search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 100003"

    இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயமா? என்பது குறித்து சென்னை ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது. #Helmet #HC
    சென்னை:

    சென்னை கொரட்டூரைச் சேர்ந்த கே.கே.ராஜேந்திரன் என்பவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘மோட்டார் வாகன சட்டப்படி நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும், இரு சக்கர வாகனங்களில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று விதி உள்ளது. இந்த விதியை தமிழக அரசு அமல்படுத்தவில்லை. இந்த விதியை அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.



    இந்த மனு சம்பந்தமாக தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, இரு சக்கர வாகனங்களில் வாகன ஓட்டி மட்டுமல்லாமல் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

    இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, தமிழக அரசு தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

    அதில், ‘கடந்த மாதம் 17-ந் தேதி வரை ஹெல்மெட் அணியாதது தொடர்பாக 10 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஹெல்மெட் விழிப்புணர்வால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர். இதன்காரணமாக ஹெல்மெட் அணியாதது தொடர்பாக பதியப்படும் வழக்கு பாதியாக குறைந்து உள்ளது’ என்று கூறப்பட்டிருந்தது.

    இதைப்பார்த்த நீதிபதிகள், ஹெல்மெட் கட்டாயம் என்ற அரசாணையை அமல்படுத்துவதில் பின்னடைவு இருப்பதாகவும், அரசு உத்தரவை அமல்படுத்த வேண்டிய பொறுப்பு அதிகாரிகளுக்கு இருப்பதாகவும் தெரிவித்தனர்.

    மேலும், இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற அரசாணை முறையாக அமல்படுத்தப்படவில்லை என்று அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், ஹெல்மெட் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டும் போதாது என்றும் குறிப்பிட்டனர்.

    பின்னர், தேசியக் கொடி பொருத்திய வாகனங்கள் வரும்போது சீருடையில் இருக்கும் காவல்துறையினர் தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்துவது இல்லை என்று வேதனை தெரிவித்த நீதிபதிகள், காவல்துறையினர் ஹெல்மெட் அணிகிறார்களா? அதிகாரிகள் சீட் பெல்ட் அணிகிறார்களா? என்று கேள்வி எழுப்பி அதையும் கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    பின்னர், வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் இன்று ஒத்திவைத்தனர். இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாகுமா? என்பது குறித்து இன்றைய தீர்ப்பின் முடிவில் தெரியவரும். #Helmet #HC
    இருசக்கர வாகனத்தில் சென்றால் ஹெல்மெட் அணியவேண்டும் என்ற விதிகளை அரசும், காவல்துறையும் முறையாக அமல்படுத்தவில்லை என சென்னை ஐகோர்ட்டு அதிருப்தி தெரிவித்துள்ளது. #Helmet #Police

    சென்னை:

    இருசக்கர வாகனத்தில் சென்றால் ஹெல்மெட் அணியவேண்டும் என்ற விதிகளை அரசும், காவல்துறையும் முறையாக அமல்படுத்தவில்லை என சென்னை ஐகோர்ட்டு அதிருப்தி தெரிவித்துள்ளது.

    மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும், இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமென விதிகள் இருந்தும் அதை அரசு அமல்படுத்தவில்லை என்பதால், அதை முழுமையாக அமல்படுத்த கோரி சென்னை ஐகோட் கோட்டில் கே.கே.ராஜேந்திரன் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்துவரும் நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு, 2015 ம்ஆண்டு கட்டாய ஹெல்மெட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது முதல் கடந்த 3 ஆண்டுகளாக பொதுமக்கள் மத்தியில் எவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய கடந்த 5ந் தேதி உத்தரவிட்டனர்.


    இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வாகனத்தில் பயணிக்கும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது தொடர்பாக நடத்தப்பட்டுவரும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குறித்தும், பல்வேறு விளம்பர யுக்திகள் குறித்தும் அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல 2015ல் நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவுக்கு பிறகு எத்தனை வழக்குகள் பதிவானது என்பது தொடர்பாக ஆண்டுவாரியான மற்றும் மாவட்டவாரியான அறிக்கையும் நீதிமன்றத்தின் பார்வைக்கு தாக்கல் செய்யப்பட்டது.

