search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 100067"

    கிணத்துக்கடவு அருகே சூலக்கல்லில் உள்ள மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    கிணத்துக்கடவு அருகே சூலக்கல்லில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தேர்த் திருவிழா ஆண்டுதோறும் 3 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான தேர்த்திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து 23-ந் தேதி காலை மாரியம்மன் திருவீதி உலாவும், இரவு பக்தர்கள் மாரியம்மனுக்கு பூவோடு எடுத்து நேர்ச்சைக்கடன் செலுத்தினார்கள். 24-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை காலை இரவு நேரங்களில் மாரியம்மன் குதிரை வாகனத்தில் திருவீதி நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை மாரியம்மனுக்கு பக்தர்கள் மாவிளக்கு, பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். அதனை தொடர்ந்து இரவு 7-மணிக்கு மாரியம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

    நேற்று காலை காலை 5 மணிக்கு மாரியம்மன், விநாயகர் திருத்தேருக்கு புறப்படும் நிகழ்ச்சி நடந்தது. மாலை 4.30 மணிக்கு முதல் நாள் திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவை பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார், சரவணம்பட்டி சிரவை ஆதீனம் குமரகுருபரசாமிகள் ஆகியோர் தலைமையில், புரவிபாளையம் ஜமீன் சண்முக சுந்தரிவெற்றிவேல், கோபண்ணமன்றாடியார் குடும்பத்தினர் ஆகியோர் முன்னிலையில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தேரை வடம்பிடித்து தொடங்கி வைத்தார். தேரோட்டத்தில் பக்தர்கள் ஒம்சக்தி பராசக்தி என்ற கோ‌‌ஷம் முழங்கினர். விநாயகர் தேர் முன்பு செல்ல பின்னால் 30 அடி உயரம் தேரில் சூலக்கல்மாரியம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் தேர் மீது வாழைப்பழம் வீசி மாரியம்மனை வழிபட்டனர்.

    முதல் நாள் தேர் இரவு கிழக்கு ரதவீதியில் நிறுத்தப்பட்டது. தேரோட்டத்தில் முன்னால் அமைச்சர் செ.தாமோதரன், கு.சண்முகசுந்தரம் எம்.பி. மற்றும் இந்துசமய அறநிலைய துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இன்று (வெள்ளிக்கிழமை) 2-ம் நாள் மாலை 4.30 மணிக்கு தொடங்கி இரவு மேற்கு ரத வீதியில் தேர் நிறுத்தப்படுகிறது. நாளை (சனிக்கிழமை) 3-ம் நாள் மாலை 4.30 மணிக்கு தொடர்ந்து தேரோட்டம் நடக்கிறது. இரவு கோவில் முன்பு தேர்நிலையில் நிறுத்தப்படுகிறது.

    2-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணிக்கு மாரியம்மனுக்கு மகா அபிஷேக பூஜையும், தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குதலுடன் தேர்த்திருவிழா நிறைவடைகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சூலக்கல் மாரியம்மன் கோவில் தக்கார் ஆனந்த், செயல் அலுவலர் சரவணபவன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பஞ்சப்பிரகார திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.
    சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப்பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவிலாகும். இக்கோவிலில் நடைபெறும் ஐம்பெரும் உற்சவங்களில் பஞ்சப்பிரகாரம் என்பது வசந்த உற்சவம் ஆகும். மாயாசூரனை சம்ஹாரம் செய்ய பராசக்தி மகா மாரியம்மன் வடிவம் எடுத்த இத்தலத்தில் அக்னி நட்சத்திஇரத்தில் உஷ்ண கிராந்தியை தணிப்பதற்காக இந்த உற்சவம் கடந்த 6-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. சமயபுரம் மாரியம்மனுக்கு வசந்த உற்சவத்தின் நடுநாயகமாக வரும் பஞ்சப்பிரகார திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி வட திருக்காவிரியில் இருந்து வெள்ளிக்குடங்களில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் திருக்கோவில் பட்டாச்சாரியார்கள் தீர்த்தம் கொண்டுவருதல் மற்றும் யானை மேல் தங்கக்குடத்தில் தீர்த்தம் கொண்டுவருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக கடைவீதியில் உள்ள கோவில் திருமண மண்டபத்தில் இருந்து 25 வெள்ளிக் குடங்களில் பட்டாச்சாரியார்கள் புனித நீரை சுமந்து ஊர்வலமாக வந்தனர். அதைத் தொடர்ந்து மாரியம்மன் கோவில் அர்ச்சகர் அலங்கரிக்கப்பட்ட யானை மீது அமர்ந்து தங்கக்குடத்தில் புனிதநீரை ஊர்வலமாக கொண்டுவந்தார்.

