search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 100153"

    கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் சவாலை ஏற்ற பிரதமர் மோடி, தான் உடற்பயிற்சி செய்வதை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். #FitnessChallenge #PMModi
    புதுடெல்லி:

    மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோவை கடந்த மாதம் வெளியிட்டார். நாம் ஃபிட்டாக இருந்தால் தான் நாடு ஃபிட்டாக இருக்கும், அதனால் அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி விராட் கோலி, சாய்னா நேவால், ஹிர்த்திக் ரோஷன் ஆகியோரை டேக் செய்திருந்தார் ரத்தோர்.
     
    இதையடுத்து, ரத்தோரின் சவாலை ஏற்றுக்கொண்ட கோலி, தானும் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டு, அதில் தன் மனைவி அனுஷ்கா சர்மா, பிரதமர் மோடி, டோனி ஆகியோரை டேக் செய்தார். இந்த சவாலை ஏற்ற பிரதமர் மோடி, தனது உடற்பயிற்சி வீடியோவை விரைவில் வெளியிடுவேன் என கூறியிருந்தார்.



    இந்நிலையில், விராட் கோலியின் சவாலை ஏற்று உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யும் வீடியோவை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார். காலை நேர உடற்பயிற்சி மற்றும் யோகா மட்டுமின்றி பஞ்சபூத தத்துவத்தை விளக்கும் நடைபாதையில் நடைபயிற்சி மேற்கொள்வதை வீடியோ எடுத்து பதிவு செய்துள்ளார். இந்த பயிற்சிகள் தனக்கு புத்துணர்ச்சி தருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    அத்துடன், கர்நாடக முதல்வர் குமாரசாமி மற்றும் காமன்வெல்த் போட்டியில் அதிக பதக்கங்கள் வென்ற மணிகா பத்ரா ஆகியோருக்கு பிட்னஸ் சவால் விடுத்துள்ளார். துணிச்சலான ஐ.பி.எஸ். அதிகாரிகள், குறிப்பாக 40 வயதுக்குமேல் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் மோடி பிட்னஸ் சவால் விடுத்துள்ளார்.  #FitnessChallenge #HumFitTohIndiaFit #ComeOutAndPlay #PMModi #ViratKohli #Kumaraswamy #Manikabatra



    கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை கமல்ஹாசன் சந்தித்து காவிரி பிரச்சனையை பற்றி பேசினோம் என்று தெரிவித்திருப்பது உள்நோக்கம் கொண்டது என்று ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
    ஈரோடு:

    கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் பல ஆண்டுகால சட்ட போராட்டத்திற்கு பிறகு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு மத்திய அரசு மேலாண்மை ஆணையம் அமைத்த நிலையில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை கமல்ஹாசன் சந்தித்து காவிரி பிரச்சனையை பற்றி பேசினோம் என்று தெரிவித்திருப்பது உள்நோக்கம் கொண்டது.

    இந்த சந்திப்புக்கு பிறகு காவிரி பிரச்சனையை இரு மாநிலங்களும் பேச்சு வார்த்தையின் மூலம் தீர்க்கலாம் என்று கமல்ஹாசன் கருத்து கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கமல்ஹாசனின் இந்த கருத்து மத்திய அரசு அமைத்திருக்கும் ஆணையத்திற்கு எந்த அதிகாரமும் இல்லாதததை போலவும், மீண்டும் கர்நாடக மாநிலத்திற்கே எல்லா அதிகாரமும் இருப்பதை போலவும் தோற்றத்தை உருவாக்கி இருக்கிறது.

    கமல்ஹாசன் உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க உத்தரவிட்ட பிறகு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியதும், மத்திய அரசு ஆணையம் அமைத்த பிறகு கர்நாடக முதலமைச்சரை சந்தித்ததும் தேவையற்றது.

