search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டாக்கத்தி"

    கரூர் அருகே பொது இடத்தில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கரூர்:

    கரூர் அருகே சணப்பிரட்டி செல்லும் ரோட்டில் தொழிற்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவில் வாலிபர்கள் ஒன்று கூடி பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருப்பதாக பசுதிபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது, சிலர் பொது இடத்தில் மேஜை போட்டு பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். போலீசாரை கண்டதும், அவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். போலீசார் விரட்டி சென்று 3 பேரை பிடித்தனர். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள், எஸ்.வெள்ளாளப்பட்டி தொழிற்பேட்டையை சேர்ந்த மணிகண்டன் (வயது 24), நல்லப்ப நகரை சேர்ந்த அசோக் ஆனந்த் (31), தில்லை நகரை சேர்ந்த கார்த்திக் (28) என்பது தெரியவந்தது. மணிகண்டனின் பிறந்தநாளை பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாடினோம் என்று அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும், பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் நீளமான பட்டாக் கத்தியால் கேக் வெட்டியதாக மணிகண்டன், அசோக் ஆனந்த், கார்த்திக் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய சணப்பிரட்டியை சேர்ந்த அசோக் மற்றும் முழியன் என்ற சதானந்தம், தொழிற்பேட்டை நல்லப்ப நகரை சேர்ந்த பாலன், பசுபதிபாளையம் பாரதி நகரை சேர்ந்த பழம் ராஜா உள்ளிட்டவர்களை தேடி வருகின்றனர். அவர்கள் பட்டாக்கத்தியால் கேக் வெட்டுவதை மணிகண்டனின் நண்பர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அதனை போலீசார் ஆதாரமாக வைத்துள்ளனர்.

    அந்த வீடியோவில், பொது இடத்தில் மேஜை போட்டு கேக்கில் மெழுகுவர்த்தி தயாராக இருக்கிறது. அதனை ஊதி அணைக்கின்றனர். பின்னர் வெட்டுடா மச்சான்... என நண்பர்கள் குரல் எழுப்ப, அந்த கேக் பட்டாக்கத்தியால் வெட்டப்படுகிறது. பின்னர் கைத்தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது போல் காட்சிகள் பதிவாகியுள்ளன.

    கரூரில் பட்டாக்கத்தியால் இளைஞர்கள் கேக் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கைது செய்யப்பட்ட மணிகண்டன் மீது பசுபதிபாளையத்தில் 3 வழக்குகளும், கரூர் டவுன் போலீசில் ஒரு வழக்கும் உள்ளன. கார்த்திக் மீது மதுபாட்டில் விற்றதாக ஒரு வழக்கு உள்ளது என போலீசார் தெரிவித்தனர். 
    சென்னை மாநகர பேருந்தில் பட்டாகத்தியுடன் பயணித்த ஒரு மாணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். #StudentsCarryingKnives #PublicNuisance
    சென்னை:

    சென்னையில் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் செய்யும் அட்டகாசம் அதிகரித்தவண்ணம் உள்ளது. குறிப்பாக மாணவர் குழுக்களிடையே பிரச்சினை ஏற்படும்போது, பட்டாக்கத்திகளுடன் பேருந்தில் ஏறி ரகளை செய்கின்றனர். இது மற்ற பயணிகளிடையே பீதியை ஏற்படுத்துகிறது. இத்தகைய மாணவர்களை ஒடுக்க போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.



    இந்நிலையில், நேற்று மாநிலக் கல்லூரி நோக்கி சென்ற மாநகரப் பேருந்தில் ஒரு மாணவன் படிக்கட்டில் அமர்ந்தபடி, பட்டாக்கத்தியை சாலையில் தீப்பொறி பறக்க உரசிக்கொண்டு வந்துள்ளான். இந்த மாணவனின் செயலைப் பார்த்த பயணிகள் அச்சம் அடைந்தனர்.