    இதைத்தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளிக்குடங்கள் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மாரியம்மனுக்கு கும்ப அபிஷேகமும், மதியம் 2 மணிக்கு பஞ்சப்பிரகார மகாஅபிஷேகமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.



    இதைத்தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் வெண்ணிற பாவாடை அணிந்து வெள்ளி விமானத்தில் மூலஸ்தான கருவறையை ஒட்டிய பிரகாஇரத்தில் முதல் சுற்றாகவும், தங்க கொடி மஇரத்தை 2-வது சுற்றாகவும், தங்க ரதம் வலம் வரும் பிரகாஇரத்தில் 3-வது சுற்றாகவும், தெற்கு ரத வீதியில் பாதியும் வடக்கு மடவாள வீதியில் 4-வது சுற்றாகவும், கீழ ரதவீதி, மேல ரதவீதி, வடக்கு ரதவீதி ஆகியவற்றில் 5-வது சுற்றாகவும் வீதிஉலா வந்து பஞ்சப்பிரகார விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

    உற்சவத்தை முன்னிட்டு வருகிற 23-ந் தேதி வரை இரவு 8 மணிக்கு அம்மன் வெள்ளிக்கேடயத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இன்று(வியாழக்கிழமை) அம்மன் தங்க சிம்மவாகனத்திலும், நாளை(வெள்ளிக்கிழமை) முத்துப்பல்லக்கிலும், நாளை மறுநாள் (சனிக்கிழமை) தங்க கமல வாகனத்திலும் அம்மன் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    வருகிற 19-ந்தேதி வெள்ளிக்குதிரை வாகனத்திலும் 20-ந் தேதி வெள்ளிக்காமதேனு வாகனத்திலும், 21-ந்தேதி கற்பக விருட்ச வாகனத்திலும், 22-ந்தேதி காமதேனு வாகனத்திலும், 23-ந்தேதி அன்னப்பட்சி வாகனத்திலும் அம்மன் புறப்பாடாகி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
    மணப்பாறையில் வேப்பிலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். இன்று வேடபரி நிகழ்ச்சி நடக்கிறது.
    மணப்பாறையில் வேப்பிலை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சிறப்பு வழிபாடு, மண்டகப்படி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. திருவிழாவின் முக்கிய விழாவான பால்குட விழா நேற்று காலை நடைபெற்றது. முதலில் கொடியேற்றம் நடைபெற்றதை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    பின்னர் மேளதாளம் முழங்க அந்த கோவிலில் இருந்து நாட்டாண்மை வீராசாமி குடும்பத்தினர் பால்குடம் எடுத்து முதலில் வர கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர்.வீ.எஸ்.வீரமணி, செயல் அலுவலர் பிரபாகர் மற்றும் முக்கிய பிரமுகர்களை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். மேலும் கரும்பு தொட்டிலில் குழந்தைகளை சுமந்தும் பலர் வந்தனர். ராஜவீதிகளின் இரு ஓரங்களிலும் மக்கள் பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் மீது தண்ணீர் ஊற்றி வணங்கினர். அப்பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தல்களில் பக்தர்களுக்கு குடிநீர், நீர்மோர், உணவு பொட்டலங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. மணப்பாறை தரகு வர்த்தக சங்கம், பெருந்தலைவர் காமராஜர் காய்கனி மார்க்கெட், அறிஞர் அண்ணா காய்கனி மார்க்கெட் ஆகிய இடங்களில் பக்தர்களுக்கு உணவு வழங்கினர்.

