search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறிசேனா"

    பயங்கரவாத தாக்குதல் குறித்து அதிபருக்கு முன்கூட்டியே தெரியும் என்று இலங்கை உளவுத்துறை தலைவர் கூறியதை சிறிசேனா மறுத்துள்ளார்.
    கொழும்பு:

    இலங்கையில் கடந்த மாதம் 21-ந் தேதி பயங்கரவாதிகள் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தினர். அதில், 253 பேர் பலியானார்கள்.

    இந்த தாக்குதல் குறித்த சதித்திட்டத்தை இலங்கை அரசுக்கு இந்திய உளவு அமைப்புகள் முன்கூட்டியே தெரிவித்தன. இருப்பினும், இலங்கை அரசு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த உளவுத்துறை தகவல் குறித்து தனக்கு முன்கூட்டியே தெரியாது என்று அதிபர் சிறிசேனாவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் தெரிவித்தனர்.

    இந்த தாக்குதலுக்கு வழிவகுத்த நிகழ்வுகள் மற்றும் தாக்குதலை தடுக்கத் தவறியதற்கு பொறுப்பானவர்கள் யார் என்பது பற்றி விசாரிக்க நாடாளுமன்ற விசாரணை குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவை சிறிசேனா கட்சியும், ராஜபக்சே கட்சியும் புறக்கணித்து வருகின்றன.

    இந்த குழு முன்பு, இலங்கை உளவுத்துறை தலைவர் சிசிறா மென்டிஸ் நேற்று முன்தினம் ஆஜராகி பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அவர் கூறியதாவது:-

    கடந்த ஏப்ரல் மாதம் 9-ந் தேதி, உளவுத்துறை ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது. அதில் அதிபர் சிறிசேனாவும் பங்கேற்றார். பயங்கரவாத தாக்குதல் குறித்த உளவு தகவல் பற்றி அக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தினோம்.



    அந்த தகவலை கூட்டத்தில் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இருப்பினும், அந்த தகவல் குறித்து போலீஸ் ஐ.ஜி.க்கு கடிதம் எழுதினேன். ‘முக்கியமான தகவல்‘ என்பதை குறிப்பதற்கான வாசகத்தையும் அதில் எழுதினேன்.

    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    ஆனால், உளவுத்துறை தலைவர் சிசிறா மென்டிஸ் கூறியதை அதிபர் சிறிசேனா நேற்று நிராகரித்தார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உளவுத்துறை ஒருங்கிணைப்பு கூட்டம் 2 மணி நேரமாக நடந்தது. ஆனால், பயங்கரவாத தாக்குதல் குறித்த உளவு தகவலை எந்த அதிகாரியும் தெரிவிக்கவில்லை. எனவே, தாக்குதல் குறித்து எனக்கு முன்கூட்டியே தெரியாது” என்று கூறியுள்ளார்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய இலங்கை அதிபர் சிறிசேனா நாளை திருப்பதி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #SriLanka #MaithripalaSirisena #TirumalaTemple
    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலங்கை அதிபர் சிறிசேனா 17-ந் தேதி சாமி தரிசனம் செய்கிறார். இதற்காக, தன் மனைவி ஜெயந்தி புஷ்பகுமரி மற்றும் குடும்ப உறுப்பினர்கள், அதிகாரிகளுடன் நாளை (செவ்வாய்க்கிழமை) மதியம் அவர் விமானம் மூலம் ஐதராபாத்துக்கு வந்து சேருகிறார். அங்கிருந்து மற்றொரு விமானம் மூலம் ரேணிகுண்டாவுக்கு வருகிறார்.

    அங்கிருந்து கார் மூலம் திருமலைக்கு செல்கிறார். திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் இரவு தங்குகிறார். 17-ந் தேதி அதிகாலையில் நடைபெறும் சுப்ரபாத பூஜையில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கிறார். பின்னர், சிறிசேனா பெங்களூரு புறப்பட்டு செல்கிறார்.

    இலங்கை அதிபர் ஆன பிறகு அவர் திருப்பதி கோவிலுக்கு வருவது, இது 3-வது தடவை ஆகும்.   #SriLanka #MaithripalaSirisena #TirumalaTemple 
    இலங்கையின் அதிபராகவும், பின்னர் பிரதமராகவும் இருந்த மகிந்த ராஜபக்சே இன்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் முதன்மையான எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். #Rajapaksa #Lankaopposition #oppositionleader
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமராக இருந்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கேவுக்கும், அதிபர் சிறிசேனாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த அக்டோபர் மாதம் 26-ந் தேதி பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் சிறிசேனா நீக்கினார். முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார். இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
     
    இதை சமாளிக்க பாராளுமன்றத்தை கலைத்து விட்டு புதிதாக தேர்தல் நடத்த சிறிசேனா உத்தரவிட்டார். அவரது நடவடிக்கை சட்ட விரோதமானது என்று கூறிய சுப்ரீம் கோர்ட்டு ராஜபக்சேவும், அவரது மந்திரி சபையும் செயல்பட தடை விதித்தது. நெருக்கடி அதிகரித்ததால் ராஜபக்சே நேற்று முன்தினம் பதவியில் இருந்து விலகினார்.

