search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 100067"

    தஞ்சை அருகே புன்னைநல்லூரில் அமைந்து உள்ள மாரியம்மன் கோவிலில் தெப்ப மகோற்சவ விழாவையொட்டி நேற்று விடையாற்றி உற்சவம் நடைபெற்றது.
    தஞ்சை அருகே புன்னைநல்லூரில் அமைந்து உள்ள மாரியம்மன் கோவிலில் தெப்ப மகோற்சவ விழாவையொட்டி நேற்று விடையாற்றி உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி மாரியம்மன் ரத்தின அங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் கோவிலில் தனி சன்னதியில் அருள்பாலித்து வரும் துர்க்கை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர். 
    சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுரத்தின் 5-ம் நிலைக்கு சாரம் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
    சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்றன. இதில் கோவிலின் முன்பகுதியான கிழக்கு பக்கத்தில் ராஜகோபுரம் கட்டுவதற்காக கோவில் நிதி ரூ.2½ கோடியில் சுமார் 30 அடி உயரத்தில் கல்காரம் கட்டும் பணி நடைபெற்று முடிந்தது. ராஜகோபுரம் கட்டும் பணி மேலும் காலதாமதம் ஆகும் என்பதால் முதல் கட்டமாக வடக்கு, தெற்கு, மேற்கு போன்ற பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட கோபுரங்களுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதையடுத்து ராஜகோபுரம் கட்டி கும்பாபிஷேகம் நடத்த வேண்டுமென்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இந்நிலையில் பரமத்தி வேலூரை சேர்ந்த பொன்னர்சங்கர் என்ற உபயதாரர் ராஜகோபுரம் கட்டித்தர முன் வந்தார். இதைத்தொடர்ந்து திட்ட மதிப்பீடு செய்து ரூ.2½ கோடி செலவில் 73 அடி உயரத்தில் 7 நிலைகளை கொண்ட ராஜகோபுரம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதற்காக சுமார் 40 பணி யாளர்கள் சமயபுரத்திலேயே தங்கியிருந்து கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ராஜகோபுரத்தின் நான்காம் நிலை கட்டுமான பணி நிறைவு பெற்றது. இதைத்தொடர்ந்து 5-ம் நிலை கட்டுவதற்காக சுமார் 76 அடி உயரத்தில் 20 அடி நீளம் உள்ள சவுக்கு கட்டைகளால் சாரம் அமைக்கும் பணியில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த பணி முடிந்தவுடன் கட்டுமான பணி தொடங்குகிறது. 
    சமயபுரத்தில் வீற்றிருக்கும் மாரியம்மன், சுகாசினியாகக் காட்சி தருகிறாள். தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் படம் விரித்த நிலையில் இருக்கிறது.
    சமயபுரம் மாரியம்மன் ஆலயத்தைப் பற்றி சில தகவல்களை அறிந்து கொள்வோம்.

    வசுதேவர்-தேவகி தம்பதியரின் 8-வது குழந்தையாக கிருஷ்ணர் பிறந்தார். அவரை நந்தகோபர்- யசோதையிடம் வைத்து விட்டு, அங்கிருந்த பெண் குழந்தையை இங்கே கொண்டு வந்தார் வசுதேவர். அந்தக் குழந்தையை கம்சன் கொல்ல முயன்றபோது, அது வானில் பறந்து மறைந்தது. அந்தக் குழந்தையே சமயபுரம் மாரியம்மன் என்கிறது தலவரலாறு.

    இங்கு வீற்றிருக்கும் மாரியம்மன், சுகாசினியாகக் காட்சி தருகிறாள். தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் படம் விரித்த நிலையில் இருக்கிறது. நெற்றி நிறைய திருநீறு, குங்குமம் அணிந்துள்ளாள்.

    அன்னை இடது காலை மடித்து, வலது காலை தொங்க விட்டு அமர்ந்துள்ளாள். பாதத்தில் மூன்று அசுரர்கள் தலை காணப்படுகின்றன. இவை ஆணவம், கன்மம், மாயைக் குறிக்கின்றன.

