search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சாரம்"

    11 நாட்களாக மின்சாரம் இல்லாமல் இருந்த வேதாரண்யம் நகரில், 75 சதவீத வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. #GajaCyclone
    சென்னை:

    நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்கள் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

    இந்த மாவட்டங்களில் இருந்த 1 லட்சத்து 13 ஆயிரம் மின் கம்பங்கள், 201 துணை மின் நிலையங்கள், 841 மின்மாற்றிகள் முற்றிலும் சேதம் அடைந்து விட்டன. இவற்றை சீரமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    மின்துறை அமைச்சர் தங்கமணி டெல்டா மாவட்டங்களில் முகாமிட்டு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார். தற்போது எந்த அளவுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றி அமைச்சர் தங்கமணி கூறியதாவது:-

    மின் வினியோகத்தை பொறுத்தவரை நகராட்சி பகுதிகளில் ஓரளவு முழுமையாக மின் இணைப்பு கொடுத்து விட்டோம்.

    11 நாட்களாக மின்சாரம் இல்லாமல் இருந்த வேதாரண்யம் நகரில், 75 சதவீத வீடுகளுக்கு நேற்று மின் இணைப்பு வழங்கப்பட்டு விட்டது. மீதமுள்ள வீடுகளுக்கும் மின் இணைப்பு 2 நாளில் கிடைக்க பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதேபோல் முத்துப்பேட்டை நகருக்கு மின் இணைப்பு கொடுக்க வேலைகள் நடந்து வருகிறது. நாளை அல்லது நாளை மறுநாளில் இருந்து அங்கு மின்சாரம் கிடைத்து விடும்.

    திருவாரூர் நகராட்சியில் 100 சதவீதமும், மன்னார்குடி நகராட்சியில் 92.66 சதவீதமும், கூத்தாநல்லூர் நகராட்சியில் 92.42 சதவீதமும், திருத்துறைப்பூண்டி நகராட்சியில் 75.02 சதவீதமும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

    கிராம பகுதிகளில் 30 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின்சாரம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வது மிகப்பெரிய சவாலாக உள்ளது. மின்வாரிய ஊழியர்கள் இரவு, பகல் பாராமல் பணியாற்றி வருகிறார்கள்.

    நிறைய வீடுகளில் மின் இணைப்பு சேதம் அடைந்திருப்பதால் 30-ந்தேதி வரை பில் கட்ட வேண்டாம் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலக்கெடுவை நீட்டிப்பது பற்றி முதல்-அமைச்சருடன் கலந்து பேசி அறிவிப்பு வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மணப்பாறை, மருங்காபுரி பகுதிகளிலும் மின்சாரம், குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். #GajaCyclone
    பொன்னமராவதி:

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்திலும், திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, மருங்காபுரி பகுதிகளிலும் மின்சாரம், குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் இன்று மணப்பாறை அருகே உள்ள மருங்காபுரி ஒன்றியம் தொட்டியப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட நவலூரணிப்பட்டி பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கஜா புயல் பாதிப்பால் அப்பகுதிக்கு இன்னும் குடிநீர், மின்சாரம் விநியோகம் செய்யப்படவில்லை. அதிகாரிகளும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை தொட்டியப்பட்டியில் மணப்பாறை-கோவில்பட்டி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.



    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் பகுதி பொதுமக்களும் குடிநீர் -மின்சாரம் விநியோகிக்க கோரி இன்று காலை கொட்டும் மழையிலும் காலிகுடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். #GajaCyclone
    கொடைக்கானலில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இன்னும் மின்சார வசதியின்றி தவித்து வருகின்றன. #GajaCyclone #Gaja
    கொடைக்கானல்:

    தமிழகத்தை உலுக்கிய கஜா புயல் திண்டுக்கல் மாவட்டத்தையும் விட்டு வைக்கவில்லை. இதுவரை புயல் என்றால் என்ன என்று தெரியாத கொடைக்கானலில் ஆக்ரோ‌ஷமாக வீசிய கஜா புயல் மரங்கள், மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள், வீடுகள் அகியவற்றை கடுமையாக தாக்கின.

