என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » sathyamoorthi
நீங்கள் தேடியது "sathyamoorthi"
தனது 15 வயதில் தீரர் சத்திய மூர்த்தியை குருவாக ஏற்றுக்கொண்ட கர்மவீரர் காமராஜர் தனது வாழ்நாள் முழுவதும் நன்றி மறவாமல் உண்மை அவருக்கு சிஷியனாக வாழ்ந்தே மறைந்தார். #HBDKamarajar
மதுரையில் தீரர் சத்தியமூர்த்தி கலந்து கொண்ட ஒரு பொதுக்கூட்டத்தில் 15 வயது ஒரு சிறுவன் துடிப்புடன், சுறுசுறுப்புடன் செயல்பட்டு கூட்டத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தான். அந்த சிறுவன் சத்தியமூர்த்தி அவர்களின் கவனத்தை மிகவும் கவர்ந்து விட்டான். அவனை மேடைக்கு அழைத்த அவர் உனது பெயர் என்ன என்று கேட்க, அச்சிறுவன் தனது பெயர் காமராஜர் என்று பணிவுடன் கூறினான். அதற்கு சத்தியமூர்த்தி அவர்கள் அப்பா நீ என்னை சென்னையில் வந்து பார் என்று கூறி விட்டு பின்னர் மதுரையிலிருந்து புறப்பட்டு வந்துவிட்டார்.
சில காலம் கழித்து சென்னை வந்த காமராஜரை தீரருக்கு மிகவும் பிடித்துவிட்டது. காமராஜரின் பணிவு சத்தியமூர்த்தியை வெகுவாக கவர்ந்தது. காமராஜர் அவரை குருநாதராகவும், தன்னை சீடராகவும் நினைத்து பழகி வந்தார். அவருடைய செயல்பாடுகள் தீரருக்கு மிகவும் பிடித்ததால் அவரது நம்பிக்கைக்கு உரியவராக காமராஜர் தேர்வானார்.
1940-ம் ஆண்டு காங்கிரசில் ராஜாஜி ஆதரவாளர்கள் என்றும், சத்தியமூர்த்தி ஆதரவாளர்கள் என்றும் இரு பிரிவினர் செயல்பட்டார்கள். மாநில காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ராஜாஜி தன்னுடைய ஆதரவாளரான கோவை சுப்பையாவை போட்டியிட செய்தார். தீரர் தன்னுடைய சீடரான காமராஜரை நிறுத்த முடிவு செய்தார்.
இதை காமராஜரிடம் சொன்னபோது அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. உங்கள் தொண்டன் நான். நான் தலைவராவதா? என்று காமராஜர் உருக்கமாக தீரரிடம் கேட்டார். உடனே தீரர் அவரிடம், நாட்டின் நன்மையை கருதி நீங்கள் தான் தலைவர் ஆக வேண்டும். தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று காமராஜரிடம் திட்டவட்டமாக கூறினார்.
தீரர் கூறியதை தட்ட முடியாத காமராஜர் தேர்தலில் போட்டியிட்டார். தியாகராய நகரில் உள்ள இந்தி பிரசார சபாவில் தேர்தல் நடந்தது. இந்தி பிரசார சபா வெளிவாசல் அருகில் தீரர் நின்று கொண்டு ஓட்டு போட வந்தவர்களை கைகூப்பி வணங்கியபடி, "நாட்டின் நலனை கருத்தில் கொண்டு காமராஜருக்கு ஓட்டு போடுங்கள்" என்று கேட்டுக் கொண்டார்.
தலைவர் தேர்தலில் 2 ஓட்டுகள் வித்தியாசத்தில் காமராஜர் வெற்றி பெற்று மாநில காங்கிரஸ் தலைவர் ஆனார். தீரர் காங்கிரஸ் மாநில செயலாளர் ஆனார். தன்னை குருவாக நினைத்த காமராஜரை தலைவர் ஆக்கி அவருக்கு கீழ் செயலாளர் பதவி வகித்த தீரரின் தியாகத்தை அரசியல் வரலாற்றில் இது வரை யாரும் செய்ததில்லை.
காமராஜர் எப்போதும் நாடு, நாட்டு மக்களை பற்றிதான் சிந்தித்துக் கொண்டிருப்பார். சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த தீரர் சுதந்திரம் அடைவதற்கு முன்பே தனது 55-வது வயதில் இறந்து விட்டார். தீரரின் மரண செய்தியை கேட்ட காமராஜர் துடியாய் துடித்தார். துக்கம் தாங்காமல் கதறி அழுதார்.
காமராஜர் தன்னைப் பற்றியோ, தனது வீட்டைப் பற்றியோ சிந்திப்பதே கிடையாது. இதற்கு ஒரு சம்பவத்தை உதாரணமாக கூற முடியும். காமராஜர் முதல்-அமைச்சர் ஆன பிறகு தியாகராய நகரில் உள்ள இந்தி பிரசார சபா எதிரில் தணிகாசலம் சாலையில் தீரரின் குடும்பத்தினர் குடியிருக்கும் வீட்டுக்கு அடிக்கடி வருவார். காமராஜர் அவர்களிடம் ‘என்னை பார்க்க நீங்கள் வரவேண்டாம். நானே வருவேன்' என்று கூறுவார்.
