search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 100907"

    மேட்டூர் அணை தற்போது 2-வது முறையாக நிரம்பி இருப்பதால் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #Metturdam #Cauvery
    மேட்டூர்:

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை காரணமாக கேரளா, கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

    இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் மேட்டூர் அணை கடந்த மாதம் நிரம்பியது. காவிரி டெல்டா பகுதிகளுக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

    தற்போது மீண்டும் கேரளா, கர்நாடகாவில் பருவ மழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக கர்நாடகா அணைகளுக்கு நீர்வரத்து பல மடங்கு அதிகரித்து உள்ளது.

    124.8 அடி உயரம் கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணை நேற்று மீண்டும் நிரம்பியது. இதனால் அணைக்கு வரும் 62 ஆயிரத்து 319 கன அடி தண்ணீர் அப்படியே தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதேபோல் கபினி அணையும் நிரம்பி இன்று காலை 80 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    2 அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு 1 லட்சத்து 42 ஆயிரத்து 319 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்த தண்ணீர் கர்நாடக- தமிழக எல்லையை கடந்து நேராக ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வருகிறது.

    மேட்டூர் 16 கண் பாலம் வழியாக காவிரி ஆற்றில் சீறி பாயும் தண்ணீர்

    இன்று காலை மேட்டூர் அணைக்கு 1 லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 60 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று காலை 116.85 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 119.08 அடியாக உயர்ந்தது.

    இன்று பிற்பகல் மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. ஏற்கனவே கடந்த மாதம் 24-ந் தேதி மேட்டூர் அணை நிரம்பியது. தற்போது 2-வது முறையாக மீண்டும் மேட்டூர் அணை நிரம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இன்று பிற்பகல் முதல் தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் காவிரி டெல்டா பகுதிகளான சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூரில் இருந்து கூடுதலாக உபரி நீர் திறக்கப்படுகிறது. இளைஞர்கள் ஆர்வ மிகுதியின் காரணமாக ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது. செல்பி உள்ளிட்ட எந்தவிதமான புகைப்படமும் எடுக்கக்கூடாது” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ஒகேனக்கலில் நேற்று மாலை 1 லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இன்று காலை நீர்வரத்து 1 லட்சத்து 22 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளையும் மூழ்கடித்தபடி வெள்ளம் சீறிப்பாய்ந்து செல்கிறது.

    பிலிகுண்டுலுவில் இருந்து மேட்டூர் வரை பரந்து விரிந்த காவிரி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ள நீர் செல்கிறது. ஒகேனக்கல் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையும் தண்ணீரில் மூழ்கி உள்ளது. இதனால் ஒகேனக்கலில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இன்று ஆடி அமாவாசை என்பதால் ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் கொடுக்க ஒகேனக்கலில் குவிந்தனர். வெள்ளப்பெருக்கு காரணமாக அவர்கள் ஆற்றில் இறங்கி புனித நீராட முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகளும் வந்தனர். அவர்களது வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். ஒகேனக்கலில் உள்ள விடுதிகளில் சுற்றுலா பயணிகள் தங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே நாகமரை-பண்ணவாடி இடையே இயக்கப்பட்டு வந்த படகு மற்றும் பரிசல் போக்குவரத்து நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. ஊட்டமலை, நாகமரை உள்பட காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

    அசம்பாவிதங்களை தடுக்க கரையோர கிராமங்களில் அரசுத்துறை அதிகாரிகள் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    ஒகேனக்கல் ஆற்றின் மறுகரையில் கர்நாடக மாநில பகுதியில் 200-க்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் பொருட்கள் வாங்குவது உள்ளிட்ட தேவைகளுக்கு பரிசல் மூலம் ஆற்றை கடந்து ஒகேனக்கலுக்கு வந்து அங்கிருந்து பென்னாகரம், தருமபுரி ஆகிய இடங்களுக்கு பஸ்சில் சென்று வருவது வழக்கம். வெள்ளப்பெருக்கு சீரடையும் வரை ஆற்றை கடக்கும் முயற்சிகளில் இறங்க வேண்டாம் என்று அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. #Metturdam #Cauvery

    கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டதையடுத்து, மேட்டூர் அணைக்கு இன்று நீர்வரத்து ஒரு லட்சம் கன அடியை எட்டியது. #Metturdam #Cauvery
    மேட்டூர்:

    கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் மீண்டும் நிரம்பின. இதன் காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.



    நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை நீடிப்பதால் கர்நாடக அணைகளில் நீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்பட்டது. நேற்று காலை கபினி அணையில் இருந்து 80 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 63 ஆயிரம் கன அடி தண்ணீரும் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. மொத்த 1.43 லட்சம் கனஅடி தண்ணீர் வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    கர்நாடக அணைகளில்  தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 70,000 கன அடியில் இருந்து இன்று 1,00,000 கன அடியாக உயர்ந்துள்ளது. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.80 அடியாக உள்ளது. நீர்வரத்து அதிகரித்ததையடுத்து, நீர்திறப்பு வினாடிக்கு 50 ஆயிரத்தில் இருந்து  60 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதேபோல் பவானிசாகர் அணையும் நிரம்பி வருகிறது. அணையின் நீர்மட்டம் 98.40 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6924 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. 3800 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. #Metturdam #Cauvery

    கர்நாடகத்தில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்துவருவதால் தமிழகத்திற்கு கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து மொத்தம் வினாடிக்கு 1.43 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. #Karnatakarain #Cauvery
    மைசூரு:

    கடந்த மே மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் கர்நாடகத்தில் கொட்டி தீர்த்து வருகிறது.

    குறிப்பாக கடலோர மாவட்டங்களான தட்சிணகன்னடா, உடுப்பி, கார்வார் ஆகிய பகுதிகளிலும், மலைநாடு மாவட்டங்களான சிக்கமகளூரு, சிவமொக்கா, குடகு ஆகிய மாவட்டங்களிலும் பருவமழை வரலாறு காணாத அளவுக்கு பெய்து வருகிறது. இதனால் இந்த 6 மாவட்டங்களில் உள்ள அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.

    காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டம் மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மண்டியாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் என்னும் கே.ஆர்.எஸ். அணையும், மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணையும் கடந்த மாதம் 19-ந்தேதி நிரம்பியது. இதனால் தமிழகத்திற்கு இரு அணைகளில் இருந்தும் சுமார் ஒரு லட்சம் கனஅடிக்கும் மேல் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. பின்னர் மழையின் தீவிரம் குறைந்ததை தொடர்ந்து அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டது.



    இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கே.ஆர்.எஸ். அணைகள் நேற்று முன்தினம் மீண்டும் 2-வது தடவையாக நிரம்பின.

    குறிப்பாக கபினி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிவு அதிகமாக உள்ளது. இதனால் கபினி அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று முன்தினம் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அதே வேளையில் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் இரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு வினாடிக்கு 1.15 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

    இதற்கிடையே இரு அணைகளுக்கும் வரும் நீரின் அளவு நேற்று முன்தினம் மாலை முதல் மேலும் அதிகரித்தது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி கபினி அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 77 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்றைய நிலவரப்படி கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் 2,283 அடியாக இருந்தது.

    கபினி அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் கபிலா ஆற்றில் ஆர்ப்பரித்து செல்கிறது. இதன் காரணமாக ஆற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த வெள்ளப்பெருக்கால் ஆற்றங்கரையோரம் உள்ள விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. மேலும் ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 15 குடும்பத்தினரை வருவாய்த்துறையினர் வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்துள்ளனர்.

    கபிலா ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா மாதப்பூர் கிராமத்தில் உள்ள பாலத்தையும், நஞ்சன்கூடு தாலுகா பந்தவாலு கிராமத்தில் உள்ள பாலத்தையும் மூழ்கடித்த படி செல்கிறது. இதனால் இரு கிராமங்களுக்கும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதுதவிர கபிலா ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக நஞ்சன்கூடு தாலுகா மல்லனமூலே கிராமத்தில் செல்லும் மைசூரு-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் தேங்கியது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    உடனே நஞ்சன்கூடு அருகே கடகோலாவில் மைசூருவில் இருந்து ஊட்டி செல்லும் வாகனங்களும், ஊட்டியில் இருந்து மைசூரு வந்த வாகனங்களும் தடுத்து நிறுத்தி மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மைசூரு-ஊட்டி சாலையில் தண்ணீர் பாய்ந்தோடியதால், சில வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி, அந்த தண்ணீரில் கழுவி சென்றதை காண முடிந்தது.

