search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shivalokanath Temple"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிவன் கோவில் தெருவின் மையத்தில் அமைந்துள்ளது.
    • 5 நிலை ராஜகோபுரத்துடன் இந்த ஆலயம் நம்மை வரவேற்கிறது.

    கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கம் என்ற சின்ன கிராமத்தில் எழுந்தருளியுள்ளது, ஞான பார்வதி உடனாய சிவலோகநாதர் ஆலயம். பதவி யோகம் தரும் இந்த ஆலயத்தைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடுநாடு எனப்படும் இந்த பகுதியை, வீரேந்திர சோழன் ஆட்சி புரிந்து வந்தார். அவருக்கு கீழே நிறைய சிற்றரசர்கள் அந்தந்த பகுதிகளில் ஆட்சி செய்து வந்தனர்.

    ஒரு காலகட்டத்தில் வீரேந்திர சோழனின் அரசுக்கு கீழே இருந்த சிற்றரசுகள் அனைத்தும் போதிய வருவாய் இல்லாததால், அரசுக்கு வரி கட்ட முடியவில்லை. அப்பொழுது வீரேந்திரசோழன் அனைத்து சிற்றரசர்களையும் அழைத்து, 'உடனடியாக வரி கட்ட வேண்டும். இல்லை என்றால் உங்கள் தேசத்தை எங்கள் வசம் ஆக்கிக் கொள்வோம்' என்று எச்சரிக்கை விடுத்தார். இதனால் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த சிற்றரசர்கள் செய்வதறியாமல் தவித்தனர்.

    இந்த நிலையில் வயதான சிவபக்தர் ஒருவர், இந்த பகுதிக்கு வந்தார். அவர் எப்போதும் 'நமசிவாய' என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்தபடியே இருப்பார்.

    அவர் சிற்றரசர்கள் சிலரை சந்தித்து, உடனடியாக இந்த இடத்தில் சிவபெருமானுக்கு ஒரு ஆலயம் எழுப்புங்கள். உங்களின் அனைத்து பிரச்சனைகளும் உடனடியாக தீரும்' என்றார்.

    இதையடுத்து அந்த பகுதியில் சிற்றரசர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு சிவாலயத்தை அமைக்க முடிவு செய்தனர். இதற்கு உரிய இடத்தை தேர்வு செய்யும் வேலையைத் தொடங்கினர்.

    அப்பொழுது ஒரு அசரீரி, மேல்பட்டாம்பாக்கம் கிராமத்தில் குறிப்பிட்ட இடத்தில் கோவில் அமைக்கும்படி சொல்லியது. அதன்படியே அந்த இடத்தில் கோவில் அமைக்கும் பணியை மேற்கொண்டனர்.

    கோவில் வேலைகள் அனைத்தும் முடிந்து கும்பாபிஷேகம் செய்வதற்கான நாள் நெருங்கியது. அந்த கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்வதற்காக சிற்றரசர்கள் அனைவரும் சென்று, வீரேந்திர சோழனை அழைத்தனர்.

    ஆனால் வீரேந்திர சோழனோ, "எனக்கு தர வேண்டிய வரியை செலுத்தாமல், அனைவரும் சேர்ந்து ஒரு கோவிலைக் கட்டிவிட்டு, அதன் கும்பாபிஷேக விழாவிற்கு என்னையே அழைக்கவும் வந்திருக்கிறீர்கள்? உங்களுக்கு எவ்வளவு ஆணவம் இருக்க வேண்டும்" என்று கோபம் கொண்டார்.

    அதற்கு சிற்றரசர்கள், "மன்னா.. இந்த இடத்தில் ஒரு கோவிலை அமைத்தால் அனைத்து பிரச்சனைகளும் தீரும் என்று ஒரு முதியவர் கூறினார். சிவனின் விருப்பம் அது என்று அவர் கூறியதால்தான், நாங்கள் சிவாலயத்தைக் கட்டினோம்" என்றனர்.

    உடனே வீரேந்திர சோழன், "அந்த முதியவரை அழைத்து வாருங்கள்" என்று கட்டளையிட்டார். ஆனால் அரண்மனை காவலர்கள் அந்த தேசம் முழுவதும் தேடிப்பார்த்து அந்த முதியவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் சிற்றரசர்கள் சொல்வது பொய்யாக இருக்குமோ என்று வீரேந்திர சோழன் கருதினார்.

    அப்போது அங்கே ஒலித்த அசரீரி, 'சிவனடியார் வேடத்தில் வந்து, எனக்கான ஆலயத்தை அமைக்கும்படி சிற்றரசர்களிடம் சொன்னது நான்தான்' என்று கூறியது.

