search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 100153"

    விவசாய கடன் தள்ளுபடிக்கு விண்ணப்பிக்க காலக்கெடு எதுவும் நிர்ணயம் செய்யவில்லை. அதனால் விவசாயிகள் பீதியடைய தேவை இல்லை என்று குமாரசாமி கூறியுள்ளார். #Kumarasamy
    பெங்களூரு :

    டெல்லியில் உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கை முதல்-மந்திரி குமாரசாமி நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் ரூ.45 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கடன் தள்ளுபடியின் பயனை பெற விண்ணப்பிக்க காலக்கெடு நிர்ணயம் செய்திருப்பதாக தவறான தகவல் பரவி வருகிறது. இது வெறும் வதந்தி யாரும் நம்ப வேண்டாம். விண்ணப்பிக்க காலக்கெடு எதுவும் நிர்ணயம் செய்யவில்லை. அதனால் விவசாயிகள் பீதியடைய தேவை இல்லை.

    கடனில் சிக்கி தவிக்கும் விவசாயிகளை காப்பாற்ற தனியாரிடம் வாங்கிய கடனையும் தள்ளுபடி செய்ய அரசு புதிய சட்டத்தை இயற்றியுள்ளது. அதற்கு மத்திய அரசின் அனுமதியை கேட்டுள்ளோம். அதனால் விவசாயிகள் யாரும் தற்கொலை முடிவை எடுக்க வேண்டாம்.

    விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தை அமல்படுத்துவதில் வெற்றி பெறுவோம். கடன் தள்ளுபடி விஷயத்தில் வெளியாகும் தவறான தகவல்களை விவசாயிகள் நம்பக் கூடாது. விவசாயிகள் சரியான தகவல்களை வழங்கினால், அதன் அடிப்படையில் கடன் தொகையை அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் இடைத்தரகர்கள் பயன் அடைவது தடுக்கப்படும்.

    தனியார் கடன் தள்ளுபடிக்கான சட்ட மசோதாவில் 2 சந்தேகங்களை மத்திய அரசு கேட்டது. அவற்றுக்கு நாங்கள் விளக்கம் அளித்துள்ளோம். இந்த சட்டத்திற்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் வழங்கும். கடன் தள்ளுபடியின் பயனை விவசாயிகள் முழுமையாக பெற வேண்டும்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார்.

    இந்த சந்திப்பின்போது, தேவேகவுடா, பொதுப்பணித்துறை மந்திரி எச்.டி.ரேவண்ணா ஆகியோர் உடன் இருந்தனர். #Kumarasamy
    விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பின்பும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வரவேண்டாம் என்று முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார். #Karnataka #ChiefMinister #Kumaraswamy
    பெங்களூரு :

    காந்தி ஜெயந்தி தினத்தையொட்டி பெங்களூரு விதானசவுதா வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த, காந்தியின் உருவப்படத்திற்கு முதல்-மந்திரி குமாரசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதுபோல, துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா, காந்தியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    பின்னர் காந்தி பவனில் நடந்த காந்தி ஜெயந்தி விழாவில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

    மாநிலத்தில் உள்ள 30 மாவட்டங்களின் தலைநகரங்களிலும் காந்திபவன் கட்ட அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் சில மாவட்டங்களில் காந்திபவன் கட்டுவதற்கு தேவையான இடம் கிடைக்கவில்லை. அந்த மாவட்டங்களில் எங்கு இடம் இருக்கிறது என்பதை கண்டறிந்து, அங்கு காந்திபவன் கட்டப்படும். 30 மாவட்டங்களிலும் காந்திபவன் கட்டப்படும். நள்ளிரவு 12 மணிக்கு ஒரு பெண் தனியாக வெளியே சென்று விட்டு எந்த பிரச்சினையும் இ்ல்லாமல் வீட்டிற்கு வர வேண்டும் என்பதே மகாத்மா காந்தியின் கனவாகும். அவரது கனவை கர்நாடகத்தில் நினைவாக்க நான் மிகவும் விரும்புகிறேன். மக்கள் நிம்மதியாக வாழ சட்டவிரோதமாக நடைபெறும் சம்பவங்களை தடுக்க வேண்டும். கொள்ளையர்களை அடியோடு ஒழிக்க வேண்டும். அதற்காக பெங்களூரு நகர போலீஸ் துறைக்கு நேர்மையான அதிகாரிகளை நியமித்துள்ளேன்.

    எந்த விதமான நெருக்கடிகளுக்கும் அடி பணியாமல் சுதந்திரமாக மக்களுக்காக பணியாற்றும்படி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன். நான் சொன்னால் கூட நீங்கள் கேட்க வேண்டாம், நேர்மையாக பணியாற்றுங்கள் என்று போலீஸ் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன். குறிப்பாக பெண்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். இதற்காக போலீசாருக்கு தேவையான உதவிகளை அரசு செய்து கொடுக்க தயாராக உள்ளது.



    பல கோடி ரூபாயை வைத்து கொண்டு சூதாட்டத்தில் ஈடுபடும் விடுதிகள் மீது போலீசார் சோதனை நடத்தி வருவதுடன், சூதாட்டத்திற்கு கடிவாளம் போட்டு வருகின்றனர். பெங்களூருவில் குற்றங்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். பெங்களூருவில் தற்போது பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை. நகரின் பாதுகாப்புக்காக பல கோடி ரூபாய் செலவில் பெங்களூரு முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதே இந்த அரசின் நோக்கமாகும்.

