search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sewage"

    • இறால், மீன் இனப்பெருக்கம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாக மீனவர்கள் கவலை.
    • கழிவு நீர் மற்றும் ரசாயனம் கலந்து வருவதால் ஆற்றின் நிறம் மாறுகிறது.

    எண்ணூர்:

    எண்ணூரில் கொசஸ்தலை ஆறும், கடலும் கலக்கும் முகத்துவார பகுதியில் ஏராளமான மீன்களும், இறால்களும் அதிக அளவில் கிடைக்கும். இதனை நம்பி 10 மீனவ கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் எண்ணூர் முகத்துவார பகுதியில் கொசஸ்தலை ஆறு இணையும் பகுதி முழுவதும் மஞ்சள் நிறமாக மாறி உள்ளது. இதனை கண்டு மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    தொழிற்சாலைகளில் இருந்து அதிக அளவு வெளியேற்றப்படும் கழிவு நீரால் இந்த மாற்றம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் இறால், மீன் இனப்பெருக்கம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாக மீனவர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

    மேலும் இதேபோல் எண்ணூர் முகத்துவார பகுதி அடிக்கடி மஞ்சள் நிறமாக மாறி காட்சி அளிப்பதாக குற்றம் சாட்டினர்.

    இது தொடர்பாக மீனவர்கள் கூறியதாவது:-

    எண்ணூர் முகத்துவார பகுதி ஆண்டுதோறும் பல நாட்கள் மஞ்சள் நிறமாக மாறி காட்சி அளித்து வருகிறது.

    ஆற்றை சுற்றி இருக்கும் தொழிற்சாலையில் இருந்து கழிவு நீர் மற்றும் ரசாயனம் கலந்து வருவதால் ஆற்றின் நிறம் மாறுகிறது. இதனால் ஆற்றில் இருக்கும் மீன்கள் மற்றும் இறால்கள் இனப்பெருக்கத்துக்கு பாதிப்பு ஏற்படும். இதனால் கொசஸ்தலை ஆற்றை நம்பி இருக்கும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

    எனவே எண்ணூர் முகத்துவாரத்தை சுற்றி உள்ள தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீர் வெளியேறுகிறதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தண்ணீரை ஆய்வு செய்து உரிய நடவடிக்கையை எடுத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதேபோல் எண்ணூரில் குழாய்கள் மூலம் வினியோகிக்கப்படும் குடிநீர் கடந்த சில மாதங்களாக மஞ்சள் நிறமாக வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    • சுகாதாரமான தண்ணீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் தவித்து வருகிறார்கள்.
    • பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பால் குடிநீரில் கழிவுநீர் கலந்துவிட்டது.

    ஆலந்தூர்:

    ஆதம்பாக்கம், மேற்கு கரிகாலன் தெரு , கிழக்கு கரிகாலன் தெரு, டி.என்.ஜி.ஒ காலனி,ஆகிய பகுதி களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்தப் பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் செல்ல வழியில்லாமல் வெளியேறி வருகிறது. குடி தண்ணீரில் கழிவுநீர் கலந்து வருவதால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். மேலும் கழிவு நீர் வெளியேறி வீடுகள் முன்பு துர்நாற்றத்துடன் தேங்கி நிற்கிறது. குறிப்பாக மேற்கு கரிகாலன் 2-வது தெரு முட்டு சந்து என்பதால் அதிக அளவு தண்ணீர் வெளியே செல்ல வழியின்றி தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசிவருகிறது.

