search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பூர்"

    திருப்பூரில் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மங்கலத்தை அடுத்த அக்ரஹாரப்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 37). இவர் சொந்தமாக விசைத்தறிக்கூடம் வைத்துள்ளார்.

    இவருடைய மனைவி சங்கீதா (33). இவர்களுடைய மகன் ரேவந்த் (3). தொட்டிக்குள் தவறி விழுந்தான்

    சம்பவத்தன்று முத்துக்குமார் விசைத்தறி கூடத்திற்கு சென்று விட்டார். சங்கீதா வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் பந்து வீசி ரேவந்த் விளையாடிக்கொண்டிருந்தான்.

    சிறுவன் விளையாடிய பந்து வீட்டின் முற்றத்தில் விழுந்தது. இதையடுத்து வீட்டிற்கு வெளியே சென்று சிறுவன் விளையாடினான்.

    சிறிது நேரத்திற்கு பிறகு சிறுவனின் சத்தம் கேட்கவில்லையே என்று வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த சங்கீதா சிறுவனை தேடியுள்ளார்.

    அப்போது வீட்டின் முற்றத்தில் உள்ள சிமெண்ட் தொட்டிக்குள் சிறுவனும், அவன் விளையாடிய பந்தும் கிடந்தது. 2½ அடி உயரம் கொண்ட அந்த சிமெண்ட் தண்ணீர் தொட்டியில் 2 அடி உயரத்திற்கு தண்ணீர் இருந்துள்ளது. தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த பந்தை சிறுவன் எடுக்க முயன்றபோது அதற்குள் தலைகுப்புற தவறி விழுந்து இருப்பது தெரியவந்துள்ளது.

    இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சங்கீதா கூச்சலிட்டார். உடனே தண்ணீர் தொட்டிக்குள் இருந்து சிறுவனை வெளியே தூக்கினார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சாமளாபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தபின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரேவந்த் இறந்தான். தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து சிறுவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பூரில் சட்ட விரோதமாக தங்கி இருந்த 9 நைஜீரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

    திருப்பூர்:

    பனியன் நகரமான திருப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் தங்கி பனியன் ஏற்றுமதியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    குறிப்பாக நைஜீரிய நாட்டை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் தங்கி உள்ளனர். இந்த நிலையில் திருப்பூர் ஊத்துக்குளி எஸ். பெரியபாளையம் பெருமாள் கார்டன் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி நைஜீரிய நாட்டை சேர்ந்தவர்கள் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி உத்தரவின் பேரில் ஊத்துக்குளி இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் மற்றும் போலீசார் ஊத்துக்குளி பெருமாள் கார்டன் பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.


    அங்கு ஏராளமான நைஜீரியர்கள் தங்கி இருந்தனர். அவர்களிடம் ஆவணங்களை சரி பார்த்த போது 9 பேர் உரிய ஆவணங்கள் இன்றி சட்ட விரோதமாக தங்கி இருப்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    பிளஸ்சிங்கு (30), பிஸ்வா (45), சினேடு (30), இகோ பிகுவோ (32), டேய் (37), மற்றொரு சினேடு (34), விண்சென்ட் (28) தீபன் (35), ஜூகுமேகா (40). ஆவார்கள்.

    அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    திருப்பூரில் கடந்த பிப்ரவரி மாதம் எந்த வித ஆவணங்களும் இன்றி தங்கி இருந்த நைஜீரியாவை சேர்ந்த நுவான்க்பே(32), நிக்கோலஸ் உச்சேனா (38), ஓனாஜிட் (31), நெல்சன் மேக்போ (32), நுவோனு ஒக்வுதி (34) டாய் நெபின்சி (35) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கு விசாரணை திருப்பூர் முதலாவது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. பின்னர் அவர்கள் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.


    சிறையில் அடைக்கப்பட்டிருந்த நைஜீரியர்கள் 6 பேரையும் தண்டனை காலம் முடிந்ததால் சிறை நிர்வாகம் விடுதலை செய்தது.

    வெளியே வந்த அவர்கள் தலைமறைவாகி விட்டனர். உரிய ஆவணங்கள் இன்றி கைதான வெளிநாட்டினர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின் திருச்சியில் உள்ள முகாமில் அடைக்கப்பட வேண்டும்.