    அதனை படித்த நீதிபதிகள், பள்ளி கல்லூரிகளில் மட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போதாது; ஹெல்மெட், சீட்பெல்ட் கட்டாயம் என்பது மோட்டார் வாகன விதிகளிலேயே உள்ள நிலையில் அதை அமல்படுத்துவதில்லை என குற்றம் சாட்டினர். காவல்துறையினர் உள்ளிட்ட பலர் ஹெல்மெட் அணியாமல் செல்லும் நிலையில், தேசியக் கொடியுடன் செல்லும் நீதிபதி வாகனம் உள்ளிட்ட எந்த வாகனங்களையும் மதிப்பதில்லை; விதிகளை அமல்படுத்துங்கள் என்று சொன்னால் நீதிமன்றம் கட்டாயபடுத்துவதாக நீதிமன்றத்தின் மீதும், நீதிபதிகள் மீதும் திசை திருப்புகின்றனர் என அதிருப்தி தெரிவித்தனர்.

    பின்னர் இந்த வழக்கின் தீர்ப்பு நாளை பிறப்பிக்கப்படும் என்று உத்தரவிட்டனர். #Helmet #Police

    ஹெல்மெட் அணியாததால் வாகன விபத்துக்களின் போது உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்கும் விதம் குறித்து நாமக்கல்லில் ஹெல்மெட் அணிவது தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
    நாமக்கல்:

    ஹெல்மெட் அணியாததால் வாகன விபத்துக்களின் போது உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்கும் விதத்தில் நாமக்கல் மாவட்ட கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் செந்தில் மற்றும் சுஜாதா ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் நாமக்கல்லில் ஹெல்மெட் அணிவது தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரங்கநாதன், சபாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் மணிக்கூண்டு அருகே தொடங்கிய ஊர்வலம் பரமத்தி ரோடு, கோட்டை ரோடு, சேலம் ரோடு, கடைவீதி உள்பட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நாமக்கல் பஸ் நிலையம் வந்தடைந்தது.

    இதில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் ஹெல்மெட் அணிந்தவாறு ஊர்வலமாக சென்றனர். முன்னதாக ஹெல்மெட் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை போக்குவரத்து போலீசார் பொதுமக்களுக்கு வழங்கினர். அதில் ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் விபத்துக்கள் இல்லாமல் வாகனங்கள் ஓட்ட வேண்டிய வழிமுறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டு இருந்தது. 
    சென்னை அசோக் பில்லர் அருகே இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு இன்ஸ்பெக்டர் ரூ.100 அபராதம் விதித்து அவர்களுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கினார். #Helmet
    போரூர்:

    இருசக்கர வாகனத்தை ஓட்டிச் செல்பவர்களும், பின்னால் அமர்ந்து இருப்பவர்களும் ‘ஹெல்மெட்’ அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    விதிமுறையை மீறுபவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து அறிவுரை வழங்கி வருகின்றனர். எனினும் பலர் தொடர்ந்து ஹெல்மெட் அணியாமல் வாகனங்களை ஓட்டி வருகிறார்கள்.