ஒரு நாள் காமராஜரின் தாயார் சிவகாமி அம்மையார் தீரரின் குடும்பத்தினர் வசித்த வீட்டுக்கு வந்தார். அவர் தீரரின் மனைவி பாலசுந்தரத்திடம் விருதுநகரில் உள்ள வீட்டு சுற்று சுவர் இடிந்து உள்ளது. அதை தம்பி (காமராஜர்)யிடம் கட்டச் சொல்லுங்க என்று சிவகாமி அம்மையார் உருக்கமாக சொன்னார். தீரரின் மனைவி இவ்விஷயத்தை காமராஜர் வீட்டுக்கு வந்தபோது கூறினார்.
உடனே காமராஜர், முதல்-அமைச்சர் பதவிக்கு வந்த உடன் அவன் தன்னுடைய வீட்டு சுற்றுச் சுவரை கட்டியுள்ளான் என்று குற்றச்சாட்டு கூறுவார்கள்' என்று தீரரின் மனைவியிடம் கூறினார். இதை கேட்ட அவர் மவுனம் ஆகிவிட்டார்.
இன்னொரு நாள் சிவகாமி அம்மையார் தீரரின் மனைவியிடம் எனக்கு காமராஜர் ஒரே பையன். அவன் திருமணம் செய்யாமல் இருப்பது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. அவனை திருமண கோலத்தில் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்கிறது. அவனிடம் இதை எடுத்து சொல்லி திருமணத்துக்கு சம்மதிக்க செய்யுங்கள்' என்று கூறினார்.
இம்முறையும் காமராஜர் தீரர் குடும்பத்தினர் வசித்த வீட்டுக்கு வந்தபோது அவரிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு தீரரின் மனைவி கேட்டுக் கொண்டார். அதற்கு அவர் எந்த பதிலும் சொல்லாமல் மவுனமாக சென்று விட்டார்.
காமராஜரை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக தேர்ந்தெடுத்தார்கள். புவனேஸ்வரில் அவர் பதவி ஏற்பு விழா நடந்தது. தீரரின் குடும்பத்தை அவர் அந்த விழாவுக்கு அழைத்தார். அவர்கள் குடும்பத்துடன் ரெயிலில் சென்று பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டார்கள். அகில இந்திய காங்கிரஸ் தலைவராக காமராசர் பதவி ஏற்ற விழா மிகவும் சிறப்பாக இருந்தது. அந்த விழாவை தீரரின் குடும்பத்தினர் காமராசரின் திருமண விழாவாக நினைத்துக்கொண்டனர். அந்த அளவுக்கு நன்றி விசுவாசத்துடன் காமராஜர் தீரர் குடும்பத்தாரின் மீது அளவு கடந்த அன்பும், பாசமும் வைத்திருந்தார்.
முதல்-அமைச்சராக இருந்தபோது காமராஜரும், தீரரின் குடும்பத்தாரும் திருப்பதி கோவிலுக்கு சென்றார்கள். ஆந்திர முதல்-மந்திரியாக இருந்த பிரமானந்த ரெட்டியும் கோவிலுக்கு வந்திருந்தார். கோவிலில் தீரரின் பேரன்களான கிருஷ்ணமூர்த்தி, சத்தியமூர்த்தி ஆகியோருக்கு மொட்டை போட செய்தார்.
திரும்பி காரில் வரும்போது ரேணிகுண்டாவில் புதை மணலில் காரின் டயர்கள் சிக்கிக் கொண்டது. கார் நகரவில்லை. காரில் இருந்த காமராஜர் கீழே இறங்கி காரை தள்ளினார். முதல்-அமைச்சராக இருந்த அவர் எந்தவித கவுரவமும் பார்க்காமல் காரை தள்ளியது தீரரின் குடும்பத்தாருக்கு ஆச்சரியம் அளித்தது.
தீரர் மீது காமராஜர் அளவு கடந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தார். இந்தியா சுதந்திரம் அடைந்த போது கோட்டையில் அவர் தேசிய கொடியை ஏற்றினார். சென்னை மாநகராட்சி அவருக்கு வரவேற்பு பத்திரம் கொடுப்பதற்காக அழைத்தது. அவர் பூண்டி நீர்தேக்கத்துக்கு தன்னுடைய குருநாதர் சத்தியமூர்த்தியின் பெயரை சூட்டினால் தான் வரவேற்பு பத்திரத்தை பெற்றுக் கொள்வேன் என்று கூறினார். அவர் கேட்டுக் கொண்டபடி சென்னை மாநகராட்சி பூண்டி நேர்தேக்கத்துக்கு சத்தியமூர்த்தி பெயரை சூட்டியது.
மாநகராட்சி வளாகத்தில் தீரரின் திரு உருவச் சிலையை பிரதமராக இருந்த நேருவை அழைத்து வந்து காமராஜர் திறக்க வைத்தார். பின்னர் இந்திராவை தீரரின் வீட்டுக்கு அழைத்து வந்து தீரரின் மனைவிக்கு அறிமுகப்படுத்தினார். தீரரை குருவாக மதித்து, அந்த குருவுக்கு பெருமையும் புகழும் சேர்த்த முதன்மை சிஷ்யராகவே காமராஜர் வாழ்ந்து மறைந்தார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X