    கழிவு நீர் பல நாட்களாக தேங்கி நிற்பதால் நிலத்தடி நீரிலும் கலந்து போர்வெல் தண்ணீரையும் பயன்படுத்த முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. சுகாதாரமான தண்ணீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் தவித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பால் குடிநீரில் கழிவுநீர் கலந்துவிட்டது. இது குறித்து குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. லாரிகள் மூலமாக குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யவில்லை. கழிவுநீர் செல்ல வழியின்றி வீடுகள் முன்பு தேங்கி நிற்கிறது. தினமும் துர்நாற்றத்தால் அவதிப்பட்டு வருகிறோம். இப்பகுதியில் நோய்தொற்று பரவும் முன்பு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • சோதனை முடிவில் பறவைகளுக்கு பறவை காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் இல்லை என்பது கண்டறியப்பட்டது.
    • தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பழவேற்காடு ஏரியில் இருந்து தண்ணீரை எடுத்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.

    சென்னை:

    சென்னையை அடுத்த பழவேற்காடு ஏரி பறவைகள் சரணாலய பகுதியில் பூநாரை, வர்ண நாரை, கூழைக்கடா, கடல் பொந்தா, ஊசிவால் வாத்து, உல்லான் பறவைகள் என 126 வகையான பறவை இனங்கள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு பழவேற்காடு பகுதியில் உள்ள அண்ணாமலைச்சேரியில் இருந்து, 2 கி.மீ. தொலைவில் ஏரியின் மையப்பகுதியில், உல்லான் பறவைகள், ஊசி வால் வாத்து, நாரை உள்ளிட்ட பறவைகள் கொத்து கொத்தாக இறந்தன. பறவைகளின் உடல்கள் அழுகிய நிலையில் சிதறி கிடந்தன.

    இதையடுத்து பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தின் வனத்துறை அலுவலர்கள் அங்கு முகாமிட்டு, இறந்து கிடந்த பறவைகளை சேகரித்தனர். பின்னர் இறந்த பறவைகளை கால்நடை மருத்துவ குழுவினர் நாமக்கல்லில் உள்ள ஆய்வகத்துக்கு பரிசோ தனைக்கு அனுப்பினர்.

    இறந்து போன பறவைகளுக்கு லோ பெத்தொஜெனிக் ஏவியன் இன்புளூயன்சா எனப்படும் பறவை காய்ச்சல், ராணிக்கெட் எனப்படும் வெள்ளைக்கழிச்சல் மற்றும் சால்மோனெல்லா எனப்படும் பாக்டீரியா தொற்று நோய் ஆகியவை இருக்கலாமா என்று பரிசோதிக்கப்பட்டது. ஆனால் சோதனை முடிவில் பறவைகளுக்கு பறவை காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் இல்லை என்பது கண்டறியப்பட்டது.

    இந்த நிலையில் இறந்த பறவைகளின் உடலில் எஸ்கெரிச்சியா கோலி எனப்படும் இ-கோலி பாக்டீரியாக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இது மனிதர்கள் மற்றும் விலங்குகளின் குடலில் வாழ்கிறது. இந்த பாக்டீரியாக்கள் மலம் மூலம் வெளியேற்றப்படுகிறது. பழவேற்காடு ஏரியில் கழிவுகள் கலப்பதால் இந்த பாக்டீரியாக்கள் தண்ணீரில் கலந்து பறவைகளை தாக்கி இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறது.

    இதையடுத்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பழவேற்காடு ஏரியில் இருந்து தண்ணீரை எடுத்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். அதன் முடிவு கள் இந்த வார இறுதியில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகே பழவேற்காடு ஏரியில் பறவைகள் இறந்ததற்கான காரணங்கள் தெரியவரும்.

    • சமூக ஊடகங்களில் பெறப்படும் புகார்களும் உடனடியாக சரி செய்யப்பட்டு வருகின்றன.
    • தேங்கிய நீரை வெளியேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

    சென்னை:

    சென்னை குடிநீர் வாரியம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்றல் தொடர்பாக பொதுமக்கள் புகார்கள் தெரிவிப்பதற்கு வசதியாக 24 மணி நேரமும் இயங்கக் கூடிய கண்காணிப்பு, கட்டுப்பாட்டு அறை குடிநீர் வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் புகார்களை தெரிவிக்க தொலை பேசி எண் 044-4567 4567, கட்டணமில்லா எண் 1916 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம்.