    இதனால் கொடைக்கானல் நகரிலும் மலை கிராமங்களிலும் மரங்கள் முறிந்து கடந்த 16-ந் தேதி முதல் மின் வினியோம் பாதிக்கப்பட்டது. பல கிராமங்களில் முறிந்து விழுந்த மரங்களும் மின் கம்பங்களும் அகற்றப்படாமல் உள்ளது. முதல் கட்ட பணியாக புயலால் சேதமடைந்த கொடைக்கானல், வத்தலக்குண்டு சாலையிலும், பழனி- கொடைக்கானல் சாலையிலும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு நேற்று முதல் போக்குவரத்து தொடங்கியது.

    கொடைக்கானல் மேல்மலை பகுதியான மன்னவனூர், பூண்டி, கிளாவரை, வடகவுஞ்சி, கூம்பூர், கீழ் மலை பகுதிகளான தாண்டிக்குடி, பெரும்பாறை, கே.சி.பட்டி, மங்களம் கொம்பு, மஞ்சள்பரப்பு, தடியன்குடிசை உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இன்னும் மின் வினியோகம் வரவில்லை. இதனால் அவர்கள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இரவு நேரங்களில் தூக்கமின்றி தவித்து வருகின்றனர்.

    புயல் மழை காரணமாக பூண்டியில் ஏரி பள்ளம் உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பள்ளங்கி, கோம்பை பகுதியில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த 50 ஏக்கர் உருளைக்கிழங்கு, கேரட் போன்ற காய்கறிகள் தண்ணீரில் மூழ்கியது.

    மேலும் கும்பூருக்கு வரும் பிரதான கால்வாய் உடைப்பு ஏற்பட்டதால் பாதை துண்டிக்கப்பட்டது. கொடைக்கானலில் இது வரை இல்லாத அளவுக்கு கஜா புயல் பெருத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கொடைக்கானல் பகுதியில் தாசில்தார் தலைமையில் ஒரு சில அதிகாரிகளே ஆய்வு பணி நடத்தி வருகின்றனர். முழுமையான ஆய்வு நடத்த இன்னும் பல நாட்கள் ஆகும் என விவசாயிகள தெரிவித்துள்ளனர்.

    நகர் பகுதியில் விழுந்த மரங்கள் மட்டும் அகற்றப்பட்டுள்ளது. 38 கி.மீ தூரம் உள்ள சாலை சேதடைந்துள்ளது. மேலும் 12 சிறிய பாலங்கள், 10-க்கும் மேற்பட்ட குடிநீர் குழாய்கள், 264 மின விளக்குகள், 2 பெரிய கட்டிடங்கள் சேதமடைந்துள்ன.

    மலை கிராமங்களில் 80-க்கு மேற்பட்ட வீடுகள் இடிந்து உள்ளன. வீடுகளை இழந்த மலை கிராம மக்கள் சமுதாய கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் அரிசி மற்றும் உணவு தானியங்கள் வழங்கியுள்ளனர். அவர்கள் தாங்களாகவே அங்கு உணவு சமைத்து சாப்பிட்டு வருகின்றனர். இது தவிர கால்நடைகளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு கிடைக்குமா? என்ற ஏக்கத்தில் விவசாயிகள் உள்ளனர். புயல் ஓய்ந்து சீரமைப்பு பணிகள் நடந்து வரும் நிலையில் மீண்டும் மழை மிரட்டி வருவது பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. #GajaCyclone #Gaja
    திருப்பத்தூர் அருகே கஜா புயலால் மின்சாரம் தடைபட்டது தொடர்பாக கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். #Gajastorm

    திருப்பத்தூர்;

    கஜா புயல் காரணமாக தமிழகத்தில் நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின.

