search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒடிசா"

    ஒடிசாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நாட்டின் அனைத்து அமைப்புகளையும் அடக்கியாள ஆர்எஸ்எஸ் நினைக்கிறது என குற்றம்சாட்டினார். #RahulGandhi
    புவனேஷ்வர்:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒடிசா மாநிலத்துக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று சென்றார். புவனேஸ்வரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    நாடு முழுவதும் தான் மட்டுமே இருக்க வேண்டும் என்ற நோக்கில் அனைத்து அமைப்புகளையும் அடக்கியாள நினைக்கிறது ஆர்.எஸ்.எஸ்.

    பா.ஜ.க.வின் தாய் கழகமாக ஆர்எஸ்எஸ் செயல்பட்டு வருகிறது. கல்வி, நீதித்துறை என அனைத்திலும் அவர்கள் ஊடுருவி உள்ளனர். நடுத்தர மக்கள் கோடிக்கணக்கில் பணம் செலுத்தியும் தரமான கல்வி கிடைப்பதில்லை. மருத்துவ துறையிலும் இதே நிலை தான். இவை அனைத்தும் மாற்றப்பட வேண்டும்.



    கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் மாற்றம் வேண்டும். இந்தியாவில் உற்பத்தி நிறுத்தப்பட்டதால் வேலைவாய்ப்பு பெரிய சவாலாக உள்ளது. நாங்கள் மக்களின் தேவைகளை கேட்கிறோம்.

    மோடி என்னை வசைபாடும் போது எல்லாம் அவர் என்னை கட்டியணைத்துக் கொள்வதை போல் நினைத்துக் கொள்கிறேன். மோடிக்கு என்னிடமும், எனக்கு மோடியிடமும் பல கருத்து வேறுபாடுகள் உள்ளது. அவரை எதிர்க்கிறேன். அவர் பிரதமராக இல்லாமல் இருந்திருந்தால் அவரை நான் வெறுக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார். #RahulGandhi
    ஒடிசாவின் கந்தமால் பகுதியில் லாரி கவிழ்ந்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். #OdishaTtruckAccident
    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தின் கலிங்கி பகுதியில் இருந்து பிராமணிகாவ் நோக்கி மினி லாரி இன்று சென்று கொண்டிருந்தது. அதில் சுமார் 40க்கு மேற்பட்டோர் பயணம் செய்தனர். 

    பாலிகுடா காவல் சரகத்திற்கு உட்பட்ட பொய்குடா மலைப்பகுதியில் உள்ள ஒரு வளைவில் திருப்ப முற்பட்டபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டினை இழந்த லாரி பள்ளத்தில் திடீரென கவிழ்ந்து விழுந்தது. 

    இந்த விபத்தில் 8 பேர் இறந்தனர்.  25 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு பெர்ஹாம்பூரில் உள்ள எம்.கே.சி.ஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக முதல் கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து லாரி கவிழ்ந்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    லாரி விபத்தில் பலியானோருக்கு முதல் மந்திரி நவீன் பட்நாயக் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார். #OdishaTtruckAccident 
    ஒடிசாவில் உள்ள கந்தமால் பகுதியில் லாரி கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலியாகினர். மேலும் 25 பேர் படுகாயமடைந்தனர். #Odisha #truckoverturns
    பலிகுடா:

    ஒடிசாவின் கந்தமால் மாவட்டம், பாலிகுடா காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் இன்று காலை லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த லாரியில் சுமார் 40-50 பேர் கதாபூரில் இருந்து பிராமணிகான் நோக்கி பயணம் செய்துள்ளனர். 



    பொய்குடா மலைப் பகுதியில்  உள்ள ஒரு வளைவில் திருப்ப முற்பட்டபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டினை இழந்த லாரி, பள்ளத்தாக்கில் திடீரென கவிழ்ந்தது.

    இதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 25 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பெர்ஹாம்பூரில் உள்ள எம்.கே.சி.ஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.  #Odisha #truckoverturns
    சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் தாக்குதலில் கொல்லப்பட்ட தூர்தர்ஷன் தொலைக்காட்சி கேமராமேன் அச்சுத்யானந்த் சாஹு பெற்றோரை பிரதமர் மோடி இன்று சந்தித்து ஆறுதல் கூறினார். #Modi #Doordarshancameraman #AchutyanandSahu
    புவனேஸ்வர்:

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்து முடிந்த சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல் நிலவரங்கள் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற தூர்தர்ஷன் தொலைக்காட்சி கேமராமேன் அச்சுத்யானந்த் சாஹு(34) என்பவர் அப்பகுதியில் கடந்த 30-10-2018 அன்று துணை ராணுவப் படையினரை குறிவைத்து நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் பலாங்கிர் நகரில் இன்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக வந்த பிரதமர் மோடி இங்கு அச்சுத்யானந்த் சாஹுவிப் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார். #Modi #Doordarshancameraman #AchutyanandSahu
    ஒடிசா மாநிலத்தில் 1550 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். #PMModi #ModiinOdisha
    புவனேஸ்வர்:

    பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், நிறைவேற்றப்பட்ட புதிய திட்டங்களை தொடங்கி வைக்கவும் ஒருநாள் பயணமாக ஒடிசா மாநிலத்துக்கு வந்துள்ளார்.