    காவிரிக்கான சந்திப்பு என்று சொல்லி விட்டு விரைவில் வெளிவரவிருக்கும் விஸ்வரூபம்-2 படம் கர்நாடகாவில் திரையிடுவதில் எந்தவொரு பிரச்சனையும் வந்துவிடக் கூடாது என்பதற்காக கர்நாடக முதலமைச்சரை கமல்ஹாசன் சந்தித்து பேசியிருப்பாரோ? என்ற சந்தேகம் தான் எழுகிறது.

    காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு ஆதரவாக கருத்து கூறியதாக சொல்லி ரஜினிகாந்த் நடித்து வெளிவரவிருக்கும் காலா படத்தை கர்நாடகாவில் திரையிட தடை விதித்ததை போல, விஸ்வரூபம் 2 படத்திற்கும் தடை போட்டு விடுவார்களோ என்ற அச்சத்தில் முன்னேற்பாடாக இச்சந்திப்பை கமல்ஹாசன் நிகழ்த்தியிருக்கிறார்.

    காவிரி பிரச்சனை தொடர்பாக தமிழகத்தில் வீர வசனங்களை எல்லாம் பேசிய நடிகர் சத்யராஜ், தான் நடித்த பாகுபலி 2 படம் கர்நாடகாவில் திரையிட சிக்கல் ஏற்பட்ட போது மன்னிப்பு கேட்டதையும் பார்த்திருக்கிறோம். அதே போல கமல்ஹாசன் நடித்து வெளிவந்த விஸ்வரூபம் படத்திற்கு அப்போது பல பிரச்சனைகள் எழுந்து திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டது.

    தற்போது காலா படத்திற்கு உருவாகியிருக்கும் சிக்கல் விஸ்வரூபம் 2 படத்திற்கும் வராமல் இருப்பதற்காக காவிரி பிரச்சனையில் நான் தமிழகத்திற்கு ஆதரவானவன் இல்லை என்பதை கர்நாடகாவிற்கு உணர்த்தவே கமல்ஹாசன் சென்றது அவரது பேட்டியின் மூலம் தெளிவாகிறது.

    எனவே கமல்ஹாசன் தன்னுடைய நலனுக்காக சந்திப்பை நிகழ்த்திவிட்டு காவிரிக்காக சென்றேன் என்று கூறுவதை எல்லாம் தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். #Tamilnews
    குமாரசாமியால் காவிரி தண்ணீர் கிடைப்பது போன்ற நிலையை கமல்ஹாசன் உருவாக்குவதாக தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். #BJP #Tamilisaisoundararajan #KamalHaasan
    அவனியாபுரம்:

    மதுரை விமான நிலையத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பா.ஜ.க. சார்பில் பல்வேறு மாநாடுகள் நடைபெற உள்ளன. மதுரையில் மகளிரணி மாநாடு ஜூலை 22-ந் தேதி நடைபெற உள்ளது.

    தமிழகத்தில் ஆக்கப்பூர்வமான அரசியல் நடைபெற வேண்டும். ஆனால் அது தமிழகத்தில் நடைபெறவில்லை. நீட் தேர்வில் டீக்கடைகாரரின் மகள் வெற்றி பெற்று இருக்கிறார். இதை நாம் மறந்து விட்டோம்.

    நீட் தேர்வினால் உயிர் இழப்பு ஏற்படுவது தடுக்கப்பட வேண்டும். 1½ லட்சம் பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். 4 ஆயிரம் சீட்டுகளுக்கு அரசு தயார் செய்வது போல் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வளர ஊக்குவிக்க வேண்டும். மற்ற மாநிலங்களை விட நீட்டுக்கு தமிழகத்தில் அதிக எதிர்ப்பு உள்ளது. நீட் தேர்வில் வெற்றி பெற முடியாதவர்கள் வேறு துறைகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

    தமிழக அரசியல்வாதிகள் திடீர் திடீரென்று அரசியல் செய்கிறார்கள். காவிரி பிரச்சனையில் மத்திய அரசு சரியான நேரத்தில் சரியான முடிவு எடுத்துள்ளது. ஆனால் உயர்நீதிமன்றம் செய்தது போல் பேசுகின்றனர்.


