search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல்"

    தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் கமி‌ஷன் பேர்வழியாக செயல்படுகிறார் என்று நடிகை குஷ்பு குற்றம் சாட்டியுள்ளார். #Kushboo #ChandrashekarRao

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் வருகிற டிசம்பர் மாதம் 7-ந்தேதி நடக்கிறது. அங்கு தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது.

    சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிமாக உள்ளது. காங்கிரஸ் கட்சி, தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்டு உள்பட 4 கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது.

    தெலுங்கானா சட்டசபை தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு ஐதராபாத் சென்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சந்திரசேகரராவ் தன்னை நவாப் (ராஜா ) என்று நினைத்து செயல்படுகிறார். பல 100 கோடி மதிப்பில் வீட்டை கட்டி உள்ளார். அங்கு ஏராளமான சொகுசு கார்கள் உள்ளன. அவரும், அவரது கட்சியும் கமி‌ஷன் மட்டுமே வாங்குவதில் ஆர்வமாக உள்ளனர்.

     


    நாட்டிலேயே தலைமை செயலகத்துக்கு செல்லாமல் பண்ணை வீட்டிலேயே இருக்கும் ஒரே முதல்வர் சந்திரசேகரராவ்தான்.

    கடந்த தேர்தலில் சந்திர சேகரராவ் அளித்த வாக்குறுதிகளில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. அவற்றை எல்லாம் குப்பை தொட்டியில் போட்டு விட்டார். அவரது அரசாங்கம் நியாயமற்ற நெறிமுறைகளை கடைபிடித்தது.

    நக்சலைட்டு விவகாரத்தில் சரியாக கையாளவில்லை. போலி என்கவுண்டர் நடத்தியதற்கு சந்திர சேகரராவ் அரசாங்கமே பொறுப்பு. தெலுங்கானாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.

    சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 11 பெண்களுக்கு போட்டியிட சீட் கொடுத்துள்ளது. ஆனால் சந்திரசேகராவ் கட்சி 3 பெண்களுக்கு மட்டுமே சீட்டு கொடுத்துள்ளது. அவரது அரசு பெண்களுக்கு எதிராக உள்ளது.

    பெண்கள் வளர்ச்சி என்ற பெயரில் அவரது மகள் கவிதா வளர்ச்சி அடையவே திட்டங்களை கொண்டு வருகிறார். பாதுகாமா சரீஸ் என்ற பெயரில் ரூ.220 கோடி கொள்ளையடித்து உள்ளனர். ஒரு பெண் அமைச்சரை கூட நியமிக்காததற்கு சந்திர சேகரராவ் அரசு வெட்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Kushboo #ChandrashekarRao

    எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் ரஜினியை எதிர்த்து போட்டியிடுவேன் என்று டைரக்டர் கவுதமன் தெரிவித்துள்ளார். #Gowthaman #Rajinikanth
    சென்னை:

    சினிமா டைரக்டர் கவுதமன் அரசியல் பிரவேசம் செய்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் இன்று அவர் அளித்த பேட்டி வருமாறு:-

    தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறது என்பதற்காக யார்-யாரோ வருவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. வெற்றிடத்தை நாங்கள் நிரப்புவோம். இதற்காக புதிய அரசியல் கட்சியை தான் தொடங்க உள்ளேன்.

    தை பொங்கலுக்கு பிறகு நடைபெறும் கட்சியின் மாநாட்டில் பெயரும், கொடியும், கொள்கைகளும் அறிவிக்கப்படும்.
    நடிகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் மதிப்புமிக்க கலைஞர்கள். ஆனால் அவர்களுக்கு இந்த மண்ணை ஆள தகுதி இல்லை. விஸ்வரூபம் படம் வந்தபோது நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று கூறிய கமல் இந்த நாட்டை எப்படி காப்பாற்றுவார்.

    ரஜினிகாந்தையும் எப்போதும் ஏற்க முடியாது. அவர் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன்.

    தொடர்ந்து இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. வந்தாரை வாழவும், ஆளவும் வைத்த தமிழினம் இழந்த உரிமைகளை மீட்டெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது. எந்த வகையிலும் சம்பந்தமில்லாதவர்கள் எங்களை ஆண்டதும், ஆள நினைப்பதும் இனி ஒரு போதும் நடக்காது.

