search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 100153"

    பா.ஜனதாவின் திட்டம் ஒருபோதும் நிறைவேறாது என்றும், கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகளையும் நிறைவு செய்யும் என்றும் முதல்-மந்திரி குமாரசாமி கூறியுள்ளார். #Kumaraswamy #BJP
    ஹாசன் :

    ஹாசனில் உள்ள பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவிலில் நேற்று முன்தினம் நடை திறக்கப்பட்டது. இந்த கோவிலில் நேற்று முதல்-மந்திரி குமாரசாமி தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த குமாரசாமி, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    5 தொகுதிகளுக்கு நடக்கும் இடைத்தேர்தலில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். இந்த இடைத்தேர்தல் அடுத்த ஆண்டு (2019) நடக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும். பாராளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி தொடரும். ராமநகர் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் விலகியது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அவர் எங்கள் கட்சியை சேர்ந்தவர் இல்லை. அவர் முன்பு இருந்த கட்சிக்கே மீண்டும் வந்துள்ளார். அவர் விலகியதற்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

    கூட்டணி ஆட்சி மீது பா.ஜனதாவினர் தேவையில்லாத குற்றச்சாட்டை கூறி வருகிறார்கள். ராமநகர் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் விலகியதற்கு பா.ஜனதாவினரே காரணம். தங்கள் மீதுள்ள தவறை மறைக்க அவர்கள், மற்ற கட்சிகள் மீது குற்றம்சாட்டுகிறார்கள். பா.ஜனதாவினர் கூட்டணி ஆட்சி விரைவில் கவிழும் என்று கூறிக் கொண்டே இருக்கிறார்கள். இடைத்தேர்தலுக்கு பின்னர் ஆட்சி இருக்காது என்று கூறி வருகிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. ஆபரேஷன் தாமரை திட்டத்தை மீண்டும் கொண்டு வந்தாலும், அதுவும் தோல்வி அடையும். பா.ஜனதாவின் திட்டம் ஒருபோதும் நிறைவேறாது. கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகளை முழுமையாக நிறைவு செய்யும்.



    பிரதமர் மோடிக்கு மக்களின் ஆதரவு அதிகரித்து கொண்டே செல்வதாகவும், அடுத்த ஆண்டு நடக்கும் பாராளுமன்ற தேர்தலிலும் மத்தியில் பா.ஜனதா வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமராவார் என்றும் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது. கருத்துக்கணிப்பில் எனக்கு நம்பிக்கை கிடையாது. கருத்துக்கணிப்பு நடத்தியவர்கள் பா.ஜனதா ஆதரவாளர்களாக இருக்கக்கூடும். பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெறாது.

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தான் பிரதமர் வேட்பாளர் இல்லை என்று கூறியுள்ளார். இது அவர் நாட்டு மக்களை நேசிப்பதை காட்டுகிறது. கர்நாடகத்தில் ஆன்லைன் மதுபானம் விற்பனைக்கு முந்தைய ஆட்சியில் முடிவு எடுக்கப்பட்டது. எக்காரணம் கொண்டும் ஆன்லைன் மதுபானம் விற்பனைக்கு அனுமதிக்க மாட்டேன். ஆன்லைன் மூலம் மதுபான விற்பனை செய்ய தடை விதிக்கப்படும்.

    ஹாசனாம்பா கோவிலில் பத்திரிகையாளர்கள் செல்ல அனுமதி கிடையாது என்று மாவட்ட நிர்வாகம் எடுத்த முடிவு தவறானது. பத்திரிகையாளர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Kumaraswamy #BJP
    கர்நாடக மாநிலம் ராமநகரம் இடைத்தேர்தலில் முதல்வரின் மனைவியை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகினார். #RamanagaraBypoll #BJPCandidate
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் சிவமொக்கா, பெல்லாரி, மாண்டியா ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கும், ராமநகரம், ஜம்கண்டி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுககும் நாளை மறுநாள் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. 

    தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாள் மட்டுமே உள்ள நிலையில், ராமநகரம் தொகுதியில் முதல்வர் குமாரசாமியை எதிர்த்து களமிறங்கிய பாஜக வேட்பாளர் எல்.சந்திரசேகர் திடீரென போட்டியில் இருந்து விலகினார். அத்துடன் கட்சியில் இருந்தும் விலகிய அவர், தாய்க்கட்சியான காங்கிரசுக்கே திரும்ப உள்ளதாக கூறினார். 

    இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், ‘பாஜகவில் சேர்ந்தபோது வரவேற்று, போட்டியிட வாய்ப்பு கொடுத்த எடியூரப்பாவும் மற்ற தலைவர்களும் என்னுடன் இணைந்து தேர்தல் பிரச்சாரம் செய்யவில்லை. தலைவர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக ராமநகரம் தொகுதியை அவர்கள் புறக்கணித்துவிட்டனர்’ என்றார்.