    எட்டுத் திருக்கரங்களில் முறையே கத்தி, கபாலம், சூலம், மணிமாலை, வில், அம்பு, உடுக்கை, பாசம் ஆகியவற்றை ஏந்தியுள்ளாள். ஜொலிக்கும் தோடுகள், மூக்குத்தி அணிந்துள்ளாள்.

    இங்கு ஒரே சன்னிதியில் மூன்று விநாயகர்கள் அருள் புரிகிறார்கள். அம்மனின் உக்கிரத்தை தணிக்க காஞ்சி பெரியவரிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. அவர் கூறியபடி ஆலயத்திற்கு வலதுபுறம் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி வடிவம் கொண்ட மூன்று விநாயகர்களை பிரதிஷ்டை செய்தனர். அதன் மூலம் அம்மனின் மூல விக்கிரகத்தில் இருந்த கோரை பற்கள் அகற்றப்பட்டு, சாந்த சொரூபியாக அன்னை மாற்றப்பட்டாள்.

    அம்மனின் கருவறை விமானம் தங்கத் தகடுகளால் வேயப்பட்டது. தங்கத்தின் எடை 71 கிலோ 127 கிராம். செம்பின் எடை 3 கிலோ 288 கிராம். இதன் மொத்த மதிப்பு சுமார் ஏழு கோடி ரூபாய்.

    ரூபாய் 20 லட்சம் செலவில் தங்க ரதம் நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளது. காணிக்கையாக ரூ.700 கட்டினால், தங்க ரதத்தை இழுக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

    சமயபுரம் மாரியம்மனை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பாலாலயம் செய்து, பின்னர் ஆலய பீடத்தில் மீண்டும் அமர்த்துகிறார்கள்.

    பக்தர்கள் அம்பாளை வேண்டி விரதம் இருப்பது நடைமுறை. ஆனால், இங்கு பக்தர்களுக்காக அம்மனே விரதம் இருக்கிறாள். இது ‘பச்சைப் பட்டினி விரதம்’ எனப்படுகிறது. மாசி மாதக் கடைசி ஞாயிற்றுக்கிழமை இந்த விரதம் தொடங்குகிறது. விரத காலமான மாசி முதல் பங்குனி கடைசி ஞாயிறு வரை 27 நாட்களும் அம்பாளுக்கு ஒரு வேளை மட்டுமே நைவேத்தியம் செய்யப்படும். சாயரட்சை பூஜையின் போது இளநீர், மோர், பானகம், துள்ளு மாவு (பச்சை அரிசி மாவு + நாட்டுச் சர்க்கரை), வெள்ளரிப் பிஞ்சு ஆகியவையே அந்த நைவேத்தியம்.

    சமயபுரத்தாள் கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கிழக்கு - மேற்காக சுமார் 280 அடி நீளத்துடனும், தெற்கு - வடக்காக 150 அடி அகலத்துடனும் ஆலயம் அமைந்துள்ளது.

    சமயபுரத்தாள் விக்கிரகம் மூலிகைகளால் ஆனது. எனவே இதற்கு அபிஷேகம் கிடையாது. உற்சவர் அம்மனுக்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறும். கருவறையின் பின்புறம் அம்மனின் பாதங்கள் உள்ளன.

