search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "second consecutive term"

    நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக மோடி இன்று பதவியேற்றார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. பா.ஜனதா மட்டும் 303 தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது.

    புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட பா.ஜனதா எம்.பி.க்களின் கூட்டத்தில் பாராளுமன்ற கட்சி தலைவராக (பிரதமர்) நரேந்திர மோடி மீண்டும் தேர்ந்து எடுக்கப்பட்டார். இதையடுத்து அவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவரும் ஆட்சி அமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார். 30-ம் தேதி புதிய அரசு பதவியேற்கும் என அறிவிக்கப்பட்டது. 

    இதைத் தொடர்ந்து பதவியேற்பு விழாவிற்கான நடைமுறைகள் தொடங்கின. ஜனாதிபதி மாளிகையில் பதவியேற்பு விழா நடத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. புதுடெல்லி மாநகராட்சியின் தோட்டக்கலை துறை சார்பில், ஜனாதிபதி மாளிகை வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகையை சுற்றியுள்ள பகுதிகளிலும் அலங்கரிக்கப்பட்டன.

    இந்நிலையில், ஜனாதிபதி மாளிகையில் இன்று இரவு 7 மணிக்கு கோலாகலமாக பதவியேற்பு விழா நடைபெற்றது. அப்போது நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். மோடியுடன் அவரது புதிய மந்திரிசபையில் இடம்பெற்ற மந்திரிகளும் பதவியேற்றனர்.

    பதவியேற்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பாஜக மூத்த தலைவர் அத்வானி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், குலாம் நபி ஆசாத், தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ், கர்நாடகா முதல்-மந்திரி குமாரசாமி, பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் மற்றும் பல்வேறு மாநில முதல்-மந்திரிகள், பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நடிகர் ரஜினிகாந்த் தன் மனைவி லதாவுடன் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டார்.

    வங்காள தேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நேபாளம், பூடான், கிர்கிஸ்தான், மொரிஷியஸ், கஜகஸ்தான் உள்பட 14 நாட்டு தலைவர்களும் பங்கேற்றனர். பதவியேற்பு விழாவையொட்டி ஜனாதிபதி மாளிகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
    ×