search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல்"

    பேராவூரணி அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் தாமரை உருவம் பொறித்த வெள்ளிக்காசுகளை பறிமுதல் செய்தனர். #LSPolls

    பேராவூரணி:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தஞ்சை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதுவரை நடத்திய வாகன சோதனையில் ரூ.2 கோடிக்கும் மேல் பணம் சிக்கியுள்ளது.

    மேலும் முக்கிய இடங்களில் 24 மணி நேரமும் பறக்கும் படையினர் கண்காணித்து சோதனை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே தேர்தல் பறக்கும் படையினர் இன்று காலை நடத்திய வாகன சோதனையில் தாமரை உருவம் பொறித்த வெள்ளிக்காசுகளை பறிமுதல் செய்தனர்.

    பேராவூரணி அடுத்த காரங்குடி கிழக்கு கடற்கரை சாலையில் இன்று காலை தேர்தல் பறக்கும் படையை சேர்ந்த வட்ட வழங்கல் அலுவலர் வில்சன் தலைமையில் ஏட்டுகள் பாரதிதாசன், காந்தி ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி லாரியை வழிமறித்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அந்த லாரியின் பின்புறத்தில் பீடி பண்டல்கள் இருந்தது. அதன் நடுவில் ஒரு சிறிய பெட்டி மறைத்து வைக்கப்பட்டு இருந்தது.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த பெட்டியை திறந்து பார்த்தனர். அதில் தாமரை உருவம் பொறித்த 133 வெள்ளிக்காசுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுபற்றி டிரைவரிடம் நடத்திய விசாரணையில், திருநெல்வேலி மாவட்டம் இலங்காபுரி பட்டினத்தை சேர்ந்த சக்திவேல் (33) என்பதும் அவர் பட்டுக்கோட்டையை நோக்கி பீடி பண்டல்களை ஏற்றி வந்ததும் தெரிய வந்தது.

    அவர் கொண்டு வந்த வெள்ளிக்காசுக்கு உரிய ஆவணம் எதுவும் இல்லாததால் அதனை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதைத்தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளிக்காசுகள் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய கொண்டு வரப்பட்டதா? தாமரை சின்னம் பொறிக்கப்பட்டு உள்ளதால் பா.ஜனதாவினருக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    பாராளுமன்ற தேர்தலில் மாண்டியா தொகுதியில் போட்டியிடும் நடிகை சுமலதாவுக்கு பா.ஜனதா ஆதரவு தெரிவித்துள்ளது. #Sumalatha #ParliamentElection

    பெங்களூரு:

    மறைந்த கன்னட நடிகர் அம்பரீஷின் மனைவி நடிகை சுமலதா மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

    அவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பி தேர்தலில் டிக்கெட் கேட்டார். ஆனால் மாண்டியா தொகுதியை கூட்டணியான ஜே.டி. எஸ். கட்சிக்கு காங்கிரஸ் ஒதுக்கியது.

    அங்கு முதல்வர் குமாரசாமி மகன் நிகில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சுமலதா சுயேட்சையாக களம் இறங்கி உள்ளார். அவருக்கு அம்பரீஷின் ரசிகர்கள் முழு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் அவருக்கு ஆதரவாக காங்கிரசாரே உள்ளனர்.

    சில நாட்களுக்கு முன்பு சுமலதா, பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான எஸ்.எம்.கிருஷ்ணாவை பெங்களூருவில் சந்தித்து பேசினார். அப்போது தன்னை பா.ஜனதா ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

     


    மாண்டியா தொகுதியில் நடிகை சுமலதாவுக்கு பா.ஜனதா வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளது. அந்த தொகுதியில் பா.ஜனதா தனது வேட்பாளரை நிறுத்தவில்லை. மாண்டியா தொகுதியை சுமலதாவுக்கு விட்டு கொடுத்துள்ளது.

    இதனால் சுமலதாவுக்கும், முதல்வர் குமாரசாமி மகன் நிகிலுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

    கர்நாடகாவில் 28 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளது. இதில் பா.ஜனதா ஏற்கனவே 21 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

    மாண்டியா தொகுதியில் வேட்பாளரை நிறுத்த வில்லை. கோலார் தொகுதியில் எஸ்.முனிசாமியை வேட்பாளராக அறிவித்துள்ளது. இன்னும் 5 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை பா.ஜனதா அறிவிக்க வேண்டியுள்ளது. #Sumalatha #ParliamentElection

    வருமான வரித்துறை போலி ஆவணங்கள் என்று நிராகரித்த குறிப்புகளை வைத்து தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் அவதூறு பிரசாரம் செய்ய தொடங்கி விட்டதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார். #LSpolls #electionmileage #Yeddyurappa
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா ஆட்சிக்காலத்தில் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு ரூ.1800 கோடி லஞ்சம் அளிக்கப்பட்டதாக வெளியான தகவலை லோக்பால் விசாரிக்க வேண்டும் என்று டெல்லியில் இன்று பேட்டியளித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா வலியுறுத்தினார்.

    இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக பதிலளித்த எடியூரப்பா, வருமான வரித்துறை போலி ஆவணங்கள் என்று நிராகரித்த குறிப்புகளை வைத்து தேர்தல் நேரத்தில்  காங்கிரஸ் அவதூறு பிரசாரம் செய்ய தொடங்கி விட்டதாக தெரிவித்துள்ளார்.



    'ஊழல் எண்ணங்களில் மூழ்கிப்போய் கிடக்கும் காங்கிரஸ் தலைவர்கள் மோடியின் செல்வாக்கை கண்டு அச்சத்தில் உறந்துப்போய் கிடக்கின்றனர். அவரது செல்வாக்கை எதிர்த்து வெற்றிபெற முடியாதவர்கள் தேர்தலுக்காக இப்படிப்பட்ட அவதூறான குற்றச்சாட்டுகளை பரப்புகின்றனர்.

    காங்கிரஸ் தெரிவித்துள்ள கருத்துகள் எல்லாம் தவறானவை, ஆதாரமற்றவை. இதை வெளியிட்ட நபர் மீது அவதூறு வழக்கு தொடர்வதற்காக வழக்கறிஞருடன் ஆலோசனை நடத்தி வருகிறேன்’ எனவும் எடியூரப்பா தெரிவித்தார். #LSpolls #electionmileage #Yeddyurappa
    ‘நானும் காவலர்’ கோ‌ஷத்தை பிரதமர் மோடி கைவிட வேண்டும் என்று பா.ஜனதா எம்.பி.யும் நடிகருமான சத்ருகன் சின்கா கூறியுள்ளார். #ShatrughanSinha #PMModi

    புதுடெல்லி:

    ரபேல் விவகாரத்தில் ‘நாட்டின் காவலர்’ என்று தன்னை கூறிக் கொண்ட பிரதமர் மோடி அரசுப் பணத்தை களவாடி தொழில் அதிபர் அனில் அம்பானிக்கு அளித்து விட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிர பிரசாரம் செய்து வருகிறது.

    அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ‘நானும் காவலர்’ என்ற கோ‌ஷத்தை பிரதமர் மோடி இணைய தளம் மூலம் பரப்பி வருகிறார். பா.ஜனதா ஆதரவாளர்கள் தங்களது பெயருக்கு முன்னால் ‘காவலர்’ என்ற அடைமொழியை சமூக வலைதளங்களில் சேர்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

    இது தொடர்பாக பா.ஜனதா எம்.பி.யும் நடிகருமான சத்ருகன் சின்கா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    பிரதமர் மோடி ‘நானும் காவலர்’ என்ற கோ‌ஷத்தை தொடர்ந்து பயன்படுத்த வேண்டாம் என்று பணிவுடன் கூறுகிறேன். ‘காவலரே களவாடிவிட்டார்’ என்ற எதிர்கட்சிகளின் கோ‌ஷத்தில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக அதை பயன்படுத்த வேண்டாம்.


    அந்த கோ‌ஷத்தை நீங்கள் பயன்படுத்தினால் ரபேல் பேரம் குறித்து எதிர்க்கட்சியினர் எழுப்பிய, இன்னும் விடையளிக்கப்படாத கேள்விகளை மக்களுக்கு தொடர்ந்து நினைவுப் படுத்திக் கொண்டே இருக்கும். அந்த கேள்விகளுக்கான பதில்களை அறிந்து கொள்ள மக்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

    எதிர்க்கட்சியினரின் பிரசாரத்தை முறியடிப்பதற்காக போதிய முன்னேற்பாடுகள் இன்றி திடீரென்று 25 லட்சம் காவலாளிகளிடம் பிரதமர் மோடி உரையாற்ற வேண்டிய அவசியம் என்ன? அதுவும் 25 லட்சம் காவலாளிகள் என்ற எண்ணிக்கை எதன் அடிப்படையில் கணக்கிடப்பட்டது என்பது மர்மமாகவே உள்ளது.