    மேலும், சமூக ஊடகங்களில் பெறப்படும் புகார்களும் உடனடியாக சரி செய்யப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    சென்னையில் மழை தொடர்பான புகார்களுக்கு பொதுமக்கள் தொலைபேசி எண்களில் புகார்களை தெரிவிக்கலாம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

    இது குறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக விடாமல் மழை கொட்டித் தீர்த்தாலும் பல இடங்களில் மழைநீர் தேங்காமல் இருந்தது. தொடர் மழை காரணமாக தற்போது சில இடங்களில் தேங்கிய மழைநீரும் விரைந்து வடிந்து கொண்டிருக்கிறது.

    விரைவாகச் செயல்பட்டு தேங்கிய நீரை வெளியேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

    சென்னையில் மழை தொடர்பான புகார்களை 1913, 044-2561 9204, 044-2561 9206, 044-2561 9207 ஆகிய எண்களிலும் 94454 72075 என்ற கைப்பேசி எண்ணிலும் பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • வடகிழக்குப் பருவமழையின் போது நாள் ஒன்றுக்கு 600 இடங்களில் குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.
    • சமூக ஊடகங்களில் பெறப்படும் புகார்களும் உடனடியாக சரி செய்யப்பட்டு வருகிறது.

    சென்னை:

    பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாள் ஒன்றுக்கு 1000 எம்.எல்.டிக்கு மேலாக பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    தினசரி 300 இடங்களில் குடிநீர் மாதிரிகள் சேகரிக் கப்பட்டு குடிநீரின் தரம் ஆய்வகம் மூலம் பரிசோதிக்கப்பட்டு வரும் நிலையில் வடகிழக்குப் பருவமழையின் போது நாள் ஒன்றுக்கு 600 இடங்களில் குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.

    குடிநீர் வினியோக நிலையங்களில் குடிநீரில் தேவையான அளவு பிளீச்சிங் பவுடர், படிகாரம், சுண்ணாம்பு போன்ற பொருட்கள் சேர்த்து வழங்கப்படுகிறது.

    குடிநீர் வினியோக நிலையங்களில் பெரிய நீர் உறிஞ்சும் எந்திரங்கள் மற்றும் சிறிய நீர் உறிஞ்சும் மற்றும் ஜெனரேட்டர்களைக் கொண்டு தேங்கும் மழைநீர் இறைக்கப்படுகிறது.

    குடிநீர் வினியோக நிலையங்களிலும் கழிவுநீரிறைக்கும் நிலையங்களிலும் மணல் மூட்டைகள் பாதுகாப்பு காரணங்களுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பொது மக்கள் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் தொடர்பாக புகார்கள் தெரிவிப்பதற்கு ஏதுவாக 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை குடிநீர் வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது.

    இம்மையத்தை தொடர்பு கொள்வதற்கு பொதுமக்கள் 044-45674567 (20 இணைப்புகள்) மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1916-ல் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதி அலுவலகங்களுக்கு தெரிவிக்கப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் சமூக ஊடகங்களில் பெறப்படும் புகார்களும் உடனடியாக சரி செய்யப்பட்டு வருகிறது.

    • 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டியல் இன மக்கள் வசிக்கும் சேலத்தில் அவர்களுக்கு என தனியாக ஒரு திருமண மண்டபம் கட்ட வேண்டும் என்றார்.
    • போக்குவரத்து நெருக்கடி நிலவுகிறது இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் துணை மேயர் சாரதா தேவி, கமிஷனர் (பொறுப்பு) அசோக்குமார் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

    கூட்டத்தில் கவுன்சிலர் இமயவரம்பன் பேசுகையில் பட்டியலின மக்களுக்கு திருமணம் நடத்த சேலத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேயர் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

    அந்த மண்டபத்தின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டியல் இன மக்கள் வசிக்கும் சேலத்தில் அவர்களுக்கு என தனியாக ஒரு திருமண மண்டபம் கட்ட வேண்டும் என்றார்.