    இது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்திய அண்ணா சதுக்கம் போலீசார், இது தொடர்பாக மாநிலக் கல்லூரி மாணவர் ஒருவரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், கத்தியுடன் பயணித்த மேலும் 3 மாணவர்கள் இன்று கைது  செய்யப்பட்டுள்ளனர். #StudentsCarryingKnives #PublicNuisance
    கத்தியுடன் பஸ்களில் மாணவர்கள் ரகளை செய்ததை அடுத்து கல்லூரிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் நேற்று கலைக் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இதனை தொடர்ந்து மாணவர்கள் மோதலில் ஈடுபடாமல் தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கைகளை எடுத் தனர்.

    பச்சையப்பன் கல்லூரி, மாநிலக்கல்லூரி உள்ளிட்ட சென்னை மாநகர் முழுவதும் உள்ள கலைக்கல்லூரி மாணவர்களை கல்லூரி தொடங்கும் முன்னரே போலீசார் கண்காணிக்க தொடங்கினர். மாணவர்கள் மாநகர பஸ்களில் கல்லூரிக்கு செல்லும் வழித் தடங்கள் 200-க்கும் மேல் உள்ளன.

    இந்த வழித்தடங்களில் ‘ரூட் தல’யாக (தலைவன் போல) செயல்படும் மாணவர்கள் யார்? என்பதை கண்டுபிடித்து அது போன்ற மாணவர்கள் 75 பேரை பிடித்து போலீசார் எச்சரித்தனர். அவர்களது பெற்றோர்களை கடந்த வாரம் நேரில் அழைத்தும் அறிவுரை வழங்கப்பட்டது.

    போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் கூடுதல் கமி‌ஷனர்கள் சாரங்கன், ஜெயராம் ஆகியோரது மேற்பார்வையில் இப்பணிகள் முடுக்கி விடப்பட்டன. இருப்பினும் நேற்று கல்லூரி திறக்கப்பட்ட முதல்நாளில் போலீசார் மாணவர்கள் பயணித்த பஸ்களில் கடுமையாக சோதனை செய்தனர்.

    அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பல்வேறு இடங்களில் எல்லை மீறும் வகையில் நடந்து கொண்டனர். போலீசார் எதிர்பார்த்ததை விட மாணவர்களின் அத்துமீறல்கள் அதிகமாக இருந்தன.

    சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே பூக்கடை போலீசார் நடத்திய சோதனையில் பட்டாக்கத்திகளுடன் 4 பேர் பிடிபட்டனர். மணலியை சேர்ந்த மணிகண்டன், காஞ்சீபுரம் மாவட்டம் மாத்தூரை சேர்ந்த ஜெகன், திருவள்ளூர் வெங்கல் பகுதியை சேர்ந்த பிரபாகரன் மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் சிக்கினர்.

    இவர்கள் வைத்திருந்த பைகளில் 10 பட்டாக்கத்திகள் இருந்தன. ஒரே அளவில் பளபளவென மின்னிய அந்த 10 பட்டாக்கத்திகளையும் போலீசார் பறிமுதல் செய்து 4 பேரையும் கைது செய்தனர்.

    இவர்களில் மணிகண்டன், ஜெகன் ஆகியோர் முன்னாள் மாணவர்கள். பிரபாகரன் ஐ.டி.ஐ. முடித்துள்ளார்.


    சிறுவன் 10-ம் வகுப்பு முடித்துள்ளான். இவன் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டான். மற்ற 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதே போல மெரினா அண்ணாசதுக்கம் பகுதியில் 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அண்ணா சதுக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி எழிலகம் அருகே நடத்திய சோதனையின் போது அஜித்குமார், சுமன்ராஜ் ஆகிய 2 மாணவர்கள் பிடிபட்டனர்.

    இவர்களும் ஜெயிலில் தள்ளப்பட்டனர். இவர்களிடமிருந்து 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. திருவல்லிக்கேணி பகுதியில் பிடிபட்ட 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் எச்சரித்து அனுப்பப்பட்டனர்.