    பால்குட ஊர்வலம் ராஜவீதிகளின் வழியாக வேப்பிலை மாரியம்மன் கோவிலை வந்தடைந்த பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பால்குட விழாவை தொடர்ந்து இன்று(திங்கட்கிழமை) அதிகாலை 5 மணிக்கு பொங்கல் விழா, அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்தி வருதல் நிகழ்ச்சியும், மாலையில் அம்மன் குதிரை வாகனத்தில் செல்லும் வேடபரி நிகழ்ச்சியும், பின்னர் முளைப்பாரியும் நடைபெறுகிறது.

    பக்தர்கள் வசதிக்கான தண்ணீர் மற்றும் சுகாதார ஏற்பாடுகளை மணப்பாறை நகராட்சி ஆணையர் தலைமையில் நகராட்சி அலுவலர்களும், பணியாளர்களும் செய்திருந்தனர். மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு சர்மு தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர்.வீ.எஸ். வீரமணி, கோவில் செயல் அலுவலர் பிரபாகர் ஆகியோர் தலைமையில் செய்துள்ளனர். இதேபோல் தமிழ்நாடு ஊராளிக்கவுண்டர் பேரவை சார்பில் சுமார் 10 ஆயிரம் பேருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. 
    திருச்சி தெப்பக்குளம் வாணப்பட்டறை மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திருச்சி தெப்பக்குளம் வாணப்பட்டறை தெருவில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான சித்திரை தேர்த்திருவிழா கடந்த 7-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து அன்று மாலை பூச்சொரிதல் விழாவும், இரவு 7 மணிக்கு மேல் அம்மன் புஷ்பரதத்தில் எழுந்தருளி மலைக்கோட்டையை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    கடந்த 14-ந்தேதி கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி பூஜையும், 15-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர், தினமும் ஒவ்வொரு வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

    முன்னதாக காலை 8 மணிக்கு மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து காலை 9 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    அப்போது பக்தர்கள் வழி நெடுக தேங்காய் உடைத்தும், மாவு வைத்தும் வழிபட்டனர். மேலும் பக்தர்களுக்கு நீர்மோர், பானகம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கினர். தேரோட்டத்தின் போது, வெயிலை சமாளிக்க பக்தர்கள் மீது தண்ணீர் ஊற்றப்பட்டது. மேலும் கலர் பொடிகளை பூசி பக்தர்கள் தங்களது மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினர். தொடர்ந்து தேர் மலைக்கோட்டையை சுற்றி வந்து நிலையை வந்தடைந்தது.

    வருகிற 28-ந்தேதி மதியம் 12 மணிக்கு ஆற்றுக்கு வேல் புறப்படுதல், அன்று இரவு 8 மணிக்கு காவிரி ஆற்றில் இருந்து சப்பாணி கருப்பண்ணசாமியும், மதுரைவீரன் சுவாமியும் குதிரை வாகனத்தில் வீதிஉலா வருதல் நடைபெறும். பின்னர் அன்று இரவு 9 மணிக்கு அபிஷேகமும், சுத்த பூஜையும் நடை பெறும்.

    இதைதொடர்ந்து அன்று நள்ளிரவு 12 மணிக்கு குட்டி குடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வருகிற 29-ந்தேதி காலை 10 மணிக்கு பெரிய பூஜையும், பகல் 12 மணிக்கு அன்னதானமும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும், பக்தர்களும் செய்து வருகின்றனர்.
    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மேள தாளங்கள் முழங்க வாணவேடிக்கைகளுடன் அம்மன் தங்க கமல வாகனத்தில் சிறப்பு மலர் அலங்காரத்துடன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை பெருந்திருவிழா தேரோட்டம் முடிந்து 8-ம் நாள் அன்று சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி நேற்று இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. தேங்காய், பழக்கடை மற்றும் புஷ்பம் வியாபாரிகள் சங்கம் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியையொட்டி காலை 10 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து அம்மன் புறப்பாடாகி வசந்த மண்டபம் சென்றடைந்தார்.