    கொள்ளிடம் தான் அண்ணன் ஸ்ரீரங்கநாதரையும், தங்கை சமயபுரத்தாளையும் பிரிக்கிறது. தைப்பூசத்தின் போது அம்மன், கொள்ளிடக் கரையின் தென் பகுதியில் நீராட வருவாள். அன்று ஸ்ரீரங்கம் பெருமாள் ஆலயத்திலிருந்து பட்டுப் புடவைகள், மாலைகள், தளிகைகள் ‘மகமாயி’க்கு சீராக அனுப்பி வைக்கும் வழக்கம் இருக்கிறது. இதை ‘தீர்த்தவாரி விழா’ என்பார்கள். 
    பழனி மாரியம்மன் கோவிலுக்கு ரூ.18 லட்சத்தில் வடிவமைக்கப்பட்ட தேர் நாளை மறுநாள் ரதவீதிகளில் வெள்ளோட்டம் நடக்கிறது.
    பழனி முருகன் கோவிலின் உபகோவிலாக மாரியம்மன் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் மாசி மாதத்தில் திருவிழா நடத்தப்படும். அப்போது ரதவீதிகளில் தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெறும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான தேரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து தைப்பூசத்திருவிழாவுக்கு பயன்படுத்தும் தேரையே மாசி மாத திருவிழாவுக்கும் கோவில் நிர்வாகிகள் பயன்படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் மாரியம்மன் கோவிலுக்கு என்று புதிதாக தேர் செய்ய கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதையடுத்து ரூ.18 லட்சத்தில் தேர் வடிவமைக்கும் பணி கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கியது. இழுப்பை, வாகை மரங்களை பயன்படுத்தி தேரை வடிவமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு தேர் வடிவமைப்பு பணி நிறைவடைந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகிகளிடம் கேட்ட போது, புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள தேர் 36 அடி உயரம் கொண்டது ஆகும். தேர் வெள்ளோட்டம் பார்க்கும் நிகழ்ச்சி நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடக்கிறது.

    முன்னதாக புதிய தேருக்கான சிறப்பு பூஜை, தேர் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி உள்ளிட்டவைகள் மேற்கொள்ளப்படும். அதன் பின்னர் நாளை மறுநாள் காலை 10.20 மணிக்கு மேல் தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சி நடைபெறும். அப்போது ரதவீதிகளில் தேர் சிரமம் இன்றி வலம் வருகிறதா? என்று சோதனை நடத்தப்படும் என்றனர்.

    பிரம்மோற்சவத்தையொட்டி சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் செடல் மற்றும் தீமிதி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    சிதம்பரத்தில் பிரசித்திபெற்ற கீழத்தெரு மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் பிரம்மோற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் கடந்த 20-ந் தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனை தொடர்ந்து தினமும் கீழத்தெரு மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான செடல் உற்சவம் மற்றும் தீமிதி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு மாரியம்மனுக்கு பால், தயிர், தேன், இளநீர், குங்குமம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் கீழத்தெரு மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனை தொடர்ந்து பக்தர்கள் மாவிளக்கு எடுத்தும், அங்கபிரதட்சணம் செய்தும், பால்காவடி எடுத்தும், பாடை பிரார்த்தனை செய்தும், அக்னி சட்டி எடுத்தும் மாரியம்மனை வழிபட்டனர்.



