search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "secludedsea"

    கடல் அலையில் சிக்கி இறந்த பள்ளி மாணவனின் உடல் இன்று கரை ஒதுங்கியது. மற்றொரு வாலிபரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள சிங்கனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் அபு (வயது 14). திண்டிவனத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அதே கிராமத்தை சேர்ந்தவர் ஜாவித் (18). இவர் தனியார் பள்ளி வேனில் கிளீனராக வேலை பார்த்து வந்தார். இவர்கள் 2 பேரும் நண்பர்கள்.

    நேற்று மாலை அபு, ஜாவித் மற்றும் அவர்களது நண்பர்கள் இப்ரான் உள்பட 6 பேர் மரக்காணம் அடுத்த தீர்த்தவாரி கடலில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென எழுந்த ராட்சத அலையில் அபு மற்றும் ஜாவித் சிக்கினர். அலையானது அவர்களை கடலுக்குள் இழுத்து சென்றது. அவர்கள் கடலில் மூழ்கினார்கள். இதை பார்த்த அவர்களது நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். அபு மற்றும் ஜாவித்தை கடலில் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இது குறித்து கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த கடலோர காவல்படையினர் அந்த பகுதி மீனவர்களுடன் இணைந்து மாயமான அபு மற்றும் ஜாவித்தை நீண்ட நேரம் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இரவு நேரம் வந்ததால் தேடுதல் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை மரக்காணம் அடுத்த கீழ்பேட்டை குப்பம் கடற்கரையில் மாணவன் அபுவின் உடல் கரை ஒதுங்கியது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது பற்றி மரக்காணம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுவையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


    மேலும் கடல் அலையில் சிக்கி மாயமான மற்றொரு வாலிபர் ஜாவித்தை இன்று 2-வது நாளாக கடலோர காவல் படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

    ×