    இதையடுத்து ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக நேற்று பதவி ஏற்றார். அவருக்கு அதிபர் சிறிசேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    இந்த அரசியல் குழப்பங்களுக்கு பின்னர் முதல்முறையாக இன்று பாராளுமன்றம் கூடியது. அப்போது பாராளுமன்றத்தின் முதன்மையான எதிர்க்கட்சி தலைவராக ராஜபக்சே நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்தார்.

    கரு ஜெயசூர்யா

    இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் வகித்துவந்த இந்த பதவியில் ராஜபக்சே நியமிக்கப்பட்டதற்கு  தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி எம்.பி. சுமித்திரன் மற்றும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எம்.பி. ரவூப் ஹக்கீம் ஆகியோர் அவையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    சமீபத்தில் வேறொரு கட்சியில் சேர்ந்த ராஜபக்சேவுக்கு இந்த பதவிக்கு தகுதியற்றவர் என அவர்கள் குறிப்பிட்டனர். தங்களது எதிர்ப்பை உறுப்பினர்கள் கடிதம் மூலமாக தெரிவிக்கலாம். அந்த கடிதத்தை பாராளுமன்ற தேர்வு குழு பரிசீலித்து முடிவு செய்யும் என சபாநாயகர் கரு ஜெயசூர்யா தெரிவித்துள்ளார். #Rajapaksa #Lankaopposition #oppositionleader
    பாராளுமன்ற பாரம்பரியம், ஜனநாயகத்தை காக்க வேண்டும் என்ற நோக்கில் ரணில் விக்ரமசிங்கேயை மீண்டும் பிரதமராக நியமித்துள்ளதாக இலங்கை அதிபர் சிறிசேனா கூறி உள்ளார். #Sirisena #RanilWickramasinghe
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமராக இருந்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கேவுக்கும், அதிபர் சிறிசேனாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த அக்டோபர் மாதம் 26-ந் தேதி பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் சிறிசேனா நீக்கினார். முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார். இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

    இதை சமாளிக்க பாராளுமன்றத்தை கலைத்து விட்டு புதிதாக தேர்தல் நடத்த சிறிசேனா உத்தரவிட்டார். அவரது நடவடிக்கை சட்ட விரோதமானது என்று கூறிய சுப்ரீம் கோர்ட்டு ராஜபக்சேவும், அவரது மந்திரி சபையும் செயல்பட தடை விதித்தது. நெருக்கடி அதிகரித்ததால் ராஜபக்சே நேற்று முன்தினம் பதவியில் இருந்து விலகினார்.

    இதையடுத்து ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக நேற்று பதவி ஏற்றார். அவருக்கு அதிபர் சிறிசேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    எக்காரணம் கொண்டும் ரணில் விக்ரமசிங்கேயை பிரதமராக நியமிக்க முடியாது என்று ஏற்கெனவே கூறியிருந்த சிறிசேனா அந்த முடிவை மாற்றிக் கொண்டது ஏன் என்று விளக்கம் அளித்தார். இது தொடர்பாக கட்சித்தலைவர்கள் முன்னிலையில் சிறிசேனா பேசியதாவது:-

    மூத்த வக்கீல்கள் மற்றும் முன்னாள் தலைமை நீதிபதிகளை ஆலோசித்த பின்னரே ஒவ்வொரு செயலையும் நான் மேற்கொண்டேன். நல்லெண்ண அடிப்படையில் நான் செயல்பட்டிருக்கிறேன். அதற்காக வரலாற்றில் நினைவு கூரப்படுவேன்.

    சுமார் 1½ கோடி மக்களின் வாக்குரிமையை நிலைநாட்ட வேண்டும் என்ற நோக்கில் பிரதமரை பதவியில் இருந்து நீக்கிவிட்டு புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட்டேன். ஆனால் 122 எம்.பி.க்கள் அதை தடுத்து விட்டனர். இந்த சூழ்நிலையில் பாராளுமன்ற பாரம்பரியம், ஜனநாயகம் ஆகியவற்றை காக்க வேண்டும் என்ற நோக்கில் ரணில் விக்ரமசிங்கேயை மீண்டும் பிரதமராக நியமித்துள்ளேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இலங்கையில் நிலவி வந்த அரசியல் குழப்பத்துக்கு தீர்வு காணப்பட்டிருப்பதற்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவிஷ் குமார் கூறியதாவது:-

    அண்டைய நாடு மற்றும் உண்மையான நட்புநாடு என்ற வகையில் இலங்கையில் நிலவிய அரசியல் குழப்பத்துக்கு தீர்வு காணப்பட்டிருப்பதை இந்தியா வரவேற்கிறது. அனைத்து அரசியல் சக்திகள் வெளிப்படுத்திய முதிர்ச்சி மற்றும் ஜனநாயகத்தின் வலிமை ஆகியவற்றுக்கான வெற்றிதான் இது.

