search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 100430"

    ஜெகன் மோகன் ரெட்டி இன்று சலூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து தனது பாதயாத்திரையை மீண்டும் தொடங்க உள்ளதாக அக்கட்சியின் கவுரவ தலைவர் விஜயம்மா தெரிவித்துள்ளார். #JaganmohanReddy #Yatra
    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பவர் ஜெகன் மோகன் ரெட்டி. இவர் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதி கடப்பா மாவட்டம் புலிவெந்தலா பகுதியில் இருந்து பொதுமக்களுடன் பாதயாத்திரையை தொடங்கினார். தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பாதயாத்திரை மேற்கொண்டார்.
     
    கடந்த அக்டோபர் 25-ம்  தேதி ஜெகன் மோகன் ரெட்டி விசாகப்பட்டினம் விமான நிலையத்துக்கு வந்தபோது, ஒரு வாலிபர் ‘செல்பி’ எடுப்பது போல் நடித்து அவரை கத்தியால் குத்தினார். இதில் காயம் அடைந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அவரை கத்தியால் குத்திய விமான நிலைய ஓட்டல் ஊழியரான சீனிவாஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.



    இதற்கிடையே, ஜெகன் மோகன் ரெட்டி நவம்பர் 12-ம் தேதி மீண்டும் சலூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து தனது பாதயாத்திரையை தொடங்கினார்.

    இந்நிலையில், ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் இச்சாபுரம் பகுதியில் தனது பாதயாத்திரையை இன்று நிறைவு செய்தார்.

    இதுவரை அவர், சுமார் 341 நாட்களில் 13 மாவட்டங்களில் உள்ள 134 சட்டசபை தொகுதிகளில் சுமார் 3 ஆயிரத்து 648 கிலோமீட்டர் தூரம் நடந்துள்ளார்.  

    கடந்த சில ஆண்டுகளில் இதுபோல் 3 ஆயிரம் கி.மீ. தொலைவு நடந்தவர்களில் ஜெகன்மோகன் ரெட்டி முதல் அரசியல்வாதி என்பது குறிப்பிடத்தக்கது. #JaganmohanReddy #Yatra 
    புதிதாக உருவாக்கப்பட்ட ஆந்திரா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பிரவீன் குமார் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். #APHighCourt #ChiefJustice #JusticePraveenKumar
    விஜயவாடா:

    ஆந்திராவில் இருந்து தெலுங்கானா என்ற தனி மாநிலம் பிரிக்கப்பட்ட பின்னர் இரு மாநிலங்களுக்கும் பொதுவாக ஐதராபாத் நகரில் ஆந்திரா, தெலுங்கானா உயர்நீதிமன்றம் இயங்கி வருகிறது.

    முன்னர் ஆந்திராவின் தலைநகரமாக இருந்த ஐதராபாத் நகரம் தற்போது தெலுங்கானா மாநிலத்துக்கு சொந்தமாகிப்போன நிலையில், ஆந்திரா மாநிலத்தின் புதிய தலைநகரமாக அமராவதி நகரம் உருவாகி வருகிறது.

    மிக பிரமாண்டமான உள்கட்டமைப்பு வசதிகளுடன் உருவாகிவரும் அமராவதி நகரில் ஆந்திரா மாநிலத்துக்கென தனியாக புதிய உயர்நீதிமன்றம் அமைக்க மத்திய சட்டத்துறை அமைச்சகம்  அனுமதி அளித்தது.

    மத்திய அரசின் இந்த பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்து கையொப்பமிட்டுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 26-ம் தேதி இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிக்கையை வெளியிட்டார்.

    இந்த உத்தரவை தொடர்ந்து, ஜனவரி முதல் தேதியில் (இன்று) இருந்து அமராவதியில் புதிதாக செயல்பட தொடங்க வேண்டிய இந்த நீதிமன்றம் இந்தியாவின் 25-வது உயர்நீதிமன்றமாகும்.

    ஆனால், அமரவாதி நகரில் உயர்நீதிமன்றம் கட்டும் பணிகள் நிறைவடையாததால் விஜயவாடா நகரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தற்காலிகமாக உயர்நீதிமன்றம் இயங்கும் என ஆந்திர மாநில அரசு தெரிவித்தது.



    இந்நிலையில், புதிதாக உருவாக்கப்பட்ட ஆந்திரா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பிரவீன் குமார் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
     
    விஜயவாடா நகரில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் நீதிபதி பிரவீன் குமாருக்கு கவர்னர் நரசிம்மன் பதவி பிரமாணமும், ரகசிய காப்புறுதி பிரமாணமும் செய்து வைத்தார்.

    இந்த பதவியேற்பு விழாவில் ஆந்திரா முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, அம்மாநில மந்திரிகள் நீதிபதிகள் மற்றும் அரசு உயரதிகாரிகள் பலர் பங்கேற்றனர். தலைமை நீதிபதியுடன் மேலும் 15 புதிய நீதிபதிகளும் பதவி ஏற்றனர்.

    இதற்கிடையே, அமராவதி நகரில் இன்னும் சரியாக கட்டி முடிக்கப்படாத கட்டிடத்துக்கு ஆந்திரா உயர்நீதிமன்றம் மாற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் ஆந்திர மாநில வக்கீல்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

    இவ்விவகாரத்தை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்ற மனுதாரர்களின் கோரிக்கையை நேற்று நிராகரித்த சுப்ரீம் கோர்ட், மறுவிசாரணையை ஜனவரி 2-ம் தேதிக்கு (நாளை) ஒத்திவைத்துள்ளது. #APHighCourt #ChiefJustice #JusticePraveenKumar 
    ஆந்திர மாநிலத்தை சூறையாடிய பேத்தாய் புயலின் கோரத்தாண்டவத்துக்கு மூன்றரை லட்சம் ஏக்கர் விளைநிலங்களில் இருந்த பயிர்கள் அழிந்து, நாசமடைந்தன. #CyclonePhethai #Andhracrops ##Andhracropsdamage
    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலத்தை நேற்று சக்தி வாய்ந்த பேத்தாய் புயல் தாக்கியது. இதனால், விசாகப்பட்டினம், குண்டூர், கிருஷ்ணா, கிழக்கு மற்றும் வடக்கு கோதாவரி மாவட்டங்கள் பெரும் பாதிப்புள்ளாகின.

    புயலை தொடர்ந்து பெய்த கனமழையால் பெருக்கெடுத்த வெள்ளத்தில் மூழ்கி சுமார் மூன்றரை லட்சம் ஏக்கர் விளைநிலத்தில் இருந்த நெல், சோளம், மிளகாய் பருத்தி உள்ளிட்ட பயிர்கள் நாசமடைந்தன.

    குறிப்பாகம் குண்டூர் மாவட்டத்தில் மட்டும் 80 ஆயிரம் ஏக்கரில் இருந்த நெல்பயிர்கள் அறுவடை முடிந்து உலர வைப்பதற்கான நேரத்தில் நாசமாகின. மேலும், சுமார் 20 ஆயிரம் ஏக்கர் அளவிலான புகையிலை, சோளம், மிளகாய் போன்ற பணப்பயிர்கள் நாசமடைந்தன,

    கிருஷ்ணா மாவட்டத்தில் சுமார் 1.50 லட்சம் ஏக்கர் அளவிலான நெல், சோளம், மிளகாய் மற்றும் வாழை பயிர்கள் நாசமாகின. கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் புயல் காற்றில் பல ஏக்கர்களில் இருந்த வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன.

    மேற்கண்ட 5 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பாக செய்யப்பட்ட ஆரம்பகட்ட மதிப்பீட்டில் பேத்தாய் புயலால் சுமார் 450 கோடி ரூபாய் அளவிலான பயிர்கள் அழிந்துப் போனதாக தெரியவந்துள்ளது.

    மேலும், குளிர் தாங்க முடியாமல் சுமார் 800 ஆடுகள் மற்றும் சில கால்நடைகளும் இறந்தன. புயல் பாதித்த பகுதிகளை இன்று வான்வழியாக பறந்து சென்று ஆய்வு செய்த முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடு விரைவில் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளர்.



    புயல் பாதித்த 14 மண்டலங்களில் உடனடியாக மின்சார வினியோகம் செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சுமார் 32 ஆயிரம் மக்கள் 187 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். #CyclonePhethai #Andhracrops ##Andhracropsdamage
    வங்கக்கடலில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி ஆந்திராவில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #MET #PethaiCyclone
    சென்னை:

    தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டு இருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று இன்று காலை புயலாக மாறியது. இந்த புயலுக்கு நாடுகள் வரிசைப்படி தாய்லாந்து ‘பேத்தாய்’ என பெயர் சூட்டி உள்ளது.

    மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து சென்னைக்கு கிழக்கு தென் கிழக்கில் 730 கி.மீ. தொலைவிலும், ஆந்திராவின் மசூலிப்பட்டினத்தில் இருந்து கிழக்கு தென்கிழக்கில் 930 கி.மீ. தொலைவிலும், இலங்கையின் திரிகோணமலையில் இருந்து 470 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டிருந்தது.

    இந்த புயலானது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறி வடக்கு மற்றும் வடமேற்கு, திசையில் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரை நோக்கி நகரும். நாளை மறுநாள் ஆந்திராவின் கடலோர பகுதியான ஓங்கோலுக்கும் காக்கிநாடாவுக்கும் இடையே கரையை கடக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில்,  வங்கக்கடலில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இந்த ‘பேத்தாய்’ புயல் ஆந்திராவின் மசூலிப்பட்டினம்-காக்கிநாடா இடையே டிச.17ம் தேதி பிற்பகல் கரையை கடக்கும்.  

    இதனால் ஆந்திர கடலோர பகுதிகளில் டிச.16 மற்றும் 17ம் தேதிகளில் கனமழை பெய்யும். புயலால் கோதாவரி, விசாகப்பட்டினம், கிருஷ்ணா, குண்டூர் மாவட்டங்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த ஏனம் மாவட்டமும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #MET #PethaiCyclone
    நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாசலபிரதேசம் ஆகிய மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் திட்டமிட்டு உள்ளது. #AndhraPradesh #Odisha #Sikkim #AssemblyPolls #LokSabhaElections
    புதுடெல்லி:

    ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாசலபிரதேசம் ஆகிய 4 மாநில சட்டசபைகளின் ஆயுட்காலம் அடுத்த ஆண்டு(2019) மே மற்றும் ஜூன் மாதங்களில் முடிவடைகிறது. இதனால் அங்கு கட்டாயம் தேர்தல் நடத்தவேண்டிய நிலை உள்ளது. அதேநேரம் நாடாளுமன்றத்துக்கும் அடுத்த ஆண்டு மே மாத வாக்கில் தேர்தல் நடைபெறுகிறது.

    இதனால் நாடாளுமன்றத்துக்கு தேர்தலை நடத்தும்போது இந்த 4 மாநிலகளுக்கும் சேர்த்தே தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டு உள்ளது. இதேபோல் அண்மையில் கலைக்கப்பட்ட காஷ்மீர் மாநில சட்டசபைக்கும் வருகிற மே மாதம் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படு கிறது. இதுபற்றி தேர்தல் கமிஷன் அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-



    ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாசலபிரதேச மாநிலங்களில் இதற்கு முந்தைய முன்மாதிரிகளைக் கொண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்படும். அதேநேரம் காஷ்மீரில் அடுத்த 6 மாதத்துக்குள் தேர்தலை நடத்தி முடிக்கவேண்டும். இதற்கான அதிக பட்ச கால அவகாசம் மே மாதத்துடன் முடிகிறது. அதற்குள்ளாகவே அங்கும் தேர்தலை நடத்தவேண்டிய நிலையும் உள்ளது. காஷ்மீரில் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தலை நடத்தும் போதே சட்டசபைக்கும் தேர்தலை நடத்தினால் பாதுகாப்பு படையினரின் தேர்தல் பாதுகாப்பு பணி எளிதாக முடிந்துவிடும் என்று தேர்தல் கமிஷன் கருதுகிறது. இதனால் நாடாளுமன்ற தேர்தலுடன் காஷ்மீர் சட்டசபை தேர்தலும் சேர்ந்தே நடைபெறுவதற்கான வாய்ப்புகளே அதிகம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இன்னொரு அதிகாரி கூறுகையில், “மராட்டியம், அரியானா மாநிலங்களின் சட்டசபை ஆயுட்காலம் 2019-ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் முடிகிறது. இந்த 2 மாநிலங்களிலும் பா.ஜனதா அரசுதான் உள்ளது. அவர்கள் 6 மாதத்துக்குள் சட்டசபையை கலைக்க முன்வந்தால் அந்த 2 மாநிலங்களிலும் சட்டசபை தேர்தலை நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து நடத்துவது பற்றி பரிசீலிக்கப்படும்” என்றார். #AndhraPradesh #Odisha #Sikkim #AssemblyPolls #LokSabhaElections
    புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் வணிகர்கள் ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்ய மத்திய அரசு கால அவகாசத்தை நீட்டித்து உள்ளது. #GST #AndhraPradesh #TamilNadu #GajaCyclone
    புதுடெல்லி:

    புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் வணிகர்கள் ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்ய மத்திய அரசு கால அவகாசத்தை நீட்டித்து உள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், நாகை, தேனி, தஞ்சை, சிவகங்கை, திருச்சி, கரூர், ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் வணிகம் செய்பவர்கள், அக்டோபர் மாதத்துக்குரிய ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்வதற்கான தேதி, டிசம்பர் 20-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

    அதுபோல், ‘தித்லி’ புயலால் பாதிக்கப்பட்ட ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் வியாபாரம் செய்பவர்கள், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்துக்கான ஜி.எஸ்.டி. கணக்கை தாக்கல் செய்ய நாளை வரை (வெள்ளிக்கிழமை) அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.  #GST #AndhraPradesh #TamilNadu #GajaCyclone 
    ஆந்திராவில் சிபிஐ தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்துவதற்கு வழங்கிய அனுமதியை சந்திரபாபு நாயுடு அரசு திரும்ப பெற்றது. #ChandrababuNaidu #CBI

    ஆந்திராவில் சோதனைகள் மற்றும் விசாரணைகளை மேற்கொள்ள வழங்கிய அனுமதியை அம்மாநில அரசு திரும்ப பெற்றது. இந்த உத்தரவை அடுத்து சிபிஐ ஆந்திரா எல்லைக்குள் எந்தஒரு சோதனையும் மேற்கொள்ள முடியாது, விசாரிக்கவும் முடியாது. சிபிஐ டெல்லி சிறப்புப்படை பிரிவு சட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. சட்டத்தின்படி, டெல்லியில் மட்டுமே சிபிஐ அதிகாரம் பெற்றது. பிற மாநிலங்களில் நுழைய அம்மாநிலங்களில் ஒருமனதான சம்மதத்தை பெற வேண்டியது கட்டாயமாகும். இந்நிலையில் ஆந்திராவில் சிபிஐயின் அதிகாரத்தை தடுக்கும் வகையில் ரகசிய உத்தரவை அம்மாநில உள்துறை கொள்கை செயலாளர் ஏ.ஆர். அனுராதா நவம்பர் 8-ம் தேதி பிறப்பித்துள்ளார்.

    இது, நேற்று இரவு வெளியே தெரியவந்துள்ளது. டெல்லி சிறப்பு போலீஸ் படை சட்டத்தின் பிரிவு 6-ன் படி மாநில அரசு ஒப்புதலை திரும்ப பெறலாம். அதன்படியே மாநில அரசு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அனுமதி வழங்கிய மூன்று மாதங்களில் ஆந்திர மாநில அரசிடம் இருந்து இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிபிஐக்கு அனுமதி வழங்கும் வகையில் ஆகஸ்ட் 3-ம் தேதி ஆந்திரா அரசு உத்தரவை வெளியிட்டு இருந்தது. இதற்கிடையே மாநில விசாரணைப்பிரிவின் அதிகார வரம்பை விஸ்தரிக்க ஆந்திரா அரசு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நடவடிக்கையை ஆதரித்துள்ள ஆந்திர பிரதேச மாநில துணை முதல்வர் சின்ன ராஜப்பா, சிபிஐக்கு எதிராக குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்கள் காரணமாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். “எங்களுக்கு சிபிஐயின் மீது நம்பிக்கையுள்ளது. ஆனால் சிபிஐயின் தலைமை அதிகாரிகளுக்கு எதிரான சமீபத்திய குற்றச்சாட்டுக்கள் எங்களுடைய ஒப்புதலை திரும்ப பெற செய்யும் கட்டாயத்திற்கு தள்ளியது. சிபிஐ ஒவ்வொரு வழக்கிற்கும் அனுமதியைப் பெற வேண்டும்,” என கூறியுள்ளார். வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட நிபுணர்களுடனான ஆலோசனையை அடுத்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    கர்நாடக அரசும் அனுமதியை திரும்ப பெற்றுள்ளது என்று கூறியுள்ள ராஜப்பா, மாநிலத்தில் உள்ள மத்திய அரசு அதிகாரிகளுக்கு எதிராக விசாரணையை மேற்கொள்ள சிபிஐக்கு எந்தஒரு தடையும் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.



