search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "savings"

    • உங்களுடைய முதலீட்டுக்கான பணத்தை தெளிவாக திட்டமிட வேண்டும்.
    • நிதியை பெருக்கும் வழிகளில் பங்குச்சந்தைக்கு பெரும்பங்கு உண்டு.

    தனிநபர் முதல் நிறுவனங்கள் வரை அவசியமாக பின்பற்ற வேண்டிய பொருளாதார நிலைகளில் சிக்கனமும், சேமிப்பும் முக்கியமானவை. அதிலும் சிறுதொழில் செய்யும் பெண்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய சில நிதி சார்ந்த ஆலோசனைகள் இங்கே...

    சிறு தொகையைக்கூட வீணாக்காமல் சேமித்து வைப்பது, எதிர்காலத்தில் உண்டாகும் அவசர தேவைகளுக்கு சிறந்த உதவியாக இருக்கும். ஆகையால் பெரிய அளவு சேமிப்பை உருவாக்க உதவும். ஒரு முறையான முதலீட்டுத் திட்டத்தை பெண் தொழில்முனைவோர் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியமாகும்.

    அடிக்கடி நிதி நெருக்கடியை சந்திக்கும் பட்சத்தில், முதலில் உங்களுடைய முதலீட்டுக்கான பணத்தை தெளிவாக திட்டமிட வேண்டும். உங்களுடைய வருமானத்தில் அடுத்தக்கட்ட முதலீட்டுக்கு தேவையான பணத்தை தவிர, மீதி இருக்கும் தொகையை சேமிப்பில் செலுத்துவது நிதி நெருக்கடியை சிரமம் இல்லாமல் கையாள உதவும்.

    தொழில் தொடங்கிய ஆரம்ப காலத்தில், உங்களுக்கான வரைமுறைகளை திட்டமிட்டு அதன்படி செயல்படுவது முக்கியமானது. உங்களுடைய லாபம் பெருகாமல் இருக்கும்போது, முதலீட்டின் அளவை எந்த காரணத்துக்காகவும் அதிகரிக்கக் கூடாது. இது பணம் விரயமாவதை தடுப்பதோடு, எதிர்காலத்தில் ஏற்படும் நிதி நெருக்கடியை தவிர்ப்பதற்கும் உதவும்.

    நிதியை பெருக்கும் வழிகளில் பங்குச்சந்தைக்கு பெரும்பங்கு உண்டு, பங்குச்சந்தை பற்றிய முழு தகவலையும் தெரிந்து கொண்டு அதில் முதலீடு செய்யலாம். அதற்கான வல்லுனரின் ஆலோசனையின்படி முதலீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வது சிறந்ததாகும். வங்கி, பங்குச்சந்தை என எதை தேர்ந்தெடுத்து முதலீடு செய்தாலும், நீண்டகால முதலீட்டு திட்டத்தை தேர்ந்தெடுப்பது நல்லது. இது எதிர்காலத்தில் நிதி பற்றாக்குறை இல்லாமல் பயணிக்க உதவும்.

    பணத்தை சேமிப்பது மட்டுமில்லாமல், அதை பெருக்குவதும் முக்கியமானது. அதிக தொகை கொண்ட சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்ய முடியாதவர்கள், உங்களுடன் சேர்ந்து வளர்ந்து வரும் நம்பிக்கையானவர்களின் தொழிலுக்கு முதலீடு செய்யும் பங்குதாரராக செயல்படலாம். இது உங்களுக்கு மற்றொரு முறையில் வருமானம் ஈட்டுவதற்கு வழிவகுப்பதோடு, உங்கள் தொழிலில் ஏற்படும் நிதிப் பற்றாக்குறையை சமாளிப்பதற்கும் உதவும்.

    சேமிப்பை போலவே சிக்கனமும் பொருளாதார உயர்வுக்கு வழிவகுக்கும். தொழில் சார்ந்த கடன்கள் அதிகரிக்க நேர்ந்தால், முடிந்தவரை குறைந்த வட்டி விகிதம் இருக்கும் கடன் திட்டங்களை தேர்ந்தெடுப்பது நல்லது. இது கடனை அடைப்பதற்காக சேமிப்பு பணத்தை எடுத்து செலவு செய்வதை தவிர்க்க உதவும். நீங்கள் செய்யும் தொழிலில் எப்போது வேண்டுமானாலும் ஏற்ற இறக்கங்களை சந்திக்கலாம். அத்தகைய சூழ்நிலையில் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்த பணத்தை திரும்பப் பெறுவதை தவிர்ப்பது நல்லது. இவ்வாறு பணத்தை எடுத்து சமாளிப்பது. உங்களுடைய எதிர்கால திட்டங்களை பாதிப்பதோடு. தொழிலில் நஷ்டத்தையும் ஏற்படுத்தலாம்.

    • பாலிசிதாரர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை கணக்குகளும் தொடங்கப்பட்டுள்ளது.
    • சிறப்பாக பணியாற்றிய அஞ்சல் ஊழியர்களும் கவுரவிக்கப்பட்டார்கள்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அஞ்சல் கோட்டத்தில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழாவின் தொடக்க விழா நடைபெற்றது.