    வெள்ளப்பெருக்கு காரணமாக கபிலா ஆற்றங்கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல 2-வது நாளாக நேற்றும் கபினி நீர்ப்பாசனத் துறையினரும், வருவாய்த் துறையினர் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.

    அதுபோல் குடகில் பெய்து வரும் கனமழையால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணையின் நீர்வரத்து வினாடிக்கு 47,709 கனஅடியாக இருந்தது. அதே வேளையில் அணையில் இருந்து வினாடிக்கு 63,223 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 124 அடியாக இருந்தது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள நீர் காவிரி ஆற்றில் சீறி பாய்ந்து செல்கிறது.

    இதனால் காவிரி ஆற்றின் குறுக்கே மண்டியா மாவட்டம் மலவள்ளி அருகே உள்ள ககனசுக்கி, பரசுக்கி நீர்வீழ்ச்சிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயத்தில் 2-வது நாளாக நேற்றும் படகு சவாரி நிறுத்தப்பட்டு இருந்தது. இதனால் சுற்றுலா வந்த பயணிகள் படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கபிலா, காவிரி ஆறுகள் டி.நரசிப்புரா அருகே திரிவேணி சங்கமத்தில் சங்கமிக்கிறது. தற்போது கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து வினாடிக்கு 1.43 லட்சம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், திரிவேணி சங்கமம் காவிரி ஆற்றில் வெள்ளம் இருகரைகளையும் தொட்டபடி ஆர்ப்பரித்து செல்கிறது. அந்த பகுதி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதையடுத்து அந்தப் பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து நேற்று முன்தினம் தமிழகத்திற்கு வினாடிக்கு 1.15 லட்சம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டு இருந்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் நேற்று இரு அணைகளில் இருந்தும் வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது கபினி அணையில் இருந்து வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடி நீரும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 63,223 கனஅடி நீரும் திறந்துவிடப்பட்டுள்ளது.

    இதனால் தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 1.43 லட்சம் கனஅடி வீதம் நீர் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.  #Karnatakarain #KRSDam #KabiniDam #Cauvery

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தற்போது நீர்வரத்து மிக அதிகமாக உள்ளதால் ஆற்றில் இறங்குவதற்கும், குளிப்பதற்கும் மற்றும் பரிசலில் செல்ல தடை செய்யப்பட்டு உள்ளது. #Hogenakkal #Cauvery
    ஒகேனக்கல்:

    ஒகேனக்கல்லுக்கு இன்று காலை நீர்வரத்து 60 ஆயிரம் கனஅடியாக உயர்ந்து உள்ளது.

    இன்று பிற்பகலுக்குப் பிறகு நீர் வரத்து 1 லட்சம் கன அடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் காவிரி ஆற்றில் யாரும் இறங்கி குளிக்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒகேனக்கல், ஊட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

    அந்த துண்டு பிரசுரத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தற்போது நீர்வரத்து மிக அதிகமாக உள்ளதால் அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு ஆற்றில் இறங்குவதற்கும், குளிப்பதற்கும் மற்றும் பரிசலில் செல்ல தடை செய்யப்பட்டு உள்ளது. இதனை மீறுவோர் மீது சட்டப்படி காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.  #Hogenakkal #Cauvery
    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததை தொடர்ந்து கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. #Cauvery #KRS #KabiniDam
    மண்டியா:

    கர்நாடகத்தில் கடந்த மே மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக மண்டியாவில் உள்ள கே.ஆர்.எஸ். (கிருஷ்ணராஜசாகர்), மைசூருவில் உள்ள கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து இரு அணைகளும் முழு கொள்ளளவை எட்டின. இதனால் இரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு சுமார் ஒரு லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் தமிழ்நாடு மேட்டூரில் உள்ள அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அந்த அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்தது.




