search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பதவியேற்பு"

    சட்டசபை தேர்தலில் அபார வெற்றி பெற்ற ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திரப்பிரதேசம் மாநில முதல் மந்திரியாக பதவியேற்றுக் கொண்டார்.
    அமராவதி: 

    ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 151 இடங்களைப் பெற்று அபார வெற்றி பெற்றது.

    இதற்கிடையே, ஆந்திரா மாநிலத்தின் முதல் மந்திரியாக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்பார் என ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைமை தெரிவித்திருந்தது.



    இந்நிலையில், சட்டசபை தேர்தலில் அபார வெற்றி பெற்ற ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திரா மாநில முதல் மந்திரியாக இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கவ்ர்னர் நரசிம்மன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

    இதில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தமிழகம் சார்பில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர். 
    சட்டசபை தேர்தலில் அபார வெற்றி பெற்ற நவீன் பட்நாயக், தொடர்ந்து ஐந்தாவது முறையாக ஒடிசா மாநில முதல் மந்திரியாக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பிஜு ஜனதா தளம் கட்சி அமோக வெற்றி பெற்று தொடர்ந்து 5-வது முறையாக ஆட்சியை பிடித்தது.

    மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் பிஜு ஜனதா தளம் 117 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளிலும், பா.ஜனதா 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

    இந்த நிலையில் ஒடிசா மாநிலத்தின் முதல் - மந்திரியாக நவீன் பட்நாயக் இன்று பதவி ஏற்றார். தலைநகர் புவனேஷ்வரில் உள்ள இட்கோ கண்காட்சி மைதானத்தில் நடந்த விழாவில் அவருக்கு கவர்னர் கணேஷிலால் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.


    நவீன் பட்நாயக் முதல் முறையாக பொது மைதானத்தில் பதவி ஏற்றார்.

    அவர் இதற்கு முன்பு 2000, 2004, 2009, 2014 ஆகிய ஆண்டுகளில் முதல் மந்திரியாக பதவி ஏற்று இருந்தார். தற்போது தொடர்ந்து 5-வது முறையாக ஒடிசா முதல் மந்திரியாக பொறுப்பு ஏற்று உள்ளார்.

    இதற்கு முன்பு 4 முறையும் அவர் கவர்னர் மாளிகையில் பதவி ஏற்று இருந்தார்.

    பதவி ஏற்பு விழாவில் நவீன்பட்நாயக்கின் சகோதரரும், தொழில் அதிபருமான பிரேம் பட்நாயக், சகோதரியும், பிரபல எழுத்தாளருமான கீதா மேத்தா உள்பட 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரமுகர்கள் பங்கேற்றனர். ஏராளமான பி.ஜு ஜனதா தள தொண்டர்களும் திரண்டு வந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    ஒடிசா மாநிலத்துக்கு தொடர்ந்து 5-வது முறையாக முதல் மந்திரியாக பதவி ஏற்று சாதனை படைத்த நவீன் பட்நாயக்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    ஒடிசா மாநிலத்துக்கு தனது முழு ஆதரவையும் அளிப்பதாக மோடி தெரிவித்துள்ளார்.
    மனோகர் பாரிக்கர் மறைவை தொடர்ந்து கோவாவின் புதிய முதல் மந்திரியாக பிரமோத் சாவந்த் பதவியேற்றுக் கொண்டார். #GoanewCM #ManoharParikkar #PramodSawant
    பனாஜி:

    முன்னாள் ராணுவ மந்திரியும் கோவா முதல் மந்திரியாக இருந்த மனோகர் பாரிக்கர் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்பட பல்வேறு முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.