    மாலை 3 மணிக்கு திருமஞ்சனமும் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இரவு 8 மணிக்கு மேள தாளங்கள் முழங்க வாணவேடிக்கைகளுடன் அம்மன் தங்க கமல வாகனத்தில் சிறப்பு மலர் அலங்காரத்துடன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    நிகழ்ச்சியில் விழாக்குழு தலைவர் எஸ்.ஆர்.மணிகண்டன், சிறுவடை வியாபாரிகள் சங்கத்தலைவர் சூறாவளி.பிச்சை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தலைமையில், மேலாளர் ஹரிஹர சுப்ரமணியன், மணியக்காரர் ரமணி மற்றும் கோவில் பணியாளர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர். 
    சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று காலை 10 மணிக்கு பல்லக்கில் அம்மன் எழுந்தருளி ஆஸ்தான மண்டபத்திற்கு சென்றடைந்தார். 8-ந் தேதி முதல் தினமும் காலையில் பல்லக்கிலும், இரவில் பல்வேறு வாகனங்களிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    14-ந்தேதி காலை பல்லக்கிலும், இரவு மரக்குதிரை வாகனத்திலும் எழுந்தருளினார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 16-ந்தேதி நடைபெற்றது. கடந்த 17-ந்தேதி இரவு வெள்ளி காமதேனு வாகனத்திலும், 18-ந்தேதி, முத்துபல்லக்கிலும் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    நேற்று தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி மதியம் 12 மணிக்கு அம்மன் பல்லக்கில் எழுந்தருளி ஆஸ்தான மண்டபத்துக்கு சென்றடைந்தார். பின்னர் மாலை 5 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அம்மன் எழுந்தருளினார்.

    அப்போது மேள, தாளங்கள் முழங்க, வாணவேடிக்கைகளுடன் அம்மன் தெப்பத்தை 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தெப்ப உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். பின்னர் வழிநடை உபயம் கண்டருளி அம்மன் மூலஸ்தானம் சென்றடைந்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தலைமையில் மேலாளர் ஹரிஹர சுப்ரமணியன், மணியக்காரர் ரமணி மற்றும் கோவில் பணியாளர்கள், ஊழியர்கள் செய்து இருந்தனர். 
    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் குங்கும மேனியாய் காட்சியளிக்கும் அம்மன் வைரக் கம்மல், வைர மூக்குத்தி அணிந்திருப்பார்.
    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களுள் தைப்பூசம், பூச்சொரிதல், சித்திரை தேரோட்டம், தெப்ப உற்சவம், பஞ்சபிரகார விழா ஆகியவை குறிப்பிடத்தக்கதாகும். இங்குள்ள அம்மனின் தலைக்குமேல் 5 தலை நாகம் போன்ற அமைப்பிருக்கும். குங்கும மேனியாய் காட்சியளிக்கும் அம்மன் வைரக் கம்மல், வைர மூக்குத்தி அணிந்திருப்பார்.

    8 கைகளுடன் அம்மன் வீற்றிருப்பார். விஜயநகர அரசன் போருக்கு புறப்பட்டு செல்லும்போது சமயபுரம் மாரியம்மனிடம் போரில் தான் வெற்றி பெற்றால் தனியாக ஒரு கோவிலை கட்டுவதாக வேண்டிக்கொண்டான். போரில் வெற்றி பெற்றவுடன் கோவிலை கட்டியதாக கூறப்படுகிறது. மாரியம்மன் வீற்றிக்கும் இப்பகுதியை சமயபுரம், கண்ணனூர், கண்ணபுரம் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.