    விழாவில் சிறப்பு விருந்தினர்களாக த மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர் கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் தங்கமணி விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார். விழாவில் அஞ்சல் துறையால் முழுமையாக பயன்பெறும் இரண்டு ஊராட்சிகளின் தலைவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

    விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் அஞ்சல் கோட்டத்தில் கடந்த மாதத்தில் 26,126 சேமிப்பு கணக்குகளும், 8899 பேருக்கு ஆதார் சேவையும், 454 ஜிஏஜி பாலிசிகளும், 4576 ஐபிபிபி கணக்குகளும், 326 பேருக்கு மிண்ணனு உயிர் வாழ் சான்றிதழும், 5400 பேருக்கு ரூ.1 கோடியே 15 லட்சம் ஆதார் மூலம் பண பரிவர்த்தனையும், ஆயுள் காப்பீட்டில் 2961 பாலிசிதாரர்கள் மூலம் புதிய பாலிசிக்கான பிரிமீயம் தொகை ரூ.1 கோடியே 34 லட்சத்து 55 ஆயிரத்து 552 -ம் , 2412 பேருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கணக்குகளும் தொடங்கப்பட்டுள்ளது.

    மேலும் சிறப்பாக பணியாற்றிய அஞ்சல் ஊழியர்களும் கவுரவிக்கப்பட்டார்கள்.

    தூய்மை இயக்கம் 3.0 அடிப்படையில் தூய்மைப் பணியாளர்கள் பரிசு வழங்கி சிறப்பிக்கபட்டனர். முடிவில் தஞ்சாவூர் தலைமை அஞ்சலக முதுநிலை அஞ்சல் அலுவலர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

    • வங்கிகள், தபால் நிலையங்கள் என பணத்தை சேமிப்பதற்கு பல வழிகள் உள்ளன.
    • இல்லத்தரசிகள் பலரும் தேர்ந்தெடுப்பது சீட்டு பிடிப்பதைதான்.

    வங்கிகள், தபால் நிலையங்கள் என பணத்தை சேமிப்பதற்கு பல வழிகள் இருக்கின்றன. எனினும் காலம் காலமாக சேமிப்பிற்கு இல்லத்தரசிகள் பலரும் தேர்ந்தெடுப்பது அக்கம் பக்கத்தினருடன் சேர்ந்து சீட்டு பிடிப்பதைதான். சேமிக்கும் பணம் கைக்கு எட்டிய தூரத்தில் இருக்கும். சிறிய தொகையை முதலீடாக செலுத்தலாம். அவசரகால தேவைக்கு சுலபமாக பெற்றுக்கொள்ளலாம் ஆகிய காரணங்களால்தான் இந்த முறையில் பணத்தைச் சேமிக்க பெண்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

    இந்த சீட்டு பிடிக்கும் குழுவில் 10 முதல் 20 பெண்கள் வரை உறுப்பினர்களாக இருப்பார்கள். சீட்டு நடத்துபவர் அந்த உறுப்பினர்களில் ஒரு வராகவோ அல்லது தனி நபராகவோ இருப்பார். தனி நபராக இருக்கும் பட்சத்தில் அவருக்கு மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகை கமிஷனாக வழங்கப்படும். இம்மாதிரியான சீட்டுகள் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்களோ அத்தனை மாதங்கள் நடத்தப்படும். ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை ஒரு உறுப்பினருக்கு வழங்குவார்கள். உதாரணமாக ஆயிரம் ரூபாயை உறுப்பினர்கள் அனைவரும் சீட்டு நடத்துபவரிடம் கொடுப்பதாக வைத்துக்கொள்வோம்.

    இவ்வாறு சேர்த்த பணத்தை அந்த மாதம் யாருக்கு கொடுக்கலாம் என்பதை இரண்டு முறைகளில் தேர்வு செய்வார்கள். ஒன்று, குலுக்கல் முறை. மற்றொன்று ஏலம் முறை

    .குலுக்கல் முறையில், உறுப்பினர்களின் பெயர்களை துண்டுச் சீட்டில் எழுதிப்போட்டு குலுக்கல் மூலம் தேர்ந்தெடுப்பார்கள். இந்த முறை மூலம் அனைவருக்கும் சாமான வாய்ப்பு கிடைக்கும். ஏலம் முறையில் ஒருவர் கேட்கும் தொகையை பொறுத்து, யாருக்கு சீட்டு என்பது நிர்ணயம் செய்யப்படும். இப்படித்தான் சீட்டுப் பிடிக்கும் சேமிப்பு திட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தில் தனிநபர் நம்பிக்கையின் மூலம் மட்டுமே பணத்தை முதலீடு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எனவே, உங்களுக்கு மிகவும் பரீட்சயமான, நம்பிக்கையான நபராக இருந்தால் மட்டுமே இதில் முதலீடு செய்ய வேண்டும்.

    மேலே கூறப்பட்டுள்ள இரண்டு முறைகளில் குலுக்கல் முறையை பின்பற்றுபவர்களிடம் சீட்டுப் போட்டு முதலீடு செய்வது நல்லது.

    ஏலம் முறையில், ஒரே நபர் பலமுறை ஏலம் கேட்கும் வாய்ப்பு அதிகம். இதனால் அவசியத்தேவை இருக்கும் போது உங்களுக்கு பணம் கிடைக்காமல் கூட போகலாம். சொற்பமான செலவுகளுக்காக மட்டுமே சீட்டுப் போடுவது நல்லது. அதிக முதலீடு செய்யும் போது இதில் பணத்தை இழக்கக்கூடிய அபாயமும் உள்ளது. இது நம்பிக்கையின் பெயரில் மட்டுமே நடத்தப்படும் சேமிப்பு திட்டம் என்பதால், இதில் அதிக தொகையை முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது.