    இதற்கு முன்பு நான் முதல்-மந்திரியாக இருந்தபோது மாநிலத்தில் நடைபெற்ற பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு தடை விதித்தேன். லாட்டரி விற்பனையை தடை செய்தேன். அப்படி இருக்கும் பட்சத்தில் தற்போது புதிய மதுபான கடைகள் திறக்க அனுமதி அளிப்பேனா?. புதிய மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்க நான் ஆலோசிப்பதாக தகவல்கள் வருகின்றன. அது தவறானது. மாநிலத்தில் புதிய மதுக்கடைகள் திறக்கும் எண்ணம் எனக்கு இல்லை. அவ்வாறு புதிய மதுக்கடைகள் திறக்க உரிமம் வழங்க வேண்டும் என்று நான் நினைத்தது கூட இல்லை. அதனால் புதிய மதுக்கடைகள் திறக்க ஒரு போதும் அனுமதி அளிக்க மாட்டேன்.

    ஜனதா தரிசனம் நிகழ்ச்சியை விருப்பம் இல்லாமல் நடத்துவதாக சிலர் குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள். ஜனதா தரிசனம் நிகழ்ச்சியில் காலையில் இருந்து இரவு வரை மக்களின் குறைகளை கேட்டு அறிவதுடன், ஏராளமான மக்களின் குறைகளை சரி செய்துள்ளேன். வேலை வாய்ப்பு முகாம் நடத்தி ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளேன். கூட்டணி ஆட்சியில் விவசாய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    அப்படி இருந்தும் விவசாயிகள் தற்கொலை செய்வது மிகுந்த வேதனை அளிக்கிறது. கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை செய்யக்கூடாது என்பதாலும், விவசாயிகள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காகவும் தான் விவசாயக்கடனை தள்ளுபடி செய்தேன். ஒரு விவசாயி தற்கொலை செய்வதால், அவரது குடும்பமே வீதிக்்கு வந்து விடுகிறது. அதனால் எந்த ஒரு விவசாயியும் தற்கொலை செய்யும் முடிவுக்கு வரவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்-மந்திரி குமாரசாமி பேசினார். #Karnataka #ChiefMinister #Kumaraswamy 
    அரசு ஊழியர்களுக்கு தேவையற்ற விடுமுறை அளிக்கக்கூடாது என்றும், அவர்கள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி முதல்-மந்திரி குமாரசாமிக்கு, மந்திரி பிரியங்க் கார்கே கடிதம் எழுதியுள்ளார். #Karnataka #Kumaraswamy
    பெங்களூரு :

    கூட்டணி ஆட்சியில் சமூக நலத்துறை மந்திரியாக இருந்து வருபவர் பிரியங்க் கார்கே. இவர், முதல்-மந்திரி குமாரசாமிக்கு எழுதி இருந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    மாநிலத்தில் அரசு ஊழியர்கள் வாரத்தில் 6 நாட்கள் பணியாற்றி வருகிறார்கள். இதன் காரணமாக அரசு ஊழியர்களின் வேலை பளு அதிகமாக உள்ளது. அரசு அலுவலகங்களில் ஏராளமான கோப்புகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியது அவசியமாகும்.

    இதற்கு முன்பு ராமகிருஷ்ண ஹெக்டே முதல்-மந்திரியாக இருந்தபோது மாநிலத்தில் அரசு ஊழியர்கள் வாரத்தில் 5 நாட்கள் பணியாற்றினால் போதும் என்ற முடிவுக்கு வந்தார். அதன்படி, அவர் முதல்-மந்திரியாக இருந்தபோது அரசு ஊழியர்கள் வாரத்தில் 5 நாட்கள் பணியாற்றினால் போதும் என்பதை அமல்படுத்தி செயல்படுத்தினார்.



    அப்போது அரசு ஊழியர்கள் சிறப்பாகவும், ஊக்கமாகவும் பணியாற்றினார்கள். கோப்புகள் தேங்காமல் பார்த்து கொண்டனர். நாளடைவில் அரசு ஊழியர்கள் வாரத்தில் 5 நாட்கள் பணியாற்றும் நடைமுறைகள் மாற்றப்பட்டு, 6 நாட்கள் பணியாற்றியே தீர வேண்டும் என்பது நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போதும் அது தொடருகிறது.

    இந்த நடைமுறையை மாற்ற வேண்டும். வாரத்தில் 5 நாட்கள் அரசு ஊழியர்கள் பணியாற்றினால் போதும் என்ற நடைமுறையை அமல்படுத்த வேண்டும். அரசு ஊழியர்களுக்கு தேவையற்ற விடுமுறைகள் வழங்கக்கூடாது. வாரத்தில் 5 நாட்கள் மட்டும் அரசு ஊழியர்கள் பணியாற்ற அனுமதிக்க வேண்டும். இதனை முதல்-மந்திரி குமாரசாமி தனது ஆட்சியில் அமல்படுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

    வாரத்தில் 6 நாட்களுக்கு பதிலாக 5 நாட்கள் அரசு ஊழியர்கள் பணியாற்றும் நடைமுறையை அமல்படுத்த கர்நாடக அரசு ஆலோசித்து வருவது குறிப்பிடத் தக்கதாகும். #Karnataka #Kumaraswamy
    முதியவர்கள், கர்ப்பிணிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் அடுத்த மாதம் (நவம்பர்) முதல் அமல்படுத்தப்படும் என்று முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்துள்ளார். #Karnataka #ChiefMinister #Kumaraswamy
    பெங்களூரு :

    பெங்களூருவில் மூத்த குடிமக்கள் தினவிழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டார். மேலும் கர்நாடகத்தில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த மூத்த குடிமக்களுக்கு விருதுகளை வழங்கி முதல்-மந்திரி குமாரசாமி கவுரவப்படுத்தினார்.

    பின்னர் முதல்-மந்திரி குமாரசாமி பேசியதாவது:-

    மாநிலத்தில் கூட்டணி ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால் ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதாவினர் சதி செய்கிறார்கள். இந்த ஆட்சி கவிழ்ந்து விடும் என்று பகல் கனவு காண்கிறார்கள். மாநிலத்தில் கூட்டணி ஆட்சியில் எந்த பிரச்சினையும் இல்லை. 5 ஆண்டுகளையும் கூட்டணி ஆட்சி வெற்றிகரமாக நிறைவு செய்யும். விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது.

    விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பிறகும் வங்கி அதிகாரிகள் விவசாயி களிடம் கடன் கேட்டு நெருக்கடி கொடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளேன். அவ்வாறு நெருக்கடி கொடுக்கும் வங்கி அதிகாரிகள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் நிம்மதியாக வாழ வேண்டும். மண்டியாவில் ஒரு விவசாயிக்கு கடனை திரும்ப செலுத்தும்படி வங்கி அதிகாரிகள் நோட்டீசு அனுப்பி இருப்பதாக செய்திகள் வெளியானது. அதுபற்றி மண்டியா மாவட்ட கலெக்டரிடம் தகவல் கேட்டு அறிந்தேன்.



    அந்த விவசாயி கடந்த 2007-ம் ஆண்டு வங்கியில் கடன் வாங்கியுள்ளார். அந்த கடனை திரும்ப செலுத்தாததால் வங்கி சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் விவசாயி இருந்துள்ளார். இதனால் விசாரணைக்கு ஆஜராகும்படி தற்போது கோர்ட்டு நோட்டீசு அனுப்பியுள்ளது. அவருக்கு வங்கி சார்பில் கடன் வாங்கியதற்காக எந்த நோட்டீசும் அனுப்பவில்லை. ஆனால் வங்கி சார்பில் கடனை செலுத்தும்படி விவசாயிக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு இருப்பதாக தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன.

    இந்த அரசு விவசாயிகள் மீது மட்டுமே அக்கறை காட்டுவதாக குற்றச்சாட்டுகள் வருகின்றன. அதுவும் தவறானது. விவசாயிகள் பிரச்சினைகளில் மட்டும் இந்த அரசு கவனம் செலுத்தவில்லை. முதியவர்கள், கர்ப்பிணிகள் அனைத்து தரப்பு மக்களும் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதே எனது தலைமையிலான அரசின் நோக்கமாகும். இதற்கான திட்டங்களை செயல்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன். மாநிலத்தில் உள்ள 30 மாவட்டங்களில் வசிக்கும் முதியவர்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் உரிய மருத்துவ சிகிச்சைகள் கிடைக்க தேவையான புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

    மாநிலத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் அடுத்த மாதம் (நவம்பர்) முதல் அமல்படுத்தப்படும். இந்த திட்டம் முதியவர்கள், கர்ப்பிணிகளுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். இந்த திட்டம் பின்னர் விரிவுபடுத்தப்பட்டு முதியவர்கள், கர்ப்பிணிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுவது, மாதம் ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். அதனால் விவசாயிகள் மட்டுமின்றி மாநிலத்தில் உள்ள அனைவரும் நிம்மதியாக வாழ இந்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்பது உறுதி.

    இவ்வாறு முதல்-மந்திரி குமாரசாமி பேசினார். இந்த நிகழ்ச்சியில் மந்திரி ஜெயமாலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #Karnataka #ChiefMinister #Kumaraswamy 
    கர்நாடகத்தில் வருகிற 12-ந்தேதிக்குள் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் என்று முதல்-மந்திரி குமாரசாமி உறுதிபட கூறியுள்ளார். #Karnataka #CabinetExpansion #ChiefMinister #Kumaraswamy
    பெங்களூரு:

    காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சியில் மந்திரிசபையில் 7 இடங்கள் காலியாக உள்ளன. மந்திரிசபையில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கி வருகிறார்கள். இதனால் மந்திரிசபை விரிவாக்கம் செய்வதை கூட்டணி கட்சி தலைவர்கள் தொடர்ந்து தள்ளிப்போட்டு வந்த வண்ணம் உள்ளனர். ஆனால் வருகிற 10-ந் தேதிக்குள் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர்.

    இந்த நிலையில், மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படுவது எப்போது? என்பது குறித்து பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி குமாரசாமியிடம் நிருபர்்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

    மந்திரிசபையில் 7 இடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் காங்கிரஸ் சார்பில் 6 இடங்களும், ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் ஒரு இடங்களும் இருக்கிறது. மந்திரிசபையில் காலியாக உள்ள 7 இடங்களையும் நிரப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன், கர்நாடக தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். நான் கூட, காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் மந்திரிசபை விரிவாக்கம் தொடர்பாக பேசி வருகிறேன். மந்திரிசபை விரிவாக்கம் செய்ய கூட்டணி கட்சி தலைவர்களால் முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் வருகிற 10-ந் தேதி அல்லது 12-ந் தேதிக்குள் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படுவது உறுதி. ஒரே நேரத்தில் மந்திரிசபையில் காலியாக உள்ள 7 இடங்களும் நிரப்பப்படும்.

    கடந்த மாதம் (செப்டம்பர்) மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய முடிவு எடுக்கப்பட்டது. கூட்டணி கட்சியின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் சித்தராமையா வெளிநாட்டு பயணத்தால் அப்போது மந்திரிசபை விரிவாக்கம் செய்ய முடியாமல் போனது. மாநகராட்சி மேயர் தேர்தல் முடிந்திருப்பதுடன், மேல்-சபைக்கு நடந்த தேர்தலிலும் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. இதுபோன்ற எல்லா பிரச்சினைகளும் ஒரு முடிவுக்கு வந்திருப்பதால் வருகிற 10-ந் தேதி அல்லது 12-ந் தேதி மந்திரிசபை விரிவாக்கம் நடைபெற உள்ளது. அதே நேரத்தில் 30 எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.  #Karnataka #CabinetExpansion #ChiefMinister #Kumaraswamy 
    காங்கிரசில் எம்.எல்.ஏ.க்கள் யாருக்கும் கருத்து வேறுபாடுகள் எதுவும் இல்லை என்று காங்கிரஸ் துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா பேட்டியளித்துள்ளார். #ministerParmeswara #Congress
    பெங்களூரு :

    கர்நாடகா துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இட ஒதுக்கீட்டு விஷயத்தில் அடித்தட்டு சமுதாயத்தினருக்கு உரிய நீதியை வழங்க வேண்டியது அவசியம். அந்த நோக்கத்தின் அடிப்படையில் முன்பு காங்கிரஸ் ஆட்சியில் பதவி உயர்வில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த சட்டதிருத்த மசோதா விரைவில் அமல்படுத்தப்படும்.