    அதற்கு பதிலளித்து மேயர் ராமச்சந்திரன் பேசுகையில் இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    கவுன்சிலர் திருஞானம் பேசுகையில் எனது வார்டில் மழை நீர் அதிக அளவில் தேங்குகிறது. மேலும் அம்மாபேட்டையில் இருந்து டவுன் வரை சாலையோர கடைகள் அதிக அளவில் உள்ளன. இதனால் போக்குவரத்து நெருக்கடி நிலவுகிறது இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    கவுன்சிலர் மூர்த்தி பேசுகையில் எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் வாக்குச்சாவடிகள் வெகு தூரத்தில் உள்ளன. இதனால் அந்தந்த பகுதி மக்களுக்கு அருகிலேயே வாக்குச்சாவடிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    கவுன்சிலர் சையத் மூசா பேசுகையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அதனை தடுக்க சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும். இதற்கு சாக்கடை நீரும், மழை நீரும் அதிகளவில் தேங்குவது தான் காரணம். அதனை சீரமைக்க வேண்டும் என்றார்.

    கவுன்சிலர் பி.எல்.பழனிச்சாமி பேசுகையில் எனது வார்டுக்கு உட்பட்ட மணியனூர் பகுதியில் சுடுகாடு தண்ணீர் மற்றும் கழிவறை தண்ணீர் அதிக அளவில் தேங்குகிறது. இதனால் மக்கள் தவித்து வருகிறார்கள். நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் விபத்தும் அடிக்கடி நடக்கிறது, சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அதனையும் சீரமைக்க வேண்டும் என்றார்.

    கவுன்சிலர் ஏ.எஸ்.சரவணன் பேசுகையில் களரம்பட்டி 4-வது தெருவில் சாலை, சாக்கடை வசதி, பாலப்பணி செய்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 45-வது கோட்டத்தில் சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும். 56-வது வார்டு கலைஞர் நகரில் 4-வது வார்டு மற்றும் கருங்கல்பட்டி காய்கறி மார்க்கெட்டில் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். 60 வார்டுகளிலும் சாக்கடை கால்வாய்களை சீரமைக்க வேண்டும். அப்போது தான் சேலம் மாநகராட்சி சிறந்த மாநகராட்சியாக திகழும் என்றார்.

    கவுன்சிலர் கோபால் பேசுகையில் அம்பாள் ஏரி ரோடு கடந்த 1 1/2 ஆண்டாக மிக மோசமான நிலையில் உள்ளது. தாதகாப்பட்டி பகுதியில் இரவு நேரங்களில் தண்ணீர் வருகிறது. இதனால் மக்கள் அவதிப்படுகிறார்கள். ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு குடி தண்ணீர் வசதி வழிப்பாதைகள் அமைக்க வேண்டும் என்றார்.

    இதை தொடர்ந்து கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இன்று நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் யாரும் பங்கேற்காமல் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

    • அடிக்கடி கழிவு நீர் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
    • கழிவு நீரேற்று நிலையத்தின் திறனையும் அதிகரிக்க வேண்டும்.

    வேளச்சேரி:

    வேளச்சேரி எல்.ஐ.சி. காலனியில் கழிவுநீரேற்று நிலையம் உள்ளது. இந்த பகுதிக்கு ஏ.ஜி.எஸ். காலனி, ராம் நகர், முருகு நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து கழிவுநீர் செல்கிறது.

    இந்த கழிவு நீரேற்று நிலையம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வேளச்சேரியில் அதிக மக்கள் தொகை இல்லாத போது அமைக்கப்பட்டது. தற்போது இந்த பகுதி பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகள், மால்கள் மற்றும் முக்கிய வணிக மையமாகவும் மக்கள்தொகை அதிகரித்தும் காணப்படுகிறது.

