search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 100153"

    காங்கிரஸ் விரும்பினால் முதல்-மந்திரி பதவியில் இருந்து விலக தயாராக இருப்பதாக குமாரசாமி இன்று தெரிவித்துள்ளார். #Congress #Kumaraswamy
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் மதசார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா சதி செய்து வருவதாக 2 கட்சி தலைவர்களும் குற்றம் சாட்டி வந்தனர். அவர்கள் உள்கட்சி மோதலில் பா.ஜனதாவை தேவையில்லாமல் வம்புக்கு இழுப்பதாக எடியூரப்பா பதிலடி கொடுத்து இருந்தார்.

    இந்த நிலையில் கூட்டணி கட்சி மோதல் இன்று பகிரங்கமாக வெடித்தது. காங்கிரசை சேர்ந்த சோமசேகர் எம்.எல்.ஏ. சித்தராமையா ஆட்சியை புகழ்ந்து பேட்டி கொடுத்தார். அவர் கூறியதாவது:-

    கடந்த 5 ஆண்டு காலம் சித்தராமையா நன்றாக ஆட்சி நடத்தினார். மக்களுக்கு தேவையான அனைத்து பணிகளும் திட்டமிட்டபடி நடந்தன. ஆனால் தற்போது கூட்டணி ஆட்சியில் எந்த பணிகளும் நடைபெறவில்லை. எங்களை மதிப்பதும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினர்.

    இதே போல மந்திரி நாகராஜ் கூறும்போது, கூட்டணி ஆட்சியில் எந்த பணியும் நடைபெறவில்லை என்றார்.

    இவர்களது பேட்டியை பார்த்து அதிருப்தி அடைந்த கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் இன்று காரசாரமாக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


    கூட்டணி ஆட்சியை விமர்சித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பேசுவது கொஞ்சமும் சரியல்ல. இது கூட்டணி தர்மத்தை மீறிய செயல் ஆகும். இவர்கள் இப்படிபேசுவதால் எங்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. காங்கிரஸ் கட்சிக்குதான் பாதிப்பை ஏற்படுத்தும். காங்கிரஸ் விரும்பினால் நான் முதல்-மந்திரி பதவியில் இருந்து விலக தயாராக இருக்கிறேன். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும், சித்தராமையா தான் முதல்வர் என்று கூறி வருகிறார்கள். வேடிக்கை பார்க்கும் காங்கிரஸ் அவர்களது எம்.எல்.ஏ.க்களை கட்டுக்குள் வைக்க வேண்டும். கூட்டணி அரசின் எல்லா வி‌ஷயங்களிலும் அவர்கள் (காங்கிரஸ்) தலையிட்டு வருகிறார்கள். நான் இதை அமைதியாக வேடிக்கை பார்த்து வருகிறேன். எல்லா நேரங்களிலும் இது மாதிரி இருக்கமுடியாது. அவர்கள் விரும்பினால் நான் முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகி விடுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குமாரசாமி பேட்டிக்கு பதில் கூறும் வகையில் காங்கிரசை சேர்ந்த துணை முதல்மந்திரி பரமேஸ்வர் கூறியதாவது:-

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பேசுவதில் தவறு இல்லை. 5 ஆண்டு காலம் சித்தராமையா சிறப்பான ஆட்சியை நடத்தினார். அதனால் அவரை பற்றி எம்.எல்.ஏ.க்கள் பேசுகிறார்கள். அவர்தான் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் என்பதால், அவரை முதல்வர் என்று எம்.எல்.ஏ.க்கள் அழைக்கிறார்கள். குமாரசாமி முதல்-மந்திரியாக தொடர்வதில் எங்களுக்கு மகிழ்ச்சிதான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டணி ஆட்சியை விமர்சித்து பேசிய எம்.எல்.ஏ. சோமசேகருக்கு விளக்கம் கேட்டும் நோட்டீசு அனுப்பப்படும் என்று கர்நாடக மாநில காங்கிரஸ் செயல் தலைவர் தினேஷ்குண்டுராவ் தெரிவித்தார். #Congress #Kumaraswamy
    பாராளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரசுடன் பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை என்று தேவே கவுடா கூறினார். #DeveGowda
    பெங்களூரு :

    ஜனதா தளம்(எஸ்) தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இதுவரை தொடங்கவில்லை. இந்த பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும்.