    இந்த நிலையில் சென்னை அசோக் பில்லர் அருகில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள் சுமார் 75 பேருக்கு தலா ரூ. 100 அபராதம் விதித்தார். மேலும் அவர்கள் அனைவருக்கும் இலவசமாக புதிய ஹெல்மெட் ஒன்றையும் வழங்கினார். வாகன ஓட்டிகளுக்கு தலைகவசம் எவ்வளவு அவசியம் என்பது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் அவர்களிடம் கொடுத்து இன்ஸ்பெக்டர் மகேந்திரன் அறிவுரை வழங்கினார். #Helmet
    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் ஹெல்மெட் அணிந்தபடி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வினோத போராட்டத்தில் மருத்துவர்கள் ஈடுபட்டனர். #Hyderabad
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் ஓஸ்மானியா என்ற மிகப்பழமையான மருத்துவமனை இயங்கிவருகிறது. இந்த மருத்துவமனை முறையாக பராமரிக்கப்படுவது இல்லை என்றும், அடிக்கடி மேற்கூரை பெயர்ந்து மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் மீதும் விழுந்து காயம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், மேற்கூரை இடிந்து விழுந்து காயம் ஏற்படாமல் இருக்கும்வண்ணம் தலைகளில் ஹெல்மெட் அணிந்தபடி மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் வினோத போராட்டத்தை மேற்கொண்டனர்.



    ஐதராபாத்தில் ஆபத்தான நிலையில் உள்ள அரசு மருத்துவமனைக் கட்டிடத்தைப் புதுப்பிக்கக் கோரி மருத்துவர்கள் ஹெல்மெட் அணிந்தபடி சிகிச்சை அளித்து வினோதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    முன்னதாக வெளி நோயாளிகளை மரத்தடியில் வைத்து சிகிச்சை அளித்து மருத்துவர்கள், கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. #Hyderabad
    வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும், விபத்தில்லா பயணத்தை மேற்கொள்வது எப்படி என்பது குறித்தும் போலீசாரால் எடுத்து கூறப்பட்டது.
    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் கொள்ளிடம் பாலத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபினவ்குமார் உத்தரவின் பேரில், திருமானூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் மேனகா, லட்சுமிபிரியா ஆகியோர் முன்னிலையில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    மேலும், அந்த வழியாக வந்த இருசக்கர வாகனங்களுக்கு போலீசார் சார்பில், இலவசமாக பிரேக் உள்ளிட்ட வைகளை சரிபார்த்து கொடுத்தனர். மேலும், வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம், விபத்தில்லா பயணத்தை மேற்கொள்வது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும்போது ஏற்படும் விபத்து குறித்தும், இதனால் குடும்பத்தினர் பாதிக்கப்படுவது குறித்தும் போலீசாரால் எடுத்து கூறப்பட்டது. 
    கும்மிடிப்பூண்டி பஜாரில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட்டின் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி வழங்கினார்.
    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி பஜாரில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட்டின் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி வழங்கினார்.

    கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டியதன் அவசியத்தை போலீசார் பல்வேறு வகையில் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், கும்மிடிப்பூண்டி பஜாரில் ரெட்டம்பேடு சாலை சந்திப்பில் கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமையில் இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி வைத்து அவர்களுக்கு ஹெல்மெட்டின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்முருகன், மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி கலந்து கொண்டு, இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிய வேண்டியதன் அவசியம் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

    மேலும் சாலை பாதுகாப்பு குறித்து அவர் வாகன ஓட்டிகளுக்கு எடுத்துரைத்தார். அப்போது இருசக்கர வாகன பயணத்தின்போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிவதாக வாகன ஓட்டிகள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    திருவள்ளூர் டோல்கேட் பகுதியில் நேற்று போக்குவரத்துத்துறை மற்றும் போலீசார் சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமை திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இருசக்கர வாகனத்தில் செல்லும் போது வாகனம் ஓட்டுபவரும் பின்னால் அமர்ந்து வருபவர்களும் கண்டிப்பாக ஹெல்மெட் அணியவேண்டும். சாலை விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். மது அருந்திவிட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ, அதிக வேகமாகவோ வாகனங்களை ஓட்டிச்செல்லக்கூடாது.