    பின்னர் உள்துறை அமைச்சகம் அனுமதி பெற்று அவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பது நடைமுறை. ஆனால் நைஜீரியர்கள் விவகாரத்தில் போலீசார் முன்னெச்சரிக்கையாக இல்லாததால் அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.

    அவர்களை பிடிக்க போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

    திருப்பூரில் வாலிபரிடம் செல்போன் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் கருவம்பாளையம் இந்திரா நகரை சேர்ந்தவர் அருண்குமார்(வயது 22). பனியன் நிறுவன தொழிலாளி. இவர் கடந்த 4-ந் தேதி மதியம் ஆலங்காடு வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் திடீரென்று அருண்குமாரை வழிமறித்து அவரிடம் இருந்த ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துக்கொண்டு தப்பினார்கள்.

    இதுகுறித்து அருண்குமார் திருப்பூர் மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஆலங்காடு பகுதியில் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதில் செல்போனை பறித்துச்சென்ற ஆசாமிகளின் உருவம் சிக்கியது. இதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் தேடி வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று நடராஜா தியேட்டர் ரோட்டில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் அருண்குமாரிடம் செல்போன் பறித்து சென்றவர்கள் என்பது கண்டறியப்பட்டது. அவர்களை மத்திய போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று போலீசார் விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள் சாமுண்டிபுரத்தை சேர்ந்த நாகராஜன்(19), 15 வேலம்பாளையத்தை சேர்ந்த விக்னேஷ்குமார்(19), மடத்துக்குளம் ருத்ராபாளையத்தை சேர்ந்த மணிகண்டன்(20) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். 
    திருப்பூரில் போலி ஆதார் கார்டு அச்சடிக்க உதவிய மேலும் ஒரு பீகார் வாலிபர் கைது செய்யப்பட்டார். #Aadhaarcard

    திருப்பூர்:

    திருப்பூர் செவாந்தம் பாளையம் சாமந்த தோட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருந்த வங்க தேசத்தை சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் விசாரித்த போது தங்களுக்கு ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை அவினாசி ரங்கா நகரில் தங்கி இருந்த பீகார் வாலிபர் ராம்சிஷ் வர்மா (34) என்பவர் அச்சடித்து கொடுத்தார் என கூறி இருந்தனர்.

    அவரை போலீசார் தேடி வந்தனர். அவர் கொல்கத்தாவில் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கொல்கத்தா சென்ற தனிப்படை போலீசார் ராம்சிஷ் வர்மாவை கைது செய்தனர்.

    அவரிடம் இருந்து லேப்-டாப், கருவிழி மற்றும் கைரேகை பதிவு செய்ய கூடிய கருவி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    அவருக்கு உதவியாக இருந்த அவினாசி ரங்கா நகரை சேர்ந்த சவரிமுத்து (54) என்பவரும் கைது செய்யப்பட்டார்.

    அவர்கள் இருவரிடமும விசாரணை நடத்திய போது திருப்பூர் சங்கேரி பாளையத்தில் வசித்து வரும் பீகாரை சேர்ந்த ரவிசங்கர் சிங் (28) என்பவர் தான் தங்களுக்கு போலி ஆதார் கார்டு தொடர்பாக ஆட்களை அனுப்பி வைத்ததாக தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து ரவிசங்கர் சிங்கை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடம் கூறும் போது, வட மாநில வாலிபர்களை போலி ஆதார் கார்டு மூலம் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலைக்கு அமர்த்தியதாக தெரிவித்தார்.