    இதையடுத்து, கோவாவில் உள்ள மனோகர் பாரிக்கர் வீட்டில் பிரதமர் மோடி, ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் உள்பட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து, அவரது உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
     
    இதற்கிடையே, பாஜக தலைவர் அமித் ஷா தலைமையில் புதிய முதல் மந்திரியை தேர்வு செய்வதற்காக கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கோவா புதிய முதல் மந்திரியாக பிரமோத் சாவந்த் தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில், கோவாவின் புதிய முதல் மந்திரியாக பிரமோத் சாவந்த் இன்று அதிகாலை 2 மணியளவில் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கோவா கவர்னர் மிருதுளா சின்ஹா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். #GoanewCM #ManoharParikkar #PramodSawant
    தென்னமெரிக்கா கண்டத்தில் உள்ள இயற்கை எழில் சூழ்ந்த பெரு நாட்டின் புதிய பிரதமராக பிரபல நடிகரும், திரைப்பட இயக்குனருமான சால்வடார் டெல் சோலார் பதவியேற்றார். #SalvadordelSolar #Peruprimeminister
    லிமா:

    தென்னமெரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள அழகிய நாடுகளில் ஒன்றான பெரு, அமேசான் மழைக்காடுகள் மற்றும் பசுமை நிறைந்த மச்சுபிச்சு மலைத்தொடர்களால் சுற்றுலாவாசிகளின் சொர்க்கப்புரியாக தோற்றமளிக்கிறது. பெரு நாட்டின் அதிபராக மார்ட்டின் விஸ்காரா பதவி வகித்து வருகிறார். 

    கடந்த 2016-ம் ஆண்டில் பெரு நாட்டு பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் அதிகமான எம்.பி.க்களின் ஆதரவை பெற்ற சீசர் வில்லனுயேவா பிரதமராக பதவியேற்றார். 

    இவரது மந்திரிசபையில் கலாச்சாரத்துறை மந்திரியாக பதவி வகித்த சால்வடார் டெல் சோலார், மனித உரிமை மீறலில் ஈடுபட்ட முன்னாள் அதிபர் ஆல்பர்ட்டோ பியூஜிமோரி-க்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை 2017-ம் ஆண்டில் ராஜினாமா செய்தார். 
     


    பெரு நாட்டின் பிரபல வழக்கறிஞரும், நடிகரும் திரைப்பட இயக்குனருமான சால்வடார் டெல் சோலாரின் கோரிக்கைக்கு ஏற்ப முன்னாள் அதிபருக்கு அளிக்கப்பட்ட பொதுமன்னிப்பு ரத்து செய்யப்பட்டது.

    இதற்கிடையில், அந்நாட்டின் அதிபர் பதவிக்கு கடந்த 2018-ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற மார்ட்டின் விஸ்காரா 23-3-2018 அன்று பதவியேற்றார். நாட்டில் அதிபர் மாற்றம் ஏற்பட்டதுடன் தனது பதவிக்காலத்தில் மனநிறைவு கொள்வதாக அறிவித்த பிரதமர் சீசர் வில்லனுயேவா கடந்த வாரம் ராஜினாமா செய்தார்.

    இதைதொடர்ந்து, பிரபல நடிகரும், திரைப்பட இயக்குனருமான சால்வடார் டெல் சோலார்(48) புதிய பிரதமராக நேற்று பதவியேற்றார். #SalvadordelSolar #Peruprimeminister
    சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி இன்று பதவியேற்றுக் கொண்டார். #Congress #KSAlagiri
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் மாற்றப்பட்டு, காங்கிரஸ் தலைவராக கே.எஸ். அழகிரி நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என காங்கிரஸ் தலைமை கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தது.

    மேலும், செயல் தலைவர்களாக வசந்த்குமார், ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளார் என் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி இன்று பதவியேற்றுக் கொண்டார். முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் அவரிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.

    இதேபோல், செயல் தலைவர்களாக நியமனம் செய்யப்பட்ட வசந்த்குமார், ஜெயக்குமார், விஷ்ணுபிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோரும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய்தத், திருநாவுக்கரசர், ஈவிகேஎஸ் இளங்கோவன், குஷ்பு உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் மற்றும் செயல் தலைவர்களுக்கு நாம் முழு ஒத்துழைப்பை அளிப்போம் என மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் வாழ்த்து தெரிவித்துள்ளார். #Congress #KSAlagiri
    வங்காளதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஷேக் ஹசினா, மீண்டும் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். #SheikhHasina
    டாக்கா:

    வங்காளதேசத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஷேக் ஹசினா தலைமையிலான அவாமி லீக் கட்சி மற்றும் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா தலைமையிலான வங்காளதேச தேசியவாத கட்சிகள் மோதின.