    பெங்களூரு நகருக்குள் வரும் பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஒரு செயல் தலைவர் நியமனம் செய்யப்படுவார். தேர்தல் பொறுப்பாளராக குபேந்திரரெட்டி எம்.பி. நியமனம் செய்யப்படுவார். அவர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் கலந்துரையாடுவார். தேர்தல் பிரசாரத்தை அவர் ஒருங்கிணைப்பார்.

    காங்கிரசுடன் பேச்சுவார்த்தை தொடங்கிய பிறகே, எத்தனை தொகுதிகள் எங்களுக்கு கிடைக்கும் என்பது தெரியவரும். பெங்களூரு வடக்கு தொகுதியில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

    ஹாசன் தொகுதியில் எனது பேரன் பிரஜ்வல்லை நிறுத்து முடிவு செய்துள்ளேன் என்பதை நான் ஏற்கனவே கூறி இருக்கிறேன். ஆயினும் இதுபற்றி எங்கள் கட்சியின் உயர்நிலை குழு கூட்டத்தில் தான் இறுதி முடிவு எடுக்கப்படும்.

    ஏழை மக்களின் நலனை காக்க குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு செயலாற்றி வருகிறது.

    இவ்வாறு குமாரசாமி கூறினார்.

    இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் டி.ஏ.ஷரவணா எம்.எல்.சி., குபேந்திரரெட்டி எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.#DeveGowda
    ஆபரேசன் தாமரை திட்டத்தை பா.ஜனதா கைவிடவில்லை. இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது என்று கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார். #kumarasamy #bjp #congressmlas #yeddyurappa

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதள ஆட்சியை கவிழ்க்க பாரதீய ஜனதா சதி செய்து வருவதாக கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி கூட்டணி ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல் மந்திரியுமான சித்தராமையா ஆகியோர் கூறி இருந்தனர்.

    ஏற்கனவே 2 முறை ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்ததாகவும், தற்போது 3-வது முறையாக இந்த முயற்சியை மேற்கொண்டு வருவதாகவும் சித்தராமையா மற்றும் துணை முதல்மந்திரி பரமேஸ்வர் ஆகியோர் குற்றம் சாட்டி இருந்தனர்.

    இதைத்தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்க காங்கிரசார் நடவடிக்கை எடுத்தாலும் பாரதீய ஜனதா தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் போனில் பேசி அவர்களை இழுக்க முயற்சி செய்து வருவதாக கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி குற்றம் சாட்டி உள்ளார்.

    இதுகுறித்து அவர் பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடக மாநிலத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா முயற்சிக்க வில்லை என்று எடியூரப்பா கூறி இருக்கிறார். ஆபரேசன் தாமரை நடைபெறவில்லை என்றும் அவர் கூறி இருக்கிறார். ஆனால் உண்மையில் ஆபரேசன் தாமரை திட்டத்தை பா.ஜனதா கைவிடவில்லை. இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.

    எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியில் பா.ஜனதா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

    கடந்த வியாழக்கிழமை இரவு கூட காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவருடன் பா.ஜனதாவினர் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்கள். அப்போது பா.ஜனதாவுக்கு வரும்படி அந்த எம்.எல்.ஏ.வை அழைத்து இருக்கிறார்கள்.

    அதற்காக மிகப்பெரிய பரிசை கொடுப்பதாக அந்த எம்.எல்.ஏ.விடம் சொல்லி இருக்கிறார்கள். அந்த மிகப்பெரிய பரிசு நீங்கள் நினைப்பது போல் மிகக்குறைவான பரிசு அல்ல. அது மிகப்பெரிய பரிசு.

    அந்த மிகப்பெரிய பரிசு என்னவென்று நான் சொன்னால் அனைவரும் வியப்படைவீர்கள். மிகப்பெரிய பரிசு மட்டுமல்ல பணமும் கொடுப்பதாக அந்த எம்.எல்.ஏ.விடம் பா.ஜனதாவினர் பேரம் பேசி இருக்கின்றனர்.