    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை படிப்படியாக குறைந்த வண்ணம் இருந்தது. இதனால் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டு வந்தது. நேற்று காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்தது. இதனால் அணைகளுக்கு வரும் நீரின் அளவும் குறைந்து வருகிறது.

    நேற்று காலை நிலவரப்படி 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 122.89 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 8,135 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அதே வேளையில் அணையில் இருந்து வினாடிக்கு 5,009 கனஅடி வீதம் நீர் திறந்துவிடப்பட்டது.

    அதுபோல் கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் 2,283.17 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 18,541 கனஅடி வீதம் நீர்வரத்து இருந்தது. அந்த சமயத்தில் அணையில் இருந்து வினாடிக்கு 16,200 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் இரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு வினாடிக்கு 21,209 கனஅடி வீதம் தண்ணீர் செல்கிறது. நேற்று முன்தினம் இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 25,595 கனஅடி வீதம் தண்ணீர் தமிழகத்திற்கு காவிரியில் திறந்துவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  #Cauvery #KRS #KabiniDam
    காவிரி தண்ணீர் கடைமடை பாசனத்துக்கு போகவில்லை என்றும் அரசின் கவன குறைவால் வீணாக கடலில் கலக்கிறது என்றும் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார். #Ramadoss #Cauvery
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கைக்கெட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பதைப் போல மேட்டூர் அணை நிரம்பி வழிந்தும் கூட காவிரி கடைமடை பாசனப் பகுதிகளுக்கு காவிரி நீர் சென்றடையாததால் குறுவை நெல் பயிர்களுக்கு எந்த பயனும் ஏற்படவில்லை. அதேநேரத்தில் மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் திறந்து விடப்பட்ட தண்ணீரில் பெரும் பகுதி விவசாயத்துக்குப் பயன்படாமல் வங்கக் கடலில் கலந்து வீணாகியிருக்கிறது.

    மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீர் அடுத்த 3 நாட்களில் கல்லணைக்கும், அடுத்த ஒரு வாரத்தில் அனைத்து கடைமடை பகுதிகளையும் சென்றடைவது வழக்கமாகும்.

    அதாவது மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் அடுத்த 10 நாட்களுக்கு அனைத்து காவிரி பாசனப் பகுதிகளுக்கும் சென்றடைந்தாக வேண்டும். வழக்கத்தை விட அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டால் இன்னும் கூடுதலாக கடை மடைப் பாசனப் பகுதிகளை சென்றடைந்து விடும்.



    ஆனால், இம்முறை மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்றுடன் 13 நாட்களாகியும் நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களிலுள்ள கடைமடை பாசனப் பகுதிகளை சென்றடையவில்லை. காவிரி ஆறு பூம்புகார் கடலில் கலப்பதற்கு முந்தைய இடமான நாகை மாவட்டம் மேலையூர் கடைமடைத் தேக்கத்திற்கு கடந்த ஜூலை 29-ந் தேதியே தண்ணீர் வந்து விட்ட போதிலும், அதற்கு முன்பாக உள்ள கடைமடைப் பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் இன்னும் சென்றடையவில்லை.

    அதேநேரத்தில் கடந்த சில நாட்களில் மட்டும் காவிரி மற்றும் கொள்ளிடம் வழியாக கிட்டத்தட்ட 16 டி.எம்.சி. வீணாக கடலில் கலந்துள்ளது. இதை விட மிகக்கேவலமான நீர் மேலாண்மை வேறு எங்கும் கடைபிடிக்கப்படாது.

    தமிழ்நாட்டில் கடந்த 6 ஆண்டுகளாக குறுவை சாகுபடி நடைபெறவில்லை. நடப்பாண்டிலாவது மேட்டூர் அணை உரிய காலத்தில் திறக்கப்பட்டால் கடைமடை பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடைய வசதியாக காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளிலும், பாசனக் கால்வாய்களை தூர்வார வேண்டும் என பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    கடந்த மாதம் 19-ந் தேதி மேட்டூர் அணை திறப்பு விழாவில் தடுப்பணைகள் கட்டுவது குறித்த முதல்வரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து பா.ம.க. சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையிலும் தடுப்பணைகளை கட்டவும், கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், மக்கள் நலனில் அக்கறையற்ற அரசு அதை செய்யாததன் விளைவு தான் உழவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

    மேட்டூர் அணையிலிருந்து கடந்த வாரம் வினாடிக்கு 76,611 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அப்போதே காவிரிப் பாசன மாவட்டங்களுக்கு தண்ணீர் சென்றடையாத நிலையில், நேற்று முதல் வெறும் 19,000 கன அடி மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் நிலையில் நிச்சயமாக கடைமடைக்கு தண்ணீர் சென்றடையாது. இதனால் மிகவும் மோசமான பாதிப்புகள் ஏற்படும்.

