search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழக்குப்பதிவு"

    ஒரத்தநாடு அருகே மனைவியை தாய் வீட்டிற்கு அனுப்பி விட்டு 2-வது திருமணம் செய்த கணவர் மீது மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் 2 பேரை தேடி வருகிறார்கள்.

    ஒரத்தநாடு:

    ஒரத்தநாடு அருகே காவராப்பட்டு தெற்கு தெருவை சேர்ந்தவர் சிகாமணி (வயது40). இவருக்கும், ஒக்கநாடு மேலையூரை சேர்ந்த ரெங்கசாமி மகள் சுதாமணி என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 குழந்தைகள் உள்ளனர்.

    சிகாமணி அடிக்கடி வெளிநாடு சென்று விட்டு வருவது வழக்கம். இந்நிலையில் மனைவியை வரதட்சணை கேட்டு சிகாமணி கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அவர் கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்று விட்டாராம். இதையடுத்து ரெங்கசாமி தனது மகளை கணவருடன் சேர்த்து வாழ வைக்க எடுத்த அனைத்து முயற்சியும் தோல்வியில் முடிந்து விட்டதாக தெரிகிறது.

    இந்நிலையில் சிகாமணி மனைவி வீட்டாருக்கு தெரியாமல் ஒக்கநாடு கீழையூரை சேர்ந்த சென்னையில் தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வரும் நதியா என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டுள்ளார். இதையறிந்த சுதாமணி அதிர்ச்சியடைந்து இதுபற்றி பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ நிலையத்தில் புகார் செய்தார்.

    இதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயா வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சிகாமணி, அவரது 2-வது மனைவி நதியா ஆகியோரை தேடி வருகின்றார்.

    அரும்பார்த்தபுரத்தில் வீட்டின் கூரை சரிந்து விழுந்ததில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே அரும்பாரத்தபுரம் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 52). கூலித்தொழிலாளி. நேற்று இவர், தனது ஆஸ்பெட்டாஸ் கூரை வீட்டை மனைவி பாக்கியலட்சுமி மற்றும் குடும்பத்தினருடன் செப்பனிடும் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது எதிர்பாராத விதமாக ஆஸ்பெட்டாஸ் கூரை சரிந்து விழுந்ததில் முருகானந்தம் படுகாயம் அடைந்தார்.

    உடனடியாக அவரை அவரது குடும்பத்தினர் மீட்டு கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே முருகானந்தம் பரிதாபமாக இறந்து போனார்.

    இது குறித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருச்சி பெண்கள் சிறை வார்டர் தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக அவரது காதலன் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருச்சி:

    கடலூர் மாவட்டம் தவளக் குப்பம் அருகே பெரியகாட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த செல்லப்பன் மகள் செந்தமிழ்செல்வி (வயது 23). இவர் திருச்சி பெண்கள் சிறையில் வார்டராக பணியாற்றி வந்தார். திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறைக்காவலர் குடியிருப்பில் ஒரு வீட்டில் தனியாக தங்கி பணிக்கு சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு செந்தமிழ்செல்வி பணிக்கு வரவில்லை. சக வார்டர்கள் அவரது செல்போனை தொடர்பு கொண்டபோது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது.

    இதனால் செந்தமிழ்செல்வியின் வீட்டிற்கு வார்டர்கள் சிலர் இரவு 8 மணி அளவில் சென்றனர். அங்கு அவரது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்றபோது, செந்தமிழ்செல்வி வீட்டின் படுக்கை அறையில் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டபடி பிணமாக தொங்கிக்கொண்டு இருந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

    செந்தமிழ்செல்வியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கடலூர் மாவட்டத்தில் உள்ள அவரது பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் செல்லப்பன் மற்றும் குடும்பத்தினர் நேற்று முன்தினம் இரவே திருச்சிக்கு புறப்பட்டு வந்தனர்.

    மேலும் நேற்று காலை அவரது உறவினர்களும், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் சிலரும் திருச்சி அரசு மருத்துவமனையில் குவிந்தனர். செந்தமிழ்செல்வி தற்கொலை சம்பவம் குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் காதல் தோல்வியின் காரணமாக அவர் தற்கொலை செய்தது தெரியவந்தது.