    போக்குவரத்து விதிமுறைகளை அனைவரும் கண்டிப்பாக பின்பற்றி நடக்க வேண்டும். 4 சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கண்டிப்பாக சீட்பெல்ட் அணிந்து செல்ல வேண்டும் என தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், செல்லதுரை, திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கர், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் காவேரி, ரவிக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
    ஹெல்மெட் அணிவது குறித்து தஞ்சையில் இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. இதனை போக்குவரத்துதுறை துணை ஆணையர் உதயகுமார் தொடங்கி வைத்தார்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஹெல்மெட் அணிவது குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் தஞ்சையில் நேற்று நடந்தது. ஊர்வலத்துக்கு வட்டார போக்குவரத்து அதிகாரி கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மோட்டார் வாகன ஆய்வாளர் சுந்தர்ராமன் முன்னிலை வகித்தார்.

    ஊர்வலத்தை தஞ்சை மண்டல போக்குவரத்து துறை துணை ஆணையர் உதயகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் திலகர்திடல் அருகே இருந்து தொடங்கி சோழன்சிலை, ராசாமிராசுதார் அரசு மருத்துவமனை சாலை, அண்ணாசிலை, காந்திஜிசாலை, இர்வீன்பாலம் வழியாக ரெயில் நிலையத்தை அடைந்தது.

    பேரணியில் தஞ்சை பகுதியில் உள்ள இருசக்கர வாகன விற்பனையாளர்கள், சமூக ஆர்வலர்கள், இருசக்கர பழுதுபார்ப்போர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பதாகைகளை ஏந்தி சென்றனர். மேலும் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்பது குறித்து துண்டுபிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டன. 
    திருமங்கலம் அருகே வாகன சோதனையின்போது வாக்குவாதம் ஏற்பட்டதில் போலீஸ்காரர்களை தாக்க முயன்ற சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர்.

    பேரையூர்:

    மோட்டார் சைக்கிளை ஓட்டுபவரும், பின்னால் அமர்ந்திருப்போரும் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதையடுத்து போலீசார் இதை மட்டுமே பணியாக நினைத்து தமிழகம் முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சில போலீசாரின் விரும்பாதகாத செயல்களால் பொதுமக்களுக்கும், அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது.

    திருமங்கலம் அருகே உள்ள கூடக்கோவில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், முதன்மை காவலர் அழகர்சாமி மற்றும் போலீசார் எலியார்பத்தி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த பாரபத்தியை சேர்ந்த முத்தையா மகன்கள் முருகன் (வயது38), மணி ஆகியோரை போலீசார் மறித்தனர். பின்னர் ஹெல்மெட் அணியாதது குறித்தும், ஆவணங்கள் குறித்தும் போலீசார் கேட்டதாக தெரிகிறது.

    இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது போலீஸ்காரர்களை தாக்க முயன்றதாக கூடக்கோவில் போலீசில் சகோதரர்கள் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் முருகனையும், அவரது தம்பி மணியையும் கைது செய்தனர்.

    இரு சக்கர வாகனத்தில் பின்னால் உட்கார்ந்து இருப்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவு வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளம்பியுள்ளது. #helmet
    சென்னை:

    தமிழகம் முழுவதும் இரு சக்கர வாகனம் ஓட்டுவோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என சட்டம் உள்ளது. இதை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

    இந்த நிலையில் பின்னால் உட்கார்ந்து இருப்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து போக்குவரத்து போலீசார் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களை பிடித்து அபராதம் வசூலித்து வருகிறார்கள்.

    கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவுக்கு வாகன ஓட்டிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கூறுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து தனியார் நிறுவன ஊழியர் சுரேஷ் கூறியதாவது:-

    ஹெல்மெட் அணியாததால் காலை விபத்துகளில் உயிரிழப்பு ஏற்படுவதாக அரசு கூறுகிறது. உயிர் மீது அக்கறை கொள்வது நல்ல வி‌ஷயம் தான். ஆனால் சாலையில் குண்டும் குழியுமாக இருப்பது தான் விபத்துக்கு காரணம். போக்குவரத்து விதிகளை சரியாக கடைபிடிப்பது இல்லை.