    ஆதிமாரியம்மனாக விளங்கும் அம்மன் இனாம்சமயபுரத்தில் எழுந்தருளியுள்ளார். இக்கோவிலின் தலவிருட்சம் வேப்பமரம் ஆகும். ஒரு காலத்தில் அம்மனை தரிசிக்க வரும் பக்தர்கள் வேப்பமரத்தையும் சுற்றி வந்து வணங்கி செல்வார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உள்ள அனைவருக்கும் அம்மை நோய் கண்டால் அம்மனின் தீர்த்தத்தை உடலில் தெளித்தால் அது மறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
    தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் முதன்மையான சமயபுரம் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நாளை செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
    தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் முதன்மையானது சமயபுரம் மாரியம்மன் கோவில். இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்து வருகிறது. தினமும் இரவில் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    சித்திரை திருவிழாவின் பத்தாம் நாளான நாளை (செவ்வாய்க்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. நாளை காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் அம்மன் திருத்தேரில் எழுந்தருளியதும் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. முக்கிய வீதிகளில் தேர் வலம் வரும். இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் விரிவான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இரவு 9 மணிக்கு மேல் அம்மன் தேரில் இருந்து புறப்பாடாகி மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    சமயபுரம் மாரியம்மன் கோவில் தேரோட்டத்தையொட்டி திருச்சியில் இன்று (திங்கட்கிழமை) மதியம் 12 மணி முதல் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 3 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டு உள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    * திருச்சியில் இருந்து சேலம் செல்லும் அனைத்து பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் குடமுருட்டி பாலம், ஜீயபுரம், பெட்டவாத்தலை, குளித்தலை, முசிறி, தொட்டியம், நாமக்கல் வழியாக செல்லவேண்டும். சேலம், நாமக்கல் பகுதியில் இருந்து திருச்சிக்கு வரும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்களும் இதே வழியில் வரவேண்டும்.

    * திண்டுக்கல் பகுதியில் இருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் மணப்பாறையில் இருந்து ஆண்டவர் கோவில் சோதனைச்சாவடி, குளித்தலை, முசிறி பெரியார் பாலம், துறையூர், பெரம்பலூர் பைபாஸ் சாலை வழியாக செல்லவேண்டும்.

    * மதுரை மார்க்கத்தில் இருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் லஞ்சமேடு கைகாட்டி, மணப்பாறை, ஆண்டவர் கோவில் சோதனை சாவடி, குளித்தலை, முசிறி பெரியார் பாலம், துறையூர், பெரம்பலூர் பைபாஸ் சாலை வழியாக செல்லவேண்டும்.

    * திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை பகுதிகளில் இருந்து சென்னை செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் கொள்ளிடம் ‘ஒய்’ ரோடு சந்திப்பு, கொள்ளிடம் ரவுண்டானா, நொச்சியம், மண்ணச்சநல்லூர், அய்யம்பாளையம், எதுமலை ஜங்ஷன், திருப்பட்டூர் கட் ரோடு, சிறுகனூர் ஜங்ஷன் வழியாக சென்னை சாலையை அடைய வேண்டும்.

    * சென்னையில் இருந்து வரும் அனைத்து கனரக வாகனங்களும் பெரம்பலூர், அரியலூர், புள்ளம்பாடி, லால்குடி, கொள்ளிடம் ரவுண்டானா, கொள்ளிடம் புதுப்பாலம் வழியாக திருச்சிக்கு வரவேண்டும். சென்னை சாலையில் இருந்து வரும் அனைத்து கனரக வாகனங்களும் தச்சங்குறிச்சி, குமுளூர், பூவாளூர் ஜங்ஷன், லால்குடி ஜங்ஷன், கொள்ளிடம் ரவுண்டானா, கொள்ளிடம் புதுப்பாலம் வழியாக திருச்சியை அடையவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    பிரசித்தி பெற்ற சக்தி தலமான புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு பக்தர்கள் 1,000 பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
    தஞ்சை புன்னைநல்லூரில் பிரசித்தி பெற்ற சக்தி தலமாக மாரியம்மன் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலுக்கு தஞ்சை சிவகங்கை பூங்கா அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்கத்தில் இருந்து 1,000 பால்குட ஊர்வலம் நேற்று காலை புறப்பட்டது. நாதஸ்வர இசையுடனும், வாண வேடிக்கையுடனும், வேத கோஷங்களுடன் புறப்பட்ட இந்த பால்குட ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலை சென்றடைந்தது.

