search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "second test cricket"

    இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தோல்வியடைந்த ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது போட்டியில் 146 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. #AUSvIND #AustraliaWon
    பெர்த்:

    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் பெர்த்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 326 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா விராட் கோலி சதம் அடித்தாலும் 283 ரன்னில் சுருண்டது. 43 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 243 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

    இதையடுத்து 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்தியா 55 ரன்னிற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. நான்காம் நாள் ஆட்ட நேர இறுதியில் 5 விக்கெட்டுகளை இழந்து 112 எடுத்திருந்தது. விஹாரி 24 ரன்னுடனும், ரிஷப் பந்த் 9 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்தியாவின் வெற்றிக்கு 175 ரன்கள் தேவை, கைவசம் ஐந்து விக்கெட்டுக்கள் இருந்த நிலையில், கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய விஹாரி, மேற்கொண்டு 4 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார். விக்கெட்டைக் காப்பாற்ற கடுமையாகப் போராடிய ரிஷப் பந்த் 30 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இந்த ஜோடி வெளியேறியதும் இந்தியாவின் தோல்வி உறுதியானது. யமேஷ் யாதவ் (2), இஷாந்த் சர்மா (0), பும்ரா (0) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இந்தியா 140 ரன்களில் ஆல் அவுட் ஆனது.



    இதனால் ஆஸ்திரேலியா 146 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா தரப்பில் 2வது இன்னிங்சில் ஸ்டார்க், லயன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், ஹாசில்வுட், கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    அடிலெய்டில் நடந்த முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. 2வது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதையடுத்து, தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. இரு அணிகளும் மோதும் 3வது ஆட்டம் மெல்போர்னில் 26-ம் தேதி தொடங்குகிறது. #AUSvIND #AustraliaWon
    ×