    மொத்தமுள்ள 300 தொகுதிகளில் ஷேக் ஹசினாவின் அவாமி லீக் கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைத்தது. அவாமி லீக் கட்சி 281 இடங்களை கைப்பற்றியது. இதன்மூலம் மூன்றாவது முறையாக வங்காளதேச பிரதமராக ஷேக் ஹசினா ஆட்சி அமைக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், வங்காளதேச பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஷேக் ஹசினா, இன்று பிரதமராக மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 46 மந்திரிகள் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்றுக் கொண்டது. #SheikhHasina
    நாட்டின் புதிய தலைமை தகவல் ஆணையரான சுதிர் பார்கவாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். #ChiefInformationCommissioner #SudhirBhargava #RamnathKovind
    புதுடெல்லி:

    நாட்டின் தலைமை தகவல் ஆணையராக இருந்த ஆர்.கே.மாத்தூர், தகவல் ஆணையர்கள் யசோவர்தன் ஆசாத், ஸ்ரீதர் ஆச்சார்யலு, அமிதவா பட்டாச்சார்யா ஆகியோரின் பதவிக்காலம் முடிந்ததையடுத்து புதிய ஆணையர்களும், தலைமை ஆணையரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நியமனத்துக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததை அடுத்து, மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக பெயர்களை அறிவித்துள்ளது.

    நாட்டின் புதிய தலைமை தகவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்ட சுதிர் பார்கவாவுக்கு டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.



    இந்த நிகழ்ச்சியில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, நிதி மந்திரி அருண் ஜெட்லி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

    மேலும், ஓய்வுபெற்ற ஐஎப்எஸ் அதிகாரிகள் யஷ்வர்தன் குமார் சின்ஹா, வனஜா என் சர்னா, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி நீரஜ் குமார் குப்தா, முன்னாள் சட்ட செயலாளர் சுரேஷ் சந்திரா ஆகியோர் தகவல் ஆணையர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். #ChiefInformationCommissioner #SudhirBhargava #RamnathKovind
    இலங்கையில் புதிய மந்திரிசபை பதவியேற்றுக்கொண்டது. அதிபர் சிறிசேனா மந்திரி சபையின் தலைவர் என்ற முறையில் போலீஸ் துறையை தன்னிடமே வைத்துக்கொண்டார். #SriLankaCabinet #Sirisena
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேயை கடந்த அக்டோபர் 26-ந்தேதி நீக்கிய அதிபர் சிறிசேனா, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார். இதனால் அரசியல் குழப்பம் ஏற்பட்டதுடன், அதிபரின் இந்த நடவடிக்கைகளுக்கு சுப்ரீம் கோர்ட்டும் முட்டுக்கட்டை போட்டது.

    இதைத்தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கேயை மீண்டும் அவர் கடந்த 16-ந்தேதி பிரதமராக நியமித்தார். இதன் தொடர்ச்சியாக 30 நபர் கொண்ட புதிய மந்திரி சபை நேற்று பதவியேற்றுக் கொண்டது. அதிபரின் செயலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மந்திரிகள் ஒவ்வொருவருக்கும் அதிபர் சிறிசேனா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.



    புதிய மந்திரி சபையில் ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி இடம் பெற்றுள்ள ஐக்கிய தேசிய முன்னணியை சேர்ந்த 29 பேர் இடம் பெற்று உள்ளனர். இதில் முக்கிய எம்.பி.க்களான மங்கள சமரவீராவுக்கு நிதித்துறையும், சகல ரத்னாயகவுக்கு துறைமுகத்துறையும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

    இலங்கையில் அதிகாரமிக்க துறையாக கருதப்படும் பாதுகாப்பு படை மற்றும் போலீஸ் துறையை ரணில் பரிந்துரைத்தவர்களுக்கு வழங்காத அதிபர் சிறிசேனா, மந்திரி சபையின் தலைவர் என்ற முறையில் அந்த துறையை தன்னிடமே வைத்துக்கொண்டார். இதன் மூலம் அதிபர், பிரதமர் இடையிலான மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றே தெரிகிறது. #SriLankaCabinet #Sirisena
    சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல் மந்திரியாக பூபேஷ் பாகெல் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். மாநில கவர்னர் அவருக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்புறுதி பிரமாணமும் செய்து வைத்தார். #Chhattisgarh #bhupeshbaghel
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநில சட்டசபையில் உள்ள 90 தொகுதிகளுக்கு இருகட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 11-ம் தேதி எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தலில் அம்மாநிலத்தை ஆட்சி செய்த பா.ஜ.க. தோல்வியை சந்தித்தது. காங்கிரஸ் வேட்பாளர்கள் 68 இடங்களில் வெற்றி பெற்றனர். 15 இடங்களை மட்டுமே பா.ஜ.க.வால் பிடிக்க முடிந்தது.

    தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் அளவுக்கு அசுர பலத்தை பெற்ற காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ராய்ப்பூரில் நடந்தது. டெல்லியில் இருந்துவந்த அக்கட்சியின் மேலிட பார்வையாளர் டி.எஸ். சிங் டியோ முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய முதல் மந்திரியாக பூபேஷ் பாகெல் தேர்வு செய்யப்பட்டார்.



    இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூரில் உள்ள புதாதலாப் பகுதியில் உள்ள பல்பீர் சிங் ஜுனேஜா உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று மாலை நடைபெற்ற விழாவில் சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல் மந்திரியாக பூபேஷ் பாகெல் பதவி ஏற்றுக்கொண்டார். அம்மாநில கவர்னர் (பொறுப்பு) ஆனந்திபென் படேல் அவருக்கும் இதர மந்திரிகளுக்கும் பதவி பிரமாணமும், ரகசிய காப்புறுதி பிரமாணமும் செய்து வைத்தார்.

    இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் பிரதமர் தேவேகவுடா, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். #Chhattisgarh #bhupeshbaghel
    பூட்டான் நாட்டின் புதிய பிரதமராக லோட்டே ஷெரிங் பதவியேற்றார். அவருக்கு மன்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். #BhutanParliamentaryElection #BhutanNewPM #LotayTshering
    திம்பு:

    இந்தியாவின் அண்டை நாடான பூட்டானில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் சுற்று பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் பிரதமர் ஷெரிங் தோபே தலைமையிலான ஆளும் மக்கள் ஜனநாயக கட்சி, டி.என்.டி. மற்றும் டி.பி.டி. ஆகிய கட்சிகள் மோதின. ஓட்டு எண்ணிக்கையில் டி.என்.டி. கட்சி 92,722 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. அதற்கு அடுத்தபடியாக டி.பி.டி. கட்சி 2-வது இடம் பிடித்துள்ளது. பிரதமர் தோபேவின் ஆளும் பி.டி.பி. (மக்கள் ஜனநாயக கட்சி) படுதோல்வி அடைந்து 3-வது இடத்தை பிடித்தது.

    பூட்டான் அரசியல் சட்டப்படி முதல் சுற்று தேர்தலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் கட்சிகளுக்கு இடையே 2-வது சுற்று போட்டி நடைபெறும். அதில் வெற்றி பெறும் கட்சியே ஆட்சி அமைக்கும்.



    அதன்படி கடந்த அக்டோபர் 18-ந் தேதி 2-வது சுற்று தேர்தல் நடந்தது. இதில் டி.என்.டி. மற்றும் டி.பி.டி. கட்சிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் மொத்தம் உள்ள 47 தொகுதிகளில் 30 தொகுதிகளை டிஎன்டி கட்சி கைப்பற்றியது. இதையடுத்து அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் லோட்டே ஷெரிங் பிரதமராக நேற்று பதவியேற்றார். அவருக்கு பூட்டான் மன்னர் ஜிக்மே கேஷர் நாம்கியேல் வாங்சக் பாரம்பரிய முறைப்படி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

