search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாழ்க்கை"

    வாழ்க்கையில் வெற்றிப்பெற்றவர்கள் அனைவரிடமும் குறிப்பாக தலைமைப் பண்புகளில் சிறந்தவர்களிடம் காணப்படும் சீரியகுணம் சகிப்புத் தன்மையாகும்.
    பகுத்தறிவுள்ள மனிதனின் தலையாயப்பண்பு, சகிப்புத்தன்மையாகும். வாழ்க்கையில் வெற்றிப்பெற்றவர்கள் அனைவரிடமும் குறிப்பாக தலைமைப் பண்புகளில் சிறந்தவர்களிடம் காணப்படும் சீரியகுணம் சகிப்புத் தன்மையாகும்.

    உலகத்தில் வாழும் 750 கோடி மக்களும் வெவ்வேறானவர்கள். ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை உண்டு. சமூகங்களாக வாழும் மக்களிடையே பொது பண்பு நலன்கள் உள்ளன. தனி மனிதனோ அல்லது ஒரு குழுவினருக்கோ அவர் தம்மொழி, கலாசாரம், வாழ்வியல் முறைகள், குறிப்பாக உணவு, உடை இவைகள் தனித்தன்மை வாய்ந்தவை மற்றும் இன்றியமையாதவை. இன்றைக்கு தகவல் தொடர்பு துறையில் ஏற்பட்டுள்ள அபரிதமான வளர்ச்சிகளாலும், நாடுகளிடைய பயணிக்கும் நேரங்கள் குறைந்து விட்டமையாலும் உலகம் சுருங்கிக் கொண்டே வருகிறது, மேலும், உலக மயமாக்கல், தாராள மயமாக்கல், தனியார் மயமாக்கல், வெவ்வேறு நாடுகளில் மக்களின் குடியேற்றம் அதிகரித்துள்ளது.

    புதிதாக குடியேறும் நாட்டிலுள்ள கலாசாரத்தையும், பண்பாட்டையும் பேணுவதா, அல்லது இது நாள் வரை தான் பழகி வந்ததை தொடர்வதா என்கிற குழப்பம் ஏற்படுவது இயல்பு. அது போல தனது நாடு, தனது மொழி, தனது கலாசாரம் முக்கியம். அவைகள், புதிதாக வருபவர்களிடமிருந்து காக்கப்படவேண்டும் என்று அந்நாட்டு குடிமக்கள் எதிர்பார்ப்பது நியாயம். இத்தகைய முரண்பாடுகளை களைய, வளர்த்துக் கொள்ள வேண்டியது சகிப்புத்தன்மையும், மற்றவர்களின் உணர்வுகளை மதிக்கும் நற்பண்புகள். உதாரணமாக, புலால் உணவை வாழ்வில் சுவைக்காதவரும், அதை அறவே விரும்பாதவரும், புலால் சாப்பிடுபவர்களின் உணர்வுகளை மதிக்க கற்றுக்கொள்ளவேண்டும்.

    நம்மை சுற்றி நடப்பவைகளை எல்லா நேரங்களிலும் நம்மால் தடுக்க முடியாது. ஆனால், அவைகளால் நமக்குள் ஏற்படும் பாதிப்பினையோ அல்லது அதற்கு எதிர்வினையாற்றுவதையோ நாம் தடுத்து நிறுத்திக் கொள்ள முடியும். உதாரணமாக, நண்பர்களோடு பேசிக் கொண்டிருக்கும்போது, ஒருவர் வேடிக்கையாக ஏதோ சொல்லி விடுகிறார் என்று வைத்து கொள்வோம். அது நம்மை காயப்படுத்தி விடுகிறது.