    இந்தியா-இலங்கை இடையிலான நட்புறவு மேல்நோக்கி பயணிக்கும் என நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். இலங்கையில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை முன்னெடுத்து செல்ல இந்தியா உறுதி பூண்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #Sirisena #RanilWickramasinghe
     
    வெளிநாட்டு சக்திகள் தன்னை அச்சுறுத்துவதாக இலங்கை அதிபர் சிறிசேனா குற்றம் சாட்டி உள்ளார். #SriLanka #President #Sirisena
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவை கடந்த அக்டோபர் மாதம் 26-ந் தேதி அதிரடியாக நீக்கிய அதிபர் சிறிசேனா, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார். இதனால் அரசியல் நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை அறிவித்தார்.

    ஆனால் சிறிசேனாவின் இந்த நடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. பின்னர் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானங்களில் ராஜபக்சே தோல்வியை தழுவினார். இதனால் இலங்கை அரசியலில் குழப்பம் நீடித்து வருகிறது. சிறிசேனாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்து இருக்கிறது.

    இந்த நிலையில் இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாட்டு மதிப்பீடுகளுக்கு இடையிலான மோதலே காரணம் என சிறிசேனா குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக எந்த ஒரு நாட்டையும் குறிப்பிட்டு கூறாத அவர், வெளிநாட்டு சக்திகள் தன்னை அச்சுறுத்துவதாகவும் புகார் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    வெளிநாட்டு சக்திகளுக்கு இடம் கொடுக்காமலும், வெளிநாட்டு அச்சுறுத்தல்களை புறந்தள்ளியும் தேசியவாத கொள்கைகளின் அடிப்படையில் நான் செயல்படும்போது, வெளிநாட்டு சக்திகள் ஒரு சவாலாக உருவெடுத்து அச்சுறுத்துகின்றன. பழைய ஏகாதிபத்தியத்தின் நிழல்கள் நமது வழியில் குறுக்கிடுகின்றன.

    இலங்கையின் புவியியல் சார்ந்த முக்கியத்துவம் அல்லது உலக வரைபடத்தில் இலங்கையின் அமைவிடம் மீது உலக வல்லரசுகள் கொண்டிருக்கும் நாட்டமே தற்போதைய குழப்பங்களுக்கு காரணம். வெளிநாட்டு சக்திகளின் எண்ணங்கள் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கும், உள்நாட்டு மதிப்பீடுகளை மதிப்பவர்களுக்கும் இடையிலான மோதல் பிரச்சினை ஆகும்.

    இவ்வாறு சிறிசேனா கூறினார்.

    முன்னதாக நாடாளுமன்றம் கலைப்பு தொடர்பான வழக்கு குறித்து தனது டுவிட்டர் தளத்தில் அவர் கூறுகையில், ‘இலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு என்ன தீர்ப்பு வழங்கினாலும், தாய்நாட்டின் நலன் கருதி அதை செயல்படுத்துவேன். இதில் எந்த ஒரு தனிநபர் அல்லது கட்சியின் நலனை கருத்தில் கொள்ளமாட்டேன்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
    இலங்கையில் நடைபெற்ற பாராளுமன்றக் கூட்டத்தை அதிபர் சிறிசேனாவின் ஆதரவு எம்பிக்கள் மற்றும் ராஜபக்சே ஆதரவு எம்பிக்கள் புறக்கணித்தனர். #SriLankanParliament
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்கரம சிங்கேவை அகற்றி விட்டு அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை நியமிப்பதாக அதிபர் சிறிசேனா அறிவித்தார்.

    அதை ரனில் விக்ரமசிங்கே ஏற்காததால் இலங்கை அரசியலில் குழப்பங்கள் நிலவுகிறது. அதை தொடர்ந்து இன்னும் 20 மாதங்கள் ஆட்சி காலம் இருக்கும் நிலையில் பாராளுமன்றத்தை கலைத்து சிறிசேனா உத்தரவிட்டார். அதற்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.

    இந்த சூழ்நிலையில் இலங்கை பாராளுமன்ற கூட்டம் 2 நாட்கள் நடைபெற்றது. இக்கூட்டம் சபாநாயகர் கரு.ஜெயசூர்யா தலைமையில் நடந்தது.

    ஆனால் இந்த கூட்டத்தை அதிபர் மைத்ரியபால சிறிசேனா மற்றும் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவு எம்.பி.க்கள் புறக்கணித்தனர்.

    இதுகுறித்து அதிபர் சிறிசேனாவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் எம்.பி. நிமல் டி சில்வா கூறியதாவது:-

    சபாநாயகர் கரு. ஜெயசூர்யா ஒருதலைபட்சமாக ரனில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக செயல்படுகிறார். ராஜபக்சேவை பிரதமராக ஏற்க மறுக்கிறார். எனவே, சபாநாயகர் தனது முடிவில் இருந்து மாறும்வரை பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம். தொடர்ந்து புறக்கணிப்போம் என்றார்.

    இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி. ரவூப் ஹக்கீம் சபாநாயகர் கரு. ஜெய சூர்யாவை நேற்று சந்தித்தார். அப்போது சர்ச்சைக்குரிய முறையில் நியமிக்கப்பட்டுள்ள ராஜபக்சேவை அச்சு மற்றும் டி.வி. ஊடகங்கள் பிரதமராக அங்கீகரித்து செய்திகள் வெளியிட்டு வருகின்றன.