    கர்நாடகாவில் காவிரி பிரச்சனை முடிந்த பிறகு கமல்ஹாசன் குமாரசாமியை சந்தித்து பேசியது தவறு. குமாரசாமியால் தண்ணீர் கிடைப்பது போன்ற நிலையை அவர் உருவாக்குகிறார். இதனால் தமிழர்களையும், தமிழக மக்களையும் இழிவு படுத்துகிறார்.

    இது தன்னால்தான் முடியும் என்பது போல் கமல்ஹாசன் செயல்படுகிறார். எஸ்.வி.சேகர் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #Tamilisaisoundararajan #KamalHaasan
    காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக கமல்ஹாசன் கர்நாடக முதல்வரை சந்தித்தது நல்ல முயற்சி என்றும் அதில் தவறு இல்லை என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார். #Rajinikanth #KamalHaasan #CauveryIssue
    சென்னை:

    காவிரி நதிநீர் பிரச்சனை தமிழகம்-கர்நாடகா ஆகிய 2 மாநிலங்களுக்கு இடையே நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்துள்ளது.

    இதன் பிறகாவது கர்நாடக அரசு காவிரி விவகாரத்தில் வீம்பு பிடிக்காமல் தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை திறந்து விடவேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

    இந்த நிலையில் காவிரி நீர் விவகாரத்தில் பேச்சு வார்த்தை மூலமாக தீர்வு காண முடியும் என்று கூறி வந்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இப்போது அதற்கான முயற்சியில் இறங்கி உள்ளார்.

    இது தொடர்பாக கர்நாடக முதல்வர் குமாரசாமியை நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது காவிரி நீர் விவகாரத்தை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

    இதன் பின்னர் குமாரசாமி, கமல் இருவரும் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது, காவிரி விவகாரத்தில் இணக்கமான நல்லுறவை விரும்புவதாகவும், தமிழக அரசுடன் பேச்சு நடத்த தயார் என்றும் அம்மாநில முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ளார்.

    அவருடன் இணைந்து பேட்டி அளித்த கமலும் 2 மாநிலங்களும் சகோதரத்துவ மனப்பான்மையுடன் காவிரி பிரச்சனையை அணுகி தீர்த்துக் கொள்ள வேண்டும். கர்நாடக முதல்வர் குமாரசாமியின் பேச்சு எனதுஇதயத்தை நிரப்பி விட்டது என்றும் தெரிவித்தார்.

    கமலின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் பாலகிருஷ்ணன், உள்ளிட்டோர் கமலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.


    விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியனும் கமலின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். காவிரி பிரச்சனையை திசை திருப்பும் நோக்கத்தோடு கமல் செயல்படுவதாக இவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    இந்த நிலையில் கமலின் இந்த முயற்சியை ரஜினி வரவேற்றுள்ளார். இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் ரஜினி அளித்த பேட்டி வருமாறு:-

    கமல்ஹாசன் கர்நாடக முதல்வரை சந்தித்தது நல்ல முயற்சி. அதில் தவறு இல்லை. பேச்சு தொடர வேண்டும். அவர்கள் ஒன்றும் எதிரி இல்லை. பெரிய பெரிய காரியங்கள் கூட பேசித்தான் தீர்க்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #Rajinikanth #KamalHaasan #CauveryIssue
    காவிரி நீர் திறக்கும் முழு உரிமை மேலாண்மை ஆணையத்துக்கு மட்டுமே இருக்கிறது எனவும் கமல் கர்நாடக முதல்வருக்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்தால் காவிரி நீர் வந்துவிடாது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். #jayakumar #cauveryissue
    சென்னை:

    சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஸ்டெர்லைட் ஆலையை மூடும் முழு உரிமையும் மாநில அரசுக்கு உள்ளது என்றும், கொள்கை முடிவுகளின் அடிப்படையிலேயே ஆலையை மூடியதாகவும் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றம் மட்டுமன்றி, சர்வதேச நீதிமன்றங்களுக்கு சென்றாலும் இனி தமிழகத்தில் மீண்டும் அந்த ஆலையை திறக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

    கொள்கை முடிவுகளின் அடிப்படியில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை மாற்ற முடியாது என்பது ஸ்டாலினுக்கும் தெரியும் என்றும் தூங்குபவர்களை எழுப்பி விடலாம் ஆனால் தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பதிலளித்துள்ளார். மேலும், ஸ்டாலின் போன்ற எதிர்க்கட்சியினர் அரசியல் ரீதியாக மக்களை குழப்பவே முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதைத்தொடர்ந்து நீட் தேர்வு குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், மாநில அரசின் எதிர்ப்புகளை மீறி நீட் தேர்வு அளிக்கப்பட்டு விட்டதாகவும், இருப்பினும் தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்களை நீட் தேர்வுக்கு தயார் படுத்தும் முயற்சியில் அரசு தீவிரமாக செயல்படுவதாக தெரிவித்துள்ளார்.

    அதைத்தொடர்ந்து கமலஹாசன் நேற்று கர்நாடக முதல்வரை சந்தித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்ட பின்னர் நீர் திறக்கும் முழு உரிமை அந்த ஆணையத்துக்கு மட்டுமே இருப்பதாகவும், மாநில அரசுகளால் அந்த முடிவுகளை எடுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், கமலஹாசன் கர்நாடகா சென்று முதல்மந்திரி குமாரசாமியை சந்தித்து கட்டிப்பிடி வைத்தியம் செய்வதன் மூலம் காவிரியில் நீர் வந்துவிடாது என பதிலளித்துள்ளார். #jayakumar #cauveryissue
    காவிரி விவகாரத்தில் இணக்கமான நல்லுறவு ஏற்பட வேண்டும் என்றும், எனவே தமிழக அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்துள்ளார். #Kamalhaasan #Kumaraswamy
    பெங்களூரு:

    காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரம் தொடர்பாக கர்நாடகத்திற்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே பிரச்சினை நீடித்து வருகிறது. காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பில் சுப்ரீம் கோர்ட்டு சிறிய அளவில் திருத்தம் செய்தது. தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட தண்ணீரின் அளவை குறைத்து, அதை பெங்களூருவின் குடிநீர் தேவைக்கு வழங்கியது. இந்த பிரச்சினையில் நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்துள்ளது.

    அதில் தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி, கேரளா ஆகிய 4 மாநிலங்களின் பிரதிநிதிகளும் இடம் பெறுகிறார்கள். தமிழக அரசு தனது பிரதிநிதிகளை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. கர்நாடக அரசு இதுபற்றி இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தி முடிவு எடுப்பதாக முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்து இருக்கிறார். இதற்கான ஆலோசனையில் கர்நாடக அரசு ஈடுபட்டுள்ளது.

    இந்த நிலையில் கர்நாடக புதிய முதல்-மந்திரி குமாரசாமியை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் பெங்களூருவில் உள்ள கிருஷ்ணா இல்லத்தில் நேற்று சந்தித்து பேசினார்.

    இரு மாநிலங்களுக்கு இடையே நிலவி வரும் காவிரி பிரச்சினை குறித்து அவர்கள் இருவரும் சுமார் 20 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தைக்கு பின் அவர்கள் இருவரும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். முதலில் குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    காவிரி பிரச்சினையில் கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு இடையே ஒரு இணக்கமான நல்லுறவு ஏற்பட வேண்டும் என்று கமல்ஹாசன் விரும்புகிறார். அதுபற்றி நாங்கள் பேசினோம்.