    மோடியின் இந்த தற்காப்பு முயற்சியை மக்கள் ரசிக்கப் போவதில்லை. அதிலும் வறுமையில் வாடும் காவலாளிகள் நிச்சயம் ரசிக்க மாட்டார்கள்.

    அவர்களிடம் அர்த்தமற்ற அலங்கார வார்த்தைகளை பேசியதை விட அவர்களது வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது, போதுமான அளவுக்கு நிரந்தர ஊதியம் நிர்ணயிப்பது போன்றவை குறித்து பிரதமர் மோடி பேசி இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #ShatrughanSinha #PMModi

    பிரியங்கா முன்கூட்டியே அரசியலுக்கு வந்திருக்க வேண்டும் என்று வாக்காளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். #priyanka #rahulgandhi #parliamentelection

    லக்னோ:

    நாட்டில் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி- பகுஜன் சமாஜ் கட்சிகள் தனியாக கூட்டணி அமைத்த நிலையில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது.

    2009 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் இந்த மாநிலத்தில் தனியாக நின்று ஓரளவு கணிசமான இடங்களை கைப்பற்றியது. அதேபோல இந்த தேர்தலிலும் கைப்பற்ற முடியும் என்று கருதுகிறது.

    இதற்காக பிரியங்காவை அரசியலுக்கு கொண்டு வந்து உத்தரபிரதேசத்தில் பாதி பகுதியில் தேர்தல் பொறுப்பாளராக அவரை நியமித்து உள்ளனர்.

    பிரியங்காவின் வருகை உத்தரபுபிரதேச அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும். காங்கிரஸ் இங்கு பல தொகுதியில் வெற்றி பெறும் என்று அரசியல் நிபுணர்கள் சொல்கின்றனர்.

    இதுபற்றி தொகுதி வாக்காளர்கள் சிலரை சந்தித்து கருத்து கேட்கப்பட்டது.

    தக்காளி வியாபாரி சுந்தர் லால் என்பவர் கூறும்போது, “பிரியங்காவிடம் என்ன எதிர்பார்ப்பது என்று தெரியவில்லை. அவர் இந்திரா காந்தியின் பேத்தி. ஆனால் அவர் இந்திராகாந்தி அல்ல. மன்மோகன்சிங் ஆட்சியை 10 ஆண்டுகள் பார்த்தோம். ஆனால் எதுவும் செய்யவில்லை.


    பிரியங்காவோ, ராகுலோ பெரிதாக செய்ய வருகிறார்கள் என்று எதிர்பார்க்கவிலை. நான் வலுவான தேசம் அமைய ஓட்டு போடுவேன்” என்றார்.

    மற்றொரு வியாபாரி ராஜேந்திர யாதவிடம் கேட்டபோது, அகிலேஷ் யாதவுக்குதான் எனது ஓட்டு என்று கூறினார்.

    சுக்லா கஞ்சை சேர்ந்த ராஜுமிஸ்ரா என்பவர் கூறும்போது, “இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக உள்ள அன்னுதான்டன் சிறப்பாக செயல்படக் கூடியவர். அவருக்கு ஓட்டு போடுவேன்” என்றார்.

    முதல்முறை வாக்காளரான அனுகிருத்திசிங் கூறும்போது, “பிரியங்காவின் வசீகரம் என்னை ஈர்த்துள்ளது. ஆனாலும் போதிய நம்பிக்கை ஏற்படவில்லை” என்று கூறினார்.

    சவுத் அகமது என்பவர் கூறும்போது, “பிரியங்கா அரசியல் களம் இறங்கி இருப்பது சிறப்பானது. ஆனாலும் காலதாமதமாக அவர் வந்து இருக்கிறார். முன்கூட்டியே அவர் இறங்கி இருந்தால் நன்றாக அமைந்திருக்கும்” என்றார்.

    கான்பூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சொனகர் அக்தர் கூறும்போது, “பிரியங்கா வருகை கட்சியில் திருப்பு முனையை ஏற்படுத்தும். தேர்தல் முடிவில் இங்கு காங்கிரஸ் பெற்றுள்ள வெற்றியை கண்டு அனைவரும் ஆச்சரியப்படப் போகிறார்கள்” என்றார். #priyanka #rahulgandhi #parliamentelection

    மதுரையில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று நடத்திய வாகன சோதனையில் 40 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. #Parliamentelection #LSPolls

    மதுரை:

    வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் வழங்கப்படுவதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    மதுரை மாவட்டத்தில் மேலூர் சுங்கச்சாவடியில் நேற்று வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.3.64 கோடி மதிப்பிலான தங்கம், வைரம் பறிமுதல் செய்யப்பட்டது.