    சிதம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து உடலில் அலகு குத்தி பக்தர்கள், பறக்கும் காவடி எடுத்து கோவிலுக்கு வந்து மாரியம்மனை வழிபட்டனர். இதையடுத்து கோவில் முன்பு தீக்குண்டம் அமைக்கப்பட்டது. பாலமான் வாய்க்காலில் இருந்து சக்தி கரகம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் கரகம் எடுத்து வந்த பக்தர் முதலில் தீக்குண்டத்தில் இறங்கினார். இதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் பிரேமாவீராசாமி, பரம்பரை அறங்காவலர் ஸ்தானிகர் கலியமூர்த்தி பிள்ளை மற்றும் கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் செய்திருந்தனர். விழாவையொட்டி எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் தலைமையிலான 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் செடல் மற்றும் தீமிதி நிகழ்ச்சியையொட்டி சிதம்பரம் நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அதாவது சிதம்பரம் பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. மாறாக வெளியூர்களில் இருந்து வந்த அனைத்து பஸ்களும் கீழவீதி, தெற்கு வீதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்து வெளியூர்களுக்கு புறப்பட்டு சென்றன. 
    தா.பேட்டையை அடுத்த கரிகாலி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில், சந்தன காப்பு மற்றும் சாக்லெட் அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
    தா.பேட்டையை அடுத்த கரிகாலி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில், நேற்று அமாவாசையை முன்னிட்டு மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதை முன்னிட்டு மாரியம்மனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து சந்தன காப்பு மற்றும் சாக்லெட் அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். 
    மணப்பாறை அருகே நடைபெற்ற சின்னமாரியம்மன் கோவில் திருவிழாவில் மாறுவேடமிட்ட இளைஞர்கள் விளக்குமாறால் அடித்துக் கொண்டனர்.
    மணப்பாறையை அடுத்த உசிலம்பட்டி அருகே ராயம்பட்டியில் சின்னமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நடைபெறும். இதேபோல் இந்த ஆண்டு திருவிழா கடந்த 10-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. பின்னர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டகப்படிதாரர்களின் சார்பில் சிறப்பு வழிபாடுகளும், நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான பால் குடம் எடுத்தல், படுகளம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் திங்கட்கிழமை காலையில் தொடங்கின. இதில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். பின்னர் கிடா வெட்டுதல் நடைபெற்றது. மாலையில் கல்குத்தி எனும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    சிறப்பு வழிபாடுகளுக்கு பின்னர் ஆட்டின் தலையை வெட்டினர். கோவில் அருகே தாரை தப்பட்டைகள் முழங்க ஆட்டின் தலையை மேலே தூக்கி வீசினர். அதனை இளைஞர்கள் கையில் வைத்திருந்த ஈட்டியால் கீழே விழாமல் குத்திப் பிடித்து, மேலே வீசினர். இவ்வாறு செய்தபடி கோவிலுக்கு வந்தனர். கோவிலை வந்தடைந்ததும் கோவிலை சுற்றி வந்த பின் ஆட்டின் தலை கோவில் அருகே ஓரிடத்தில் புதைக்கப்பட்டது.

    பின்னர் நடைபெற்ற படுகளம் திருவிழாவில் இளைஞர்கள் மாறுவேடமிட்டு ஆடிப்பாடி அசத்தினர். திருவிழாவில் கலந்து கொண்டவர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக சில இளைஞர்கள் கணவன் - மனைவி போல் வேடமணிந்து வந்து, விளக்குமாறால் அடித்துக் கொண்டு நடத்திய நிகழ்ச்சி பக்தர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. இதைத்தொடர்ந்து நேற்று மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெற்றது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். இந்த திருவிழாவில் திரளானோர் கலந்து கொண்டனர். 
    கும்பகோணம்-திருவாரூர் வழிப்பாதையில் 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருநறையூர். இத்தலத்தில் திருச்சி சமயபுரம் மாரியம்மன், தனது திருவுருவ வடிவில் இல்லாமல் அரூபமாக ஒளிவடிவில் அருள்பாலிக்கிறாள்.
    கும்பகோணம்-திருவாரூர் வழிப்பாதையில் 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருநறையூர். இத்தலத்தில் திருச்சி சமயபுரம் மாரியம்மன், தனது திருவுருவ வடிவில் இல்லாமல் அரூபமாக ஒளிவடிவில் அருள்பாலிக்கிறாள். இங்கு சமயபுரத்தாளை ‘ஆகாச மாரியம்மன்’ என்று அழைக்கிறார்கள். சமயபுரத்தாள் எப்படி ஆகாச மாரியம்மனாக, திருநறையூர் வந்தாள் என்பதைக் கூறும் கதை ஒன்று உள்ளது. அது சுமார் 650 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாகக் கூறப்படுகிறது.

    கும்பகோணம் அருகில் உள்ள நாச்சியார்கோவில் எனும் திருநறையூர் பகுதியில் உள்ள வளையல் விற்கும் ஒரு வாணிபக் குழுவினர் இருந்தனர். அவர்கள் ஒரு நாள் இரவு, திருச்சி சமயபுரத்தில் தங்கள் வளையல் வியாபாரத்தை முடித்து, சமயபுரம் மாரியம்மனை தரிசித்து விட்டு, பிறகு அங்கேயே தங்கி இருந்தனர். அன்று இரவில் அந்த வளையல் விற்கும் குழுவில் இருந்த பெரியவர் ஒருவரின் கனவில் கன்னிப்பெண் வடிவில் வந்தாள் சமயபுரம் மாரியம்மன்.

