search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SC verdict on Delhi governor"

    கவர்னர் பற்றிய தீர்ப்பு புதுவைக்கு முற்றிலும் பொருந்தும் என்றும், கவர்னர் கிரண்பேடி இதை சரியாக தெரிந்து கொள்ளாமல் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பதிவுகளை வெளியிட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி கூறினார். #Kiranbedi #Narayanasamy
    புதுச்சேரி:

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு புதுவைக்கு பொருந்துமா? இல்லையா? என்ற சர்ச்சை எழுந்துள்ள நிலையில் இதுபற்றி நாராயணசாமியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    இந்த தீர்ப்பு புதுவைக்கு பொருந்தும் என்று நான் ஏற்கனவே கூறினேன். இப்போதும் அதையே தான் சொல்கிறேன். இந்த தீர்ப்பு முற்றிலும் புதுவைக்கு பொருந்தும்.

    அரசியல் சாசன சட்டம் 239 ஏ.ஏ. பிரிவின்படி டெல்லி மாநில அரசு செயல்படுவதால் அந்த சட்டத்தின் அடிப்படையில் ஒப்பிட்டு 239 ஏ. பிரிவின் கீழ் செயல்படும் புதுவை உள்ளிட்ட மாநிலங்களுக்கு இந்த தீர்ப்பு பொருந்தாது என்று கூறப்பட்டுள்ளது.

    239 ஏ.ஏ. பிரிவின்படி டெல்லி மாநிலத்தில் நிலம், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு உள்ளிட்டவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

    மேலும் பல வி‌ஷயங்கள் அந்த பிரிவின் கீழ் உள்ளன. எனவேதான் 239 ஏ. பிரிவின் கீழ் உள்ள மற்ற யூனியன் பிரதேசங்களுக்கு இந்த தீர்ப்பு பொருந்தாது என்று கூறி உள்ளனர்.

    அதாவது டெல்லி யூனியன் பிரதேசத்தில் கவர்னருக்கு அதிகாரமா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரமா? என்ற விவகாரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது. கவர்னருக்கு அதிகாரம் இல்லை என்று தீர்ப்பில் கூறி இருக்கிறார்கள். தீர்ப்பில் இந்த அம்சம் புதுவைக்கு பொருந்தும்.

    ஏனென்றால் யூனியன் பிரதேசங்களில் டெல்லிக்கு அடுத்து புதுவையில் மட்டும்தான் சட்டசபை உள்ளது. மக்கள் ஆட்சி செயல்படுகிறது.

    இந்த அம்சம் தொடர்பாக கூறப்பட்ட தீர்ப்பு புதுவைக்கு பொருந்தாது என்று நீதிபதிகள் எதுவும் சொல்லவில்லை. எனவே, டெல்லி சம்பந்தமான தீர்ப்பு புதுவைக்கும் பொருந்தும். இதில் மாற்று கருத்து எதுவும் இல்லை.

    239 ஏ. என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் இல்லாத நேரத்தில் ஜனாதிபதி ஆட்சி நடைபெறும் என்பதை கூறுவதாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை அமைந்ததுமே அந்த சட்டத்தின் அம்சம் ரத்தாகி விடும்.

    மறுபடியும் சட்டமன்றம் இல்லாத ஒரு நிலை வந்தால் மட்டுமே 239 ஏ. அம்சங்கள் அமலுக்கு வரும்.



    கவர்னர் கிரண்பேடி இதை சரியாக தெரிந்து கொள்ளாமல் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே சட்டசபையிலும் இது சம்பந்தமான விவாதம் இன்று வந்தது.

    அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் குறுக்கிட்டு உச்சநீதிமன்ற தீர்ப்பு புதுவைக்கு பொருந்துமா..? இல்லையா என குழப்பம் நிலவுவதாகவும் இதற்கு முறையான பதில் அளிக்குமாறு முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு வேண்டுகோள் விடுத்தார்.

    இதற்கு பதில் அளித்து நாராயணசாமி கூறியதாவது:-

    உச்சநீதிமன்ற தீர்ப்பு புதுவைக்கு மட்டுமல்ல நாடு முழுவதும் அரசியல் சாசன அமர்வு கொண்ட அனைத்திற்கும் பொருந்தும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற அதிகாரம் உண்டு.

    ஒருசிலர் இல்லாத அதிகாரத்தை தனக்கு உள்ளது என்று கூறுவதை உச்சநீதிமன்றம் பார்த்துக் கொள்ளும்

    இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

    இதனிடையே காங்கிரஸ் உறுப்பினர் லட்சுமி நாராயணன் குறுக்கிட்டு, புதுவை கவர்னருக்கு அதிகாரம் என்ன என்பது தொடர்பான தீர்ப்பின் வழக்கு விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் வருகிறது. அதில் உண்மை தெரிந்துவிடும் என கூறினார். #Kiranbedi #Narayanasamy
    ×