    அஞ்சல் துறையில் செயல்படுத்தப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம் என விருதுநகர் கலெக்டர் அறிவிப்பு.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சுகன்ய சம்ரிதி திட்டம்    (செல்வமகள் சேமிப்பு திட்டம்) என்பது  பிரதமர்  மோடி யால் ஜனவரி 22-ந் தேதி 2015-ம் ஆண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

    இது பெண் குழந்தைகளின் உயர் கல்வி, திருமணம் போன்ற எதிர்கால திட்டங்களுக்கான சேமிப்புத் திட்டமாகும். இந்திய அரசின் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கான ஒரு சேமிப்பு திட்டமாக உருவாக்கப்பட்டது.

    இந்த திட்டத்தின்படி, 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் பெயரில் கணக்கை தொடங்கலாம். ஒரு பெண் குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே தொடங்க முடியும். ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரு பெண் குழந்தைகளுக்கு மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் கணக்கை தொடங்கலாம்.

    பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர், தங்கள் குழந்தையின் பெயரில், பிறப்புச் சான்றிதழுடன் கணக்கை தொடங்கலாம்.

    குறைந்தபட்சமான தொகையாக ரூ. 250 செலுத்தி அஞ்சலகங்களில் அல்லது வங்கிகளில் கணக்கைத் தொடங்கலாம். ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்சமாக ரூ.250இந்த கணக்கில் செலுத்தப்படவேண்டும். ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ.250-ல் இருந்து அதிகபட்சமாக ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் வரை வைப்புத்தொகையாகச் செலுத்தலாம். மொத்தம் 15 ஆண்டுகள் மட்டும் பணம் செலுத்தினால் போதும். 

    தற்பொழுது 7.6  சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது.இந்த கணக்கில் ஒரு நிதியாண்டில் செலுத்தப்படும் தொகைக்கு வருமான வரிவிலக்கு  அளிக்கப்படுகிறது. கணக்கு ஆரம்பித்த தேதியிலிருந்து 21 வருடம் கழித்து கணக்கு முதிர்வடையும். 

    மேலும் பெண்ணுக்கு 18 வயது நிறைவடையும் போது  அவரது கணக்கிலுள்ள இருப்புத்தொகையிலிருந்து 50 சதவிகித பணத்தை அவரது கல்வி அல்லது திருமண செலவுக்காக பெற்றுக்கொள்ளலாம்.

    பெண்ணின் திருமணத்திற்கு பிறகு கணக்கு முதிர்வடைவதற்கு முன்பே கணக்கை எந்தவித வட்டி இழப்புமின்றி முடித்து கொள்ளலாம்.இந்த கணக்கை முதிர்வடைவதற்கு முன், கணக்கை முடித்து முன் முதிர்வு தொகையினை சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு பெற்றுக்கொள்ளலாம்.

    எனவே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள்   அருகில் உள்ள அஞ்சலகத்திற்கு சென்று  செல்வ மகள் திட்டத்தின் கீழ் கணக்கை தொடங்கி பயன்பெறலாம்.

    • அளவுக்கு அதிகமாக சமைத்து உணவை குப்பையில் கொட்டுவது தவறாகும்.
    • தண்ணீர், மின்சாரம் போன்றவற்றிலும் சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

    சிக்கனம் என்பது ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவசியமானது. நாம் சிக்கனமாக வாழ்ந்தால் நமது சந்ததியினர் சிறப்பாக வாழ்வார்கள். இதில் பெண்களின் பங்கு முக்கியமானது. குடும்பச் செலவுகளில் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். விலை உயர்ந்த உடைகள் மற்றும் நகைகள் அணிந்து இருந்தால்தான் சமுதாயத்தில் மதிப்பு என்று கருதி, சில பெண்கள் அவற்றுக்காக அதிகமாக செலவு செய்வார்கள்.

    பெண்களின் திறமை, அவர்களின் பேச்சு, பண்பான அணுகுமுறை போன்றவற்றால் தான் சமுதாயத்தில் நல்ல மதிப்பை பெற முடியும். கால மாற்றத்தால் அழகு நிலையங்கள் பெண்களின் வாழ்வில் முக்கிய இடத்தை பிடித்துள்ளன. அழகு பராமரிப்புக்காக அதிகமாக செலவு செய்யும் பெண்களும் இருக்கிறார்கள். அவற்றை தவிர்த்து இயல்பான அழகுக்கு தேவையான பராமரிப்புகளை மட்டும் செய்துகொள்ளலாம்.

    கணவனும்-மனைவியும் பணிக்குச் செல்லும் பல குடும்பங்களில், சமையலில் சிக்கனம் தவறிப்போகும். நேரம் இல்லாத காரணத்தால், மாதத்தில் பல நாட்கள் வெளியில் வாங்கி சாப்பிடுபவர்கள் இருக்கிறார்கள். விலை உயர்ந்த காய்கறிகள், சமையல் பொருட்கள் தான் உடலுக்கு நல்லது என நினைத்து, இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை வாங்குவார்கள். அவற்றை விட நமக்கு அருகில் கிடைக்கும் உணவுப் பொருட்கள் பல மடங்கு சத்து கொண்டதோடு, விலையும் குறைவாக இருக்கும்.

    வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்களோ, அவர்களுக்கு தகுந்தபடி சிக்கனமாக உணவு தயாரிப்பது அவசியம். அளவுக்கு அதிகமாக சமைத்து உணவை குப்பையில் கொட்டுவது தவறாகும். சிக்கனத்தை கடைப்பிடிக்கத் தவறினால், பணப்பிரச்சினைகள் உருவாகி, மனப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். குழந்தைகள் கேட்டதை எல்லாம் உடனே வாங்கி கொடுப்பது தவறு. சிக்கனமாக இருப்பதை குழந்தைகள் உணரும்படி பக்குவமாக எடுத்துச் சொல்வது பெற்றோரின் கடமையாகும்.

    தண்ணீர், மின்சாரம் போன்றவற்றிலும் சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டும். புதிது புதிதாக விற்பனைக்கு வரும் விலை உயர்ந்த செல்போன்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பது சிக்கனத்தின் அடிப்படையாகும். சிக்கனம் வேறு, கஞ்சத்தனம் வேறு என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். சிக்கனம் சீரான வாழ்க்கைக்கு உதவும். கஞ்சத்தனம் யாரும் மதிக்காத நிலையை உண்டாக்கும். இதை உணர்ந்து தேவையில்லாத செலவுகளை தவிர்த்து, சிக்கனத்தை கடைப்பிடித்தால் சிறப்பாக வாழலாம்.

    • பணத்தை செலவு செய்யும்போது எமோஷன்களை தவிர்க்கவேண்டும்.
    • ஒவ்வொரு மாதமும் வரவு செலவுகளை கண்டறிந்து பட்ஜெட் தயார் செய்ய வேண்டும்.

    பணம் சம்பாதிப்பது எளிது, ஆனால் செல்வந்தராக கடைசி வரை இருப்பது தான் கடினம் என்பார்கள். அதற்கு எதிர்காலத்தை எண்ணி, திட்டமிட்டு பணத்தை சேமிப்பது என்பது அவசியமானதாகும். அந்த சேமிப்பு குறித்து பார்ப்போம்:-

    பட்ஜெட்

    ஒவ்வொரு மாதமும் வரவு செலவுகளை கண்டறிந்து பட்ஜெட் தயார் செய்ய வேண்டும். பட்ஜெட் போட்டு பழகும்போதுதான் பணம் தேவையில்லாமல் எங்கு கசிகிறது?அதை எப்படி தடுக்கலாம்? என தெரிந்துகொள்ள முடியும். தற்போது ஈசியாக பட்ஜெட் போட மொபைல் ஆப்கள் வந்துள்ளன. அதைகூட நாம் பயன்படுத்தலாம்.

    தேவை

    எது தேவையோ அதற்கு மட்டும் செலவிட்டு, தேவையில்லாத செலவுகளை தவிர்க்க வேண்டும். மற்றவர்களிடம் ஒரு பொருள் இருக்கிறது என்பதை மட்டும் நாம் பார்த்து அதை வாங்க நினைக்கக்கூடாது. அந்த பொருள் நிஜமாகவே நமக்கு தேவைப்படுகிறதா? அதனால் பயன் கிடைக்குமா? என்பதை நன்கு சிந்தித்து அதனை வாங்குவதற்கு செலவு செய்ய வேண்டும்.

    எமோஷன்

    பணத்தை செலவு செய்யும்போது எமோஷன்களை தவிர்க்கவேண்டும். அதிக மகிழ்ச்சி, பேராசை, பதற்றம், கவலை போன்ற எமோஷனலான சூழல்களில் செலவு செய்வதை தவிர்க்க வேண்டும். அப்படி செய்யும்போது வீண் செலவுகளை தவிர்த்து சேமிக்க முடியும்.

    முதலில் சேமிப்பு

    பெரும்பாலானவர்கள் ஒவ்வொரு மாதமும் செலவு செய்த பணத்தில் மீதமுள்ளதை சேமிக்கின்றனர். அது தவறானது. ஒவ்வொரு மாதமும் வருமானம் வந்தவுடன் அதில் ஒரு தொகையை எடுத்து முதலில் சேமித்துவிட்டு, மீதமுள்ள பணத்தை செலவு செய்ய வேண்டும். அதுவே சிறந்தது என்பது நிபுணர்களின் அறிவுரை.

    • தொழில் தொடங்குவதற்கு முதலில் தன்னம்பிக்கை அவசியம் தேவை.
    • தொழில் மீது அசாத்தியமான நம்பிக்கையை வையுங்கள்.

    தொழில் தொடங்கி இந்த சமுதாயத்தில் பெரிய ஆளாக வளர வேண்டும் என்ற ஆசை எல்லாருக்கும் உண்டு. ஆனால் அந்த தொழில் தொடங்குவதற்கு முதலில் தன்னம்பிக்கை அவசியம் தேவை. நாம் செய்ய போகும் தொழிலை சிறப்பாக நடத்துவதற்கு பணம் தேவை. அந்த பணத்தை வைத்து தான் தொழில் தொடங்க முடியும். அந்த பணத்தை எப்படி புரட்டுவது? என்று யோசித்து, யோசித்தே சிலர் தாங்கள் தொழில் தொடங்க நினைக்கும் எண்ணத்தை விட்டு விடுவார்கள். உங்கள் எண்ணங்களை வளமாக்க தான் அரசும், பல்வேறு வங்கிகளும் தொழில் கடன் உதவிகளை வழங்கி வருகிறது. அந்த கடன் உதவிகளை பெறுவதற்கு நாம் தயாராக வேண்டும்.

    உறுதியான நம்பிக்கை

    தொழில் தொடங்குவதற்காக வங்கி மேலாளரை அணுகி நாம் செய்ய போகும் தொழிலை எடுத்து கூறி கடன் கேட்கிறோம். கடன் கொடுக்கும் வங்கி மேலாளர், முதலில் நம்மை சோதிப்பது நம்பிக்கை தான். தொழிலில் வெற்றி கிடைக்காவிட்டால் கடனை எப்படி கட்டுவீர்கள் என்று. ஆனால் நம் நிச்சயம் இந்த தொழிலில் சாதித்து காட்டுவேன் என்று உறுதி கூற வேண்டும். நீங்கள் அப்படி கூறினாலும், உங்களை மாதிரி எனக்கு தெரிந்த நபர் ஒருவர் தொழில் செய்தார். அதில் பலத்த நஷ்டம் ஏற்பட்டது. அதற்கு பிறகு அவர் வேறு ஒரு தொழில் செய்து நஷ்டத்தை ஈடுகட்டினார். அது போல் உங்களுக்கு வேறு தொழில் செய்கிற திட்டம் இருக்கிறதா? என்று கேட்பார்கள்.

    இதற்கும் நீங்கள், தாங்கள் மேற்கொள்ள இருக்கும் தொழிலின் செயல்பாடுகளை விளக்கி கூறுங்கள். அதன் மூலம் கிடைக்கும் லாபத்தில் கடன் தொகையை மாதந்தோறும் தவணை மாறாமல் கட்டி விடுவேன் என்று உறுதி கூறுங்கள். உங்கள் உறுதி தான் கடன் தரும் வங்கி மேலாளருக்கு அசாத்தியமான நம்பிக்கையை ஏற்படுத்தும். அவர் சொல்கிறபடி நான் மேற்கொள்ளும் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டால் வேறு தொழில் செய்து கடன் தொகையை அடைத்து விடுவேன் என்று கூறுவது நம் மீது உள்ள நம்பிக்கையை சீர்குலைத்து விடும். எனவே நீங்கள் மேற்கொள்ள இருக்கும் தொழில் மீது அசாத்தியமான நம்பிக்கையை முதலில் வையுங்கள். அது வங்கி மேலாளரை ஈர்த்து விடும்.

    திட்ட மதிப்பீடு

    நீங்கள் செய்யப் போகிற தொழில் இதுதான் என்று முடிவு செய்துவிட்டால் அதற்கான திட்டத்தை தயார் செய்ய வேண்டும். முதலில் உங்களைப் பற்றிய தகவல்கள், நீங்கள் யார், என்ன செய்து கொண்டிருந்தீர்கள், இனி என்ன செய்யப் போகிறீர்கள் என்ற விவரங்கள் இருக்க வேண்டும். தொடங்கப் போகிற தொழிலைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும், எப்படித் தெரியும், அந்தத் தொழிலில் என்ன புதுமைகள் செய்யப் போகிறீர்கள்; உங்களுக்கான மூலப்பொருட்கள் எங்கு கிடைக்கும்; உங்களின் வாடிக்கையாளர்கள் யார் என்பது பற்றி தெளிவாகக் கூற வேண்டும். இந்தத் தொழில் மூலம் மாதத்துக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்கிற தோராயமான கணக்கு வேண்டும்.

    இதற்கு டி.எஸ்.சி.ஆர். என்கிற விகிதத்தை நிச்சயம் பார்ப்பார்கள். அதாவது, ஒரு மாதத்துக்கு நீங்கள் 15 ஆயிரம் சம்பாதிக்கிறீர்கள் எனில், அசலுக்கும் வட்டிக்குமாகச் சேர்த்து ரூபாய் 10 ஆயிரம் போக, குறைந்தது ரூபாய் 5 ஆயிரம் உங்களிடம் இருந்தால்தான் தொடர்ந்து தொழில் நடத்த முடியும். அதாவது, இந்த விகிதம் 1.5க்கு மேல் இருந்தால் மட்டுமே உங்களுக்கு எளிதாகக் கடன் கிடைக்கும். நீங்கள் செய்யும் தொழிலில் இந்த வருமானம் உங்களுக்கு இருக்கிறதா என்பதை நீங்களே உறுதி செய்து கொண்டு, வங்கியை அணுகினால் உற்சாகத்துடன் பேசலாம்.

    அடமானமில்லாத கடன்

    அதாவது ரூபாய் 10 லட்சம் வரைக்குமான தொழில் கடனுக்கு எந்த விதமான அடமானமும் கேட்கக்கூடாது என்பது ஆர்.பி.ஐ. விதி. இந்த விதி காரணமாக, 10 லட்சம் வரை எந்தவித அடமானமில்லாமல் கடன் கிடைக்கும். ஒரு வேளை வங்கிகள் அடமானம் கேட்டால் அது விதியை மீறிய செயலாகவே கருத வேண்டும். தவிர, சிறு மற்றும் குறு தொழில்களை ஊக்குவிக்க மத்திய அரசும் சிட்பியும் சேர்ந்து ஒரு கோடி ரூபாய் வரைக்கும் எந்த விதமான அடமானமும் இல்லாமல் கிரெடிட் கேரண்டி திட்டத்தில் கடன் தருகிறார்கள். ஆனால், இந்தத் திட்டத்தில் கடன் பெற பதிவு செய்ய வேண்டும். இது பற்றி வங்கிகளிடம் கேட்டால் அவர்கள் இது சம்பந்தமான மற்ற முழு விவரங்களைத் தருவார்கள்.