    இதேபோல் திருமங்கலம் பகுதியில் ஏ.டி.எம்.களுக்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.1¼ கோடி பறமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை வாடிப்பட்டியில் 40 கிலோ தங்க நகைகளுடன் வந்த வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் சமயநல்லூர் பகுதியில் கைப்பற்றினர். அவை எங்கிருந்து வருகிறது? யாருக்கு கொண்டு வரப்பட்டது என்பது குறித்து விசாரணை நடக்கிறது.  #Parliamentelection #LSPolls

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தி.மு.க.வில் வாரிசுகளுக்கு வாய்ப்பு அளித்தது ஏன்? என்பது பற்றி தி.மு.க. நாளேடான முரசொலி விளக்கம் அளித்துள்ளது. #DMK

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தி.மு.க.வில் வாரிசுகளுக்கு வாய்ப்பு அளித்தது ஏன்? என்பது பற்றி தி.மு.க. நாளேடான முரசொலி விளக்கம் அளித்துள்ளது.

    இது தொடர்பாக அதில் வெளியாகி உள்ள கட்டுரை வருமாறு:-

    கழக வரலாற்றைஊன்றிக் கவனிப்பவர்களுக்கு அது தெரியும். பேரறிஞர் அண்ணா காலத்திலேயே நாவலர் இரா.நெடுஞ்செழியன் சட்டமன்ற வேட்பாளர், அவரது தம்பி இரா.செழியன் பாராளுமன்ற வேட்பாளர். பேராசிரியர் அன்பழகன் பாராளுமன்ற உறுப்பினர், அவரது இளவல் பேராசிரியர் அறிவழகன் சட்டமன்ற மேலவை உறுப்பினர்.

    அன்றைய கழக முன்னணித் தலைவர்களில் ஒருவரான ஏ.கோவிந்தசாமி மறைவுக்கு பின் அவரது தொகுதியில் அவரது மனைவியை வேட்பாளராக தேர்ந்தெடுத்து அறிவித்தார் அண்ணா.

    அண்ணா தென்சென்னை தொகுதியில் வெற்றிபெற்று பாராளுமன்றத்துக்கு சென்றார். ஆனால் தமிழக முதல்- அமைச்சராக பொறுப்பேற்க வேண்டிய நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

    அதனால் தென்சென்னை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அன்றைய பொதுப்பணித்துறை அமைச்சர் கலைஞரின் மருமகனான முரசொலி மாறனை அண்ணா தேர்ந்தெடுத்தார்.

    அண்ணாவின் மறைவுக்கு பின் அண்ணியாரை தலைவர் கலைஞர் சட்ட மன்ற மேலவை உறுப்பினராக்கினார்.

    இவை மட்டுமல்ல, கழக முன்னணி தலைவர் என்.வி. நடராசன் தமிழக அமைச்சராக இருந்தார். இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது அவரது துணைவியார் புவனேஸ்வரி அம்மாள் அதிலே பங்கேற்று கைக்குழந்தையுடன் சிறை சென்றார். அவரது மடியில் தவழ்ந்த கைக்குழந்தை தான் பிற்காலத்தில் கலைஞர் மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்த என்.வி.என்.சோமு.

    இப்படி பட்டியலை அடுக்கிக் கொண்டே போகலாம். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய மற்றொரு அம்சமும் உள்ளது.

    வாரிசுகள் என்பதற்காக மட்டும் அவர்களுக்கு வேட்பாளர் பட்டியலில் இடம் தரப்படுவதில்லை. அவர்கள் இந்த இயக்க வளர்ச்சிக்காக இயக்கத்துடன் இணைந்து பணியாற்றுவதால்தான், அதனுடன் தொடர்ந்து பயணிப்பதாலும்தான் அவர்கள் பரிசீலனைக்குள்ளாகிறார்கள்.

    பொன்முடியின் மகனுக்கு ‘சீட்’டா? துரைமுருகன் புதல்வருக்கு வாய்ப்பா? என்றெல்லாம் கேட்டு கழகத் தோழர்களை குழப்ப நினைப்பவர்களுக்கு ஒன்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.