    இதுகுறித்து முதல்-மந்திரியுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறோம். இந்த சட்டத்திருத்தம் இன்னும் அமலுக்கு வராததால், சமூக நலத்துறை மந்திரி பிரியங்க் கார்கே உள்பட அனைவருக்குமே வருத்தம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று (நேற்று) பிரியங்க் கார்கே என்னை வந்து சந்தித்து பேசினார். இந்த சட்டம் கர்நாடகத்தில் இன்றோ (அதாவது நேற்று) அல்லது நாளையோ (இன்று) அமலுக்கு வரும்.

    பெங்களூருவில் சாலைகளில் ஏற்பட்டுள்ள குழிகளை மூடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மழை காலத்தில் சாலைகளில் குழிகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றன. இந்த விஷயத்தில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். பெரும்பாலான இடங்களில் சாலை குழிகளை மூடிவிட்டோம். நேற்று திடீரென மழை பெய்த காரணத்தால், சாலைகளில் மீண்டும் குழிகள் ஏற்பட்டுள்ளன.



    குழிகளை எண்ணி மூடுவது என்பது சாத்தியம் இல்லை. சாலைகளில் குழிகள் ஏற்படும்போது, அதை மூடுகிறோம்.

    பா.ஜனதாவுக்கு ஆட்சி அதிகார தாகம் உள்ளது. அதனால் கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அதனால் அக்கட்சியினர் அமைதியாக இருக்காமல் ஏதாவது சிக்கலை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் பா.ஜனதாவினர் அந்த முயற்சியில் வெற்றி பெற மாட்டார்கள். இந்த கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.

    காங்கிரசில் எம்.எல்.ஏ.க்கள் யாருக்கும் கருத்து வேறுபாடுகள் எதுவும் இல்லை. சில எம்.எல்.ஏ.க்கள் கோவிலுக்கு சென்றனர். அதை வேறு ரீதியில் மக்களிடையே எடுத்துக்கூறி குழப்பம் விளைவிக்க முயற்சி செய்கிறார்கள். எம்.எல்.ஏ.க்கள் சுதாகர் மற்றும் எம்.டி.பி.நாகராஜ் ஆகியோருக்கு அதிருப்தி இருப்பது உண்மை தான். அவர்களின் தொகுதிகளில் வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை என்ற ஆதங்கம் உள்ளது. அதை நாங்கள் சரிசெய்வோம். மூத்த எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரியாக வேண்டும் என்று ஆசை இருப்பது சகஜமானது. இதை தவறு என்ன சொல்ல முடியாது.

    இவ்வாறு பரமேஸ்வரா கூறினார்.

    இதைதொடர்ந்து அவரிடம் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்-மந்திரி குமாரசாமி பாரபட்சமாக தொகுதி நிதி ஒதுக்கீடு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளித்து கூறுகையில், ‘காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை முதல்-மந்திரி குமாரசாமி பாரபட்சத்துடன் பார்ப்பதாக சொல்வது பொய். எனக்கு தெரிந்தவரையில் அவர் அனைவரையும் சரிசமமாக பார்த்து நிதி ஒதுக்கீட்டை செய்கிறார்‘ என்றார். #ministerParmeswara #Congress
    ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் முடிவை கைவிட வேண்டும். இல்லையெனில் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.வுடன் குதிரைபேரத்தில் ஈடுபட்ட ஆதாரத்தை வெளியிடுவேன் என எடியூரப்பாவுக்கு குமாரசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். #Kumaraswamy #Yeddyurappa
    ஹாசன் :

    கர்நாடகத்தில் காங்கிரஸ் - ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    இந்த நிலையில் தற்போது கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா கடும் முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் கூட்டணி ஆட்சியில், அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்களிடம் பா.ஜனதா குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாகவும், அதனால் கூட்டணி ஆட்சியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் மும்பை அல்லது சென்னைக்கு செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

    இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஆட்சியை காப்பாற்ற வேண்டி முதல்-மந்திரி குமாரசாமி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மேலும் நேற்று முன்தினம் அவர் சிக்க மகளூரு மாவட்டம் சிருங்கேரிக்கு சென்று அங்கு சாரதா பீடத்தில் சிறப்பு யாகம் நடத்தினார். இதில் குமாரசாமியின் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

    இதையடுத்து அவர் ஹாசன் மாவட்டத்திற்கு சென்றார். பின்னர் அவர் தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த கூட்டம் ஹாசன் புறநகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் ரெசார்ட் ஓட்டலில் நடந்தது. கூட்டத்திற்கு முன்னாள் பிரதமர் தேவேகவுடா, முதல்-மந்திரி குமாரசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில் ஜனதா தளம்(எஸ்) கட்சியைச் சேர்ந்த 35 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். ஜனதா தளம்(எஸ்) கட்சியில் தற்போது 37 எம்.எல்.ஏ.க்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    முக்கியமான இந்த ஆலோசனை கூட்டத்தில் கே.ஆர். பேட்டை சட்டமன்ற உறுப்பினர் நாராயணகவுடா, துமகூரு புறநகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கவுரிசங்கர் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் தங்களுடைய தனிப்பட்ட சொந்த விஷயங்கள் காரணமாக இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