    இதைத் தடுக்க காவிரி கிளை ஆறுகள் மற்றும் பாசனக் கால்வாய்களை தூர்வாரி சீரமைப்பதுடன், அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட வேண்டும். இதற்கெல்லாம் மேலாக காவிரி படுகைகளில் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் பாதுகாக்க வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் தடுப்பணைகளை கட்ட அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Ramadoss #Cauvery

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததன் எதிரொலியாக, 16 கண் பாலத்தின் வழியாக உபரிநீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது. #Metturdam #Cauvery
    மேட்டூர்:

    கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதன் எதிரொலியாக, மேட்டூர் அணை கடந்த 23-ந் தேதி தன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வரும் நிலையில் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்ததால் உபரி நீர் போக்கியான 16 கண் மதகு வழியாகவும், தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்தது.

    உபரிநீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக, அதிகபட்சமாக வினாடிக்கு 48 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறந்துவிடப்பட்டது. கடந்த சில நாட்களாக அணைக்கு நீர்வரத்தானது படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது.

    நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 31 ஆயிரத்து 411 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து நேற்று காலையில் வினாடிக்கு 23 ஆயிரத்து 501 கனஅடியாக குறைந்தது. மதியம் நிலவரப்படி வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து குறைந்தது.

    அணையில் இருந்து டெல்டா மற்றும் கால்வாய் பாசன தேவைக்காக வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி வீதம் சுரங்கம் மற்றும் அணை மின்நிலையம் வழியாக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. நீர்வரத்து குறைவு எதிரொலியாக, நேற்று மதியம் 2 மணி முதல் உபரிநீர் போக்கியான 16 கண் மதகு பாலம் வழியாக தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது.

    இதனால் உபரிநீர் போக்கியான 16 கண் மதகு பாலத்தின் வழியாக தண்ணீர் வெளியேறுவதை காணவந்த மக்கள் கூட்டமும் படிப்படியாக குறைந்து வருகிறது.

    நேற்று காலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 120.09 அடியாக இருந்தது.  #Metturdam #Cauvery
    மேட்டூர் அணைக்கு நேற்று 59 ஆயிரத்து 135 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 31 ஆயிரத்து 411 கன அடியாக சரிந்தது.
    மேட்டூர்:

    கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பியது.

    இந்த அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் 25 நாட்களுக்கும் மேலாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணை கடந்த 23-ந் தேதி முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனால் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மேட்டூர் அணைக்கு நேற்று 59 ஆயிரத்து 135 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 31 ஆயிரத்து 411 கன அடியாக சரிந்தது. அணையில் இருந்து நேற்று 59 ஆயிரத்து 714 கன அடி தண்ணீர் திறந்து விட்ட நிலையில் இன்று தண்ணீர் திறப்பும் 33 ஆயிரத்து 970 கன அடியாக குறைக்கப்பட்டது. நேற்று 120.25 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 120.20 அடியாக இருந்தது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 40 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 30 ஆயிரம் கன அடியாக சரிந்தது. மெயின் அருவி, ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

    விடுமுறை நாளான நேற்று ஒகேனக்கலுக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    கர்நாடகாவில் கடந்த ஒரு வாரமாக மழை குறைந்ததால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது.இதற்கிடையே நேற்று மாலை முதல் மீண்டும் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 40 ஆயிரத்து 780 கன அடியும், கபினி அணையில் இருந்து 35 ஆயிரம் கன அடி தண்ணீரும் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் 2 அணைகளில் இருந்தும் 75 ஆயிரத்து 780 கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.