    ஆனால் அந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. பா.ஜனதாவுக்கு வரமாட்டேன் என்று கூறி இருக்கிறார். தற்போது தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தன்னை தொடர்பு கொள்வதை விட்டுவிடும்படியும் அந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. பா.ஜனதாவிடம் கூறி இருக்கிறார். இந்த தகவலை அந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.வே என்னிடம் கூறினார்.

    அந்த எம்.எல்.ஏ.வுக்கு பா.ஜனதா கொடுக்கும் மிகப்பெரிய பரிசு என்ன என்பதை நான் கூறமாட்டேன். அதுகுறித்து அந்த எம்.எல்.ஏ.வை தொடர்பு கொண்டு நீங்கள் கேட்டுக்கொள்ளுங்கள்.


    கடந்த 2008-ம் ஆண்டு எம்.எல்.ஏ.க்களை பேரம் பேசி இழுத்து முதல் மந்திரி பதவியை எடியூரப்பா தக்க வைத்துக்கொண்டார். அதுபோலத்தான் தற்போதும் எம்.எல்.ஏ.க் களை இழுக்கும் பணியை பா.ஜனதா மேற்கொண்டு வருகிறது.

    எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா முயற்சித்து வருவதை நான் ஒன்றும் செய்ய முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #kumarasamy #bjp #congressmlas #yeddyurappa

    பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்திக்கு, கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி ஆதரவு தெரிவித்துள்ளார். #Kumaraswamy #RahulGandhi
    பெங்களூரு:

    பிரதமர் வேட்பாளராக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆதரிப்பதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்திக்கு, கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி ஆதரவு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி அறிவிக்கப்பட்டால், அவரை நாங்கள் ஆதரிப்போம். இதற்கு எங்கள் கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடாவும் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

    பா.ஜனதாவுக்கு எதிராக அனைத்து மாநில கட்சிகளும் ஒன்றுகூடி போராட வேண்டியது அவசியம். பிரதமர் பதவியை நிர்வகிக்கும் தகுதி, திறன் ராகுல் காந்திக்கு உள்ளது. பிரதமர் மோடிக்கு பலமான போட்டியாளர் ராகுல் காந்தி.

    பிரதமர் மோடி வெறும் காகித புலி. கடந்த தேர்தலின்போது, மக்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் அவர் நிறைவேற்றவில்லை. வெறும் வாய்ப்பேச்சால் நாட்டு மக்களின் கவனத்தை திசைதிருப்புகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார். #Kumaraswamy #RahulGandhi
    நாட்டை வழிநடத்தும் அனைத்து தகுதிகளும் மம்தா பானர்ஜிக்கு இருக்கிறது என்று கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி கூறினார். #MamataBanerjee #Kumaraswamy
    கொல்கத்தா:

    மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் அந்த மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி மத்திய பா.ஜனதா தலைமையிலான ஆட்சியை வருகிற தேர்தலில் தோற்கடிப்பதற்காக 22 எதிர்க்கட்சிகளை திரட்டி பொதுக்கூட்டம் நடத்தினார்.

    இதில் கர்நாடக முதல்-மந்திரியும், ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவருமான குமாரசாமியும் கலந்துகொண்டார். குமாரசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    மம்தா பானர்ஜி இந்த மகாகூட்டணியை திரட்டி பொதுக்கூட்டத்தை நடத்தி மிகப்பெரிய வேலையை செய்துள்ளார். ஏன் இடதுசாரி கட்சிகளைக்கூட அவர் இந்த கூட்டணியில் பங்கேற்கும்படி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இது பா.ஜனதா அரசுக்கு எதிரான அவரது போராட்ட தந்திரத்தையும், பெருந்தன்மையையும் காட்டுகிறது. இந்த போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்காக அவர் சில சமரசங்களை செய்துகொள்ளவும் தயாராக இருக்கிறார்.