    சந்திரசேகர் விலகியதன்மூலம் குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி எளிதில் வெற்றி பெறும் சூழல் உருவாகி உள்ளது. அதேசமயம், கடைசி நேரத்தில் வேட்பாளர் கட்சி தாவியது பாஜகவுக்கு கடும் பின்னடைவாக கருதப்படுகிறது. 

    ராமநகரம் இடைத்தேர்தலில் கூட்டணி கட்சியான ஜேடிஎஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க காங்கிரஸ் முடிவு செய்ததால் அதிருப்தி அடைந்த சந்திரசேகர், காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். பாஜகவில் சேர்ந்த சில தினங்களில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குறிப்படத்தக்கது. #RamanagaraBypoll #BJPCandidate
    இடைத்தேர்தலில் 5 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெறும் என்று பா.ஜனதா மூத்த தலைவர் ஈசுவரப்பா கூறியுள்ளார். #Eshwarappa #BJP
    பெங்களூரு :

    சிவமொக்கா, பல்லாரி, மண்டியா ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், ராமநகர், ஜமகண்டி ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வருகிற 3-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தலில் 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. சிவமொக்கா, மண்டியா, ராமநகர் ஆகிய தொகுதிகளில் ஜனதா தளம்(எஸ்) கட்சியும், பல்லாரி, ஜமகண்டி ஆகிய 2 தொகுதிகளில் காங்கிரசும் போட்டியிட்டுள்ளன.

    இந்த இடைத்தேர்தலில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் பல்லாரியில் பா.ஜனதா வேட்பாளர் சாந்தாவை ஆதரித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ஈசுவரப்பா நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அதற்கு முன்பு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் சித்தராமையா, முதல்-மந்திரியை போல் சுற்றிக்கொண்டிருக்கிறார். அவரை கேள்வி கேட்க யாரும் இல்லை. அவருக்கு இந்த நிலை வந்திருக்கக்கூடாது. வேட்பாளர்களை தேர்வு செய்ததில் காங்கிரசார் கவனம் செலுத்தவில்லை. கர்நாடக காங்கிரஸ் தலைவராக உள்ள தினேஷ் குண்டுராவ், காகித புலியை போன்றவர். அவரை பார்த்தால் யாருக்கும் பயம் இல்லை.



    அவரை காங்கிரசார் கண்டுகொள்வது இல்லை. கர்நாடக அரசியலில் ஒரு தொங்குநிலை நிலவுகிறது. இடைத்தேர்தல் முடிவு வெளியான பிறகு இந்த நிலைக்கு முடிவு வரும். கடந்த சட்டமன்ற தேர்தல் வரை, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் பாம்பும், கீரியுமாக இருந்தனர். குமாரசாமி அவரது தந்தை மீது ஆணையாக முதல்-மந்திரியாக முடியாது என்று சித்தராமையா சொன்னார்.

    சித்தராமையாவை போன்ற ஒரு மோசமான முதல்-மந்திரியை நான் பார்த்ததே இல்லை. இப்போது அந்த கட்சியினர் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளனர். இடைத்தேர்தலிலும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார்கள். மனதுக்கு வந்தபடி பேசும் சித்தராமையாவை போன்ற ஒரு மோசமான அரசியல்வாதியை நான் பார்த்தது இல்லை.

    தேர்தலில் பெரும்பான்மை பலம் கிடைக்காவிட்டால், எந்த கட்சியுடனும் கூட்டு சேர மாட்டோம் என்று ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் கூறினர். ஆனால் காங்கிரசுடன் அந்த கட்சி கூட்டணி சேர்ந்துள்ளது. காங்கிரசுக்கு வந்துள்ள மோசமான நிலை வேறு எந்த கட்சிக்கும் வரக்கூடாது. இந்த இடைத்தேர்தலில் 5 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெறும்.

    இவ்வாறு ஈசுவரப்பா கூறினார். #Eshwarappa #BJP
    நிலக்கரி வழங்குவதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது என்றும், அதனால் கர்நாடகத்தில் மின்வெட்டை அமல்படுத்தக்கூடாது என்றும் மின்துறை அதிகாரிகளுக்கு குமாரசாமி உத்தரவிட்டுள்ளார். #kumaraswamy
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் மின்சார பிரச்சினைகள் தொடர்பாக மின்துறை அதிகாரிகளுடன் முதல்-மந்திரி குமாரசாமி நேற்று பெங்களூரு விதான சவுதாவில் ஆலோசனை நடத்தினார். மின்துறை அவர் வசமே உள்ளது. இந்த கூட்டத்தில் அந்த துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து குமாரசாமி அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    கர்நாடகத்தில் தற்போது மின்வெட்டு இல்லை. அடுத்து வரும் காலங்களிலும் கர்நாடகத்தில் மின்வெட்டை அமல்படுத்தக்கூடாது என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். ஒப்பந்தத்தில் கூறியுள்ளபடி மத்திய அரசு, கர்நாடகத்திற்கு போதிய அளவு நிலக்கரியை ஒதுக்கீடு செய்யவில்லை. இதுகுறித்து மத்திய நிலக்கரித்துறை மந்திரிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. தலைமை செயலாளர் மத்திய அரசு அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளார்.