    அப்போதுதான் வீரேந்திர சோழனுக்கும், சிற்றரசர்களுக்கும் முதியவராக வந்தது சிவபெருமான்தான் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து தன் தவறுக்கு வருந்திய வீரேந்திர சோழ மன்னன், இறைவனே இங்கு வந்து ஆலயம் அமைக்கச் சொல்லி இருப்பதை நினைத்து மகிழ்ந்தான். மேலும் அவன் சிற்றரசர்களைப் பார்த்து, "நீங்கள் ஆளும் பகுதி, இனி உங்களுடையது. அங்கே நீங்கள் சுதந்திரமாக செயல்படலாம். வரி செலுத்த வேண்டிய தேவை இல்லை" என்று கூறினார்.

    மேலும் அனைத்து சிற்றரசர்களுக்கு, வீரேந்திர சோழனே முடி சூட்டி வைத்ததுடன், கோவில் கும்பாபிஷேகத்திலும் பங்கேற்று மனம் மகிழ்ந்தார்.

    ஆலய அமைப்பு

    சிவன் கோவில் தெருவின் மையத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. 5 நிலை ராஜகோபுரத்துடன் இந்த ஆலயம் நம்மை வரவேற்கிறது. அந்த கோபுரத்தைக் கடந்து சென்றால், பிரதோஷ நந்தி, பலிபீடம், கொடி மரம் ஆகியவை உள்ளன. அவற்றின் எதிரில் வலது பக்கம் சூரியன், இடது பக்கம் சந்திரன் உள்ளனர். இடது புறம் மேற்கு நோக்கியபடி ஞான பார்வதி அம்மன் அருளும் தனிச் சன்னிதி காணப்படுகிறது.

    இந்த அன்னை நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். மேல் வலது கையில் தாமரையும், இடது கையில் நீலோத்பவ மலரையும் தாங்கியிருக்கிறார். மற்ற இரண்டு கரங்கள் அபய, வரத முத்திரை காட்டுகின்றன. அம்மனுக்கு நேர் எதிரில் நந்தியும், பலிபீடமும் இருக்கிறது.

    அர்த்த மண்டபத்தைக் கடந்து சென்றால், கருவறையில் கிழக்கு திசை நோக்கியபடி பிரம்மபீடத்தின் மீது பாண லிங்கமாக சிவலோகநாதர் காட்சி தருகிறார். கருவறை கோஷ்டத்தின் வலது பக்கத்தில் முதலில் நாம் தரிசிப்பது நால்வர் சன்னிதி.

    அடுத்தபடியாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா, சண்டிகேஸ்வரர், விஷ்ணு துர்க்கை, விசுவநாதர்-விசாலாட்சி அம்மன் அருள்பாலிக்கிறார்கள். இடது பக்கம் வள்ளி-தெய்வானையுடன் சிங்காரவேலர் அருளும் சன்னிதியும், கஜலட்சுமி, நிருத்த கணபதி உள்ள சன்னிதியும் உள்ளன.

    அடுத்ததாக ஆலயத்தின் தல விருட்சங்களான வன்னி, சரக்கொன்றை, வில்வம் ஆகியவை உள்ளன. ஆம்.. இந்த ஆலயத்தில் மூன்று தல விருட்சங்கள் இருக்கின்றன. இந்த மரங்களின் அருகில் நாகர், சரபேஸ்வரர், நரசிம்மர் அருள்கின்றனர்.

    கோஷ்டத்தில் அதை சுற்றியுள்ள சுவர்களில் 63 நாயன்மார் களின் வரலாறுகள், பதாகைகளாக வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தில் மூன்று நந்திகள் மூன்று பலிபீடங்கள் உள்ளது ஒரு சிறப்பம்சமாகும்.

    வாரம் தோறும் ஞாயிறு அன்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையான ராகு காலத்தில், இத்தல இறைவனுக்கு தேன், கரும்புச்சாறு, மஞ்சள் பொடி ஆகியவை கொண்டு அபிஷேகம் செய்து வழிபட்டால், பதவி உயர்வு, பறிபோன வேலை திரும்பக் கிடைப்பது போன்ற விஷயங்கள் நடைபெறுவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள், இறைவனுக்கு புதிய வஸ்திரம் சாத்தி நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

    இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.


    அமைவிடம்

    விழுப்புரத்தில் இருந்து கடலூர் செல்லும் சாலையில், விழுப்புரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, மேல்பட்டாம்பாக்கம். இந்த ஊரின் பேருந்து நிறுத்தம் அருகிலேயே சிவலோகநாதர் கோவில் இருக்கிறது.

    ×