    “எங்களுக்கு எப்போது எல்லாம் விசாரணை தொடர்பாக சிபிஐ கோரிக்கை விடுக்கிறதோ அப்போது எல்லாம் தேவையான அனுமதியை வழங்குவோம்,” எனவும் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே சிபிஐயை தடை செய்வதன் உள்நோக்கம் என்ன என்பதை விளக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியான ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கேள்வியை எழுப்பியுள்ளது. சந்திரபாபு நாயுடுவின் நடவடிக்கையை மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வரவேற்றுள்ளார். சிபிஐயை ஆந்திராவிற்கு பிரவேசிக்க அனுமதிக்க மாட்டோம் என சந்திரபாபு நாயுடு சரியான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். பா.ஜனதாவால் நோட் ஜேஞ்சராக வேண்டுமென்றால் இருக்கலாம், கேம் ஜேஞ்சராக இருக்க முடியாது என மம்தா பானர்ஜி கூறியுள்ளார். #ChandrababuNaidu #CBI
    ஜெகன் மோகன் ரெட்டி இன்று சலூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து தனது பாதயாத்திரையை மீண்டும் தொடங்க உள்ளதாக அக்கட்சியின் கவுரவ தலைவர் விஜயம்மா தெரிவித்துள்ளார். #JaganmohanReddy #Yatra
    ஐதரபாத்:

    ஆந்திர மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பவர் ஜெகன் மோகன் ரெட்டி. இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கடப்பா மாவட்டம் புலிவெந்தலா பகுதியில் இருந்து பொதுமக்களுடன் பாதயாத்திரையை தொடங்கினார்.

    கடந்த மாதம் 25-ந் தேதி ஜெகன் மோகன் ரெட்டி விசாகப்பட்டினம் விமான நிலையத்துக்கு வந்தபோது, ஒரு வாலிபர் ‘செல்பி’ எடுப்பது போல் நடித்து அவரை கத்தியால் குத்தினார். இதில் காயம் அடைந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

    அவரை கத்தியால் குத்திய விமான நிலைய ஓட்டல் ஊழியரான சீனிவாஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி இன்று (திங்கட்கிழமை) சலூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து தனது பாதயாத்திரையை மீண்டும் தொடங்க உள்ளதாக அக்கட்சியின் கவுரவ தலைவர் விஜயம்மா தெரிவித்துள்ளார்.

    இதுபற்றி அவர் கூறுகையில், ‘கடவுளின் கருணையாலும், மக்களின் ஆசீர்வாதத்தாலும் ஜெகன் மோகன் ரெட்டி முழுமையாக பூரண குணம் அடைந்து விட்டார். எனவே அவர் இன்று முதல் தனது பாதயாத்திரையை மீண்டும் தொடங்குகிறார். மறைந்த முதல்-மந்திரி ராஜசேகர் ரெட்டிக்கு மக்கள் ஆதரவு அளித்ததுபோல், ஜெகன் மோகன் ரெட்டிக்கும் மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்’ என்றார்.  #JaganmohanReddy #Yatra 
    ஆந்திரா முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்று தனது மந்திரி சபையை விரிவுபடுத்தினார். தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 2 பேர் புதிய மந்திரிகளாக பதவி ஏற்றனர். #ChandrababuNaidu #Minister #AndhraPradesh
    அமராவதி:

    ஆந்திர மாநிலத்தின் ஆளும் கட்சியான தெலுங்கு தேசம், மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியது. அதனை தொடர்ந்து, மாநில ஆட்சியில் கூட்டணி வகித்து வந்த பா.ஜ.க. கூட்டணியை விட்டு வெளியேறியது.

    இதன் காரணமாக முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் மந்திரி சபையில் பதவி வகித்து வந்த பா.ஜ.க. மந்திரிகள் 2 பேர் கடந்த மார்ச் மாதம் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்தனர்.

    இந்த நிலையில், முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்று தனது மந்திரி சபையை விரிவுபடுத்தினார். தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 2 பேர் புதிய மந்திரிகளாக பதவி ஏற்றனர். அவர்கள் தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பரூக் மற்றும் கிடாரி ஷ்ரவன் குமார் ஆவார்கள். அவர்கள் இருவருக்கும் கவர்னர் நரசிம்மன் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

    பரூக், தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனர் என்.டி. ராமாராவ் மற்றும் தற்போதைய முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஆகிய 2 பேரின் மந்திரி சபையிலும் ஏற்கனவே மந்திரியாக பதவி வகித்து இருக்கிறார். அதோடு ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தின் சட்டசபையில் துணை சபாநாயகராகவும் இருந்துள்ளார்.

