search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 100153"

    முதல்-மந்திரி குமாரசாமியை தவறாக பேசி விட்டதாக கூறி பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று எடியூரப்பா கூறியுள்ளார். #BJP #Yeddyurappa
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியில் முதல்-மந்திரி குமாரசாமியை, ஒரு உதவியாளர் போல காங்கிரஸ் நடத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியதற்கு சித்தராமையா, பரமேஸ்வர் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து டெல்லியில் எடியூரப்பா நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாநிலத்தில் கூட்டணி ஆட்சியில் தான் மகிழ்ச்சியாக இல்லை, பாராளுமன்ற தேர்தல் வரை பொறுமையாக இருக்கும்படி தேவேகவுடா கூறியதால் அமைதி காத்து வருகிறேன் என்று முதல்-மந்திரி குமாரசாமி சொல்லி இருந்தார். குமாரசாமி சொல்லியதை தான் பிரதமர் மோடி கூறியுள்ளார். அவர் உண்மையை மறைத்தோ, திரித்தோ கூறவில்லை.

    காங்கிரஸ் தலைவர்கள் நெருக்கடி கொடுப்பதாகவும், சுயமாக முடிவு எடுக்கவில்லை, காங்கிரஸ் தலைவர்கள் சொல்வதை கேட்டு தான் நடக்க வேண்டும் என்று குமாரசாமியே பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில் கூறி இருந்தார். அதனை தான் பிரதமர் கூறி இருக்கிறார். ஆனால் முதல்-மந்திரி குமாரசாமியை தவறாக பேசி விட்டதாக கூறி பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் பேசுவது சரியல்ல. ஏதோ யூகத்தின் அடிப்படையில் குமாரசாமி பற்றி பிரதமர் கூறவில்லை. பிரதமருக்கு எதிராக பேசுவதை காங்கிரஸ் தலைவர்கள் நிறுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு எடியூரப்பா கூறினார். #BJP #Yeddyurappa
    செல்போன் பயன்படுத்த கூடாது என பெற்றோர் கண்டித்ததால் மெட்ரோ ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலைக்கு முயன்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் வாலிபரை, முதல்-மந்திரி குமாரசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். #Kumaraswamy
    பெங்களூரு :

    பெங்களூரு மைசூரு ரோடு முதல் பையப்பனஹள்ளி வரையும், நாகவாரா முதல் எலச்சனஹள்ளி வரையும் மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று காலையில் எலச்சனஹள்ளியில் இருந்து நாகவாராவுக்கு ஒரு மெட்ரோ ரெயில் புறப்பட்டது. காலை 11.15 மணியளவில் பசவனகுடி நேஷனல் கல்லூரி மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு, அந்த ரெயில் மெதுவாக வந்து கொண்டிருந்தது. அந்த ரெயிலில் ஏறுவதற்காக பயணிகள் காத்து நின்றனர். அதுபோல, ஒரு வாலிபரும் ரெயிலில் ஏறுவதற்காக அங்கு நின்று கொண்டிருந்தார்.

    இந்த நிலையில், அந்த வாலிபர் திடீரென்று ஓடிப்போய் ரெயில் முன்பு பாய்ந்தார். இதை பார்த்து அங்கிருந்த பயணிகள், மெட்ரோ ரெயில் நிலைய ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதே நேரத்தில் ரெயில் முன்பு வாலிபர் பாய்ந்ததை கவனித்த டிரைவர், உடனடியாக மெட்ரோ ரெயிலை நிறுத்தினார். அத்துடன் மெட்ரோ ரெயில் அதிகாரிகள் சுதாரித்து கொண்டு மெட்ரோ ரெயில் இயக்கத்திற்கு பயன்படும் மின் இணைப்பை துண்டித்தனர்.

    அதன்பிறகு, மெட்ரோ ரெயிலை டிரைவர் பின்னோக்கி எடுத்தார். அப்போது தண்டவாளத்திற்கு நடுவே தலையில் பலத்த காயங்களுடன் வாலிபர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனடியாக அந்த வாலிபரை மெட்ரோ ரெயில் நிலைய ஊழியர்கள் மீட்டனர். பின்னர் அவர், நிமான்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு வாலிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உயிருக்கு எந்த விதமான ஆபத்தும் இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதுபற்றி அறிந்ததும் வி.வி.புரம் போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள், மெட்ரோ ரெயில் நிர்வாக அதிகாரிகள் பசவனகுடி நேஷனல் கல்லூரி மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இதுகுறித்து தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-

    பசவனகுடி நேஷனல் கல்லூரி மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு வந்து, மெட்ரோ ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற வாலிபர், பசவனகுடியை சேர்ந்த வேணுகோபால் (வயது 18) என்று தெரியவந்துள்ளது. 10-ம் வகுப்பில் தோல்வி அடைந்ததால், அதன்பிறகு பள்ளிக்கு செல்லாமல் பெற்றோர் நடத்தி வரும் தையல்கடையில் வேணுகோபால் வேலை பார்த்து வந்துள்ளார். அதே நேரத்தில் வேணுகோபால் அடிக்கடி செல்போன் பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் செல்போன் பயன்படுத்துவதை குறைக்கும்படி பெற்றோர் புத்திமதி கூறியுள்ளனர்.