    ரவிசங்கர் சிங் மூலம் போலி ஆதார் கார்டு பெற்று திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் வட மாநில வாலிபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் வங்கதேச வாலிபர்கள் வேறு யாராவது உரிய ஆவணங்கள் இன்றி தங்கி உள்ளார்களா? என்பது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. #Aadhaarcard

    திருப்பூரில் வங்கதேச வாலிபர்கள் 500 பேருக்கு போலி ஆதார் அட்டையை தயாரித்து கொடுத்ததாக பீகார் வாலிபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. #Aadhaarcard

    திருப்பூர்:

    திருப்பூர் செவந்தாம்பாளையம் சாமந்த தோட்டத்தில் எந்த ஆவணங்களும் இன்றி தங்கியிருந்த வங்க தேசத்தை சேர்ந்த 8 பேரை திருப்பூர் போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். கைதானவர்களிடம் விசாரித்த போது தங்களுக்கு ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை அவினாசி ரங்கா நகரில் தங்கி இருந்த பீகார் வாலிபர் ராம்சிஷ் வர்மா (34) அச்சடித்து கொடுத்தார் என கூறி இருந்தனர்.

    ஒரு ஆதார் அட்டைக்கு ரூ. 6 ஆயிரம் கொடுத்ததாகவும் கூறி இருந்தனர். இதனை தொடர்ந்து ராம்சிஷ் வர்மாவை பிடிக்க திருப்பூர் போலீசார் அவினாசி சென்றனர். போலீசார் வருவதை அறிந்த ராம்சிஷ் வர்மா தலைமறைவாகி விட்டார்.

    அவர் கொல்கத்தாவில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கொல்கத்தா சென்ற தனிப்படையினர் ராம்சிஷ் வர்மாவை கைது செய்தனர். அவரிடமிருந்து லேப் -டாப், கருவிழி மற்றும் கைரேகை பதிவு செய்ய கூடிய கருவிகளை போலீசார் கைப்பற்றினார்கள்.

    ராம்சிஷ் வர்மாவுக்கு வீடுபார்த்து கொடுத்து உதவியாக இருந்த அவினாசி ரங்கா நகரை சேர்ந்த சவரி முத்து (54) என்பவரும் கைது செய்யப்பட்டார்.

    ராம்சிஷ் வர்மாவிடம் விசாரித்த போது அவர் பீகாரில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்த போது கொடுத்த ஐ.டி.யில் இருந்து அவினாசியில் போலி ஆதார் அட்டை அச்சடித்து கொடுத்தது தெரிய வந்தது.

     


    அவர் திருப்பூர் மற்றும் பீகாரில் 500-க்கும் மேற்பட்டோருக்கு போலி ஆதார் அட்டைகளை அச்சடித்து வினியோகித்து இருக்கலாம் என தெரிய வந்து உள்ளது.

    திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் வங்கதேசத்தினர் ஊடுருவல் அதிக அளவில் உள்ளது. கடந்த 2 வருடங்களாக திருப்பூரில் தங்கி இருந்த ராம்சிஷ் வர்மா பலருக்கும் உதவி இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.அவருக்கு பின்னணியில் யாரும் உள்ளார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராம்சிஷ் வர்மாவிடம் போலி ஆதார் அடையாள அட்டை பெற்றவர்கள் திருப்பூரில் எங்கெங்கு தங்கி உள்ளார்கள் என்பது குறித்து விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

    ராம்சிஷ் வர்மா வினியோகித்துள்ள ஆதார் அட்டைகள் அரசின் சர்வரில் இணைக்கப்பட்டு பெறப்பட்டதா? என்பது குறித்து மத்திய அரசின் மின்னணுவியல் துறை துணை இயக்குனர் அசோக் லெனின் நேற்று 2-வது நாளாக திருப்பூரில் விசாரணை நடத்தினார்.

    இது குறித்து திருப்பூர் மாநகர போலீஸ் கமி‌ஷனர் மனோகரன் கூறும் போது, பெங்களூருவில் இருந்து வந்த ஆதார் துணை இயக்குனர் திருப்பூரில் 2 நாட்கள் விசாரணை நடத்தி சென்று உள்ளார்.

