search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "second uterus"

    வங்காளதேசத்தில் ஒரு பெண்ணுக்கு முதல் குழந்தை பிறந்த 26 நாளில், மீண்டும் இரட்டைக்குழந்தைகள் பிறந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Bangladesh #Twins #SecondUterus
    டாக்கா:

    வங்காளதேசத்தில் வசித்து வருபவர்கள் சுமன் பிஸ்வாஸ், ஆரிபா சுல்தானா (வயது 20) தம்பதியர். கர்ப்பிணியாக இருந்த ஆரிபா சுல்தானாவுக்கு குல் னா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாத இறுதியில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தை குறிப்பிட்ட காலத்துக்கு முன்னதாகவே பிறந்தது.

    இந்த நிலையில், கடந்த 21-ந் தேதி ஆரிபா சுல்தானாவுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் அவரை ஜெசோர் ஆத்-தீன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவ நிபுணர் டாக்டர் ஷீலா பொத்தார் பரிசோதித்தார். ஸ்கேன் பரிசோதனையும் நடத்தப்பட்டது.

    இதில் ஆரிபா சுல்தானாவுக்கு ஏற்கனவே ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளபோதும், அவருக்கு மற்றொரு கர்ப்பப்பை இருப்பதுவும், அந்த கர்ப்பப்பையில் இரட்டைக்குழந்தை இருப்பதுவும் தெரியவந்தது. இதைக் கண்டு டாக்டர்கள் உள்பட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

    உடனே அவருக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்ய டாக்டர் ஷீலா பொத்தார் முடிவு செய்தார்.

    அதன்படி ஆரிபா சுல்தானாவுக்கு அவர் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்தார். அதில் அந்தப் பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. இதில் ஒரு குழந்தை ஆண், மற்றொரு குழந்தை பெண். முதல் குழந்தையை பெற்றெடுத்த 26 நாளில் ஆரிபா சுல்தானா இந்த இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார்.

    4 நாட்கள் மருத்துவமனையில் வைத்து அந்தப்பெண்ணையும், குழந்தைகளையும் பராமரித்த டாக்டர்கள் அதன்பின்னர் அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுபற்றி டாக்டர் ஷீலா பொத்தார் கூறும்போது, “ஒரு கர்ப்பப்பை மூலம் முதல் குழந்தை பிறந்த நிலையில், மற்றொரு கர்ப்பப்பையில் மேலும் 2 குழந்தைகள் இருப்பது அந்தப் பெண்ணுக்கு முதலில் தெரியாது. குழந்தைகள் நல்ல ஆரோக்கியமாக உள்ளன. எல்லாம் நல்ல விதமாக முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டார்.

    ஒரே பெண்ணுக்கு இரு கர்ப்பப்பை இருந்து, அந்த இரண்டிலும் அடுத்தடுத்து கர்ப்பம் தரித்து, முதல் குழந்தை பிறந்த 26 நாளில் இரட்டைக்குழந்தை பிறந்திருப்பது வங்காளதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவம்பற்றி மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், “இரட்டை கர்ப்பப்பை இருப்பதற்கான அறிகுறி எதுவும் பெண்ணுக்கு தெரியாது. பிறப்பிலேயே இரட்டைக் கர்ப்பப்பை அமைந்திருக்கும். இது அபூர்வமானது. இரட்டை கர்ப்பப்பையிலும் குழந்தைகள் இருக்கிறபோது கருச்சிதைவுக்கு அல்லது முன்கூட்டியே குழந்தை பிறப்பதற்கு வாய்ப்பு உண்டு” என தெரிவித்தனர்.
    ×