    முதலில் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரும்பாலான சிக்னல்களில் போக்குவரத்து போலீசார் இல்லை. எழும்பூர் நாயர் பாலம் சாலையில் இருந்து பூந்தமல்லி சாலை இணையும் இடத்திலும் புரசைவாக்கம் லாடர்ஸ் செட்டில் இருந்து மோட்சம் தியேட்டர் வரையிலும் சாதாரண நேரத்தில் கூட போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

    சாலைகள், பிளாட்பாரங்கள் ஆக்கிரமிப்புகளால் தான் வாகன நெரிசல் ஏற்பட்டு விபத்து ஏற்படுகிறது. விபத்துக்கு மூல காரணமே இது தான். அதை சீர் செய்யாமல் ஹெல்மெட்டில் கெடுபிடி காட்டுவது மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படுகிறது.

    பெண்கள், குழந்தைகளுடன் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது எப்படி அனைவரும் ஹெல்மெட் அணிய முடியும். பெண்களுக்கு அசவுகரியம் ஏற்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வங்கி ஊழியர் நந்தினி கூறும்போது, செல்போனில் பேசிக்கொண்டும், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களாலும் தான் விபத்து ஏற்படுகிறது. பிளாட்பாரம் ஆக்கிரமிப்பு, மோசமான சாலைகளால் ஹெல்மெட் அணிந்தால் கூட உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்றார்.

    கட்டாய ஹெல்மெட் உத்தரவை எதிர்த்து மதுரை உள்பட சில இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இணைய தளத்திலும் கண்டனம் தெரிவித்தும், கேலி-கிண்டல் செய்தும் வறுத்தெடுக்கிறார்கள்.

    நாமக்கல்லில் கடந்த இரண்டு நாட்களில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த 170 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கேடசன் தெரிவித்தார்.
    நாமக்கல்:

    நாமக்கல்லில் விதிமுறைகளை மீறி இருசக்கர வாகனத்திற்கு அபராதம் விதித்துள்ளனர்.

    இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கலைச்செல்வி, சண்முக ஆனந்த் ஆகியோர் நேற்று நல்லிபாளையம் பைபாஸ் சாலை அருகில் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களை நிறுத்தி உரிய அறிவுரை கூறினார்கள். பின்னர் அவர்களுக்கு உடனடி அபராதமாக ரூ 100 விதிக்கப்பட்டது.

    இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வருபவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என அப்போது அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

    கடந்த இரண்டு நாட்களில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த 170 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கேடசன் தெரிவித்தார்.

    சென்னையில் இன்று அதிகாலை 5 மணிக்கே போக்குவரத்து பிரிவு போலீசார் ஹெல்மெட் வேட்டையில் ஈடுபட்டனர். காலை நேரத்தில் பள்ளி- கல்லூரிகளுக்கு செல்வோர் நூற்றுக்கணக்கானோர் ஹெல்மெட் அணியாமல் சென்றபோது பிடிபட்டனர். #Helmet
    சென்னை:

    இருசக்கர வாகனங்களில் செல்வோரும், பின்னால் அமர்ந்து செல்வோரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்று தமிழக அரசின் மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 129-ல் கூறப்பட்டுள்ளது.

    பெரும்பாலான இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை விரும்பாததால் இந்த சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் சாலை விபத்துக்களில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் தான் அதிகம் பலியாகிறார்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

    தமிழகத்தில் கடந்த 7 மாதத்தில் மட்டும் 38 ஆயிரத்து 491 விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் பலியான 2,476 பேரில் 1,811 பேர் இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்று இறந்தவர்கள்.

    சமீபத்தில் சென்னை ஐகோர்ட்டும் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டது. இதையடுத்து தமிழக அரசு, இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து இருப்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் தமிழக அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது.