    இக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா பேசியதாவது:-

    ஜனதா தளம்(எஸ்) எம்.எல். ஏ.க்கள் மிகவும் மனவலிமையோடு இருக்க வேண்டும். மீண்டும் நமது ஒற்றுமையை நிரூபிக்க வேண்டும். ஜனதா தளம்(எஸ்) கட்சி இன்னும் நீண்ட நாட்கள் கர்நாடகத்தில் ஆட்சி செய்ய வேண்டும். ஆனால் அதற்கு தற்போது காங்கிரஸ் தயவும் தேவைப்படுகிறது. அதனால் நாம் காங்கிரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

    நாம் இன்னும் அதிக தூரம் செல்ல வேண்டி இருக்கிறது. அதற்காக நாம் காங்கிரசையும் நம்முடன் இணைத்து செயல்பட வைக்க வேண்டும். இது தேவேகவுடாவின் குடும்ப ஆட்சி இல்லை. ஒட்டுமொத்த ஜனதா தளம்(எஸ்) தொண்டர்கள் ஆட்சி.

    இவ்வாறு அவர் பேசினார்.



    இதையடுத்து முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    என்னுடன் சில பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தொடர்பில்தான் உள்ளனர். ஆபரேஷன் தாமரை மூலம் கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் சிலர் மும்பைக்கு செல்ல இருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் நாங்கள் நடத்திய இந்த கூட்டத்தில் எங்கள் கட்சியைச் சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்களைத் தவிர மற்ற அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டணி மீது ஏற்பட்ட அதிருப்தியில் சில எம்.எல்.ஏ.க்கள் மும்பைக்கு செல்ல திட்டமிட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் கட்சியைவிட்டு விலகும் திட்டத்தில் இல்லை. ஊடகங்கள்தான் அவ்வாறு செய்திகளை வெளியிடுகின்றன.

    கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் திட்டத்தை எடியூரப்பா கைவிட வேண்டும். இல்லையெனில் அவருக்கு எதிரான ஆதாரங்களை நான் வெளியிடுவேன். எங்கள் கட்சியைச் சேர்ந்த சுரேஷ் கவுடா எம்.எல்.ஏ.விடம் எடியூரப்பாவும், பா.ஜனதாவினரும் செல்போனில் பேசி குதிரை பேரத்தில் ஈடுபட்டதற்கான ஆடியோ ஆதாரம் என்னிடம் இருக்கிறது. ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியை அவர் கைவிடவில்லை என்றால் அவர் குதிரை பேரத்தில் ஈடுபட்ட ஆடியோவை பகிரங்கப்படுத்துவேன்.

    தற்போது எங்கள் கட்சியைச் சேர்ந்த அனைத்து எம்.எல்.ஏ.க்களும் எங்களிடம்தான் இருக்கிறார்கள். யாரும் பா.ஜனதாவிடம் செல்லவில்லை. கட்சியைவிட்டு விலகவும் இல்லை. கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி பாதுகாப்பாக உள்ளது. எடியூரப்பாவுக்கு எதிரான ஆதாரங்களை நான் உரிய நேரத்தில் அம்பலப்படுத்துவேன்.

    இவ்வாறு அவர் பேசினார். இதையடுத்து நேற்று முன் தினம் இரவு முதல்-மந்திரி குமாரசாமி ஹாசனிலேயே தங்கினார்.

    நேற்று காலையில் அவர் ஹாசனில் நடந்த வளர்ச்சித்திட்ட பணிகளில் கலந்து கொண்டார். முதலில் அவர் ஹாசனில் ரூ.556.20 கோடி செலவில் ஹாசன் பால் பண்ணையில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு எந்திரங்களையும், கட்டிடங்களையும் திறந்து வைத்தார். மேலும் அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஐஸ்கிரீம் தயாரிப்பு பிரிவையும் தொடங்கி வைத்தார்.

    அதுமட்டுமல்லாமல் ஹாசன் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.16.53 கோடி செலவில் மருத்துவ உபகரணங்கள், ஆதர்ஷா பள்ளியில் ஆங்கில வழி கல்வி மற்றும் ரூ.63.10 கோடி செலவில் புதிய கட்டிடங்கள், ஹாசன் மாவட்டத்தில் சாலை சீரமைப்புக்கான பணிகள், ஆயுர்வேத-ஓமியோபதி மருத்துவமனைக்கென புதிய கட்டிடம், 43.50 கோடி செலவில் நீர்ப்பாசன திட்டம், 122.20 கோடி செலவில் ஸ்ரீராமதேவரே அணையை புனரமைக்கும் பணி, ரூ.333 கோடி செலவில் ஹேமாவதி ஆற்றில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களை முதல்-மந்திரி குமாரசாமி தொடங்கி வைத்தார். சில திட்டங்களை அவர் காணொலி காட்சி மூலமாகவும் தொடங்கி வைத்தார்.

    இதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி கவிழாது. கூட்டணி அரசை யாராலும் கவிழ்க்க முடியாது. மாநில அரசு பாதுகாப்பாகத்தான் இருக்கிறது. இந்த கூட்டணி அரசு 5 ஆண்டுகளையும் முழுமையாக நிறைவு செய்யும். நான் முதல்-மந்திரியாக 5 ஆண்டுகளையும் நிறைவு செய்வேன். இதில் மாற்று கருத்து இல்லை. இதுபற்றி யார் எதை சொன்னாலும் அதை மக்கள் நம்ப வேண்டாம். இதில் யாருக்கும் சந்தேகமும் வேண்டாம்.

    கூட்டணி ஆட்சிக்கு பா.ஜனதாவினர் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வருகிறார்கள். ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் பா.ஜனதா வினரின் கனவு பலிக்காது.

    இவ்வாறு முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.

    இந்த விழாவில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா, மந்திரிகள் எச்.டி.ரேவண்ணா, ஜி.டி.தேவேகவுடா டி.சி. தம்மண்ணா, சா.ரா.மகேஷ், பண்டப்பா காசம்பூர், வெங்கடராவ் நாடகவுடா உள்பட பலர் கலந்து கொண்டனர். பா.ஜனதாவை சேர்ந்த பிரீத்தம் ஜே.கவுடா எம்.எல்.ஏ. மட்டும் விழாவை புறக்கணித்தார். #Kumaraswamy #Yeddyurappa

    பா.ஜனதா நடத்திய குதிரை பேர வீடியோ சிக்கி இருப்பதாகவும், அதை வைத்து லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப் போவதாக குமாரசாமி எச்சரித்ததையடுத்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சமாதானமாகி உள்ளனர். #Kumaraswamy #KarnatakaPolitics
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் ஜே.டி.எஸ். - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த கூட்டணியில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா முயற்சி செய்தது.

    இதனால் குமாரசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. அவர் நேரடியாகவே மாநில பா.ஜனதா தலைவர் எடியூரப்பாவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

    இந்த நிலையில் ஆட்சியை கவிழ்க்க சதியில் ஈடுபடும் பா.ஜனதா நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஜே.டி.எஸ். கட்சி சார்பில் கர்நாடக சட்டசபை சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் மனு கொடுக்கப்பட்டு உள்ளது.

    அதில் எங்கள் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ் கவுடாவை பா. ஜனதா கட்சியினர் தொடர்பு கொண்டு ரூ.30 கோடி கொடுப்பதாக பேரம் பேசி உள்ளனர். இதேபோல் எங்கள் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் எச்.கே.குமாரசாமி, சீனிவாசமூர்த்தி, தேவானந்த சவுகான், காங்கிரசை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் பி.சி.பட்டீல், எம்.டி.பி. நாகராஜ், சிவள்ளி, ரமேஷ் ஜார்கிகோளி, ரகீம்கான் உள்ளிட்டோரிடமும் பா.ஜனதா கட்சியினர் பேரம் பேசி இருக்கிறார்கள்.

    எனவே குதிரை பேரத்தில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

    பின்னர் முதல்-மந்திரி குமாரசாமி கூட்டணி அரசின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-மந்திரியுமான சித்தராமையாவை நேரில் சந்தித்து பேசினார்.

    துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், செயல் தலைவர் ஈஸ்வர் கன்ட்ரே, மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோரும் உடன் இருந்தனர்.

    இந்த கூட்டத்தில் பா.ஜனதாவின் ஆபரே‌ஷன் தாமரை திட்டத்தை எப்படி முறியடிப்பது, காங்கிரஸ் மற்றும் ஜே.டி.எஸ். எம்.எல்.எ.க்கள் பா.ஜனதாவுக்கு தாவாமல் பாதுகாப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.



    இதில் எம்.எல்.ஏக்களுடன் பா. ஜனதா நடத்திய குதிரை பேரம் தொடர்பான ஆடியோ-வீடியோ சிக்கி இருப்பதாகவும் அதை வைத்து எம்.எல்.ஏ.க்கள் மீது லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாரை கொண்டு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் குமாரசாமி யோசனை தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ள எம்.எல்.ஏ.க்களிடம் குமாரசாமி போனில் பேசினார். குதிரை பேர வீடியோ தன்னிடம் சிக்கி இருப்பதாகவும் இதை வைத்து லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப் போவதாக எச்சரித்தார்.

    இதைத்தொடர்ந்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சமாதானமாகி பணிந்தனர். இதனால் தற்காலிகமாக குமாரசாமி ஆட்சிக்கு நெருக்கடி நீங்கியது.

    இதேபோல் காங்கிரஸ் தரப்பிலும் தங்கள் கட்சி அதிருப்தி எம்.எல்.ஏக் களுடன் பேச்சு நடத்தி சமாதானம் செய்தனர்.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஜே.டி.எஸ். எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ஹாசனில் இன்று (சனிக்கிழமை) மாலை ஒரு தனியார் ஓட்டலில் நடக்கிறது. இதில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, முதல்-மந்திரி குமாரசாமி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த கூட்டத்தை தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒரே ஓட்டலில் தங்க வைக்கப்படுவார்கள் என்றும், கூட்டணி அரசுக்கு எழுந்து உள்ள சிக்கல் தீரும் வரை எம்.எல்.ஏ.க்களை ஒரே இடத்தில் வைத்துக்கொள்ள குமாரசாமி விரும்புவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. #Kumaraswamy #KarnatakaPolitics
    கூட்டணி ஆட்சி கவிழ்ந்தால் பா.ஜனதா பொறுப்பு அல்ல என்றும், குமாரசாமிக்கு ஆட்சி பறிபோய்விடுமே என்ற பயம் வந்துவிட்டது என்றும் எடியூரப்பா கூறி இருக்கிறார். #Yeddyurappa #BJP
    பெங்களூரு :

    கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறி இருப்பதாவது:-

    ஆட்சி அதிகாரம் பறிபோய்விடுமோ என்ற பயத்தால் முதல்-மந்திரி குமாரசாமி விரக்தி அடைந்துள்ளார். இதனால் சபாநாயகரிடம் மனு கொடுத்து, பா.ஜனதா குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக புகார் கூறி இருக்கிறார். இந்த விஷயத்தில் சபாநாயகரை இழுப்பது தவறானது. காங்கிரஸ் கட்சியில் சில எம்.எல்.ஏ.க்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனால் கூட்டணி ஆட்சிக்கு சிக்கல் எழுந்துள்ளது. இதற்கு பா.ஜனதா எப்படி பொறுப்பாக முடியும்?.