    இவ்வாறு கவுதமன் கூறினார்.  #Gowthaman #Rajinikanth
    தன் மீதான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #MaFoiPandiarajan #HighCourt
    சென்னை:

    கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில், அதிமுக சார்பில் மாஃபா பாண்டியராஜனும் திமுக சார்பில் நாசரும் ஆவடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டனர்.

    அந்த தேர்தலில் மாஃபா பாண்டியராஜன் வெற்றி பெற்றார். இந்த வெற்றி எதிர்த்து திமுக வேட்பாளர் நாசர் வழக்கு தொடர்ந்திருந்தார்.



    இந்த வழக்கை தள்ளுபடி செய்ய கோரி மாஃபா பாண்டியராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதத்திற்கு பின்னர் மாஃபா பாண்டியராஜன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #MaFoiPandiarajan #HighCourt
    சத்தீஸ்கர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 42 கோடீசுவரர்கள் வெற்றி பெறுவதற்காக அதிக அளவிலான பணத்தை செலவு செய்கின்றனர். #BJP #Congress

    புதுடெல்லி:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் வருகிற 12-ந்தேதியும், 20-ந்தேதியும் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

    90 எம்.எல்.ஏ.க்களை கொண்ட சத்தீஸ்கர் சட்ட சபையில் அடுத்து ஆட்சியை பிடிக்கப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    சத்தீஸ்கர் தேர்தலில் பா.ஜனதா, காங்கிரஸ், மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ்-அஜீத்ஜோகி கூட்டணி இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. முதல் கட்ட தேர்தல் நடக்கும் தொகுதிகளில் 187 பேர் களத்தில் உள்ளனர்.

    இவர்கள் பின்னணி பற்றி ஜனநாயக சீர்திருத்த கழகம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளது.

     


    வேட்பாளர்களில் பெரும் பாலானவர்கள், வயதானவர்கள் என்று தெரிய வந்துள்ளது. 20 சதவீதம்பேர் தான் இளைஞர்கள் என்று புள்ளி விபரம் மூலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    14 பெண் வேட்பாளர்கள் 60 வயதை கடந்தவர்கள் என்று தெரிகிறது. வேட்பாளர்களில் கணிசமானவர்கள் மீது கிரிமினல் குற்ற வழக்குகள் இருப்பது ஆவணங்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

    மொத்த வேட்பாளர்களில் 42 பேர் மிகப்பெரிய கோடீசுவரர்கள் என்று தெரிய வந்துள்ளது. இவர்களில் 13 பேர் பா.ஜனதாவை சேர்ந்தவர்கள். 13 பேர் காங்கிரசை சேர்ந்தவர்கள். 4 பேர் அஜீத்ஜோகி கட்சியை சேர்ந்தவர்கள். ஒருவர் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்தவர் ஆவார்.

    66 சுயேட்சை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்கள் அனைவரும் ரூ.1 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளனர். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இவர்கள் அனைவரும் பணத்தை அள்ளி வீசி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். #BJP #Congress

    மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் 35 பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் போட்டியிட அனுமதி அளிக்கப்படவில்லை. #BJP #MadhyaPradeshelection

    புதுடெல்லி:

    மத்தியபிரதேச மாநிலத்தில் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது.

    230 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்துக்கு வருகிற 28-ந்தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது.

    2003-ம் ஆண்டில் இருந்து பா.ஜனதா மத்தியபிரதேசத்தில் ஆட்சி செய்து வருகிறது. அந்த கட்சி தொடர்ந்து ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் ஆர்வத்தில் உள்ளது. 15 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு ஆட்சியை கைப்பற்றும் வேட்கையில் காங்கிரஸ் உள்ளது.

    இந்த நிலையில் பா.ஜனதா தனது முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. 177 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

     


    தற்போதைய எம்.எல்.ஏ.க் கள் 35 பேருக்கு டிக்கெட் கொடுக்காமல் பா.ஜனதா அதிரடி முடிவை எடுத்தது.

    ஹர்ஷ்சிங், கவுரிசங்கர் உள்ளிட்ட 3 மந்திரிகளுக்கும் கட்சி மேலிடம் டிக்கெட் கொடுக்கவில்லை. அதே நேரத்தில் நீக்கப்பட்ட 2 மந்திரிகளுக்கு பதிலாக அவர்களது மகன்களுக்கு சீட் வழங்கி உள்ளது.

