத்தும் காட்சி காணற்கரியது. இறைவனார் வலது பாகத்தில் ஸ்ரீமார்க்கண்டேயர் அருளுருவாய்க் காட்சியளிக்கிறார்.

    இடது பக்கத்தில் பலாம்பிகை திருமகள் கலைமகளாகிய சேடியருடன் விளங்குகின்றார். இம்மூர்த்திக்கெதிரில் வடக்கு முகமாக இயமனார் (உற்சவமூர்த்தி) எருமையுடன் ஆண்டவன் அருளை நாடிய வண்ணமாக ஆட்சித்திருக்கோலத்தில் காணப்படுகின்றார்.

    இக்காலசங்கார மூர்த்திக்கு ஆண்டில் பன்னிரண்டுமுறை அபிஷேகம் நடைபெறுகிறது. இவர் சித்திரை பெருவிழாவில் ஆறாந்திருநாளன்று தான் வீதியுலாவிற்கு எழுந்தருளுவார்.

    ×