    அங்கு 4 ஆயிரம் லிட்டர் பாலினால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அன்னதானம் நடைபெற்றது. மாலையில் வாணவேடிக்கையுடன் அம்மன் புறப்பாடு நடைபெற்றது.

    இதற்கான ஏற்பாடுகளை பிராமணாள் கைங்கர்ய டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
    லால்குடி அருகே உள்ள அன்பில் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான லால்குடி அருகே உள்ள அன்பில் மாரியம்மன் கோவில் பங்குனி தேரோட்டத்தையொட்டி கடந்த மாதம் 17-ந் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. அன்று முதல் மாரியம்மன் உலக மக்கள் நலனுக்காக 15 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பார் என்பது ஐதீகம். இந்த நாட்களில் அம்மனுக்கு அரிசி, துள்ளுமாவு, இளநீர் மட்டுமே நிவேதனம் செய்யப்படுகிறது.

    கடந்த மாதம் 31-ந் தேதி பங்குனி தேரோட்டத்திற்கான கொடியேற்றம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து தொடர்ந்து 10 நாட்கள் அம்மன் கமலம், சிம்மம், காமதேனு, மயில், ரிஷபம், கண்ணாடி பல்லக்கு, அன்னம் ஆகிய வாகனங்களில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று பங்குனி தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தேரோட்டத்தையொட்டி லால்குடி, அன்பில் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து பக்தர்கள் பலர் அலகு குத்தி, தீச்சட்டி ஏந்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். லால்குடியில் இருந்து அன்பில் வரை ஆங்காங்கே பக்தர்கள், பொதுமக்களுக்கு அன்னதானம், நீர்மோர், பானகம் வழங்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர். லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 
    சமயபுரம் மாரியம்மன் உலக நன்மைக்காகவும், தம் பிள்ளைகளாகிய உலக மக்களுக்காகவும் ஒவ்வொரு வருடமும் பச்சைப்பட்டினி விரதம் மேற்கொள்கிறாள்.
    தாயிற்காக விரதம் இருக்கும் பிள்ளைகள் உண்டு. சாமிக்காக விரதமிருக்கும் பக்தன் உண்டு. பிள்ளைகள் நலனுக்காக பட்டினி இருக்கும் தாய் எங்கேனும் உண்டா?, பக்தனின் நலனுக்காக விரதம் இருக்கும் சாமி எங்கேனும் உண்டா? உண்டு. அதுதான் நம்ம சமயபுரத்து மாரியம்மன். தமிழகத்தில் உள்ள மாரியம்மன் தலங்களில் தலைமை தலமாகவும், அம்மன் சுயம்புவாக தோன்றிய தலமுமாக திகழ்வது சமயபுரம் மாரியம்மன் கோயில்.

    இது, திருச்சிக்கு வடக்கே ஓடும் காவிரியின் வட கரையிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடைபெறும் ஒவ்வொரு வைபவங்களும் மனித வாழ்க்கையில் கடைபிடிக்கப்படும் சடங்குகள். உறவுகளிடையே பந்த பாச பிணைப்பை ஏற்படுத்தும் உயிர்ப்புள்ள வைபவங்கள். அண்ணன், தங்கை உறவின் உன்னத மாண்பே, மணமுடித்துக் கொடுத்த பின், அவளுக்கு அன்னைக்கு அன்னையாய், தந்தைக்கு தந்தையாய் திகழ்வது அவளது அண்ணன் உறவு தான். அதனால் தான் தாயை விட பத்து மடங்கு உயர்வானது தாய்மாமன் உறவு என்று முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.

    அந்த உறவின் ஆழத்தை புரிய வைக்கும் வைபவமாக தை மாதம் பொங்கல் சீர், சித்திரை சீர், கார்த்திகை சீர் வழங்கப்படுவதுண்டு. அதை மெய்ப்பிக்கும் வகையில் சமயபுரத்தாளுக்கு, அண்ணன் ஸ்ரீரங்கநாதர் தை மாதம் சீர் கொடுக்கும் வைபவம் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது.