    முடிந்தவரை நிலக்கரியை வழங்குவதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. நிலக்கரியை ஒதுக்கியவுடன், அதை குறிப்பிட்ட நேரத்திற்குள் கர்நாடகத்திற்கு கொண்டு வந்து சேர்க்க ரெயில்வேத்துறை உதவ வேண்டும் என்று கேட்டுள்ளோம். கர்நாடக மின்சாரத்துறையை சேர்ந்த அதிகாரிகள் டெல்லிக்கு சென்றுள்ளனர். அவர்கள் ரெயில்வே மற்றும் நிலக்கரித்துறை அதிகாரிகளை சந்தித்து, நிலக்கரி விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுப்பார்கள்.

    நிலக்கரி பற்றாக்குறையை தடுக்க மாநில அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. மேலும் சூரியசக்தி உற்பத்தி மற்றும் நீர்மின் உற்பத்தி மூலம் மின் பற்றாக்குறையை சமாளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு மின்சாரம் தடையின்றி கிடைக்க மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.#kumaraswamy
    ரூ.2 ஆயிரம் கோடி செலவில் பெங்களூரு முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட இருப்பதாக கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்தார். #Kumaraswamy
    பெங்களூரு:

    கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நான் முதல்-மந்திரியாக பதவி ஏற்று 5 மாதங்கள் ஆகிறது. கடந்த 5 மாதங்களில் பல்வேறு பணிகளை செய்துள்ளேன். சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டன. இந்த தேர்தலுக்கு பிறகு யாருமே எதிர்பாராத அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன.

    காங்கிரஸ்- ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அமைத்து, எனது தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டன. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 460 திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. கூட்டணி ஆட்சியை நடத்துவது என்பது சவாலானது. தேர்தலுக்கு முன்பு, எங்கள் கட்சி தனிப்பெரும்பான்மையில் ஆட்சி அமைத்தால் விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்தோம்.

    நான் ஆட்சிக்கு வந்தவுடன், வாக்குறுதிப்படி 24 மணி நேரத்திற்குள் விவசாய கடனை தள்ளுபடி செய்யவில்லை என்று பா.ஜனதா குறை கூறியது. சுமார் ரூ.43 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளேன். கூட்டுறவு வங்கிகளில் உள்ள ரூ.10 ஆயிரத்து 300 கோடியை தள்ளுபடி செய்து அதற்கான நிதியை ஒதுக்கிவிட்டோம்.

    விவசாய கடன் தள்ளுபடி திட்டத்திற்கு தேசிய வங்கிகள் ஒத்துழைக்க மறுக்கின்றன. இதில் அரசியல் இருக்கிறது என்பது எனக்கு தெரியும். அதுபற்றி நான் கவலைப்படவில்லை. கடன் தள்ளுபடி திட்டத்தால் 44 லட்சம் விவசாயிகள் பயன் அடைகிறார்கள். நிதி பற்றாக்குறை இல்லை. கஜானா காலியாகிவிட்டதாக பா.ஜனதாவினர் சொல்கிறார்கள். அரசு கஜானா நல்ல நிலையில் உள்ளது.

    கடன் தள்ளுபடி திட்டத்தால், மாநில அரசின் பொருளாதார நிலைக்கு எந்த பிரச்சினையும் இல்லை. கர்நாடகத்தின் பொருளாதார நிலை நல்ல நிலையில் உள்ளது. தேசிய வங்கி கடன் தள்ளுபடி திட்டத்திற்கு ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கி வைத்துள்ளேன். வருகிற 1-ந் தேதி முதல் தேசிய வங்கி விவசாய கடன் தள்ளுபடிக்கு பணத்தை செலுத்தும் பணி தொடங்கப்படும்.

    சமூக நலத்துறையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்காக ரூ.29 ஆயிரம் கோடிக்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த திட்டங்களை குறித்த காலத்தில் செயல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் கடந்த செப்டம்பர் மாதம் வரை 38 சதவீத நிதி பயன்படுத்தப்பட்டு, பணிகள் செய்யப்பட்டுள்ளன.

    அன்னபாக்ய திட்டத்தின் கீழ் 2 கிலோ அரிசியை குறைத்தேன். ஆனால் காங்கிரசார், 7 கிலோ அரிசி வழங்குவதில் மாற்றம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். இதனால் அரசுக்கு கூடுதலாக ரூ.2,000 கோடி நிதி தேவைப்படுகிறது. அதையும் வழங்க தயாராக இருக்கிறேன். அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும்.

    பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரூ.6,500 கோடி செலவில் வெளிவட்டச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஒரு மாதத்தில் டெண்டர் விடப்படும். இந்த திட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும். 3 ஆண்டுகளில் இந்த பணிகள் நிறைவடையும். 60 மீட்டர் அகலம் அளவுக்கு இந்த சாலை அமைக்கப்படுகிறது.

    மேலும் நகரில் 102 கிலோ மீட்டர் நீளத்திற்கு உயர்த்தப்பட்ட சாலை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சாலை அமைக்கப்பட்டால் ரூ.9,000 கோடி அளவுக்கு எரிபொருள் செலவு மிச்சமாகும் என்று கணக்கிடப்படுகிறது. காற்று மாசுபாடு குறையும். மக்கள் நோய் தாக்குதலுக்கு ஆளாவதும் தடுக்கப்படும். இந்த திட்டமும் அடுத்த ஒரு மாதத்தில் தொடங்கப்படும்.

    பெங்களூருவில் தெரு விளக்குகளுக்கு பயன்படுத்தப்படும் மின்சார கட்டணமாக ஆண்டுக்கு ரூ.100 கோடி செலுத்தப்படுகிறது. தெருக் களில் எல்.இ.டி. விளக்குகளை பொருத்தினால் இந்த கட்டணம் ஆண்டுக்கு ரூ.15 கோடியாக குறையும். இந்த எல்.இ.டி. விளக்குகளை பொருத்தும் பணியை ஒரு தனியார் நிறுவனத்திற்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நகரில் குப்பை பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது.

    தகுதி அடிப்படையில் அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்படுகிறார்கள். பெங்களூரு உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ரவுடிகளை அடக்கவும், சூதாட்டத்தை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கேற்றவாறு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். போலீஸ் அதிகாரிகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளேன்.



    பெங்களூருவில் ஆயுதபூஜை அன்று ஆயுதங்களை வைத்து பூஜை செய்ததாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கன்னட அமைப்பின் தலைவரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். ரூ.2,000 கோடி செலவில் பெங்களூரு மாநகர் முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். குடகு மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு வசதிகளை அரசு செய்து கொடுக்கிறது.

    வீடுகளை இழந்த மக்களுக்கு தலா ரூ.10 லட்சம் செலவில் ஆயிரம் வீடுகளை கட்டி கொடுக்க அரசு முடிவு செய்துள்ளது. முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு வந்த உதவித்தொகை குடகு மழை வெள்ள பாதிப்புகளுக்கு மட்டுமே செலவிடப்படும். கர்நாடகத்தில் சில மாவட்டங்களில் உதான் திட்டத்தின் கீழ் விமான நிலையம் கட்டப்படும்.

    மாநிலத்தில் பொதுப்பணித்துறையில் ரூ.36 ஆயிரம் கோடிக்கு பல்வேறு சாலை திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. பெங்களூரு-மைசூரு 10 வழிச்சாலை திட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும். கர்நாடகத்தில் மாணவ -மாணவிகள் குளங்கள் மற்றும் ஆறுகளை கடக்க வசதியாக 470 சிறு நடை பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.120 கோடி நிதி ஒதுக்கப்படும். எனது தலைமையிலான கூட்டணி அரசு 5 ஆண்டுகளுக்கு நீடிக்கும். இது கடவுள் கொடுத்த அதிகாரம். கர்நாடகத்தை காப்பாற்றவே நாங்கள் கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளோம்.

    இடைத்தேர்தல் நடை பெறும் 5 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும். இந்த வெற்றி, அடுத்து நடைபெற உள்ள 3 மாநில சட்டமன்ற தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு(2019) நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும். 100 தாலுகாக்கள் வறட்சி பகுதிகள் என்று அறிவித்துள்ளோம். அந்த பகுதிகளில் குடிநீர் உள்ளிட்ட பணிகளுக்கு தலா ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    சபரிமலை விவகாரத்தில் நான் எந்த கருத்தும் கூற முடியாது. கர்நாடகத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு கர்நாடக அரசால் பாதுகாப்பு வழங்க இயலாது. இது கேரளா மாநிலம் சம்பந்தப்பட்ட விஷயம். அடுத்த மாநில விவகாரங்களில் தலையிட முடியாது. ‘மீ டூ‘ இயக்கம் பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. கல்வி கடனை தள்ளுபடி செய்வது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த விஷயத்தில் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிடுவதில் அரசின் நிலையை விரைவில் தெரிவிப்போம்.