    தூக்கத்தில் இருந்த பெரியவரை தட்டி எழுப்பிய அந்தப்பெண் தமக்கு வளையல் போட்டுவிடும்படி கூறி, தமது திருக்கரங்களை பெரியவர் முன்பு நீட்டினாள். அப்பெண்ணின் தெய்வீக முக ஒளியின் தாக்கத்தால் கவரப்பட்ட அந்த பெரியவரும், உடனே தமது வளையல் பொதியை பிரித்து விரித்து, ஒவ்வொரு வளையலாக அப்பெண்ணின் கைகளில் மாட்டி விட்டார். ஆனால் அந்த வளையல்களில் ஒன்றுகூட பொருந்தாமல் அனைத்தும் உடைந்து போயின. உடனே அந்தப் பெண் மறைந்து போனாள்.

    இதையடுத்து கனவு கலைந்து எழுந்த பெரியவர், கனவில் கண்டது போலவே பொதி மூட்டை பிரிக்கப்பட்டு, வளையல்கள் அனைத்தும் உடைந்து கிடப்பதைக் கண்டு ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தார். அதோடு அவரோடு வந்திருந்த அத்தனை பேருக்கும் உடம்பில் அம்மை முத்துக்கள் வந்திருந்தன. திகைப்புற்று நின்ற பெரியவரின் கண்களில் நேற்று இரவில் கனவில் வந்து தம்மிடம் வளையல் மாட்டிவிடச் சொன்ன அந்தப் பெண்ணின் முகம் வந்துபோனது.

    ‘வந்தது யார்?’ என்று பெரியவர் குழம்பி இருந்த அதே வேளையில், அவர் முன்பாக சமயபுரம் மாரியம்மன் கோவில் பூசாரி, கையில் பெரிய தாம்பாளத்துடன் நின்றிருந்தார். அவர் பெரியவரைப் பார்த்து, ‘அய்யா! இன்று அதிகாலை என் கனவில் வந்த சமயபுரத்தாள், உங்கள் இருப்பிடத்தையும், அடையாளங்களையும் சொல்லி, தம்முடைய தங்க நகைகள் சிலவற்றைக் குறிப்பிட்டு அதனை உங்களிடம் கொடுக்கச் சொன்னாள். அன்னை உங்களின் வளையல்கள் அனைத்தையும் உடைந்து போகத் செய்ததாகவும் கூறினாள். தாம் வந்து போனதற்கு அடையாளமாக உங்கள் குழுவினருக்கு அம்மை முத்துக்கள் பதித்ததாகவும் தெரிவித்தாள். தவிர அவர்களின் அம்மை நோய் நீங்க தமது விபூதியையும், உடைந்து போன வளையல்களுக்கு ஈடாக அன்னையின் தங்க நகைகளையும் உங்களிடம் ஒப்படைத்து வர என்னை இங்கு அனுப்பி வைத்துள்ளாள்’ என்றார்.

    தொடர்ந்து கோவில் அர்ச்சகர், அங்கிருந்த அனை வருக்கும் சமயபுரத்தாளின் விபூதியைக் கொடுக்க அனைவரின் அம்மை நோயும் அகன்றது. அனைவரும் சமயபுரத்தாளின் ஆலயம் நோக்கி வான் பார்த்து தொழுதனர். அப்போது வானில் சமயபுரம் மாரியம்மன் தோன்றி, ‘உங்கள் பக்தியால் உங்களுடன் சிறிது விளையாடி உங்களை ஆட்கொள்ளவே யாம் வந்தோம்' என்று கூற, உடனே அங்கிருந்த வளையல் விற்கும் குழுவினர் அனைவரும், ‘மகமாயி! எங்களுக்கு இங்கு கிடைத்த இந்த பெரும்பேறு, எங்கள் சந்ததிகளுக்கும், உலகத்தவருக்கும் வரும் காலத்தில் கிடைக்க வேண்டும். அதுமட்டுமல்ல எங்கள் ஊரான திருநறையூர் நாச்சியார்கோவிலிலும் தாங்கள் எழுந்தருளி, எங்களை எப்போதும் காத்துநிற்க வேண்டும்' என்று இறைஞ்சினர்.