    இதற்கிடையே நேற்று காலை கோயம்பேட்டில் இருந்து எம்.கே.பி. நகர் நோக்கி சென்ற 46ஜி மாநகர பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏறி டிக்கெட் எடுக்காமல் ரகளையில் ஈடுபட்டனர். அமிஞ்சிகரை என்.எஸ்.கே. நகர் பகுதியில் பஸ் வந்த போது மாணவர்களிடம் டிக்கெட் எடுக்குமாறு கண்டக்டர் கூறினார்.

    ஆனால் இதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். யாரும் டிக்கெட் எடுக்க முன்வரவில்லை. டிக்கெட் எடுக்க மாட்டோம் என்று வாக்குவாதம் செய்தனர்.

    நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு கண்டக்டர் அந்த மாணவர்களை கீழே இறக்கி விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பச்சையப்பன் கல்லூரி முன்னாள் மாணவரான கார்த்திகேயன், பொன்னேரி என்.எம்.அரசு கல்லூரி மாணவரான சக்திவேல் இருவரும் சேர்ந்து பஸ் மீது கல்வீசி தாக்கினர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் அமிஞ்சிகரை இன்ஸ்பெக்டர் முருகன் விரைந்து சென்று விசாரணை நடத்தினார். கார்த்திகேயன், சக்திவேல் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 149 மாணவர்கள் பிடிபட்டனர். இவர்களில் 19 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற மாணவர்கள் எச்சரித்து அனுப்பப்பட்டனர்.

    இந்த நிலையில் சென்னையில் இன்று 2-வது நாளாக கல்லூரிகள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மெரினாவில் உள்ள மாநிலக் கல்லூரி முன்பு உதவி கமி‌ஷனர் ஆரோக்கிய பிரகாசம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மாநில கல்லூரியில் படிக்கும் 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இருப்பினும் கல்லூரிக்கு வந்த முதலாம் ஆண்டு மாணவர்களை போலீசார் பலத்த சோதனைக்கு பின்னரே கல்லூரிக்குள் அனுமதித்தனர். #tamilnews

    சென்னையில் நேற்று கல்லூரிகள் திறந்த முதல்நாளே மாணவர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டனர். பட்டாக்கத்திகளுடன் மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
    சென்னை:

    சென்னையில் நேற்று கல்லூரிகள் திறந்த முதல்நாளே மாணவர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டனர். பட்டாக்கத்திகளுடன் மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    மேலும் நீண்ட முடியுடன் கல்லூரி வந்த மாணவர்களை பிடித்து அவர்களின் முடியை, போலீசார் அழகாக வெட்டி கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சென்னையில் கோடை விடுமுறைக்கு பிறகு கலைக்கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன. விடுமுறை முடிந்து கல்லூரி திறப்பதால், பஸ், ரெயில்களில் வரும் மாணவர்கள் கலாட்டா செய்யக்கூடும் என்பதை முன்கூட்டியே அறிந்து தடுப்பதற்காக போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில் கூடுதல் கமிஷனர்கள் சாரங்கன், ஜெயராமன் ஆகியோர் தலைமையில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

    மாணவர்கள் பயணம் செய்யும், 202 மாநகர பஸ் வழித்தடங்களில் 75 மாணவர்கள் அடிக்கடி கலாட்டா செய்வது கண்டுபிடிக்கப்பட்டு, அந்த 75 மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து அவர்கள் மூலம், படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும், தேவையில்லாத பிரச்சினைகளில் சிக்கினால் எதிர்கால வாழ்க்கை பாதிக்கும் என்று அறிவுரைகள் வழங்கப்பட்டன.

    இந்த அறிவுரைகள் எல்லாம் காற்றோடு காற்றாக கலந்து விட்டது. நேற்று கல்லூரி திறந்த முதல் நாள் அன்றே மாணவர்கள் தங்களது அட்டகாச விளையாட்டை தொடங்கினார்கள். பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்கள் பயணம் செய்த பஸ்களை போலீசார் கண்காணித்தனர்.