    வேணுகோபால் மெட்ரோ ரெயில் முன்பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதை படத்தில் காணலாம். இது கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி.

    நேற்று முன்தினம் இரவும் செல்போன் பயன்படுத்த கூடாது என்று வேணுகோபாலை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் அவர் பெற்றோருடன் சண்டை போட்டுள்ளார். இதன் காரணமாக மனம் உடைந்த அவர், இன்று (அதாவது நேற்று) காலையில் பசவனகுடி நேஷனல் கல்லூரி மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு வந்து, ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது.

    இதற்கிடையில், மெட்ரோ ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற வேணுகோபால், அதிர்ஷ்டவசமாக தண்டவாளத்திற்கு நடுவே விழுந்திருந்தார். இதனால் அவரது தலையில் மட்டும் பலத்தகாயம் ஏற்பட்டு இருந்தது. அதே நேரத்தில் மெட்ரோ ரெயில் இயக்க பயன்படும் மின்சாரத்தை ஊழியர்கள் உடனடியாக துண்டித்திருந்ததால் மின்சாரம் தாக்கி பலியாகாமல் வேணுகோபால் உயிர் தப்பியதும் தெரியவந்துள்ளது.

    இந்த சம்பவத்தால் நாகவாரா முதல் எலச்சனஹள்ளி இடையே இயக்கப்படும் மெட்ரோ ரெயில் சேவை அரை மணிநேரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்கு உள்ளானார்கள். இதுகுறித்து வி.வி.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பெங்களூருவில் மெட்ரோ ரெயில் முன்பு வாலிபர் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றது இதுவே முதல் முறை ஆகும். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில், தற்கொலைக்கு முயன்று நிமான்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் வேணுகோபாலை நேற்று மாலையில் முதல்-மந்திரி குமாரசாமி சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் வேணு கோபாலுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி டாக்டர்களுக்கு குமாரசாமி அறிவுறுத்தினார்.

    அத்துடன் வேணுகோபால் தற்கொலைக்கு முயன்றதற்கான காரணம் குறித்து போலீசாரிடம் முதல்-மந்திரி குமாரசாமி கேட்டு அறிந்து கொண்டார். மேலும் வேணுகோபாலின் பெற்றோருக்கு அவர் ஆறுதலும் கூறினார். பின்னர் நிமான்ஸ் ஆஸ்பத்திரியில் இருந்து முதல்-மந்திரி குமாரசாமி புறப்பட்டு சென்றார். #Kumaraswamy
    5 வாரிய தலைவர்களின் நியமனத்திற்கு மறுப்பு தெரிவித்த கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி மீது காங்கிரஸ் மேலிடத்தில் சித்தராமையா புகார் தெரிவித்துள்ளார். #Siddaramaiah #Kumaraswamy
    பெங்களூரு:

    கர்நாடக மந்திரிசபை கடந்த மாதம் (டிசம்பர்) 22-ந்தேதி விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிதாக 8 மந்திரிகள் நியமிக்கப்பட்டனர். அதிருப்தியை சமாளிக்கும் விதமாக 19 எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்கப்பட்டது. அந்த பட்டியல்படி உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி கர்நாடக முதல் மந்திரி குமாரசாமிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.

    மந்திரிசபை விரிவாக்கம் நடந்து, 15 நாட்கள் ஆகியும் வாரிய தலைவர்கள் நியமனம் செய்யப்படவில்லை. இதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். இந்த நிலையில், 14 வாரியங்களுக்கு தலைவர்களை நியமனம் செய்து குமாரசாமி உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் பெங்களூரு வளர்ச்சி வாரியம், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட 5 வாரிய தலைவர்களை நியமனம் செய்ய குமாரசாமி மறுத்து விட்டார். இதனால் கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.



    இந்த நிலையில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபாலை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, வாரிய தலைவர்கள் நியமன விவகாரத்தில் குமாரசாமியின் நடவடிக்கை குறித்து புகார் செய்தார்.

    அதாவது காங்கிரஸ் மேலிடம் ஒப்புதல் வழங்கிய வாரிய தலைவர்கள் பட்டியலில் 5 பேரின் நியமனத்திற்கு குமாரசாமி ஒப்புதல் வழங்கவில்லை என்று கூறினார். இந்த பிரச்சினையை உடனே பேசி தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #Siddaramaiah #Kumaraswamy

    கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்க்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.25 முதல் ரூ.30 கோடி வரை லஞ்சம் வழங்க பேரம் நடப்பதாக சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார். #siddaramaiah #congress #bjp

    பெங்களூரு:

    கர்நாடகாவில் முதல் மந்திரி குமாரசாமி தலைமையில் மதசார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பா.ஜனதா எதிர்க்கட்சியாக உள்ளது.

    சமீபத்தில் மந்திசபை விரிவு செய்யப்பட்டது. அதில் மந்திரி பதவியில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரமேஷ் ஜார்கிகோலி நீக்கப்பட்டார். அதனால் அதிருப்தி அடைந்த அவர் திடீரென மாயமாகிவிட்டார். அவர் பா.ஜனதாவில் சேர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்த நிலையில் முன்னாள் முதல் மந்திரியும், காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா மைசூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். டுவிட்டரிலும் செய்தி வெளியிட்டுள்ளார்.

    கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கட்சி 104 தொகுதிகளில் வெற்றி பெற்றது. போதிய மெஜாரிட்டி இல்லாததால் அக் கட்சியால் ஆட்சிஅமைக்க முடியவில்லை. தற்போது காங்கிரஸ்- மதசார்பறற ஜனதா தளம் ஆட்சி நடைபெறுகிறது.

    இந்த ஆட்சியை கவிழ்த்து விட்டு பா.ஜனதா ஆட்சி அமைக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. அதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க குதிரை பேரம் நடக்கிறது.

    எங்கள் (காங்கிரஸ்) எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.25 முதல் ரூ.30 கோடி வரை லஞ்சம் வழங்க பேரம் பேசப்பட்டு வருகிறது. அதற்கான நடவடிக்கையில் பி.எஸ். எடியூரப்பா உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.


    பா.ஜனதா தலைவர் அமித்ஷாவை சந்திக்க எடியூரப்பா டெல்லி சென்றுள்ளார். பா.ஜனதா அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்கும் இத்தகைய நடவடிக்கை மூலம் ஊழலில் பா.ஜனதா ஈடுபடுகிறது என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் கூறும்போது ரமேஷ் ஜார்கிகோலி இன்னும் வந்து சேரவில்லை. அவர் டெல்லியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என்றார்.

    அதே நேரத்தில் ரமேஷ் ஜார்கிகோலி கட்சியை விட்டு வெளியேறமாட்டார் என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவருக்கு கட்சி பல பதவிகளை வழங்கியுள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக எங்களுடன் அவர் பணியாற்றி வருகிறார். எனவே கட்சிக்கு நம்பிக்கை துரோகம் செய்யும் வகையில் அவர் நடந்து கொள்ள மாட்டார் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே சித்தராமையாவின் குற்றச்சாட்டை பா.ஜனதா திட்டவட்டமாக மறுத்துள்ளது. தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் மீதே சித்தராமையாவுக்கு நம்பிக்கை இல்லை.

    பா.ஜனதா பெரிய தொகை கொடுத்து குதிரை பேரம் பேசினால் அது குறித்து அவர் போலீசில் புகார் அளிக்கலாமே என பா.ஜனதா செய்தி தொடர்பாளர் எஸ்.பிரகாஷ் தெரிவித்து இருக்கிறார்.  #siddaramaiah #congress #bjp

    என் மகன் மீது சத்தியமாக விவசாய கடனை தள்ளுபடி செய்யாமல் நான் பதவியை விட்டு போக மாட்டேன் என்று குமாரசாமி உருக்கமாக கூறியுள்ளார். #Kumaraswamy #AgriculturalLoans
    பெங்களூரு :

    கர்நாடக அரசின் விவசாயத்துறை சார்பில் கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் வழங்கும் விழா பாகல்கோட்டையில் நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டு விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடிக்கான சான்றிதழை வழங்கி பேசியதாவது:-

    விவசாயிகளை ஏமாற்றுவதாக பா.ஜனதா சொல்கிறது. ஆனால் விவசாய கடனை தள்ளுபடி செய்ய திடமான முடிவை எடுத்துள்ளோம். விவசாயிகளை நாங்கள் ஏமாற்ற மாட்டோம். என்னை நம்புங்கள். எனது மகன் மீது சத்தியம் செய்து சொல்கிறேன், விவசாய கடனை தள்ளுபடி செய்வேன்.



    எங்களுக்கு பலத்தை கொடுங்கள். கூட்டணி அரசுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நீங்கள் பயப்பட வேண்டாம். விவசாய கடனை தள்ளுபடி செய்யாமல் நான் போக மாட்டேன். கடன் தள்ளுபடிக்கு எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை.

    விவசாய கடன் தள்ளுபடியால் 44 லட்சம் விவசாயிகள் பயன் பெறுகிறார்கள். கடன் தள்ளுபடிக்கு நிதி பற்றாக்குறை இல்லை. தேசிய வங்கி விவசாய கடனையும் தள்ளுபடி செய்துள்ளேன். தேசிய வங்கிகளில் கடனை 4 தவணைகளில் திரும்ப செலுத்துவோம். வருகிற பட்ஜெட்டில் ரூ.25 ஆயிரம் கோடிக்கு விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்பு இடம் பெறும்.

    நான் வட கர்நாடகத்திற்கு எதிரி அல்ல. வருகிற பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கல் செய்வேன். விவசாய திட்டங்கள் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு குமாரசாமி பேசினார். #Kumaraswamy #AgriculturalLoans
    மேகதாது பிரச்சனையில் இரு மாநில அரசுகள் பேசி தீர்வு காண்பது பற்றி பிரதமரிடம் வலியுறுத்தினேன் என கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
    கர்நாடக முதல்வர் குமாரசாமி இன்று மாலை டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார்.