    இதையடுத்து சென்னையில் இன்று அதிகாலை 5 மணிக்கே போக்குவரத்து பிரிவு போலீசார் ஹெல்மெட் வேட்டையில் ஈடுபட்டனர். போக்குவரத்து போலீசார் அனைவரும் அதிகாலை 5 மணிக்கே ஹெல்மெட் சோதனையில் ஈடுபட வேண்டும் என்று உயர் அதிகாரிகள் உத்தரவிட்டு இருந்தனர். அதன்படி சென்னையில் வடக்கு, மேற்கு, தெற்கு, கிழக்கு என 4 மண்டலங்களில் போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே சாலை சந்திப்புகளில் நின்று சோதனையில் ஈடுபட்டனர்.

    ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியவர்களையும், பின்னால் அமர்ந்து இருப்பவர்களையும் மடக்கி நிறுத்தினர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர். சம்பந்தப்பட்டவர்களிடம் அதற்கான ரசீது வழங்கப்பட்டது. போலீசார் ரொக்கமாக அபராதம் வசூலிக்க கூடாது என்பதால் மின்னணு அட்டைகள் மூலம் அபராதம் வசூலித்தனர். மின்னணு அட்டை இல்லாதவர்கள் கோர்ட்டில் நேரடியாக அபராதம் செலுத்தும்படி தெரிவிக்கப்பட்டது.


    காலை நேரத்தில் பள்ளி- கல்லூரிகளுக்கு செல்வோர் நூற்றுக்கணக்கானோர் ஹெல்மெட் அணியாமல் சென்றபோது பிடிபட்டனர். அவசர அவசரமாக பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு சென்றவர்கள் இதனால் தாமதமாக செல்ல நேரிட்டது.

    போக்குவரத்து போலீசாரின் ஹெல்மெட் சோதனையை ஆங்காங்கே உயர் அதிகாரிகள் ரோந்து வந்து மேற்பார்வையிட்டனர். அபராதத்தை ரொக்கமாக பெறக்கூடாது என்று சமீபத்தில் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு பின்பற்றப்படுகிறதா? என்று உயர் அதிகாரிகள் கண்காணித்தனர்.

    இதேபோல் வட்டார போக்குவரத்து அதிகாரிகளும் ஆங்காங்கே ஹெல்மெட் சோதனையில் ஈடுபட்டனர்.

    தமிழ்நாட்டில் 2.14 கோடி வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு ஓடுகின்றன. இதில் 84 சதவீத வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் ஆகும்.

    இதற்கு முன்பு ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்தபோதும் போக்குவரத்து போலீசார் கட்டாய ஹெல்மெட் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் முறைகேடு நடப்பதாகவும், பெண்களுக்கு அசவுகரியம் ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்தது. இதையடுத்து கெடுபிடி நிறுத்தப்பட்டு அதற்கு பதில் விழிப்புணர்வு பிரசாரம் தீவிரப்படுத்தப்பட்டது. ஹெல்மெட் அணிந்து செல்வோர் ஊக்கப்படுத்தப்பட்டனர்.

    தற்போது மீண்டும் கட்டாய ஹெல்மெட் கெடு பிடி வேட்டை தொடங்கியிருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். குறிப்பாக பெண்களுக்கு அசவுகரியம் ஏற்படுவதாக தெரிவித்தனர்.

    ஹெல்மெட் கட்டாயம் போல் சென்னையில் நடைபெறும் போக்குவரத்து விதிமீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் தெரிவித்தனர். போக்குவரத்து சிக்னல்களில் விதிமீறல்கள் அதிகம் நடக்கிறது. நிறுத்த எல்லைக்கோட்டை தாண்டி வாகனங்களை நீட்டிக் கொண்டு நிறுத்துகிறார்கள். சிக்னலில் பச்சை விளக்கு எரியும் முன்பே வாகனங்களை ஓட்டிச் செல்கிறார்கள். அதிவேகத்தில் செல்வோர் சிக்னலை மதிப்பதே இல்லை.

    மேலும் செல்போன்களில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது அதிகரித்து விட்டது. குடிநீர் லாரிகள், சரக்கு வாகனங்கள், ஆட்டோக்கள், இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் என வாகன ஓட்டிகள் செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்ட தடை விதிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். #Helmet
    ×