    இந்த நிலையில் வேளச்சேரி 100 அடி சாலையில் உள்ள கடிகார ஷோரூம் அருகே சாலையில் வெளியேறிய கழிவுநீரால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். இதேபோல் இந்த சாலையில் அடிக்கடி கழிவு நீர் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    இதுகுறித்து ஏ.ஜி.எஸ். காலனி குடியிருப்போர் சங்க நிர்வாகி ஒருவர் கூறும்போது, வாரத்தில் இரண்டு முறையாவது குறிப்பாக காலை நேரங்களில் 100 அடி சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கழிவு நீர் அதிக அளவு சேர்வதால் அதன் மூடி வழியாக பொங்கி வெளியே வருகிறது. தற்போது மழைநீருடன் கழிவு நீர் கலப்பதால் கடும் பாதிப்பு ஏற்படுகிறது. கழிவு நீர்செல்லும் கால்வாயில் உள்ள சிறிய குழாய்களை பெரிய அளவில் மாற்றி அமைக்க வேண்டும். மேலும் கழிவு நீரேற்று நிலையத்தின் திறனையும் அதிகரிக்க வேண்டும். அருகில் 12 பம்பிங் நிலையங்கள் உள்ளன. ஆனால் அவை பெருகி வரும் மக்கள் தொகைக்கு போதுமானதாக இல்லை என்றார்.

    இதுகுறித்து அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, வேளச்சேரி 100 அடி சாலையில் பிரதான கழிவுநீர்கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு இருந்தது. அதனை சரிசெய்து உள்ளோம். கழிவுநீர் சாலையில் செல்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • பொதுமக்கள் வீடுகள் முன்பு தொட்டி போல கழிவு நீரை விட்டு வருகின்றனர்.
    • நகராட்சி தலைவர் இல்லாததால் மனு அளிக்குமாறு அங்கிருந்த நகராட்சி பணியாளர்கள் தெரிவித்தனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சி 6- வது வார்டுக்கு உட்பட்ட கரையான்புதூர், சக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் முறையான கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால், பொதுமக்கள் வீடுகள் முன்பு தொட்டி போல கழிவு நீரை விட்டு வருகின்றனர்.

    இதனால் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே கழிவு நீர் கால்வாய் அமைத்து தர நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று நகராட்சி அலுவலகத்தில் இதுகுறித்து புகார் தெரிவிக்க சுமார் 10-க்கும் மேற்பட்டோர் வந்தனர்.

    அவர்களுடன் நகர்மன்ற உறுப்பினர் ஈஸ்வரமூர்த்தியும் வந்தார். இந்த நிலையில் நகராட்சி தலைவர் இல்லாததால் மனு அளிக்குமாறு அங்கிருந்த நகராட்சி பணியாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

    • குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் புத்தேரி ஏரியில் கலப்பதாக கூறப்படுகிறது.
    • ஏரி தண்ணீரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    தாம்பரம்:

    பல்லாவரம், துரைப்பாக்கம் 200 அடி ரேடியல் சாலை அருகே புத்தேரி ஏரி உள்ளது. ஆரம்பத்தில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்ட இந்த ஏரி தண்ணீர் தற்போது சுற்றி உள்ள பகுதியில் நிலத்தடி நீர் மட்டத்திற்காக பராமரிக்கப்பட்டு வருகிறது.

    தற்போது பெய்துவரும் மழை காரணமாக புத்தேரி ஏரியில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.

    இந்த ஏரியை சுற்றிலும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில் இந்த குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் புத்தேரி ஏரியில் கலப்பதாக கூறப்படுகிறது. மேலும் பல்லாவரம், நாகல்கேனி பகுதியை சுற்றி உள்ள லெதர் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவு நீர் ஜி.எஸ்.டி. சாலையை கடந்து புத்தேரி ஏரியில் கலந்து வருவதாக கூறப்படுகிறது.