    புயல் எதிரொலியால் சிவகங்கை மாவட்டத்தில் அதிக மழை பதிவானது. மேலும் அங்கு பலத்த காற்று வீசியதால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து மின்கம்பங்கள் சேதமானது.

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள காரையூர் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    கடந்த வாரம் கஜா புயல் தாக்கத்தின் காரணமாக இந்தப்பகுதியில் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் அந்தப்பகுதி முழுவதும் மின்சாரம் தடை பட்டது. இதனால் கிராம மக்கள் கடும் அவதியடைந்தனர்.

    இது குறித்து திருப்பத்தூர் மின் வாரியத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து மின் ஊழியர்கள் காரையூர் பகுதியில் மின் கம்பங்களை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது காரையூர் கிராமத்தில் ஒரு பகுதிக்கு மட்டும் மீண்டும் மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது. மற்றொரு பகுதி இருளில் மூழ்கியது.

    இது தொடர்பாக பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதை கண்டித்து நேற்றிரவு காரையூர் பகுதி கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர்- சிங்கம்புணரி ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த தாசில்தார், திருப்பத்தூர் போலீஸ் டி.எஸ்.பி. மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது மின்சாரம் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    போராட்டம் நடந்து முடிந்தபின் மின் வாரிய ஊழியர்கள் காரையூர் பகுதியில் மின்கம்பங்களை சீரமைத்தனர். இதைத் தொடர்ந்து மின் வினியோகம் செய்யப்பட்டது. #Gajastorm

    காமநாயக்கன்பாளையம் அருகே மின் கம்பத்தில் உள்ள தெருவிளக்கை சரி செய்தபோது மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியர் இறந்தார். நிவாரணம் வழங்கக்கோரி கோவை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
    காமநாயக்கன்பாளையம்:

    காமநாயக்கன்பாளையம் அருகே உள்ள கோவில் பாளை யம் லட்சுமிநகரை சேர்ந்த முத்தான் என்பவரது மகன் வீரக்குமார் (வயது 27). இவர் பொங்கலூரில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று காட் டூர் அருகே வெள்ளநத்தம் ஆதிதிராவிடர் காலனி பகுதி யில் உள்ள மின்கம்பத்தில் ஏறி, மின்விளக்கை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக வீரக் குமார் மீது மின்சாரம் பாய்ந் தது. இதில் மின்கம்பத் தில் இருந்து வீரக்குமார் தவறி கீழே விழுந்தார்.

    இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு கோவையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வீரக்குமார் இறந் தார். இந்த சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்வாரிய ஊழியர் மின்சாரம் பாய்ந்து இறந்து சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற் படுத்தி உள்ளது.

    இதற்கிடையே வீரக் குமாரின் உடலை பார்க்க மின்வாரிய அதிகாரிகள் யாரும் வரவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தமிழ்நாடு ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தினர் அவருடைய இறப்புக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அவருடைய மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண் டும்.

    மேலும் ஒப்பந்த தொழி லாளர்களுக்கு அரசு அறிவித்து உள்ள கருணைத்தொகை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கோவை அரசு ஆஸ்பத்திரியில் உடலை வாங்க மறுத்து தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தி னர். இதனை தொடர்ந்து அவர்கள் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    பல்வேறு நிகழ்வுகளில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 13 நபர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #EdappadiPalanisamy
    சென்னை:

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-

    புதுக்கோட்டை வாணக்கன்காடு கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ், பெரம்பலூர் சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி, கரூர் மஜரா ஓடையூரைச் சேர்ந்த சுப்பிரமணி, மதுரை கன்னியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பின்னியம்மாள், புதுக்கோட்டை ஆயிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தங்கம்மாள்.