    நமக்கு முன் இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று உடனே அந்த நபர் மீது கோபம் கொண்டு பதிலுக்கு அவமானப்படுத்துவது. இப்படி செய்வதன் மூலம் அங்குள்ள சூழ்நிலையை இறுக்கமாக்கி விடுகிறோம். அதே நேரத்தில் ஒரு புன்னகையோடு அதனை கடந்து செல்லும் போது சூழ்நிலையை மட்டுமல்ல சம்பந்தப்பட்ட அந்த நபரையும் வென்று விடுகிறோம். சிறைச்சாலையில் கொலைக்குற்றத்தால் தண்டிக்கப்பட்டவர்கள் பெரும்பான்மையானோர் ஒரு சில நொடிகளில் உண்டான உணர்ச்சிக் கொந்தளிப்பில் குற்றம் செய்ததாக கூறியுள்ளனர். ஒரு நொடியில் தவற விட்ட சகிப்புத்தன்மை காலம் முழுவதும் அவர்களை சிறைக்குள்ளிருந்து வருந்த செய்கிறது.



    சமூகத்தொண்டாற்றுபவர்களிடம் காணப்பட வேண்டியது சகிப்புத்தன்மை. கொல்கத்தா வீதிகளில் சுற்றிய அனாதை குழந்தைகளை விடுதியில் வைத்து பராமரித்த அன்னை தெரசா, குழந்தைகளுக்காக கடை கடையாக ஏறி உணவு பொருட்களை தானமாக பெறும் போது, ஒரு கடைக்காரர் அன்னை நீட்டிய கைகளில் எச்சில் துப்பி விடுகிறார். அதனால் சற்றும் கவலை கொள்ளாது, கைகளை துடைத்துக் கொண்டு, எனக்கு எது கொடுக்க வேண்டுமோ அதை கொடுத்து விட்டீர்கள், ஆனால், பசியால் வாடிக்கொண்டிருக்கும் குழந்தைகளுக்குவேண்டியதை தாருங்கள் என்று மீண்டும் கை நீட்டியபோது, கடைக்காரர், வெட்கி, மனமிரங்கி தேவையான பொருட்களை தாராளமாக வழங்கினார்.

    இன்றைய அவசர உலகத்தில் குறிப்பாக இளைஞர்கள் பழகிக் கொள்ளவேண்டியது சகிப்புத்தன்மை. எதிலும் சிறந்ததே கிடைக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறார்கள். காரணம் இன்றைக்கு வளரும் சூழ்நிலை அப்படி. தனக்கு வேண்டியது உடனே கிடைக்க வேண்டும். தொழிலாக இருந்தாலும், குடும்ப வாழ்வாக இருந்தாலும் தேவையானது கிடைக்க வேண்டும்.

    கிடைக்காவிட்டால் மனஉளைச்சல், மன அழுத்தம், சச்சரவுகள். இதன் காரணமாக இளம் தம்பதியினர்கள் பலர் திருமணமான சிலமாதங் களிலேயே மணவிலக்கு பெற முடிவெடுக்கின்றனர். சென்னையில் பெருகி வரும் குடும்பநல வழக்காடு மன்றங்களும். அதிகரித்து வரும் மணவிலக்கு வழக்குகளுமே இதற்குச் சான்று. இல்லற வாழ்வு இன்புற்றிருக்க தேவையானது சகிப்புத்தன்மையே. குடும்பத்தில் நாம் பழகும் அத்தகைய பண்பு, நமதுதொழிலிலும் விரிவடைகிறது. தொழிற் செய்பவருக்கு அவசியமானது பொறுமையும், சகிப்புத்தன்மையும்ஆகும்.

    சகிப்புத்தன்மை நாம் சார்ந்தவர்களிடம் மட்டுமல்ல, முன்பின் தெரியாதவர்களிடம் வெளிப்படுத்துதலே மிக முக்கியமானது. சாலைகளில், பேருந்துகளில் பயணிப்பவர்கள், வாகன ஓட்டிகள் இவர்கள் எல்லாம் ஈடுபடும் வாக்குவாதங்கள், சண்டைகள் நாம் அன்றாடம் காணும் காட்சி. இவைகளால் தீமைகள் தான் கூடுகிறது.

    அதே நேரத்தில் சமூக அவலங்களை சகிப்புத்தன்மை என்கிற பெயரில் நான் கண்டு கொள்ளமாட்டேன் என்று சொல்வதை ஏற்கமுடியாது. எங்கள் தெருவில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நாற்றத்தையும், சிரமத்தையும் சகித்துக்கொண்டு நடந்து செல்கிறோம் என்று சொல்வது பொது ஒழுங்கிற்கும், சமூக கடமைக்கும் எதிரானது. சமூக அவலங்களை கண்டு பொங்கி எழுதல் நமது தார்மீக கடமை. அந்தநேரத்தில் சகிப்புத்தன்மையுள்ளவன் என்றுகூறிக்கொள்வது பொறுப்பிலிருந்து விலகுவதாகவும் மற்றும் சுயநலத்தின் வெளிப்பாடாகவும் கருதப்படும்.

    சகிப்புத்தன்மையை வளர்த்துக்கொள்ள நாம் செய்ய வேண்டியது, மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவேண்டும். இதற்கு, அவர்கள் நிலையிலிருந்து உணரவேண்டும். அடுத்து, வேறுபாடுகளை ஏற்றுக் கொள்ளவும் அதனை அங்கீகரிக்கவும், பாராட்டவும் பழகவேண்டும். நம்மிடம் எத்தனை வேறுபாடுகள் வேண்டுமானால் இருக்கலாம், அடிப்படையில் நாம்ஒருவர்; மனிதஇனம், என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். சக மனிதனை மதித்தல், அனைவருக்கும் வாழும் உரிமை, சமூகநீதி இவைகள் தான்அடிப்படை. இதற்காக, நாம் சுமக்கும் கலாச்சாரம், பண்பாடு, சாதி, மதம், மொழி, இனம் இழக்க வேண்டியிருந்தாலும், தயங்ககூடாது. இதுவே நாம் உலக சகிப்புத்தன்மை தினத்தில் எடுத்துக் கொள்ளும் சூளுரையாக இருக்கட்டும்.

    நா. வெங்கடேஷ், திறன் மேம்பாட்டாளர்
    இன்றைய சூழலில் உயர் கல்வி என்பது மாணவர்கள் மிகவும் அவசியமானது என்று சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் கூறினார்.
    காரைக்குடி:

    காரைக்குடியில் உள்ள அழகப்பச் செட்டியார் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. முருகப்பா அரங்கில் நடைபெற்ற விழாவிற்கு வந்தவர்களை கல்லூரி முதல்வர் இளங்கோ வரவேற்று பேசினார். விழாவில் சென்னை ஐ.ஐ.டி. மெக்கானிக்கல் துறை பேராசிரியர் ரமேஷ் தலைமை தாங்கி, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி விழா பேரூரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இன்றைய சூழலில் மாணவர்களுக்கு உயர்கல்வி என்பது மிகவும் அவசியமானது. தற்போதைய வாழ்க்கை முறையில் சாதிக்க வேண்டும் என்றால் உயர்கல்வி தேவை. மாணவர்கள் நீண்ட தொலைநோக்கு சிந்தனையோடு செயல்பட வேண்டும். எனவே அதற்கான இலக்கை நோக்கியே முன்னேற வேண்டும். முடியும் என்ற முனைப்போடு செயல்பட்டு வெற்றியை காண வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த பட்டமளிப்பு விழாவில் 328 பி.இ. மாணவ-மாணவிகளுக்கும், 121 எம்.இ. மாணவ-மாணவிகளுக்கும் பட்டம் வழங்கப்பட்டது. முடிவில் துணை முதல்வர் கணேசன் நன்றி கூறினார். முன்னதாக விழாவில் மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் கலந்துகொண்டு பட்டங்களை பெற்றனர். 
    திருமணத்திற்கு முன்னான உறவு, எதிர்கால திருமண வாழ்க்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்தவும், வரம்புமீறும் பட்சத்தில் உறவுகள் சீர்குலையவும் வாய்ப்பிருக்கிறது.
    திருமணத்திற்கு முன்னான உறவு, எதிர்கால திருமண வாழ்க்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடக் கூடும். (love relationship tips) இதில் ஆண்கள் வரம்பு மீறினாலும், பெண்கள் தான் ஒழுக்கமாக நடந்துகொள்ள வேண்டும். அன்றைய காலத்தில் உற்றார் உறவினர்கள் ஒன்று சேர்ந்து திருமண உறவில் இணையவிருக்கும் மணமக்களுக்கு நிச்சயதார்த்தம் நடத்தி வைப்பார்கள்.

    நிச்சயதார்த்தம் என்ற இந்த சடங்கு நாம் இருவரும் (ஆண்- பெண்) திருமணம் செய்துகொள்வதற்கு நிச்சயிக்கப்பட்டு விட்டோம் என்பதை உணர்த்துகிறது.
    “நிச்சயதார்த்தம் டூ திருமணம்” இந்த இடைப்பட்ட காலம் நிச்சயிக்கப்பட்ட இருவரும், ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வெற்றிகரமாக திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்க அச்சாரமிடுகிறது.

    ஆனால், இந்த நேரத்தில் வரம்புமீறும் பட்சத்தில் உறவுகள் சீர்குலையவும் வாய்ப்பிருக்கிறது. உதாரணத்திற்கு அளவுக்கதிமாக மொபைல்களில் உரையாடுவது, டேட்டிங் செல்வது, அளவுக்கதிமான அன்பளிப்புகளை பரிமாறிக்கொள்வது.



    அளவுக்கதிகமாக மொபைல்களில் உரையாடுவதன் மூலம், இக்காலத்து பெண்கள் மற்றும் ஆண்களின் மனது உடலுறவில் ஈடுபடுவதற்கு துடிக்கிறது.
    திருமணத்திற்கு முன்னான உறவு, எதிர்கால திருமண வாழ்க்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடக்கூடும், இதில் ஆண்கள் வரம்பு மீறினாலும், பெண்கள் தான் தங்களை காப்பாற்றிக்கொள்ள ஒழுக்கமாக நடந்துகொள்ள வேண்டும்.

    ஏனெனில் இருபாலரும் தவறு செய்யும் பட்சத்தில், இதில் அதிகமாக பாதிக்கப்படுவது பெண்கள்தான். நிச்சயதார்த்தத்துக்குப் பின், திருமணத்துக்கு முன் என்ற இடைவெளியில் அதிகம் நெருக்கமும் தவிர்க்கப்பட வேண்டியது. பேசுவது, சந்திப்பது என்றபோதிலும், அதை ஆவணமாக மாற்றும் சாத்தியங்களை தவிர்ப்பதும் புத்திசாலி பெண்ணுக்கு அழகு.

    குறிப்பாக, சேர்ந்த மாதிரி புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதை தவிர்க்கலாம். தனித்த படங்களை பகிர்ந்து கொள்வதிலும்கூட ஆபத்து இருக்கிறது. பேச்சு, நெருக்கம், பகிர்வு ஆவணம் அனைத்திலும் எச்சரிக்கையும் முன் யோசனையும் அவசியம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
    மனதில் உறுதி இருந்தால் மலைகளைக்கூட காலில் விழுந்து மண்டியிட வைத்துவிடலாம். மன உறுதி இல்லாதவர் கூழாங்கற்களுக்கே கூட குனிந்து வணக்கம் சொல்ல வேண்டியிருக்கும்.
    வாழ்க்கை என்பது ஒரு போர்க்களம்; விழுப்புண் பெறாமல் போர்க்களத்தில் வெற்றிகாண முடியுமா? வாழ்க்கை என்பது காட்டாறு; எதிர் நீச்சல் போடாமல் காட்டாற்றில் நீந்தி எதிர்க்கரை சேர முடியுமா? விழியில் நீரோட்டமும், வழியில் போராட்டமும் நிறைந்ததுதான் வாழ்க்கைப் பயணம்.