    அவர்களின் அன்புக்கு கட்டுப்பட்ட அன்னை சமய புரத்தாள், ‘ஆண்டு தோறும் வைகாசி மாதம் அமாவாசைக்கு அடுத்து வரும் வெள்ளிக்கிழமை முதல் தொடர்ந்து 13 நாட்கள், சமயபுரத்தில் இருந்து ஆகாய வழியாக யாம் எழுந்தருளி, உங்களது ஊருக்கு வடக் கிலுள்ள அரசலாற்றில் எலுமிச்சைப் பழமாக வந்து இருப்பேன். அப்பழத்தினைக் குடத்தில் இட்டுத் தண்ணீருடன் எடுத்துச்சென்று பத்து நாட்கள் விழா நடத்துங்கள். அந்த நாட்களில் உங்கள் ஊரான திருநறையூர் நாச்சியார்கோவிலில் யாம் இருப்போம். 14-ம் நாள் அங்கிருந்து மீண்டும் சமயபுரம் வந்திருந்து அருள்வேன்' என்று அருளினாள்.

    அன்று முதல் இன்று வரை சமயபுரம் மாரியம்மன் ஆண்டு தோறும் வைகாசி மாதம் அமாவாசைக்கு அடுத்து வரும் வெள்ளிக்கிழமை முதல் தொடர்ந்து 13 நாட்கள் சமயபுரத்தில் இருந்து ஆகாய வழியாக நாச்சியார்கோயில் எழுந்தருளுதலும், பின்பு 14-ம் நாள் நாச்சியார்கோயிலில் பக்தர்கள் அன்னையை வழியனுப்பி வைக்க மீண்டும் சமயபுரத்தில் வந்தமர்ந்து அருளுவதாக ஐதீகம். சமயபுரத்தில் இருந்து அம்மன் ஆகாய மார்க்கமாக நாச்சியார்கோயிலுக்கு எழுந்தருளியதால் நாச்சியார்கோயிலில் சமயபுரத்தாளை ‘ஆகாச மாரியம்மன்’ என்று அழைக்கிறார்கள்.

    வைகாசி மாதம் திருவிழா சமயம் தவிர, மற்ற நாட்களில் இங்கு கருவறையில் அணையா ஜோதி வடிவிலேயே சமயபுரத்தாள் காட்சி கொடுத்து அருள்கிறாள். வைகாசி அமாவாசைக்கு அடுத்துவரும் வெள்ளிக் கிழமை அன்று தொடங்கி, தொடர்ந்து பதினான்கு நாட்கள் நடைபெறும் விழாவுக்காக சமயபுரம் மாரியம்மன் திருவுருவம் செய்து வழிபடுகிறார்கள். ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் அமாவாசைக்கு அடுத்து வரும் வெள்ளிக்கிழமை சமயபுரத்தில் இருந்து அம்மன் வருகையை ஒட்டி உற்சவம் ஆரம்பிக்கிறது. சமயபுரத்தில் இருந்து அம்மன் இங்கு வந்து தங்கும் நாட்களில் அம்மனுக்கு வளையல் காணிக்கையே பக்தர்கள் செய்கிறார்கள்.

    இங்கு வைகாசி பெருவிழா நாட்களில் அன்னைக்கு கண்ணாடி வளையல் சாத்தி வழிபட்டால் திருமணம், குழந்தைபாக்கியம், வேலைவாய்ப்பு, பதவி உயர்வு கிட்டும் என்பது நம்பிக்கை. உடல்நோய், மன நோய், பில்லி, சூன்யம் அகல்வதாக ஐதீகம். அம்பாளுக்கு வளையல் காணிக்கை செலுத்தி எந்த வேண்டு தலை வைத்தாலும், அது உடனடியாக நிறைவேறுகிறதாம்.