    அதன்பின் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ‘‘மேகதாது அணை திட்டம் இரு மாநில நலனுக்கானது. தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகள் பேசி தீர்வு காண்பது பற்றி பிரதமரிடம் வலியுறுத்தினேன். இத்திட்டத்தை இரு அரசுகள், மக்களின் நம்பிக்கை அடிப்படையில் செயல்படுத்தப்பட வேண்டும்’’ என்றார்.
    மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகத்துக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுவது ஏன்? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். #mekedatuissue #centralgovernment #karnatakagovt #anbumani

    சென்னை:

    பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டும் சிக்கலுக்கு தீர்வு காண தமிழ்நாடு கர்நாடக முதலமைச்சர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின்கட்கரி கூறியிருப்பதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

    இந்த செய்தி உண்மையாக இருந்தால் மத்திய அரசின் நிலைப்பாடு ஒருதலைபட்சமானது மட்டுமின்றி கண்டிக்கத்தக்கதும் ஆகும். மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின்கட்கரியை கர்நாடக முதல்வர் குமாரசாமி டெல்லியில் நேற்று சந்தித்து பேசினார். அப்போது மேகதாது அணையை கட்ட உதவி செய்யும் படி குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார். அதை ஏற்றுக் கொண்டு தான் இரு மாநில முதலமைச்சர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று நிதின்கட்கரி உறுதியளித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

    உண்மையில் மேகதாது அணை விவகாரத்தில் இரு மாநில முதல்வர்கள் கூட்டத்தைக் கூட்ட மத்திய அரசுக்கு அதிகாரமில்லை. மத்திய அரசு என்பது தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களுக்கும் பொதுவானது ஆகும்.

    இரு மாநில மக்களின் நலன்களையும் பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய அரசுக்கு உள்ளது. அவ்வாறு இருக்கும் போது, இரு மாநில அரசுகளும் கோரிக்கை விடுக்காத நிலையில், எந்த பிரச்சினை குறித்தும், எந்த மாநிலத்தையும் கட்டாயப்படுத்தி பேச்சு நடத்த அழைக்க முடியாது.

    மேகதாது அணை தொடர்பாக பேச்சுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கர்நாடகம் மட்டுமே கோரியிருக்கிறது. தமிழகத்தின் சார்பில் அத்தகைய கோரிக்கை முன்வைக்கப்படாத நிலையில் தமிழகத்தை பேச்சுக்கு அழைக்க முடியாது. அவ்வாறு செய்தால் அது மாநில அரசின் உரிமைகளை பறிப்பதாக அமைந்துவிடும்.

    இந்த உண்மைகள் மத்திய அரசுக்கு நன்றாகத் தெரியும் என்றாலும், மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு ஆதரவாக தமிழகத்திற்கு மத்திய அரசு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறது.

    மேகதாது அணைக் கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கத் தேவையான ஆய்வுகளை மேற்கொள்ள கர்நாடகத்துக்கு தன்னிச்சையாக அனுமதி அளித்த மத்திய அரசு, இப்போது அணைக்கான கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ள அனுமதி கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறது. அதற்காகவே இரு மாநில முதலமைச்சர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய மத்திய அரசு துடிக்கிறது.


    மத்திய அரசு மேகதாது அணை விவகாரத்தில் நல்லெண்ண அடிப்படையில் முதல்வர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்கிறது என்றால் அதை யாரும் நம்ப மாட்டார்கள். மேகதாது அணை கட்டுவதால் கர்நாடகத்தை விட தமிழகத்துக்கு தான் கூடுதல் நன்மை என்பதால், அதை தமிழக அரசிடம் எடுத்துக் கூறி ஒப்புதலைப் பெற்றுத் தர உதவும்படி குமாரசாமி கோரியதன் அடிப்படையில் தான் முதல்வர்கள் கூட்டத்தை நடத்த மத்திய அமைச்சர் நிதின்கட்கரி சம்மதித்துள்ளார்.

    இதில் இருந்தே இந்தக் கூட்டத்தின் நோக்கத்தை புரிந்து கொள்ள முடியும். எனவே, மத்திய அரசே அழைத்தாலும் மேகதாது அணை குறித்த எந்த பேச்சிலும் தமிழக அரசு கலந்து கொள்ளக் கூடாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #mekedatuissue #centralgovernment #karnatakagovt #anbumani

    தங்களை கேட்காமல் காங்கிரஸ் தன்னிச்சையாக முடிவு எடுப்பதால் கூட்டணியை விட்டு வெளியேறுவோம் என்று தேவேகவுடா எச்சரிக்கை விடுத்துள்ளார். #devegowda #Congress

    பெங்களூர்:

    கர்நாடகத்தில் ஜே.டி.எஸ். -காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அவ்வப்போது கூட்டணியில் பல்வேறு பிரச்சினைகளால் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது.

    தற்போது தங்களை கேட்காமல் காங்கிரஸ் தன்னிச்சையாக முடிவு எடுப்பதாக ஜே.டி.எஸ். கட்சி தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதையடுத்து காங்கிரசுக்கு ஜே.டி.எஸ். கட்சி தலைவர் தேவேகவுடா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    3 மாநில தேர்தல் வெற்றிக்குப்பின் காங்கிரசின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அரசு நிர்வாகத்தில் கூட்டணி கட்சியாக எங்களை கலந்து ஆலோசிக்காமல் காங்கிரஸ் தன்னிச்சையாக முடிவு எடுக்கிறது. இந்தப் போக்கு நீடித்தால் நாங்கள் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேற நேரிடும்.

    எங்கள் தோழமை கட்சி மீது எந்த குற்றச்சாட்டும் கூற விரும்பவில்லை என்றாலும், காங்கிரஸ் எங்களை நடத்தும் விதம் அதிருப்தியளிக்கச் செய்வதாக உள்ளது.

