search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளவரசு"

    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா - சாய் பல்லவி - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் வெளியாகி இருக்கும் `என்ஜிகே' படத்தின் விமர்சனம்.
    சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட படிப்பில் முதுகலை பட்டம் பெற்ற சூர்யா, தனது கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்து வருவதுடன், சமூக சேவைகளிலும் ஈடுபடுகிறார். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் சூர்யாவால் பாதிக்கப்படும் உள்ளூர் வணிகர்கள் அவருக்கு குடைச்சல் கொடுக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவரது நிலங்களை நாசப்படுத்திவிடுகின்றனர்.

    இந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்காக பாலா சிங் மூலமாக சட்டமன்ற உறுப்பினரான இளவரசுவை சந்திக்கிறார் சூர்யா. அரசியலுக்கு வந்தால் தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்பதை உணரும் சூர்யா, இளவரசுவின் கட்சியிலேயே அடிப்படை உறுப்பினராக சேர்கிறார்.



    இவ்வாறாக வேறு வழியின்றி அரசியலில் நுழையும் சூர்யா சந்திக்கும் சிக்கல்கள் என்னென்ன? அவரது ஆசை நிறைவேறியதா? முழு அரசியல்வாதி ஆனாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் சூர்யா இதுவரை இல்லாத மாதிரியான வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சமூக சேகவர், அரசியல் நுழைவு, அரசியல் எழுச்சி என இடங்களுக்கு ஏற்ப சூர்யா நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். சூர்யாவின் மனைவியாக சாய் பல்லவிக்கும், அரசியல் ஆலோசகராக ரகுல் ப்ரீத் சிங்குக்கும் பெரிய கதாபாத்திரங்கள் இல்லை என்றாலும், நடிப்பில் ஒரளவுக்கு திருப்திபடுத்தியிருக்கின்றனர்.



    அரசியல்வாதி கதாபாத்திரங்களில் இளவரசு, பொன்வண்ணன், பாலா சிங், வேல ராமமூர்த்தி அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். சூர்யாவின் அம்மாவாக உமா பத்மநாபன், கிடைத்த இடங்களில் சிக்ஸர் அடித்துவிட்டுச் செல்கிறார். அப்பாவாக நிழல்கள் ரவி அலட்டல் இல்லாமல் நடித்திருக்கிறார்.

    இயற்கை விவசாயம் செய்யும் நடுத்தர குடும்பத்து இளைஞன், அரசியலுக்கு வர விரும்புவதும், அதனால் அவன் சந்திக்கும் பிரச்சினைகளையும் விதையாக வைத்து கதையை உருவாக்கி இருக்கிறார். செல்வராகவனின் வழக்கமான படங்களை போல இல்லை, அதாவது அவரது ஸ்டைலில் இல்லை என்பதே வருத்தம். திரைக்கதையில் பல இடங்களில் தொய்வு இருப்பது போல தோன்றுகிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் இந்த படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பது தான் நிதர்சனம். பாடல்களும் ஒட்டவில்லை. 



    பின்னணி இசையில் யுவன் ஷங்கர் ராஜா அதிரடியாக மிரட்டியிருக்கிறார். சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவு வண்ணமயமாக இருப்பது படத்திற்கு பலம்.

    மொத்தத்தில் `என்ஜிகே' நழுவலானது கெத்து கூட்டணி.



    ×