    பா.ஜனதா எம்.பி.க்களாக இருக்கும் மனோகர்சிங் உந்த்வால், நாகேந்திரசிங் ஆகிய இருவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

    2-வது கட்ட வேட்பாளர் பட்டியலிலும் சில எம்.எல்.ஏ.க்கள் நீக்கப்படுவார்கள் என்று பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. #BJP #MadhyaPradeshelection

    தேர்தலில் போட்டியிடவிடாமல் தடுத்தால் சுப்ரீம்கோர்ட்டில் தடை உத்தரவு பெறுவோம் என்று தங்க தமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #ThangaTamilSelvan #ADMK

    சென்னை:

    தினகரன் ஆதரவாளர்கள் 18 பேரின் எம்.எல்.ஏ. பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கோர்ட்டு உறுதி செய்ததைத் தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் உள்ள அவர்களது அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டன.

    இதையடுத்து தங்க தமிழ்ச் செல்வன் தனது அறையில் இருந்த கோப்புகள், ஆவணங்களை எடுத்துச் செல்ல வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எங்கள் அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது பழி வாங்கும் நடவடிக்கை. சிறிது அவகாசம் கொடுத்து இருக்கலாம். தகுதி நீக்கம் செய்யப்பட்ட நாளில்இருந்து வாடகை பாக்கி செலுத்தச் சொல்லி உள்ளனர்.

    தகுதி நீக்க வழக்கில் மேல்முறையீடு செய்தால் நாங்கள்தான் வெற்றி பெறுவோம். இருப்பினும் மேல் முறையீடு செய்வதில்லை, தேர்தலை சந்திப்பது என்று முடிவு எடுத்துள்ளோம். வரும் 9-ந்தேதி பெங்களூர் சிறையில் சசிகலாவை சந்தித்து இதுபற்றி ஆலோசனை நடத்துவோம்.


    18 பேரும் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவோம். நாங்கள் போட்டியிடுவதற்கு தொகுதியின் தேர்தல் அதிகாரி மூலம் கலெக்டர்கள் தடை விதிக்க கூடும் என்பதால் நாங்கள் முன் கூட்டியே இடைத்தேர்தலில் போட்டியிட தடைஇல்லை என சுப்ரீம்கோர்ட்டில் உத்தரவு பெறுவோம்.

    18 தொகுதிகள் மட்டுமல்லாமல் திருவாரூர், திருப்பரங்குன்றம் உள்பட 20 தொகுதிகளிலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம். தோல்வி பயத்தில் இருக்கும் ஆட்சியாளர்களுக்கு தேர்தல் நடத்த விருப்பம் இல்லை. எனவே பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்துதான் சட்டசபை இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது. தேர்தலில் எங்களது பிரதான எதிரி தி.மு.க. அடுத்த எதிரி அ.தி.மு.க.

    பசும்பொன்னில் தேவர் குருபூஜையில் மரியாதை செலுத்த டி.டி.வி.தினகரன் சென்றபோது 7 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் திரளாக கூடினர். அப்போது மக்கள்தான் அ.தி.மு.க. பேனரை கிழித்தனர். எங்கள் கட்சியினர் கிழிக்கவில்லை. ஆட்சியின் மீதுள்ள வெறுப்பில் மக்கள் இவ்வாறு செய்துள்ளனர். #ThangaTamilSelvan #ADMK

    என்னை சந்திக்க வரும்போது பொன்னாடைகள், பூங்கொத்துகள் தருவதை தவிர்த்து அதற்கு பதிலாக கட்சிக்கு தேர்தல் நிதி வழங்குங்கள் என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். #thirunavukkarasar #congress #election

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் பிற்பட்டோர் பிரிவு மாநில தலைவராக டி.ஏ.நவீன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான பதவி ஏற்பு விழா சத்தியமூர்த்திபவன் மைதானத்தில் நடந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பிற்பட் டோர் பிரிவின் மேலிட பொறுப்பாளர் ரோட்டாய் போசையா ஆகியோர் பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.

