search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 100387"

    ஈரான் மீது இன்று ஏராளமான பொருளாதார தடைகளை திணித்துள்ள அமெரிக்கா அங்கிருந்து பெட்ரோலிய கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய இந்தியாவுக்கு தற்காலிக விதிவிலக்கு அளித்துள்ளது. #USexemptIndia #Iranoilsanctions
    வாஷிங்டன்:

    ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிப்பதுடன், அந்நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார்.

    ஈரானிடம் எண்ணெய் வாங்குவது தொடரும் என இந்தியா சமீபத்தில் கூறியது. இதுகுறித்து அமெரிக்காவிடம் இந்தியா சார்பில் விளக்கமும் அளிக்கப்பட்டது.

    அமெரிக்காவின் இந்த நிபந்தனைக்கு ஐக்கிய நாடுகள் சபை அங்கீகாரம் அளிக்கவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் இறுதி முடிவைத்தவிர வேறு எந்த நாட்டின் நிபந்தனைகளுக்கும் கட்டுப்பட முடியாது என்பது இந்தியா கடைபிடித்துவரும் வெளியுறவுத்துறை கொள்கையாக உள்ளது.

    முன்னர் இருந்த அளவை விட ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்யும் பெட்ரோலிய கச்சா எண்ணெயின் அளவை இந்தியா ஓரளவுக்கு குறைத்து கொண்டுள்ளது. ஆனால், உள்நாட்டு நுகர்வுத் தேவையை கருத்தில் கொண்டு ஈரானிடம் இருந்து இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்திவிட வேண்டும் என்பதை ஏற்க முடியாது என மத்திய அரசு ஏற்கனவே திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.

    இதற்கிடையே, அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் படிப்படியாக விலக்கப்பட்ட அனைத்து தடைகளையும் ஈரான் மீது தற்போது டிரம்ப் ஒருசேர திணித்துள்ளார். இன்று முதல் இந்த தடைகள் அமலுக்கு வந்தது.

    இதனால் அந்நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய பின்னடைவை சந்திக்க நேரிடும் என சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

    இந்நிலையில், ஈரானிடம் இருந்து பெட்ரோலிய கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு தற்காலிக விலக்கு அளிக்க அமெரிக்க அரசு தீர்மானித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்ப்பியோ இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, வாஷிங்டன் நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மைக் பாம்ப்பியோ சீனா, இந்தியா, இத்தாலி, கிரீஸ், ஜப்பான், தென்கொரியா, தைவான் மற்றும் துருக்கி ஆகிய 8 நாடுகளுக்கு இந்த தற்காலிக விலக்கு அளிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். #USexemptIndia #Iranoilsanctions #MikePompeo
    ஈரான் நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு அமெரிக்கா விலக்கு அளித்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #US #Iran #India
    வாஷிங்டன்:

    ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்ததுடன், அந்த நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது எனக் கூறியது. நவம்பர் 4-ம் தேதிக்கு பிறகு எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார்.

    இதற்கிடையே, ஈரானிடம் எண்ணெய் வாங்குவது தொடரும் என இந்தியா சமீபத்தில் கூறியது. இதுகுறித்து அமெரிக்காவிடம் விளக்கியது.



    இந்நிலையில், ஈரான் நாட்டிடம் இருந்து எண்ணெய் வாங்க இந்தியா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு அமெரிக்கா விலக்கு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதுதொடர்பாக, அமெரிக்காவின் வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ கூறுகையில், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கிக் கொள்ள 8 நாடுகளுக்கு தற்காலிகமாக விலக்கு அளிக்கப்படுகிறது. அந்த நாடுகள் குறித்து வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும். இருப்பினும், அமெரிக்க தடைக்கு பின்னர் குறைந்தளவே கச்சா எண்ணெய் வாஙக அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். #US #Iran #India
    ஈரான் மீதான எல்லா பொருளாதார தடைகளும் அடுத்த மாதம் (நவம்பர்) 5-ந் தேதி முதல் தீவிரமாக அமலுக்கு வந்து விடும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். #DonaldTrump
    வாஷிங்டன் :

    அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனியுடன் ஈரான் வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை 2015-ம் ஆண்டு ஏற்படுத்தியது. ஆனால் அந்த ஒப்பந்தத்தை ஈரான் மீறிவிட்டதாக கூறி அமெரிக்கா சில மாதங்களுக்கு முன் அதிலிருந்து விலகியது. அத்துடன் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானபோது, விலக்கி கொள்ளப்பட்ட பொருளாதார தடைகள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார்.