    இதற்கிடையில் தற்கொலை செய்த செந்தமிழ்செல்வியின் தந்தை செல்லப்பன் நிருபர்களிடம் கூறுகையில், “திருச்சி மத்திய சிறை வார்டர் வெற்றிவேல் என்பவர் எனது மகளை காதலித்து விட்டு ஏமாற்றிவிட்டார். வெற்றிவேலின் அண்ணன் கைலாசம், அவரது மனைவியும் எனது மகளிடம் சாதிபெயரை சொல்லி கடுமையாக திட்டியுள்ளனர். இதனால் மனவேதனை தாங்காமல் அவர் தற்கொலை செய்துள்ளார். சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் உடலை வாங்க மாட்டோம்” என்றார்.

    மேலும் கே.கே.நகர் போலீஸ் நிலையத்திலும் இது தொடர்பாக வெற்றிவேல், அவரது அண்ணன், அண்ணி மீது செல்லப்பன் புகார் கொடுத்தார். அதன்பேரில் வெற்றிவேல் உள்பட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதைத்தொடர்ந்து பிரேத பரிசோதனை முடிந்ததும் அவரது உடலை உறவினர்கள் மாலையில் பெற்று சென்றனர். செந்தமிழ்செல்வி தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் கூறியதாவது:-

    செந்தமிழ்செல்வியும், வெற்றிவேலும் கடந்த ஒரு வருடமாக காதலித்துள்ளனர். இதற்கிடையில் வெற்றிவேலுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடு நடந்துள்ளது. வெற்றிவேலின் அண்ணன் கைலாசமும் திருச்சி மத்திய சிறையில் வார்டராக பணியாற்றி வருகிறார். அவர் மனைவியுடன் வசித்து வருகிறார். வெற்றிவேலும், செந்தமிழ்செல்வியும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.

    செந்தமிழ்செல்வியை வெற்றிவேலுக்கு திருமணம் செய்து வைக்க கைலாசம் ஒப்புக்கொள்ளவில்லை. மேலும் வெற்றிவேலும் செந்தமிழ்செல்வியை காதலித்து ஏமாற்றியதாக தெரிகிறது. இதனால் தான் வேறு ஒரு பெண்ணுடன் அவருக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது. 6-ந் தேதி (அதாவது நாளை) திருமணம் நடைபெற இருந்ததாக கூறுகின்றனர். இதனால்தான் காதல் தோல்வியால் வேதனையடைந்த செந்தமிழ்செல்வி தற்கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக அவரது காதலன் உள்பட 3 பேர் மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

    இதற்கிடையே வெற்றிவேல், அவரது அண்ணன், அண்ணி 3 பேரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
    பொள்ளாச்சியில் போராட்டத்தை தூண்டும் வகையில் பேசிய வீடீயோ காட்சி பரவி வரும் நிலையில் சஸ்பெண்டு செய்யப்பட்ட அரசு பள்ளி தலைமை ஆசிரியை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #jactoGeo
    கோவை:

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ சார்பில் கடந்த 22-ந் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது.

    அன்றைய தினம் பொள்ளாச்சி கோட்டூர் ரமணமுதலிபுதூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியை சினேக லதா என்பவர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதுடன், பொள்ளாச்சியில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்திலும் பங்கேற்றார்.

    அப்போது பொள்ளாச்சி நேதாஜி ரோட்டில் உள்ள அரசு பெண்கள் பள்ளிக்கு சென்ற சினேகலதா அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்களையும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும்படி அழைத்தார். போராட்டதுக்கான கோரிக்கைகள் குறித்து சினேகலதா சக ஆசிரியர்களுக்கு கூறியதோடு, ஆவேசமாகவும் பேசினார். அவரது இந்த பேச்சை சிலர் வீடியோ எடுத்துள்ளனர். அந்த காட்சிகள் வாட்ஸ்- அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது.

    இதைத்தொடர்ந்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி சினேகலதாவை துறை ரீதியாக பணியிடை நீக்கம் செய்தனர். இந்நிலையில் சினேகலதா மீது பொள்ளாச்சி கல்வி மாவட்ட அலுவலர் (பொறுப்பு) வெள்ளிங்கிரி என்பவர் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.

    அதன்பேரில் சினேகலதா மீது இந்தியதண்டனை சட்டம் 448-அத்துமீறி நுழைதல், 341- தடுத்து நிறுத்தி இடையூறு ஏற்படுத்துதல், 153- கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், அரசுக்கு எதிராக கலகம் செய்தல் ஆகிய 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #jactoGeo
    கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக, பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் இன்று வழக்கு தொடரப்பட்டது. #SamuelMathew #KodanadEstate #EdappadiPalanisamy
    சென்னை:

    கொடநாடு பங்களாவில் நடந்த கொள்ளை தொடர்பாக தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. கொடநாடு கொள்ளை குற்றவாளிகளான சயான், மனோஜ் ஆகியோர் எடப்பாடி பழனிசாமி மீது புகார் தெரிவித்தனர்.