    இவ்வாறு தேவேகவுடா கூறினார்.  #devegowda #Congress 

    மாண்டியாவில் ஜேடிஎஸ் கட்சி பிரமுகர் பிரகாஷ் கொல்லப்பட்டதையடுத்து, அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். #MandyaMurder #JDSLeaderPrakash
    மாண்டியா:

    கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் (ஜேடிஎஸ்) முக்கிய நிர்வாகியாக திகழ்ந்தவர் கொன்னலாஹரே பிரகாஷ் (வயது 48). இவர் நேற்று மாலை கட்சி நிகழ்ச்சி முடிந்து தனது காரில் வீட்டுக்கு சென்றபோது, பின்தொடர்ந்து சென்ற வாலிபர்கள் காரை மறித்து கொன்னலாஹரே பிரகாசை கடுமையாக தாக்கி உள்ளனர். கத்தியாலும் வெட்டி உள்ளனர். இதில், ரத்த வெள்ளத்தில் பிரகாஷ் அதே இடத்தில் சரிந்து விழுந்தார். அவரை மாண்டியா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினார்கள்.

    பிரகாஷ் கொல்லப்பட்ட தகவல் அறிந்ததும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தொண்டர்கள் கடும் ஆத்திரமடைந்தனர். மருத்துவமனைக்கு சென்று அவரது உடல் வைக்கப்பட்டிருந்த அறையின் ஜன்னல் கண்ணாடியை உடைத்தனர்.

    பின்னர், மைசூர்-பெங்களூர் நெடுஞ்சாலையில் மாத்தூர் என்ற இடத்தில் மறியலில் ஈடுபட்டனர். மாண்டியா எம்எல்ஏ ஷிவராமே கவுடாவும் போராட்டத்தில் பங்கேற்றார். இப்போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 2 கிமீ தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், தோப்பனஹள்ளியில் நடந்த இரட்டைக் கொலை தொடர்பாக ஜேடிஎஸ் மற்றும் காங்கிரஸ் தொண்டர்களிடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    தோப்பனஹள்ளியைச் சேர்ந்த பிரகாஷ், முதல்வர் குமாரசாமிக்கு மிகவும் நெருக்கமானவர் என கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்த தேர்தலில் முக்கிய பங்காற்றி உள்ளார். பிரகாஷின் மனைவி மாண்டியா ஜில்லா பஞ்சாயத்து தலைவராக பணியாற்றியவர். #MandyaMurder #JDSLeaderPrakash
    கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதாதள தொண்டரை கொலை செய்த குற்றவாளிகளை சுட்டுக்கொல்லும் படி முதல்வர் குமாரசாமி ஆவேசமாக பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. #Kumaraswamy
    பெங்களூர்:

    கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் மதசார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    சமீபத்தில் மந்திரி சபையை மாற்றி அமைத்ததால் திடீர் சர்ச்சை எழுந்தது. அந்த சர்ச்சையை சமாளிப்பதற்குள் முதல்-மந்திரி குமாரசாமி மற்றொரு சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

    கட்சி தொண்டர் ஒருவரை கொன்ற கொலையாளிகளை ஈவுஇரக்கமின்றி சுட்டுக் கொல்லுங்கள் என்று அவர் உத்தரவிடும் தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி இந்த சர்ச்சையை உருவாக்கி உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

    கர்நாடகா மாநிலத்தில் மாண்டியா மாவட்டத்தில் மதசார்பற்ற ஜனதா தளத்தின் முக்கிய நிர்வாகியாக திகழ்ந்தவர் கொன்னலாஹரே பிரகாஷ். இவர் நேற்று மாலை 4.30 மணிக்கு தனது காரில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அவரது காரை 2 மோட்டார்சைக்கிளில் துரத்தியபடி 4 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் ஒரு இடத்தில் காரை மறித்து நிறுத்தி கொன்னலாஹரே பிரகாசை வலுக்கட்டாயமாக கீழே இறக்கினார்கள்.

    பிறகு 4 வாலிபர்களும் சேர்ந்து பிரகாசை உருட்டு கட்டைகளால் அடித்தனர். ரத்த வெள்ளத்தில் பிரகாஷ் அதே இடத்தில் சரிந்து விழுந்தார்.


    அவரை மாண்டியா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினார்கள்.

    பிரகாஷ் கொல்லப்பட்ட தகவல் முதல்-மந்திரி குமாரசாமிக்கு தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டதும் அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் யாருடனோ தனது செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

    அப்போது அவர், “பிரகாஷ் நல்ல மனிதர். அவரை ஏன் இப்படி கொலை செய்தார்கள் என்று தெரியவில்லை. கொலையாளிகள் மீது கொஞ்சமும் ஈவுஇரக்கம் காட்டாதீர்கள். கண்ட இடத்திலேயே சுட்டுக்கொன்று விடுங்கள். இதனால் எந்த பிரச்சனையும் இல்லை” என்று கூறினார்.

    குமாரசாமி இவ்வாறு போனில் பேசிய தகவலை உள்ளூர் தொலைக்காட்சி நிருபர் ஒருவர் தனது கேமிராவில் பதிவு செய்து இருந்தார். அந்த காட்சிகள் பெங்களூர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. இதையடுத்து சமூக வலைதளங்களிலும் குமாரசாமி பேசுவது பரவியது.