    தலைமையை முடிவு செய்வது தேர்தல் வெற்றிக்கு ஒரு அளவுகோல் இல்லை. பிரதமர் நரேந்திரமோடி அரசின் நிர்வாகத்தின் மீது நாட்டு மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பல மாநிலங்களிலும் அவர்களது சொந்த பிரச்சினைகள் உள்ளன. எனவே தேர்தலுக்கு முன்பு தலைவரை தேர்வு செய்யவேண்டிய அவசியம் இல்லை.

    நாட்டின் முன்னேற்றத்துக்கு மிகப்பெரிய திட்டங்களை கொண்டுள்ள வலுவான தலைவர்கள் இருக்கிறார்கள். இப்போதைய அரசு தோல்வியடைந்த திட்டங்களில் அவர்கள் முன்னேற்றம் காணச் செய்வார்கள். தேர்தல் முடிந்த பின்னர் நாங்கள் கூடி தலைவரை தேர்வு செய்வோம். இதில் எந்த பிரச்சினையும் இல்லை. 1977-ம் ஆண்டில் பிரதமர் இந்திராகாந்திக்கு எதிராக நாடு முழுவதும் கிளர்ச்சி ஏற்பட்டது போன்ற சூழ்நிலை இப்போது ஏற்பட்டுள்ளது.



    மம்தா பானர்ஜி மிக எளிமையாகவும், மிகச்சிறந்த நிர்வாகியாகவும் இருக்கிறார். அவருக்கு இந்த நாட்டை தலைமை தாங்கி வழிநடத்தும் அனைத்து தகுதிகளும் இருப்பதாக நான் நம்புகிறேன். அவர் ஏற்கனவே மேற்கு வங்காளத்திற்கு தலைமை தாங்கி வழிநடத்தி இதனை நிரூபித்து இருக்கிறார்.

    இந்த மகா கூட்டணி தேசிய கட்சிகளுக்கு மாற்றாக இருக்கும். ஒவ்வொரு கட்சிக்கும் தேசிய கட்சி உறுப்பினர்களைவிட வலிமையான மாநில தலைவர்கள் இருக்கிறார்கள். இந்த மாநில கட்சிகள் தேர்தலில் முக்கிய பங்காற்றும். இந்த முறை மக்கள் அவர்களை வெற்றி பெறச் செய்வார்கள். தேர்தலுக்கு பின்னர் சந்திரசேகர்ராவ் போன்ற மேலும் பல தலைவர்கள் இந்த கூட்டணியில் சேருவார்கள்.
     
    இவ்வாறு குமாரசாமி கூறினார். #MamataBanerjee #Kumaraswamy
    கர்நாடக மாநிலத்தில் சட்டசபை உறுப்பினர் ஆனந்த் சிங் என்பவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் எம்.எல்.ஏ. கணேஷ் காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். #CongressMLAGanesh #CongressMLA #MLAGaneshsuspended
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் சொகுசு ஓட்டலில் தாக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆனந்த் சிங் காயங்களுடன் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இதுதொடர்பாக விசாரணை நடத்த துணை முதல் மந்திரி பரமேஸ்வரா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அம்மாநில மந்திரிகள் கிருஷ்ணா பைரே கவுடா, கே.ஜே.ஜார்ஜ் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

    இச்சம்பவம் தொடர்பாக போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதற்கிடையில், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் உத்தரவின்படி, ஆனந்த் சிங்-ஐ தாக்கிய எம்.எல்.ஏ. கணேஷ் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் கோர்ப்பாடே இன்று மாலை தெரிவித்துள்ளார். #CongressMLAGanesh #CongressMLA #MLAGaneshsuspended 
    சித்தகங்கா மடத்தின் ஜீயர் ஸ்ரீ சிவகுமார சுவாமிஜியின் இறுதிச்சடங்கில் ஜனாதிபதி, பிரதமர், ராகுல் காந்தி ஆகியோர் நாளை பங்கேற்பதாக தெரியவந்துள்ளது. #ShreeShivakumaraSwamiji #Siddagangaseer
    பெங்களூரு:
       
    மத்திய அரசின் உயரிய விருதான ‘பத்மபூஷன்’ பட்டத்துடன் ‘நடமாடும் தெய்வம்’ என அவரது பக்தர்களால் அழைக்கப்பட்ட சித்தகங்கா மடத்தின் ஜீயர் ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி வயோதிகம்சார்ந்த பிரச்சனைகளால் தனது 111-வது வயதில் இன்று காலமானார். 