    இந்த தண்ணீர் நாளை காலை மேட்டூருக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    கீழணையில் இருந்து 1,600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. #Kallanai #VeeranamLake #Cauvery
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. விவசாயிகளின் உயிர்நாடியாக விளங்கும் இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 72 கன அடி தண்ணீர் அனுப்பப்படும்.

    நீர் வரத்து இல்லாததால் கடந்த 5 மாதங்களாக வீராணம் ஏரி வறண்டு காணப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடகாவில் பெய்த கன மழை காரணமாக காவிரி உபரிநீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தடைந்தது.

    அங்கிருந்து கல்லணைக்கு வந்த தண்ணீர் பின்னர் கீழணைக்கு வந்தது. கீழணையில் இருந்து கடந்த 27-ந் தேதி வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் 1,200 கன அடியாக இருந்தது. நேற்று இரவு வரை 1,600 கன அடியாக உயர்த்தப்பட்டது. கடந்த 3 நாட்களாக வீராணம் ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நேற்று முன்தினம் ஏரியின் நீர்மட்டம் 37 அடியாக இருந்தது. அது இன்று 39 அடியாக உயர்ந்துள்ளது. படிப்படியாக நீர்மட்டம் உயர்ந்து வருவதால் வீராணம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. 45 அடி வரைக்கும் தண்ணீர் தேக்கி வைக்கப்படும். அதன்பிறகு சென்னைக்கு குடிநீர் அனுப்புவது குறித்து முடிவு செய்யப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #Kallanai  #VeeranamLake #Cauvery


    மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 43 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. ஆனாலும் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கவும், குளிக்கவும் நேற்று 21-வது நாளாக தடை நீடித்தது. #MetturDam
    மேட்டூர்:

    கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தது. இதன் காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து அதிகபட்சமாக வினாடிக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவைப்பொறுத்து அவ்வப்போது நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. நீர்வரத்தின் அளவை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 64 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக குறையத்தொடங்கியது. நேற்று மாலை 3 மணி நிலவரப்படி வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்தது.

    இதனால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் விதித்த தடை நேற்று 21-வது நாளாக நீடித்தது. விடுமுறை நாளான நேற்று ஒகேனக்கல்லுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் காவிரி கரை, நடைபாதை, மீன்மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரை கண்டு ரசித்தனர்.

    அப்போது, சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் குளிக்க வேண்டாம் என்று போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தினர்.

    காவிரியில் நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென உயர்ந்து கொண்டே வந்தது. கடந்த 23-ந் தேதி அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது.

    இதைத்தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 60 ஆயிரம் கனஅடிக்கு மேல் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. தண்ணீர் திறப்பை விட அணைக்கு நீர்வரத்து பலமடங்கு அதிகமாக இருந்ததால் அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் உபரிநீர் போக்கியில் தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறி ஓடுகிறது.

    இந்த நிலையில் நேற்று காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 59 ஆயிரத்து 135 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. கர்நாடகத்தில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு உள்ளதன் எதிரொலியாக நேற்று மதியம் நீர்வரத்து வினாடிக்கு 43 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. அந்த நீர் அப்படியே திறந்து விடப்பட்டு வெளியேறிக்கொண்டு இருக்கிறது. அணை நீர்மட்டம் 120.25 அடியாக இருந்தது. #MetturDam

    மேட்டூர் அணையில் இருந்து நேற்று காவிரி டெல்டா பாசனத்திற்காக 46 ஆயிரத்து 465 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்பட்டு 60 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. #Metturdam #Cauvery
    சேலம்:

    கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிரம்பியது.

    இதனால் அந்த அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்ட உபரி நீர் மேட்டூர் அணைக்கு கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வந்து கொண்டிருப்பதால் அணை முழு கொள்ளளவை எட்டியது.

    கடந்த 19-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் மூலம் டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும்.

    மேட்டூர் அணைக்கு நேற்று நீர்வரத்து 48 ஆயிரத்து 65 கன அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் நீர்வரத்து அதிகரித்து 61 ஆயிரத்து 291 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து நேற்று காவிரி டெல்டா பாசனத்திற்காக 46 ஆயிரத்து 465 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்பட்டு 60 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது. நேற்று 120.2 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் அதிகரித்து 120.31 அடியாக உயர்ந்தது.

    தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் காவிரி ஆறு சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களிலும் விவசாயத்தை செழித்தோங்க வைப்பதுடன் அந்த மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும் திகழ்கிறது.

    மேட்டூர் அணையில் இருந்து சேலம் மாவட்டம் வழியாக செல்லும் காவிரி ஆறு ஈரோடு, நாமக்கல், கரூர் மாயனூர் கதவணை வழியாக திருச்சி முக்கொம்பை அடைகிறது. அங்கிருந்து கொள்ளிடம், காவிரி என இரண்டாக பிரிந்து கல்லணையை சென்றடைகிறது. கல்லணையில் இருந்து காவிரி ஆறு 4 ஆக பிரிகிறது.

    இதில் கல்லணை கால்வாய் பூதலூர் தஞ்சாவூர், நெய்வாசல், முத்துப்பேட்டை வழியாக புதுக்கோட்டை வரை செல்கிறது. கல்லணை காவிரி ஆறு திருவையாறு, கொராடச்சேரி, மன்னார்குடி, தோப்புதுறை வழியாக சென்று கடலில் கலக்கிறது.

    கொராடாச்சேரியில் இருந்து ஒரு பிரிவு நாகூர் வழியாக சென்று கடலில் கலக்கிறது. மற்றொரு பிரிவு திருவையாறில் இருந்து கும்பகோணம் சென்று காரைக்கால், தரங்கம்பாடி, பூம்புகார் ஆகிய 3 இடங்களில் கடலில் கலக்கிறது.

    5 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை நிரம்பியதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து 9 நாட்கள் ஆகியும் இன்று வரை கடைமடையின் கிளை கால்வாய்களுக்கு தண்ணீர் செல்லவில்லை.

    இதற்கு அரசு ஆறுகளை தூர்வாராதது தான் முழு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் அணை முழு கொள்ளளவை எட்டியும் அரசியல்வாதிகளின் அலட்சியத்தால் இந்த நிலை நீடிப்பதாகவும் அவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

    இது குறித்து தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் கூறியதாவது:-

    மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டு 9 நாட்கள் ஆகியும் இன்று வரை கடை மடையை தண்ணீர் வந்தடையவில்லை. இதற்கு ஆறுகளை தூர்வாரதது தான் முழு காரணம். தூர்வாராததால் பாசன கொள்ளளவு தண்ணீரை ஆற்றில் கொண்டு செல்லும் போது உடைப்பு ஏற்படுகிறது. இதனால் பாதி அளவு தண்ணீரே காவிரி மற்றும் கிளை ஆறுகளில் கொண்டு செல்ல முடிகிறது.

    இது குறித்து அரசுக்கு பல முறை எடுத்து கூறியும் செவி சாய்க்கவில்லை. தூர்வார ஒதுக்கப்படும் நிதி மொத்த தேவையில் 10 சதவீதமாக உள்ளது. அதையும் நகர பகுதி மற்றும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் தூர்வாருவது போல காண்பித்து விட்டு காட்டு பகுதியில் எங்கும் தூர்வாருவதில்லை. அரசியல்வாதிகள் ஊழலில் ஈடுபட்டு அந்த நிதி முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது.

    தமிழகத்தின் பாதி பாசனம் கொண்ட காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளை தூர்வார எந்தவித சிறப்பு திட்டமும் செயல்படுத்தவில்லை. குறிப்பாக காவிரியின் கிளை பாசன ஆறுகளான கோதையாறு, பாமினி ஆறு, வெண்ணாறு, குடமுருட்டி ஆறு உள்பட பல பெரும்பாலான ஆறுகள் தூர்வாரப்படாததால் அந்த ஆறுகளில் குறைந்த அளவே தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் கடை மடைக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    ஆறுகளை தூர்வாராததால் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்க தற்போது கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீரில் மிக குறைந்த அளவு கடலூர் மாவட்டம் வீராணத்திற்கு செல்கிறது. மற்ற தண்ணீர் அனைத்தும் கடலுக்கு வீணாக செல்கிறது.