    வைகாசி அமாவாசைக்கு அடுத்துவரும் வெள்ளிக்கிழமை, அரசலாற்றில் எலுமிச்சைப் பழ வடிவில் சமயபுரம் மாரியம்மன் எழுந்தருளும் போது, ஒரு மந்திர ஒலி சத்தம் முதலில் தோன்றுமாம். பின்னர் அந்த ஒலி எழுந்த குறிப்பிட்ட இடத்தில் ஒரு எலுமிச்சைப் பழம் மிதந்துவருமாம். அந்த எலுமிச்சையில் உறைந்துதான் ஆகாய மார்க்கமாக சமயபுரம் மாரியம்மன் இங்கு எழுந்தருள்கிறாள். அதுசமயம் ஆலயத்தில் தர்ப்பையால் உருவாக்கப்பட்ட சமயபுரம் மாரியம்மனை வழிபடுகிறார்கள். விழாவின் கடைசி நாள் அன்று அம்மனுக்கு விடையாற்றிக் கொடுத்து, மீண்டும் சமயபுரம் மாரியம்மனை சமயபுரத்துக்கு வழி அனுப்புவதோடு அந்த ஆண்டுக்கான விழா நிறைவடைகின்றது.
    திருமணம் ஆன பெண்கள் தினமும் அல்லது செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மாரியம்மனுக்கு உகந்த இந்த தியான ஸ்லோகத்தை சொல்லி வந்தால் மங்களம் உண்டாகும்.
    தினமும் அல்லது செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மாரியம்மனுக்கு உகந்த இந்த தியான ஸ்லோகத்தை சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.

    ''அக்நிஜ்வாலாசிகாம் அக்னிநேத்ராம் அக்னிஸ்வரூபிணீம்
    கரண்ட மகுடோபேதாம் கதா டக்கா கராம்புஜாம்|
    வீராஸநாம் கபாலாஸி பாச ஹஸ்தாம் ரவிப்ரபாம்
    வந்தே தேவீம் மஹாமாரீம் நாகாபரணபூஷிதாம்.''
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழாவில் அம்மனுக்கு வைகையாற்றில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 21-ந்தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தினசரி அம்மன் புறப்பாடு நடந்தது. 9-ம் நாள் பால்குடம், அக்னிசட்டி, பூப்பல்லக்கும், 10-வதுநாள் பூக்குழி விழாவும், 16-ம்நாள் தேரோட்டம் நடைபெற்றது.

    நிறைவு நாளான நேற்றைய முன்தினம் மாலை 4.30 மணியளவில் திருவிழா கொடி இறக்கப்பட்டு மஞ்சள் நீராடுதல் நடந்தது. அம்மன் கேடயத்தில் எழுந்தருளி வைகை ஆற்றுக்குச் சென்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம் தொடங்கி அம்மனுக்கு வண்ண வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டு ஊஞ்சள்ஆடும் நிகழ்ச்சி விடிய விடிய நடந்தது.

    இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்தநிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் வைகையாற்றிலிருந்து அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதியில் பவனி வந்து கோவிலை வந்தடைந்தார். 
    அழகே வடிவான சமயபுரம் அன்னைக்கு ஐந்து தலைகள் கொண்ட நாகமானது படம் விரித்தபடி குடை பிடித்துக் கொண்டு தானும் பெருமை கொள்கிறது.
    விஜயநகர பேரரசரின் முயற்சியால் எழுப்பப்பட்ட சமயபுரம் கோயிலினுள் உயர்ந்து அமைந்துள்ள பீடம் ஒன்றில் அஷ்ட புஜ நாயகியாக அன்னை மாரியம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றாள். மாரியம்மனின் திருமுடி மீது இப்பூவுலகம் முழுமைக்கும் அருள் வழங்கிடும் வண்ணம் கிரீடம் ஒளி வீசிக் கொண்டிருக்கிறது.
    அன்னையின் திருநயனங்கள் அன்னையின் பேரருளைப் பொழிந்த வண்ணம் கருணையோடு தம் அடியார்களை நோக்கி உள்ளன.