    இதற்கிடையே, மேத்யூ இன்று விமானம் மூலம் சென்னை வந்தார். அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறுகையில், கொடநாடு கொள்ளை மற்றும் அதன்பின் நடந்த கொலைகள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று மனு கொடுப்பது தொடர்பாகவும், முன் எச்சரிக்கை நடவடிக்கை காரணமாகவும், சென்னையில் வக்கீல்களை சந்திக்க வந்துள்ளேன்.

    சயான், மனோஜ் மீது தமிழக அரசு வழக்கு தொடர்ந்து உள்ளது. என் மீதும் வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க தயாராக இருக்கிறேன். தமிழக அரசு மீது நான் குற்றம் சாட்டவில்லை. எடப்பாடி பழனிசாமி மீதுதான் குற்றம் சாட்டுகிறேன். அவர் மீது எனக்கு தனிப்பட்ட விரோதம் எதுவும் கிடையாது.



    கொடநாடு தொடர்பான குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை என்று கூறியுள்ளார். ஆனால் என்னிடம் மேலும் ஆதாரங்கள் உள்ளன. அதை சரியான நேரத்தில் வெளியிடுவேன். இவ்விவகாரத்தை சட்டப்படி நீதிமன்றத்திலும் சந்திக்க தயாராக இருக்கிறேன் என தெரிவித்தார்.

    இந்நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன் மீது களங்கம் விளைவிப்பதாக கூறி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் இன்று வழக்கு தொடரப்பட்டது. 1.10 கோடி ரூபாய் கேட்டு முதலமைச்சர் தரப்பில் மானநஷ்ட வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இந்த வழக்கை நாளை விசாரிப்பதாக நீதிபதி கல்யாணசுந்தரம் ஒப்புதல் அளித்துள்ளார். #SamuelMathew #KodanadEstate # EdappadiPalanisamy
    திருமண ஆசை காட்டி இளம்பெண்ணை கடத்திச்சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள முடுவார்பட்டியைச் சேர்ந்தவர் மோகன். இவரது மகள் வர்ஷா (வயது 19). வீட்டில் தனியாக இருந்த வர்ஷாவை திருமண ஆசைக்காட்டி அதே பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரது மகன் பாண்டித்துரை (21) கடத்திச் சென்று விட்டார்.

    இளம்பெண்ணை கடத்திச் செல்ல பாண்டித்துரைக்கு அவரது நண்பர்கள் சுதர்சன், முத்துப்பாண்டி, அழகர் ஆகியோர் உதவியதாக தெரியவந்தது.

    இது குறித்து மோகன் பாலமேடு, போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை கடத்திச் சென்ற வாலிபர் உள்ளிட்ட 4 பேரை தேடி வருகிறார்கள்.

    புளியங்குடி அருகே தண்ணீர் எடுக்க சென்ற முதியவர் தொட்டியில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
    புளியங்குடி:

    புளியங்குடி அருகே உள்ள மலையடிகுறிச்சி காந்திஜி தெருவை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது60). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் அவர் தனியாக மலையடிகுறிச்சி பகுதியில் வசித்து வந்தார். மேலும் இவர் அந்த பகுதியில் உள்ள கடைகளில் சிறு சிறு வேலைகள் செய்து அவர்கள் கொடுக்கும் உணவை வாங்கி உண்டு வாழ்ந்து வந்தார். 

    இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த கோமதி பாண்டியன் என்பவர் புதியதாக வீடு கட்டி வருகிறார் அவர் வீட்டின் அருகே செப்டிக் டேங்க் தொட்டியில் தண்ணீரை நிரப்பி அதை மூடி போட்டு மூடி பராமரித்து கட்டுமான பணிக்கு பயன் படுத்தி வந்தார். சம்பவத்தன்று வேலுச்சாமி இயற்கை உபாதையை கழித்துவிட்டு கோமதி பாண்டியன் வீட்டில் உள்ள செப்டிக் டேங்க் தொட்டியின் மூடியைத் திறந்து தண்ணீர் எடுக்க சென்றார். அப்போது எதிர் பாராதவிதமாக அவர் தவறி உள்ளே விழுந்து விட்டார்.