    பின்னர் திருநாவுக்கரசர் கூறும்போது, “ஒவ்வொரு பிரிவினரும் கட்சியை வலுப்படுத்தவும், வருகிற தேர்தலில் ராகுல்காந்தியை பிரதமராக்க அனைவரும் முழு மூச்சுடன் பணியாற்ற வேண்டும். மக்கள் விரோத பா.ஜனதா ஆட்சியை அகற்ற எல்லோரும் தயாராகி விட்டனர். மத்திய-மாநில அரசுகளின் மக்கள் விரோத செயல்பாடுகளை மக்களிடம் காங்கிரசார் கொண்டு சேர்க்க வேண்டும்.

    தேர்தலுக்கு கட்சி தயாராகி வருகிறது. இதுபோன்ற நிகழ்ச்சிகளிலும், என்னை சந்திக்க வரும்போது பொன்னாடைகள், பூங்கொத்துகள் தருவதை தவிர்த்து விடுங்கள். அதற்கு பதிலாக கட்சிக்கு தேர்தல் நிதி வழங்குங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் குமரி அனந்தன், சிரஞ்சீவி, ஊர்வசி அமிர்தராஜ், கஜநாதன், எம்.எஸ்.திரவியம், பி.வி. தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #thirunavukkarasar  #congress #election

    தெலுங்கானாவில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த ஆந்திர போலீசார் 6 பேர் கைது செய்யப்பட்டனர். #TelanganaPolls #ECI

    நகரி:

    தெலுங்கானா மாநிலத்தில் வருகிற டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையடுத்து அங்கு பிரசாரம் நடந்து வருகிறது.

    ஆளுங்கட்சியான தெலுங்கானா ராஷ்ட்டீரிய சமிதி, தெலுங்கு தேசம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தெலுங்கு தேசம் கட்சியும், காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

    இந்த நிலையில் ஜெகீத் யாலா மாவட்டம் தர்மபுரி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக 3 பேரை தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதே போல மஞ்கீர்யாலா தொகுதியிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக 3 பேரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

     


    விசாரணையில் அவர்கள் 6 பேரும் ஆந்திர போலீஸ்காரர்களான நாராயண ரெட்டி, மதுபாபு, வெங்க டேஷ்வரராவ், ராமகிருஷ்ண ரெட்டி, ராம்பாபுஎன்பது தெரிய வந்தது. அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    இதுபற்றி முதல்-மந்திரி சந்திரசேகரராவ் மகனும், மந்திரியுமான தாரகராமராவ் கூறும் போது, தெலுங்கானா சட்டசபை தேர்தலில் ஆந்திர போலீசார் மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்கள். ஆந்திர போலீசாரின் தலைமை அலுவலகம் ஐதராபாத்தில் உள்ளது. அங்கு செல்லாமல் தெலுங்கானா மாநில மைய பகுதியில் உள்ள தொகுதிகளில் ஆந்திர போலீசாருக்கு என்ன வேலை இருக்கிறது என்றார். #TelanganaPolls #ECI

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் தேர்தலில் நிற்க தடை இல்லை என்று முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்துள்ளார். #18MLAsDisqualification #TTVDhinakaran

    சென்னை:

    18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு சரிதான் என்று ஐகோர்ட்டு நீதிபதி சத்திய நாராயணன் நேற்று தீர்ப்பு கூறி இருந்தார்.

    இந்த தீர்ப்பு மூலம் தகுதி இழப்புக்கு உள்ளான 18 எம்.எல்.ஏ.க்களும் தேர்தலில் மீண்டும் போட்டியிட முடியுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:-

     


    எம்.எல்.ஏ.க்களை எந்தெந்த குற்றங்களின் கீழ் தகுதி நீக்கம் செய்ய முடியும் என்பதை அரசியலமைப்பு சாசனத்தின் 191 (1) (2) உட்பிரிவு கூறுகிறது.

    ஆனால் இந்த 18 எம்.எல். ஏ.க்களுக்கு நேரிட்டுள்ள நிலையை ஆராய்ந்தால், அவர்களை அடுத்தடுத்த தேர்தலில் போட்டியிட தடை செய்வதற்கான நேரடி சட்டங்களோ, சட்டப்பிரிவுகளோ இல்லை என்று தான் கூறவேண்டும்.

