search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 100907"

    கர்நாடகத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக கபினி அணையில் இருந்து 15 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. #metturdam #cauveryriver #kabinidam
    குடகு:

    கர்நாடகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக காவிரியின் பிறப்பிடமான குடகு மாவட்டத்தில் பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. கடந்த 6 நாட்களுக்கும் மேலாக அங்கு இடைவிடாது கனமழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இதேபோல் காவிரியின் கிளை ஆறான லட்சுமண தீர்த்த நதியிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழையால் குடகு மாவட்டமே ஸ்தம்பித்து உள்ளது. இந்த நிலையில் நேற்றும் குடகு மாவட்டத்தில் இடைவிடாது கனமழை கொட்டியது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் வரலாறு காணாத அளவில் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், அப்பி மல்லலி உள்பட பல்வேறு நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    இதற்கிடையே சில இடங்களில் காவிரி ஆற்றின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றின் கரையையொட்டி அமைந்துள்ள சில கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்களை வெள்ளம் சூழ்ந்ததால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

    இதனால் கரையோர மக்களை அரசு அதிகாரிகள் மீட்டு, பள்ளிகள் மற்றும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர். மேலும் அவர்களுக்கு உணவு மற்றும் தேவையான பொருட்களை வழங்கி வருகிறார்கள்.

    மேலும், ஏராளமான இடங்களில் மின்கம்பங்கள் சரிந்து விழுந்ததால் பல கிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளன. மாவட்டம் முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. அவற்றை தீயணைப்பு துறையினர், தன்னார்வலர்கள், அரசு ஊழியர்கள் என பலரும் ஒன்று சேர்ந்து அப்புறப்படுத்தி வருகிறார்கள்.

    சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பல கிராமங்களுக்கு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், மரங்கள் முறிந்து விழுந்ததில் ஏராளமான வீடுகள் சேதம் அடைந்துள்ளன. 500-க்கும் மேற்பட்ட வாகனங்களும் நாசமடைந்தன. சேதமடைந்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.

    தொடர் மழையால் குடகு மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், நேற்று குடகு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

    இதேபோல், சிக்கமகளூரு மாவட்டத்திலும் கடந்த 7 நாட்களாக தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் துங்கா, பத்ரா, ஹேமாவதி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் மாவினகொம்பே உள்பட 4 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கர்நாடகத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக கபினி அணை தனது முழுகொள்ளளவை எட்டுவதற்கு இன்னும் 7 அடியே உள்ளது.

    அணைக்கு தற்போது வினாடிக்கு 22,000 கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 15,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் இன்னும் ஓரிரு நாட்களில் தமிழகத்தில் உள்ள மேட்டூர் அணையை சென்றடையும் என்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர வாய்ப்பு உள்ளது.



    மேட்டூர் அணையின் தற்போதைய நீர்மட்டம் 39.96 அடி. அணைக்கு 743 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.  #metturdam #cauveryriver #kabinidam
    ×