    துரைமுருகனையும், பொன்முடியையும் வேட்பாளர்களாக தேர்ந்தெடுத்த போது “காலம் காலமாக கட்சிக்கு உழைத்தவர்கள் இருக்க இவர்களுக்கு சீட்டா” எனக் கேட்டு குழப்பம் விளைவிக்க முனைந்தவர்களும் உண்டு. துரைமுருகன், பொன்முடி போன்றோர் மகன்களாக பிறந்ததால் அவர்களுக்குரிய உரிமைகளை இழக்க வேண்டுமா? தந்தையுடன் சேர்ந்து இந்த இயக்கத்துக்கு ஆற்றிய பணிகள் புறந்தள்ளப்பட வேண்டுமா?

    பொன்முடி அமைச்சராக இருந்தபோது நடைபெற்ற கழக மாநாடுகளுக்கு விழுப்புரத்தில் இருந்து மகளிரை திரட்டி லாரிகளில் அவர்களை ஏற்றிக் கொண்டு, அதே லாரியின் முன்னால் அமர்ந்து தான் அமைச்சரின் மனைவி என்ற மமதையின்றி கோ‌ஷம் எழுப்பிக் கொண்டு வருபவர்தான் பொன்முடியின் துணைவியார்.

    விழுப்புரத்தில் இருந்து இளைஞர்களை திரட்டி தான் ஒரு மருத்துவர் என்று எண்ணிடாமல் தொண்ட ரோடு தொண்டராக பயணித்தவர்தான் இன்றைய கள்ளக்குறிச்சி வேட்பாளர்.

    தான் வெளிநாடு சென்று படித்தவன், எம்.பி.ஏ. பட்டதாரி என்ற தற்பெருமையின்றி கழகத் தோழர்களை தன் உறவினராக பாவித்து, அவர்கள் சுகதுக்கங்களில் பங்கேற்று கழக மேடைகளில் ஓரமாக நின்று தொண்டருக்கும் தொண்டராக விளங்குபவர் இன்றைய வேலூர் வேட்பாளர்.

    அடுத்து டாக்டர் கலாநிதி வீராசாமி. இவர் ஆற்காட்டாரின் வாரிசு மட்டுமல்ல, கழக மருத்துவர் அணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு கழகத்தோடு நீண்ட நெடுநாட்களாக பயணித்துக் கொண்டிருப்பவர். தொண்டர்களோடு தொண்டராக ஒன்றறக் கலந்தவர். ஆற்காட்டாரின் குடும்ப வாரிசாக மட்டுமின்றி கொள்கை வாரிசுகளில் ஒருவராக திகழ்பவர்.

    அதேபோல தமிழச்சி தங்கப்பாண்டியன். தென் மாவட்டங்களில் தென்னரசுவுடன் இணைந்து கழகம் வளர்த்த காவலர் தங்கப் பாண்டியனின் புதல்வி. பிறக்கும்போதே கழக குழந்தையாக பிறந்தவர். கழக பணிக்காக பேராசிரியர் பதவி துறந்து, கழக மாநாட்டில் பங்கேற்று உரையாற்றியவர். சிறந்த படிப்பாளி மட்டுமல்ல, படைப்பாளியும் கூட. இப்படி சிறப்புமிகு தேர்வாக வேட்பாளர் தேர்வுகள் அமைந்து விட்டன.

    தி.மு.கழகத்தை பொறுத்தவரை குடும்ப அரசியல் நடத்த தேவை இல்லை. ஏனென்றால் அதன் தலைவர்கள், தொண்டர்கள் குடும்பமே அரசியல் குடும்பம். அங்கே விளையாட்டு நடத்த நினைத்தால் ஆப்பசைத்த குரங்கு கதிதான் ஏற்படும்.

    இவ்வாறு கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. #DMK

    தேர்தல் பறக்கும் படையினர் இன்று நடத்திய வாகன சோதனையில் ரூ.3.64 கோடி மதிப்பிலான தங்கம்-வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது. #Parliamentelection #LSPolls

    மதுரை:

    17-வது பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. தமிழகத்தில் வருகிற 18-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இன்று வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தமிழகம் முழுவதும் அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    உரிய ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    மதுரை மாவட்டத்திலும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் தீவிர நடவடிக்கை காரணமாக நாள்தோறும் ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

    மதுரை மேலூர் அருகே உள்ள சிட்டம்பட்டி டோல்கேட் பகுதியில் மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் இன்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அதிகாலை 4.30 மணிக்கு கும்பகோணத்தில் இருந்து மதுரை நோக்கி வந்த கண்டெய்னர் வேனை மறித்து டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்ததையடுத்து சந்தேகம் அடைந்த அதிகாரிகள் கண்டெய்னரை திறந்து சோதனை செய்தனர்.