    மேலும் இந்தியாவில் இதுபோன்ற நிலைக்குள்ளான எம்.எல்.ஏ.க்கள் யாரையும் தேர்தலில் போட்டியிட தகுதி இழப்புக்கு ஆளாக்கிய நிகழ்வு இதுவரை நடக்கவில்லை. எனவே இதில் விவாதங்கள் எழும்ப வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவிடம் கேட்டபோது, ‘‘அந்த 18 எம்.எல்.ஏ.க்களுக்கும் அடுத்த தேர்தல்களில் போட்டியிட தடை விதிக்கக்கூடிய நேரடி சட்டங்கள் கிடையாது. எனவே அவர்கள் சட்டமன்றம் உள்பட எந்த தேர்தலிலும் போட்டியிடமுடியும்’’ என்று தெரிவித்தார். மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை செயலாளர் ஒருவரும் இதே கருத்தையே கூறினார். #18MLAsDisqualification #TTVDhinakaran

    எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் என்று அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் ராஜகண்ணப்பன் பேசினார்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூரில் அ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் அங்குள்ள அண்ணாசிலை அருகே நடைபெற்றது. சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். சிவகங்கை, ராமநாதபுரம் ஆவின் சேர்மன் அசோகன், ஒன்றியச் செயலாளர் ராமலிங்கம், துணைச் செயலாளர் முருகேசன், முன்னாள் ஒன்றியக்குழுத்தலைவர் கரு.சிதம்பரம், பேரவை வெற்றிச் செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், தற்போதைய அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான ராஜகண்ணப்பன் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- 1991-96-ல் என்னுடைய அரசியல் வாழ்க்கையில் அமைச்சர், கட்சியின் பொருளாளர் என பெரிய பொறுப்புகளை வழங்கியது திருப்பத்தூர் தொகுதி. உள்ளாட்சி தேர்தலை நாம் நடத்தவில்லை என்பது உண்மை. காரணம் அன்று கட்சியில் சில பிரச்சினைகள் வந்தது, இன்றைக்கு முடிந்துவிட்டது. வருகிற பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெறும்.

    12 நாடுகளில் சொத்துக்கள் வாங்கிய நபர்கள் ப.சிதம்பரமும், அவரது மகனும் தான் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது. பா.ஜ.க.வுடன் எங்களுக்கு உறவும் கிடையாது. கூட்டணியும் கிடையாது. காங்கிரஸ் கட்சிக்கு ஆட்களோ, தொண்டர்களோ கிடையாது. தற்போது காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக, பல்வேறு கட்சிகளுக்கு சென்று வந்த திருநாவுக்கரசார் இருக்கிறார். ஆனால் அந்த கட்சியில் 9 தலைவர்கள் உள்ளனர்.

    அ.தி.மு.க.வில் யாரும் தலைவர்கள் கிடையாது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அமைச்சர்கள், நான், மாவட்ட செயலாளர்கள் யாராக இருந்தாலும் அனைவரும் தொண்டர்கள் தான். சில அதிகாரிகள் செய்கின்ற தவறுகளால் அ.தி.மு.க. ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படலாம். எந்த தேர்தல் வந்தாலும், அ.தி.மு.க. வெற்றியை பெறும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் திரைப்பட நடிகர் சிங்கமுத்து, நெற்குப்பை முன்னாள் பேரூராட்சித் தலைவர் சஞ்சீவி, முன்னாள் நகர துணைச் செயலாளர் பிரேம்குமார், முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் சின்னையா அம்பலம் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகரச் செயலாளர் இப்ராம்ஷா நன்றி கூறினார்.
    நடிகர் ரஜினியால் ஒரு வார்டில் கூட வெற்றி பெற முடியாது என்று தனியரசு எம்.எல்.ஏ கூறியுள்ளார். #Rajinikanth

    ஈரோடு:

    ஈரோட்டில் ஆதி தமிழர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடந்த கூட்டத்தில் கொங்கு இளைஞர் பேரவை தலைவரும் எம்எல்ஏவுமான தனியரசு கலந்து கொண்டார்.