    பாலாங்கிர் நகரில் நடைபெற்ற விழாவில் ஜார்சுகுடா-விஜியநகரம் மற்றும் சம்பல்பூர்-அங்குல் பாதையில் ரூ.1085 கோடி செலவில்  813 கிலோமீட்டர் தூரத்துக்கு மின்சாரமயமாக்கப்பட்ட ரெயில்வே வழித்தடத்தை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். 

    15 கிலோமீட்டர் நீளத்தில் 115 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பாலாங்கிர்-பிச்சுப்பலி ரெயில் பாதையையும் திறந்து வைத்தார். இந்த வழித்தடத்தில் செல்லும் புதிய ரெயில் சேவையயும் கொடியசைத்து மோடி தொடங்கி வைத்தார்.

    100 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பண்டக கிடங்கு. 27.4 கோடி ரூபாயில் கட்டப்பட்ட ரெயில்வே பாலம் மற்றும் 6 புதிய பாஸ்போர்ட் சேவை மையங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.

    சித்தேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சில கோவில்கள் மற்றும் நினைவகங்களை புதுப்பித்து புனரமைக்கும் பணிகளையும் தொடங்கி வைத்த மோடி சோனேபூர் பகுதியில் 15.81 கோடி ரூபாய் செலவில் கேந்திர வித்யாலயா பள்ளி கட்டும் பணிக்கும் அடிக்கல் நாட்டினார். #PMModi #ModiinOdisha
    ஒடிசாவில் திருமணம் செய்து கொண்ட இரண்டு இளம்பெண்கள் தங்களை பிரிக்க முயன்றால் ஒன்றாக தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டல் விடுத்துள்ளனர்.
    கட்டாக்:

    ஒடிசா மாநிலம் கட்டாக் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சபித்ரி பரிடா (வயது 27), மோனலிசா நாயக் (28) ஆகிய 2 பெண்கள் வேலைபார்த்து வந்தனர். கல்லூரி படிக்கும் போதே தோழிகளாக இருந்த இவர்கள் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்தனர். இணைபிரியா தோழிகளான இருவரும் கட்டாக்கில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

    பின்னர், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டே ஓரினச்சேர்க்கை தவறில்லை என்று தீர்ப்பளித்து உள்ளது. இதையடுத்து சபித்ரியும், மோனலிசாவும் அரசு வக்கீல் முன்னிலையில் பதிவுத்திருமணம் செய்து கொண்டனர்.

    இதை அவர்களின் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எங்களை பிரிக்க முயன்றால் ஒன்றாக தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டல் விடுத்துள்ளனர். 
    ஒடிசா மாநிலத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும் என முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். #Patnaik #SelfHelpGroups
    பூரி:

    ஒடிசா மாநிலம் பூரி நகரில் இன்று ‘மிசன் சக்தி’ என்ற பெயரில் பெண்கள் மாநாடு நடைபெற்றது. இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த சுமார் 50 ஆயிரம் பெண்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பேசிய முதலமைச்சர் நவீன் பட்நாயக், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

    வட்டியில்லா கடன் வழங்குவதன் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 70 லட்சம் பெண்கள் பயனடைவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    மேலும், பெண்களுக்கு அதிகாரமளிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தலா 3000 ரூபாய் நிதி உதவியையும் அவர் வழங்கினார். 

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ‘மேக் இன் ஒடிசா’ கருத்தரங்கில் பேசிய பட்நாயக், மாநிலத்தில் உள்ள 6 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும் ஸ்மார்ட்போன் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது. #Patnaik #SelfHelpGroups
    ஒடிசாவில் மகாநதி ஆற்றில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இதுவரை 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர். #OdishaBoatTragedy #NaveenPatnaik
    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலம் கேந்த்ரபாரா மாவட்டத்தில் உள்ள ஹசினா மற்றும் கண்ட்கிபூர் கிராமங்களில் இருந்து சுமார் 19 குடும்பத்தினர் புத்தாண்டை கொண்டாட ஹுகிடோலா தீவுக்கு நேற்று முன்தினம் சுற்றுலா சென்றனர். அவர்கள் சென்ற படகில் 6 ஆன்கள், 27 பெண்கள் மற்றும் 22 குழந்தைகள் பயணம் செய்தனர்.