    இரு மாநிலங்களும் பரஸ்பரம் இணக்கமான நல்லுறவை தொடர வேண்டும் என்று அவர் கூறினார். காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. சகோதரத்துவ மனப்பான்மையுடன் இரு மாநிலங்களும் நட்புறவோடு பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் சொன்னார்.

    கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு என இரு மாநில விவசாயிகளுமே எங்களுக்கு முக்கியமானவர்கள். காவிரி பிரச்சினையில் கர்நாடக விவசாயிகளுக்கு சில கருத்து வேறுபாடுகள் இருப்பது உண்மை தான். இவற்றை பரஸ்பர பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும். பிரச்சினைகளையும் இரு மாநில விவசாயிகள் சரிசமமாக பகிர்ந்துகொள்ள வேண்டும்.

    இந்த பிரச்சினை குறித்து தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயார்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார்.



    தமிழக மக்கள் சார்பில் நான் இங்கு வந்து கர்நாடக முதல்-மந்திரியை சந்தித்தேன். அவரும் கர்நாடக மக்கள் சார்பில் என்னிடம் பேசினார். இரு மாநிலங்களும் சகோதரத்துவ மனப்பான்மையுடன் காவிரி நீர் பிரச்சினையை அணுகி தீர்த்துக்கொள்ள வேண்டும். காவிரி பிரச்சினை குறித்து சில முக்கியமான விஷயங்களை கர்நாடக முதல்-மந்திரியிடம் எடுத்துக் கூறினேன். குறுவை சாகுபடிக்கு தண்ணீர் வேண்டும் என்று கூறினேன். எனது உணர்வை அவரும் பிரதிபலித்தார். இந்த பேச்சுவார்த்தை உணர்வுப்பூர்வமாக இருந்தது.

    குமாரசாமியின் பேச்சு எனது இதயத்தை நிரப்பிவிட்டது. காவிரி இல்லாமல் இரு மாநில மக்களும் வாழ முடியாது. நான் வக்கீல் கிடையாது. ஆனால் எனது தந்தை வக்கீலாக பணியாற்றியவர். எங்கள் குடும்பத்தில் பலர் வக்கீலாக இருக்கிறார்கள். அவர்கள் கூறும் ஆலோசனை என்னவென்றால், கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு மக்கள் ஒன்றுசேர வேண்டும் என்பது தான். இந்த பிரச்சினையில் நமது மனநிலை மாற வேண்டும்.

    எங்களது கட்சி சிறிய கட்சி. நான் இப்போது தான் குழந்தையாக உள்ளேன். இப்போது தான் கட்சியே ஆரம்பித்துள்ளேன். எனக்கு எந்த சுமையும் இல்லை. நான் ‘ஈகோ’ பார்க்கவில்லை. அதனால் மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்காக அணிலாக, பாலமாக, காலணியாக மாறவும் தயார். குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பிறகு கர்நாடகத்தில் மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

    அரசியலை விட நமக்கு விவசாயிகளின் நலன் முக்கியம். காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த ஆணைய வழிகாட்டுதல்படி இரு மாநிலங்களும் நடந்து கொள்ளும் என்று நம்புகிறேன். சுமுகமான பேச்சுவார்த்தை மூலம் காவிரி பிரச்சினை மட்டுமல்ல, தேசத்தில் இருக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண முடியும். முதல்-மந்திரி குமாரசாமியின் பேச்சு பெருந்தன்மையாக இருந்தது. இது நீண்ட நட்பின் தொடக்கம் ஆகும்.

    இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.  #Kamalhaasan #Kumaraswamy #Tamilnews 
    காவிரி சிக்கல் குறித்து கர்நாடக முதல்-அமைச்சர் குமாரசாமியுடன் கமல்ஹாசன் சந்திப்பு குறித்து ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா முதல்-மந்திரி குமாரசாமியை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று சந்தித்து பேசினார்.