    பின்னர் தனியரசு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக கட்சிக்குள்ளேயே மாறுபட்ட சூழல் நிலவிவருகிறது. தற்போது டிடிவி தினகரன் குறிப்பிட்ட எம்எல்ஏக்களை வைத்துக்கொண்டு அரசுக்கு நெருக்கடியையும் ,சங்கடத்தையும், தடுமாற்றத்தையும் கொடுத்து வருகிறார். இதை டிடிவி தினகரன் தவிர்க்க வேண்டும். ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி உடன் இணைந்ததுபோல் டிடிவியும் இணைய வேண்டும்.


    சபரிமலை விவகாரத்தை வைத்து கொண்டு அதில் கட்சியை உருவாக்கி மாநில முதல்வராக ஆசைப்படுகிறார் நடிகர் ரஜினிகாந்த் இதில் அவர் உச்சநீதிமன்ற தீர்ப்பை அனுமதிப்பதாகவும் அதே சமயத்தில் ஐதீகம் மத சடங்குகளில் நீதிமன்றம் தலையிடக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார் .

    இந்த கருத்து முரண்பட்டதாக உள்ளது இதன் மூலம் ரஜினி ஒரு குழப்பமான மனநிலையில் உள்ளார் என்பது தெளிவாகிறது. ரஜினியை அரசியலிலிருந்து தமிழ் மக்கள் நிராகரிப்பார்கள். அவரை ஏற்க மாட்டார்கள். ரஜினி கட்சி தொடங்கினாலும் தொடங்காவிட்டாலும் அவரை ஒரு அரசியல் தலைவராக மக்கள் ஏற்க மாட்டார்கள். நடிகர் ரஜினியால் ஒரு வார்டில் கூட வெற்றி பெற முடியாது.

    இவர் அவர் கூறினார். #Rajinikanth

    தேர்தலை சந்திக்க அதிமுக பயப்படுகிறது. உள்ளாட்சி தேர்தலை பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு இந்த அரசு நடத்துமா? என்பது சந்தேகம் தான் என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #Thirunavukkarasar #ADMK
    தென்காசி :

    நெல்லை மாவட்டம் குற்றாலத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதையொட்டி தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில், பூத் கமிட்டி அமைத்தல், வாக்காளர்கள் பட்டியல் சரிபார்த்தல் உள்ளிட்ட கட்சி பணிகளை தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறோம்.

    திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு தற்போது பிற மாநிலங்களில் நடைபெறும் தேர்தலையொட்டி தேர்தல் நடத்திருக்க வேண்டும். இந்த 2 தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. பயப்படுகிறது. அதனால் வராத மழையையும், புயலையும் காரணம் காட்டி தேர்தலை ஒத்தி வைத்துள்ளது. 2 தொகுதிகளுக்கும் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும்.



    உள்ளாட்சி தேர்தலை பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு இந்த அரசு நடத்துமா? என்பது சந்தேகம் தான். கோர்ட்டு வலியுறுத்தியும் கூட தேர்தலை தள்ளிவைத்து கொண்டே இருக்கிறார்கள். 18 எம்.எல்.ஏ.க்களின் வழக்கு வாதங்கள் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு விரைவில் வரும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த தீர்ப்பு வந்த பிறகு தமிழகத்தில் அரசியல் ரீதியான மாற்றங்கள் வர வாய்ப்பு உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் நடைபெற வாய்ப்பு உள்ளது. கமல்ஹாசன் மற்றும் அவருடைய கட்சி குறித்து நான் சொல்லாத கருத்துக்களை வைத்து சில ஊடகங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகிறது, அது தவறு. தி.மு.க.வில் இருந்து காங்கிரஸ் விலக வேண்டும் என்பது கமலின் கருத்து ஆகும்.

    சபரிமலை கோவிலுக்கு பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதனை பின்பற்ற வேண்டும் என்ற முறையில் அங்குள்ள அரசு நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறது. இந்த தீர்ப்பால் யாராவது பாதிக்கப்பட்டு இருந்தால் கோவில் நிர்வாகம், ஆன்மிகவாதிகள் தரப்பில் நீதிமன்றத்தில் முறையீடு செய்து பரிகாரம் தேட வேண்டும். அதைவிட்டு தீர்ப்பு வழங்கிய பிறகு பாரதீய ஜனதா மற்றும் அவர்களுடைய ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. சட்டத்திற்கு புறம்பாக யாரும் செயல்பட முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #Thirunavukkarasar #ADMK
    ×