    மனதில் உறுதி இருந்தால் மலைகளைக்கூட காலில் விழுந்து மண்டியிட வைத்துவிடலாம். மன உறுதி இல்லாதவர் கூழாங்கற்களுக்கே கூட குனிந்து வணக்கம் சொல்ல வேண்டியிருக்கும். மனஉறுதி படைத்தவர் எதிர்ப்பு, ஏளனம், இடையூறுகளை எதிர்த்து முன்னேறிச் செல்கின்றனர்.

    குப்பைக்கழிவுகளை உரமாக்கிக் கொண்டு பூக்கவில்லையா குண்டுமல்லிகள்? காய்க்கவில்லையா கொய்யாக்கனிகள்? வரும் சோதனைகளை உரமாக்கிக்கொண்டு வாழ்கிறவன் வாசலில்தான் தினம் மாலைகள் அவன் கழுத்துக்காக காத்துக்கிடக்கின்றன.

    மன உறுதியை நாள்தோறும் இதயத்தில் விதைத்து வந்தவர்கள், மகத்தான சாதனைகளையே மகசூல் செய்திருக்கிறார்கள். சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜியத்துக்கு சொந்தக்காரர்கள் நாங்கள் என்று எக்காளமிட்டவர்கள் ஆங்கிலேயர்கள். மகாத்மா காந்தியின் மனஉறுதிக்கு முன்னால் அவர்களின் எதேச்சதிகாரம் என்ன ஆனது? இந்தியாவிற்குச் சுதந்திரம் கொடுத்துவிட்டு வந்த வழியே திரும்பி ஓடவேண்டியதாயிற்று.



    எதிரியின் கூடாரத்திற்கு உளவறிய சென்றான் நெப்போலியன். பகைவரின் படைகள் அவனை கண்டுபிடித்துவிட வேகமாக குதிரையைச் செலுத்தினான். தப்பிப்பதற்குள் மூன்று திசைகளிலிருந்தும் எதிரியின் படைகள் நெருங்கி வந்தன. நான்காவது திசையை நோக்கினாலோ, ஆழமான பெரும் பள்ளத்தாக்கு. குதிரையால் முழுப்பள்ளத்தையும் தாண்ட முடியாது என்பது நெப்போலியனுக்கே தெரியும்.

    இருந்தும் மனதில் உறுதி இருந்ததால் குதிரையைச் செலுத்தினான் அவன். குதிரை பள்ளத்தாக்கின் முக்கால் பகுதியை தாண்ட அது தவறி விழுவதற்கு முன்பே அக்குதிரை மீது நின்றபடி தாவி எதிர்ப்புற மலைச்சரிவில் குதித்து தப்பித்தான் அம்மாவீரன். எதிரிகளே வியக்கும் வண்ணம் இப்பேற்பட்ட மன உறுதி இருந்ததால்தான், ‘முடியாது என்ற சொல் முட்டாள்களின் அகராதியில்தான்’ என்று சொல்ல முடிந்தது நெப்போலியனால்.

    ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும். வெப்பத்தை ஏற்றுக் கொள்ளும் தன்மை இல்லாவிட்டால் மத்தாப்புக்களால் பிரகாசமாய் ஒளிர்ந்துவிட முடியாது. எனவே எந்த செயலானாலும் சரி, மன உறுதியுடன் அதில் முனைப்புடன் செயல்படுவோம். வெற்றிக்கனி நம் கைகளில் விழும். தோல்விகள் நம் கால்களில் விழும்.

    எழுத்தாளர் எல்.பிரைட்
    நமது முயற்சிகளும் சரியான திட்டமிடல்களும் நம்மை இன்னும் உயர்வான இடத்தை நோக்கி நகர்த்திச் செல்லும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.
    வெற்றி பெற திட்டமிடுங்கள் சரியான திட்டமிடலே பாதி வெற்றியைத் தந்துவிடுகிறது. எதையும் சரியாகத் திட்டமிடும்போது நாம் பாதி இலக்கினை எட்டிவிட்டோம் என்ற நிம்மதி நமக்குள்ளே பிறந்துவிடும். தேர்வுகளின்போது பாடங்களைச் சரியான திட்டமிடலோடு படிக்கத் தொடங்கினால் போதும் வெற்றிக்கனிகள் உங்கள் பக்கமே வரும்.

    வாழ்க்கையும் நமக்கு பல நேரங்களில் தேர்வுகளையே ஞாபகப் படுத்தும். அதைச் சரியான முறையில் நாமும் கையாள வேண்டும் என்பதையே நம்முடைய ஒவ்வொரு நிமிடமும் நமக்கு ஞாபகப்படுத்தும். மிகச் சரியான முறையில் நாம் வாழ்க்கையை எதிர்கொள்வது அவசியமாகிறது. கடைசி நிமிடத் தயாரிப்புகள் சில நேரங்கள் வேண்டுமானால் நமக்கு கை கொடுக்கலாம். பல சமயங்களில் அதுவே நமக்கு மிகப்பெரிய எதிரியாக வந்து நிற்கும். நம்முடைய நிகழ் நிமிடங்களை நாம் மிகச்சிறப்பான முறையிலே அமைத்துக் கொள்ளுதல் வேண்டும்.

    அடுத்தடுத்த நிமிடங்கள் சிறப்பாக அமைய வேண்டும் என்றால் நிகழ் காலங்களை சரியான வகையில் நாம் பயன்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். பல நேரங்களில் நாம் ரெயில்களையும் பேருந்துகளையும் தவற விட்டதின் மூலமாகவே நமது நல்ல வாய்ப்புகளை இழந்திருப்போம். அதற்கு நம்முடைய சாதாரண கவனக்குறைவே காரணமாக இருந்திருக்கும். மிகப்பெரிய சாதனைகளை சிறு சிறு கவனக்குறைவுகளின் மூலமாகவோ சரியான திட்டமிடல் இல்லாமலோ நடக்காமல் போயிருக்கும்.

    உங்கள் மேல் உள்ள அதீத அன்பாலும் தாங்கள் வாழ்விலே பட்ட கஷ்டங்கள் எக்காரணம் கொண்டும் தங்களின் குழந்தைகள் படக்கூடாது என்பதிலே மிகுந்த அக்கறை உடையவர்கள் பெற்றோர்கள். அவர்களின் உணர்ச்சி வசப்பட்ட சில செயல்பாடுகளை நாம் தொந்தரவு என்று ஒரு போதும் கருதிடக் கூடாது.

    நம்முடைய பெற்றோர்கள் நம்மை சரியான புரிதலோடு வழிகாட்டுவார்கள் என்ற நம்பிக்கையுடையவர்கள் யாரும் இங்கே தோற்றுப் போவதில்லை. அவர்களுடைய அன்பை நாம் ஒருபோதும் உதாசீனப் படுத்திட கூடாது. ஒவ்வொரு முறையும் நம்மீது அதீத அக்கறையோடு அவர்கள் சொல்வதை மனதிலே கொண்டு செயல்படும்போதே வெற்றி எளிதிலே கிடைத்து விடும் பொருளாகி விடுகிறது. நம்முடைய உயரங்களும், வளர்ச்சிகளும் நிச்சயமாக அடுத்தவருடைய கட்டுப்பாட்டில் இல்லை என்பதை உணர வேண்டும். நமது முயற்சிகளும் சரியான திட்டமிடல்களும் நம்மை இன்னும் உயர்வான இடத்தை நோக்கி நகர்த்திச் செல்லும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.

    முனைவர்.நா.சங்கரராமன்
    ×