    இந்த சந்திப்புக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    காவிரி பாசன விவசாயிகள் கவனத்திற்கு, காவிரி சிக்கல் குறித்து கர்நாடக முதல்- அமைச்சருடன் கமல்ஹாசன் இன்று பேச்சு நடத்துகிறாராம். அநேகமாக நாளை அல்லது அதற்கு மறுநாள் காவிரியில் தண்ணீர் வந்துவிடும் என்பதால் குறுவைப் பாசனத்திற்கு தயாராக இருக்கவும்.

    காவிரி சிக்கலில் பேச்சு கூடாது என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆர்வக்கோளாறில் செய்யப்படும் சில நடவடிக்கைகள் ஆபத்தை ஏற்படுத்தி விடும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PMK #Ramadoss #KamalHaasan
    காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா முதல்வர் குமாரசாமியை நேரில் சந்தித்த, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், காவிரி விவகாரத்தில் அணிலாகவும், பாலமாகவும் செயல்படுவேன் என்று தெரிவித்துள்ளார். #cauveryissue
    பெங்களூரு:
        
    காவிரி விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று பெங்களூரு சென்றிருந்தார். இன்று காலை கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமியை சந்தித்த கமல்ஹாசன், காவிரி விவகாரத்தில் இரு மாநிலங்களும் சுமுகமாக செயல்படுவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

    இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கமல்ஹாசன்,

    நான் ஒரு அரசியல் கட்சி தலைவராக இங்கு வரவில்லை, மக்களின் பிரதிநிதியாக வந்துள்ளேன் என்றார். குறுவை சாகுபடிக்கான காலம் வந்துவிட்டதாகவும், அதனை நினைவுபடுத்தி அதற்கு தேவையான தண்ணீரை திறந்து விடக்கோரி, இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறியுள்ளார். மேலும், அரசியல் தேவைகளை விட விவசாயிகளின் தேவையே மிகவும் முக்கியம் என தெரிவித்துள்ளார்.

    இந்த சந்திப்பு மிகவும் நல்ல முறையில் நடைபெற்றதாகவும், இரு மாநிலங்கள் மட்டுமன்றி, தேசிய அளவிலான பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் எனவும் கமல் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், கர்நாடக முதல்மந்திரி குமாரசாமியுடனான இந்த சந்திப்பு கூட்டணி குறித்தது அல்ல, மக்களின் நலனுக்கானது, காவிரி விவகாரத்தில் அணிலாகவும் பாலமாகவும் செயல்படுவேன் என்றும் கமல் தெரிவித்துள்ளார். #cauveryissue
    கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமியை இன்று சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் காவிரி விவகாரத்தில் இரு மாநிலங்களும் சுமுகமாக செயல்படுவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார். #Kamalhaasan #Kumaraswamy
    பெங்களூர்:

    தமிழகம்-கர்நாடகம் இடையே 40 ஆண்டுகளாக காவிரி பிரச்சினை தீர்க்கப்படாமல் இருந்ததால் இருமாநில நல்லுறவு பாதிக்கப்பட்டது.

    காவிரி பிரச்சினை எழும் போதெல்லாம் பெங்களூரில் தமிழர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இதற்கு இரு மாநிலங்கள் இடையே நல்லிணக்கம் மற்றும் சுமூக நிலை இல்லாததே காரணம். இதற்கான முயற்சிகளில் எந்த அரசியல் தலைவர்களும் ஈடுபடவில்லை.



    இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கியதும் நடிகர் கமல்ஹாசன் காவிரி பிரச்சினையில் இரு மாநிலங்களுக்கு இடையே கசப்புணர்வை தீர்க்க பாடுபடுவேன், கர்நாடக முதல்-மந்திரியை சந்தித்து பேசுவேன் என்று அறிவித்தார்.

    கர்நாடக முதல்-மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்றபோது அந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.

    சோனியா, ராகுல், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை அந்த நிகழ்ச்சியில் சந்தித்துப் பேசினார். முதல்-மந்திரி குமாரசாமியையும் தனியாக சந்தித்து பேசினார்.

    கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கமல்ஹாசனை வரவேற்று அவர் தோள் மீது கைபோட்டு பேசும் அளவுக்கு சகஜமாக பழகினார். கமல்ஹாசனின் இந்த சந்திப்பு தமிழர்-கன்னடர் உறவை மேம்படுத்துவதாக இருந்தது.

    இந்த நிலையில் கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமியை மீண்டும் சந்திக்க கமல்ஹாசன் முடிவு செய்தார். சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கும்படி கடிதம் எழுதினார். அதை ஏற்று குமாரசாமி இன்று கமல்ஹாசனை சந்திப்பதாக பதில் அனுப்பினார்.

    இதை ஏற்று கமல்ஹாசன் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் சென்றார். இரவு ஓட்டலில் தங்கினார்.

    இன்று அவர் பெங்களூரில் முதல்-மந்திரியின் அதிகாரப்பூர்வமான கிருஷ்ணா இல்லம் சென்றார். அவரை குமாரசாமி வரவேற்று அழைத்துச் சென்றார். குமாரசாமிக்கு கமல்ஹாசன் பூங்கொத்து வழங்கினார். பதிலுக்கு குமாரசாமியும் பூங்கொத்து வழங்கினார்.

    குமாரசாமியை கமல்ஹாசன் சந்தித்து இருப்பதை கர்நாடகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள் வரவேற்றுள்ளன. #Kamalhaasan #Kumaraswamy


    காவிரி நீர் மேலாண்மை ஆணையம் குறித்து நிபுணர்களின் கருத்து கேட்டு முடிவு எடுக்கப்படும் என்று கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி கூறியுள்ளார். #CauveryManagementAuthority #Kumaraswamy
    பெங்களூரு:

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து அதை அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தங்களின் பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. அதன்படி தமிழக அரசு தனது பிரதிநிதிகளை நேற்று நியமித்தது.

    இந்த நிலையில் இதுகுறித்து முதல்-மந்திரி குமாரசாமியிடம் பெங்களூருவில் நேற்று நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்கையில் கூறியதாவது:-

    காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. இதுகுறித்து அரசிதழில் வெளியிட்டுள்ளது. இதனால் கர்நாடகத்திற்கு ஏற்படும் சாதகங்கள் மற்றும் பாதகங்கள் குறித்து ஆராய வேண்டும். இதுகுறித்து நிபுணர்களின் கருத்து கேட்டு முடிவு எடுக்கப்படும். கர்நாடகத்தின் நலனை காக்க மாநில அரசு தயாராக உள்ளது.

    இவ்வாறு குமாரசாமி கூறினார். #CauveryManagementAuthority #Kumaraswamy
    கர்நாடகாவில் காலா திரைப்படத்தை வெளியிடுவது குறித்து அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என அம்மாநில முதல்மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார். #kaalaissue
    பெங்களூரு:

    நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு பல்வேறு தரப்பில் ஆதரவும் எதிர்ப்பும் வந்தவண்ணம் உள்ளது. தமிழக அரசியலில் ரஜினி தம்மை நிலைப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில், கர்நாடகாவில் காலா திரைப்படத்தை வெளியிட விடமாட்டோம் என சமீபத்தில் வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்தார். அதைத்தொடர்ந்து, கர்நாடகா திரைப்பட வர்த்தக சபையும் காலா திரைப்படத்தை வெளியிட வேண்டாம் என முடிவு செய்து அறிவித்தது.