    அடமான கடன்

    ஒரு கோடி ரூபாய்க்கு மேல் உங்களுக்கு பணம் தேவை எனில், அடமானம் இல்லாமல் கடன் கிடைக்காது. அந்த சமயத்தில் உங்களிடம் இருக்கும் சொத்துக்களை அடமானம் வைத்துத்தான் கடன் பெற முடியும். ஒருவேளை இரண்டு கோடி ரூபாய் தேவைப்பட்டால் ஒரு கோடி ரூபாய் வரை கிரெடிட் கேரண்டி திட்டத்தின் மூலம் அடமானம் இல்லாமலும், மீதமுள்ள ஒரு கோடிக்கு சொத்துக்களை அடமானம் வைத்தும் கடன் பெறலாம்.

    முதலீடு தொகை எவ்வளவு?

    தொழில் திட்டத்திலே நமக்கு எவ்வளவு தொகை தேவைப்படும் என்று தெரிந்துவிடும். அந்த தொகையில் குறைந்தபட்சம் 1:4.5 என்ற விகிதத்தில் நம்மிடம் சொந்த பணம் இருக்க வேண்டும். அதாவது, ஒரு லட்சம் ரூபாயை நீங்கள் மூலதனமாக கொண்டு வந்தால் வங்கிகள் ரூ.4.5 லட்சம் வரைக்கும் கடன் கொடுக்கும். இந்த விதிதான் நிரந்தரம் என்று சொல்ல முடியாது. மிகச் சில சமயங்களில் மட்டும் இந்த விகிதத்துக்கு கீழே சென்றால் வங்கிகள் கடன் கொடுக்கும். அது நீங்கள் செய்யும் தொழில், உங்கள் தொழில் நடக்கும் இடம் போன்ற பல காரணிகளை வைத்து வங்கி அதிகாரிகள் முடிவு செய்வார்கள். இருந்தாலும் முதல்முறை தொழில் தொடங்குவோர் இந்த விகிதத்துக்கும் குறைவாக மூலதனம் வைத்திருந்தால் கடன் கிடைப்பதில் சிரமம் ஏற்படலாம். எனவே உங்கள் தொழிலில் முதலீடு கணிசமாக இருக்க வேண்டும் என வங்கிகள் எதிர்பார்ப்பதுதான் இதற்குக் காரணம்.

    வங்கிகளை எப்படி அணுகுவது?

    ஒவ்வொரு வங்கியும் ஆண்டுக்கு குறிப்பிட்ட தொகையை கடனாகக் கொடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து செயல்படுகின்றன. அந்த இலக்குக்காக போட்டி போட்டுக் கொண்டு வங்கிகள் கடன் தருகின்றன. ஆனாலும் தொழில் முனைவோருக்கு கடன் கிடைக்கவில்லை எனில் அதற்குக் காரணம், சரியான திட்டமிடல் இல்லாததுதான். உங்கள் தேவை ரூபாய் 25 லட்சம் எனில் அருகிலிருக்கும் வங்கிகளையே அணுகலாம். அவர்களே கடன் தருவார்கள். 25 லட்சத்துக்கு மேல் போகும் போது, ஒவ்வொரு வங்கியும் தொழில்கடன்களை ஊக்குவிக்கவே தனியாக சிறுதொழில் கிளையை (எஸ்.எம்.இ. கிளை) வைத்திருக்கிறார்கள். அங்கிருக்கும் அதிகாரிகளை அணுகினால் அவர்கள் உங்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவார்கள்.

    தேவையான ஆவணங்கள்

    அடையாளச் சான்றிதழ், முகவரிச் சான்றிதழ், தொழில் நடைபெறும் இடத்துக்கான முகவரிச்சான்றிதழ், திட்ட அறிக்கை, வருமான எதிர்ப்பார்ப்பு (கடனை திருப்பிச் செலுத்தும் காலம் வரைக்கும்), உள்ளாட்சி மற்றும் இதர அரசு அலுவலகங்களில் இருந்து தடையில்லாச் சான்றிதழ் (தேவைப்பட்டால்), தொழில் நடைபெறும் இடம் உங்களுடையது என்றால் அதற்கான சான்றிதழ் (அ) வாடகை இடம் என்றால் ஒப்பந்தச் சான்றிதழ் போன்ற ஆவணங்கள் கட்டாயம் கொடுக்க வேண்டும். இவை தவிர, வேறு என்னென்ன ஆவணங்கள் தேவை என்பது கடன் விண்ணப்பத்திலேயே இருக்கும். அவற்றையும் கொடுத்தால் நிச்சயம் உங்கள் கடன் மனுவை வங்கி அதிகாரிகள் ஒதுக்கித் தள்ள மாட்டார்கள்!