    அப்போது அதில், 8 கிலோ தங்கம், வைரம், வெள்ளி கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டது. இது குறித்து ஆவணங்கள் கேட்டபோது, டிரைவரிடம் எந்த பதிலும் இல்லை.

    இதையடுத்து அதிகாரிகள் கண்டெய்னருடன் தங்கம், வெள்ளி, வைரத்தை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

    தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான நடராஜன் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றப்பட்ட தங்கம், வெள்ளி, வைர கட்டிகளை ஆய்வு செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி, வைரத்தின் மதிப்பு ரூ.3.64 கோடி ஆகும்.

    இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் நடராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட பறக்கும் படை அதிகாரிகள் சிட்டம்பட்டி டோல்கேட் அருகில் இன்று அதிகாலை வாகன சோதனை செய்தபோது 8 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி, வைரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.3.64 கோடி ஆகும்.

    டிரைவரிடம் இருந்த ஆவணங்களை சோதனை செய்ததில் கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு செல்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் மதுரைக்கு ஏன் கொண்டு வரப்பட்டது? என தெரியவில்லை. இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரையில் தேர்தலை நியாயமாக நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

    கடந்த 24 மணி நேரத்தில் ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.4.74 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இதுவரை மதுரை மாவட்டத்தில் ரூ.62 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட் களுக்கு உரிய ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டால் அதனை உரியவரிடம் அளிப்பது குறித்து அதிகாரிகள் முடிவு செய்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிப்பதில்லை என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அறிவித்துள்ளது. #Parliamentelection

    ராமநாதபுரம்:

    தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் மாநிலச் செயலாளர் நெல்லை பைசல், ராமநாதபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொள்ளாட்சி பாலியல் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும். குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்படாததால் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலங்கள் பட்டியலில் தற்போது தமிழகமும் சேர்ந்துள்ளது.

    முழுக்க முழுக்க அரசியல் பின்னணியை கொண்டு செயல்பட்டுள்ள இந்த சம்பவத்தில் ஆளுங்கட்சியினர் சிலரின் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தமிழக அரசு இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது.

    பா.ஜனதா கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. பண மதிப்பிழப்பால் உள்நாட்டு சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. காவிரி பிரச்சினை உள்ளிட்ட தமிழக உரிமைக்கு பாதகமளிக்கும் வகையிலேயே மத்திய அரசு செயல்பட்டுள்ளது.

    நீட் தேர்வு உள்ளிட்டவற்றிலும் தமிழக மாணவ, மாணவிகளை பாதிக்கும் வகையிலேயே பா.ஜனதா அரசின் செயல்பாடு அமைந்திருந்தது. பா.ஜனதா ஆட்சியில் சிறுபான்மையினரை அச்சுறுத்தும் நிகழ்வுகளே நடந்துள்ளன.

    வருகின்ற பாராளுமன்ற பொது தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிப்பதில்லை என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #Parliamentelection

    தேர்தல் பறக்கும் படையினர் இன்று நடத்திய வாகன சோதனையில் தனியார் வங்கி பணம் ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. #LSpolls

    பூந்தமல்லி:

    பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது ஆக்சிஸ் வங்கிக்கு சொந்தமான வாகனம் ஒன்று வந்தது. அதை தடுத்து நிறுத்தி பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    அதில் ரூ.1 கோடியே 4 லட்சம் பணம் இருந்தது. இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    அப்போது ஊழியர்கள் கூறும்போது, “அடையாறு ஆக்சிஸ் வங்கியில் இருந்து இருங்காட்டுகோட்டை, ஸ்ரீபெரும்புதூர், வேலூர், காட்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள வங்கி கிளைகளுக்கு பணம் கொண்டு செல்லப்படுவதாக கூறினர்.

    மேலும் அதற்கான வங்கி ஆவணங்களையும் தேர்தல் அதிகாரிகளிடம் காண்பித்தனர். ஆனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள சமயத்தில் வங்கி பணம் கொண்டு செல்ல சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆனால் சிறப்பு அனுமதி கடிதம் இல்லாததால் வங்கி பணம் ரூ.1.04 கோடியை பறிமுதல் செய்தனர். பணம் கொண்டு செல்லப்பட்ட வாகனத்தை பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் ஆர்.டி.ஓ., தாசில்தார் ஆகியோர் ஆவணங்களை ஆய்வு செய்து பணத்தை பூந்தமல்லி கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து ஆக்சிஸ் வங்கிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வங்கி சார்பில் சிறப்பு அனுமதி பெற்று சான்றிதழ் கொடுத்ததும் பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. #LSpolls

    திருச்சி அருகே நடந்த ஜல்லிக்கட்டில் தேர்தல் விதிமுறையால் பரிசுகள் கிடைக்காமல் வீரர்கள் ஏமாற்றம் அடைந்தனர். #Jallikattu #Election

    லால்குடி:

    திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த அன்பில் கிராமத்தில் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

    இதில் திண்டுக்கல், மதுரை, அரியலூர், பெரம்பலூர், துறையூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி என பல்வேறு பகுதிகளில் இருந்து 564 காளைகள் கலந்து கொண்டன. 254 காளையர்கள் பங்கேற்று, சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கினர். காளைகள் முட்டியதில் 9 பேர் காயமடைந்தனர்.

    போட்டியில் வெற்றி பெறும் காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு கட்டில், பீரோ, சைக்கிள், மொபட், சில்வர் குடம், தங்க, வெள்ளி காசுகள் என்று சுமார் ரூ.5 லட்சத் துக்கு மேல் பரிசுகள் வழங்குவதற்கு விழாக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    ஆனால், தற்போது பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிகளின்படி ஜல்லிக்கட்டு போட்டியில் பரிசுகள் வழங்க கூடாது என்று தேர்தல் அதிகாரிகள் கட்டுப்பாடுகளை விதித்தனர்.

    இதனால், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்திய விழா குழுவினரால் பரிசுகள் வழங்க முடியவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். #Jallikattu #Election

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் பிரசாரத்தை மார்ச் 20-ம் தேதி திருவாரூரில் தொடங்க உள்ளார். #Parliamentelection #MKStalin

    சென்னை:

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

    மனுதாக்கல் செய்ய 26-ந் தேதி கடைசி நாளாகும். 27-ந்தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும்.

    29-ந்தேதி வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாளாகும். அன்று மாலை தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் மோதும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் யார்-யார்? என்ற முழு விவரம் தெரிந்து விடும்.

    தமிழ்நாட்டில் அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆகிய 4 கட்சிகளுக்கு இடையே நான்கு முனைப்போட்டி உருவாகியுள்ளது. ஆனால் பெரும்பாலான தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணிக்கும், தி.மு.க. கூட்டணிக்கும் இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது.

    இதை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் போட்டி போட்டு அடுத்தடுத்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டன. இதனால் அ.தி.மு.க., தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மகிழ்ச்சியும் சுறுசுறுப்பும் அடைந்துள்ளனர்.

    வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு இருப்பவர்கள், தங்களது மனுதாக்கலை இந்த வாரமே முடித்துவிட திட்டமிட்டுள்ளனர். 21-ந்தேதி பங்குனி உத்திரம் சிறந்த தினமாக இருப்பதால் அன்று நிறைய பேர் மனுத்தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது.

    மனுத்தாக்கலை முடித்து விட்டு பிரசாரம் செய்ய சுமார் 20 நாட்களே இருப்பதால் இப்போதே அதற்கான ஏற்பாடுகளும் மும்முரமாகியுள்ளன. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மற்ற தலைவர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு, முதல் ஆளாக சூறாவளி பிரசாரத்தை தொடங்க உள்ளார். நாளை (செவ்வாய்க்கிழமை) தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிடும் மு.க.ஸ்டாலின் உடனடியாக நாளை மறுநாளே (20-ந்தேதி) பிரசாரத்தை தொடங்குகிறார்.

     


    மு.க.ஸ்டாலின் இரண்டு கட்டங்களாக தேர்தல் பிரசாரத்தை நடத்த உள்ளார். முதல் கட்ட பிரசாரத்தை திருவாரூரில் 20-ந்தேதி தொடங்கும் அவர் ஏப்ரல் 6-ந்தேதி நிறைவு செய்கிறார். ஒருநாள் கூட இடைவெளியின்றி அவர் 18 நாட்கள் தீவிர பிரசாரம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த 18 நாட்களில் மு.க.ஸ்டாலின் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 28 பாராளுமன்றத் தொகுதிகளில் ஓட்டு வேட்டையாடுகிறார். அவரது முதல் கட்ட சுற்றுப்பயண விபரம் வருமாறு:-

    காலை 10 மணி- நாகை பாராளுமன்ற தொகுதி, திருவாரூர் சட்டமன்றத் தொகுதி மற்றும் மாபெரும் பிரசார பொதுக்கூட்டம்.