    எங்கள் கட்சியை சேர்ந்த சுபாஷ் குத்தேதார் எம்.எல்.ஏ.வை இழுக்க குமாரசாமி முயற்சி செய்தார். கலபுரகிக்கு சென்றபோது, எங்கள் எம்.எல்.ஏ.விடம் குமாரசாமி பேசினார். ஆனால் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ.வை கூட இழுக்க முயற்சி செய்யவில்லை. கூட்டணி ஆட்சி கவிழ்ந்தால் அதற்கு பா.ஜனதா பொறுப்பு அல்ல. அவர்களின் உட்கட்சி பிரச்சினை தான் அதற்கு காரணமாக இருக்கும்.

    சபாநாயகரிடம் கொடுத்த புகாரில், பா.ஜனதா குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக கூறப்பட்டுள்ளது. இந்த கூட்டணி ஆட்சியில் உள்ள தோல்விகளை மூடிமறைக்கும் நோக்கத்தில் மக்களின் கவனத்தை திசை திருப்பவே குதிரை பேரம் என்ற குற்றச்சாட்டை ஜனதா தளம்(எஸ்) கூறுகிறது.



    மாநிலத்தில் வறட்சியால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அந்த மக்களுக்கு தேவையான உதவிகளை இந்த அரசால் செய்ய முடியவில்லை. அதனால் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக பா.ஜனதா மீது புழுதி வாரி இறைக்கிறார்கள். ஆட்சி பறிபோய்விடுமோ என்ற பயம் வந்துவிட்டதால், காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் இவ்வாறு குற்றம்சாட்டுகின்றன.

    மக்களின் ஆதரவு கிடைக்காவிட்டாலும் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. ஆயினும் நாங்கள் இந்த ஆட்சியை கவிழ்க்க மாட்டோம் என்று பல முறை கூறி இருக்கிறோம். எதிர்க்கட்சியாக பா.ஜனதா தனது கடமையை ஆற்றி வருகிறது. வளர்ச்சி திட்டங்களுக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம். ஆனால் ஆட்சியில் வளர்ச்சி பணிகள் நடைபெறாதபோது, நாங்கள் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருக்க முடியாது.

    இந்த அரசின் பெரும்பான்மை எண்ணிக்கை குறையும்போதோ அல்லது சரியாக செயல்படாதபோதோ ஆட்சி அமைக்க உரிமை கோருவது தவறா?. குதிரை பேரத்தில் யார் ஈடுபட்டுள்ளனர் என்பது இந்த மாநிலத்திற்கே தெரியும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #Yeddyurappa  #BJP
    வீதிக்கு வந்து போராடுமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்த கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி மீது அரசியல் சாசன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவர்னரிடம் பா.ஜனதா புகார் அளித்தது. #Kumaraswamy
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் காங்கிரஸ்- ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சியை கவிழ்த்துவிட்டு, பா.ஜனதா ஆட்சி அமைக்க தீவிர முயற்சி செய்து வருகிறது. இதனால் குமாரசாமி தலைமையிலான அரசு ஆட்டம் கண்டு வருகிறது.

    இதைத் தொடர்ந்து முதல்-மந்திரி குமாரசாமி ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்யும் பா.ஜனதாவுக்கு எதிராக மக்கள் வீதிக்கு திரண்டு வந்து கிளர்ச்சியில் ஈடுபடவேண்டும் என்று பகிரங்கமாகவே அழைப்பு விடுத்தார். இதைக் கண்டித்த பா.ஜனதா, குமாரசாமி மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

    மேலும் எதிர்க்கட்சிக்கு எதிராக மக்களை போராடத்தூண்டியதாக கூறி முதல்-மந்திரி குமாரசாமியை கண்டித்து பா.ஜனதா சார்பில் கர்நாடகா முழுவதும் நேற்று பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் பெங்களூருவில் மாநில கவர்னர் வஜூபாய் வாலாவை, மத்திய மந்திரி சதானந்த கவுடா, பா.ஜனதா முன்னாள் துணை முதல்-மந்திரி ஆர்.அசோக், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ஷோபா, முன்னாள் மந்திரி சுரேஷ்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் நேற்று நேரில் சந்தித்தனர்.


    அப்போது அவர்கள் ஒரு புகார் மனுவை கவர்னரிடம் வழங்கினர். அதில், “ஒரு கட்சிக்கு (பா.ஜனதா) எதிராக மக்கள் வீதிக்கு திரண்டு வந்து கிளர்ச்சியில் ஈடுபடவேண்டும் என்று மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக ஒரு மாநிலத்தின் முதல்-மந்திரியே பேசுகிறார். இதுபோல் ஒரு முதல்-மந்திரியே பேசுவது மிக ஆபத்தானது.

    மேலும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பாவின் வீட்டின் மீது காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். எனவே அரசியல் சாசன சட்டத்தின்படி முதல்-மந்திரி குமாரசாமி மீது தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டு உள்ளது.  #Kumaraswamy #BJP #Yeddyurappa
    20 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தியதை தொடர்ந்து முதல்-மந்திரி குமாரசாமி, சித்தராமையா அவசர ஆலோசனை நடத்தினர். இருவரும் கூட்டணி ஆட்சியை காப்பாற்ற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து விவாதித்தனர். #Karnataka
    பெங்களூரு

    கர்நாடகாவில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்-மந்திரியாக குமாரசாமி கடந்த மே மாதம் பொறுப்பேற்றார். இந்த ஆட்சி அமைந்து சுமார் 4 மாதங்கள் ஆகின்றன. இந்த நிலையில் கர்நாடக அரசியலில் புயல் வீசத்தொடங்கியுள்ளது.