    அவரது மரணம் தொடர்பான தகவல் வெளியானதும் சித்தகங்கா மடத்துக்கு சென்று கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி அஞ்சலி செலுத்தினார். முன்னாள் முதல் மந்திரிகள் சதானந்தா கவுடா, எடியூரப்பா ஆகியோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

    கடந்த 2007-ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கர்நாடக மாநிலத்துக்கு வந்திருந்தபோது துமக்கூருக்கு சென்று மடாதிபதி சிவகுமார சுவாமியை சந்தித்தது நினைவிருக்கலாம்.

    நாளை மாலை 4.30 மணியளவில் ஸ்ரீ சிவகுமார சுவாமிஜியின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ள நிலையில் அவரது மறைவுக்கு கர்நாடக மாநில அரசின் சார்பில் மூன்றுநாள் துக்கம் அனுசரிக்கப்படும். பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படும் என முதல் மந்திரி குமாரசாமி அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், நாளை மாலை நடைபெறும்  ஸ்ரீ சிவகுமார சுவாமிஜியின் இறுதிச்சடங்கில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்பதாக தெரியவந்துள்ளது.

    இதை தொடர்ந்து, தும்கூருக்கு வரும் முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர். அப்பகுதியில் பத்துக்கும் அதிகமான தற்காலிக ஹெலிப்பேடுகள் அமைக்கப்படுகின்றன. #ShreeShivakumaraSwamiji #Siddagangaseer
    கர்நாடக மாநிலம், சொகுசு ஓட்டலில் தாக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆனந்த் சிங் காயங்களுடன் சிகிச்சை பெறும் புகைப்படம் வெளியாகியுள்ளது. #Karnataka #CongressMLA #BengaluruResort #MLAAnandsingh
    பெங்களூரு:
       
    கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சி கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாரதீய ஜனதா கட்சி முயற்சிப்பதாக புகார் எழுந்தது.
     
    இந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராம்நகர் அருகேயுள்ள தனியார் சொகுசு ஓட்டலில் (ரெசார்ட்) தங்க வைக்கப்பட்டனர். பாரதீய ஜனதாவின் குதிரை பேரத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில்தான் இப்படி செய்திருப்பதாக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்திருந்தார்.

    நேற்று முன்தினம் இரவு, ரெசார்ட்டில் உள்ள ஒரு அறையில் பல்லாரி மாவட்டத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஆனந்த் சிங், பீமா நாயக், கணேஷ் ஆகியோர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களிடையே திடீர் மோதல் ஏற்பட்டது.

    பீமா நாயக், கணேஷ் ஆகியோர் ஆனந்த்சிங்கிடம், ‘நாங்கள் பா.ஜனதாவுக்கு செல்ல இருந்த ரகசிய திட்டத்தை நீங்கள் தான் காங்கிரஸ் கட்சி தலைவர்களிடம் கூறிவிட்டீர்கள்’ என்று குற்றம்சாட்டியதாக தெரிகிறது. 

    இதனால் அவர்களிடையே கடும் வாக்குவாதம் நடந்தது. வாக்குவாதம் முற்றிய நிலையில், கணேசும், பீமா நாயக்கும் சேர்ந்து தாக்கியதில் ஆனந்த் சிங் படுகாயம் அடைந்தார். பெங்களூருவில் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்று நேற்று தகவல்கள் வெளியாகின.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடையே மோதல் ஏற்பட்டு, அடிதடியில் முடிந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சிகிச்சை பெறும் ஆனந்த் சிங்கை மந்திரி ஜமீர் அகமதுகான் சந்தித்து நலம் விசாரித்தார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘ரெசார்ட்டில் நண்பர்களுக்குள் சிறிய அளவில் தகராறு நடந்துள்ளது. பெரிய சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. இதை ஊடகங்கள் தான் பெரிது படுத்துகின்றன’ என்றார்.

    மற்றொரு மந்திரியான டி.கே.சிவக்குமார், ‘எம்.எல்.ஏ.க்கள் இடையே மோதல் சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. ஊடகங்கள் தான் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டு வருகின்றன’ என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், ஆனந்த் சிங் அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தலை மற்றும் நெஞ்சு பகுதியில் பலமாக தாக்கப்பட்ட நிலையில் அவர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடபட்டுள்ளது.

    இதற்கிடையில், மருத்துவமனையில் வீங்கிய முகத்துடன் ஆனந்த் சிங் படுத்திருக்கும் புகைப்படம் சில ஊடகங்களில் வெளியாகி, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்குள் மோதல் நடந்தது உண்மைதான் என்பதை நிரூபித்துள்ளது. #Karnataka #CongressMLA #BengaluruResort #MLAAnandsingh
    கர்நாடகாவில், ஆட்சியை தக்க வைக்க, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் சொகுசு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால், குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு, ஆபத்து நீடிக்கிறது. #OperationLotus #CLP #KarnatakaPolitics #Congress
    பெங்களூரு:

    கர்நாடகாவில், முதல்வர் குமாரசாமி தலைமையிலான, மதச் சார்பற்ற ஜனதா தளம் - காங்.,கூட்டணி ஆட்சி நடக்கிறது. அமைச்சரவை விஸ்தரிப்புக்கு பின், காங்கிரசில் அதிகரித்த அதிருப்தி, இன்னும் ஓயவில்லை.

    அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட, ரமேஷ் ஜார்கிஹோளி, தன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களுடன் டெல்லி சென்றிருந்தார். பா.ஜ., மேலிட தலைவர்களை சந்திக்க முயற்சித்தார். இதற்கிடையில், கார்ப்பரேஷன் மற்றும் வாரிய நியமனத்துக்கு பின், காங்கிரசில் சில, எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தியில் கொதித்தனர். இவர்கள், ரமேஷ் ஜார்கிஹோளி கோஷ்டியில் இணைந்தனர். சிலர், அதிருப்தி கொடியேந்தி, மஹாராஷ்டிர மாநிலம், மும்பைக்கு பறந்தனர்.

    இந்த அதிருப்தியை சாதகமாக்கி, கர்நாடகாவில் ஆட்சியமைக்க, பா.ஜனதா தலைவர்கள், களமிறங்கியதாக தகவல் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த விவகாரத்தில், காங்கிரஸ் மேலிடம் தலையிட்டு, அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்த முயற்சி எடுத்து வருகிறது.

    இந்த பரபரப்பான நிலையில், காங், எம்.எல்.ஏ.,க்கள் சிறப்பு கூட்டம், சித்தராமையா தலைமையில் பெங்களூரில் நேற்று நடந்தது. எம்.எல்.ஏ.,க்கள் ஒவ்வொருவராக வந்ததால், கூட்டம் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இறுதியில், 76 எம்.எல்.ஏ.,க்கள் வந்தனர். நாகேந்திரா, மகேஷ் கமடள்ளி, உமேஷ் ஜாதவ், ரமேஷ் ஜார்கிஹோளி வரவில்லை.



    கூட்டத்தின் முடிவில், மேலிட தலைவர்கள் கூறியதாவது:

    பா.ஜ.,வின்,ஆப்பரேஷன் தாமரை' முயற்சி இன்னும் முடிவுக்கு வரவில்லை. எனவே, எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், சில நாட்கள் கட்டாயமாக சொகுசு விடுதியில் தங்க வேண்டும். எந்த விளக்கமும் தேவையில்லை. வீட்டுக்கு செல்ல வாய்ப்பு அளிக்க முடியாது. தொலைபேசி மூலம் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு, விடுதிக்கு செல்லும் விஷயத்தை கூறி, உங்களுக்கு தேவையான பொருட்களை வரவழைத்துக் கொள்ளுங்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    இதையடுத்து, காங்கிரஸ், எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், பிடதியில் உள்ள சொகுசு விடுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால், குமாரசாமி தலைமையிலான அரசுக்கு ஆபத்து நீடிக்கிறது. குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினர், கடும் கலக்கத்தில் உள்ளனர்.  #OperationLotus #CLP #KarnatakaPolitics #Congress 
    கூட்டணி ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் பா.ஜனதாவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார். #Kumaraswamy
    பெங்களூரு :