    உலக நன்மைக்காகவும், தம் பிள்ளைகளாகிய உலக மக்களுக்காகவும் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் கடைசி ஞாயிறு அன்று பச்சைப்பட்டினி விரதம் மேற்கொள்கிறாள்.

    அன்றிலிருந்து 28 நாட்கள் விரதம் மேற்கொள்ளும் சமயபுரத்தாள் பங்குனி மாதம் கடைசி ஞாயிற்றுக் கிழமை தனது விரதத்தை முடிக்கிறாள். விரத நாட்களில் அம்மனுக்கு உரலில் இடிக்கப்பட்ட பச்சரிசி மாவு, வெல்லம், திராட்சை, ஆரஞ்சு, இளநீர் பானகம் போன்றவை மட்டுமே நிவேதிக்கப்படுகிறது. விரதம் முடிவுறும் நாளில் ஆத்தா சமயபுரத்தாளின் அக்காவாக கருதப்படும் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயிலில் இருந்து அபிஷேக திரவியங்கள், பட்டு வஸ்திரம், மாலை, சந்தனம், தாம்பூலம் ஆகியவற்றுடன் தயிர் சாதம், காய்கறி கூட்டு ஆகியவை தங்கை சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு கொண்டு செல்லப்படும்.

    அன்றைய தினம் மாலை 7 மணியளவில் திருவானைக்காவலில் இருந்து தளிகை மற்றும் அபிஷேக திரவியங்கள், மாலைகள், வஸ்திரங்களை யானை மீது எடுத்துக்கொண்டு மேளதாளங்கள் முழங்க இரவு 9 மணியளவில் சமயபுரம் வருவார்கள். சமயபுரம் மாரியம்மன் கோயிலுள்ளோர் மாலை அணிவித்து வரவேற்பார்கள்.

    திருவானைக்காவல் கோயிலிலிருந்து கொண்டு வரப்பட்ட அபிஷேக பொருட்களால் சமயபுரம் மாரியம்மனுக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறும். பின்னர் தளிகை நிவேதத்துடன் தனது பச்சைப்பட்டினி விரதத்தை சமயபுரத்தாள் நிறைவு செய்வார். அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் வேண்டிக்கொண்டு குணமடைவது மிகவும் பிரசித்தி பெற்றது. இத்தலத்திலேயே குறிப்பிட்ட நாட்கள் தங்கி அங்கு கோயிலில் வேலை செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்றுபவர்களும் உண்டு.
    சமயபுரம் மாரியம்மன் கோவிலின் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    சமயபுரம் மாரியம்மன் கோவிலின் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 7.10 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் கொடி மரத்தின் முன்பு எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் 7.40 மணிக்கு அம்மன் படம் பொறிக்கப்பட்ட கொடி, தங்க கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.

    நிகழ்ச்சியில் சமயபுரம், வே.துறையூர், மருதூர், மாகாளிகுடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த முக்கியஸ்தர்களும், முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் துரை.ராஜசேகரன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் நேற்று இரவு 7 மணிக்கு அம்மன் கேடயத்தில் புறப்பாடாகி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 16-ந் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. 17-ந் தேதி காலை 10 மணிக்கு பல்லக்கில் அம்மன் புறப்பாடாகி ஆஸ்தான மண்டபம் சென்றடைகிறார். இரவு 8 மணிக்கு வெள்ளி காமதேனு வாகனத்தில் புறப்பாடாகி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    18-ந் தேதி காலை பல்லக்கிலும், இரவு 8 மணிக்கு முத்து பல்லக்கிலும் அம்மன் புறப்பாடாகிறார். 19-ந் தேதி காலை 12 மணிக்கு அம்மன் பல்லக்கில் புறப்பாடாகி ஆஸ்தான மண்டபம் சென்றடைகிறார். மாலை 5 மணிக்கு அபிஷேகம் முடிந்த பிறகு இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது.
    ×