    இதில் அவர் நீரில் மூழ்கி இறந்தார். இதுகுறித்து வேலுச்சாமியின் அண்ணன் மகன் சரவணபாண்டியன் புளியங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சாகரில் நடந்த வன்முறை தொடர்பாக 27 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #BulandshahrViolence
    புலந்த்சாகர்:

    உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சாகரில் பசுவதைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள், போலீசாரை நோக்கி கற்களை வீசி தாக்கியதுடன், புறக்காவல் நிலையம் மற்றும் அங்கிருந்த வாகனங்களுக்கும் தீ வைத்ததால் பதற்றம் அதிகரித்தது.

    இதையடுத்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஒருவர் உயிரிழந்தார். போராட்டக்காரர்கள் தாக்கியதில் போலீஸ் தரப்பில் இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் உயிரிழந்தார்.



    இந்த வன்முறை தொடர்பாக 27 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி உள்ளனர். போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் அடையாளம் தெரியாத 60 பேரின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இதேபோல் பசுவைக் கொன்ற நபருக்கு எதிராக மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    விசாரணை தொடர்பாக காவல்துறை கூடுதல் இயக்குனர் பிரசாந்த் குமார் கூறுகையில், ‘புலந்த்சாகர் வன்முறை தொடர்பாக 2 பேரை காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகிறோம். போராட்டத்தில் வன்முறை ஏன் ஏற்பட்டது? இன்ஸ்பெக்டர் சுபோத் குமாரை மற்ற போலீசார் தனியே விட்டது ஏன்? என்பது குறித்து விசாரிப்பதற்காக சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது’ என்றார். #BulandshahrViolence
    திருமங்கலம் அருகே விவசாயி அடித்துக் கொல்லப்பட்டார். போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பேரையூர்:

    திருமங்கலத்தை அடுத்த சிந்துப்பட்டி அருகேயுள்ள நாகலாபுரத்தைச் சேர்ந்தவர் மொக்கமாயன் (வயது 42) விவசாயி.

    குடிப்பழக்கம் உள்ள இவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து குடும்பத் தினருடன் சண்டை போடுவார். இதனை மொக்கமாயனின் தந்தை காசிமாயன் நேற்று முன்தினம் கண்டித்தார்.

    சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் மொக்கமாயன் வி‌ஷம் குடித்து விட்டார் என அவரது மனைவி சத்தம் போட்டார். உடனே அவரை உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி மொக்கமாயன் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    இதற்கிடையே மொக்கமாயனின் தாயார் பேச்சியம்மாள் சிந்துப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதில், எனது மகனின் நெற்றியிலும் உடலில் சில பாகங்களிலும் காயம் இருந்தது. எனவே அவரை அடித்துக் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

    அதன்பேரில் போலீசார் மொக்கமாயனின் மனைவி முத்து, அவரது உறவினர் ஜோன்ஸ் மற்றும் காசிமாயன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் தலையீடு தொடர்பாக ரஷிய நாட்டைச் சேர்ந்த எலினா அலெக்சீவ்னா குஸ்யாய்நோவா என்ற பெண் மீது முதன்முதலாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #ElenaAlekseevnaKhusyaynova #RussianWoman
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்டு டிரம்புக்கு ஆதரவாகவும், ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் இறங்கிய ஹிலாரி கிளிண்டனுக்கு எதிராகவும் ரஷியா நேரடியாக தலையிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக ராபர்ட் முல்லர் தலைமையிலான சிறப்புக்குழுவின் விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில், அமெரிக்காவில் வரும் நவம்பர் 6-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலிலும் ரஷிய தலையீடு இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

    இது தொடர்பாக ரஷிய நாட்டைச் சேர்ந்த எலினா அலெக்சீவ்னா குஸ்யாய்நோவா (வயது 44) என்ற பெண் மீது முதன்முதலாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அமெரிக்க அரசியல் அமைப்பில் குழப்பம் விளைவிக்கும் ஒரு திட்டத்துக்கான தலைமை கணக்காளராக இந்தப் பெண் பணியாற்றி வருகிறார்.2016-ம் ஆண்டு தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த எந்த வியூகத்தையும், தொழில் நுட்பத்தையும் ரஷியா பயன்படுத்தியதோ, அதையே இப்போதும் பயன்படுத்துவதாக தகவல்கள் கூறுகின்றன. அமெரிக்க அரசின் கொள்கையிலும், வாக்காளர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ரஷியா, சீனா, ஈரான், மற்றும் சில நாடுகள் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை கூறுகிறது.ஜனநாயக அமைப்புகளை பலவீனப்படுத்தும் வகையிலும், பொதுமக்களிடமும், அமெரிக்க கொள்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் விதத்திலும் பிற நாடுகள் செயல்படுவது கவலை அளிக்கிறது என அமெரிக்க தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர். #ElenaAlekseevnaKhusyaynova #RussianWoman 
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 70 வயது நபரை கல்லால் தாக்கி கொன்ற குரங்குகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் பக்பட் மாவட்ட போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. #stonedtodeath #stonedtodeathbymonkeys #monkeymenance
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் வாரணாசி, மதுரா, லக்னோ உள்ளிட்ட பகுதிகளில் குரங்குகளின் அட்டகாசம் அதிகமாக உள்ளது. அங்குள்ள வீடு, கடைகளுக்குள் கூட்டமாக நுழையும் குரங்குகள் பொருட்களை நாசப்படுத்துவதுடன், திண்பண்டங்களையும் சில வீடுகளில் தூங்கி கொண்டிருக்கும் குழந்தைகளையும் தூக்கிச் சென்று விடுவதுண்டு.