    மாலை 5 மணி- தஞ்சை பாராளுமன்ற தொகுதி, சட்டமன்ற தொகுதி மற்றும் தஞ்சை திலகர் திடலில் பிரசார பொதுக்கூட்டம்.

    மாலை 5 மணி- பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி, தாத்தையங்கார்பேட்டை ரோடு, முசிறியில் பொதுக்கூட்டம்.

    காலை 10 மணி- சேலம் பாராளுமன்ற தொகுதி, சேலம் கோட்டை மைதானத்தில் பொதுக்கூட்டம்.

    மாலை 5 மணி - தருமபுரி பாராளுமன்ற தொகுதி, பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதி மற்றும் ஒடசல்பட்டி கூட்ரோட்டில் பிரச்சார பொதுக்கூட்டம்.

    காலை 10 மணி - தர்மபுரி பாராளுமன்ற தொகுதி, அரூர் சட்டமன்றத் தொகுதி மற்றும் அரூர் அண்ணா சிலை அருகில் பிரசார பொதுக்கூட்டம்.

    மாலை 5 மணி- திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் பிரசார பொதுக்கூட்டம்.

    மாலை 5 மணி - வட சென்னை பாராளுமன்ற தொகுதி, பெரம்பூர் சட்ட மன்றத் தொகுதி, இடம்: பெரம்பூர்.

    காலை 10 மணி- காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதி, திருப்போரூர் சட்ட மன்ற தொகுதி, இடம்- திருக்குழுக்குன்றம்.

    மாலை 5 மணி - திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதி, பூந்தமல்லி சட்ட மன்ற தொகுதி, இடம்-ஆவடி.

    மாலை 5 மணி - திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி, நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி.

    காலை 10 மணி- தேனி பாராளுமன்ற தொகுதி, பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி.

    மாலை 5 மணி - தேனி பாராளுமன்ற தொகுதி, ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி.

    காலை 10 மணி - மதுரை பாராளுமன்ற தொகுதி, மாலை 5 மணி - விருதுநகர் பாராளுமன்ற தொகுதி, சாத்தூர் சட்டமன்ற தொகுதி.

    காலை 10 மணி - சிவகங்கை பாராளுமன்றத் தொகுதி, மானாமதுரை சட்டமன்றத் தொகுதி.

    மாலை 5 மணி- ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி, பரமக்குடி சட்டமன்றத் தொகுதி.

    மாலை 5 மணி- கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி, ஓசூர் சட்டமன்ற தொகுதி.

    காலை 10 மணி - வேலூர் பாராளுமன்ற தொகுதி, ஆம்பூர் சட்டமன்ற தொகுதி.

    மாலை 5 மணி- வேலூர் பாராளுமன்ற தொகுதி, குடியாத்தம் சட்டமன்ற தொகுதி.

    அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந்தேதி காலை 10 மணி - அரக்கோணம் பாராளுமன்ற தெகுதி, சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி.

    மாலை 5 மணி- தென் சென்னை பாராளுமன்ற தொகுதி.

    மாலை 4 மணி- நீலகிரி பாராளுமன்ற தொகுதி.

    காலை 10 மணி - திருப்பூர் பாராளுமன்ற தொகுதி.

    மாலை 5 மணி - கோவை பாராளுமன்ற தொகுதி.

    காலை 10 மணி - பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி.

    மாலை 5 மணி - ஈரோடு பாராளுமன்ற தொகுதி.

    காலை 10 மணி - கரூர் பாராளுமன்ற தொகுதி.

    மாலை 5 மணி - கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி.

    காலை 10 மணி - விழுப்புரம் பாராளுமன்றத் தொகுதி.

    மாலை 5 மணி - ஆரணி பாராளுமன்றத் தொகுதி.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயண அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

    மு.க.ஸ்டாலின் 2-வது கட்ட பிரசாரத்தை 7-ந்தேதியே தொடங்கி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் 16-ந்தேதி நிறைவுபெறுகிறது. எனவே மு.க.ஸ்டாலினின் 2-வது கட்ட பிரசாரத்துக்கு 7-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை 10 நாட்களே அவகாசம் உள்ளது.

    இந்த 10 நாட்களில் மீத முள்ள பாராளுமன்ற, சட்டசபை இடைத்தேர்தல் தொகுதிகளில் ஆதரவு திரட்ட மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். #Parliamentelection #MKStalin

    ×