    இதனால் குமாரசாமியின் பேச்சு வைரலாக உருவெடுத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதை அறிந்ததும் முதல்-மந்திரி குமாரசாமி மீண்டும் அதிர்ச்சி அடைந்தார்.

    அவர் மீண்டும் நிருபர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், “குற்றவாளிகளை சுட்டுக்கொல்லும்படி நான் உத்தரவிடவில்லை. கட்சி தொண்டர் படுகொலை செய்யப்பட்டதால் உணர்ச்சி வசப்பட்டு பேசினேன்” என்று கூறி உள்ளார்.

    அவர் மேலும் கூறுகையில், “குற்றவாளிகள் ஜாமீனில் வந்து இந்த கொலையை செய்து உள்ளனர். அதற்கு நடவடிக்கை எடுக்கும்படி கூறி உள்ளேன்” என்றார்.  #Kumaraswamy #JDS
    கர்நாடக மாநிலத்தை ஆளும் குமாரசாமி தலைமையிலான கூட்டணி மந்திரிசபையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்கள் இன்று மந்திரிகளாக பதவி ஏற்று கொண்டனர். #Karnatakaministry #ministryexpanded #CongressMLAs
    பெங்களூரு:

    கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்ற மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி காங்கிரஸ் ஆதரவுடன் அங்கு ஆட்சி அமைத்தது. முதல் மந்திரி குமாரசாமி தலைமையிலான மந்திரிசபை 7 மாதங்களுக்கு முன்னர் பதவி ஏற்றுகொண்டது. பின்னர் கடந்த ஜூன் 5 தேதி விரிவாக்கம் செய்யப்பட்ட இந்த மந்திரிசபையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த துணை மந்திரி ஜி.பரமேஸ்வரா உள்பட 24 பேர் இடம் பெற்றிருந்தனர்.

    கர்நாடக சட்டபையில் உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் இம்மாநிலத்தில் 34 பேர்வரை மந்திரிகளாக பணியாற்றலாம். அவ்வகையில், கூட்டணி அரசு என்ற ஒப்பந்தப்படி மந்திரிசபையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்கள் இன்று  மந்திரிகளாக இணைக்கப்பட்டனர்.

    பெங்களூரு நகரில் உள்ள ராஜ்பவனில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எம்.பி.பாட்டீல், ஆர்.பி.திமப்புரா, சத்தீஷ் ஜரிக்கோலி, சி.எஸ்.ஷிவாலி, பரமேஸ்வரா நாய்கி, இ.துக்காராம், ரஹிம் கான் மற்றும் எம்.டி.பி. நாகராஜ் ஆகியோரை மந்திரிகளாக நியமித்து கவர்னர் வஜுபாய் வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் முதல் மந்திரி குமாரசாமி, துணை மந்திரி ஜி.பரமேஸ்வரா, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோர் பங்கேற்று புதிய மந்திரிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இன்று பதவியேற்ற மந்திரிகளுடன் சேர்த்து அம்மாநில மந்திரிசபையின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #Karnatakaministry #ministryexpanded #CongressMLAs 
    சபரிமலையில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் பொன்னம்பல மேடு இருக்கிறது. பொன்னம்பல மேட்டில் இருக்கும் ஐயப்பனே, ஜோதி வடிவில் பக்தர்களுக்குக் காட்சியளிப்பதாக நம்புகின்றனர்.
    சபரிமலையில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் பொன்னம்பல மேடு இருக்கிறது. இங்கு கண்ணுக்குத் தெரியாத பொற் கோவிலில் சாஸ்தாவான ஐயப்பன் தியானத்தில் இருப்பதாகவும், இவர் தை மாதத்தில் வரும் மகர சங்கராந்தி நாளில் மட்டும் பேரொளியாய்த் தோன்றிப் பக்தர்களுக்குக் காட்சி தருவதாகவும் ஐயப்பப் பக்தர்கள் நம்புகின்றனர்.

    தல வரலாறு :

    பந்தள நாட்டு மன்னரான ராஜசேகரன் வேட்டைக்குச் சென்ற போது, காட்டில் கிடந்த குழந்தையை எடுத்து வந்து ராணியிடம் கொடுத்தார். குழந்தைப்பேறு இல்லாமலிருந்த ராணியும் அந்தக் குழந்தைக்கு மணிகண்டன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். இந்நிலையில், ராணிக்கு ஒரு குழந்தை பிறக்க, தன் வயிற்றில் பிறந்த மகனே அடுத்து அரசனாக வேண்டுமென்று நினைத்த அவள், மணிகண்டனை அழிக்கச் சதித் திட்டம் தீட்டினாள்.

    தனக்குத் தீராதத் தலைவலி இருப்பதாகச் சொல்லி, அதனைத் தீர்க்கப் புலிப்பாலைக் கொண்டு வர வேண்டும் என்று அரண்மனை வைத்தியரைச் சொல்ல வைத்தாள். தாயின் நோய் தீர்க்க, தானே செல்வதாக கூறினான் மணிகண்டன். அதைக் கண்ட மன்னர், மணிகண்டனுடன் சில படைவீரர்களை அனுப்புவதாகச் சொன்னார்.