    புதிய பிரதமர் லோட்டே ஷெரிங் தலைமையிலான 10 மந்திரிகள் கொண்ட மந்திரிசபையும் பதவியேற்றது. எதிர்க்கட்சி தலைவர், சபாநாயகர் ஆகியோரும் பதவியேற்றுக்கொண்டனர். #BhutanParliamentaryElection #BhutanNewPM #LotayTshering
    அமெரிக்காவில் மூன்று பெண்களால் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட பிரெட் கவனாக் அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டின் 114-வது நீதிபதியாக இன்று பதவி ஏற்றார். #Kavanaughswornin #USSupremeCourt #USSupremeCourtJudge
    வாஷிங்டன்:

    அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதி பதவிக்கு பிரபல வழக்கறிஞர் பிரெட் கவனாக் என்பவரை அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பரிந்துரை செய்தார். ஆனால், பிரெட் கவனாக் மீது 3 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு கூறினர்.

    இதையடுத்து பாலியல் புகாருக்கு ஆளான பிரெட் கவனாக்-கை நீதிபதி பதவிக்கு தேர்வு செய்யக்கூடாது என அந்நாட்டில் பலத்த எதிர்ப்பு எழுந்தது. எனினும், அவரை நீதிபதியாக நியமிக்க ஆளும் குடியரசு கட்சி தீவிர முயற்சி மேற்கொண்டது.
     
    இதற்கிடையே, அமெரிக்க செனட் சபையில் நிரந்தர உறுப்பினர்கள் மத்தியில் இதற்கான முதல் ஓட்டெடுப்பு நடந்தது. இதில் பிரெட் கவனாக்குக்கு ஆதரவாக 51 ஓட்டுகளும், எதிராக 47ஓட்டுகளும் கிடைத்தன. இதனால் அவர் மயிரிழையில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.



    இந்நிலையில், நேற்று கூடிய அமெரிக்காவின் செனட் சபையில் பிரெட் கவனாக்-குக்கு ஆதரவாக 50 ஓட்டுகள் கிடைத்தன.  இதை தொடர்ந்து, அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டின் 114-வது நீதிபதியாக பிரெட் கவனாக் இன்று பதவி ஏற்று கொண்டார்.

    அவருக்கு ஓய்வுபெற்ற நீதிபதி அந்தோனி கென்னடி பதவி பிரமாணமும், அமெரிக்க சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் காப்புறுதி பிரமாணமும் செய்து வைத்தனர்.

    வாஷிங்டன் நகரில் உள்ள சுப்ரீம் கோர்ட் கருத்தரங்க மண்டபத்தில் பிரெட் கவனாக் பதவி ஏற்றுகொண்ட போது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டின் அருகே நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப், இதைப்பற்றி ஊடகங்கள் பெரிய அளவில் செய்தியாக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். #Kavanaughswornin #USSupremeCourt #USSupremeCourtJudge
    சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி, வரும் 7ம் தேதி சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவியேற்க உள்ளார். #IndiraBanerjee #SupremeCourt
    புதுடெல்லி:

    சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ஒரிசா ஐகோர்ட் தலைமை நீதிபதி வினீர் சரண் மற்றும் உத்தரகாண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் ஆகியோரை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமனம் செய்ய கொலிஜியம் மத்திய அரசுக்கு சமீபத்தில் பரிந்துரை செய்தது. 
    கொலிஜியத்தின் பரிந்துரை அனைத்தையும் மத்திய சட்ட அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகம் ஏற்றுக்கொண்டது. புதிதாக நியமிக்கப்பட்டவர்களோடு சேர்த்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில், சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி, வரும் 7ம் தேதி சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவியேற்க உள்ளார். அன்றைய தினம் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

    இந்திரா பானர்ஜி நியமனத்தால் சுப்ரீம் கோர்ட்டில் உள்ள பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே பானுமதி மற்றும் இந்து மல்கோத்ரா ஆகிய பெண் நீதிபதிகள் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக பதவி வகிக்கின்றனர். எனினும், 6 நீதிபதிகள் பணியிடங்கள் அங்கு இன்னும் காலியாக உள்ளன. 

    கடந்த 2002-ம் ஆண்டு கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்ட இந்திரா பானர்ஜி, பின்னர் டெல்லி ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, கடந்த 2017-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. #IndiraBanerjee #SupremeCourt
    ×