    ராஜபக்சே தலைமையிலான ஆட்சியையும் ஊடகங்கள் அங்கீகரித்துள்ளன. எனவே சட்ட விரோதமான இந்த ஆட்சிக்கு ஊடகங்கள் அங்கீகாரம் வழங்க கூடாது என பாராளுமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ராஜபக்சேவை பிரதமர் என குறிப்பிட ஊடகங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். #SriLankanParliament
    இலங்கை அதிபர் சிறிசேனா பாராளுமன்றத்தை கலைத்தது செல்லாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். #SrilankaParliament #Sirisena
    கொழும்பு:

    இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே பனிப்போர் நிலவியது. அதன் காரணமாக ரனில் விக்ரமசிங்கேவை பிரதமர் பதவியில் இருந்து அதிபர் சிறிசேனா அதிரடியாக நீக்கினார். முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    இதற்கு எதிர்ப்பு கிளம்பவே மெஜாரிட்டியை நிரூபிக்க பாராளுமன்றத்தை கூட்டுவதாக அறிவித்தார். ராஜபக்சேவால் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டதால் பாராளுமன்றத்தை நேற்று முன்தினம் இரவு கலைத்து விட்டார்.

    ஜனவரி 5-ந்தேதி பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவித்தார். இது சட்டவிரோதமானது. எனவே இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என ரனில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

    ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணி கட்சியான இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும், அதிபர் சிறிசேனாவின் முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்போவதாக அறிவித்துள்ளது. அதே கருத்தைதான் அனைத்து சிலோன் மக்கள் காங்கிரசும் தெரிவித்துள்ளது.

    தமிழ் தேசிய கூட்டமைப்பும் அதிபர் சிறிசேனாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர இருப்பதாக அறிவித்துள்ளது. அதுகுறித்து அக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியதாவது:-

    பாராளுமன்றத்தை ஒத்திவைக்கவும், கலைக்கவும் அதிபருக்கு அதிகாரம் இருந்தது. ஆனால் 19-வது திருத்த சட்டத்தின் ஊடாக அது நீக்கப்பட்டு விட்டது. பாராளுமன்றத்தை அதிபர் கலைப்பதாக இருந்தால் 4½ ஆண்டுகளின் பின்னரே கலைக்க முடியும்.

    அதிபர் சிறிசேனா தன்னிச்சையாகத்தான் எடுத்த முடிவு படுதோல்வி அடைய போகின்றது என்ற அச்சத்தாலே பாராளுமன்றத்தை கலைத்துள்ளார். நாட்டு மக்களுக்கு மட்டுமின்றி சர்வதேச சமூகத்துக்கும் இந்த உண்மை தெரியும்.

    அதிபர் சிறிசேனாவின் அண்மைய செயல்பாடுகளை பார்க்கும்போது ரனில் விக்கிரமசிங்கே பிரதமர் பதவியில் இருக்கக்கூடாது என்பதிலும், தான் நியமித்த புதிய பிரதமர் ராஜபக்சே பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் சந்தர்ப்பத்தில் தோற்கக்கூடாது என்பதிலுமே குறியாக இருந்தார்.

    ஆனால் அவரின் திட்டம் படுதோல்வியை நோக்கி செல்கையில் அந்த அவமானத்தில் இருந்து தப்பிப் பிழைப்பதற்காக பாராளுமன்றத்தை திடீரென கலைத்துள்ளார். அவர் தனது தன்னிச்சையான முடிவுக்காக ஒட்டுமொத்த நாட்டு மக்களும் வழங்கிய ஆணையை மீறிவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.

    சிறிசேனா பாராளுமன்றத்தை கலைத்தது சட்ட விரோதமானது. அரசியல் சட்டத்துக்கு முரணானது என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே பாராளுமன்றம் கலைப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டை நாடினாலும் கூட அதற்கு சாதகமான முடிவு கிடைக்காது என்று பல சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    ஏனெனில் இலங்கை அதிபருக்கு அனைத்து அதிகாரங்கள் உண்டு. அவரால் ஒரு பெண்ணை ஆணாகவோ, ஆணை பெண்ணாகவோ மாற்ற முடியாது. அது தவிர அனைத்து அதிகாரங்களும் அவருக்கு உண்டு.

    நடைமுறையில் உள்ள பாராளுமன்றத்துடன் நாட்டின் செயல்பாடுகளை நடத்த முடியாது என அவர் கருதினால் பாராளுமன்றத்தை கலைக்க முடியும். இத்தகவலை அதிபரின் சட்ட ஆலோசகர் விஜயதாச ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

    அத்துடன் 19-வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தில் எந்தவொரு இடத்திலும் அதிபருக்குரிய அதிகாரம் குறைக்கப்படவில்லை. அவ்வாறு இருக்க அதிபரின் நடவடிக்கையை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புகள் அதிகம் என குறிப்பிட்டுள்ளார். #SrilankaParliament #Sirisena
    இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி இன்று பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார். #MahindhaRajapaksha #Rajapakshajoins
    கொழும்பு:

    ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவராக இருந்த மகிந்த ராஜபக்சே தற்போது அக்கட்சியின் ஆலோசகராக மட்டும் இருந்து வருகிறார்.