    ஆனால், மணிகண்டன் தனியாகச் சென்றால்தான் புலியைப் பிடிக்க முடியும். கூட்டமாகச் சென்றால் புலிகள் கலைந்து ஓடிவிடும் என்று மறுத்து விட்டான். இதையடுத்து மன்னன் ராஜசேகரன், சிவனுக்குப் படைத்த தேங்காய் மற்றும் பயணத்துக்குத் தேவையான உணவையும் ஒரு துணியில் வைத்துக் கட்டி மணிகண்டனிடம் கொடுத்தனுப்பினார். இதுவே பின்னாளில் இருமுடி கட்டாக மாறியது.

    பந்தள நாட்டின் எல்லையைக் கடந்து காட்டுக்குள் சென்ற மணிகண்டனை, அவரின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்த தேவர்கள், முனிவர்கள் மற்றும் சிவகணங்கள் வரவேற்று, அங்கிருந்த மலையுச்சிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைத் தங்க இருக்கையில் அமர வைத்து, மகிஷி எனும் அரக்கியால் தாங்கள் படும் துன்பங்களைச் சொல்லி, அவளை அழித்துத் தங்களைக் காப்பாற்றும்படி வேண்டினர்.

    அவர்களது வேண்டுகோளை ஏற்ற மணிகண்டனும், தன்னுடன் தேவர்கள் படையை அழைத்துக் கொண்டு மகிஷியை அழிப்பதற்காகச் சென்றார். இதனையறிந்த மகிஷி, மணிகண்டனை அழிக்க அசுரர் படையுடன் வந்தாள். மணிகண்டனும், மகிஷியும் பல்வேறு ஆயுதங்களைப் பயன்படுத்திப் போரிட்டனர். மணிகண்டன் அடுத்தடுத்து விடுத்த அம்புகள், மகிஷியின் உடலில் பாய்ந்து அவளைச் செயலிழக்கச் செய்து கொண்டிருந்தன. தான் பிரம்மனிடம் பெற்ற வரம் பயனில்லாமல் போகிறதே என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த வேளையில், அருகில் வந்த மணிகண்டன் அவளது கொம்புகள் இரண்டையும் பிடித்துச் சுழற்றி வீசி எறிந்தார்.

    மகிஷி அங்கிருந்து தொலைவில் சென்று விழுந்தாள். அவளால் எழுந்திருக்கவே முடியவில்லை. அவள் உடல் முழுவதும் சிதைந்து இறந்து போனாள். அவள் இறப்பைக் கொண்டாடி மகிழ்ந்த தேவர்கள், மணிகண்டனைப் பாராட்டிப் பூக்களைத் தூவி வாழ்த்தினர்.

    அப்போது, இறந்து போன அரக்கியின் உடலில்இருந்து வெளியேறிய ஒரு இளம்பெண் உருவம் மணிகண்டனை வணங்கி, தனது பெயர் லீலாவதி என்றும், தான் ஒரு சாபத்தால் அரக்கியாகப் பிறந்ததாகவும், அந்தச் சாபத்தில் இருந்து தன்னை விடுவித்ததற்கு நன்றி தெரிவித்தாள். பின்னர் அவள், தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி மணிகண்டனை வேண்டினாள்.

    மணிகண்டன் அவளைத் திருமணம் செய்ய மறுத்தார். உடனே அவள், அவருக்கு அருகிலாவது இருக்க விரும்புவதாகச் சொல்லி, அதையாவது நிறைவேற்றித் தரும்படி வேண்டினாள். மணிகண்டனும் அதனை ஏற்றுக் கொண்டார். அதன்படி அவள், சபரிமலையில் ஐப்பன் அருகே மாளிகைப்புரத்தம் மனாகக் கோவில் கொண்டாள் என்று வரலாற்றுக் கதை ஒன்று சொல்லப்படுகிறது.

    காட்டிற்குள் வந்த மணிகண்டனைத் தேவர்கள், முனிவர்கள் போன்றோர் மலையுச்சிக்கு அழைத்துச் சென்று அமர வைத்த இடமே ‘பொன்னம்பல மேடு’ என்று அழைக்கப்படுகிறது.

    மகாவிஷ்ணுவின் அவதாரமாக சொல்லப்படும் பரசுராமர், ஐயப்பன் கற்சிலை ஒன்றை வடிவமைத்து, வழிபாட்டுக்கான பூஜைகளைச் செய்து பூமிக்குள் புதைத்து வைத்ததாகவும், அதுவே பின்னர் பொன்னம்பல மேடு என்றானதாகவும் சில புராணக் கதைகள் தெரிவிக்கின்றன.

    பொன்னம்பல மேடு என்றழைக்கப்படும் இவ் விடத்தில், கண்ணுக்குத் தெரியாத பொற்கோவில் ஒன்று இருப்பதாகவும், இங்கு சாஸ்தாவான ஐயப்பன் தியானத்தில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதன் அடிப்படையிலேயே, இவ்விடத்திற்குப் பொன்னம்பல மேடு என்று பெயர் ஏற்பட்டதாகச் சொல்கின்றனர். மலையாள மொழியில் ‘பொன்’ என்றால் ‘தங்கம்’, ‘அம்பலம்’ என்றால் ‘கோவில்’, ‘மேடு’ என்றால் ‘மலை’ என்றும் பொருள் கொள்ளலாம். பொன்னம்பல மேட்டில் கோவிலோ அல்லது சிலையோ இல்லை. சதுர வடிவிலான இரண்டடி உயர மேடை மட்டுமே உள்ளது.