    பெலகாவி மாவட்ட காங்கிரஸ் விவகாரங்களில் மந்திரி டி.கே.சிவக்குமார் தலையிடுவதாக கூறி ஜார்கிகோளி சகோதரர்கள் கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். பெலகாவி மாவட்ட காங்கிரஸ் பிரச்சினையில் மந்திரி டி.கே.சிவக்குமார் தலையிடக்கூடாது, லட்சுமி ஹெப்பால்கருக்கு மந்திரி பதவி வழங்கக்கூடாது என்று ஜார்கிகோளி சகோதரர்கள் நிபந்தனை விதித்தனர்.

    இதனால் கூட்டணி ஆட்சிக்கு சிக்கல் எழுந்தது. அதைத் தொடர்ந்து கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் டெல்லி சென்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, கட்சியில் எழுந்துள்ள கருத்துவேறுபாடுகளை சரிசெய்யும்படி அவர்களுக்கு ராகுல் காந்தி உத்தரவிட்டார்.

    ஜார்கிகோளி சகோதரர்களை முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா சமாதானப்படுத்தினார். இந்த பிரச்சினை முடிந்துவிட்டதாக ஜார்கிகோளி சகோதரர்கள் அறிவித்தனர். ஆயினும் பா.ஜனதாவின் ‘ஆபரேஷன் தாமரை’ மூலம் காங்கிரசை சேர்ந்த சுமார் 20 எம்.எல்.ஏ.க்களை இழுக்க பேசி இருப்பதாகவும், விரைவில் அந்த எம்.எல்.ஏ.க்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும், அதன் பிறகு அவர்கள் மும்பை செல்ல முடிவு செய்திருப்பதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதனால் கர்நாடகத்தில் நடைபெற்று வரும் கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நேற்று முதல்-மந்திரி குமாரசாமியும், கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-மந்திரியுமான சித்தராமையா ஆகியோர் அவசர ஆலோசனை நடத்தினர்.


    இந்த ஆலோசனை சித்தராமையா தங்கியுள்ள காவேரி இல்லத்தில் நடந்தது. அப்போது துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், செயல் தலைவர் ஈஸ்வர் கன்ட்ரே, மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    இந்த கூட்டத்தில் பா.ஜனதாவின் ஆபரேஷன் தாமரை திட்டத்தை எப்படி முறியடிப்பது, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு தாவாமல் பாதுகாப்பது, கூட்டணி ஆட்சியை காப்பாற்ற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

    மேலும் பா.ஜனதா குதிரை பேரத்தில் ஈடுபட்டு எம்.எல்.ஏ.க்களை இழுத்தால், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை இழுக்கலாமா? என்பது குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

    இதற்கிடையே காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் நோக்கத்தில் பா.ஜனதாவினர் குதிரை பேரத்தில் ஈடுபட முயற்சி செய்வதை தடுக்க கோரி சட்டசபை சபாநாயகரிடம் மனு கொடுக்க ஜனதா தளம் (எஸ்) கட்சி முடிவு செய்துள்ளது.

    மேலும் கடைசி நாள் வரை மேல்-சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவிப்பது வேண்டாம் என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்தால், அதன் மூலம் கட்சியில் எதிர்ப்பு குரல் எழ வாய்ப்பு இருப்பதால், அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. #Karnataka #KarnatakaPolitics #Kumaraswamy #Siddaramaiah
    தேவகவுடா முறைகேடு குறித்து அனைத்து ஆவணங்களையும் ஆதாரங்களுடன் வெளியிடுவேன். குமாரசாமியின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன் என்று கர்நாடக முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா கூறி உள்ளார். #Yeddyurappa #BJP
    பெங்களூரு:

    கர்நாடக மாநில பா.ஜனதா தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான எடியூரப்பா பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான் எல்லை மீறி பேசுவதாக குமாரசாமி சொல்கிறார். எனது வரையறை என்ன என்பது எனக்கு தெரியும். எப்படி பேச வேண்டும் என்றும் தெரியும். குமாரசாமி தான் அத்துமீறி பேசுகிறார்.

    சிவராம் காரந்த் லே-அவுட் முறைகேடு குறித்து விசாரணை நடத்தி உண்மையை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதை விடுத்து மிரட்டும் போக்கில் ஈடுபட்டால் அது எடுபடாது.



    முன்னாள் பிரதமர் தேவகவுடா குடும்பத்தினர் மைசூருவில் எத்தனை வீட்டுமனைகளை வாங்கி இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். தேவகவுடா முறைகேடு குறித்து அனைத்து ஆவணங்களையும் ஆதாரங்களுடன் வெளியிடுவேன். ஊழல்வாதியான குமாரசாமிக்கு என்னை விமர்சிக்க உரிமை கிடையாது. இந்த கூட்டணி ஆட்சி தானாகவே கவிழ்ந்து விடும்.

    மந்திரி டி.கே.சிவக்குமார் பற்றி நான் எதுவும் பேசவில்லை. ஆனாலும் அவர் என்னை விமர்சித்து இருக்கிறார். தனது மனதில் உள்ள வேதனையில் ஏதேதோ பேசி இருக்கிறார்.

    அமலாக்கத்துறையினர் டி.கே.சிவக்குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில், தான் எந்த தவறும் செய்யவில்லை என்று நிரூபிக்கும் பலம் அவருக்கு உள்ளது. இதை அவர் நிரூபிக்க வேண்டும். இதை விட்டுவிட்டு என்னை பற்றி தவறாக பேசி இருக்கிறார். இது சரியல்ல.

    உங்களுக்கு (குமாரசாமி) கர்நாடகத்தில் ஆட்சி அதிகாரம் இருக்கலாம். ஆனால் மத்தியில் எங்கள் கட்சியின் ஆட்சி நடக்கிறது. நீங்கள் என்ன செய்தாலும், அதற்கு பதில் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். குமாரசாமியின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன். பணியவும் மாட்டேன்.

    இவ்வாறு எடியூரப்பா கூறினார். #Yeddyurappa  #BJP
    ×