    இந்நிலையில், இங்குள்ள பக்பட் மாவட்டத்தை சேர்ந்த 70 வயது முதியவரை செங்கல் மற்றும் அரைக்கல்லால் தாக்கி கொன்ற குரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    இங்குள்ள டிக்ரி குராமத்தில் கடந்த 17-ம் தேதி விறகு சேகரிக்க சென்ற எனது சகோதரர் தரம்பால்(70) என்பவரை குரங்குகள் சூழ்ந்துகொண்டு கல்லால் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். எனவே, குரங்குகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார்தாரர் வலியுறுத்தி வருகிறார்.



    ஆனால், இந்த சம்பவத்தை போலீசார் வேறுவிதமாக விவரிக்கின்றனர். உயரமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த செங்கல் குவியல் அருகில் தரம்பால் படுத்து தூங்கியுள்ளார். அதன்மீது குரங்குகள் குதித்ததால் செங்கல் சரிந்து அவர்மீது விழுந்ததில் படுகாயமடைந்த தரம்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. #stonedtodeath #stonedtodeathbymonkeys #monkeymenance
    புதிய தலைமை செயலகம் முறைகேடு குறித்து வழக்குப்பதிவு செய்ய தடை விதிக்க முடியாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #ADMK #DMK #MKStalin

    சென்னை:

    தி.மு.க. ஆட்சிக்காலத்தில் புதிய தலைமை செயலக கட்டிடம் கட்டப்பட்டது. பின்னர் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், அந்த கட்டிடத்தில் அரசு பல்நோக்கு மருத்துவ மனையாக மாற்றப்பட்டது.

    மேலும், அந்த கட்டிடம் கட்டியதல் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, அதுகுறித்து விசாரணை நடத்த ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.ரெகுபதி தலைமையில் ஒரு நலர் கமி‌ஷன் அமைக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், கமி‌ஷன் விசாரணை கண் துடைப்பு நாடகம் என்று உத்தரவிட்டார். இதையடுத்து நீதிபதி ரெகுபதி தன் பதவியை ராஜினாமா செய்தார். இதைதொடர்ந்து, புதிய தலைமை செயலகம் கட்டிட முறைகேடு வழக்கு, லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு மாற்றி, தமிழக அரசு உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை எதிர்த்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, புதிய தலைமை செயலகம் கட்டிட முறைகேடு குறித்து இதுவரை ஊழல் தடுப்பு போலீசார் இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை. என்றார்.

     


    மனுதார் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், இந்த வழக்கை போலீஸ் விசாரணைக்கு மாற்றுவதற்கு முன்பு தலைமை செயலாளர் தீர விசாரிக்க வில்லை. ஆவணங்களை பார்க்க வில்லை. அவர் எத்திரத்தனமாக செயல் பட்டுள்ளார். இப்போது இந்த வழக்கை பற்றி பொதுக்கூட்டத்தில் முதல்அமைச்சர் பேசுகிறார். இதனால் சில அச்சம் ஏற்படுகிறது எனவே வழக்கு பதிவு செய்யவும், விசாரணைக்கு தடை வேண்டும் என்றார்.

    தடை விதிக்க மறுத்த நீதிபதி, வழக்கை வெள்ளிக்கிழமைக்கு தள்ளி வைக்கிறேன். அதற்குள் எதுவும் நடந்து விடாது. மேலும் ரெகுபதி ஆணையத்தில் இருந்து ஊழல் தடுப்பு போலீசாரிடம் ஆவணங்கள் எப்போது சென்றது என்ற விவரத்தை அட்வகேட் ஜெனரல் அரசிடம் கேட்டு தெரிவிக்கவேண்டும்‘ என்று உத்தரவிட்டார். #ADMK #DMK #MKStalin

    ×