    பெங்களூரு விதானசவுதாவில் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கூட்டணி ஆட்சியை காப்பாற்றி கொள்ள பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை இழுக்க நாங்கள் முயற்சிக்கவில்லை. ஆனால் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க அனைத்து முயற்சியிலும் பா.ஜனதா தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை இழுக்க நான் முயற்சிப்பதாக எடியூரப்பா குற்றச்சாட்டு கூறியுள்ளார். இது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. புத்தாண்டை கொண்டாட எனது குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்றிருந்தேன். அதனை எடியூரப்பா பெரிய குற்றச்சாட்டாக கூறினார். தற்போது எதற்காக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் அரியானாவில் உள்ள ஓட்டலில் தங்கி உள்ளார்கள் என்று தெரியவில்லை.

    வறட்சி பாதித்த தாலுகாக்களில் நிவாரண பணிகள் நடைபெறவில்லை என்று எடியூரப்பா குற்றச்சாட்டு கூறியுள்ளார். பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அரியானா ஓட்டலில் அமர்ந்து வறட்சி பாதித்த தாலுகாக்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்களா? என்பது குறித்து எடியூரப்பா தான் சொல்ல வேண்டும். நான் ஓரிரு நாட்கள் வெளிநாட்டுக்கு சென்றதை பெரிதுபடுத்திய எடியூரப்பா, ஒரு வாரத்திற்கும் மேலாக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் டெல்லி மற்றும் அரியானாவில் தங்கி இருப்பது ஏன் என்பது குறித்து தெரிவிக்க வேண்டும்.



    பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களின் செல்போன்களை பறித்து வைத்து கொண்டு இருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளது. இவை எல்லாம் எதற்காக பா.ஜனதாவினர் செய்கிறார்கள் என்பது தெரியவில்லை.

    கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதாவினர் நினைப்பதாக நான் எந்த குற்றச்சாட்டும் சொல்லவில்லை. அதுபோன்ற தகவல்கள் பத்திரிகைகளில் தான் வருகிறது. காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்களை சரியாக வைத்துகொள்ள வேண்டியது, அந்தந்த கட்சிகளின் தலைவர்கள் பொறுப்பு தான் என்று பா.ஜனதாவினர் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். நாட்டில் எந்தவொரு மாநிலத்திலும் எம்.எல்.ஏ.க்களை ஒரே இடத்தில் அடைத்து வைப்பது கிடையாது. பா.ஜனதாவினர் தான் அப்படி செய்துள்ளனர்.

    எங்கள் எம்.எல்.ஏ.க்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. அதனால் அவர்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதித்துள்ளோம். கூட்டணி ஆட்சியை கவிழ்க்க நினைப்பது, மாநிலத்தில் பா.ஜனதா செய்யும் அரசியல் நிலை குறித்து மக்கள் தினம் தினம் கவனித்து வருகின்றனர். பா.ஜனதாவுக்கு சரியான நேரத்தில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார்.
    ஆபரேஷன் தாமரை நடைபெறவில்லை என்றும், மக்களை திசை திருப்ப காங்கிரஸ் முயற்சிப்பதாகவும் பா.ஜனதா குற்றச்சாட்டு கூறியுள்ளது. #BJP #Congress
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க ஆபரேஷன் தாமரை மூலம் எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா முயற்சித்து வருவதாக முதல்-மந்திரி குமாரசாமி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர். அதே நேரத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை, முதல்-மந்திரி குமாரசாமி இழுக்க முயற்சிப்பதாக கூறி அவர்கள் (பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள்) கடந்த 3 நாட்களாக டெல்லி மற்றும் அரியானாவில் உள்ள ஓட்டல்களில் முகாமிட்டு இருந்தனர். இந்த நிலையில், காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நேற்று தங்களது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அதுபோன்று எதுவும் நேற்று நடைபெறவில்லை.