    உயர்ந்த பீடத்தில் வீற்றிருக்கும் அன்னை மாரியம்மன் இந்த உலகத்தை காத்து வருகின்றாள். அன்னையின் எட்டு திருக்கரங்களில் முறையே கத்தி, கபாலம், சூலம், மணிமாலை, வில், அம்பு, உடுக்கை, பாசம் ஆகியவை அமைந்து உள்ளன. அழகே வடிவான அன்னைக்கு ஐந்து தலைகள் கொண்ட நாகமானது படம் விரித்தபடி குடை பிடித்துக் கொண்டு தானும் பெருமை கொள்கிறது. இவ்வாறு சமயபுரத்தாளின் திருஉருவம் அமைந்துள்ளது.

    மேலும் அன்னையின் திருவடிகளின் இடது பக்கத் திருவடி பீடத்தில் மடங்கியிருக்க வலது திருவடி ஐந்து அரக்கர்களின் தலைகளை மிதித்த வண்ணம் அமைந்துள்ளது.

    சமயபுரம் மாரியம்மனிடம் ஆழ்ந்த பக்தி கொண்டிருந்த சூர்ப்ப நாயக்கர் என்பவர் அம்மனின் திருவுருவத்திற்குப் பதிலாகப் புதிய திருவுருவம் ஒன்றை வார்த்துப் பிரதிஷ்டை செய்தார்.

    அம்மனின் அந்தப் புதுத் திருவுருவம் திருவிழா சமயத்தில் ஒன்பதாம் நாளன்று திரு உலாவாக எடுத்து வரப்படுகின்றது. அம்மனின் திருஉருவம், அருள்கருணை ததும்பும் திருவதனத்துடன் காட்சி தருகின்றது.

    இவ்வாறு வீற்றிருந்து சமயபுரம் தலத்தில் அருள் செய்திடும் இத்தாய்க்கு நம் உள்ளபூர்வ பக்தியைச் செலுத்தினால் அவள் மனம் கனிந்து நமக்கு திருவருள் செய்திடுவாள். அவள் பாதம் பணிந்தால் அவள் மனம் குளிர்ந்து போகும். இதனால் நம் மனம் உலக ஆசாபாசங்களில் இருந்து விடுபட்டு ஒருமுகப்படுத்தப்படும்.
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவின் 16-ம்நாளான நேற்று காவல்துறை குடும்பத்தினர் சார்பில் தேரோட்டம் நடைபெற்றது.
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவின் 16-ம்நாளான நேற்று காவல்துறை குடும்பத்தினர் சார்பில் தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு தேருக்கு வந்தார். அங்கு கிராம வழக்கப்படி வெள்ளை வீசுபவர்கள், கிராம காவலர்கள், தேருக்கு கட்டை போடும் ஆசாரிகள் ஆகியோரை மேளதாளத்துடன் அழைத்து வந்தனர்.

    அப்போது காவல்துறை குடும்பத்தினர் வரவேற்றனர். தொடர்ந்து கணேஷ் பட்டர் பூஜைகள் நடத்தினார். பின்னர் காலை 8.50 மணிக்கு கூடுதல் கண்காணிப்பாளர் நரசிம்மவர்மன், துணை கண்காணிப்பாளர் மோகன்குமார், தாசில்தார் பார்த்திபன், ஆய்வாளர் பாலாஜி, உதவி ஆய்வாளர்கள் சதீஷ்குமார், மாதவன் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    தேர் புறப்பட்டு கடைவீதி, தெற்குரதவீதி, மேலரதவீதி, வடக்குரதவீதி வழியாக வலம் வந்தது. அப்போது வழிநெடுக பக்தர்கள் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பானக்கம், நீர்மோர், கூழ் வழங்கினர் மேலும் சாக்லெட், மாம்பழம், வாழைப்பழம், விசிறி, காசுகள் ஆகியவற்றை சூறைவிட்டனர். தேர்நிலைக்கு வந்ததும், குழந்தைகள் பெரியவர்கள் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி தேரை வலம் வந்து கோவிலுக்குள் சென்றனர்.

    பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெண் காவலர்கள் பெண்களிடம் சேப்டி பின் கொடுத்து நகைகளை உடையில் மாட்டி கொள்ளும்படி கேட்டுக்கொண்டனர். 
    ×