    இதன்காரணமாக கடந்த சில நாட்களாக புத்தேரி ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறும் இடம் நுரையாக காணப்படுகிறது. இதனை அப்பகுதி மக்கள் அதிர்ச்சியுடன் பார்த்து செல்கிறார்கள்.

    தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத ரசாயனகழிவு நீரும், சுற்றி உள்ள வீடுகளில் இருந்து வரும் கழிவுநீரும் ஏரியில் கலப்பதால் இந்த பிரச்சினை உருவாகி இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    எனவே தாம்பரம் மாநாகராட்சி அதிகாரிகள் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உடனடியாக ஏரி தண்ணீரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    புத்தேரியின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகள் கடந்த 2017 மற்றும் 2018-ம் ஆண்டு சுமார் ரூ.40 லட்சம் செலவில் மேம்பாடு செய்யப்பட்டது. ஆனால் பொது மக்கள் மற்றும் சிறு வர்த்தக நிறுவனங்கள் ஏரி கரையில் குப்பைகளை கொட்டுகிறார்கள். இந்த ஏரியை சுற்றி வசிப்பவர்களுக்கு பல சுகாதார பிரச்சினைகள் உள்ளது.

    புத்தேரி ஏரியில் இருந்த வெளியேறும் உபரி நீர் கீழ்க்கட்டளை ஏரி, நாராயணபுரம் ஏரி, மற்றும் பள்ளிக்கரணை சதுப்பு நில ஏரிக்கும் செல்கிறது. எனவே புத்தேரி ஏரி தண்ணீரை மாசுபடாமல் பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இது குறித்து தாம்பரம் மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, புத்தேரி ஏரியை சுற்றி உள்ள பகுதியில் பாதாள சாக்கடை பணி நடந்து வருகிறது. இந்த பணி முடிந்த பின்னர் ஏரியில் கழிவுநீர் கலப்பது முழுவதும் தடுக்கப்படும். தற்போது ஏரியில் கலந்து வரும் தண்ணீர் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • வெள்ளக்கல் பகுதியில் மறுகால் பாயும் இடத்தில் பஞ்சு போன்ற வெண்மை நிறத்தில் நுரை பொங்கி வருகிறது.
    • பொதுமக்கள் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மதுரை:

    மதுரை அவனியாபுரத்தில் உள்ள அயன் பாப்பாக்குடியில் தொடர் மழையால் வெள்ளக்கல் குப்பை கிடங்கில் இருந்து அதிக அளவில் கழிவு நீர் வெளியேறி வருகிறது. மேலும் அந்த பகுதிகளில் உள்ள சாயப்பட்டறைகளில் இருந்து கழிவுநீர் மழை நீரோடு கலந்து அயன் பாப்பாக்குடி கண்மாயில் பாசன கால்வாயில் திறந்து விடப்படுகிறது.

    அத்துடன் பல்வேறு பகுதியிலிருந்து திறந்து விடப்படும் கழிவுநீரும் கண்மாயில் கலப்பதால் அயன்பாப்பாக்குடி கண்மாயிலிருந்து வெள்ளக்கல் வழியாக மறுகால் பாயும் இடத்தில் நீரின் வேகம் அதிகமாக செல்வதாலும், மறுகால் பாயும் பாலத்தின் அருகில் ஆகாயத்தாமரைகள் படர்ந்து இருப்பதாலும் நீரின் வேகத்தை அந்த ஆகாயத்தாமரைகள் கட்டுப்படுத்தி வருகிறது. இதனால் வெள்ளக்கல் பகுதியில் மறுகால் பாயும் இடத்தில் பஞ்சு போன்ற வெண்மை நிறத்தில் நுரை பொங்கி வருகிறது.