    கைதான பீகார் வாலிபர் எந்தெந்த குறியீடுகளில் இருந்து ஆதார் பதிவு செய்துள்ளார் என்ற தகவல் திரட்டப்பட்டு வருகிறது. முழுமையான தகவல் கிடைத்தால் மட்டுமே இந்த வி‌ஷயத்தில் முழு எண்ணிக்கை தெரிய வரும் என்றார். #Aadhaarcard

    திருப்பூரில் வங்க தேச வாலிபர்களுக்கு போலி ஆதார் கார்டு தயாரித்து கொடுத்த பீகார் வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. #Aadhaarcard

    திருப்பூர்:

    பனியன் நகரமான திருப்பூரில் வெளி நாடு, வெளி மாநிலம், வெளி மாவட்ட தொழிலாளர்கள் ஏராளமானோர் தங்கி இருந்து பனியன், டையிங் தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இவர்களில் வெளி நாட்டு வாலிபர்கள் சிலர் முறையான ஆவணம் இன்றி தங்கி இருப்பதாக போலீசாருக்கு புகார் வந்தது. அதன் படி போலீசார் செவந்தாம் பாளையம் சாமந்த தோட்டத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    அப்போது அங்கு அனுமதியின்றி தங்கி இருந்த வங்க தேசத்தை சேர்ந்த அலமின், அஸ்ரபுல் இஸ்லாம், பர்கத் உசேன், போலஸ் சந்தரா சொர்க்கர், முகமது ரோணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இவர்களுக்கு உதவியதாக முகமது பாபுல் உசேன், மோமின்வார் உசேன், ரோபின் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் சோதனை செய்த போது போலி ஆதார் அட்டை இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    இந்த அட்டையை திருப்பூரை சேர்ந்த ஒரு புரோக்கர் மூலம் அவினாசி ரங்கா நகரில் வசித்து வந்த பீகாரை சேர்ந்த ஆசிஷ் வர்மா என்பவர் தயாரித்து கொடுத்ததாக கூறினார்கள். ஒரு ஆதார் கார்டு தயாரிக்க ரூ. 6 ஆயிரம் கொடுத்ததாகவும் கூறி இருந்தனர்.

    பின்னர் கைதான 8 பேரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    வங்க தேச வாலிபர்களுக்கு போலி ஆதார் கார்டு தயாரிக்க உதவிய புரோக்கர் ஏற்கனவே போலீஸ் பிடியில் சிக்கினார். பீகார் வாலிபர் ஆசிஷ் வர்மாவை தேடி திருப்பூர் போலீசார் அவினாசி சென்றனர்.

    ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையில் தனிப்படை போலீசார் பீகார் சென்றனர்.

    அங்குள்ள நோவாலா மாவட்டத்தில் பதுங்கி இருந்த ஆசிஷ் வர்மாவை கைது செய்தனர்.அவரிடம் இருந்து லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது. அவரை திருப்பூர் அழைத்து வந்தனர்.

    பின்னர் அவர் போலி ஆதார் கார்டு அச்சடித்து கொடுத்த அவினாசிக்கு அழைத்து வந்து அங்குள்ள அறையில் சோதனை நடத்தினர்.

    அங்கு கம்ப்யூட்டர், ஐ ஸ்கேனர், கைரேகை ஸ்கேனர் இருந்தது. அதனை பறிமுதல் செய்தனர். ஏராளமான போலி ஆதார் அட்டை இருந்தது. அதனையும் போலீசார் கைப்பற்றினார்கள்.

    ஆசிஷ் வர்மாவிடம் விசாரித்த போது அவர் பீகாரில் கம்ப்யூட்டர் மையம் நடத்தி வருவது தெரிய வந்தது. அந்த மையத்தின் பாஸ்வேர்டு மூலம் அவினாசி மையத்தில் இருந்து போலி ஆதார் கார்டு அச்சடித்து கொடுத்துள்ளார்.

    திருப்பூரில் வேலை பார்த்து வரும் வெளி மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோருக்கு ஆசிஷ் வர்மா போலியாக ஆதார் கார்டு அச்சடித்து கொடுத்ததாக கூறி உள்ளார்.இவரிடம் போலி ஆதார் கார்டு பெற்றவர்கள் எங்கு தங்கி உள்ளனர் என்பது தொடர்பாக போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். வர்மாவை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Aadhaarcard

    திருப்பூரில் விநாயகர் கோவிலில் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் குலாளர் பிள்ளையார் கோவில் உள்ளது. இக்கோவில் பூசாரியாக மயில் சாமி இருந்து வருகிறார்.