    அதிபர் மைத்ரிபாலா சிறிசேனாவால் சமீபத்தில் அந்நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்சேவால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் பாராளுமன்றத்தை கலைத்து மைத்ரிபாலா சிறிசேனா உத்தரவிட்டார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஐந்தாம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், ராஜபக்சே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி இன்று பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார். அவருடன் சுதந்திரக் கட்சியை சேர்ந்த சுமார் 50 முன்னாள் எம்.பி.க்களும் பொதுஜன முன்னணியில் இணைந்ததாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    ராஜபக்சேவின் இந்த முடிவு அதிபர் மைத்ரிபாலாவுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என தெரிகிறது. #MahindhaRajapaksha #Rajapakshajoins 
    இலங்கையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி வழக்கு தொடரப்போவதாக அறிவித்துள்ளது. #SriLankaParliament #Ranil #UNP
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை அதிபர்  சிறிசேனா நீக்கிவிட்டு, ராஜபக்சேவை நியமித்ததில் இருந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. பாராளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவிற்கு போதிய ஆதரவு இல்லை.  எம்.பி.க்களை இழுக்கும் முயற்சியும் பலன் அளிக்காததால் நேற்று இரவு பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார் அதிபர் சிறிசேனா. அத்துடன் ஜனவரி 5-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

    சிறிசேனாவின் நடவடிக்கைகளை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வந்த சபாநாயகர் கரு.ஜெயசூர்யா, தற்போதைய பாராளுமன்ற கலைப்பு நடவடிக்கையையும் ஏற்கவில்லை. 

    இந்நிலையில், பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர ரணில் விக்ரமசிங்கே முடிவு செய்துள்ளார். அவர் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி சார்பில் வழக்கு தொடரப்படுகிறது.

    நீதிமன்றம்  தலையிட்டு சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்யவும், சர்வாதிகார நடவடிக்கைகளில் இருந்து ஜனநாயகத்தை பாதுகாக்கவும் வழக்கு தொடரப்படும் என ஐக்கிய தேசிய கட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

    சிறிசேனாவின் கொடுங்கோன்மை இனி நீதிமன்றங்கள், பாராளுமன்றம் மற்றும் தேர்தலில் போராட வேண்டும் என முன்னாள் நிதி மந்திரி மங்கள சமரவீரா தெரிவித்தார். #SriLankaParliament #Ranil #UNP
    இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். #srilankaparliament #dissolves #sirisena

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இலங்கையில் நடைபெற்று வரும் அரசியல் அதிகார சதுரங்கப் போட்டியில் தமிழ் இனப் படுகொலை நடத்திய மகிந்த ராஜபக்சேவின் தமிழர் ரத்தம் தோய்ந்த கரங்களில் இலங்கையின் முழு அதி காரத்தையும் மீண்டும் வழங்குவதற்கு இன்றைய அதிபர் மைத்திரிபால சிறிசேனா திட்டமிட்டு சதி நாடகத்தை நிறைவேற்றிவிட்டார்.

    2019 ஜனவரி 5-ந் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று இலங்கை அதிபர் அறிவித்துள்ளார். சிங்களப் பேரினவாதத்தின் உச்சகட்ட அராஜகம் மீண்டும் அரங்கேறப்போகிறது. ஈழத் தமிழ் இனத்தையே கருவறுக்க வேண்டும் என்று படுகொலை நடத்திய ராஜ பக்சேவை சிங்கள இனவாத வெறியர்கள் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்கள்.

    மகிந்த ராஜபக்சேயின் சகோதரன் கொத்தபய ராஜபக்சே அடுத்து நான் அதிபராவேன் என்றும் கூறியிருக்கிறான். ராஜபக்சே கூட்டத்துக்குப் பெரும்பான்மை கிடைத்தால் அரசியல் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவந்து மகிந்தனே மீண்டும் அதிபராகவும் வாய்ப்பு ஏற்படலாம்.

    இலங்கையில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஈழத்தமிழர்களுக்கு ஒருகாலும் நீதி கிடைக்காது. மகிந்த ராஜபக்சே கரங்களுக்கு மீண்டும் அதிகாரம் வருமானால், முதல் கட்ட மாக ஈழத்தமிழர்களின் பண் பாட்டுத் தனித்தன்மையை அழிக்க கட்டமைத்த கலாச்சாரப் படுகொலையை நடைபெறும். தற்போது தமிழர் பகுதிகளில் நிலை கொண்டிருக்கும் சிங்கள ராணுவத்தை மேலும் அதிக அளவில் நிலைப்படுத்துவார்கள். சிங்களக் குடியேற்றங்கள் தமிழர் தாயகத்தில் அதிகமாகும். வடக்கு கிழக்கு இணைப்புக்கு வழியில்லாமல் செய்ய ஏராளமான சிங்களக் குடியேற்றங்களை மேலும் அதிகப்படுத்தும் நிலை ஏற்படும்.

    வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் மாகாணசபையில் கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானத்தின்படி, சிங்கள ராணுவத்தையும், சிங்களக் குடியேற்றங்களையும் வெளியேற்றவும், சிறையில் இருக்கும் தமிழர்களை விடுதலை செய்யவும், இனக்கொலைக் குற்றவாளிகளை அனைத்துலக நீதிமன்றத்தில் கூண்டியில் நிறுத்து வதற்கான நீதிப் பொறி முறை அமைக்கவும், சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்தவும் தாய்த் தமிழகத்திலும், உலகெங்கிலும் உள்ள மானத் தமிழர்கள் தமிழ் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும். உலக நாடுகள் ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க ஐ.நா.மன்றத்திலும், மனித உரிமைக் கவுன்சிலிலும் குரல்கொடுக்க வேண்டும்.

    சுதந்திரத் தமிழ் ஈழம் ஒன்றுதான் ஈழத் தமிழர் தேசிய இனப்பிரச்சினைக்கு ஒரே தீர்வாகும் என்பதனை மனதில் நிறுத்தி, தமிழ் ஈழ விடுதலைக்காக உயிர்த் தியாகம் செய்தவர்கள், தங்கள் உயிர்களைக் கொடையாகத் தந்தவர்கள், படுகொலைக்கு ஆளான தமிழர்களையும் நெஞ்சில் நிறுத்தி சூளுரை மேற்கொள்வோம்.

    அம்மா மக்கள் முன் னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்:-


    தமிழர்களுக்கு தீங்கிழைக்கும் எந்த சூழலும் இலங்கையில் ஏற்படாதவண்ணம் ஐ.நா மன்றமும், இந்திய அரசும் கண்காணிக்க வேண்டும். இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட செய்தி, உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு பேரிடியை ஏற்படுத்தியுள்ளது.

    இலங்கை தமிழர்களின் வாழ்வில் ஏற்பட்ட கொடூர நாட்களின் சுவடுகள் மறைந்து அமைதியான வாழ்வை மேற்கொள்வார்கள் என்ற நம்பிக்கை தகர்ந்து விட்டதாகவே தோன்றுகிறது.

    இலங்கையில் தமிழர் இன அழிப்பை முன்னெடுத்த ராஜபக்சேயை, அதிபர் சிறிசேனா பிரதமராக அறிவித்த கொடுமையை, அந்நாட்டு நாடாளுமன்றம் முறியடித்துவிடும் என்று உலகமே எதிர்நோக்கியிருந்த நேரத்தில், இந்த ஜனநாயக விரோத செயலை புரிந்த இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இனவெறி கொண்ட ராஜபக்சேவுக்கு அதிகாரத்தை கொடுக்க முயற்சிக்கும் இச்செயல், இலங்கையில் வாழும் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் பெரும் தீமையை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

    இந்திய அரசு இந்த நகர்வுகளை உன்னிப்பாக கவனித்து தமிழர்களின் உயிருக்கும், உடைமைக்கும், நலனுக்கும் தீங்கு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஐ.நா.மன்றம் உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஜனநாயகத்தை அழிக்கும் இந்த அக்கிரமச் செயல் வீழ்த்தப்பட வேண்டும்.

    பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்:-

    இலங்கை நாடாளுமன்றத்தை நேற்று நள்ளிரவில் கலைத்த அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா, புதிய நாடாளுமன்றத்தை அமைக்க அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 5-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார். 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை பதவிக்காலம் இருக்கும் நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் திடீரென கலைத்திருப்பது மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலையாகும்.

    இலங்கை அதிபர் பதவியிலிருந்து எந்தக் காரணமும் இல்லாமல் தான் ரனில் விக்கிரமசிங்கே நீக்கம் செய்யப்பட்டார். அதேபோல், பிரதமர் பதவியை வகிப்பதற்கு தேவையான எந்த பெரும்பான்மையும் இல்லாத நிலையில் தான் ராஜபக்சே புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார்.

    நாடாளுமன்றத்தில் ராஜபக்சே அரசு பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக எந்தெந்த வகைகளில் எல்லாம் சட்டத்தை வளைக்க முடியுமோ? அந்தந்த வகைகளில் எல்லாம் சட்டங்கள் வளைக்கப்பட்டன. இலங்கை நாடாளுமன்றத்தையே முடக்கும் அளவுக்கு அதிபர் சிறிசேனா சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு சர்வாதிகாரியாக செயல்பட்டார்.

    இலங்கை அதிபர் சிறிசேனா அவரது சொந்த செல்வாக்கில் வெற்றி பெறவில்லை. 2015-ஆம் ஆண்டு தேர்தலில் ராஜ பக்சேவுக்கு எதிரான தமிழர்களின் வாக்குகளால் தான் அதிபர் தேர்தலில் அவரால் வெற்றி பெற முடிந்தது. தமிழர்களின் ஆதரவுடன் வெற்றி பெற்ற சிறிசேனா தமது பழைய இனப்படுகொலை கூட்டாளியுடன் அணி சேர்ந்து கொண்டு தமிழர்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது நியாயமல்ல.