    வேலூர் இந்திரா நகரைச் சேர்ந்த முருகன், சிவகங்கை தச்சவயல் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார், கத்தாழம்பட்டு மதுரா நஞ்சுகொண்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்த இளவரசன், சேலம் கன்னங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன், மதுரை முனிச்சாலை கிராமத்தைச் சேர்ந்த சரவண விக்னேஷ், விழுப்புரம் முண்டியம்பாக்கம் மனோ மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

    கொருக்குப்பேட்டை, அம்பேத்கார் நகரைச் சேர்ந்த செரிப் மகன் சிறுவன் ரியாசு, கடலூர் பி.என். பாளையத்தைச் சேர்ந்த துலுக்காணம் மகன் பக்கிரி ஆகியோர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். 13 பேரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பல்வேறு நிகழ்வுகளில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 13 நபர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு முதலமைச் சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #EdappadiPalanisamy #ADMK
    மார்த்தாண்டத்தில் இரவில் படித்து கொண்டிருந்தபோது லேப்-டாப்பில் மின்சாரம் பாய்ந்து பிளஸ்-1 மாணவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    மார்த்தாண்டம்:

    மார்த்தாண்டத்தை அடுத்த சிராயன்குழி, காட்டுவிளையை சேர்ந்தவர் பெனட். ராணுவ வீரர்.

    பெனட்டிற்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகன் மதுரையில் படித்து வருகிறார். மகள் பெஜின் (வயது 16). உண்ணாமலை கடை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்- 1 படித்து வந்தார்.

    தினமும் வீட்டில் இரவு நீண்ட நேரம் கண்விழித்து படிப்பார். இதற்காக லேப்- டாப்பும் பயன்படுத்துவார்.

    வழக்கம் போல பெஜின் நேற்றிரவும் வீட்டில் படித்து கொண்டிருந்தார். அவர் அருகில் லேப்-டாப்பும் இருந்தது. அதனை சார்ஜரில் போட்டபடி பெஜின் படித்து கொண்டிருந்ததாக தெரிகிறது.

    இன்று காலை பெஜினின் அறை நீண்ட நேரம் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அவரது அறைக்கு சென்று பார்த்தனர். அங்கு பெஜின், லேப்-டாப்பில் தலைசாய்த்தபடி இறந்து கிடந்தார்.

    அதிர்ச்சி அடைந்த பெற்றோர் லேப்-டாப்பை அகற்றிவிட்டு பெஜினை மீட்க முயன்றனர். அப்போது லேப்-டாப்பில் மின்சாரம் பாய்ந்திருப்பது தெரியவந்தது.

    பெஜின் இரவில் படித்து முடித்த பின்பு லேப்-டாப்பை சார்ஜரில் இருந்து அகற்றவில்லை என்றும், இதில் மின்சாரம் பாய்ந்து அவர் இறந்திருக்கலாம் எனவும் தெரிகிறது. இதுபற்றி பெஜினின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவம் பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெஜினின் தந்தை தற்போது காஷ்மீர் மாநிலத்தில் வேலை பார்த்து வருகிறார். மகள் இறந்த தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    நன்றாக படிக்கும் மாணவி, படித்து கொண்டிருந்த போதே இறந்து போன சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    கொடைக்கானலில் 10 மணி நேர மின் வெட்டால் மக்கள் கடும் அவதிப்பட்டுள்ளனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல் சிறந்த சுற்றுலா தலமாகும். எனவேதான் வெளிநாடுகள் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொடைக்கானலுக்கு வந்து செல்கிறார்கள்.

    இதன் காரணமாக சுற்றுலா இடங்களில் அதிக அளவில் எப்போதும் கூட்டம் காணப்படும். சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கொடைக்கானல் நகரில் ஏராளமான ஓட்டல்கள், லாட்ஜ், தங்கும் விடுதிகள் உள்ளது.

    விடுமுறை காலங்களில் நகர் பகுதியில் கூட்டம் அலை மோதும். கொடைக்கானல் நகரில் சுற்றுலா பயணிகள் அதிகம் உலா வரும் இடமாக பென்ஹில் ரோடு, சிவனடி சாலை பகுதி ஆகும். இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத மின் வெட்டு உள்ளது.

    நேற்று இரவு 8.20 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதன் பின்னர் இன்று காலை 6.20 மணிக்குதான் மின் இணைப்பு வந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் விடிய விடிய தூக்கத்தை தொலைத்தனர்.