    மகாநதி ஆற்றுப்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென படகு நிலைதடுமாறியது. இதில்  படகு நிலை தடுமாறி ஆற்றில் கவிழந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் படகில் பயணம் செய்த அனைவரும்  நீரில் மூழ்கினர்.

    தகவலறிந்து கடலோர காவல் படையினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்களுடன் உள்ளூர் மீனவர்களும் சேர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதில் 45 பேரை உயிருடன் மீட்டனர். 



    இந்நிலையில், இன்று அதிகாலை ஆற்றில் இருந்து 9 பேரின் உடல்களை மீட்புக்குழுவினர் மீட்டனர். மேலும், காணாமல் போன ஒருவரை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    படகு விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ஒடிசா மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக் ஆழ்ந்த இரங்கலை  தெரிவித்தார். விபத்தில் இறந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்றார்.
    #OdishaBoatTragedy #NaveenPatnaik
    பாராளுமன்ற தேர்தலில் மூன்றாவது அணிக்கு ஆதரவு திரட்டும் வகையில், ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக்கை தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் இன்று சந்தித்தார். #ChandrasekharRao #NaveenPatnaik
    புவனேஷ்வர்:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வருவதையொட்டி அரசியல் கட்சிகள் முன்னேற்பாடு பணிகளில் இறங்கி உள்ளன. சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றிமுகம் காட்டிய காங்கிரஸ், அதே வேகத்தோடு பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டி வருகிறது. 5 மாநில தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் மீதும், ராகுல்காந்தி மீதும் எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது.
     
    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க தலைமையில் ஓர் அணியும், காங்கிரஸ் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடும் நிலை உள்ளது.

    இதற்கிடையே, பா.ஜ.க அணியிலும், காங்கிரஸ் அணியிலும் சேராமல், மாநில கட்சிகள் ஒருங்கிணைந்து 3-வது அணி ஒன்றை அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவரும், தெலுங்கானா முதல்-மந்திரியுமான சந்திரசேகர ராவ் யோசனை தெரிவித்தார்.

    இது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் சென்னையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். இதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியையும் சந்தித்தார்.



    தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிட்ட போதிலும், 3-வது அணி அமைக்கும் முயற்சியில் சந்திரசேகர ராவ் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது. பிராந்திய கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் மாநிலங்களில் பா.ஜ.க மற்றும் காங்கிரசுக்கு எதிராக 3-வது அணி அமைத்து போட்டியிட்டால் அந்த அணியை மக்கள் ஆதரிப்பார்கள் என்று அவர் நம்புகிறார். இதுதொடர்பாக அவர் முக்கிய கட்சிகளின் தலைவர்களை சந்திக்க இருக்கிறார்.

    இந்நிலையில், தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் இன்று ஒடிசாவிற்கு சென்றார். தலைநகர் புவனேஷ்வரில் ஒடிசா முதல் மந்திரியை நேரில் சந்தித்தார். அவருக்கு நினைவு பரிசு அளித்தார். அப்போது மூன்றாவது அணி தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர்.

    இதையடுத்து, மேற்கு வங்காளத்தின் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, உ.பி.யில் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. #ChandrasekharRao #NaveenPatnaik
    ஒடிசா மாநில சட்டசபையில் விவசாயிகள் நலனுக்காக ரூ.10 ஆயிரம் கோடியில் புதிய திட்டம் இன்று நிறைவேற்றப்பட்டது. #OdishaCabinet #NaveenPatnaik #KALIAscheme
    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநில சட்டசபையில் விவசாயிகள் நலனுக்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான காலியா திட்டம் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் இன்று நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பாக முதல் மந்திரி நவீன் பட்நாயக் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    ஒடிசா மாநில சட்டசபையில் இன்று வரலாற்று சிறப்புமிக்க திட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. காலியா திட்டம் என அழைக்கப்படும் இத்திட்டம் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது.

    இந்த திட்டத்தினால் ஒடிசாவில் உள்ள 32 லட்சம் விவசாயிகளில் 92 சதவீதம் பேர் பலனடைவார்கள். விவசாயிகளின் வறுமையைப் போக்கும் விதமாக அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

    காலியா திட்டத்தின் மூலம் ஏழை விவசாயிகள் தாங்கள் வாங்கிய வங்கி கடன்களை அடைக்க முடியும். இந்த திட்டம் விவசாயிகளுக்கு ஆதரவானது மட்டுமின்றி நிலமற்றவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவுவது உள்ளிட்ட பல்வேறு பயன்களை பெறமுடியும் என தெரிவித்தார். #OdishaCabinet #NaveenPatnaik #KALIAscheme
    நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாசலபிரதேசம் ஆகிய மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் திட்டமிட்டு உள்ளது. #AndhraPradesh #Odisha #Sikkim #AssemblyPolls #LokSabhaElections
    புதுடெல்லி:

    ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாசலபிரதேசம் ஆகிய 4 மாநில சட்டசபைகளின் ஆயுட்காலம் அடுத்த ஆண்டு(2019) மே மற்றும் ஜூன் மாதங்களில் முடிவடைகிறது. இதனால் அங்கு கட்டாயம் தேர்தல் நடத்தவேண்டிய நிலை உள்ளது. அதேநேரம் நாடாளுமன்றத்துக்கும் அடுத்த ஆண்டு மே மாத வாக்கில் தேர்தல் நடைபெறுகிறது.

    இதனால் நாடாளுமன்றத்துக்கு தேர்தலை நடத்தும்போது இந்த 4 மாநிலகளுக்கும் சேர்த்தே தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டு உள்ளது. இதேபோல் அண்மையில் கலைக்கப்பட்ட காஷ்மீர் மாநில சட்டசபைக்கும் வருகிற மே மாதம் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படு கிறது. இதுபற்றி தேர்தல் கமிஷன் அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-



    ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாசலபிரதேச மாநிலங்களில் இதற்கு முந்தைய முன்மாதிரிகளைக் கொண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்படும். அதேநேரம் காஷ்மீரில் அடுத்த 6 மாதத்துக்குள் தேர்தலை நடத்தி முடிக்கவேண்டும். இதற்கான அதிக பட்ச கால அவகாசம் மே மாதத்துடன் முடிகிறது. அதற்குள்ளாகவே அங்கும் தேர்தலை நடத்தவேண்டிய நிலையும் உள்ளது. காஷ்மீரில் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தலை நடத்தும் போதே சட்டசபைக்கும் தேர்தலை நடத்தினால் பாதுகாப்பு படையினரின் தேர்தல் பாதுகாப்பு பணி எளிதாக முடிந்துவிடும் என்று தேர்தல் கமிஷன் கருதுகிறது. இதனால் நாடாளுமன்ற தேர்தலுடன் காஷ்மீர் சட்டசபை தேர்தலும் சேர்ந்தே நடைபெறுவதற்கான வாய்ப்புகளே அதிகம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இன்னொரு அதிகாரி கூறுகையில், “மராட்டியம், அரியானா மாநிலங்களின் சட்டசபை ஆயுட்காலம் 2019-ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் முடிகிறது. இந்த 2 மாநிலங்களிலும் பா.ஜனதா அரசுதான் உள்ளது. அவர்கள் 6 மாதத்துக்குள் சட்டசபையை கலைக்க முன்வந்தால் அந்த 2 மாநிலங்களிலும் சட்டசபை தேர்தலை நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து நடத்துவது பற்றி பரிசீலிக்கப்படும்” என்றார். #AndhraPradesh #Odisha #Sikkim #AssemblyPolls #LokSabhaElections
    ஒடிசாவில் நடைபெற உள்ள ஹாக்கி உலகக் கோப்பைக்கு அனைவரையும் வரவேற்கும் வகையில் சுதர்சன் பட்நாயக் புரி கடற்கரையில் மணல் சிற்பம் உருவாக்கி உள்ளார். #SudarsanPattnaik #SandArt #HockeyWorldCup
    புரி:

    ஒடிசா மாநிலம் புரி மாவட்டத்தைச் சேர்ந்த சர்வதேச மணற்சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக், சமூக அக்கறையுடன் பல்வேறு மணல் சிற்பங்களை உருவாக்கி மக்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளார். மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த தலைவர்களின் பிறந்தநாள், மறைவு, சாதனைகள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை தனது கைவண்ணம் மூலம் மணல் சிற்பங்களாக பிரதிபலிக்கச் செய்கிறார் பட்நாயக்.



    அவ்வகையில், கார்த்திகை பூர்ணிமாவை முன்னிட்டு புரி கடற்கரையில் சுதர்சன் பட்நாயக் ஒரு மணற்சிற்பம் உருவாக்கி வாழ்த்து தெரிவித்துள்ளார். பண்டைய ஒடிசாவின் புகழ்பெற்ற கடல்வழிப் போக்குவரத்தை குறிக்கும் வகையில் படகு சிற்பம் உருவாக்கி உள்ளார். ஒடிசாவில் விரைவில் துவக்க உள்ள உலகக் கோப்பை ஹாக்கி தொடரை குறிக்கும் வகையில் அந்த படகில் வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பம் பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

    அதனை புகைப்படம் எடுத்து தனது டுவிட்டரில் பதிவிட்டு, கார்த்திகா பூர்ணிமா வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்கு அனைவரையும் வரவேற்றுள்ளார். #SudarsanPattnaik #SandArt #HockeyWorldCup
    ×