    இந்த நுரையானது அங்கு மலை போல் பெருகி காற்றில் பறந்து அருகில் மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் பறப்பதால் வாகன ஓடிகள் பெரிதும் சிரமப்பட்டு சாலையை கடந்து செல்கிறார்கள். இந்த நிலையில் இன்று வெள்ளைக்கல் நுரை மலைபோல் எழுந்து விமான நிலையம் செல்லும் சாலை முழுவதும் காற்றில் பறந்து வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது.

    அந்த தினமும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்லும் நிலையில் கழிவு நீரால் உருவான நுரையால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. 5 நாட்களாக இந்த சிரமத்தை சந்தித்து வரும் அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இனிமேலும் தாமதிக்காமல் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு எந்த ஒரு அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க வழிவகை செய்ய வேண்டும் என்று வெள்ளை கல்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • பாவூர்சத்திரத்தில் நேற்று மாலையில் திடீரென கருமேகக் கூட்டங்கள் திரண்டு கனமழை கொட்டி தீர்த்தது.
    • இதனால் காமராஜர் பஸ் நிலையத்தை சுற்றிலும் அமைந்துள்ள சாலைகளில் மழை நீருடன் சேர்ந்து கழிவு நீரும் பெருக்கெடுத்து ஓடியது.

    தென்காசி:

    பாவூர்சத்திரத்தில் நேற்று மாலையில் திடீரென கருமேகக் கூட்டங்கள் திரண்டு கனமழை கொட்டி தீர்த்தது. கனமழையினால் பாவூர்சத்திரம் காமராஜர் பஸ் நிலையத்தை சுற்றிலும் அமைந்துள்ள சாலைகளில் மழை நீருடன் சேர்ந்து கழிவு நீரும் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அவ்வழியே சென்ற கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் கழிவுநீர் கலந்து ஓடிய சாலையினை கடக்க பெரிதும் சிரமம் அடைந்தனர். மேலும் கழிவு நீரால் துர்நாற்றம் வீசியதால் வாகன ஓட்டிகளும் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகினர். நான்கு வழி சாலை பணிகளுக்காக குடிநீர் பைப்புகள் செல்லும் பகுதிகள் தோண்டப்பட்டு சீரமைக்கப்பட்டு வரும் நிலையில் மழை நீர், சாக்கடை செல்ல இடமில்லாததால் இரண்டும் கலந்து சாலைகள் முழுவதும் பெருக்கெடுத்து ஓடியது.சாலைகளில் தேங்கிய மழை நீரில் வாகனங்களும் தத்தளித்து சென்றன. 

    • கழிவுநீர் வெளியேறி பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது.
    • பொது நிதியில் இருந்து ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சி 15-வது வார்டுக்கு உட்பட்ட இரட்டைகாளியம்மன் கோயில் தெருவில், பழைய பேருந்துநிலையகட்டண கழிவறை கழிவுநீர் வெளியேறி பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது.

    இதனால் அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் பெரிதும் அவதியடை ந்துவந்தனர்.

    இதற்கு நிரந்த தீர்வு காண வலியுறுத்தியதின்பேரில் அப்பகுதி நகர்மன்ற உறுப்பி னர் சாமிநாதன் நகர்மன்ற தலைவர் துர்காராஜ சேகரனிடம் கோரிக்கை வைத்தார்.

    அதன்படி கட்டண கழிவறை கழிவுநீர் வெளியேறாமல் தடுக்க நகராட்சி சார்பில் கழிவுநீர் தொட்டி அமைத்திடவும் கட்டண கழிவறை சுற்றுசுவர் அமைத்திடவும் திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்டு பொதுநிதியில் ரூ.5லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதனையடுத்து பணிகள் தொடங்கிட நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது பணிதள மேற்பார்வையாளர் விஜயேந்திரன், நகர்மன்ற உறுப்பினர்கள் சாமிநாதன், முபாரக், தேவதாஸ் உடனிருந்தனர்.

    ×