search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 100341"

    மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில் 10 நாள் தொடர் பொதுக்கூட்டம் நடைபெறுவதாக திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார். #Congress #Thirunavukkarasar
    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பிரதமர் மோடியும், ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனும் ரபேல் போர் விமானங்கள் வாங்கிய விவகாரத்தில் பாராளுமன்றத்திற்கும், உச்சநீதி மன்றத்திற்கும் தவறான தகவல்களை அளித்துள்ளனர்.

    அரசு கருவூலத்திற்கு இழப்பு ஏற்படுத்தியுள்ள இந்த மோசமான மெகா ஊழலின் உண்மை விவரங்களை வெளிக்கொண்டுவர பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்படவேண்டும் என ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

    இதேபோல் அ.தி.மு.க. அரசின் மக்கள் விரோத செயல்களையும் மக்கள் மன்றத்தில் எடுத்துரைக்கின்ற பொறுப்பும் கடமையும் காங்கிரஸ் கட்சிக்கு உண்டு.

    மத்திய-மாநில அரசுகளின் செயல்களை மக்களுக்கு எடுத்துரைக்கின்ற விதமாக தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக பிரசார பொதுக் கூட்டங்களை நடத்திட வேண்டுமென்று மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

    அதன்படி மாவட்டத் தலைவர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட எல்லா சட்டமன்ற தொகுதிகளிலும் வருகிற 2-ந்தேதியில் இருந்து 12-ந் தேதி முடிய தொடர் பொதுக்கூட்டங்களை நடத்திட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Congress #Thirunavukkarasar
    தேர்தல் பிரசாரம் தொடங்க வரும் பிரதமர் மோடி தந்திரம் பலிக்காது என்று திருநாவுக்கரசர் குற்றம் சாட்டியுள்ளார். #thirunavukkarasar #pmmodi

    சென்னை:

    சென்னை சத்தியமூர்த்தி பவனில் முன்னாள் அமைச்சர் கக்கன் நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு கக்கன் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் பா.ஜனதாவுக்கு எந்த செல்வாக்கும் இல்லை. ஒரு இடம் கூட கிடைக்காத தமிழகத்திலிருந்து மோடி பிரசாரத்தை தொடங்க இருக்கிறார். கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்க்க வரவில்லை. பாதிப்புக்கு ஏற்ப நிவாரண உதவி வழங்க வில்லை. ஆனால் தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதற்கு வருகிறார்.

    இது தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்ற மோடி செய்யும் தந்திரம் . ஆனால் அவரது தந்திரம் பலிக்க போவதில்லை. நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அதற்கு ஒரு உதாரணம்.

    பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி தான் பிரதமர் என்று தி.மு.க. முன் மொழிந்ததை எந்த கட்சியும் எதிர்க்கவில்லை.

    ஆனால் தக்க தருணத்தில் எல்லா கட்சியினரும் ஏற்றுக் கொள்வார்கள். ஜி.எஸ்.டி வரி 100 பொருட்களுக்கு குறைக்கப்படும் என்று அருண்ஜெட்லி கூறினார். ஆனால் 23 பொருட்களுக்கு மட்டுமே குறைத்திருப்பதாக கூறுகிறார்கள். இதுவும் தேர்தலுக்கான ஏமாற்று வேலைதான்.

    கம்ப்யூட்டர்களை கண்காணிக்கப் போவதாக மத்திய அரசு கூறியிருப்பது தனி மனித உரிமையை பறிக்கும் செயலாகும். தமிழகத்தில் கொள்ளைபோன சிலைகளை மீட்பதற்காக கோர்ட்டு மூலம் நியமிக்கப்பட்டுள்ள பொன் மாணிக்கவேல் மீது சட்டத்துறை அமைச்சர் சட்டத்துக்கு புறம்பாக புகார் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது.

    அந்த அதிகாரி வேண்டாம், அவர் சரியில்லை என்று கருதினால் அதுபற்றி அவர் கோர்ட்டில் தான் முறையிட்டு இருக்க வேண்டும். அமைச்சர் இவ்வாறு கூறியதன் மூலம், யாரோ அரசியல்வாதிகளையோ, அதிகாரிகளையோ காப்பாற்ற முயற்சிக்கிறார்கள் என்றே தெரிகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. விசுவநாதன், கு.செல்வப் பெருந்தகை. மாவட்ட தலைவர்கள் வீரபாண்டியன், சிவராஜ சேகர் மற்றும் பி.வி.தமிழ் செல்வன், இமயாகக்கன், கராத்தே ரவி ஆகியோர் கலந்து கொண்டனர். #thirunavukkarasar #pmmodi

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அடுத்த தமிழக முதல்வராக்க காங்கிரஸ் ஓத்துழைக்கும் என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #Congress #Thirunavukkarasar #MKStalin
    ஆலந்தூர்:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தூத்துக்குடி செல்வதற்காக இன்று சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கலை, இலக்கியம், அரசியல் ஆகியவற்றில் புகழ்பெற்று கொடிகட்டி பறந்தவர் கலைஞர் கருணாநிதி. அவரது சிலையை திறக்க அன்னை சோனியா காந்தி, அவருடன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் வந்து பெருமை சேர்த்தனர். அவர்களுக்கு காங்கிரஸ் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி.

    சிலை திறப்பு விழாவின் போது, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் முன்மொழிந்து அறிவித்துள்ளார். இதை முழுமனதுடன் வரவேற்கிறோம்.

    வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும். மோடி மறைமுகமாக இயக்கும் எடப்பாடி ஆட்சி முடிவுக்கு வரும். அடுத்து தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் வருவார்.


    இதற்கு காங்கிரஸ் கட்சி முழு ஒத்துழைப்பு கொடுக்கும். எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்பட்டு வெற்றியை குவிக்கும்.

    ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க விடாமல் தடுப்பதற்கு தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்து சிறந்த வழக்கறிஞர்கள் மூலம் வாதாடி, இந்த ஆலையை மூடுவதற்கு நிரந்தர தடை பெற வேண்டும்.

    இந்த ஆலையை மூடுவதற்காக நடந்த மக்கள் போராட்டத்தில் 13 பேர் உயிர்தியாகம் செய்துள்ளனர். அதை அவமதிக்கும் வகையில் மீண்டும் ஆலை திறக்கப்படுவதை முழு மூச்சுடன் அரசு தடுக்க வேண்டும்.

    காங்கிரஸ் கட்சி நாட்டுக்கு துரோகம் செய்துவிட்டதாக சிலர் கூறுகிறார்கள். இன்று தமிழகம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி பெற்று இருப்பதற்கு காங்கிரசும், அன்றைய மத்திய காங்கிரஸ் அரசிடம் இருந்து பல்வேறு திட்டங்களை பெற்று செயல்படுத்திய தி.மு.க.வும் காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

    கடந்த நான்கரை வருடங்களாக மத்தியில் ஆட்சி செய்யும் மோடியின் பா.ஜனதா அரசு தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை. தமிழக மக்களை வஞ்சித்து வருகிறது.

    இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார். #Congress #Thirunavukkarasar #MKStalin
    5 மாநில தேர்தல் முடிவுகள் மூலம் மோடி அலை ஓய தொடங்கிவிட்டது என்றும் ராகுல் அலை வீச தொடங்கி இருப்பதாகவும் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். #Congress #Thirunavukkarasar #5StateElection
    சென்னை:

    5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியதாவது:-

    தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களில் ஒரு மாநிலத்தில் கூட பா.ஜனதா வெற்றி பெறாததும், காங்கிரஸ் அடைந்துள்ள எழுச்சியும் அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக அமைந்துள்ளது.

    பெரும்பாலான எதிர் கட்சிகள் ஒன்றுகூடி மோடியை வீழ்த்த திட்டமிட்டுள்ள நிலையில் இந்த வெற்றி காங்கிரசுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்பதை நிரூபித்துள்ளது.

    மோடிக்கு மாற்று ராகுல் தான். பா.ஜனதாவுக்கு மாற்று காங்கிரஸ் தான் என்பதும் உறுதியாகி இருக்கிறது. மோடி அரசும், மாநில பா.ஜனதா அரசுகளும் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியதன் விளைவாக ஏற்பட்ட கோபம், ஏமாற்றம், வருத்தம் தான் பா.ஜனதாவை வீழ்த்தி இருக்கிறது.

    வட மாநிலங்களில் மத்திய பிரதேசம்தான் இந்துத்துவாவுக்கு வலிமையான இடம். ஆர்.எஸ்.எஸ்.சின் கருவறை அந்த மாநிலம் தான். அங்கேயே கருச்சிதைவு செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி சாதாரணமானதல்ல. மோடிக்கு மக்கள் சரியான அடி கொடுத்து இருக்கிறார்கள். மோடி அலை ஓய தொடங்கிவிட்டது. ராகுல் அலை வீச தொடங்கி இருக்கிறது.


    ராகுல்காந்தியின் கடினமான உழைப்புக்கு மக்கள் அங்கீகாரம் அளித்து இருக்கிறார்கள். இந்த வெற்றி பாராளுமன்ற தேர்தலிலும் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காங்கிரஸ் பெற்ற வெற்றியை கொண்டாடும் வகையில் சத்தியமூர்த்தி பவனில் திருநாவுக்கரசர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் இனிப்பு வழங்கி கொண்டாடினார். முன்னாள் எம்.பி. விசுவநாதன், சிரஞ்சீவி, இதயத்துல்லா, மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் உள்பட பலர் கலந்து கொண்டனர். #Congress #Thirunavukkarasar #5StateElection
    திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்காக ஏ.கே. அந்தோணி தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவினர் முடிவு செய்வார்கள் என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். #thirunavukkarasar

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சிலையை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி திறந்து வைக்க வருகிற 16-ந்தேதி சென்னை வருகிறார். நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அன்று இரவு அவர் டெல்லி செல்கிறார்.

    இந்த நிகழ்ச்சி தமிழகத்துக்கும் ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும். மோடி அரசை அகற்றுவதற்கும் தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் ஒன்றிணைந்து உள்ளன. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ராகுல்பிரதமராக வருவார்.

    மு.க.ஸ்டாலின் தொகுதி பங்கீடு குறித்து எங்களிடம் எதுவும் பேசவில்லை. தொகுதி பங்கீடு குறித்து உரிய நேரத்தில் பேசப்படும். தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்காக முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே. அந்தோணி தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவினர்கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்வார்கள். ரஜினி அரசியல் கட்சி பணியைத் தொடங்கி விட்டதாக அறிவித்துள்ளார். கமலும் அறிவித்துள்ளார். எல்லோரும் வரட்டும்.


    மு.க.ஸ்டாலின் சோனியாவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசவில்லை. மோடி தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இதுவரை நடைபெற்ற இடைத்தேர்தலில் 16 தொகுதிகளில் 3 தொகுதிகளில் மட்டும் தான் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. மீதி தொகுதிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த தோல்வி நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும். மோடியை வீழ்த்த தகுதியான தலைவர் ராகுல் காந்தி தான் என்பது தான் பரவலான கணிப்பு. வருகிற தேர்தல் அதை நிரூபிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் திருநாவுக்கரசர் தலைமையில் மாவட்ட தலைவர்கள் , அணி தலைவர்கள் கூட்டம் நடந்தது.கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் தணிகாசலம், தாமோதரன், மெய்யப்பன், கீழானூர் ராஜேந்திரன், முன்னாள் எம்.பி.விசுவநாதன், இளைஞர் அணி தலைவர் அசன் ஆரூண், மகளிர் அணி தலைவி. ஜான்சிராணி மீனவர் அணி தலைவர் கஜநாதன், சிறுபான்மை பிரிவு அஸ்லம் பாஷா, பவன் குமார், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ். திரவியம், ரூபி மனோகரன், சிதம்பரம், ராஜேஷ்குமார், சிவராஜசேகர், எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #thirunavukkarasar #AKAntony #congress #mkstalin

    மேகதாது அணை பிரச்சினையில் சோனியா, ராகுலை குறை கூறிய தமிழிசைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார். #Thirunavukkarasar #MekedatuDam
    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டினால், காவிரி மூலம் தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வராது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பையும் மீறி கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.

    ஆய்வு செய்வதற்கு மோடி அரசு அனுமதி அளித்தது தவறு. இதை கண்டித்து தமிழக சட்டசபையில் இன்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும் என நம்புகிறேன்.

    இந்த விவகாரத்தில் அனைத்துக்கட்சி குழு பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும். கர்நாடகத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி தான் நடக்கிறது. அங்கு போய் சோனியா சொல்ல வேண்டியதுதானே. ராகுல் சொல்ல வேண்டியது தானே என்று தமிழிசை சொல்வது சிறுபிள்ளைதனமாக உள்ளது.

    கேரளாவில் கம்யூனிஸ்டும், காங்கிரசும்தான் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. முல்லை பெரியாறு பிரச்சினை தீர்க்கப்பட்டதா? கர்நாடகத்தில் பா.ஜனதாவும் ஆட்சியில் இருந்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சிக்கு வரும் கட்சிகள் அந்த மாநிலத்தின் பிரதிநிதிகளாகத்தான் இருப்பார்கள். எனவே, அந்த மாநிலத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவார்கள்.

    இதை தீர்த்து வைக்க வேண்டியது மத்திய அரசுதானே. அதை விட்டுவிட்டு கட்சிகள் மீது குறை சொல்வது விதண்டாவாதம்.

    தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு பிறகு, கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை சேமிக்க முயற்சிகள் ஏதும் எடுக்கவில்லை என்பது உண்மைதான். இப்போது பழைய கதைகளை பேசி பயன் இல்லை. எடப்பாடி அரசு அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்.

    தமிழக அரசு, மேகதாது பிரச்சினை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கை திறமையான வழக்கறிஞர்களை கொண்டு திறம்பட நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக அம்பேத்கர் நினைவு நாளையொட்டி அவரது உருவ படத்துக்கு திருநாவுக்கரசர் தலைமையில் காங்கிரசார் மலர் அஞ்சலி செலத்தினார்கள். ஓ.பி.சி. பிரிவு மாநில தலைவர் டி.ஏ.நவீன் ஏற்பாட்டில் துறைமுகம் பகுதி த.மா.கா. நிர்வாகி திருமலை தலைமையில் பலர் அந்த கட்சியில் இருந்து திருநாவுக்கரசர் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தனர்.

    நிகழ்ச்சியில் எஸ்.சி.துறை தலைவர் செல்வ பெருந்தகை, தணிகாசலம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் சிரஞ்சீவி, சொர்ணா சேதுராமன், சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லாம்பாட்சா, மாவட்ட தலைவர்கள் ரூபி மனோகரன், சிவராஜ சேகர், வீரபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் பிராங்ளின் பிரகாஷ், மயிலை தரணி, துறைமுகம் ரவிராஜ், திருவான்மியூர் மனோகரன், பி.வி.தமிழ்செல்வன், ஓட்டேரி தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதைதொடர்ந்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் திருநாவுக்கரசர் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கே.ஆர்.ராமசாமி, பிரின்ஸ், ராஜேஷ்குமார், மலேசியா பாண்டியன், ஊட்டி கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில், இன்று மாலை நடைபெறும் சட்டசபை கூட்டத்தில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கருத்துக்களை பதிவு செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. #Thirunavukkarasar #MekedatuDam
    புதுக்கோட்டையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் விஜயபாஸ்கர், எதிர்கட்சியுடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசரை சந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Thirunavukkarasar #MinisterVijayabaskar
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் புத்தகங்கள் கஜா புயலால் நனைந்து வீணாகியது. இதனால் அவற்றிற்கு மாற்றாக மாணவர்களுக்கு புதிய புத்தகப்பை, சீருடை, புத்தகங்களை தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டது.

    இதனை புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து புயல் பாதித்த பகுதிகளுக்கு சென்று சுகாதார பணிகளை மேற்கொண்டு வரும் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வழங்கினார். மேலும் புயலால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு பைக்கில் சென்று ஆய்வு செய்தார்.

    பின்னர் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு விருந்தினர் மாளிகைக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி துரை. திவ்யநாதனின்வீட்டின் முன்னர் ஏராளமான கார்கள் அணிவகுத்து நின்றன. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் காரும் அங்கு நின்று கொண்டிருந்தது.

    மேலும் அங்கு புயலால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லும் பணியும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனை பார்த்த அமைச்சர் விஜயபாஸ்கர் அங்கு கூடியிருந்த காங்கிரஸ் கட்சியினரிடம் திருநாவுக்கரசர் வந்துள்ளாரா? என கேட்டு தெரிந்து கொண்டார்.


    திருநாவுக்கரசர் வந்திருப்பதை உறுதி செய்து கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர், காங்கிரஸ் கட்சியினர் எதிர்பாராத வகையில் திவ்யநாதனின் வீட்டிற்குள் சென்றார். இதனை பார்த்த கட்சியினர் நடப்பது என்ன என தெரியாமல் திகைத்தனர்.

    பின்னர் அங்கு கட்சியினருடன் அமர்ந்திருந்த திருநாவுக்கரசரை, அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 5 நிமிடங்கள் வரை தொடர்ந்தது. அதனை தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் அங்கிருந்து புறப்படுவதாக கூறி சென்றார். அப்போது திருநாவுக்கரசர் வாசல் வரை வந்து இன்முகத்தோடு அவரை வழியனுப்பினார்.

    தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான விஜயபாஸ்கரும் கஜா புயல் பாதிப்புகள் குறித்தும், மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்தும் பேசியதாக கூறப்படுகிறது.

    இருப்பினும் ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சரும், கட்சியின் முக்கிய நிர்வாகியுமான அமைச்சர் விஜயபாஸ்கர், எதிர்கட்சியுடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசரை சந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Thirunavukkarasar #MinisterVijayabaskar
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணிகள் மந்தமாக உள்ளது என்று திருநாவுக்கரசர் குற்றம் சாட்டியுள்ளார். #thirunavukkarasar #gajacyclone

    காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் புதுக்கோட்டையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கஜா புயலின் தாக்கத்தால் புதுக்கோட்டை, நாகை, தஞ்சை உள்ளிட்ட 7 மாவட்டங்கள் வரலாற்றில் இல்லாத அளவு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த புயலில் தென்னை, மா, தேக்கு போன்ற மரங்கள் பெரிதும் சேதமடைந்துள்ளது. தென்னையை நம்பியுள்ள விவசாய குடும்பங்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    சேதமடைந்த ஒரு தென்னை மரத்திற்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். குறைந்த பட்சமாக ரூ.5 ஆயிரம் வீதமாவது கணக்கிட்டு நிவாரணம் தர வேண்டும். பாதிக்கப்பட்ட பல இடங்களில் குடிநீர் உணவு சரியாக போய் சேரவில்லை. அதேபோல் கடற்கரையில் உள்ள மீனவ படகுகள் குறைந்தபட்சம் ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடி வரையிலான மதிப்புடையது. எனவே சேதமடைந்த படகுகளுக்கான கடன் தொகையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். விவசாய, கல்வி கடன்களையும் ரத்து செய்ய வேண்டும்.

    மத்திய அரசு தேசிய பேரிடர் நிதியில் இருந்து முதல் கட்டமாக ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணிகள் மந்தமாக உள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களை கைது செய்வது அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வது கண்டிக்கத்தக்கது. புயல் பாதித்த பகுதிகளை பிரதமரோ அல்லது மத்திய அமைச்சரோ பார்வையிட வராதது வருத்தமளிக்கிறது என்றார். #thirunavukkarasar #gajacyclone

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் அரசின் நிவாரணத்தொகை கிடைக்கவில்லை என்று திருநாவுக்கரசர் தெரிவித்தார். #GajaCyclone #Congress #Thirunavukkarasar
    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நிவாரண பொருட்களை வழங்கினார்.

    இதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கஜா புயல் பாதிப்புகேற்ப நிவாரணத்தொகை கூடுதலாக பெற, மாநில அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    கற்பனை செய்து பார்க்க முடியாத வகையில் டெல்டா மாவட்டங்களில் பேரிடர் ஏற்பட்டுள்ளதாக மத்திய குழுவினரே அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

    தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பை பிரதமரோ, மத்திய அமைச்சர்களோ நேரில் வந்து பார்த்திருக்கலாம். ஆனால் எதுவும் நடக்கவில்லை.

    தமிழக முதல்வர் அனைத்து கட்சியினரை கலந்தாலோசித்து மத்திய அரசிடம் கூடுதல் நிவாரணம் பெற ஏற்பாடு செய்ய வேண்டும். ஆனாலும் அதற்கு அவகாசமில்லை.

    புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் அரசின் நிவாரணத்தொகை கிட்டவில்லை.

    எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் நிவாரணத் தொகைகள் மறுநாளே வழங்கப்பட்டன. தற்போதைய ஆட்சியில், புயலடித்து 10 நாட்களாகியும் எதுவும் நடக்கவில்லை.

    அரசு இயந்திரம் குக்கிராமங்களை இன்னமும் எட்டிப் பார்க்காமல் உள்ளது. கடலோர மீனவர்கள் படகுகள் மற்றும் வலைகளை இழந்துள்ளனர். மீனவர் கிராமங்கள் பலவும் பாதிக்கப்பட்டுள்ளன.

    கஜா நிவாரணம் வேண்டி போராட்டம் நடத்தி யாராவது கைது செய்யப்பட்டிருந்தால் அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். அவர்கள் மீதான வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும்.

    காங்கிரஸ் தரப்பில் வரும் 8-ம் தேதி நடைபெறும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கஜா புயலுக்கான நிதி அறிவிப்பு வெளியிடப்படும்.

    காங்கிரஸ் அறக்கட்டளை சார்பில் அறிவிக்கப்படும் நிதி முதல்வரிடமோ அல்லது மக்களுக்கு நேரடியாகவோ வழங்கப்படும்.

    இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார். #GajaCyclone #Congress #Thirunavukkarasar
    கஜா புயலில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு புதிய படகுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். #thirunavukkarasar #gajacyclone #fishermen

    வேதாரண்யம்:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று இரவு நாகை மாவட்டம வேதாரண்யம், செறுதலைக்காடு, கடினவயல், ஆதனூர் ஆகிய இடங்களுக்கு சென்று கஜா புயலில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.

    செறுதலைக்காடு மீனவ கிராமத்தில் புயலில் சேதமான படகுகளை பார்வையிட்டார். வேதாரண்யம் உப்பள தொழிலாளர்களுக்கு ஐ.என்.டி.சி. சார்பில் ரூ.6 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கஜா புயல் பாதிப்புக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதுமானதல்ல. மத்திய, மாநில அரசுகள் பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கும், விவசாயிகளுக்கும் கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும்.

    மீனவர்களின் படகுகள் அதிகமாக சேதமடைந்துவிட்டதால் அவைகளை பழுது பார்த்து பயன்படுத்தமுடியாது. எனவே அவர்களுக்கு புதுப்படகுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய படகுகளை வழங்கும் வரை மீனவர்களுக்கு மீன்பிடி தடை காலத்தில் வழங்கப்படுவதுபோல் உதவித்தொகை வழங்கவேண்டும். புயலில் சேதமான வீடுகளுக்கு அதிக நிவாரணம் வழங்க வேண்டும்.

    புயல் சேத பகுதிகளில் வெளியாட்களை அழைத்து வந்து நிவாரணப்பணிகளை செய்வதை விட அந்தந்தப் பகுதி இளைஞர்களை கொண்டு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு அவர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும். இதன் மூலம் நிவாரண பணிகள் விரைவில் முடியும். காங்கிரஸ் நிதிகமிட்டி கூட்டம் டிசம்பர் 8-ந்தேதி நடக்கிறது. இதில் புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #thirunavukkarasar #gajacyclone #fishermen

    புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் கேட்டு போராடியவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று திருநாவுக்கரசர் கூறினார். #thirunavukkarasar #gajacyclone #gajarelief
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 3 நாள் பார்வையிட உள்ளேன். சேகரிக்கப்பட்ட நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது. 8-ந் தேதி நடைபெற உள்ள காங்கிரஸ் அறக்கட்டளை கூட்டத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த வகையில் நிவாரணம் வழங்குவது என முடிவு செய்து அறிவிக்கப்படும்.

    ஒரு வாரம் கழித்து மத்திய குழு வந்துள்ளது. இந்த குழு ஆய்வு செய்து அறிக்கை தந்தபிறகு தான் நிதி தரவேண்டும். பாதிக்கப்பட்ட இடங்களை பிரதமர் பார்த்து இருக்கலாம். அல்லது உள்துறை மந்திரி, ஏதாவது ஒரு மத்திய மந்திரியாவது வந்து பார்த்து இருக்கலாம். யாரும் வராதது மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை புறக்கணிப்பதையே காட்டுகிறது.

    தேசிய பேரிடர் நிதியில் இருந்து ரூ.5 ஆயிரம் கோடியை தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டும். பல இடங்களில் மின் இணைப்பு சீராகவில்லை, உணவு பொருட்கள் போய்ச்சேரவில்லை. நிவாரண தொகையை உயர்த்தித்தர வேண்டும். தமிழக அரசு ஒதுக்கிய தொகை போதுமானதல்ல. இதனால் மத்திய அரசு நிதியை ஒதுக்க வேண்டும். மத்திய அரசு முன்கூட்டியே முதற்கட்ட நிதியை ஒதுக்க வேண்டும்.

    நிவாரணம் கேட்டு போராடியவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுவிக்க வேண்டும். எந்த காரணத்திற்காகவும் போராடுபவர்கள் அரசு சொத்துகளை சேதப்படுத்தக் கூடாது. போராடுபவர்களை வழக்கு போட்டு சிறையில் அடைப்பது சரியல்ல.

    புயலுக்கு முன்னால் நடவடிக்கை சரியாக இருந்தது. புயலுக்கு பின் நடவடிக்கைகள் சரியில்லை. அமைச்சர்கள் மாவட்டங்களில் தங்கியிருந்து பணியாற்றினாலும் உரிய நிவாரண பொருட்கள் வழங்கப்படவில்லை. பணிகள் முழுவீச்சில் நடக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #thirunavukkarasar #gajacyclone #gajarelief 
    புயல் பாதித்த இடங்களை ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்ப வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #Thirunavukkarasar #Gajastorm

    ஆலந்தூர்:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை இன்றும், நாளையும் பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூற இருக்கிறோம்.

    புயலின் தாக்கத்தால் 50-க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்து இருக்கிறார்கள். தமிழக அரசின் முன் எச்சரிக்கை நடவடிக்கையால் பெரிய உயிர் இழப்பு தவிர்க்கப்பட்டு உள்ளது.

    பாதிக்கப்பட்ட இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்கிறது. மக்கள் குடிநீர் கூட இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


    புயலால் பல குடிசைகள் இடிந்துள்ளன. மீனவர்களின் படகுகளை சரி செய்ய உடனடியாக நிதி உதவி அளிக்க வேண்டும். உயிர் இழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி போதாது. இதனை ரூ.25 லட்சமாக உயர்த்தி அறிவிக்க வேண்டும்.

    தமிழக அரசு குழு அமைத்து மாவட்டம் வாரியாக சென்று உயிர் இழப்பு மற்றும் உடமைகளை இழந்தவர்களின் பட்டியலை தயாரித்து அவர்களுக்கு வேண்டிய நிதி உதவி அளிக்க வேண்டும்.

    இதற்கு மாதக்கணக்கு எடுத்துக் கொள்ளாமல் போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும். புயல் பாதித்த இடங்களில் அடிப்படை தேவைகள் கிடைக்கவில்லை என்பதால்தான் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    உடனடியாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புயல் பாதித்த இடங்களை பார்வையிட வேண்டும். வழக்கம்போல மத்திய அரசு மெத்தனமாகவே இருக்கிறது. தமிழ்நாடு ஒரு தனிநாடா என்று தெரியவில்லை.

    மத்திய அரசு உடனடியாக நிவாரண உதவிக்கு ஒரு கணிசமான தொகையை வழங்க வேண்டும். மேலும் ஒரு குழு அமைத்து புயல் பாதித்த இடங்களை ஆய்வு செய்ய வேண்டும்.

    முதலில் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்- அமைச்சர் சென்று பார்க்கப்படும். பின்னர் மத்திய அமைச்சர்கள் பார்க்கட்டும். அதன் பின்னர் ராகுல்காந்தி வருவதை பற்றி பேசலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Thirunavukkarasar #Gajastorm

    ×