    ஜனதா தரிசனம் மூலம் 17 ஆயிரத்து 723 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 50 சதவீத மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக திறன் அடிப்படையில் 3 பல்கலைக்கழகங்களை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ரூ.9 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசு பள்ளி-கல்லூரி கட்டிடங் களை சீரமைக்க ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    மைசூரு தசரா விழாவை காண 50 லட்சம் பேர் மைசூருவுக்கு வந்தனர். தசரா ஊர்வலத்தை மட்டும் 12 லட்சம் பேர் கண்டுகளித்தனர்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார். #Kumaraswamy

    சபரிமலை ஐயப்பன் கோவில் கடந்த 17-ந்தேதி ஐப்பசி மாத பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டு நேற்று நடை அடைக்கப்பட்டது.
    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த 17-ந் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு நேற்று வரை நடந்தது. தினமும் நெய் அபிஷேகம், களபாபிஷேகம், சகஸ்ர கலச பூஜை, படி பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தன. சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜையின் இறுதிநாளான நேற்று காலையில் சகஸ்ர கலச பூஜை நடந்தது. இந்த பூஜைகளை தந்திரி ராஜீவரு கண்டரரு நடத்தினார். மாத பூஜை முடிவடைந்து நேற்று இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது.

    அடுத்த மாதம் (நவம்பர்) மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கோவில் நடை திறக்கப்படும் போது புதிதாக தேர்வான மேல்சாந்திகள் பணிபுரிவார்கள்.

    இதற்கிடையே சபரிமலை நிலை குறித்து சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்வது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்றும், சுப்ரீம் கோர்ட்டு ஏதாவது கருத்து கேட்கும் பட்சத்தில் அறிக்கை தாக்கல் செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் தேவசம்போர்டு கூறியுள்ளது. 
    கர்நாடகத்தில் அமைதியை சீர்குலைக்கும் சமூகவிரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு குமாரசாமி உத்தரவிட்டுள்ளார். #kumarasamy
    பெங்களூரு :

    கர்நாடக போலீஸ் துறை சார்பில் போலீஸ் வீர வணக்க நாள் விழா பெங்களூரு கோரமங்களாவில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி குமாரசாமி, பணியின்போது உயிர்நீத்த போலீசாருக்கு மலர் வளையம் வைத்தும், போலீஸ் நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்தும் வீர வணக்கம் செலுத்தினார். பின்னர் குமாரசாமி பேசியதாவது:-

    சிலர் தங்களின் சுயநலத்திற்காக இந்த சமூகத்தை உடைக்க முயற்சி செய்கிறார்கள். அத்தகையவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் போலீசார் பின்வாங்கக்கூடாது. இத்தகைய நடவடிக்கைக்கு மாநில அரசு முழு ஆதரவு வழங்கும். பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

    போலீஸ் அதிகாரிகள் நேர்மையான முறையில் பணியாற்ற வேண்டும். போலீசார் சில பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். ஆயினும் மாநிலத்தை காக்கும் பணியில் கர்நாடக போலீசார் சிறப்பான முறையில் செயல்படுகிறார்கள்.

    சிறப்பாக பணியாற்றுவதில் கர்நாடக போலீசார் நாட்டிலேயே முன்னிலையில் உள்ளனர். இதற்காக கர்நாடக அரசு சார்பிலும், மக்கள் சார்பிலும் உங்களை பாராட்டுகிறேன். கர்நாடகத்தில் அமைதியை சீர்குலைக்கும் சமூகவிரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் எந்த சூழ்நிலையிலும் சமரசம் செய்து கொள்ளக்கூடாது.

    போலீசார் என்னிடம் சில கோரிக்கைகள் வைத்துள்ளனர். போலீஸ் அதிகாரி ராகவேந்திரா அவுராத்கர் வழங்கிய அறிக்கையில் சில திட்டங்கள், போலீசாரின் மேம்பாட்டிற்காக அமல்படுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதை அமல்படுத்த அரசு தயாராக உள்ளது. அதுபற்றி துணை முதல்-மந்திரி பரமேஸ்வருடன் ஆலோசித்து முடிவு எடுப்பேன்.

    மாநில அரசுக்கு நிதிச்சுமை ஏற்பட்டாலும், போலீசாரின் கஷ்டங்களை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்கும். கடந்த 59 ஆண்டுகளுக்கு முன்பு, சீனா மற்றும் இந்தியா இடையே போர் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான ராணுவத்தினர் வீர மரணம் அடைந்தனர். அவர்களுக்கு கவுரவம் அளிக்கும் விதத்தில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.

    கர்நாடகத்தில் பணியின்போது, 416 போலீசார் மரணம் அடைந்தனர். அவர்களின் உழைப்புக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். மேலும் அவர்களின் குடும்பத்தை காக்கும் பொறுப்பும் மாநில அரசுக்கு உள்ளது. ராணுவத்தினர் நாட்டை காக்கிறார்கள். போலீசார் சட்டத்தை நிலை நாட்டுகிறார்கள். அமைதியை சீர்குலைப்பவர்கள், போதைப்பொருள் கடத்துபவர்கள், சமூக விரோதிகளை போலீசார் அடக்க வேண்டும். சைபர் குற்றங்களை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். இதற்கு தேவையான வசதிகளை மாநில அரசு செய்து கொடுக்கும்.

    இவ்வாறு குமாரசாமி பேசினார்.

    இதில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா, தலைமை செயலாளர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. நீலமணி ராஜூ மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். #kumarasamy

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பின்பற்றப்படும் தொன்மையான கலாசாரத்தை(பெண்களுக்கு தடை) காக்க வேண்டும் என்று முதலமைச்சர் குமாரசாமி கூறியுள்ளார்.
    பெங்களூரு :

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் சாமி தரிசனம் செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். சபரிமலை கோவிலுக்கு சென்ற பெண்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தி வன்முறையில் ஈடுபட்டனர். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயத்தில் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பின்பற்றப்படும் தொன்மையான கலாசாரத்தை(பெண்களுக்கு தடை) காக்க வேண்டும். இந்த கலாசாரத்தை மீறுவதால், பிரச்சினைகள் எழுகின்றன. இது எனது தனிப்பட்ட கருத்து. இது முதல்-மந்திரியின் அதிகாரப்பூர்வ கருத்து கிடையாது என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார்.
    திப்பு ஜெயந்தி கொண்டாடுவது குறித்து அரசு முடிவு எடுக்கும் என்றும், அனைத்து மக்களையும் ஒற்றுமையாக அரவணைத்து செல்வதே என்னுடைய நோக்கம் என்றும் முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார். #Kumaraswamy
    மைசூரு:

    உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா நேற்று தொடங்கியது. சாமுண்டி மலையில் நடந்த தசரா விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்துகொண்டார். இந்த விழாவில் பா.ஜனதாவை சேர்ந்த எம்.பி. பிரதாப் சிம்ஹாவும் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், மகிஷாசூரன் தசரா விழாவுக்கு மாநில அரசு அனுமதி கொடுத்திருக்க கூடாது என்றும், திப்பு ஜெயந்தி விழாவுக்கு அனுமதி கொடுக்கக்கூடாது என்றும் பேசினார்.



    இதையடுத்து முதல்-மந்திரி குமாரசாமி நேற்று காலை, கலாமந்திராவில் நடந்த திரைப்பட விழாவை தொடங்கி வைத்தார்.

    இந்த விழாவை முடித்துவிட்டு வெளியே வந்த குமாரசாமியிடம், பிரதாப் சிம்ஹா எம்.பி. பேசியது குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து குமாரசாமி கூறியதாவது:-

    ஒரு விழாவை கொண்டாடுவது அந்த அமைப்புகளின் சொந்த விஷயம். இதில் அரசு தலையிடாது. சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்தால் தான் அரசு தலையிடும். சாதி, மதம் மற்றும் மொழியை ஆன்மிக விஷயத்தோடு தொடர்புப்படுத்த கூடாது. எந்த நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுக்க வேண்டும், எந்த நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுக்கக்கூடாது என்பது மாநில அரசுக்கு நன்றாக தெரியும்.

    திப்பு ஜெயந்தி கொண்டாடுவது குறித்து மாநில அரசு முடிவு எடுக்கும். அனைத்து மக்களையும் ஒற்றுமையாக அரவணைத்து செல்வதே என்னுடைய நோக்கம் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Kumaraswamy
    சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜையுடன் மைசூரு தசரா விழா இன்று தொடங்கியது. கர்நாடக முதல்வர் குமாரசாமி மற்றும் சுதா மூர்த்தி ஆகியோர் விழாவை தொடங்கி வைத்தனர். #MysuruDasara #Karnataka #Kumaraswamy #SudhaMurthy
    மைசூரு:

    கர்நாடக மாநிலம் மைசூரு நகரில் ஆண்டுதோறும் விஜயதசமியை முன்னிட்டு 10 நாட்கள் அரசு சார்பில் தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான தசரா விழா இன்று தொடங்கி 19-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இது 408-வது ஆண்டு தசரா விழாவாகும். இந்த ஆண்டு மழையால் குடகு, தட்சிணகன்னடா ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டதால், தசரா விழாவை எளிமையாக நடத்த அரசு முடிவு செய்தது.

    அதன்படி மைசூரு அருகே சாமுண்டி மலையில் குடிக்கொண்டிருக்கும் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜையுடன் இன்று காலை மைசூரு தசரா விழா தொடங்கியது. சிறப்பு பூஜை செய்து தசரா விழாவை கர்நாடக முதல்வர் குமாரசாமி, இன்போசிஸ் அறக்கட்டளை தலைவியும், எழுத்தாளருமான சுதாமூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.



    தசரா விழாவையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. மைசூரு அரண்மனையில் தர்பார் நடக்கிறது. இதில் தங்க சிம்மாசனத்தில் இளவரசர் யதுவீர் அமர்ந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்கிறார். இந்த தர்பார் விழா நிறைவடையும் 19-ந்தேதி வரை நடக்கிறது.

    வரலாற்று சிறப்பு மிக்க தசரா விழாவையொட்டி மைசூரு நகர் முழுவதும் மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இரவில் மைசூரு நகர் மின்னொளி அலங்காரத்தில் ஜொலிக்கிறது. மைசூருவுக்கு வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. இதனால் மைசூரு நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. #MysuruDasara #Karnataka #Kumaraswamy #SudhaMurthy 
    வரலாற்று சிறப்புமிக்க மைசூரு தசரா விழா நாளை தொடங்குகிறது. இந்த விழாவை சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து முதல்-மந்திரி குமாரசாமி முன்னிலையில் எழுத்தாளர் சுதாமூர்த்தி தொடங்கிவைக்கிறார். #MysoreDasaraFestival
    மைசூரு:

    கர்நாடக மாநிலம் மைசூருவில் கொண்டாடப்படும் தசரா விழா, வரலாற்று சிறப்புமிக்கது.

    விஜயநகர சமஸ்தானத்தில் கி.பி.1610-ம் ஆண்டு விஜய மன்னர்களால் தசரா விழா கொண்டாடப்பட்டது. காலப்போக்கில் ஸ்ரீரங்கப்பட்டணத்தை ஆண்ட ராஜா உடையார் மன்னரால் மைசூரு மாகாணத்தில் கொண்டாடப்பட்டது. அப்போது கர்நாடகத்தின் பாரம்பரியம், கலாசாரம், பண்பாடு, இலக்கியம் ஆகியவற்றை பறைசாற்றும் வகையில் இந்த விழா நடத்தப்பட்டு வந்தது. இதில் பாரம்பரிய நடனம், மல்யுத்தம் உள்பட கர்நாடகத்தின் வீர விளையாட்டுகளும் நடத்தப்பட்டு வருகிறது.

    இத்தகைய புகழ்பெற்ற தசரா விழா ஸ்ரீரங்கப்பட்டணாவில் மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு மைசூரு சாம்ராஜ்ஜியத்தில் யது வம்சத்தின் மன்னர்களால் ஆண்டுதோறும் சீரும், சிறப்புமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அது தற்போது மைசூரு தசரா விழாவாக உலகஅளவில் புகழ்பெற்று விளங்குகிறது. இந்த தசரா விழாவின் போது மன்னர்கள் தங்க சிம்மாசனத்தின் மீது அமர்ந்து மக்களிடம் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்துவைப்பார்கள். இது தசரா விழாவின் முக்கிய நிகழ்வாகும்.

    இந்தியாவில் மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்ததை தொடர்ந்து கடந்த 1972-ம் ஆண்டு முதல் கர்நாடக அரசு சார்பில் தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவுக்கு மன்னர் குடும்பத்தினரும் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள்.

    உலக பிரசித்தி பெற்ற தசரா விழாவுக்கு வரலாறு உள்ளது. மைசூரு மாகாணத்தை ஆண்ட கிருஷ்ண தேவராயர் போரில் எதிரிகளை வீழ்த்தியதை கொண்டாடும் வகையில் தசரா விழா கொண்டாடப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. அதுபோல் மைசூருவின் காவல் தெய்வமான சாமுண்டீஸ்வரி, மகிஷாசூரனை வீழ்த்தியதை நினைவுக்கூறும் வகையில் தசரா விழா கொண்டாடப்படுவதாகவும் சொல்லப் படுகிறது.

    இதனால் மைசூரு தசரா விழா ஆண்டுதோறும் விஜயதசமியை முன்னிட்டு 10 நாட்கள் அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தசரா விழா 10-ந்தேதி (நளை) தொடங்கி 19-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இது 408-வது ஆண்டு தசரா விழாவாகும். இந்த ஆண்டு மழையால் குடகு, தட்சிணகன்னடா ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டதால், தசரா விழாவை எளிமையாக நடத்த அரசு முடிவு செய்துள்ளது.

    அதன்படி நாளை(புதன் கிழமை) மைசூரு தசரா விழா தொடங்குகிறது. அதாவது மைசூரு அருகே சாமுண்டி மலையில் குடிக்கொண்டிருக்கும் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்வதன் மூலம் தசரா விழாவை இன்போசிஸ் அறக்கட்டளை தலைவியும், எழுத்தாளருமான சுதாமூர்த்தி தொடங்கிவைக்கிறார்.



    விழாவுக்கு முதல்-மந்திரி குமாரசாமி, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். இதில் மந்திரிகள் ஜி.டி.தேவேகவுடா, சா.ரா.மகேஷ், ஜெயமாலா, கலெக்டர் அபிராம் ஜி.சங்கர் உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள்.

    அதன் பிறகு தசரா விழாவையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. தசரா விழா தொடங்கிவைக்கப்பட்டதும் மைசூரு அரண்மனையில் தர்பார் நடக்கிறது. இதில் தங்க சிம்மாசனத்தில் இளவரசர் யதுவீர் அமர்ந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்கிறார். இந்த தர்பார் விழா நிறைவடையும் 19-ந்தேதி வரை நடக்கிறது.

    இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியாக ஜம்புசவாரி ஊர்வலம் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இதில் சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடைகொண்ட தங்க அம்பாரியை அர்ஜுனா யானை சுமந்தப்படி ஊர்வலமாக மைசூரு அரண்மனையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள பன்னிமண்டபத்தை சென்றடையும்

    அதன் பிறகு மற்ற யானைகளும், அலங்கார வாகனங்களும் அணிவகுத்து செல்லும். இந்த ஊர்வலத்தில் குதிரைப்படையினர், போலீசார், பேண்டுவாத்தியக் குழுவினர், நடனக்குழுவினர் உள்பட பல்வேறு கலைக்குழுவினரும் கலந்துகொள்வார்கள். இது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இதை காண கர்நாடகம் மட்டுமின்றி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வெளிமாநிலத்தினரும், வெளிநாட்டினரும் என சுமார் 5 லட்சம் பேர் வருகைதருவார்கள்.

    தசரா விழாவையொட்டி மைசூரு டவுன் நஜர்பாத்தில் உள்ள குப்பண்ணா பூங்காவில் மலர்கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதுபோல் இந்த ஆண்டும் அங்கு மலர்கண்காட்சி இன்று ெதாடங்குகிறது. இதில் இந்த ஆண்டு சிறப்பம்சமாக கண்ணாடி மாளிகை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு வண்ண, வண்ண மலர்ச்செடிகள் வளர்க்கப்பட்டுள்ளன. மேலும் மலர்களால் வனவிலங்குகள், தலைவர்களின் உருவங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    நாளை மைசூரு தசரா விழா தொடங்குவதால் அனைத்துவிதமான ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. மைசூரு நகர் முழுவதும் மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இரவில் மைசூரு நகர் மின்னொளி அலங்காரத்தில் ஜொலிக்கிறது.

    மேலும் இதையொட்டி மைசூருவுக்கு வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் மைசூரு நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. #MysoreDasaraFestival

    கர்நாடக மாநிலத்தில் காலியாக உள்ள இரு சட்டசபை தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் முதல் மந்திரி குமாரசாமியின் முதல் மனைவி அனிதா ராமநகரா தொகுதியில் போட்டியிடுகிறார். #Anitakumaraswamy
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் காலியாக உள்ள இரு சட்டசபை தொகுதிகளில்  நடைபெறும் இடைத்தேர்தலில் முதல் மந்திரி குமாரசாமியின் முதல் மனைவி அனிதா ராமநகரா தொகுதியில் போட்டியிடுகிறார்.

    கர்நாடக மாநிலத்தின் ஷிவமோகா தொகுதி பா.ஜ.க. எம்.பி.யான எடியூரப்பா, பல்லாரி தொகுதி பா.ஜ.க. எம்.பி.யான ஸ்ரீராமுலு, மண்டியா தொகுதி மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.பி.யான புட்டராஜு ஆகியோர் கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதைதொடர்ந்து, தங்களது எம்.பி. பதவிகளை அவர்கள் மூவரும் ராஜினாமா செய்தனர். இந்த மூன்று தொகுதிகளுக்கும் நவம்பர் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

    கடந்த சட்டசபை தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முதல் மந்திரி குமாரசாமி சன்னப்பட்னா தொகுதி எம்.எல்.ஏ.வாக நீடிக்கப் போவதாக அறிவித்தார். இதனால், அவர் வெற்றிபெற்ற மற்றொரு தொகுதியான ராமநகரா சட்டசபை உறுப்பினருக்கான இருக்கை காலியாக உள்ளது. மேலும், காங்கிரஸ் எம்.எல்.ஏ. நியமகவுடா இறந்ததால் ஜம்கன்டி சட்டசபை உறுப்பினருக்கான இருக்கையும் காலியாக உள்ளது.

    பாராளுமன்ற இடைத்தேர்தலுடன் இந்த 3 சட்டசபை தொகுதிகளுக்கும் நவம்பர்  3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 6-ம் தேதி எண்ணப்பட்டு அன்று முடிவுகள் வெளியாகும்.


    இந்நிலையில், ராமநகரா சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளராக போட்டியிடப் போவதாக முதல் மந்திரி குமாரசாமியின் முதல் மனைவியும், சினிமா நடிகையுமான அனிதா இன்று அறிவித்துள்ளார்.

    ராமநகராவில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அனிதா இந்த தொகுதியில் என்னை வேட்பாளராக நிறுத்த கட்சி தலைமை தீர்மானித்துள்ளது என குறிப்பிட்டார். #KarnatakaCMwife #Ramanagaraassemblysegment #Anitakumaraswamy
    ×