    திருவொற்றியூர் சுங்கச்சாவடியில் இருந்து 6-டி மாநகர பஸ், திருவான்மியூர் நோக்கி சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் மாநில கல்லூரி மாணவர்கள் பலர் பயணம் செய்தனர். அந்த மாணவர்கள் பஸ்சில் பாட்டுப்பாடியபடி ஆட்டம் போட்டபடி வந்தனர்.

    அவர்களை பஸ் டிரைவர் கண்டித்ததாக தெரிகிறது. உடனே டிரைவரோடு மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அந்த பஸ் கடற்கரை காமராஜர் சாலை, எழிலகம் அருகே வந்தபோது திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் ஆரோக்கிய பிரகாசம் தலைமையிலான போலீஸ் படையினர் பஸ்சை மடக்கி சோதனை போட்டனர்.

    பஸ்சில் பயணித்த மாநில கல்லூரி மாணவர்களை மடக்கி பிடித்து பஸ்சை விட்டு கீழே இறக்கினார்கள். அவர்களிடம் சோதனை செய்தபோது அவர்கள் முதுகில் மாட்டியிருந்த பின்பக்க பையினுள் பட்டாக்கத்திகள் இருந்தன. பட்டாக்கத்திகளை பறிமுதல் செய்தனர். கத்தி வைத்திருந்த மாணவர்களும் பிடிபட்டனர்.

    அந்த வழியாக வந்த 21 ஜி மாநகர பஸ்சிலும், போலீசார் சோதனை நடத்தினார்கள். இதேபோல் சென்டிரல் ரெயில்நிலையம் அருகே கும்பலாக வந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை போலீசார் சோதனை செய்தபோது, அவர்களிடமிருந்தும் பட்டாக்கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது. பட்டாக்கத்திகளை வைத்திருந்த மாணவர்களை போலீசார் பிடித்து சென்றனர்.

    பச்சையப்பன் கல்லூரி, மாநில கல்லூரி உள்ளிட்ட சென்னையில் உள்ள அனைத்து கல்லூரிகளின் வாசல்களிலும் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். மாநில கல்லூரி மாணவர்கள் கல்லூரி வாசலில் பட்டாசு வெடித்தார்கள்.

    இதேபோல ரெயில்களிலும் நேற்று போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாணவர்கள் பயணம் செய்யும் பஸ்களும், ரெயில்களும் கண்காணிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    சென்டிரல் ரெயில் நிலையம் அருகே பிடித்துச்செல்லப்பட்ட கல்லூரி மாணவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டதாகவும், முன்னாள் மாணவர்கள் மணிகண்டன், ஜெகன், பிரபாகரன் ஆகியோர் உள்பட 4 பேர் மட்டும் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களிடமிருந்து ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    இதேபோல எழிலகம் அருகே கத்தியுடன் பிடிபட்ட மாநில கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    பஸ்களில் ஆடிப்பாடி வந்த ஏராளமான மாணவர்களையும் அண்ணாசதுக்கம் போலீசார் பிடித்து சென்றனர். பிடிபட்ட ஏராளமான மாணவர்கள் நீளமாக முடி வளர்த்திருந்தனர். அந்த மாணவர்களுக்கு போலீஸ் நிலையத்தில் வைத்தே, அவர்களது நீண்ட முடியை போலீசார் வெட்டினர்.

    போலீசார் வெட்டியிருப்பதை போல மாணவர்கள் முடியை அழகாக வெட்டி ஒழுங்குபடுத்தி கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மாணவர்களுக்கு அறிவுரைகளும் வழங்கப்பட்டது. நேற்றைய சம்பவங்களில் கத்தி வைத்திருந்த மாணவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டதாகவும், மற்ற மாணவர்கள் அனைவரும் எச்சரிக்கை செய்து அனுப்பி வைக்கப்பட்டதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். 
    ×