search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slapping professor"

    வகுப்பறையில் அனைவரின் முன்பும் பேராசிரியர் கன்னத்தில் அறைந்ததால் மனமுடைந்த பாலிடெக்னிக் மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் தளவாய் அருகே உள்ள ஆதனக் குறிச்சியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் தட்சிணாமூர்த்தி (வயது 18). இவர் கடலூர் மாவட்டம் தொழுதூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 6-ந்தேதி உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். திருமணத்தில் பங்கேற்று விட்டு 7-ந்தேதி கல்லூரிக்கு புறப்பட்டு சென்றார். அதன் பின்னர் அவர் பெற்றோருக்கு போன் எதுவும் பண்ணவில்லை. பெற்றோர் தொடர்பு கொண்டும் போனை எடுக்கவில்லை. 

    இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொழுதூர் கல்லூரிக்கு சென்று பார்த்த போது அங்கும் தட்சிணா மூர்த்தியை காணவில்லை. இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பெண்ணாடம் பஸ் நிலையத்தில் தட்சிணா மூர்த்தி நிற்பது தெரியவந்தது. அங்கு சென்ற உறவினர்கள் அவரை கண்டுபிடித்து ஊருக்கு அழைத்து சென்றனர். 

    இந்த நிலையில் கடந்த 8-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தட்சிணாமூர்த்தி திடீரென விஷம் குடித்து விட்டார். உயிருக்கு   போராடிய அவரை மீட்டு விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு  ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று தட்சிணாமூர்த்தி இறந்தார்.
     
    இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணமூர்த்தி தளவாய் போலீசில் புகார் செய்தார். புகாரில், கல்லூரி பேராசிரியர் தாக்கியதால் தட்சிணா மூர்த்தி தற்கொலை செய்து கொண்டதாகவும், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 7-ந்தேதி கல்லூரிக்கு சென்ற தட்சிணாமூர்த்தியிடம் அக்கல்லூரி பேராசிரியர் ஒருவர்  6-ந் தேதி ஏன் வரவில்லை என்று கேட்டுள்ளதோடு, கன்னத்தில் மாறி மாறி அறைந்ததாக கூறப்படுகிறது. மற்ற மாணவர்கள் மத்தியில் தன்னை அடித்ததால் மனமுடைந்து தட்சிணாமூர்த்தி தற்கொலை செய்து கொண்டதாக என கூறப்படுகிறது. 

    இந்த காரணத்திற்காகத் தான் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×