    இதனால் காவிரி மற்றும் கிளை ஆறுகளில் குறைந்த அளவு தண்ணீர் செல்வதால் நாகை மாவட்ட கடை மடை பகுதிகளான சீர்காழி, வேதாரண்யம், நாகப்பட்டினம், திருமருகள், கீரையூர் ஆகிய பகுதிகளுக்கு இன்னும் தண்ணீர் சென்றடையவில்லை.

    இதே போல காவிரியின் கிளை ஆறுகள் மூலம் பாசனம் பெறும் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, நன்னிலம் ஆகிய பகுதிகளுக்கும், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், பேராவூரணி ஆகிய பகுதிகளுக்கும் இது வரை தண்ணீர் சென்றடையவில்லை. இதனால் அந்த பகுதி விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

    எனவே கடை மடையின் அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் சென்றடைய ஆறுகளை முழுமையாக தூர்வாரினால் மட்டுமே விவசாயிகள் பயன் அடைய முடியும். இதனால் அதனை அரசு முழுமையாக அதனை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Metturdam #Cauvery
    கல்லணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் இன்று காலை வீராணம் ஏரிக்கு வந்தடைந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். #Kallanai #VeeranamLake
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.

    இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. ஏரியில் இருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 72 கன அடி தண்ணீர் அனுப்பப்படும்.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மேட்டூரில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் கீழணை வழியாக வீராணம் ஏரிக்கு வரத்தொடங்கியது. தொடர்ந்து நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த வடகிழக்கு பருவ மழை காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததால் வீராணம் ஏரி நிரம்பி கடல்போல காட்சியளித்தது.

    பின்னர் தொடர்ந்து மழை இல்லாததாலும், ஏரிக்கு நீர்வரத்து குறைந்ததாலும் நீர்மட்டம் குறைந்தது.

    இதனால் கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது.



    தொடர்ந்து வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்து பாலைவனமாக காணப்பட்டது. கடந்த 5 மாதமாக வீராணம் ஏரி வறண்டு கிடந்தது. விவசாயிகள் பாசனத்துக்கு தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். வீராணம் ஏரிக்கு காவிரி நீர் எப்போது வரும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    இந்தநிலையில் கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த 19-ந் தேதி காவிரி நீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணைக்கு கடந்த 22-ந் தேதி வந்தடைந்தது. இதையடுத்து கல்லணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று இரவு 8 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழணைக்கு வந்து சேர்ந்தது.

    கீழணையின் மொத்தம் நீர்மட்டமான 9 அடியை எட்டியது. பின்னர் அங்கிருந்து வடவாறு வழியாக கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இன்று காலை காவிரி நீர் வீராணம் ஏரிக்கு வந்தடைந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது ஏரிக்கு காவிரி தண்ணீர் வேகமாக வந்து கொண்டிருக்கிறது.

    நீர்வரத்து அதிகரித்தால் இன்னும் 2 நாட்களில் வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வீராணம் ஏரி நிரம்பியவுடன் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது குறித்து முடிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வீராணம் ஏரிக்கு காவிரி நீர் வந்தது குறித்து கொள்ளிடம் கீழணை பாசன விவசாய சங்க தலைவர் விநாயகமூர்த்தி கூறியதாவது:-

    மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கும்போது வீராணம் ஏரிக்கு காவிரி நீர் வந்து சேரும். கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு ஆடி மாதத்தில் தற்போது வீராணம் ஏரிக்கு காவிரி நீர் வந்து சேர்ந்துள்ளது.

    ஏரியில் தண்ணீரை சேமித்து வைக்க வேண்டும். விவசாயத்திற்கு ஆகஸ்டு மாதம் 15-ந் தேதிக்கு பிறகு வீராணம் ஏரியிலிருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். இந்த ஆண்டு ஒரு போக சம்பா சாகுபடி செய்ய வாய்ப்பு உள்ளது.

    மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் காவிரி நீர் கொள்ளிடம் ஆற்றுக்கு வருகிறது. அங்கிருந்து அதிக அளவு தண்ணீர் கடலில் சென்று வீணாக கலக்கிறது.

    எனவே இதை தடுக்க கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளை கட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Kallanai  #VeeranamLake

    ×