    மேலும், ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா உள்ளிட்ட எல்லா நாடுகளும் குறைத்துக்கொண்டு, நிறுத்தி விட வேண்டும், அப்படி செய்யாவிட்டால் அந்த நாடுகளும் பொருளாதார தடைகளை சந்திக்க வேண்டியது வரும் எனவும் அவர் எச்சரித்தார். இந்த நிலையில் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் டிரம்ப் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “அணு ஆயுத ஒப்பந்தத்தை தொடர்ந்து, விலக்கிக்கொள்ளப்பட்ட ஈரான் மீதான எல்லா பொருளாதார தடைகளும் மீண்டும் அடுத்த மாதம் (நவம்பர்) 5-ந் தேதி முதல் தீவிரமாக அமலுக்கு வந்து விடும்” என அறிவித்தார்.

    உலகின் முன்னணி பயங்கரவாத நாடு, உலகிலேயே மிக அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துகிற ஆயுதங்களை தயாரிக்க விட மாட்டோம் எனவும் டிரம்ப் உறுதிபட தெரிவித்தார். #DonaldTrump 
    ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணைகளை வாங்க முடிவு செய்துள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. #USSanctions
    வாஷிங்டன் :

    அமெரிக்காவின் பொருளாதார தடை என்ற பூச்சாண்டியை புறந்தள்ளி ஈரானிடம் இருந்து கச்சா எண்ணை வாங்குவதை தொடர முடிவு செய்துள்ள இந்திய அரசு, ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணைகளையும் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.

    ரஷியாவிடம் இருந்து பாதுகாப்பு உபகரணங்களை வாங்கும் விவகாரத்தில் அமெரிக்காவின் எச்சரிக்கையை நிராகரித்த இந்தியா அதற்கான ஒப்பந்தத்தை செய்ததும் பொருளாதார தடைகள் பாயலாம் என்று பார்க்கப்பட்டது, ஆனால் தனக்கும் இழப்பு என அமெரிக்கா அமைதி காத்தது.

    இப்போது இவ்விவகாரத்தில் அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதாவது இந்தியாவின் முடிவு இந்திய - அமெரிக்க உறவுக்கு உதவாது என்று எச்சரித்துள்ளது.

    “அமெரிக்காவின் எதிர்ப்பை மீறியும் ஈரானிடம் இருந்து 90 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் மற்றும் ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவின் நகர்வு எந்தவகையிலும் இந்தியா மற்றும் அமெரிக்கா உறவுக்கு உதவப்போவது கிடையாது.

    இந்தியா மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம். இதற்கான முடிவை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பார்த்துக் கொள்வார்” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

    இந்தியா மீது பொருளாதராத் தடை விதிக்கப்படுமா? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், “ அதிபர் டிரம்ப்தான் அதுபற்றி கூற வேண்டும். அதிபருடைய பதிலை நான் கூற முடியாது. நான் வெள்ளை மாளிகை சார்பாக தான் பேச முடியும்” என்று கூறியுள்ளார். #USSanctions
    ஈரானில் பெய்த பலத்த மழை மற்றும் வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் 7 பேர் உயிரிழந்தனர். #Iran #Flood
    டெக்ரான்:

    ஈரான் நாட்டில் கடந்த 5-ந் தேதியில் இருந்து பலத்த மழை பெய்து வருகிறது. மஜந்தரன், கிலான், கோலஸ்டான் மாகாணங்களில் இந்த மழை, வெள்ளத்தால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. சாலைகள், பாலங்கள், வீடுகள் பலத்த சேதம் அடைந்தன.



    வெள்ளத்தில் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் அடித்துச்செல்லப்பட்டன. மின்வினியோகம் தடைபட்டுள்ளது. கியாஸ் வினியோகம் பாதித்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போயுள்ளது. இந்த மழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் 7 பேர் உயிரிழந்தனர்.

    கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்து வருவதாக அங்கு இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

    மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் முழுவீச்சில் ஈடுபடுவதற்கு குழுக்களை ஈரான் மீட்பு மற்றும் நிவாரண அமைப்பு அனுப்பி வைத்துள்ளது. #Iran #Flood 
    ஈரான் பாராளுமன்றத்தில் பயங்கரவாதத்துக்கு நிதி அளிப்பதை தடுக்கும் மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது. #Iran #CounterTerrorFinanceBill
    தெஹ்ரான்:

    சர்வதேச அளவில் பணமோசடி மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்வதை கண்காணித்துவரும் சர்வதேச நிதி நடவடிக்கை செயற்குழு ஐக்கிய நாடுகளின் பயங்கரவாதிகளுக்கு நிதியளிப்பதை தடுக்கும் கூட்டமைப்பில் ஈரானும் இணைய வலியுறுத்தியது.

    இதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 143 வாக்குகள் பயங்கரவாதத்துக்கு நிதி அளிப்பதை தடுப்பதற்காக அளிக்கப்பட்டன. இதையடுத்து, ஈரானுக்கு 3 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது.

    இந்த விவகாரம் குறித்து வாக்கெடுப்பின்போது பேசிய ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி முகமது ஜவாத் ஷரிப், ஐ.நா. பயங்கரவாதிகளுக்கு நிதி அளிப்பதை தடுக்கும் கூட்டமைப்பில் ஈரான் இணைந்துவிட்டால் மட்டும் எல்லாம் சரியாகி விடாது, இருப்பினும்,  தற்போது தாங்கள் இணையாவிட்டால் எங்கள் மீது பழி சொல்ல அமெரிக்காவுக்கு அதிக சாக்கு கிடைத்துவிடும் என குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், ஈரான் பாராளுமன்றத்தில் பயங்கரவாதிகளுக்கு நிதி அளிப்பதை தடுக்கும் சட்ட மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது. #Iran #CounterTerrorFinanceBill
    ஈரான் கச்சா எண்ணெய் விவகாரத்தில் தங்கள் வேண்டுகோளை ஏற்காத நட்பு நாடான சவுதி அரேபியாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார். #DonaldTrump
    துபாய்:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 4 ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவு உயர்ந்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா சமீபத்தில் பொருளாதார தடை விதித்துள்ளது.

    மேலும் ஈரானிடம் இருந்து சர்வதேச நாடுகள் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யக்கூடாது என்றும், அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். மீறினால் அந்த நாடுகள் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

    இதனால்தான் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. பேரலுக்கு 100 டாலருக்கு மேல் விலை ஏறும்பட்சத்தில் சவுதி அரேபியா மற்றும் எண்ணெய் உற்பத்தி செய்யும் ‘ஓபேக்‘ நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இதன்மூலம் எண்ணெய் விலை குறையும் என டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். அதற்கு சவுதி அரேபியா ஒத்துக் கொள்ளவில்லை.

    இது டிரம்புக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மிசிசிப்பியில் ‘சவுத்அவ்ன்’ நகரில் நடந்த விழாவில் டிரம்ப் கலந்து கொண்டு பேசினார்.


    அப்போது தனது நட்பு நாடான ஜப்பான் மற்றும் தென்கொரியா குறித்து பேசினார். மேலும் மற்றொரு நட்பு நாடான சவுதி அரேபியா குறித்து குறிப்பிடும்போது மன்னரை கடுமையாக தாக்கினார்.

    மக்களின் கரகோ‌ஷத்துக்கு இடையே பேசிய அவர், “பணக்கார நாடாக இருந்தாலும் சவுதி அரேபியாவை நாம்தான் பாதுகாக்கிறோம். நான் அந்நாட்டு மன்னர் சல்மான் மீது அதிக அன்பு வைத்திருக்கிறேன்.