    இச்சம்பவம் தொடர்பாக பேசிய ரஜினி, கர்நாடகத்தில் திரைப்படத்தை வெளியிடும் விவகாரத்தை தென்னிந்திய வர்த்தகசபை பார்த்துக்கொள்ளும் என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் முதல்வர் குமாரசாமிக்கு மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், ரஜினியின் காலா திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் குமாரசாமி, காலா திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடுவது குறித்து அரசு முடிவு எடுக்கவில்லை எனவும், மக்கள் வேண்டாம் என முடிவு செய்துவிட்டால் யாரும் ஒன்றும் செய்யமுடியாது எனவும் தெரிவித்துள்ளார். #kaalaissue
    காங்கிரஸ் தயவில் கர்நாடகாவில் ஆட்சியமைத்துள்ள குமாரசாமி, 5 ஆண்டுகளும் முதல்வராக இருக்க காங்கிரஸ் ஒத்துழைப்பு அளிக்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளதையடுத்து நீடித்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. #KumaraSwamy #Karnataka #congress
    பெங்களூர்:

    கர்நாடகத்தில் ஜே.டி.எஸ். காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தது. முதல்-மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்றார். சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபித்து ஒரு வாரம் ஆகியும் மந்திரிகள் பதவி ஏற்கவில்லை.

    முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வது மற்றும் முக்கிய இலாகாக்கள் ஒதுக்கீடு என காங்கிரஸ் பல்வேறு நிபந்தனைகள் விதித்தது. இதில் முதல்-மந்திரி பதவியை விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கே இடம் இல்லை, தொடர்ந்து 5 ஆண்டுகள் முதல்-மந்திரி பதவியில் நீடிப்பேன் என்று குமாரசாமி பிடிவாதமாக மறுத்து விட்டார்.

    இதேபோல் காங்கிரஸ் தங்களுக்கு நிதி, நீர்ப்பாசனம், உள்துறை போன்ற முக்கிய இலாகாக்கள் வேண்டும் என்று கேட்டது. இதற்கும் குமாரசாமி மறுத்து விட்டார். இதுபற்றி காங்கிரஸ் மேலிட தலைவர்களிடம் மாநில தலைவர்கள் முறையிட்டனர்.



    என்றாலும் இழுபறி நீடித்தது. வேறு வழியில்லாமல் காங்கிரஸ் இதில் பணிந்து விட்டது. காங்கிரஸ் மேலிட தலைவர்கள் பாராளுமன்ற தேர்தல் கூட்டணியை மனதில் வைத்து புதிய சமரச திட்டத்தை தெரிவித்தனர். அதன்படி மாநிலத்தில் குமாரசாமி முதல்-மந்திரியாக நீடித்தால், பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஜே.டி.எஸ். கட்சி போட்டியிட வேண்டும் என்று தெரிவித்தது.

    முதலில் தயங்கிய குமாரசாமி பின்னர் நீண்ட பேச்சுவார்த்தைக்குப்பின் சமரசம் ஆனார். முதல்-மந்திரி பதவியில் 5 ஆண்டு நீடிப்பது தொடர்பான உறுதிமொழி ஒப்பந்தத்தை எழுத்துப் பூர்வமாக அளிக்க வேண்டும் என்று குமாரசாமி கேட்டார். அதற்கும் காங்கிரஸ் சம்மதித்தது. இது மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக காங்கிரஸ் மேலிட தலைவரும் பொதுச்செயலாளருமான கே.சி.வேணுகோபால் நேற்று பெங்களூர் வந்து மாநில தலைவர்களை சந்தித்து பேசி சமாதானப்படுத்தினார். 5 சுற்று பேச்சுவார்த்தைக்குப்பின் சமாதானம் அடைந்தனர்.

    அதன்பிறகு குமாரசாமியையும் கே.சி.வேணுகோபால் சந்தித்துப் பேசினார். காங்கிரசின் உத்தரவாதத்தை நேரில் அளித்தார். இதையடுத்து காங்கிரஸ்- ஜே.டி.எஸ். கூட்டணி உடன்பாடு பற்றி இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படுகிறது. அதன் பிறகு ஓரிரு நாட்களில் இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டு மந்திரிகள் பதவி ஏற்பார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. #KumaraSwamy #Karnataka #congress

    ×