    இந்த பகுதியில் காட்டு மாடுகளும் அதிக நடமாட்டம் இருந்தது. இரவு நேரம் என்பதால் சுற்றுலா பயணிகள் வெளியே வராமல் காட்டு மாடுகளுக்கு பயந்து அறைகளில் முடங்கி கிடந்தனர்.

    சுமார் 10 மணி நேர மின் வெட்டால் கொடைக்கானல் நகரமே ஸ்தம்பித்து போனது. இதேபோல சுழற்சி முறையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் அறிவிக்கப்படாத மின் வெட்டு நீடிக்கிறது.

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா இருந்த போது சுற்றுலா நகரில் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்க வேண்டும் என்று அறிவித்திருந்தார். ஆனால் இந்த உத்தரவு காற்றோடு போய் விட்டது. மின் ஊழியர்கள் இதனை கண்டுகொள்வதே கிடையாது. கிராம பகுதியில் மின் கம்பிகள் கைக்கு எட்டும் தூரத்தில் காணப்படுகிறது. இதனை மின் வாரியத்துறையினர் சீரமைக்காமல் அலட்சியத்தில் உள்ளனர். மாதம் ஒரு முறை மின் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படுகிறது. அந்த சமயத்திலாவது இது போன்ற வேலைகளை செய்யலாம்.

    எனவே மாவட்ட கலெக்டர் இந்த வி‌ஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி வேலை செய்யாமல் சண்டித்தனம் செய்யும் மின் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொடைக்கானல் நகர மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    கொருக்குப்பேட்டையில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலியான சமபவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயபுரம்:

    கொருக்குப்பேட்டை அம்பேத்கார் நகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் செரீப். கூலி தொழிலாளி. இவருடைய மகன் ரியாஸ் (10). அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தான்.

    நேற்று இரவு செரீப் வீட்டில் மின்சாரம் இல்லை. எனவே அருகில் உள்ள வீட்டில் இருந்து வயர் மூலம் மின்சாரம் எடுத்து இருந்தனர்.

    இன்று காலை சிறுவன் ரியாஸ் வீட்டில் இருந்த தனது சைக்கிளை எடுத்தாள். அப்போது பக்கத்து வீட்டில் இருந்து வந்த மின்சார வயரில் எதிர்பாராத விதமாக கைப்பட்டதால் மின்சாரம் தாக்கியது.

    சிறுவன் ரியாஸ் அலறியபடியே கீழே விழுந்தான். சத்தம் கேட்டு அவனை காப்பாற்ற முயன்ற ரியாசின் தாயாருக்கும் காயம் ஏற்பட்டது.

    மின்சாரம் தாக்கிய சிறுவன் ரியாசை, ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    ரியாஸ் உடலை கண்டு உறவினர்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. ஆர்.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    மின்கம்பத்தில் ஏறி பழுதை சரிசெய்த போது எதிர்பாராதவிதமாக மின்கம்பத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததில், படுகாயமடைந்த ஊழியர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
    கன்னிவாடி:

    கன்னிவாடி அருகேயுள்ள அம்மாபட்டியை சேர்ந்தவர் முத்தையா (வயது 45). இவர் அம்மாபட்டியில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் ரெட்டியபட்டியை சேர்ந்த சின்னப்பொண்ணு என்பவரின் விவசாய தோட்டத்தில் உள்ள மின்கம்பத்தில் பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து முத்தையா மின்கம்பத்தில் ஏறி பழுதை சரிசெய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்கம்பத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து தகவலறிந்த கன்னிவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவருடைய உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த முத்தையாவுக்கு ரேவதி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். 
    பெருமாநல்லூர் அருகே வீட்டில் உள்ள மின் வயரை தெரியாமல் மிதித்ததில் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    பெருமாநல்லூர்:

