search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "schools holiday in kerala"

    கேரளாவில் பெய்துவரும் கனமழை காரணமாக நேற்றும், இன்றும் இதுவரை 16 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. #KeralaRain
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை இதுவரை இல்லாத அளவுக்கு பெய்து வருகிறது.

    கடந்த 2 மாதங்களாக மாநிலம் முழுவதும் மழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகள் உள்பட நீர் நிலைகள் நிரம்பி விட்டன. மாநிலத்தில் பல பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. ஏராளமான வீடுகள் இடிந்து விட்டன. விவசாய பயிர்களும் மழையால் நாசமடைந்து விட்டது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மழைக்கு பலியாகி உள்ளனர்.

    வெள்ளம் சூழ்ந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் நிவாரண முகாம்களிலும், பாதுகாப்பான இடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அனைத்து அரசு துறை அதிகாரிகளும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் நேற்றும், இன்றும் கேரளா முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால் திருவனந்தபுரம், கண்ணூர், கோழிக்கோடு, மலப்புரம், இடுக்கி, வயநாடு போன்ற மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்து உள்ளன.

    இந்த மழை நாளை வரை நீடிக்கும் என்று கொச்சி வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

    கனமழை காரணமாக நேற்றும், இன்றும் கேரளாவில் 16 பேர் பலியாகி உள்ளனர். இடுக்கி மாவட்டத்தில் 10 பேரும், மலப்புரத்தில் 5 பேரும், வயநாட்டில் ஒருவரும் என்று மொத்தம் 16 பேர் இறந்துள்ளனர்.

    நேற்று கண்ணூர் மாவட்டம், இரிட்டி அய்யனகுன்னு என்ற இடத்தில் நிலச்சரிவில் சிக்கி தாமஸ்(வயது75) என்பவரும், அவரது மருமகள் ஷைனி(35)யும் உயிர் இழந்தனர். இடுக்கி அடிமாலி என்ற இடத்தில் பாத்திமா என்ற பெண் மழைக்கு பலியானார்.

    மழைக்காரணமாக வயநாடு பகுதியில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    கண்ணூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருவதால் அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. கண்ணூர் பல்கலை கழக தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    வயநாட்டில் சில தாலுகாக்களிலும் மலப்புரம் மாவட்டத்தில் விலம்பூர், எரநாடு பகுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    அதே சமயம் கல்லூரிகள் இங்கு செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தில், கோழிக்கோடு மாவட்டத்திலும், பாலக்காடு, கொல்லம், திருச்சூர் மாவட்டங்களில் மழை அதிகம் பெய்த பகுதிகளில் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் இன்று தொடங்குவதாக இருந்த பிளஸ்-1 துணைத் தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. #KeralaRain
    ×