    ஐயப்ப பக்தர்களில் பெரும்பான்மையானவர்கள், பொன்னம்பல மேட்டை ‘காந்தமலை’ என்று அழைப்பதுண்டு. ஆனால், பொன்னம்பல மேடு வேறு, காந்தமலை வேறு என்று சொல்பவர்களும் இருக்கின்றனர். சிவபெருமானுக்குக் கயிலாய மலை, விஷ்ணுவுக்கு வைகுண்டம் என்றிருப்பது போல் ஐயப்பனுக்குக் ‘காந்தமலை’ இருக்கிறது என்கின்றனர். அந்தக் காந்தமலையின் மறு தோற்றமாகக் கருதப்படுவதே பொன்னம்பல மேடு என்றும் சொல்லப்படுகிறது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்குப் பூஜைத் திருவிழா ஏழு நாட்கள் கொண்டாடப்படுகிறது. விழாவின் இறுதி நாளில், காட்டுத் தேவதைகள் மற்றும் தெய்வங்களை அமைதிப்படுத்துவதற்கான குருத்தி எனும் சடங்கு நடக்கிறது. தை மாதத்தில் வரும் மகர சங்கராந்தி எனப்படும் நாளில், சூரியன் மறைவுக்குப் பின்பு பொன்னம்பல மேட்டில் பேரொளி ஒன்று தோன்றி மறைகிறது. சபரிமலையில் இருந்து இந்தப் பேரொளியைக் காணும் பக்தர்கள், பொன்னம்பல மேட்டில் இருக்கும் ஐயப்பனே, ஜோதி வடிவில் பக்தர்களுக்குக் காட்சியளிப்பதாக நம்புகின்றனர்.

    இருமுடி

    மணிகண்டன் புலிப்பால் கொண்டு வருவதற்காகக் கிளம்பிய போது, அவரது தந்தையான பந்தள நாட்டு மன்னன் ராஜசேகரன், ஈசனுக்கு படைத்த முக்கண் கொண்ட தேங்காயையும், பயணத்தின் போது பசியாறுவதற்கான உணவுப் பொருட்களையும் ஒரு துணியின் இரண்டு பக்கத்திலுமாக வைத்துக் கட்டி கொடுத்து அனுப்பினார். அந்தத் துணியில் கட்டப்பட்டவை இரண்டு பக்கமும் சமமாக இருந்தன. முடிச்சுகள் நன்றாகப் போடப்பட்டிருந்தன. இதைக் கொண்டு தான் ‘இருமுடி’ என்ற சொல் உருவானது. அதன்படி முதன் முதலில் இருமுடி கட்டை சுமந்தவர் ஐயப்பன் என்பது விளங்கும். அவரைப் போலவே பக்தர்களும் இருமுடி கட்டி ஐயப்பனை வேண்டிக்கொண்டால், வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    வேடன் வடிவிலான ஜோதி :

    வானில் இருக்கும் கண்ணுக்குத் தெரியும் நட்சத்திரக் கூட்டங்களில், அதிக ஒளிமயமாக இருப்பது ‘ஸிரியஸ்’ எனும் நட்சத்திரக் கூட்டமாகும். இவை பார்ப்பதற்கு வேடனைப் போல் இருக்கும். இந்த நட்சத்திரக் கூட்டத்தை வேத காலத்தில் ‘ம்ருக வியாத’ என்று அழைத்தனர். பொன்னம்பல மேட்டில் தெரியும் மகர ஜோதியை, ஐயப்பனின் மற்றொரு தோற்றமான வேடன் வடிவிலான ஜோதி என்றே சொல்கின்றனர். கேரளாவில் பல இடங்களில் சாஸ்தாவை “வேட்டைக்கொரு மகன்” எனும் பெயரிலும் வழிபட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

    காளைக்கட்டி :

    மணிகண்டனுக்கும் மகிஷிக்கும் நடைபெற்ற போரைக் காண்பதற்காகச் சிவபெரு மானும், மகாவிஷ்ணுவும் பூலோகத்திற்கு வந்தனர். சிவபெருமான் பூலோகத்துக்கு ரிஷப வாகனத்தில் வந்து இறங்கினார் என்றும், அவர் கொண்டு வந்த ரிஷப வாகனத்தை (காளையை) அங்கே ஓரிடத்தில் கட்டிப் போட்டார் என்றும் சொல்லப்படுகிறது. ஐயப்பப் பக்தர்கள் அந்த இடத்தினைக் ‘காளைக்கட்டி’ என்ற பெயரில் அழைக்கின்றனர்.

    அமைவிடம் :

    கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்திருக்கும் சபரிமலையில் இருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது, பொன்னம்பல மேடு. இது பெரியார் தேசியப் பூங்காவின் புலிகள் காப்பகப் பகுதியான அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு செல்ல யாருக்கும் அனுமதிஇல்லை. எனவே, சபரிமலைக்குச் செல்லும் ஐயப்பப் பக்தர்களில் பெரும்பான்மையோர், மகர சங்கராந்தி நாளில் பொன்னம்பல மேட்டில் காட்சியளிக்கும் மகர ஜோதியைக் கண்டு வழிபட்டுத் திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.
    ×