    • நாமக்கல் கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும், செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்குகள் தொடங்கப்பட்டன.
    • தபால்துறை சார்பில் நாமக்கல் கோட்டத்தில் ஒரே நாளில் 1,700 செல்வ மகள் சேமிப்பு திட்ட கணக்குகள் துவக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

    நாமக்கல்:

    இந்திய அஞ்சல் துறை சார்பில், அம்ரித் பெக்ஸ் பிளஸ் 3 திட்டத்தின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் அஞ்சல் துறை மூலமாக செல்வ மகள் சேமிப்பு திட்ட கணக்கு தொடங்க சிறப்பு முகாம் நடைபெற்றது. நாமக்கல் கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும், செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்குகள் தொடங்கப்பட்டன. நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட அழகு நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

    ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்ற விழாவில் 25 குழந்தைகளுக்கு, நடராஜபுரம் துணை அஞ்சலகத்தில் சிறுசேமிப்பு கணக்கு துவங்கியதற்கான பாஸ் புத்தகத்தினை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியன் பிள்ளை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் நடரா ஜபுரம் துணை அஞ்சலக அதிகாரி சங்கீதா அஞ்சலக இன்சூரன்ஸ் வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன், வணிக வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், சேமிப்பு பிரிவு அலுவலர் அனிதா, அழகு நகர் நல சங்க துணைத் தலைவர் மணி ராஜா, செயலாளர் ராமசாமி, பொருளாளர் வீராசாமி, கந்தசாமி, அன்பு மற்றும் ஈசாக் ஆகியோர் கலந்து கொண்டனர். தபால்துறை சார்பில் நாமக்கல் கோட்டத்தில் ஒரே நாளில் 1,700 செல்வ மகள் சேமிப்பு திட்ட கணக்குகள் துவக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் கோட்ட கண்கா

    ணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

    • ‘செல்வ மகள்’ சேமிப்பு திட்டத்துக்கான வட்டியில் மாற்றம் இல்லை.
    • மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட வட்டி, 0.4 சதவீதம் உயர்ந்து 8 சதவீதம் ஆகிறது.

    புதுடெல்லி

    சிறுசேமிப்பு திட்டங்களுக்கு காலாண்டுக்கு ஒருமுறை வட்டி விகிதத்தை மத்திய நிதி அமைச்சகம் மாற்றி அமைத்து வருகிறது.

    இந்தநிலையில், ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டுக்கான வட்டி விகிதத்தை நேற்று மாற்றி அமைத்தது. அதன்படி, வட்டி விகிதம் 1.1 சதவீதம்வரை உயர்த்தப்பட்டுள்ளது.

    மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட வட்டி, 0.4 சதவீதம் உயர்ந்து 8 சதவீதம் ஆகிறது. கிசான் விகாஸ் பத்திரத்துக்கு, 123 மாதங்களில் முதிர்வடையும்வகையில் 7 சதவீத வட்டி வழங்கப்பட்டு வந்தது. அது, 120 மாதங்களில் முதிர்வடையும்வகையில், 7.2 சதவீத வட்டியாக உயர்த்தப்பட்டுள்ளது.

    மாதாந்திர வருவாய் திட்ட வட்டி, 0.4 சதவீதம் உயர்ந்து 7.1 சதவீதம் ஆகிறது. தேசிய சிறுசேமிப்பு சான்றிதழ் வட்டி விகிதம் 0.2 சதவீதம் உயர்ந்து 7 சதவீதம் ஆகிறது.

    அஞ்சலகங்களில் ஓராண்டு டெபாசிட் திட்ட வட்டி 6.6 சதவீதமாகவும், 2 வருட டெபா சிட் வட்டி 6.8 சதவீதமாகவும், 3 ஆண்டு டெபாசிட் வட்டி 6.9 சதவீதமாகவும், 5 ஆண்டு டெபாசிட் வட்டி 7 சதவீதமாக வும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் வட்டி, 1.1 சதவீதம்வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு வருமானவரி சலுகை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

    அதே சமயத்தில், பெண் குழந்தைகளுக்கான 'செல்வமகள்' சேமிப்பு திட்ட வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. அது, 7.6 சதவீதமாக நீடிக்கும். அதுபோல், பொது வருங்கால வைப்புநிதிக்கான வட்டியும் 7.1 சதவீதமாக நீடிக்கும்.

    வங்கி சேமிப்பு கணக்குக்கான வட்டி விகிதம் 4 சதவீதமாக நீடிக்கும்.

    தொடர்ந்து 2-வது காலாண்டாக சிறுசேமிப்பு வட்டி விகிதம் உயர்த்தப்படுகிறது.

    பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி, கடன்களுக்கான வட்டி விகிதத்தை தொடர்ந்து 5 தடவை உயர்த்தி உள்ளது. அதை பின்பற்றி டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் உயர்த்தி உள்ளன.

    அந்த வரிசையில், சிறுசேமிப்பு திட்ட வட்டி விகிதமும் உயர்த்தப்பட்டுள்ளது.

    • சேமிப்பின் முக்கியத்துவம் உறுப்பி னர்களுக்கு காப்பீடு வங்கி கடன் எவ்வாறு வாங்குவது விவசாய உற்பத்தி குழு குறித்த விளக்குவது உள்ளிட்டவை குறித்து பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
    • விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாக மேளதாளங்கள் முழங்க வடிவழகி அம்மன் ஆலயத்திலிருந்து முளைப்பாரி எடுத்து வந்து இறை வணக்கத்துடன் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த புதுப்பள்ளி மழை முத்துமாரியம்மன் ஆலயத்தில் தானம் அறக்கட்டளை கீழையூர் கிழக்கு வட்டார வயலகம் கீழையூர் கிழக்கு வட்டார வயலக பரஸ்பரம் கீழையூர் நெய்தல் ஜீவிதம் மற்றும் விவசாய உற்பத்தி நிறுவனம் சார்பில் 18 ஆண்டு பொதுக்குழு கூட்டம் முப்பெரும் விழா நடைபெற்றது