    மன்னரே உங்களை நாங்கள் (அமெரிக்கா)தான் பாதுகாக்கிறோம். எங்களது ராணுவத்தின் தயவு இன்றி உங்களால் அங்கு 2 வாரம் கூட தாக்கு பிடிக்க முடியாது” என்று எதைப்பற்றியும் பகிரங்கமாக குறிப்பிடாமல் மிரட்டல் விடுத்தார். #USPresident #DonaldTrump #SaudiArabiaKing
    அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகினாலும் ஐரோப்பிய கூட்டமைப்பு ஒப்பந்தத்தில் தொடர்ந்து நீடிக்கும் என கூட்டமைப்பின் தலைவர் டொனால்டு டஸ்க் தெரிவித்துள்ளார். #EU #DonaldTusk
    நியூயார்க் :

    மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரான் கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளுடன் வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டது.

    ஈரான் அணு ஆயுத திட்டங்களை செயல்படுத்துவதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும், அதற்கு பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் படிப்படியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்பது இந்த ஒப்பந்தத்தின் சாராம்சம். இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் ஆட்சி காலத்தில் செய்யப்பட்டதாகும்.

    ஆனால் இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அதிபர் டிரம்ப் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார்.

    இந்தநிலையில் ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவர் டொனால்டு டஸ்க், நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறுகையில், ‘ஈரான் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம், ஐரோப்பிய கூட்டமைப்புக்கும், பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்புக்கும் நல்லது. எனவே ஈரான் இந்த ஒப்பந்தத்தில் உறுதியாக இருக்கிறவரையில், ஐரோப்பிய கூட்டமைப்பும் நீடிப்பதில் உறுதி கொண்டு உள்ளது.’

    மேலும், ‘ஈரானின் பிராந்திய நடத்தை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை குறித்த கவலைகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்துவதற்கும் இந்த ஒப்பந்தம் வாய்ப்பு ஏற்படுத்தி தருகிறது’ என்றும் குறிப்பிட்டார். #EU #DonaldTusk
    ஈரான் ராணுவ அணிவகுப்பில் 24 பேரை பலி கொண்ட பயங்கரவாத தாக்குதல் வழக்கில் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். #Iran #MilitaryParade #TerroristAttack
    டெக்ரான்:

    ஈராக் அதிபராக இருந்த சதாம் உசேன், 1980-ம் ஆண்டு ஈரானை ஆக்கிரமித்ததால் இரு நாடுகளுக்கு இடையே நடந்த போரின் தொடக்கத்தை நினைவுகூர்ந்து ஈரானில் உள்ள அவாஸ் நகரில் கடந்த 22-ந் தேதி ராணுவ அணிவகுப்பு நடந்தது. அப்போது அணிவகுப்பு மைதானம் அருகே உள்ள ஒரு பூங்காவில் இருந்து அணிவகுப்பில் கலந்துகொண்ட வீரர்களையும், பார்வையிட வந்திருந்த பொதுமக்களையும் குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் 24 பேர் கொல்லப்பட்டனர். 69 பேர் படுகாயம் அடைந்தனர்.



    துப்பாக்கிச்சூடு நடத்திய 4 பேரில் 2 பேர் கொல்லப்பட்டனர். 2 பேர் கைது செய்யப்பட்டனர்.ஈரானை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதை ஈரான் உளவுத்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்தது. இது தொடர்பாக அந்த அமைச்சகம் கூறும்போது, “கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து ஆயுதங்களும், தகவல் தொடர்பு சாதனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டார்.இந்த தாக்குதலுக்கு அரபு பிரிவினைவாதிகளும், ஐ.எஸ். பயங்கரவாதிகளும் போட்டி போட்டுக்கொண்டு பொறுப்பேற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. 
    ஈரானில் ராணுவ அணிவகுப்பில் துப்பாக்கியால் சுட்டு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரர்கள் உள்பட 24 பேர் பலியாகினர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
    டெக்ரான்:

    ஈராக் அதிபராக இருந்த சதாம் உசேன், ஈரானை 1980-ம் ஆண்டு ஆக்கிரமித்தார். அதைத் தொடர்ந்து அந்த ஆண்டின் செப்டம்பர் 22-ந்தேதி இரு நாடுகள் இடையே போர் தொடங்கியது. 8 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.நா. சபையின் முயற்சியால் போர் முடிவுக்கு வந்தாலும், இது 20-ம் நூற்றாண்டில் பேரழிவை சந்தித்த போர்களில் ஒன்றாக இன்றுவரை கருதப்படுகிறது.