    நேற்று இரவு இவர் பூஜை முடித்து கோவிலை பூட்டி சென்றார். இன்று காலை கோவிலை திறக்க வந்தார். அப்போது கோவிலின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அவர் உள்ளே சென்று பார்த்த போது கோவிலில் வைக்கப்பட்டு இருந்த 2 உண்டியலின் சீல் உடைக்கப்பட்டு தனியாக கிடந்தது.ஆனால் உண்டியலில் இருந்த பணம் எதுவும் திருட்டு போகவில்லை. கோவில் அலுவலக அறைக்கு சென்ற போது அந்த அறை உடைக்கப்பட்டு அங்கிருந்த பீரோ திறந்து கிடந்தது.

    அங்கு சாமிக்கு அணிவிக்கப்படும் தங்க தகடு மற்றும் வெள்ளி பொருட்கள் இருந்தது. அவைகள் திருட்டு போய் இருந்தது. ரொக்கபணம் ஆகியவை திருட்டு போனது.இது குறித்து பூசாரி மயில் சாமி கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

    அவர்கள் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் திருப்பூர் தெற்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் தென்னரசு மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.கைரேகை நிபுணர்களும் வரவைழக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். கொள்ளை போன பொருட்களின் மதிப்பு உடனடியாக தெரியவில்லை. அதனை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    கோவிலில் வைக்கப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமிராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு மேல் 2 வாலிபர்கள் கோவிலுக்குள் நுழையும் காட்சி பதிவாகி உள்ளது.

    அந்த காட்சியை வைத்து கொள்ளையர்களை அடையாளம்காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்த கொள்ளை சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
    திருப்பூர்:

    சர்வதேச பேரிடர் துயர் குறைப்பு தினத்தை முன்னிட்டு பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி மற்றும் தீ தடுப்பு பயிற்சி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. முன்னதாக கலெக்டர் அலுவலக குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் வைக்கப்பட்டுள்ள தீ தடுப்பு மற்றும் மீட்பு பணி கருவிகள் கண்காட்சியை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி திறந்து வைத்து பார்வையிட்டார்.

    இது குறித்து கலெக்டர் கூறியதாவது:-



    பேரிடர் காலங்களில் தங்களை பாதுகாத்து கொள்ள எச்சரிக்கை மிக அவசியம் என்பதை உறுதிபடுத்தவே இந்த தீ தடுப்பு மற்றும் பேரிடர் ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பொது மக்களும் மழை, வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக ஆறு மற்றும் குளங்களை கடக்கும் போது பாதுகாப்புடன் செல்ல வேண்டும். அதே போல் தண்ணீர் சூழ்ந்த பகுதியில் மின் இணைப்பை துண்டித்து வைக்க வேண்டும்.

    மேலும் தரை பாலங்களில் தண்ணீர் செல்லும் போது அதை கடப்பதை தவிர்க்க வேண்டும். மற்றும் இடி, மின்னல் காலங்களில் மின்சாதன பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை காய்ச்சிய குடிநீரை பயன்படுத்த வேண்டும். மழை வெள்ளங்களில் எந்த அளவிற்கு தங்களை பாதுகாத்து கொள்ள முடியுமோ அந்த அளவிற்கு எச்சரிக்கையுடன் இருந்து விபத்து மற்றும் இயற்கை இடர்பாடுகளிலிருந்து தங்களை முழுமையாக பாதுகாத்துக் கொள்ளவேண்டும். பேரிடர் காலங்களில் மீட்பு பணியில் ஈடுபடும் வீரர்கள், தன்னார்வ தொண்டு அமைப்புகள் அர்ப்பணிப்புடனும் மற்றும் துரிதகதியிலும் செயல்பட்டு விபத்தை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் பேரிடர் காலத்தில் மழை, வெள்ளத்தின் போது தண்ணீரில் சிக்கியவர்களை மீட்பது மற்றும் முதலுதவி சிகிச்சை வழங்குதல், தீ மற்றும் மின் கசிவினால் ஏற்படும் விபத்துகளை தடுப்பது, உயரமான கட்டிடங்களில் இருந்து மக்களை பாதுகாப்பாக மீட்பது, கால்நடைகளை மழை வெள்ளத்தின் போது பாதுகாப்பது குறித்த தகவல்களை கூறியதுடன், தீயணைப்பு வீரர்கள் இதுகுறித்து ஒத்திகையும் நடத்தி காண்பித்தார்கள். இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சாதனைக்குறள், மாவட்ட வழங்கல் அதிகாரி முருகன், உதவி ஆணையர் (கலால்) சக்திவேல், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, உதவி அலுவலர் வெங்கட்ராமன், நிலைய அலுவலர்கள் பாஸ்கரன், சண்முகம், தாசில்தார்கள் கனகராஜ் (பேரிடர் மேலாண்மை), ரவிச்சந்திரன் (திருப்பூர் தெற்கு), ராஜகோபால், அம்சவேணி, முருகதாஸ், உள்ளிட்ட அனைத்து அரசு துறை அதிகாரிகள், கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்புகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 
    திருப்பூர், கோவை, நீலகிரியில் பலத்த மழை பெய்தது. மழை காரணமாக பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு நீர் வீழ்ச்சியில் திடீர் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.
    திருப்பூர்:

    கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெயில் அடித்து வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் திருப்பூரில் திடீரென மேகம் திரண்டு பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது.

    இந்த மழை இரவு 7 மணி வரை 2 மணி நேரம் நீடித்தது. இதே போல் தாராபுரம், காங்கயம், மூலனூர், அவினாசி, பல்லடம், உடுமலை பேட்டை ஆகிய பகுதிகளிலும் மழை நீடித்தது.

    திருப்பூரில் பெய்த மழை காரணமாக அங்குள்ள ஈஸ்வரன் கோவில் வீதி பாலம், அவினாசி சாலை, எம்.ஜி.ஆர். சிலை ஆகிய பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்தனர். திருப்பூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு-

    அவினாசி - 10.6, திருப்பூர் -28, பல்லடம் -17, தாராபுரம்-16, காங்கயம் -4, மூலனூர் -21, உடுமலை பேட்டை - 5.40.

    கோவை மாவட்டத்திலும் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. கோவை நகரில் லேசான மழை பெய்தது. மேட்டுப்பாளையத்தில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது.

    வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்தது. வால்பாறை சத்தி எஸ்டேட் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு நீர் வீழ்ச்சியில் திடீர் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.

    செம்மண் நிறத்தில் தண்ணீர் கொட்ட தொடங்கியது. அருவியில் குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் அங்கிருந்து வெளியேற்றினார்கள். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள். பொள்ளாச்சியிலும் மழை பெய்தது.

    நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு விடிய, விடிய பலத்த மழை பெய்தது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பைக்காரா உள்ளிட்ட பகுதிகளில் இந்த மழை நீடித்தது. அதிகாலை 4 மணி வரை மழை பெய்தது.

    மழை காரணமாக இன்று ஊட்டிக்கு சுற்றுலா வரும் பயணிகள் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டது.
    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள பல்லடம் ரோட்டில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
    திருப்பூர்:

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள பல்லடம் ரோட்டில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர்கள் ஞானசேகரன், ரோஸ்மேரி, அன்வருல்ஹக், இளங்கோவன், மாவட்ட இணை செயலாளர்கள் ராமன், ராணி, பி.தங்கவேல், எம்.தங்கவேல் ஆகியோர் முன்னிலைவகித்தனர். மாவட்ட செயலாளர் அம்சராஜ், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் குமரேசன், டி.ஒய்.எப்.ஐ. மாவட்ட தலைவர் நந்தகோபால், எஸ்.எப்.ஐ. மாவட்ட செயலாளர் சம்சீர் அகமது ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.

    போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள ரோட்டில் கைகளை பிடித்தபடி வரிசையாக நின்று கொண்டு, அரசுத்துறைகளில் உள்ள பணியிடங்களை ஒழிக்க அமைக்கப்பட்டுள்ள கமிட்டியை ரத்து செய்ய வேண்டும். அரசுப்பணியை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் முயற்சியை கைவிட வேண்டும். அரசுத்துறைகளின் வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். 
    தொடர்ந்து மழை பெய்து வருவதால் கேரள மக்களின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகையை அரசு ரத்து செய்து உத்தரவிட்டது. இதனால் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. #KeralaRain #Onam
    கோவை:

    தென்மேற்கு பருவமழை காரணமாக கேரள மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமானோர் பலியாகி உள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் கேரள மக்களின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகையை அரசு ரத்து செய்து உத்தரவிட்டது.