    கூட்டத்தில் சேமிப்பின் முக்கியத்துவம் உறுப்பி னர்களுக்கு காப்பீடு வங்கி கடன் எவ்வாறு வாங்குவது விவசாய உற்பத்தி குழு குறித்த விளக்குவது உள்ளிட்டவை குறித்து பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது முன்னதாக விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாக மேளதாளங்கள் முழங்க வடிவழகி அம்மன் ஆலயத்திலிருந்து முளைப்பாரி எடுத்து வந்து இறை வணக்கத்துடன் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது

    இதில் ஜீவித வட்டார பொருளாளர், திருமதி இளவரசி வரவேற்புரை வழங்கினார், வட்டார. ஒருங்கிணைப்பாளர் மோ.அபிரகாம் ஸ்டான்லி அவர்கள், மற்றும் மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு சரவணன் அவர்களும், எதிர்கால திட்டம், வட்டாரம் ஒரு பார்வை என்னும் தலைப்பில், கொள்கை மாற்றம் குறித்து விளக்கவுரை யாற்றினார்.

    சிறப்பு விருந்தினர்களாக, விழுந்தமாவடி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின், கிளை மேலாளர் ஆனந்தன் கலந்து கொண்டு சிறப்பித்தார், சிறப்பு விருந்தினர்களுக்கு, நினைவுப்பரிசு வழங்கப்ப ட்டது, சிறந்த குழுவிற்கு கேடயம் வழங்கப்பட்டது விழா ஏற்பாடுகளை, வட்டார பணியாளர் கார்த்திகேசன், செய்திருந்தார்.

    • நாளை (சனிக்கிழமை) சிறப்பு அஞ்சல் சேமிப்பு கணக்கு சேகரிப்பு முகாம் அனைத்து அஞ்சலகங்களிலும் நடைபெற உள்ளது.
    • சேமிப்பு திட்டங்கள் ரூ.100 முதல் ஆரம்பமாகின்றது. உச்ச வரம்பு ஏதும் இல்லை.

    சேலம்:

    சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் அருணாசலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வருகிற 30-ந் தேதி உலக சிக்கன நாள் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி நாளை (சனிக்கிழமை) சிறப்பு அஞ்சல் சேமிப்பு கணக்கு சேகரிப்பு முகாம் அனைத்து அஞ்சலகங்களிலும் நடைபெற உள்ளது. ஒருவர் தனது சராசரி தேவைகளுக்கு பிறகு சேமிக்கும் சிறிய பணமும் சேமிப்பாகும். எனவே, பொதுமக்கள் அனைவரும் ஒவ்வொரு ரூபாயும் சரியான முறையில் சேமிக்கப்படுகிறது என்பதை உறுதி செய்ய அஞ்சலகங்களின் சேமிப்பு கணக்கு சிறந்ததாகும்.

    அஞ்சலகத்தில் எல்லா பிரிவினர், வயதினருக்கும் ஏற்ற சேமிப்பு திட்டங்கள் ரூ.100 முதல் ஆரம்பமாகின்றது. உச்ச வரம்பு ஏதும் இல்லை. இதுவரை அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து பயன் பெறாத பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி எளிய முறையில் கணக்கு தொடங்கலாம். எனவே, அஞ்சலக வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்ற வேறு திட்டத்தில் சேர்ந்து கூடுதல் பயன்பெற கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள். மேலும், கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகங்களை தொடர்பு கொள்ளலாம். உலக சிக்கன தினத்தை முன்னிட்டு அனைத்து பெரிய தபால் அலுவலகங்களிலும் பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு கவுன்டர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தை அனைத்து தரப்பினருக்கும் கொண்டு சேர்க்கும் விதமாக சேலம் கிழக்கு கூட்டத்தில் தபால்காரரும், தாத்தா பாட்டியும் என்ற தலைப்பில் பிரசாரம் மட்டும் போட்டி நடைபெற உள்ளது.
    • குறைந்தபட்சம் ரூ.1000 முதல் அதிகபட்சம் ரூ.15 லட்சம் வரை சேமிக்க முடியும்.

    சேலம்:

    சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தை அனைத்து தரப்பினருக்கும் கொண்டு சேர்க்கும் விதமாக சேலம் கிழக்கு கூட்டத்தில் தபால்காரரும், தாத்தா பாட்டியும் என்ற தலைப்பில் பிரசாரம் மட்டும் போட்டி நடைபெற உள்ளது.

    அதன்படி அனைத்து தபால் பட்டுவாடா ஊழியர்களும், மூத்த குடி மக்களுக்கு உதவி செய்யும் விதமாக குறைந்த பட்சம் ஒரு மாதத்தில் ஒரு மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சிறப்பாக செயல்படும் கிழக்கு கோட்டத்தைச் சேர்ந்த தபால் பட்டுவாடா ஊழியர்களின் பணி திறனை பாராட்டும் வகையில் துணைக்கோட்டம் கோட்டம் மண்டல வாரியாக பரிசுகள் வழங்கப்படும்.

    இந்த சேமிப்பு கணக்கினை 60 வயது பூர்த்தி அடைந்த முதியவர்கள் மற்றும் 50 வயது பூர்த்தி அடைந்த பாதுகாப்பு பணியாளர்கள், மேலும் 55 வயது பூர்த்தி அடைந்த விருப்ப ஓய்வு பெற்றவர்கள் தொடங்கலாம். குறைந்தபட்சம் ரூ.1000 முதல் அதிகபட்சம் ரூ.15 லட்சம் வரை சேமிக்க முடியும். இதற்கு ஆண்டுக்கு 7.4 சதவீதம் வட்டி வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×