    அந்தப் போர் தொடங்கியதை நினைவுகூர்ந்து ஈரானில் முக்கிய நகரங்களில் நேற்று ராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்டது.

    அங்குள்ள அவாஸ் நகரில் உள்ளூர் நேரப்படி காலை 9 மணிக்கு ராணுவ அணிவகுப்பு தொடங்கியது. அதை பார்வையிட ஏராளமான பொதுமக்கள் கூடி இருந்தனர்.



    இந்த நிலையில், அணிவகுப்பு மைதானம் அருகே உள்ள ஒரு பூங்காவில் இருந்து அணிவகுப்பில் கலந்து கொண்ட வீரர்களையும், பார்வையிட வந்திருந்த பொதுமக்களையும் குறிவைத்து சரமாரியாக துப்பாக்கியால் சுடப்பட்டது.

    ராணுவ சீருடை அணிந்த 4 பயங்கரவாதிகள் ஒன்று சேர்ந்து இந்த தாக்குதலை நடத்தினர். துப்பாக்கிச்சூட்டால் ராணுவ அணிவகுப்பு சீர்குலைந்தது. பெரும் பதற்றம் ஏற்பட்டது.

    இதற்கிடையே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட பூங்காவுக்கு பாதுகாப்பு படையினர் விரைந்தனர். அங்கே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டிருந்த பயங்கரவாதிகளை நோக்கி அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 2 பயங்கரவாதிகள் குண்டுபாய்ந்து பலியாகினர். 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    4 பயங்கரவாதிகளும் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 24 பேர் உயிரிழந்தனர். ஒரு குழந்தை, ஒரு பெண் உள்ளிட்ட 20 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு உடனடியாக ஆம்புலன்சுகளில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  10 நிமிடங்களில் இந்த தாக்குதல் முடிவுக்கு வந்தது.

    பலியான 24 பேரில் ஈரான் ராணுவ வீரர்கள்; பத்திரிகையாளர்; பொதுமக்களும் அடங்குவர் என தெரியவந்துள்ளது.

    பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு பற்றி ஈரான் ராணுவ செய்தி தொடர்பாளர் ரமேசான் ஷெரீப் நிருபர்களிடம் பேசுகையில், “துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதிகள் சவுதி அரேபியா ஆதரவு பெற்ற அல் அவாஸியா பயங்கரவாத குழுவை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இப்படி ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் இதுவரை நடந்தது கிடையாது” என குறிப்பிட்டார்.

    பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய இந்த அவாஸ் நகரில், வாழ்க்கைத்தரம் குறைந்து விட்டதாகக் கூறி அரசுக்கு எதிராக கடந்த ஓராண்டாக போராட்டங்கள் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

    பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து ஈரான் வெளியுறவு மந்திரி முகமது ஜாவத் ஷெரீப் டுவிட்டரில் கருத்து தெரிவிக்கையில், “ ஒரு வெளிநாட்டு அரசால் பயங்கரவாதிகள் அமர்த்தப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டு, ஆயுதங்கள் தந்து, கூலி கொடுத்து அவாஸ் நகரில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது” என்று கூறி உள்ளார்.

    மேலும், “இந்த தாக்குதலுக்கு ஈரான் விரைவாகவும், உறுதியாகவும் பதிலடி கொடுக்கும்” என்றும் குறிப்பிட்டுள்ளார். 
    ஈரான் சந்தித்து வரும் வரலாறு காணாத பொருளாதாரச் சரிவு, விலைவாசி உயர்வு தொடர்பாக அதிபரின் பதில் திருப்தியளிக்காததால் நீதி விசாரணைக்கு பாராளுமன்றம் பரிந்துரைத்துள்ளது.
    டெஹ்ரான்:

    அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது.

    இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து ஈரான் நாட்டு நாணயத்தின் மதிப்பு ஒரேநாளில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

    கடந்த ஆண்டுவாக்கில் 42,890 ரியால்களாக இருந்த அமெரிக்க டாலரின் மதிப்பு படிப்படியாக கூடிக்கொண்டே போய் கடந்த மாத இறுதியில் 57,500 ரியால்களாக உயர்ந்து கடந்த மே மாதவாக்கில் 80 ஆயிரம் ரியால்களுக்கு விலைபோனது. இதனால், ஈரானின் பொருளாதாரம் முற்றிலுமாக நிலைகுலைந்து காணப்படுகிறது.

    நிலைமை மேலும் மோசம் அடைவதை தவிர்க்கும் வகையில் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என அந்நாட்டின் பொருளாதார நிபுனர்களும், எதிர்க்கட்சியினரும் எச்சரித்து வருகின்றனர்.

    ஈரான் நாட்டு பொருளாதார விவகாரங்கள் மற்றும் நிதித்துறை மந்திரி மசவுத் கர்பாசியன்-ஐ அந்த பதவியில் இருந்து நீக்கம் செய்து பாராளுமன்ற உறுப்பினர்கள் சமீபத்தில் வாக்களித்தனர்.

    இந்நிலையில், வரலாறு காணாத பொருளாதாரச் சரிவு, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் எல்லைப்பகுதிகள் வழியாக கடத்தல் உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று காரசாரமான விவாதம் நடைபெற்றது.

    அடுத்தடுத்து அமெரிக்கா விதித்த தடைகளால் பொருளாதாரம் நலிவடைந்ததாக அதிபர் ரவுகானி விளக்கம் அளித்தார். பெருகிவரும் விலைவாசியை கட்டுப்படுத்த சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், கடத்தலை தடுக்க எல்லைப்பகுதிகளில் காவல் பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் அளித்த விளக்கம் திருப்தி அளிக்காததால் இவ்விவகாரத்தில் நீதி விசாரணைக்கு வலியுறுத்தி பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று வாக்களித்தனர்.

    பாராளுமன்ற உறுப்பினர்கள் நினைத்தால் ரவுகானியை அதிபர் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்தும் வாக்களிக்கலாம். ஆனால், தற்போதையை சூழ்நிலையில் அத்தகையதொரு நிலைப்பாட்டை பாராளுமன்றம்  எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #Iranianparliament #Rouhanijudiciary
    சிரியா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ராணுவம் தொடர்பான புதிய ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. #Iran #Syria #NewDealSigned
    டமாஸ்கஸ்:

    சிரியாவின் உள்நாட்டு போரில் அதிபருக்கு ஆதரவாக ஈரான் நாட்டு இராணுவ படைகள் போரிட்டு வருகின்றன. சிரியா உள்நாட்டு போரில், அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளும், ஐ.எஸ் போன்ற பயங்கரவாத இயக்கங்களும் போரிட்டு மக்களை இரையாக்கி வருவதாக கருத்து நிலவுகிறது.

    இதையடுத்து சமீபத்தில், சிரியாவில் இருக்கும் ஈரான் படைகளை திரும்ப பெற வேண்டும் என அமெரிக்கா அறிவுறுத்தி இருந்தது. இதற்கு பதிலளித்திருந்த ஈரான், சிரியா அதிபரின் வேண்டுகோளை ஏற்று ஈரான் உதவி வருவதாகவும், படைகளை திரும்ப பெரும் எந்த நோக்கமும் தற்போது இல்லை எனவும் தெரிவித்து இருந்தது.

    இந்நிலையில், நேற்று ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமிர் ஹடாமி அரசு முறை பயணமாக சிரியா சென்றார். அங்கு சிரியா அதிபர் பஷார் அல்-அசாத் மற்றும் மூத்த இராணுவ அதிகாரிகளை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

    இந்த பேச்சு வார்த்தையின் முடிவில், இரு நாடுகளுக்கு இடையே இராண்வ ஒத்துழைப்பு தொடர்பாக புதிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. #Iran #Syria #NewDealSigned
    ×