    இதனால் பா.ஜனதாவின் ஆபரேஷன் தாமரை தோல்வியில் முடிந்துள்ளதாக காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) தலைவர்கள் கூறியுள்ளனர். அதே நேரத்தில் டெல்லி, அரியானாவில் முகாமிட்டுள்ள எடியூரப்பா மற்றும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் இன்று(வியாழக்கிழமை) பெங்களூருவுக்கு திரும்ப உள்ளனர். இதற்கிடையில், காங்கிரஸ் குற்றச்சாட்டு குறித்து பா.ஜனதா செய்தி தொடர்பாளர் சி.டி.ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-



    கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா நினைக்கவில்லை. ஆபரேஷன் தாமரையும் நடக்கவில்லை. ஆனால் மக்களை திசை திருப்பவும், பா.ஜனதாவுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தவும் எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயற்சிப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டு கூறி நாடகமாடுகின்றனர்.

    எங்களது கட்சி எம்.எல்.ஏ.க்கள் பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக டெல்லியில் தங்கியுள்ளனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யாரும் பா.ஜனதாவுடன் தொடர்பில் இல்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் பா.ஜனதா மீது குற்றச்சாட்டு கூறுவது சரியல்ல.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #BJP #Congress
    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவினர் பேரம் பேசிய ஆதாரங்களை வெளியிடுவோம் என்றும், தற்போது அதிருப்தியில் உள்ள 3 எம்.எல்.ஏ.க்கள் மும்பையில் உள்ளனர் என்றும் மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். #DKShivakumar
    பெங்களூரு :

    பெங்களூருவில் மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பா.ஜனதாவினர் ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். எல்லாருக்கும் பதவி மீது ஆசை இருக்கத்தான் செய்யும். ஆனால் பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லை. அதனால் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளது. ஆட்சி, அதிகாரத்திற்காக பா.ஜனதா செய்யும் தந்திரங்கள் பற்றி நன்கு தெரியும்.

    எத்தனை எம்.எல்.ஏ.க்களுடன் அவர்கள் பேரம் பேசி உள்ளனர். எம்.எல்.ஏ.க்களுக்கு எந்த விதமான பதவிகள், பணம் தருவதாக கூறியுள்ளனர் என்ற தகவல்கள் உள்ளன. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவினர் குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் பேரம் பேசியது உள்ளிட்ட எல்லா ஆதாரங்களையும் காங்கிரஸ் தலைவர்களிடம் எம்.எல்.ஏ.க்களே கொடுத்துள்ளனர்.



    எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவினர் குதிரை பேரத்தில் ஈடுபடுவது பற்றி முதல்-மந்திரி குமாரசாமி, சித்தராமையாவுக்கு நன்கு தெரியும். அதனை அவர்கள் அலட்சியமாக விட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் முதல்-மந்திரி குமாரசாமியும், சித்தராமையாவும் பொறுமையாக உள்ளனர். நானாக இருந்தால் 24 மணிநேரத்தில் எம்.எல்.ஏ.க்களுடன் பேரம் பேசிய ஆதாரங்களை வெளியிட்டு இருப்பேன். கூடிய விரைவில் எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவினர் பேரம் பேசிய ஆதாரங்களை வெளியிடுவோம்.

    மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமைந்ததில் இருந்து ஆட்சியை கவிழ்க்க சதி நடந்து வருகிறது. தற்போது 3 எம்.எல்.ஏ.க்கள் மும்பையில் முகாமிட்டுள்ளனர். அந்த எம்.எல்.ஏ.க்கள் யார்? என்று தற்போது சொல்ல முடியாது. அவர்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களா? பா.ஜனதாவை சேர்ந்தவர்களா? என்பதை வெளிப்படையாக சொல்ல முடியாது.

    மாநிலத்தில் கூட்டணி ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. கூட்டணி ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை. பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் பலர் எங்களுடன் தொடர்பில் இருந்து வருகின்றனர்.

    இவ்வாறு மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார். #DKShivakumar
    ×