    28 வயது என்ஜினீயரான கிடாரி ஷ்ரவன் குமார், கடந்த செப்டம்பர் மாதம் மாவோயிஸ்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்ட எம்.எல்.ஏ. கிடாரி சர்வேஸ்வர ராவின் மகன் ஆவார். இவர் ஆந்திர சட்டசபையில் உறுப்பினராக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
    ஆந்திராவில் ஆளுங்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் முக்கிய பிரமுகர் கொல்லப்பட்ட சம்பவம் கர்னூல் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #TDPLeaderKilled
    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் கே.வெங்கடபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சோமேஷ்வர் கவுடா. ஆளுங்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் தேவனகொண்டா மண்டல துணைத்தலைவரான இவர் இன்று காலை மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.

    அரசியல் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன் அடிப்படையில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

    இதேபோல் கடந்த செப்டம்பர் மாதம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் பட்டப்பகலில் தெலுங்கு தேசம் கட்சியின் இரண்டு தலைவர்களை மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது. #TDPLeaderKilled
    ஆந்திராவில் கிராமத்தில் வட்டி என்கிற இனத்தை சார்ந்த மலைவாழ் மக்கள் பகலில் நைட்டி அணிந்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும், தகவல் கொடுப்பவருக்கு ரூ.1000 சன்மானம் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. #NightyBan #AndhraVillage
    நகரி :

    பெண்கள் இரவில் தூங்கும் போது அணிந்துகொள்வதற்காக கண்டறியப்பட்ட இலகுவான உடை ‘நைட்டி’. ஆனால் தற்போது பெரும்பலான பெண்கள் நைட்டியை பிரதான உடையாக மாற்றிக்கொண்டு பகல் நேரங்களிலும் அதனை அணிந்து வருகின்றனர்.

    இந்தநிலையில் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தோகலபள்ளி என்கிற கிராமத்தில் பெண்கள் பகலில் நைட்டி அணிய தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த கிராமத்தில் வட்டி என்கிற இனத்தை சார்ந்த மலைவாழ் மக்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். அந்த இனத்தை சேர்ந்த 9 பேரை வட்டி இனத்தின் தலைவர்களாக மக்கள் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். அவர்கள் கூறுவதை வேத வாக்காக எண்ணி அதன்படி செயல்படுவது மக்களின் வழக்கம்.



    அந்த வகையில், தோகலபள்ளி கிராமத்தில் உள்ள பெண்கள் பகலில் அதாவது காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நைட்டி அணிய வட்டி இன தலைவர்கள் தடை விதித்து உள்ளனர். அதனை மீறி பகலில் நைட்டி அணியும் பெண்கள் ரூ.2 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும். பெண்கள் பகலில் நைட்டி அணிந்திருப்பதை பார்க்கும் நபர் வட்டி இன தலைவர்களுக்கு அதனை தெரியப்படுத்தினால் அவருக்கு ரூ.1000 சன்மானமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தடையை விரும்பாத அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் சிலர் இதுபற்றி அரசு அதிகாரிகளுக்கு சமீபத்தில் தெரியப்படுத்தினர். அந்த கிராமத்துக்கு சென்று விசாரித்த போது, அங்குள்ள யாரும் வட்டி இன தலைவர்களுக்கு எதிராக சாட்சியம் அளிக்க முன்வரவில்லை என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். #NightyBan #AndhraVillage
    ஆந்திராவில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்துக்கு கடத்தப்பட்ட இரண்டரை டன் அளவிலான செம்மரக்கட்டைகளை வனத்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். #RedSandalwoodCaptured #Andhra
    வேலூர்:

    ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு செம்மரக் கட்டைகள் கடத்தப்படுவதாக வேலூர் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வேலூர் மாவட்டம் சாத்துமதுரை என்ற பகுதியில் வாகன தணிக்கை நடத்தப்பட்டது.

    அப்போது, அதிவேகமாக வந்த சரக்கு வாகனத்தை மடக்கி சோதனை செய்ததில், இரண்டரை டன் செம்மரக் கட்டைகள் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர் வேலூர் தாலுக்கா போலீசார் உதவியுடன் தப்பியோடிய ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

    ஆந்திர மாநிலத்தில் இருந்து வேலூர் வழியாக கடத்திச் செல்லப்பட்ட இந்த செம்மரக்கட்டைகளின் மதிப்பு ஒரு கோடி ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. #RedSandalwoodCaptured #Andhra
    ×