    இலங்கையின் பிரதமர் பதவியிலிருந்து விக்கிரம சிங்கே நீக்கப்பட்டு ராஜபக்சே நியமிக்கப்பட்ட போதே இந்தியா இந்த விவகாரத்தில் தலையிட்டிருந்தால் நிலைமை இந்த அளவுக்கு மோசமடைந்திருக்காது. இந்த வி‌ஷயத்தில் இந்தியா இனியும் அலட்சியம் காட்டாமல், இலங்கை சிக்கலில் உடனடியாகத் தலையிட்டு ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். #srilankaparliament #dissolves #sirisena

    இலங்கை பாராளுமன்றம் கலைப்பு ஜனநாயக படுகொலை மட்டுமல்ல, அதிபரின் அரசியல் சட்ட அத்துமீறல் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். #SriLankaParliament #Sirisena #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    “மூன்றில் இரண்டு பங்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே, தேர்தல் நடைபெற்ற நான்கரை வருடங்களுக்குள் இலங்கை பாராளுமன்றத்தைக் கலைக்க முடியும்” என்று இலங்கை அரசியல் சட்டம் மிகத் தெளிவாக வரையறுத்துள்ள நிலையில், அந்த அரசியல் சட்டத்தினைக் காலில் போட்டு மிதித்து, அதன் மீது ஏறி நின்று, சிறிதும் மனசாட்சியின்றி, பாராளுமன்றத்தைக் கலைத்துள்ள அதிபர் சிறிசேனாவின் அராஜகம் பேரதிர்ச்சியளிக்கிறது.

    மிக மோசமான அரசியல் சட்ட நெருக்கடியை உருவாக்கி அதன் மூலம் இலங்கையில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் தமிழர்களின் நலனுக்கும், பாதுகாப்பிற்கும் மிகப் பெரிய ஏமாற்றத்தையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியிருக்கிறார்.



    கடந்த அக்டோபர் 26-ந்தேதி தமிழர்களின் விருப்பத்திற்கு மாறாக, இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை மாற்றி, வருகின்ற 14-ந்தேதி புதிய பிரதமர் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்று தெரிந்ததும், தமிழ் மக்களின் குரல் ஒலிக்கும் பாராளுமன்றத்தைக் கலைத்திருப்பது ஜனநாயகப் படுகொலை மட்டுமல்ல, அதிபரின் அரசியல் சட்ட அத்துமீறல். தமிழர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் இந்த அக்கிரமத்தை ஏதோ “அண்டை நாட்டில் நடைபெறும் நிகழ்வுகள்” என்று ஒதுக்கி வைத்து விட முடியாது என்றாலும், பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு துவக்கத்திலிருந்தே இந்த ஜனநாயக விரோத செயல்களை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது அதை விடக் கவலையளிக்கிறது.

    முழுக்க முழுக்க ஈழத் தமிழர்களுக்கு எதிராகவும், அவர்களின் உரிமைகளை அடியோடு நசுக்குவதிலும், இனப்படுகொலை- மனித உரிமை மீறல்கள்- சர்வதேச நெறிகளுக்கு எதிரான போர்க்குற்றங்கள் ஆகியவற்றில் ஈடுபடுவதிலும், தனது ஆட்சிக் காலம் முழுவதும் கங்கணம் கட்டிக் கொண்டு “ஹிட்லர்” போல் செயல்பட்ட ராஜபக்சே பிரதமராக நியமிக்கப்பட்ட போது மத்திய அரசு அமைதி காத்தது.

    ஈழத்தமிழர்கள் கண்ணியமாகவும், சுய மரியாதையுடனும், சம உரிமையுடனும் வாழ “இந்திய-இலங்கை” ஒப்பந்தப்படி கொண்டு வரப்பட்ட இலங்கை அரசமைப்புச்சட்டத்தின் “13 ஆவது திருத்தத்தையும்” தாண்டி அதிக அதிகாரங்களை ஈழத்தமிழர்களுக்கு அளிக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை எள்ளி நகையாடிய ராஜபக்சேவும் அதிபர் சிறிசேனா வும் கைகோர்த்து கூட்டணி அமைத்து ஜனநாயகத்தின் குரல்வளை மீது நின்று ஆட்டம் போட்டதை, 14 நாட்களுக்கு மேல் வேடிக்கை பார்த்தது மத்திய பா.ஜ.க. அரசு.

    ஈழத் தமிழர்களுக்கு எதிராக “பலாத்காரத்தையும்” “படுகொலையையும்” கட்டவிழ்த்து விட்டு, இந்திய அரசின் எச்சரிக்கையையும் மீறி அப்பாவித் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்த போர் மோசடிகளுக்காக, சர்வதேச நீதிமன்றத்தில் போர்க்குற்ற வாளியாக நிறுத்தப்பட்டு கடுந்தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய ராஜபக்சே, திட்டமிட்டு இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மையை செயற்கையாக உருவாக்கியதையும் கண்டு கொள்ளாமல் மத்திய பா.ஜ.க. அரசு கண் மூடிக் கொண்டிருந்தது. மத்திய அரசின் மவுனம் இன்றைக்கு இலங்கை பாராளுமன்றக் கலைப்பில் முடிந்து விட்டது.

    தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவதற்காக இலங்கை அரசியல் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள உருவாக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபை பணிகளும் தடைபட்டு விட்டது. அது மட்டுமின்றி தமிழர்கள் மீது திடீர் தேர்தலை, சிறிசேனா-ராஜபக்சே சூழ்ச்சிக் கூட்டணி திணித்திருப்பதற்குக் காரணமாக அமைந்து விட்டது. கண்ணுக்கு எட்டிய தூரத்தில் நடந்துள்ள மிகப்பெரிய அநியாயத்தை பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு கண்டும் காணாமலும் தட்டிக் கேட்காமலும் இருந்ததையும், தங்களின் உயிருக்கும், உரிமைகளுக்கும் ஆபத்து உருவாகிய நேரத்தில் கூட இந்திய அரசு இப்படி இனம் புரியாத மவுனம் காத்ததையும் பார்த்து ஈழத் தமிழர்களும், இந்தியத் தமிழர்களும்- ஏன் உலகத் தமிழர்களும் இன்றைக்கு அதிர்ச்சியுடன் உறைந்து போயிருக்கிறார்கள்.

    ஆகவே, விபரீத சூழல் இலங்கையில் உருவாகி, அரசியல் நெருக்கடியும், ஸ்திரத்தன்மையும் ஆபத்திற்குள்ளாகி இருக்கும் இந்த நேரத்தில், அங்கு வாழும் ஈழத்தமிழர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டிய மிகப்பெரிய பொறுப்பும் கடமையும் இந்திய அரசுக்கு இருக்கிறது என்பதை பிரதமர் நரேந்திர மோடி தாமதமாகவேனும் உணர வேண்டும் என்றும், இலங்கையில் பட்டப்பகலில் நிகழ்த்தப்பட்டுள்ள இந்த ஜனநாயகப் பச்சைப் படுகொலைக்கு, இந்திய அரசு உடனடியாகக் கடும் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இலங்கையில் ஈழத்தமிழர்கள் அமைதியாக, பாதுகாப்பாக, கண்ணியத்துடன் வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #SriLankaParliament #Sirisena #MKStalin
    பாராளுமன்றத்தில் ரனில் விக்ரமசிங்கேவுக்கு அதிக மெஜாரிட்டி இருந்தாலும் கூட மீண்டும் ரனில் விக்ரமசிங்கேவை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்று சிறிசேனா தெரிவித்துள்ளார். #RanilWickremesinghe #Rajapaksa
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா பிரதமராக நியமித்தார்.

    ஆனால் இந்த நியமனத்தை ரனில் விக்ரமசிங்கே ஏற்கவில்லை. நான் தான் தொடர்ந்து பிரதமராக இருக்கிறேன் என்று கூறி வருகிறார்.

    இதற்கிடையே ராஜபக்சே தனது மெஜாரிட்டியை நிரூபித்தால் தான் அவரை பிரதமராக ஏற்க முடியும் என்று சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்துள்ளார். இதற்காக வருகிற 14-ந்தேதி பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடைபெற உள்ளது.

    ஆனால் ராஜபக்சேவுக்கு போதிய ஆதரவு இல்லை. எனவே எதிர்க்கட்சியில் உள்ள எம்.பி.க்களையும், ரனில் விக்ரமசிங்கே கட்சியில் உள்ள எம்.பி.க்களையும் இழுப்பதற்கு தொடர்ந்து முயற்சித்து வருகிறார்.

    எதிரணியில் இருந்து ஒன்றிரண்டு பேர் ராஜபக்சே அணிக்கு தாவிவிட்டாலும் கூட இன்னும் மெஜாரிட்டியை நிரூபிக்கும் அளவுக்கு போதிய பலம் வரவில்லை.

    எனவே ஓட்டெடுப்பு நடந்தால் ராஜபக்சே தோல்வி அடைந்து பிரதமர் பதவியை இழக்கும் நிலை ஏற்படலாம்.


    இந்த நிலையில் 16 உறுப்பினர்களை கொண்ட தமிழ்தேசிய கூட்டணி எம்.பி.க்களை இழுப்பதற்கு அதிபர் சிறிசேனா தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர்கள் ராஜபக்சேவை ஆதரிக்க மாட்டோம் என்று அறிவித்து உள்ளனர். ஆனாலும் சிறிசேனா தனது முயற்சியை கைவிடவில்லை.

    இதற்கிடையே தமிழ் தேசிய கூட்டணி கட்சி பிரதிநிதிகள் அதிபர் சிறிசேனாவை சந்தித்து பேசினார்கள். அப்போது ஒருவேளை பாராளுமன்றத்தில் ரனில் விக்ரமசிங்கேவுக்கு அதிக மெஜாரிட்டி இருந்தாலும் கூட மீண்டும் ரனில் விக்ரமசிங்கேவை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்று தமிழ்தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகளிடம் சிறிசேனா கூறியிருக்கிறார்.

    பாராளுமன்ற ஓட்டெடுப்பு நடக்கும்போது தமிழ்தேசிய கூட்டணி சபை நடவடிக்கைகளில் பங்கேற்காமல் புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். ஆனால் அதற்கு அவர்கள் உடன்படவில்லை.

    சிறிசேனா தனது கட்சி எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது எப்படியாவது மெஜாரிட்டியை நிரூபித்து நிலையான அரசை ஏற்படுத்துவேன். எனவே கட்சியினர் யாரும் கவலைப்பட வேண்டாம் என்று கூறினார். #RanilWickremesinghe #Rajapaksa
    ×