    பெருமாநல்லூர் அருகே காளிபாளையம் அம்பாள் நகரில் வசித்து வந்தவர் வடிவேல்(வயது 35). பனியன் நிறுவன தொழிலாளி. இவருடைய மனைவி சுகன்யா(30). இவர்களுக்கு நவநீதன்(5) என்ற மகன் உள்ளான். இவர் குடியிருக்கும் வீட்டில் கீழ் மட்ட தொட்டியில் உள்ள தண்ணீரை வீட்டின் மேல் உள்ள தொட்டிக்கு மோட்டார் மூலம் தினமும் ஏற்றுவது வழக்கம். அதன்படி, நேற்று காலை வீட்டின் மேல் உள்ள தொட்டிக்கு தண்ணீர் ஏற்றுவதற்காக வடிவேல் மின்மோட்டாரை இயக்கினார். அப்போது, கீழே கிடந்த மின் வயரை அவர் தெரியாமல் மிதித்துவிட்டார். இதனால் அவரை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்த பெருமாநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், மின்மோட்டார் முறையாக பொருத்தப்படாமல் இருந்ததும், மோட்டாருக்கு மின் இணைப்பு கொடுக்க பயன்படுத்தப்பட்ட மின் வயர் டேப் சுற்றாமல் இருந்ததும், மின்மோட்டாரை இயக்கிவிட்டு, திரும்பிய போது மின்வயரை வடிவேல் மிதித்ததால், அவர் மின்சாரம் தாக்கி இறந்ததும் தெரியவந்தது. இதைதொடர்ந்து வடிவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பிவைத்தனர்.

    மேலும் இதுகுறித்து பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்சாரம் தாக்கி பனியன் நிறுவன தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தால் அந்த பகுதியே சோகத்தில் மூழ்கியது. 
    வீட்டின் மாடியில் தேங்கி இருந்த மழைநீரை சுத்தம் செய்யும் போது மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் குறித்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
    தரங்கம்பாடி:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள ஆறுபாதி மெயின்ரோடு மேட்டிருப்பு பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் அமிர்த கணேசன் (வயது 18). இவர் பி.எஸ்சி முதலாமாண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் அப்பகுதியில் நேற்று முன்தினம் இரவில் பலத்த மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை அமிர்த கணேசன் அப்பகுதியில் உள்ள தனது தாத்தா சண்முகம் வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கு வீட்டின் மாடியில் மழை நீர் தேங்கி அடைத்திருப்பதை பார்த்தார்.

    இதனால் தண்ணீரை வெளியேற்ற முயற்சி செய்தார். அப்போது அவர் செல்போன் பேசிய படியே தேங்கி கிடந்த தண்ணீரில் இறங்கினார்.

    திடீரென அங்கு தாழ்வான சென்ற மின்கம்பி , அமிர்த கணேசன் உடல் மீது பட்டதில் மின்சாரம் தாக்கியது. இதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    நீண்டநேரமாக அமிர்த கணேசனை காணாததால் அவரது உறவினர்கள் தேடினர். அப்போது வீட்டின் மாடியில் அமிர்த கணேசன் மின்சாரம் தாக்கி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனால் ஆவேசம் அடைந்த உறவினர்கள் மயிலாடுதுறை- தரங்கம் பாடி சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் தரங்கம்பாடி தாசில்தார் ஸ்ரீதர், வருவாய் ஆய்வாளர் பழனி, கிராம நிர்வாக அலுவலர் சிவராமன் மற்றும் செம்பனார்கோவில் போலீசார் விரைந்து வந்தனர்.

    மறியல் செய்தவர்களுடன் அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் , குடியிருப்பு பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பியை சீரமைக்க வேண்டும். பலியான அமிர்த கணேசன் குடும்பத்துக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து மயிலாடுதுறை சப்- கலெக்டர் தேன்மொழி விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது அவர் மறியல் செய்த உறவினர்களிடம் , இதுபற்றி அரசு கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதியளித்தார்.

    இதன்பின்னர் உறவினர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #tamilnews
    ×