    இதனால் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து ஓணம் பண்டிகைக்கு ஏற்றுமதி செய்யப்படும் காய்கறிகள், பழங்கள் மற்றும் பின்னலாடை ஆகியவை தேக்கம் அடைந்துள்ளது. இதனால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர் ஒருவர் கூறியதாவது:-

    கேரளாவில் ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும். இதற்காக ஆண்டு தோறும் திருப்பூர் மாவட்டத்தில் தயாரிக்கப்படும் பின்னலாடைகள் 10 நாட்களுக்கு முன்பு அங்கு அனுப்பி வைக்கப்படும்.

    இந்த வருட ஓணம் பண்டிகைக்காக கடந்த ஜூன், ஜூலை மாதத்தில் திருப்பூரில் உள்ள 100 முதல் 150 பின்னலாடை உற்பத்தியாளர்கள் ரூ. 10 கோடிக்கு ஆர்டர் பெற்று இருந்தனர். ஆர்டர் பெறப்பட்ட அனைத்து ஆடைகளும் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்ப தயாராக உள்ளது. தற்போது அங்கு கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அனைத்து பின்னலாடைகளும் தேக்கம் அடைந்துள்ளது. ரெயில் மூலம் அனுப்பினாலும் அங்கு விற்க முடியாத நிலை உள்ளதால் பின்னலாடைகளை அனுப்ப முடியாமல் உற்பத்தியாளர்கள் உள்ளனர்.


    இவ்வாறு அவர் கூறினார்.

    கேரள மாநிலத்துக்கு கோவை மார்க்கெட்டில் இருந்து தினசரி ஆயிரம் டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும். ஓணம் பண்டிகை காலங்களில் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் டன் காய்கறிகள் கொண்டு செல்லப்படும். தற்போது அங்கு கனமழை பெய்து வருவதால் காய்கறிகளை அனுப்ப முடியாத நிலை உள்ளது. இதனால் ரூ. 6 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    ஓணம் பண்டிகை கொண்டாட்டத்துக்காக கேரளாவை சேர்ந்த கோவில் நிர்வாகத்தினர், கல்வி நிறுவனத்தினர் கோவையில் உள்ள பூமார்க்கெட்டுக்கு வந்து பூக்களை வாங்கி செல்வது வழக்கம். தற்போது அங்கு பெய்து வரும் கனமழை காரணமாக ஓணம் பண்டிகை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பூக்கள் விற்பனையும் பாதிக்கப்பட்டு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. #KeralaRain #Onam
    கோவிலில் உண்டியலை உடைத்து ரூ.6 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களை கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர்.
    அனுப்பர்பாளையம்:

    திருப்பூர் பி.என்.ரோடு காட்டன்மில் ரோட்டை அடுத்த ஜீவா நகரில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. கடந்த 25-ந்தேதி இரவு கோவில் பூசாரி வழக்கம் போல கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது கோவில் உண்டியலில் பூட்டப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் அங்கு சில்லரை காசுகள் சிதறி கிடந்தன. இந்த நிலையில் ராதாநகர் பகுதியில் உள்ள மறைவிடத்தில் 2 சிறுவர்கள் பணத்தை எண்ணி கொண்டிருந்தனர். இதை பார்த்து சந்தேகமடைந்த அப் பகுதி மக்கள் அவர்களை பிடித்து விசாரித்தனர்.

    இதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதை தொடர்ந்து 2 பேரையும் பிடித்து அனுப்பர்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் திருப்பூர் தொட்டி மண்ணரையை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும், மற்றொருவன் ஊத்துக்குளியை அடுத்த மொரட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் என்பதும் தெரிய வந்தது. மேலும் இருவரும் சேர்ந்து கோவிலில் உண்டியலை உடைத்து ரூ.6 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றதும் தெரிந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ×