search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 100684"

    தேனியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் இன்று உரையாற்றிய ராகுல் காந்தி தமிழ்நாட்டுக்கு வரும் போதெல்லாம் ஒரு மாதத்துக்கு தேவையான புத்துணர்வு பெறுவதாக குறிப்பிட்டார். #feelingenergetic #RahulGandhi #RahulGandhiinTN
    தேனி:

    மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேனி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்  ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று மாலை பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-  

    காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தனிமனிதனின் அறிக்கை அல்ல, எங்களது தேர்தல் அறிக்கை நாட்டு மக்களின் ஒருமித்த குரல். எங்கள் தேர்தல் அறிக்கையில் அனைத்து தரப்பு மக்களின் குரல் ஒலிக்கும். மக்களின் விருப்பத்தை உள்வாங்கி காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளது.

    காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நீட் தேர்வு குறித்து குறிப்பிட்டோம். நீட் தேர்வு வேண்டுமா? வேண்டாமா? என்பதை அந்தந்த மாநிலங்களே முடிவெடுத்து கொள்ளலாம். தமிழக மக்கள் விரும்பாததை எந்த சக்தியாலும் செயல்படுத்த முடியாது.

    டெல்லியில் இருந்துகொண்டு தமிழகத்தை நிர்வகிக்க பிரதமர் மோடி விரும்புகிறார். மோடி வெறுப்பு அரசியலை வளர்த்து வருகிறார். வெறுப்பாலும் கோபத்தாலும் தமிழக மக்களை பணியவைக்க முடியாது. வெறுப்பு அரசியலை வீழ்த்துவோம். தமிழகமக்களை அவர் தொடர்ந்து அவமதிப்பதை பார்த்து கொண்டு இருக்க முடியாது. தமிழ்மொழியின் தொன்மை அவருக்கு தெரியாது. அதை படித்தாவது அவர் தமிழகத்தை புரிந்து கொள்வார் என நினைக்கிறேன்.

    தமிழக விவசாயிகள் டெல்லியில் போராடியதை நான் நேரடியாக பார்த்தேன். உங்கள் வேதனையிலும் சோதனையிலும் நாங்கள் பங்கேற்போம். அவர்களை நேரில் சென்று தழுவிக்கொண்டேன். விவசாயத்திற்கு தனி பட்ஜெட்  சமர்ப்பிப்போம்.

    ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் கொடுக்கும்போது இந்திய பொருளாதாரம் மேலும் வலுவடையும்.

    வங்கிகளில் பல கோடிகள் கடனாக வாங்கி திருப்பி செலுத்தாத அனில் அம்பானியை சுதந்திரமாக நடமாட விட்டுள்ள மோடியின் அரசு 25 அல்லது 30 ஆயிரம் ரூபாய் கடன் திருப்பி செலுத்தாக விவசாயியை மட்டும் தேடிப்பிடித்து சிறையில் அடைப்பது ஏன்?

    கடனை திருப்பி கொடுக்காத எந்த விவசாயியும் சிறை செல்லும் நிலை மத்திய காங்கிரஸ் ஆட்சியில் வராது.

    பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தொழில்துறை சீரழிந்து  விட்டது. வேலையில்லா திண்டாட்டத்தால் இளைஞர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழ் இளைஞர்கள் சுயதொழில் தொடங்க விரும்புகிறார்கள். ஆனால் இளைஞர்கள் தொழில் தொடங்க பல அலுவலகம் செல்ல வேண்டி உள்ளது. எந்த  தகுதியும் இல்லாமல் அனில் அம்பானி ராணுவ ஒப்பந்தம் பெறுகிறார். காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகு இளைஞர்கள் தொழில் தொடங்க எந்த லஞ்சமும் கொடுக்க வேண்டியது இல்லை.

    நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசுத்துறைகளில் காலியாக உள்ள 22 லட்சம் பணியிடங்களை நிரப்புவோம்.  ஊராட்சி பணியிடங்களில் 10 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவையும் படிப்படியாக நிரப்பப்படும்.

    நமது கூட்டணி மிகப்பெரிய காரியங்களை செய்து முடிக்க உள்ளது. நமது  யுத்தம் 2 கருத்தியல்களுக்கு இடையிலான யுத்தம். நான் பொய் சொல்வதற்காக இங்கு வரவில்லை. ஒவ்வொரு முறை தமிழ்நாட்டுக்கு வரும் போதெல்லாம் நான் புத்துணர்வு பெற்றதாக உணர்கிறேன். அடுத்த ஒரு மாதத்துக்கு தேவையான புத்துணர்வு எனக்கு கிடைக்கிறது.

    தமிழ்நாட்டுக்கும் எனக்கும் உள்ள பந்தம் இதயப்பூர்வமானது. எனக்கு மகிழ்ச்சியான வரவேற்பை அளித்து எனது பேச்சை கேட்பதற்காக இங்கு திரளாக வந்துள்ள உங்கள் அத்தனை பேருக்கும் நன்றி தெரிவித்து விடைபெறுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #feelingenergetic #RahulGandhi #RahulGandhiinTN  
    தேனியில் தேர்தல் பிரசாரம் செய்வதற்கு ராகுல்காந்தி இன்று வருகிறார். இந்நிலையில், அவர் பிரசாரம் செய்ய அமைக்கப்பட்டு இருந்த பொதுக்கூட்ட மேடை சரிந்து விழுந்தது. இதில் 2 தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். #LokSabhaElections2019 #RahulGandhi
    தேனி:

    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக இன்று (வெள்ளிக்கிழமை) தேனி வருகிறார். அவர் கலந்து கொள்ளும் பிரசார பொதுக் கூட்டம் தேனி அன்னஞ்சி விலக்கு பகுதியில் நடக்கிறது. இதற்காக அங்கு பிரமாண்ட மேடை, ஹெலிகாப்டர் இறங்குதளம் போன்றவை அமைக்கும் பணி நடந்தது.



    ராகுல்காந்தி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் அமருவதற் காக 70 அடி நீளம், 30 அடி அகலத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு வந்தது. இதற்காக 20 அடி உயரத்தில் மேற்கூரை பந்தல் அமைக்கும் பணி நடந்தது.

    இந்த பணி நேற்று மாலையில் நடந்து கொண்டு இருந்தபோது, திடீரென மேடை சரிந்தது. மேலும் மேற்கூரைக்காக இரும்பு குழாய்கள் பொருத்தப்பட்டு இருந்த நிலையில் அவையும் சரிந்து விழுந்தன. அப்போது அங்கு தொழிலாளர்கள் சிலர் வேலை பார்த்துக் கொண்டு இருந்தனர். கம்பிகள் சரிந்து விழுந்தபோது மேடையின் மீது 2 தொழிலாளர்கள் நின்றனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த தொழிலாளர்கள் 2 பேரும் காயமின்றி உயிர் தப்பினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மேடை சரிந்து விழுந்ததற்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்தனர். மேலும் மத்திய பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளும் அங்கு வந்து பார்வையிட்டனர்.

    இதையடுத்து மேடையின் நீளம், உயரத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நீளத்தை 70 அடியில் இருந்து 40 அடியாக குறைக்கவும், உயரத்தை 20 அடியில் இருந்து 16 அடியாக குறைக்கவும் முடிவு செய்யப்பட்டது. அதையொட்டி பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டது. திட்டமிட்டபடி இன்று மாலையில் பிரசார பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. இதற்காக கூடுதல் தொழிலாளர்கள் மேடை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #LokSabhaElections2019 #RahulGandhi
    காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி 2-ம் கட்டமாக தமிழகத்தில் கிருஷ்ணகிரி, சேலம், தேனி, திருப்பரங்குன்றம் ஆகிய 4 இடங்களில் நாளை பிரசாரம் செய்கிறார்.
    சேலம்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 18-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி 2-ம் கட்டமாக தமிழகத்தில் கிருஷ்ணகிரி, சேலம், தேனி, திருப்பரங்குன்றம் ஆகிய 4 இடங்களில் நாளை (12-ந் தேதி) பிரசாரம் செய்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் காலை 10 மணியளவில் பெங்களூரு வருகிறார்.

    அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு கிருஷ்ணகிரி ஆண்கள் கலைக் கல்லூரியில் இறங்குகிறார். தேவராஜ மஹால் அருகே அமைக்கப்பட்டு பொதுக்கூட்ட மேடையில் கிருஷ்ணகிரி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் டாக்டர் செல்லக்குமார், ஓசூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சத்யா, தர்மபுரி தி.மு.க. வேட்பாளர் செந்தில்குமார், பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வக்கீல் மணி, அரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கிருஷ்ணகுமார் ஆகியோரை ஆதரித்து பேசுகிறார்.

    பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு சேலம் ஹோலிகிராஸ் கல்லூரியில் வந்திறங்குகிறார். தொடர்ந்து காரில் சேலம் ஊத்துமலை அருகே அமைக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட மேடைக்கு வருகிறார்.

    அங்கு சேலம் தி.மு.க. வேட்பாளர் பார்த்திபன், கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, நாமக்கல் கொங்கு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் சின்ராஜ், ஈரோடு ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தி, கள்ளக்குறிச்சி தி.மு.க. வேட்பாளர் பொன்.கவுதமசிகாமணி, விழுப்புரம் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார் ஆகியோருக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    பின்னர் ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்திற்கு செல்லும் அவர் அங்கிருந்து தனி விமானத்தில் மதுரைக்கு செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் தேனி செல்லும் அவர் புதிய பஸ் நிலையம் அருகே அணைஞ்சி விளக்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்பட பலருக்கு ஆதரவு கேட்டு பேசுகிறார்.

    அங்கிருந்து ஹெலிகாப்டரில் மதுரை செல்லும் அவர் திருப்பரங்குன்றம் மண்டேலாநகரில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் பேசுகிறார்.

    இதில் மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் வெங்கடேசன், விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்தாகூர், நெல்லை தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம், தூத்துக்குடி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி, கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார், ராமநாதபுரம் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி, சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திசிதம்பரம் உள்பட பலருக்கு ஆதரவு திரட்டுகிறார். இதையொட்டி காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    தேனியில் ராகுல் காந்தி பிரசார பொதுக்கூட்டத்துக்காக 3 ஹெலிபேடு, கேரவன், 4 இடங்களில் வாகன நிறுத்தங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. #LokSabhaElections2019 #RahulGandhi
    தேனி:

    தேனி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கட்சியின் தலைவர் ராகுல்காந்தி வருகிற 12-ந் தேதி தேனி அன்னஞ்சி விலக்கு புதிய பஸ்நிலைய சாலை பகுதியில் பிரசாரம் செய்ய உள்ளார். இந்த இடம் கரட்டு பகுதியில் உள்ள பயன்பாடற்ற பட்டா நிலமாகும். இதனால் அதனை சமதளபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    வாகனங்கள் நிறுத்த 3 வெவ்வேறு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேடைக்கு தென்புறம் 15 ஏக்கர் நிலம் இதற்காக சமப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதி சாலைக்கு எதிரே மண்டப பகுதிக்கு அருகிலும் இடம் சரி செய்யப்பட்டு வருகிறது. அருகிலேயே வி.வி.ஐ.பி. வாகன நிறுத்தம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

    12-ந் தேதி ராகுல்காந்தி தமிழகத்தின் 3 இடங்களில் பிரசாரத்தை முடித்து விட்டு கடைசியாக இக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். மேடையின் கிழக்கு பகுதியில் 3 ஹெலிபேடுகள் அருகருகே அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ராகுல்காந்தி மற்றும் பாதுகாப்பு படையினரும் வருவதால் இந்த வசதி செய்யப்பட்டு உள்ளது. இதன் அருகில் ராகுல்காந்திக்கான சிறப்பு வாகன நிறுத்தம் அமைய உள்ளது.

    இங்கு நிறுத்தப்படும் கார் மூலம் மேடை அருகே அழைத்து செல்லப்படுவார். ராகுல் வசதிக்காக கேரவன் ஒன்றும் இங்கு நிறுத்தப்படுகிறது. சுமார் 50 ஆயிரம் பொதுமக்கள் இங்கு கூடுவார்கள் என கட்சியினர் எதிர்பார்க்கின்றனர். இதற்காக ஆங்காங்கே பிளாஸ்டிக் குடிநீர் தொட்டிகள், தற்காலிக மொபைல் கழிப்பறை அமைக்கப்படுகிறது. கட்சியினருக்கும் பொதுமக்களுக்கும் 300 மி.லி. குடிநீர் பாட்டில்களும் வழங்க ஏறபாடு செய்யப்பட்டு வருகிறது.

    பொதுக்கூட்டம் நடைபெறும் இடம், ஹெலிபேடு தளம் அமைய உள்ள இடம், பொதுமக்களுக்கான பாதுகாப்பு வசதிகள் குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான சஞ்சய்தத் பார்வையிட்டார். வரைபடங்களை பார்த்து ராகுல்காந்தி வரும் வழி, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு செய்து தர வேண்டிய வசதிகள் குறித்து கேட்டறிந்தார். பொதுக்கூட்டத்துக்கு 2 நாட்களே உள்ளதால் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. #LokSabhaElections2019 #RahulGandhi
    தேனி அருகே வேலை வாங்கித்தருவதாக ரூ.35 லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    தேனி:

    போடியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 44) மற்றும் அருண்குமார், செல்லமுத்து மற்றொரு விஜயகுமார், குமரவேல், பாலமுருகன் ஆகியோர் உள்பட 7 பேரிடம் வேலை வாங்கித் தருவதாக பெரியகுளத்தைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் கேரளாவைச் சேர்ந்த சாம்சுல்ரகுமான் ஆகியோர் கூறியுள்ளனர்.

    மேலும் இதற்கு ரூ.5 லட்சம் செலவாகும் என கூறி 7 பேரிடமும் தலா ரூ.5 லட்சம் வசூல் செய்துள்ளனர். ஆனால் வேலை வாங்கித் தராமல் தாமதம் செய்து வந்துள்ளனர்.

    இதனால் 7 பேரும் அவர்களிடம் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் மற்றும் சாம்சுல் ரகுமான் பணத்தை திருப்பி தர முடியாது. மீண்டும் வந்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர்.

    இது குறித்து 7 பேரும் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் அளித்தனர். எஸ்.பி. உத்தரவின் பேரில் தென்கரை போலீசார் மணிகண்டன் மற்றும் சாம்சுல் ரகுமான் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி-திண்டுக்கல் மாவட்டத்தில் பறக்கும்படை சோதனையில் சிக்கிய ரூ.9.76 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #LSPolls

    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகில் உள்ள கொண்டமநாயக்கன்பட்டி சோதனைச்சாவடியில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கலைச்செல்வம் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் பறக்கும்படை அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போதுசென்னையில் இருந்து வந்த ஒரு காரை மடக்கி சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.4 லட்சத்து 6 ஆயிரத்து 300 பணம் இருந்தது தெரிய வந்தது.

    காரை ஓட்டிவந்தவர் சென்னை திருமுக்கூர் பகுதியை சேர்ந்த மனோஜ் (வயது36) என்பதும் இவர் கேரளாவில் வாகமான் என்ற இடத்தில் நிலம் வாங்குவதற்காக இந்த பணத்தை கொண்டு சென்றதும் தெரிய வந்தது.

    ஆனால் அந்த பணத்திற்கு எந்தவித ஆவணங்களும் இல்லாததால் அதனை கைப்பற்றிய அதிகாரிகள் ஆண்டிப்பட்டி வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.

    தமிழக-கேரள எல்லையில் போடி முந்தல் சோதனைச்சாவடியில் பறக்கும்படை அதிகாரி சின்னவெளியப்பன் தலைமையில் அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

    அப்போது கேரளாவில் இருந்து வந்த ஒரு காரை மடக்கி சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1.40 லட்சம் கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் போடி சார் நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    இதேபோல் கம்பம் மெட்டு சோதனைச்சாவடியில் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன தணிக்கையின்போது கேரளாவில் இருந்து சாகுல்அமீது என்பவர் ஓட்டி வந்த காரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.2.30 லட்சத்தை பறிமுல் செய்தனர்.

    கொடைக்கானல் பெருமாள்மலை பகுதியில் உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவடிவேல் தலைமையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட ஒரு காரை மடக்கி சோதனையிட்டனர். அந்த காரை ரவி என்பவர் ஓட்டி வந்தார்.

    அந்த காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.2 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். அந்த பணத்தை கொடைக்கானலில் காய்கறிகள் வாங்குவதற்காக கொண்டு வந்ததாக தெரிவித்தபோதும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்து சார்பதிவகத்தில் ஒப்படைத்தனர்.  #LSPolls

    தேனியில் வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுவன் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    தேனி பாரஸ்ட் ரோடு 3-வது தெருவை சேர்ந்தவர் சேகர். அவரது மகன் முத்தையா (வயது15). படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கூலி வேலைக்கு சென்று வந்தான். சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சைக்கிளில் சென்று உள்ளான். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தனது மகனை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனால் பதறிபோன சேகர் தேனி போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குபதிவு செய்து சிறுவன் என்ன ஆனான்? பணத்துக்காக கடத்தப்பட்டானா? எங்கு சென்றான்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மழை தொடர்ந்து ஏமாற்றி வருவதால் தேனி, மதுரை மாவட்டத்துக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

    கூடலூர்:

    வடகிழக்கு பருவ மழை ஏமாற்றியதால் பெரியாறு உள்ளிட்ட அனைத்து அணைகளின் நீர் மட்டமும் வேகமாக குறைந்து வருகிறது. கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடை சமாளிப்பதற்காக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

    இருந்தபோதும் இந்த நிலை தொடர்ந்தால் தேனி மற்றும் மதுரை மாவட்ட மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. பெரியாறு அணை நீர் மட்டம் 113.85 அடியாக குறைந்துள்ளது. மழை முற்றிலும் ஓய்ந்துள்ள நிலையில் 3 கன அடி நீர் மட்டுமே வருகிறது.

    அணையில் இருந்து 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.

    இதனால் தேனி மற்றும் மதுரை மாவட்ட மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்படும். தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து நீர் நிலைகளும் வறண்டு போய் உள்ளன. மேலும் நிலத்தடி நீர் மட்டமும் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் குடிநீர் தேடி அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது. மழை கை கொடுத்தால் மட்டுமே இதனை சமாளிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வைகை அணை நீர் மட்டம் 44.93 அடியாக உள்ளது. வரத்து இல்லை. மதுரை மாநகர குடிநீருக்காக 60 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 34.05 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணை நீர் மட்டம் 95.94 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    தேனி மாவட்டத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் மது விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    தேனி:

    தமிழகத்தில் டாஸ்மாக் கடை மூலம் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மது பாட்டில்களை மொத்தமாக கொள்முதல் செய்து பதுக்கி கூடுதல் விலைக்கு சிலர் விற்று வருகின்றனர். போலீசார் ரோந்து சென்று இவர்களை பிடித்து அபராதம் விதித்த போதும் தொடர் கதையாகி வருகிறது.

    போடி தாலுகா இன்ஸ்பெக்டர் தர்மர் தலைமையில் போலீசார் ரெங்கநாதபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்றுக் கொண்டு இருந்த குலாளர்பாளையத்தைச் சேர்ந்த செல்வராஜ் (வயது 55) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 67 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதே போல் கூடலூர் வடக்கு சப்-இன்ஸ்பெக்டர் விஜயசாரதி தலைமையில் போலீசார் ரோந்து சென்ற போது பெட்டிக்கடையில் மது ஊற்றிக் குடித்த ராஜேந்திரன் என்பவரை கைது செய்தனர்.

    ஆண்டிப்பட்டி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர வெங்கடேசன் தலைமையில் போலீசார் டி.சுப்புலாபுரம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு மது விற்றுக் கொண்டு இருந்த பரமசிவம் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    தேனி மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் நடந்த பறக்கும்படை சோதனையில் ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகில் உள்ள காட்ரோடு போலீஸ் சோதனைச்சாவடி அருகே தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் ராஜா தலைமையில் அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது வத்தலக்குண்டுவில் இருந்து வரு‌ஷ நாடு நோக்கிச் சென்ற மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது லாரியில் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.1.50 லட்சம் கொண்டு சென்றது தெரிய வந்தது.

    ஆனால் அந்த பணத்துக்கு எந்தவித ஆவணமும் இல்லை. அவரிடம் விசாரணை நடத்தியபோது வரு‌ஷநாட்டைச் சேர்ந்த பஞ்சு வியாபாரி காசி மாயன் என்றும் பஞ்சு விற்ற பணத்தை கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார்.

    ஆனால் உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் பெரியகுளம், கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    இதே போல் சின்னமனூர் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே வட்டார வளர்ச்சி அலுவலர் சேது குமார் தலைமையில் பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தேனியில் இருந்து கூடலூர் நோக்கிச் சென்ற காரை மறித்து சோதனை நடத்தியதில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.1.40 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

    விசாரணையில் காரில் வந்த அவர் கூடலூரைச் சேர்ந்த காய்கறி வியாபாரி முகமது சபீர் (35) என தெரிவித்தார். ஆனால் அவர் கொண்டு வந்த பணத்துக்கு எந்தவித ஆவணமும் இல்லாததால் அதனை பறிமுதல் செய்து உத்தமபாளையம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    தேனி மாவட்டத்தில் துப்பாக்கி உரிமதாரர்கள் தங்கள் வசமுள்ள துப்பாக்கிகளை ஒப்படைக்க மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பல்லவி பல்தேவ் தெரிவித்து உள்ளார். #ParliamentElection
    தேனி:

    தேனி மாவட்டத்தில் தேனி பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2019 மற்றும் ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி) தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதை யொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    தேர்தல் நடத்தை விதிகளின்படி, தேர்தல்களை சுதந்திரமாகவும், அமைதியான முறையில் நடத்திட துப்பாக்கிகள் அனைத்தும் அரசின் பாதுகாப்பில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால் தேனி மாவட்டத்தில் உள்ள படைக்கலன் (துப்பாக்கி) உரிமதாரர்கள் அனைவரும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரையிலோ அல்லது மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையிலோ தங்கள் வசமுள்ள துப்பாக்கிகளை அருகில் உள்ள போலீஸ் நிலையத்திலோ, அரசு உரிமம் பெற்ற தளவாட கிடங்கிலோ உடனடியாக ஒப்படைத்து அதற்கான ரசீதினை பெற்றுக் கொள்ள வேண்டும்.

    மேலும், படைக்கலன் உரிமதாரர்கள் தங்கள் வசமுள்ள துப்பாக்கி ஆயுதங்களை ஒப்படைக்கப்படாமல் தங்கள் வசமே வைத்திருப்பது கண்டறியப்பட்டால் துப்பாக்கியை பறிமுதல் செய்து, உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் படைக்கல சட்ட விதி மற்றும் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 188 ஆகியவற்றின் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என்று மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பல்லவி பல்தேவ் தெரிவித்து உள்ளார். #ParliamentElection

    தேனி அருகே குடிபோதையில் நண்பரை தாக்கிய வாலிபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    தேனி:

    தேனி அருகே உள்ள வயல்பட்டி மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் சுரேஷ் (வயது23). இவரது நண்பர்களான சதீஷ், வருசநாடு வேங்கையன், நல்லு ஆகியோருடன் மது அருந்திக்கொண்டிருந்தார்.

    சம்பவத்தன்று போதை தலைக்கேறிய நிலையில் நண்பர்கள் மத்தியில் பேச்சுவார்த்தை நடந்த நிலையில் அது தகராறாக மாறியது. வாக்குவாதம் முற்றியதால் சதீசை அவரது நண்பர்கள் தகாத வார்த்தைகளால் பேசி உள்ளனர்.

    மேலும் அருகில் இருந்த உருட்டு கட்டையை எடுத்து சுரேசை கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சுரேஷ் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிசிக்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

    இது குறித்து சுரேசின் தாய் செல்லம்மாள் தேனி போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் அளித்தார். புகாரை விசாரிக்குமாறு வீரபாண்டி போலீசாருக்கு எஸ்.பி. உத்தரவிட்டார். இதன் பேரில் சதீஷ், வேங்கையன், நல்லு ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×